சரணாலயம் – 11

சரணாலயம் – 11

சரணாலயம் – 11

கல்லூரி மூன்றாமாண்டு இறுதி தேர்வினை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தாள் சரண்யா. இரண்டு வருடங்களாக சௌந்திரவல்லி மகளை அழைத்து ஒய்ந்து போயிருந்தார்.

வீட்டிற்கு போவதே ஏதோ ஒவ்வாமையை போல் நினைத்து கொண்டிருந்தவளும், லச்சு அக்காவிற்கு பிறந்த பெண் குழந்தையை பார்க்கும் காரணமிட்டே துளசியுடன் வந்து விட்டாள்.

கமலாலயாவின் வீட்டில் வழக்கம் போல் துளசி அடைக்கலமாகிவிட, இவளின் பொழுதுகள் அங்குமிங்கும் கழிய ஆரம்பித்தது. இதுநாள் வரையில் சசிசேகரனின் மீதான நேசத்தை யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

அன்றைய உறுதியான பேச்சிற்கு பிறகு, இருவரும் புரிந்தே விலகியிருக்க, சரண்யாவும் எப்படியாவது அன்னையிடம் தனது விருப்பத்தை சொல்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாள்.

வீட்டிற்கு வந்த மகளை பார்த்த சிவபூஷணம், முகத்தை திருப்பாமல் அர்த்தப் பார்வையுடன் கவனித்துக் கொண்டதும் சரண்யாவிற்கு ஆச்சரியம்தான்.

இரண்டு வருடங்களாக பார்க்காததால் வந்த கனிவோ? தந்தையாக, அவருக்கும் தன்மீது பாசம் இருக்கத்தான் செய்கிறது என்றெல்லாம் சரண்யாவின் மனம் மகிழத் தொடங்கி விட்டது.

இவள் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. லச்சுவின் வீட்டில் குட்டி இளவரசியை கொஞ்சிக்கொண்டே தனது நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் படிப்பு முடிய எத்தனை வருஷம் இருக்கு சரணி?” கேட்டபடியே வந்தமர்ந்தார் கோதாவரி.

“ரெண்டு வருஷம் இருக்கு அத்தை. அதுக்கடுத்து வேலை பார்த்துட்டே மேற்படிப்பும் படிக்க போறேன்… இப்போதைக்கு படிப்பு முடியாது” என்றிவள் விளக்க,

“அம்மாகூட பேசுனியா? என்ன சொன்னாங்க?” கோதாவரி கேள்வியில் முடிக்க,

“ம்ம்… பேசுனேனே! எதுவும் சொல்லலையே? என்ன விஷயம் அத்தை?” என்றவள், பார்வையை லச்சுவிடம் திருப்பி, “ஏதும் பிரச்சனையா லச்சுக்கா?” மெதுவாக கேட்டாள்.

“இன்னுமா சொல்லல? இந்த சௌந்திரம் ஏன் இப்படி இருக்கா?” முணுமுணுப்புடன் உள்ளே சென்று விட்டார் கோதாவரி.

“என்ன விஷயம்கா? நீயாவது சொல்லு!” பிடிவாதக் கேள்வியில் சரண்யா நின்றுவிட,

“அதுவந்து சரணி… நீயில்லாம, உன்னோட கல்யாண நிச்சயம் முடிஞ்சு போச்சு. அத தான் உன்கிட்ட சொன்னங்களானு அம்மா கேக்குறாங்க…” என போட்டுடுடைக்க இவளுக்கு சர்வமும் பதறிப் போனது.

இவளின் அதிர்வை கண்ட லச்சுவும், “எங்க வீட்டுல எவ்வளவோ சொன்னாங்கடி! உங்க அண்ணன் தான் வீம்பா இந்த நிச்சயம் நடந்தே ஆகணும்னு முடிச்சு வைச்சான்!” லச்சு மேற்கொண்டு விளக்கம் கூற, பொங்கிய ஆவேசத்துடன் அடுத்த நொடியே தனது வீட்டிற்கு சென்றாள் சரண்யா.

இரண்டு நாட்களாய் தந்தையின் கனிவான பார்வைக்கு அர்த்தம் இதுதானா? தனது விருப்பத்தை கேட்டு அறியவும் முடியாத அளவிற்கா நான் வேண்டாதவள் ஆகிவிட்டேன்? அல்லது அண்ணங்களைப் போல், அவரும் தன்னை மொத்தமாய் தட்டிக் கழிக்க முடிவெடுத்து விட்டாரா என வார்த்தைகளில் வடிக்க முடியாத ஆதங்கமும் கோபமும் மேலோங்கி விட, நேராக தன் அம்மாவிடம்தான் போய் நின்றாள்.

