காலங்களில் அவள் வசந்தம் – 21(2)

காலங்களில் அவள் வசந்தம் – 21(2)

“ப்ளூ இல்லையா?”

“இன்னும் ரெண்டு நாள்ல ரீஸ்டாக் பண்ணிருவோம் ப்ரதர்.”

“ஓகே கோல்ட் காட்டுங்க…” என்று அவனிடம் கூறியவன், “புஜ்ஜி… உனக்கு கோல்ட் ஓகே வா?” கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தி அதிர்ந்து திரும்பினாள்.

‘இன்னாது… புஜ்ஜியா? என்ன தைரியம்?’ என்று அவனை வெட்டுவது போல பார்த்தவள்,

“எனக்கு எதுன்னாலும் ஓகே பஜ்ஜி…” நக்கலாக கூறியது ஷானுக்கு மட்டும் தானே தெரியும். அவனது முகம் விளக்கெண்ணையை குடித்தது போல ஒரு நொடி மட்டும் மாறியது.

‘பஜ்ஜியா? அட பிசாசே’ என்று மனதுக்குள் அவன் வறுப்பது அவள் வரை கேட்டது.

“புஜ்ஜி, பஜ்ஜி… வாவ் வாட் எ கப்பிள்?!” என்று அந்த ஓனர் சிரித்தான்.

“எஸ் மை பொண்டாட்டி கால்ஸ் மீ பஜ்ஜி. எனக்கு அவ ஸ்வீட் புஜ்ஜி…” இன்னும் அவளது வயிற்றில் நெருப்பைப் பற்ற வைத்தான் ஷான்.

“வந்த வேலைய பாரு பஜ்ஜி…” என்று பல்லைக் கடித்தாள்.

“ஓகே ஓகே. இந்த போனையே நான் எடுத்துக்கறேன். பில் பண்ணிருங்க ப்ரதர்.” என்று ஒன்னே கால் லட்சத்துக்கு பணமாகவே கொடுத்தவனை சற்று ஆச்சரியமாக பார்த்தான் அந்த ஓனர்.

“என் பேர் ராகேஷ் ப்ரோ. நீங்க என்ன பண்றீங்க?” சாதாரணம் போல கேட்டான் அந்த ராகேஷ்.

“அர்ஜுன். பெருசா ஒண்ணுமில்ல. ஜஸ்ட் இன்வெஸ்ட்டர். ஷேர் மார்கெட் அப்புறம் இன்னும் கொஞ்சம் ப்ரைவேட் இன்வெஸ்ட்மென்ஸ்.” வேண்டுமென்றே பெயரை மாற்றிக் கூறினான்.

“செம ப்ரோ… ஷேர் மார்க்கெட்ல நல்ல நாலேஜ் இருக்கோ?”

“ம்ம்ம். எங்க அடிச்சா எங்க விழும்ன்னு தெரிஞ்சா போதாதா? அது எனக்கு நல்லா வரும்…” என்று சற்று அசால்ட்டாகவே கூறினான்.

“இன்ட்ரா டேவா இல்ல லாங் டெர்ம் மா?”

“இன்ட்ரா இப்ப ரொம்ப பண்றதில்ல ப்ரோ. போரடிச்சா தான் பண்ணுவேன். மோஸ்ட்லி பொசிஷன் எடுப்பேன். ஸ்விங்கும் பண்ணுவேன். லக் அடிச்சா ஐபிஓ, அட் டைம்ஸ் ரொம்ப போர் அடிச்சா ஸ்கால்பிங் கூட பண்ணுவேன் எக்ஸ்ட்ரா லார்ஜ் வால்யும்ஸ்ல…” என்று மெலிதாக சிரித்தான்.

ஸ்கால்பிங் என்பது உண்மையில் சூதாட்டம், ஷேர் மார்க்கெட்டில். ஷேர் மார்கேட்டே சூதாட்டம் எனும் போது ஸ்கால்பிங்கை ப்ரோக்கர்கள் கூட அவ்வளவாக விரும்புவதில்லை. பெரிய அளவில் ஸ்கால்பிங் செய்பவர்கள் எல்லோரும், சூதாடுவதில் பிரியப்படுபடுபவர்களே!

