சரணாலயம் – 5
சரணாலயம் – 5
சரணாலயம் – 5
ராமசாமியின் வீட்டிற்கு ஒட்டினால் போலுள்ள தோட்டத்தில் பன்னீர், பவளமல்லியுடன் வேப்பமரங்கள் மேற்கூரையாய் பரவியிருந்தது. அதற்கு கீழும், இருபுறங்களிலும் காய்கறி, கீரை வகைகளும், மலர் செடிகளும், பாத்தி கட்டி வளர்க்கப்பட்டு வந்தன.
பள்ளியில் சேரும் வரை, சரண்யாவின் பெரும்பான்மையான பொழுதுகள் அங்கேயே கழியும். அந்த நேரத்தில் பெண் பிள்ளைகளின் சிறு மாநாடே அங்கே நடக்கும். லச்சு வேடிக்கை காண்பிக்க, கமலாலயாவின் கையால் தன்னை மறந்து உணவை வாங்கிக் கொள்வாள் சரண்யா.
சிறுமியின் உணவு நேரத்தில் சகல ஜீவராசிகளுக்கும் படியளப்பது தினத்தோறும் நடந்து விடும். சிமெண்ட் தொட்டியில் வளரும் மீன்குஞ்சுகள், மரங்களில் இருக்கும் குருவிகள், கீழே ஊறிச் செல்லும் பூச்சி புழுவிற்கும் சரண்யா உணவிட, லயா, இவளின் வாயில் சோற்றுக் கவளத்தை அடைப்பாள்.
“ஒழுங்கா சாப்பிடு பட்டு! அத பார்த்துதான் பிஷ் பப்பு வாங்கும்” என லயாவின் கொஞ்சல் மொழி மட்டுமே சரண்யாவிடம் செல்லுபடியாகும்.
இருவரின் பிணைப்பே அலாதியானது. லயாவின் பட்டுவில் மட்டுமே சரண்யா அடங்கிப் போவாள். ஒற்றை பெண்ணாக வளர்ந்து வந்த லயாவும் இவளை தூக்கிக் கொண்டே அலைவதை பெரிதும் விரும்பினாள். தன் பாட்டியின் வேலையை குறைக்கவென சிறியவளை கவனிக்க ஆரம்பித்தவள், தன்னையும் அறியாமல் சிறுமியிடம் ஒன்றிக் கொண்டாள்.
உணவு நேரத்தில் சசிசேகரனின் தங்கை துளசியும், அவர்களுடன் சேர்ந்து கொண்டாலும், சரண்யா அளவிற்கு தமக்கைகளிடம் அவள் ஒன்றிக் கொள்ள மாட்டாள்.
துளசி மிக அமைதியான சுபாவம். எதுவானாலும் அவளுக்கு சேகர் அண்ணன்தான் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும். தன் அன்னை காமாட்சியுடன் மட்டுமே சிரித்து விளையாடி மகிழ்பவள். காமாட்சியும் எந்தவொரு பேதமுமில்லாமல் சரண்யாவை தன்னோடு அரவணைத்து கொள்வாள்.
உணவு மட்டுமில்லாமல் விளையாட்டும் அங்கேயே தொடர, பெண் பிள்ளைகளின் அதிகநேரம் பின்கட்டு வீட்டிலேயே கழிந்தது. லச்சு வீடும், லயா வீடும் இவர்களின் அட்டகாசத்திற்கு தாங்க முடியாமல் போக, ராமசாமியின் வீடே குழந்தைகளுக்கு புகழிடமானது.
பள்ளியில் சேர்ந்த பிறகும் அதுவே தொடர, சரண்யாவின் உடன்பிறப்புகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். எங்கள் வீட்டுக் குழந்தையை, நாங்களும் அரவணைத்துக் கொள்ள மாட்டோம், பிறரையும் செய்யவிட மாட்டோம் என்ற அகராதியை சேர்ந்தவர்கள் சரண்யாவின் சகோதரர்கள்.
முதலாளி, தொழிலாளி பாகுபாட்டை இளம் தலைமுறை கடுமையாக கடைபிடிக்க தொடங்கியது அந்த சமயத்தில்தான்.