“என்னம்மா நடக்குது இங்கே? நீயும் அவங்ககூட சேர்ந்துட்டியா?” கோப பெருமூச்சுகள் எடுத்துக் கொண்டே தன்னை கேள்வி கேட்ட மகளை கூர்ந்து பார்த்தார் சௌந்திரவல்லி.

மகளின் கேள்வியை ஆராயாமல் அவளின் அழகினை ரசித்து, நெட்டி முறித்து கன்னம் வழித்தார். இவள் வந்த இரண்டு நாட்களாக மகளை அருகில் அமர வைத்து, ரசித்து பார்ப்பதையே வேலையாகக் கொண்டுள்ளார்.

மனம் முழுவதும் மகளைப் பற்றிய எண்ணங்களே அலைகழிக்க, அவளைப் பார்த்தே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் சௌந்திரம்.

“என் பட்டுகுட்டி எவ்வளவு அழகா இருக்கா? இப்போதான் உன்ன தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள பெரிய பொண்ணா வளர்ந்து நிக்கிற?” என்றவர் கையோடு இரண்டு வத்தலை உப்போடு சேர்த்து திருஷ்டி சுற்றி, வெளியே எரிந்து கொண்டிருந்த விறகடுப்பில் போட்டு வந்தார். 

“இந்த கொஞ்சல் எல்லாம் வேண்டாம்மா… என்ன நடந்ததுன்னு சொல்லப் போறியா, இல்லையா?” மகள் பெருங்குரலெடுத்து கேட்க, அப்போதுதான் சுதாரித்தார் சௌந்திரம்.

“லச்சு சொன்னாளா? நல்லது தான். உன்கிட்ட எப்படி சொல்லி சமாதானபடுத்துறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன்!” என்று சால்ஜாப்பு பேசியதில் இவளுக்கு சினம் தலை தூக்கியது.

“என்ன நடந்ததுன்னு சொல்லப் போறியா இல்லையா?” என்றவளின் பெருங்குரல், முன்னறையில் அமர்ந்திருந்த சிவபூஷணத்தின் காதிலும் துல்லியமாக விழுந்தது.

“ஆமாடி பட்டு! உனக்கு நிச்சயம் முடிச்சாச்சு… பெரிய இடம், நம்ம இனம், பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கனு கேட்டு வந்தாங்க… விசாரிச்சு பார்த்ததுல எல்லாம் நல்ல இடமா இருந்தது. அதான் உனக்கும் பெரியவனுக்கு பேசி முடிச்சிட்டோம்” பொறுமையாக தாய் சொல்ல,

“எவ்வளவு ஈஸியா சொல்ற? என் சம்மதம் வேணும், என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு கூடவா யாருக்கும் தோணல?” அடக்கப்பட்ட கோபத்தில் பல்லைக் கடித்தாள் சரண்யா.

“நீ வந்து பார்த்து, உனக்கு புரிய வைச்சு, நிச்சயம் நடக்கறதுக்குள்ள நாள் போயிடும்டி தங்கம்! அவங்களும் சரி, உன் அண்ணனும் சரி ரொம்ப அவசரப்பட்டாங்க… நான் என்னடி பண்ணட்டும்?”

“அவனுக்கு அவசரம்னா, அவனுக்கு மட்டும் பண்ணி வைக்க வேண்டியது தானே? என்னை ஏன் இழுக்கிறீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை ஃபோன்ல சொல்லணும்னு கூட தோணலையா? ஆட்டையும் மாட்டையும் பிடிச்சு கொடுக்குற மாதிரி என்னை தள்ளி விட நினைக்கிறீங்களா?” வெடித்தவள் கண்கள் சிவக்க, அரற்றவே தொடங்கி விட்டாள்.

இப்படி வேண்டாத, பிடிக்காத ஜீவனாக இந்த வீட்டில் இன்னமும் இருக்கதான் வேண்டுமா என்ற கழிவிரக்கமே அவளின் கோபத்தை இன்னமும் அதிகப்படுத்தியது.