நொடிக்கணக்கில் ஏறும் மார்க்கெட்டில், நொடிக்கணக்கில் உள்ளே சென்று பெரும் லாபத்தை எடுத்துக் கொண்டு, அதே நிமிடத்தில் வெளியேறுவதுதான் ஸ்கால்பிங். சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் செய்வது அவ்வளவு சுலபமல்ல. மார்கெட் பற்றிய முழு அறிவும் திறமையும் இருந்தால் மட்டுமே ஸ்கால்பிங் சாத்தியம், எல்லாவற்றையும் காட்டிலும் அதிர்ஷ்டம். அது மிக மிக அதிகமாக வேண்டும். இந்த நிமிடம் ஷேர் மதிப்போ கரன்சி மதிப்போ ஏறும் என்று யாரால் கணிக்க முடியும்? அதை செய்பவர்கள் தான் இவர்கள். அதிக வால்யுமில் செய்யும் போது மார்கெட் மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது மேனுபுலேஷன்! அதனால் தான் ப்ரோக்கர்கள் கூட இதை விரும்புவதில்லை!

ஆனால் அதிலிருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லையென்று அடித்து சொல்பவர்கள் ஆயிரம். என்ட்ரி, எக்சிட் மட்டும் சரியாக அமைந்து விட்டால், ஸ்கால்பிங் என்பது பணம் கொட்டும் முறை!

ராகேஷ் அவனது தொனியில் விழுந்து விட்டான். அதிலும் ஒன்னே கால் லட்சத்தை அசால்ட்டாக செலவு செய்பவன் வேறு!

“வாவ் ஸ்கால்பிங்… ரொம்ப ரிஸ்கி ட்ரேடர் தான் நீங்க. எவ்வளவு போயிருக்கு ப்ரோ?” என்று கேட்டபடி புன்னகைத்தான் அந்த ராகேஷ்.

ஏனென்றால், ஸ்கால்பிங்கில் சம்பாதித்தவர்களை விட விட்டவர்கள் தான் மிக அதிகம்.

“விடறதா? சான்ஸே இல்ல. ஆரம்பத்துல கொஞ்சம் ஆட்டம் காட்டுச்சு. இப்பல்லாம், அப்படி இல்ல. அஞ்சு பைசா பத்து பைசா தான். ஆனா வால்யும் அதிகமா பண்ணுவேன். சோ ஒரே ட்ரேட்ல லாட் அடிச்சுட்டு வெளிய வந்துருவேன்.” என்றவனை ‘ஆ’ வென பார்த்தான் ராகேஷ்.

“செம தில்லான ஆளு ப்ரோ நீங்க…”

“எஸ். ரிஸ்க் எடுக்கணும். ரிஸ்க் இல்லைன்னா வாழ்க்கைல என்ன த்ரில் இருக்கப் போகுது?” என்று கேட்க, அவன் ஆமென்று தலையாட்டினான்.

“ஷேர் மார்க்கெட் ரிஸ்கியான இடம்ன்னு இங்க தமிழ்நாட்டுல தான் சொல்வாங்க ப்ரோ. ஆனா எங்க குஜராத்ல பொண்ணுக்கு கல்யாணம்னா நாங்க ஷேர்ஸ வரதட்சணையா குடுப்போம். எவ்வளவு ஷேர்ஸ் குடுக்கறமோ, அவ்வளவு மதிப்பு அந்த பொண்ணுக்கு, புகுந்த வீட்ல…”

“அங்க ஷேர்ஸ்ன்னா இங்க கோல்ட்…” ப்ரீத்தி விட்டுக் கொடுக்காமல் கூறினாள்.

“இல்ல பெஹன்ஜி. நாங்களும் கோல்ட் கொடுப்போம். ஆனா அது டெட் இன்வெஸ்ட்மென்ட். ஆனா ஷேர்ஸ் அப்படி இல்ல. நாளுக்கு நாள் வளர்ந்துட்டே போகும். அதுவுமில்லாம, ஒரு கம்பெனி ஷேர்ஸ் வாங்கறோம்னா, அவங்களோட கம்பெனில நாம இன்வெஸ்ட் பண்றோம். அதாவது அந்த கம்பெனி வளர நாம ஹெல்ப் பண்றோம். அது வளரும் போது நாமளும் வளர்றோம்.