“என்ன பேச்சு பேசுற கண்ணு… என் பொண்ணு போற இடத்துல மகாராணியா வாழணும்னு நினைச்சுதான் இந்த ஏற்பாடு பண்ணியிருக்கு.

இவ்வளவு ஏன்? மாப்பிள்ளையும் உன்னை போட்டோவுல பார்த்ததே போதும்னுட்டு, சரின்னு சொல்லியிருக்காரு! இதுல தெரியலையா, எவ்வளவு நல்ல இடம்னு…” என சௌந்திரவல்லி சமாதானம் சொல்லச் சொல்ல இவளுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் எகிறியது.

“நானும் மனுஷிதான்மா! எனக்குனு தனிப்பட்ட விருப்பம் இருக்கு… யார் என்ன சொன்னாலும் சரி… என்னால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது”

“உங்க அப்பா நல்லா விசாரிச்சு பார்த்துதான் முடிவு பண்ணிருக்காரு பட்டு! இந்த ஒரு விசயத்துல அவர் விரும்புற மாதிரி நடந்து, அவரோட கோபத்தை குறைக்க பாருடி!” கெஞ்சாத குறையாக, மகளின் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டு அறிவுரை கூறினார் சௌந்திரம்.

“அப்பா கால்ல விழுந்து கூட, அவர் கோபத்தை குறைக்க முயற்சி பண்றேன்மா! ஆனா இந்த கல்யாணம் எனக்கு வேணாம். நான் படிக்கணும்… வேலைக்கு போகணும். எனக்குனு நிறைய கனவுகள் இருக்கு, அதை சிதைச்சுடாதீங்க!” என்றவளின் மன்றாடலை கேட்டு பின்னோடு வந்த சிவபூஷணம்,

“இப்போ யாரு உன்னை படிக்க வேணாம், வேலைக்கு போக வேணாம்னு சொன்னது? இங்கே படிப்பை முடிச்ச பிறகுதான் மாப்பிள்ளை, உன்னை கனடாவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.

அடுத்த ஆறுமாசம் கழிச்சுதான் கல்யாணமே நடக்க போகுது… மெதுவா உனக்கு புரிய வைக்கத் தான் ஃபோன்ல கூட சொல்லல… இந்த விவரத்த நானே இன்னைக்கு உன்கிட்ட சொல்லத்தான் வீட்டுல உக்காந்திருக்கேன்.

நாளைக்கு, மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு தர்றேன்… பேசிக்கோ! எல்லாம் உனக்கு புடிச்ச மாதிரிதான் இருப்பாரு…” மகளை நேருக்கு நேராக கூட பார்க்காமல் சுவற்றை பார்த்து கட்டளையாக கூறி முடித்தார்.

விடுதிக்கு சென்ற மகள், ஒரேடியாக வீட்டை மறந்து, அங்கேயே தங்கிவிட்டதில், தந்தையாக அவரின் கோபம் இன்னுமே கூடியிருந்தது.

அந்த காரணமே அவளிடத்தில் கரிசனமாக கூறி பொறுமையாக புரிய வைப்போம் என்ற நிதானத்தை கையில் எடுக்கவில்லை சிவபூஷணம். உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்த தந்தை, மகள் ஆதங்கம் எல்லாம் மெல்லமெல்ல புகையத் தொடங்கி விட, சரண்யா திடமாய் தந்தையை எதிர்க்க துணிந்து நின்றாள்.

“என்னோட விருப்பம் என்னன்னு, நான்தான் முடிவு பண்ணனும். அந்த உரிமையை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் இப்பவே ஹாஸ்டலுக்கு போறேன்!” சரண்யாவும், தந்தைக்கு தப்பாமல் முகத்தை திருப்பி கொண்டு பதிலளித்த நேரத்தில், இவளின் இரண்டு அண்ணங்களும் வந்து சேர்ந்தனர்.

“என்ன பிரச்சனைம்மா? எதுக்கு அப்பா கோபமா நிக்கிராரு?”  விசாரித்தபடி வந்த வெற்றிவேல் மறந்தும் கூட தங்கையின் முகத்தை பார்க்கவில்லை.

மகன்களிடம் சரண்யாவின் மறுப்புக்களை கூறிய சௌந்திரம், மகளிடம் திரும்பி,

“அவரசப்படாதேடி! உன்னோட படிப்பு பத்தி சொல்லி ஒத்துக்கிட்டு தான் நிச்சயம் பண்ணியிருக்கு… வீணா வேண்டாதத பேசி அப்பாவ கோபபடுத்தாதே! ஊரெல்லாம் சொல்லியாச்சு… இப்ப வேற முடிவ எடுத்தா, வெளியே தலை காட்ட முடியாது!” கரகரத்த குரலில் கூறி அமைதியாகி விட்டார்.