அந்த கம்பெனி இன்னும் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குது, எக்கனாமி வளருது. இது ஒரு சைக்கிள் பெஹன்ஜி. ஆனா கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஒரு சின்ன சர்க்கிள்ல முடிஞ்சு போகுதே… அப்படித்தான் ரிலையன்ஸ், அதானில இருந்து எல்லாரும் வளர்ந்துகிட்டு போறாங்க. குஜராத்தி வளர்றான்னு கூப்பாடு போடறவங்க, இந்த பேசிக் சென்ஸ் ஆப் இன்வெஸ்ட்மென்ட்ட புரிஞ்சுக்க மாட்டாங்க…”

“ஹன்ட்ரெட் பெர்சன்ட் கரெக்ட் ராகேஷ். உங்க பாய்ன்ட் சூப்பர் ஷார்ப்…” என்று பாராட்டினான் ஷான்.

“ப்ரோ, பெட்டிங் பத்தி என்ன நினைக்கறீங்க?” ராகேஷாக கேட்க, அவனது முகம், அவன் யோசிப்பதை காட்டியது.

“ஏன் ப்ரோ?”

“இல்ல. இவ்வளவு எக்சலன்ட்டா ஷேர் மார்கெட்ல இருக்கீங்க. வை டோன்ட் யூ ட்ரை பெட்டிங்?”

“கொஞ்சமா தெரியும் ப்ரோ. ஆனா யாரோடவும் பழக்கமில்லையே…” ஒன்றுமறியாதவனை போல ஷான் கூற, ராகேஷ் விளக்கினான்.

“கிரிக்கெட் பார்ப்பீங்கல?”

“எஸ். ரொம்ப பிடிக்கும்…”

“உங்களால அடுத்த பால் எப்படின்னு கெஸ் பண்ண முடியுமா?”

“கண்டிப்பா. அது தெரியாம இருக்குமா?”

“எக்ஸலன்ட். அது போதுமே… நீங்க இங்கயும் ஷைன் பண்ணலாமே…” என்றான் ராகேஷ்.

“எப்படி சொல்றீங்க?”

“நிறைய இருக்கு ப்ரோ. ஒன்னுக்கு இரண்டு, ஒன்னுக்கு பத்து, ஒன்னுக்கு ஐம்பது, ஒன்னுக்கு நூறு, இப்படி போயிட்டே இருக்கும்…”

“அதென்ன ஒன்னுக்கு நூறு?”

“பர்டிகுலரா ஒரு பால்ல பேட்ஸ்மென் அவுட் ஆவாங்கன்னு நீங்க கெஸ் பண்ணி ஒரு ரூபா கட்டி, அப்படியே அவுட் ஆனா ஒரு ரூபாய்க்கு நூறு ரூபா…”

“ஓ மை காட். இது செமையா இருக்கே…” அவனது முகத்தில் ஆச்சரியப் புன்னகை வந்தமர்ந்து கொண்டது.

“ஆனா, நீங்க சொன்னது நடக்கலைன்னா நீங்க கட்டின பணம் போச்சு…” என்று ராகேஷ் சிரித்தான்.

“புரியுது. ஆனா இதுல எக்கச்சக்க த்ரில் இருக்கும் போல…”

“எஸ். செம த்ரில்லா இருக்கும்…” என்றவன், “இப்ப டீம் செலெக்ஷன் நடக்க போகுது. சென்னை டீம்ல யார் யார் வருவாங்கன்னு பெட்டிங் போயிட்டு இருக்கு. நானும் கட்டியிருக்கேன். ஒன்னுக்கு அம்பது…”

“ஒன்னு அம்பதா? வாவ்… ஒரு ரூபாய் போட்டா அம்பது ருபாய்…” என்று சிரித்தவன், “அப்படீன்னா ஒரு கோடி போட்டா?” என்று ராகேஷை கேட்க,

“ஐம்பது கோடி…” என்றான் ராகேஷ் சிரித்தபடி!

“செம… அப்படீன்னா ஒரு கோடி போடறேன் ப்ரோ…” என்று சட்டென்று ஷான் கூற, ராகேஷ் விக்கித்தான்!