“இப்ப இவ்வளவு சொல்லி என்னை சமாதானப் படுத்துறவங்க, என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரச்சனையே இல்லையே… ஆரம்பத்துலயே வேண்டாம்னு சொல்லி முடிச்சிருக்கலாமே? என்னை யாரும் இங்கே ஒரு மனுஷியாவே நினைக்கல… அப்படி தானேம்மா?” என்றவளின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல அன்னையால் முடியவில்லை.

“இதபாரு சரண்யா! தானா தேடி வந்த சம்மந்தமா இருந்தாலும், நம்மள விட அவங்க பெரிய இடம். இப்ப மாப்பிளையோட அப்பா கவுன்சிலரா இருக்கார்.

அவரோட சேர்ந்தா பதவி அந்தஸ்துன்னு எல்லாம் கூடி வர்ற வாய்ப்பும் நிறைய இருக்கு. அவரே அதுக்கும் பொறுப்பெடுக்குறேன்னு என்கிட்ட நேரடியா சொல்லி இருக்கார். சும்மா எதிர்த்து பேசி ஆர்பாட்டம் பண்ணாம, இந்த கல்யாணத்த சந்தோசமா ஏத்துக்க தயாராகிக்கோ…” என்று ஆணையிட்டது வெற்றிவேல்தான்.

அவனுக்கு பார்த்திருந்த பெண் சுமார் ரகம்தான் என்றாலும் பணமும் அந்தஸ்தும் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்திருந்தது. ஊரெல்லாம் மேய்பவனுக்கு தனது சொந்த நிலம் கௌரவமாய் இருத்தல் வேண்டும். அங்கே அக்கறையும் அன்பும் ரெண்டாம் பட்சமாகத் தான் ஆட்சி செலுத்தும். அப்பேற்பட்ட மனநிலையில், பெண்ணை ஏறிட்டும் பார்க்காமல் இவன் சம்மதித்து இருந்தான்.

சரண்யாவிற்கு பார்த்த மாப்பிள்ளையோ, தங்கையின் நல்வாழ்வை முன்னிட்டு பெண் பார்க்காமலே கூட சரியென்ற மனநிலையில் இருந்தான்.

சரண்யாவின் படிப்பும் துடுக்குதனமும் கேள்விப்பட்டு, அவளை போட்டோவில் பார்த்ததும் பிடித்தும் போயிற்று. அதனால் அவனும் நேரில் கூட பார்க்காமல் சரியென்று தலையசைத்திருந்தான்.

ஆக மொத்தம் அனைத்து தரப்பிலும் சம்மதம் என்று வந்த பிறகு இவளை ஒரு பொருட்டாக யாரும் நினைக்கவில்லை. சௌந்திரம் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாமென ஒன்றுக்கு பலமுறை கூறினாலும் மகன்கள் விடவில்லை. 

எல்லாவற்றிலும் காண்பிக்கும் அலட்சியத்தை இதிலும் கையாண்டு தட்டிக் கழித்து விடுவாள் என்றே அன்னைக்கு மூளை சலவை செய்து வைத்தனர். நிச்சயம் வரையில் கமுக்கமாக இருந்தே காரியத்தை சாதித்தும் இருந்தனர்.

வெற்றிவேலின் திமிரான பேச்சில் கோபத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தவளின் வார்த்தைகள் கொந்தளித்துவிட, சற்று அதிகப்படியாகவே பேச ஆரம்பித்தாள்.

“உன்னோட பணம், பதவி ஆசைக்கு என்னையும் சேர்த்து விலை பேசுவியா? நீயெல்லாம் ஒரு அண்ணன் தானா?” கோபத்தில் உயர்த்திய குரலோடு சரண்யா கேட்ட நொடியில், சிவபூஷணத்தின் கை மகளின் கன்னத்தை பதம் பார்த்து விட்டது.

அவ்வளவுதான்…. அப்படியொரு மரணமைதி அந்த வீட்டில். தகப்பனின் கட்டுக்கடங்காத கோபம் மகளின் கன்னத்தில் இடியாக இறங்கியிருக்க, தடுக்க வேண்டிய மகன்களோ உனக்கு இது தேவைதான் என்றே மிதப்பான பார்வையில் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

கணவனின் பொல்லாத கோபத்தில் அதிர்ச்சியடைந்த சௌந்திரமும் எதையும் பேச முடியாத நிலையில் அழுகையை அரங்கேற்றி விட்டார்.

தகப்பனை சமாதானப்படுத்தி தங்கையை கட்டுபடுத்த உடன்பிறந்தவர்கள் முன்வரவில்லையே என்ற ஆற்றாமையில் அவருக்கு நெஞ்சமெல்லாம் ரணமாய் வலி கொண்டது.

இக்கட்டான சூழ்நிலையிலும் சாதாரண பெண்ணிற்கு செய்யும் உதவியை கூட தங்கைக்கு செய்ய முன்வராத இவர்களா, எதிர்காலத்தில் தன் பெண்ணை தாங்கிக் கொள்ள போகிறார்கள் என்ற கேள்விக்குறி மனதிலே பதிந்து விட, அந்த நிமிடமே அந்த வீட்டை, முற்றிலுமாய் வெறுத்து விட்டார். தனது புலம்பல்களை கூட வெளியே சொல்ல முடியாத அளவிற்கு திக்பிரமை பிடித்தவராய் நின்றிருந்தார்.

பத்து நிமிடம் தன் கோபத்தை சமன் செய்ய வீட்டினுள் நடந்த சிவபூஷணம், இறுதியாக மகளை பார்த்து தீர்க்கமான குரலில்,

“எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் உனக்கு கல்யாணம் பேசி முடிக்கல… உனக்கு படிப்பு மேல இருக்குற விருப்பத்த மாப்பிள்ளை வீட்டுல புரியுற மாதிரி சொல்லியிருக்கு.

உன்னோட விருப்பம், எதிர்காலம் எல்லாத்தையும் மனசுல வைச்சுதான் இந்த வரனை நிச்சயம் பண்ணியிருக்கோம். பிள்ளைகளுக்கு எத எப்போ செய்யணும்னு பெத்தவங்களுக்கு தெரியும். உன்னோட பிடிவாதத்தை மூட்டை கட்டி வச்சிட்டு கல்யாணத்துக்கு ரெடியாகிக்கோ!” மீறமுடியாத குரலில் உத்தரவாக முடித்து விட்டார்.

தந்தையிடம் வாங்கிய அடியிலும், பேச்சிலும் சரண்யா செயலற்று நின்றதெல்லாம் ஒருநொடி தான். பின் தன்னை மீட்டுக் கொண்டவள், தெளிவான குரலில் அவரை நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டு,

“நான் விரும்புற மாதிரி மட்டுமே, என் வாழ்க்கைய அமைச்சுக்க ஆசைப்படுறேன். பெத்தவங்க எடுக்குற முடிவுக்கு எதிர்த்து பேசக்கூடாது தான். ஆனா இந்த வீட்டுல எனக்காக நான்தான் பேசுற நிலையில இருக்கேன். என்னால உங்க ஏற்பாட்டுக்கு தலையாட்டிட்டு இருக்க முடியாது. என்னோட முடிவு வேற!” என்றிவள் தன் மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பிக்க,

“என்ன முடிவு பண்ணியிருக்க? வீட்டுக்கு அடங்காம ஊர் சுத்திட்டே இருக்கிறதுக்காக, கல்யாணமே பண்ணிக்க போறதில்லன்னா?” எகத்தாள குரலில் சக்திவேல் கேட்க, உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் ஆள் நானல்ல என்ற அலட்சியப் பார்வையை பார்த்தாள்.

“நீ என்ன முடிவு பண்ணினாலும், உன்னோட கல்யாணம் நடக்கப் போறது நிச்சயம்!” உஷ்ணத்துடன் சிவபூஷணம் மீண்டும் பேச,

“அந்த கல்யாணம் யார் கூடன்னு முடிவு பண்ண வேண்டியது நான்…” இடைவெளி இல்லாமல் பதிலடி கொடுத்தாள் சரண்யா.