‘எடுத்தவுடன் ஒரு கோடியா?’ என்று விழித்தபடி அவன் பார்க்க, அவனை தட்டினான் ஷான்.

“ஒன் சியா?” மீண்டும் அவன் கேட்க, இவன் ஆமென்று தலையாட்டினான்.

“ஏன் ப்ரோ. வேண்டாமா?” என்று ஷான் கேட்க, அவசரமாக மறுத்தான் ராகேஷ்.

“இல்ல அர்ஜுன் சர். இவ்வளவு பெரிய அமௌன்ட் நான் டீல் பண்றதில்ல. எதுக்கும் எனக்கு மேல இருக்கவங்க கிட்ட நான் கேட்கறேன்.” என்று சற்று சுருதி குறைந்த குரலில் கூறினான். இது போல ஆட்களை சேர்ப்பதற்கு அவனுக்கு கமிஷன் உண்டு. அந்த கமிஷனை நினைக்கும் போதே அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது. எதையுமே செய்யாமல், கிடைக்கும் பணம்!

அதுபோல, ஒவ்வொரு ஏஜென்ட்க்கு மேலே இன்னொரு ஏஜென்ட் இருப்பார்கள். கீழிருக்கும் ஏஜென்ட்களை வழிநடத்துவது அவர்கள் தான். இப்படி இரண்டு மூன்று அடுக்கு போவது உண்டு. அனைவருக்கும் மேல் இருக்கும் குழு தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் குழு. அந்த குழு எடுக்கும் முடிவின் படிதான் ஆட்டத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். அந்த முடிவு, பெட் கட்டியவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும். அந்த குழுவுக்கு எது லாபமோ, அதுவே தீர்ப்பு!

அந்த குழு, கிரிக்கெட் வீரர்கள், மேனேஜர்கள் என்று நிறைய பேரோடு தொடர்பில் இருக்கும். இவர்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். இதுதான் பெட்டிங். சூதாட்டம். வீரர்கள் கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தனியாக பெரிய தொகை கைமாறும். சொன்ன பாலில் சிக்சர் அடிப்பதும், அவுட் ஆவதும் அப்படித்தான்.

ஒரு அடுக்கிலிருப்பவர்களுக்கு அவர்களுக்கு மேலே இருக்கும் ஒரே ஒரு ஏஜென்ட்டை மட்டும் தான் தெரியும். அதற்கும் மேல் யார் இருக்கிறார்கள் என்பதை தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. அதிக பணம் என்றால் மட்டும், அடுத்த லெவல் ஏஜென்டை பிடிக்க முடியும்.

“எனக்கு ஒத்து வந்தா இன்னும் எவ்வளவுன்னாலும் பண்ணுவேன் ப்ரோ. ஆனா நம்பிக்கையான இடமா இருக்கணும். கொஞ்சம் ஏமாத்தற மாதிரி இருந்தாலும், எனக்கு வேண்டாம்…” கறாராக அவன் கூற, ராகேஷ் அவசரமாக மறுத்தான்.

“சென்ட் பர்சன்ட் நம்பிக்கையானவங்க ப்ரோ.” என்றவன், என்ன யோசித்தானோ, “அவங்க கிட்ட நானே உங்களை கூட்டிட்டு போய் இன்ட்ரோ குடுக்கறேன்…” என்று உறுதி கொடுத்தான்.

“ஓகே…” என்றவன், “அந்த போன்?” என்று கேட்க, பில் போட்டு ரெடியாக இருந்த போனை ஷான் கையில் கொடுத்தான் ராகேஷ்.

செல்பேசியை ஆன் செய்தவன், “புஜ்ஜி இங்க வா…” என்று ப்ரீத்தியை அழைத்தான்.

அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

‘டேய்… வெளிய வாடா… உனக்கு இருக்கு. லவ் இல்லைம்பானாம். ஆனா செல்ல பேர் வெச்சு கொஞ்சுவானாம்.’ என்று கருவிக் கொண்டாள். அவளுக்கு ‘உன்னுடைய காதலை பரிசோதித்துப் பார்.’ என்று ஷான் கூறியது மட்டும் மனதுக்குள் பதிந்திருந்தது. அவன் கூறிய மற்றவைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு பட்டன் கேமராவை ராகேஷை பார்த்தவாறு இருக்கும்படி ஒட்டி வைத்துவிட்டாள். அதுவுமில்லாமல், ஸ்பை மைக் ஒன்றையும் அவனது டேபிளுக்கு அடியில் ஒட்டியிருந்தாள். அதுபோல, பெட்டிங் சம்பந்தமாக ராகேஷ் பேசிய அனைத்தும் ஸ்பை கேமராவில் ரெக்கார்ட் ஆகி இருந்தது.