“என்ன பழக்கம்டி இது? அப்பாவை எதிர்த்து பேசிட்டு இருக்க… உன் வாழ்க்கை யார்கூடன்னு முடிவு பண்ற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா?” இத்தனை நேரமும் கல்லாய் சமைந்து நின்ற சௌந்திரமும் சேர்ந்து கொண்டு சத்தம் போட,

“என் வாழ்க்கைக்கு நாந்தான் பேசியாகணும். உன் புள்ளைங்க எப்படியெல்லாம் பேசுறாங்கன்னு பார்க்கிறதானே?” என்று அன்னையிடம் கேட்டவள், தந்தையை பார்த்து,

“இனியும் மூடி மறைக்க விரும்பல… நான் சசிய விரும்புறேன்! என்னோட வாழ்க்கை அவன்கூடத்தான்னு முடிவு பண்ணிட்டேன்!” நிதானமாக சற்றும் தடுமாற்றமின்றி தன் முடிவினை அறிவித்தாள் சரண்யா.

“சசின்னா… யாரு? அந்த வேலைக்கார ராமசாமி பையனா?” இளக்கார குரலில் வெற்றி பேசிய பாவனையே, அவளுக்கு சற்றும் பிடிக்காமல் போனாலும், ஆமென்று வேண்டா வெறுப்பாக தலையசைத்தாள்

“தங்கச்சிய பாக்குற சாக்குல, அடிக்கடி உன்னையும் பார்த்து சரி கட்டிட்டானா அந்த பய?” நக்கலடித்தான் சக்திவேல்.

“அவன்தான் எப்போவும் உருகுற மாதிரியே பேசி வைப்பானே! அதுலயே இவ விழுந்துருப்பா…” நையாண்டியுடன் வெற்றிவேல் மேலும் தொடர,

“ஆமா… அவனோட அக்கறையிலயும், அனுசரணையிலயும் தான் நான் விழுந்துட்டேன்! அவன் காட்டின கரிசனத்துல பாதிய, உங்கள்ள யாராவது காட்டியிருந்தா, நானும், அவன் பக்கம் சாயமா இருந்திருப்பேனோ… என்னவோ?” குதர்க்கமாய் பேசி, சகோதர்களை இளக்காரமாகப் பார்த்தாள்.

இத்தனை ஆண்டுகள் வீட்டினரின் ஒதுக்கத்தை சகித்துக் கொண்டிருந்தவளின் மனம், இன்று மொத்தமாய் வெடித்து விட்டது. மகளின் இந்த வெறுமையான பேச்சில் சிலையாய் இருந்த சௌந்திரமும் அதிர்ந்து விட்டார்.  

“ஏண்டி இப்டி பேசுற? இந்த வீட்டுல உன் மேல அக்கறையா யாருமே இல்லையா? எந்நேரமும் உன்னையே நினைச்சுட்டு இருக்க என்னை பத்தி நீ யோசிக்கவே மாட்டியா?”

“பாசமா இருந்து என்ன பண்ண? உன் மகளுக்காகன்னு சுயமா உன்னால முடிவெடுக்க முடியுதா? உன்னோட பேச்சு இந்த வீட்டு சபையில ஏறுதாம்மா?”

“அதுக்காக ஓட்டு மொத்தமா எல்லாரையுமா தப்பு சொல்வ?” என்றவளை இடைவெட்டிய சிவபூஷணம்.

“இதெல்லாம் ஆராய்ச்சி செய்ய இது நேரமில்ல… உன்னோட கல்யாணத்தை பத்தி மட்டுமே பேசு! நாங்க பார்த்து முடிவு பண்ணியிருக்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாராகிக்கோ” என்ற வீம்புடன் தனது பிடியில் நிற்க,

“அது இந்த ஜென்மத்துல நடக்காது…” வீம்புடன் மறுத்தாள் சரண்யா.

“ஏன்? அவனோட அன்பை பேச்சோட நிறுத்திக்காம, செயல்லயும் காமிச்சு, உன்னை மடக்கிட்டானோ?” இருபொருள் பட, இடைவெட்டிப் பேசிய வெற்றிவேலின் பேச்சில் வெகுண்டு விட்டாள்.

“பெத்தவங்க முன்னாடியே இவ்வளவு அசிங்கமா பேசுற  நீயெல்லாம் மனுஷ ஜென்மமா? ம்ஹூம்… நீ என்ன பண்ணுவ? உன் புத்தி அதை தாண்டி யோசிக்காதே! ஊரெல்லாம் சுத்தி பொறுக்கிதனம் பண்றவன் எல்லாம் புத்தி சொல்ல வந்துட்டான்…” என்று கடுகடுப்பில் இவளும் வார்த்தைகளை விட்டுவிட்டாள்

“அடி வாங்கியும் இவளுக்கு திமிர் அடங்குதா? பாரு!” என வெற்றிவேலும் இப்பொழுது சரண்யாவை அடிக்க கை ஓங்கிவிட,

“இதோட பேச்சை நிப்பாட்டு வெற்றி!” என தடுத்த சிவபூஷணத்தால். ஒரு ஆசிரியராக மகனின் தரம் தாழ்ந்த பேச்சினை கேட்டு சகித்துக் கொள்ள முடியவில்லை.

மகன்கள் தன்கை மீறிபோய் விட்ட நிலையில், அவர்களை ஓரளவிற்கு மேல் தடுத்து நிறுத்தவும் வழி தெரியாமல் மனதோடு அவதிப்பட்டு கொண்டிருந்தார். 

அதே நேரத்தில் சௌந்திரமும் கோபத்துடன், “போதும் நிறுத்துங்கடா… ஒரு பொண்ணோட கூடப்பிறந்தவனா எப்போதான்டா யோசிக்கப் போறீங்க?” கர்ஜித்தவர், மகன்களையும் கணவரையும் பார்வையால் எரித்தார்.

பெற்றவர்கள் தடுத்து நிறுத்தியதில் பிடித்தம் இல்லாத சக்திவேலோ, தனக்கு தெரிந்த முறையில் பேச்சினை தொடர்ந்தான். விவாதங்கள் பற்றிக் கொண்டதில் அந்த வீடு தகிக்க தொடங்கி இருந்தது.

“ஏன் நிறுத்தனும்? நம்ம வீட்டு பொண்ணை கட்டிக்கிட்டு சொத்தை வளைச்சு போடலாம்னு பாக்குறான் அந்த சசி! இவளுக்கு போடுற நகைய அப்படியே அவன் தங்கச்சிக்கு மாத்தி விட்டுடுவான். அப்புறம் நம்ம வீட்டை காட்டியே, அவளுக்கு பெரிய இடத்துல சம்மந்தமும் பேசி முடிச்சிடுவான். எல்லாம் பக்காவா பிளான் பண்ணியிருக்கான். இவதான் பைத்தியமாட்டம் காதல் கண்றாவின்னு கத்திக்கிட்டு கெடக்கா…” அங்கே இல்லாத சசிசேகரனை குற்றவாளியாக நிறுத்திவிட்டான்.

பிள்ளைகள் வரைமுறையற்ற பேச்சினை அவிழ்த்துவிட, பெற்றார்களால் தடுத்து நிறுத்த முடியாத அவலம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

பாசத்தை பங்கு போட்டுக் கொள்ளாத உறவுகளின் பிம்பங்கள், தங்களின் ஆட்டத்தை முழுவீச்சில் காண்பித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது இவர்களின் தர்க்கப் பேச்சினை முடிவுக்கு கொண்டு வந்தது கமலாலயாவின் வருகை.

மதிய உணவிற்கு தன் வீட்டில்தான் சாப்பிட வேண்டுமென்று முன்கூட்டியே சரண்யாவிடம் லாயா சொல்லி வைத்திருந்தாள். உணவு நேரம் கடந்தும் சிறியவள் வீட்டிற்கு வராமல் போக, அவளை அழைக்கவென இவள் வந்து நின்றதில் வாக்குவாதங்கள் தற்காலிகமாக நின்றது.

சூழ்நிலை சரியில்லையென்று அங்கிருப்போரை பார்த்தவுடனேயே கண்டு கொண்ட லயாவால், குடும்ப விஷயத்தை அனைவரின் முன்பும் துருவிக் கேட்க முடியவில்லை.

“சாப்பிட நேரமாச்சு பட்டு! என்ன வேலை இருந்தாலும் சாப்பிட்டு வந்து பாருடி!” லயா, சரண்யாவை அழைக்க,

“போ… போ… அப்படியே போயிடு! ஒரு வீட்டு சாப்பாட்ட, சாப்பிட்டு வளர்ந்திருந்தா, நம்ம அந்தஸ்து, கௌரவம் எல்லாம் ரத்தத்தோட ஊறிப் போயிருக்கும். இப்டி சோறு போடுற இடமெல்லாம் போயி கொட்டிக்க உக்காந்தா… தராதரம் இல்லாதவன் கூடதான் பழகனும், வாழணும்னு தோணும்” என்று ஜாடை மடையாக வெற்றிவேல் பேசியதில் லயாவிற்கு கோபம் கொந்தளித்தது.