“என்ன பஜ்ஜி…” என்று அருகில் வந்தாள்.

“உனக்கு வாங்கின போன்ல ஒரு செல்பி…” என்றவன், அவளை நெருக்கமாக அணைத்தபடி செல்பி எடுத்தான்.

அவனது கை, அவளது இடையை தழுவி இருக்க, அவன் செல்பி எடுப்பதற்குள் நெளிந்தாள்.

“ஏய் ஒழுங்கா நில்லுடி…” சிரித்துக் கொண்டே அவளை வார,

“டேய் பிசாசு…” அடிக்குரலில் பல்லைக் கடித்தாள்.

“இன்னொரு செல்பி…” என்றபடி வரிசையாக எடுத்தவனை பார்த்து,

“சரி… போதும்…” என்றபடி, அவனை தள்ளி நிறுத்த முயல,

“ஒன் மினிட் இரு…” என்றவன், ராகேஷிடம் போனை கொடுத்து, “ஒரு ஸ்நாப் ப்ளீஸ்…” என்று கேட்டவன், அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்துக் கொண்டான். வெற்றிடையில் அவன் கை. தெரிந்தே தான் வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. வேண்டுமன்றே அவளை வம்பிழுக்கிறான் என்பதும் புரிந்தது.

“டேய் கைய எடு…” முணுமுணுத்தாள் ப்ரீத்தி.

“முடியாது…” என்றவன், அவளது இடையில் சிறு அழுத்தம் கொடுத்தபடி புன்னகைத்தான்!

அவளுக்குள் ஜிவ்வென்று ஏதொவொன்று சுழற்றியடித்தது. உடலிலிருந்த ரத்தமனைத்தும் முகத்தில் பாய்ந்தது போன்றவொரு உணர்வு. கால்களை அழுத்தமாக நிலத்தில் ஊன்ற முயன்றாள். ஆனால் தள்ளாடியது.

‘என்ன இது?’ என்று அவளுக்கு புரியவில்லை!

“செம ஷாட் அர்ஜுன் சர்…” என்றபடி அருகில் வந்தான் ராகேஷ்.

அதே புன்னகை!

“உங்க சிரிப்பும், மேடமோட வெட்கமும்… ச்சே பார்க்க எப்படி இருக்கு தெரியுமா? மேட் ஃபார் ஈச் அதர்…” என்று சிலாகித்து கூற,

“தேங்க்ஸ் ராகேஷ் ப்ரோ. இதுக்காகவே இன்னொரு சி போடலாம் போலவே…” என்று சிரித்தபடி கூறினான் ஷான்.

‘இன்னாது வெட்கமா? டேய்… இதுக்கு பேர் வெட்கம்னா உண்மையில வெட்கம்னா என்னாங்கடா?’ ப்ரீத்தியின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது!

இருவரும் வெளியேற, மகேஷ் குழுவினர் ராகேஷை கண்காணிக்கத் துவங்கி இருந்தனர்.

காருக்கு வந்தவுடன், செல்பேசியை தூக்கி அவனிடம் கிட்டத்தட்ட வீசினாள் ப்ரீத்தி.

“ஏய்… என்னடி பண்ற?” அதை கேட்ச் பிடித்தவன், புன்னகை மாறாமல் கேட்க,

“பரதேசி… உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா இடுப்ப புடிப்ப?” என்றவள், அவனை அடிக்க எதாவது கிடைக்கிறதா என்று தேடினாள்.

“நான் எங்கடி புடிச்சேன்? உன் இடுப்பு அதுவாவே என் கைய புடிச்சு இழுத்துகிச்சு…”

“என்னது இழுத்துகிச்சா? பிச்சு போடுவேன் பார்த்துக்க… பண்றதையும் பண்ணிட்டு இழுத்துகிச்சுன்னு சொன்ன உன் கன்னம் பழுத்துக்கும்டா…”

“இழுத்துக்கும் பழுத்துக்கும்… வாவ் வாட்டே ரைமிங்!” என்று சிலாகித்தவனை வெட்டவா குத்தவா என்பதை போல பார்த்தாள்.