“இப்ப இந்த பேச்சு பேசுறவன், உன் வீட்டு பொண்ணுகூட சின்னதுல இருந்தே அன்பா பேசி பழகியிருந்தா, அவ ஏன் அங்கே இங்கேனு அலையப் போறா? நாங்களும் ஏன் அவளை தாங்கப் போறோம்? வார்த்தைய அளந்து பேசப் பழகு வெற்றி! சொந்த வீட்டுலயே பொண்ணுங்களோட சாபத்தை வாங்கிக்காதே! அது உன்னோட எதிர்காலத்துக்கு நல்லதில்ல…” என்று மிரட்டலாக எச்சரித்த லயா, சௌந்திரத்திடம் திரும்பி,

“இவன் இவ்வளவு பேசுறான்! எப்படிக்கா ஊமையா உன்னால நிக்க முடியுது? தோளுக்கு மேல வளந்தாலும் அவன், உன் புள்ளதானே?” காட்டமாய் கேட்டவள் சிவபூஷணத்திடம் இந்த கேள்வி உனக்கும்தான் என்ற பாவனையில் பார்த்தாள்.  

சொந்த வீட்டில் பெற்ற பெண்ணிற்கு ஆதரவாக பேச முன்வராதவர், ஊருக்கே வழிகாட்டியாக இருந்து என்ன பிரயோசனம்? லயாவின் பார்வைக் கேள்விகள் அவரை குத்தீட்டியாய் தாக்கியது.

“நான் எப்பவோ செத்து போயிட்டேன் கமலி! இப்போ வெறும் ஜடம்தான் நிக்கிறேன். என்ன பாவம் பண்ணினேனோ? இப்படி தற்குறியா இருக்குற பசங்களையும் அவங்கள அடக்கி வைக்காத தகப்பனையும் சகிச்சுட்டு வாழுற வாழ்க்கைய, ஆண்டவன் எனக்கு தண்டனையா குடுத்திருக்கான்…” விரக்தியின் விளிம்பில் நின்று பேசினார் சௌந்திரவல்லி.

“என்னக்கா? என்னென்னமோ பேசுற? என்ன நடந்தது?” லயாவின் கேள்விகளுக்கு சக்திவேல் தனக்கு தெரிந்த வசைமொழிகளுடன் நடந்ததை எல்லாம் விளக்கி விட்டு,

“இவ என்ன சொன்னாலும், தலையாட்டி இவளை ஏத்தி விட நீங்க ஒருத்தர் போதும்! இவ இன்னமும் அடங்காம ஆடுவா! நாளைக்கு நீங்கதான் அந்தபயலுக்கும் இவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க… அதையும் இவ செய்ய வைப்பா!” வெறுப்பினை உமிழ்ந்தவாறே சரண்யாவை முறைத்தான் சக்திவேல்.

“அப்படி அவளே வந்து கேட்டாலும், பெத்தவங்க சம்மதிக்காத கல்யாணத்துல நான் தலையிட மாட்டேன் சக்தி!” என தீர்மானமாக சரண்யாவை பார்த்து கூறியவள்,

மீண்டும் சக்திவேலைப் பார்த்து, ”கொஞ்சம் பொறுமையா பேசி இவளுக்கு புரிய வைக்கிற வழியப் பாருங்க! இல்லன்னா… நீங்க பொறுமையா யோசிச்சு, இவளோட மனச புரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணுங்க!

அத விட்டுட்டு பொறுப்பில்லாம வாய்க்கு வந்தத பேசி, எல்லார் மனசையும் கஷ்டப்படுத்தாதீங்க… பெத்தவ மனச நோகடிச்சு வேடிக்கை பார்க்காதீங்க!” என அடக்கப்பட்ட கோபத்தில் சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

அனைவரையும் குற்றம் சாட்டிவிட்டு கமலாலயா சென்றதும், சற்று நேரம் அங்கே அமைதி நிலவிட, அவரவர் தங்கள் வேலைகளில் கவனத்தை வம்படியாக திசை திருப்பி கொண்டனர். சரண்யாவும் அதற்கு பிறகு கமலாலயாவின் வீட்டிற்கு செல்லவில்லை.

 

 

Leave a Reply

error: Content is protected !!