“விளையாடாத ஷான்…” எச்சரித்தவளை கண்டு கொள்ளாதவன்,

“ஒரு நாலு இன்ச் மேட்டர். அதுக்கு இவ்வளவு கோபமா?” என்று சிரித்தான்.

“நாலு இன்ச் மேட்டரா? உனக்கிருக்க கொழுப்பு ஊர்ல யாருக்கும் இருக்காதுடா. ஏன் என் இடுப்ப புடிச்சேன்னு கேட்டுட்டு இருக்கேன். நீ இல்லாத கதையெல்லாம் சொல்லிட்டு இருக்க…” கோபத்தில் முகம் சிவந்து மூக்கு விடைத்தது ப்ரீத்திக்கு.

அவளது கோபத்தையும், அவளையும் ரசித்துப் பார்த்தவன், “நல்லா இருந்துச்சு. புடிக்கனும்ன்னு தோனுச்சு. புடிச்சுட்டேன். தப்பா கோப்பால்?” கிண்டலாக கேட்டான் ஷான்.

“எவ்வளவு தைரியம்…” என்றவள், கையிலிருந்த குஷனால் அவனை மாங்கு மாங்கென்று அடிக்க, அவளை கையால் தடுத்தான்.

“இதுக்கெல்லாம் தைரியம் வேணுமா புஜ்ஜி?” மீண்டும் அவளை வம்பிழுக்க, அவள் கோபத்தின் உச்சிக்கு போனாள்.

“புஜ்ஜியா… இதுக்கே இன்னும் நல்லா போடனும்…” என்று மீண்டும் அவனை மொத்த,

“டர்ட்டியா பேசாத புஜ்ஜி. நல்ல பையனை கெடுக்கற நீ…” என்று கூறியவனை புரியாமல் பார்த்தாள்.

“இல்ல… ஏதோ போடப் போறேன்னு சொன்னல்ல…” என்று அவன் இழுக்க, முதலில் புரியாமல் அவனைப் பார்த்தவள், புரிந்த பின் கொலைகாண்டானாள்.

“அட எருமை மாடே… உனக்கு டபுள் மீனிங் வேற கேக்குதா?” என்று அவனை குஷனால் விளாசினாள்.

“என்னை மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி…” என்று பாடுவதை போல வம்பிழுக்க,

“வேண்டாம். காண்டுல இருக்கேன். என்னை இன்னும் தூண்டி விடாத…”

“என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி…” விடுவேனா என்று விடாமல் வம்பிழுத்தான்.

“உனக்கு இதெல்லாம் பத்தாது…” என்றவள், அமர்ந்திருந்த சீட்டின் மேல் மண்டியிட்டு கொண்டு, அவனது தலைமுடியை பிடித்து ஆட்டத் துவங்கினாள்.

“எவ்வளவு கொழுப்பு… லொள்ளு…” என்று திட்டியபடியே அவனது முடியை பிடித்தாட்ட, “ஏய் வலிக்குதுடி…” என்று கத்தினான் ஷான்.

“நல்லா வலிக்கட்டும். என்னை எப்படில்லாம் கடுப்பாக்கற…” என்று இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆட்டினாள்.

“ஓகே ஓகே… இனிமே வம்பிழுக்க மாட்டேன்… விடுடி ப்ளீஸ்…”

“திரும்ப அப்படித்தான் பண்ணுவ. உன்னை நம்ப முடியாது…” என்றவள், அவனது முடியிலிருந்து கையை எடுக்கவே இல்லை.

“சரி இப்படியே இரு புஜ்ஜி. நானும் ப்ரீ ஷோ பார்த்துட்டே இருக்கேன்…” விஷமமாக கூறியவனை பார்த்து முறைத்தவள், சட்டென தன்னை பார்த்துக் கொண்டாள்.

கட்டத் தெரியாமல் கட்டிய சேலை அலங்கோலமாகி இருந்தது.

error: Content is protected !!