“மீனுகுட்டிக்கு பல் இருக்கா லயாக்கா?” ராமசாமி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு, தோட்டத்தில் வளர்த்து வரும் கிளியை கையில் பிடித்து ஆராய்ந்தபடி ஆறுவயது சரண்யா கேட்க,
“தெரியல பட்டு!” கையை விரித்தாள் பதினாறு வயது லயா.
“நம்மகிட்ட வரும்போது கடிக்குது தானே? அப்போ இருக்கும்” ஒன்பது வயது லச்சு பின்பாட்டு பாட,
“அதோட வாயை தொறந்து காமி லச்சுக்கா… நான் பார்க்கணும்!” தனது சேட்டையை ஆரம்பித்தாள் சரண்யா.
“வேணாம்டா பட்டு! மீனுகுட்டி அழும்!” லயா தடைபோட,
“அழாது! நான் பார்க்க போறேன்…” கூறியபடியே கிளியின் வாய்க்குள் தனது விரலை விட, சரண்யா முயற்சிக்கும் நேரத்தில்,
“நல்ல பொண்ணுங்க எல்லாம் பெரியவங்க சொல் பேச்சை கேட்பாங்க… கிளிய கீழே விடு சரண்!” என்றவாறே அங்கே வந்து நின்றான் எட்டு வயது சசிசேகரன்.
வயதை மிஞ்சிய பொறுப்புணர்வு அவனது வளர்ப்போடு வந்திருக்க, தங்கை மீதுள்ள அக்கறைக்கு சற்றும் குறையாத கவனிப்புடன் சரண்யாவையும் பார்த்துக் கொள்வான்.
“நீ, எனக்கு கிளி வாய தொறந்து காமிக்கிறியா சசி?” ஆசையுடன் சிறுமி கேட்க,
“அப்படியெல்லாம் செய்ய கூடாது. மரத்துல விடு சரண்!” இதமாக சசிசேகரன் சொன்ன நேரத்தில்,
“நீ சொன்னா, என் தங்கச்சி கேட்கணுமாடா?” என்று குரலை உயர்த்தியபடி அங்கே வந்த வெற்றிவேலின் வயது பதினான்கு.
“நம்ம வீட்டுலயே வேலை பார்த்துட்டு, எங்க தங்கச்சிய அதிகாரம் பண்றியாடா?” திமிராக பேசிக்கொண்டு வந்தது சக்திவேல். அவனின் வயது பனிரெண்டு.
“நல்லத யார் வேணும்னாலும் சொல்லலாம். எனக்கு அப்படிதான் சொல்லிக் கொடுத்திருக்காங்க!” சசியும் அவர்களுக்கு குறையாமல் முறுக்கிக் கொள்ள,
“ஆனா, நீ சொல்லகூடாது வேலைக்கார பயலே!” காரணமில்லாமல் வெடித்தான் வெற்றிவேல்.
சிறுவர்களின் அடுத்தடுத்த தர்க்கத்தில் காமாட்சி, லயா, லச்சு மூவரும் பெருத்த சங்கடம் கொள்ள, சரண்யா, துளசி இருவரும் புரியாமல் முழித்தனர். சசியை தடுக்கவென காமாட்சி முயற்சிக்கும் நேரத்தில்
“பெரியவனே சண்டை போடாதே!” தன் அண்ணனை கண்டித்தாள் சரண்யா.
அண்ணா என்றெல்லாம் தங்கைக்கு அழைத்து பழக்கமில்லை. வீட்டில் எப்படி அழைக்கிறார்களோ அப்படியே இந்த பெரிய மனுஷியும் அதிகாரமாய் அழைப்பாள்.
“குட்டி கழுத… உனக்கு அதிகமா செல்லம் கொடுத்து மரியாதை தெரியாம போச்சு! ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடுடி!” கடிந்து கொண்டே கொட்டு வைத்தான் சக்திவேல்.
அண்ணனின் கொட்டிற்கு தலையை தடவிக் கொண்டவளின், கண்களில் நீர் கோர்க்க, உதட்டை பிதுக்கிக் கொண்டு அவர்களை முறைக்க ஆரம்பித்தாள் சரண்யா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஐயோ பாவமே என்றானது.
சக்தி கொட்டியதும், விரைந்து அவளை அணைத்துக் கொண்ட லாயாவும், “என் முன்னாடி பாப்பாவ அடிக்காதே சக்தி!” கோபத்துடன் சகோதரர்களை கடிந்துகொள்ள,
“ஏண்டா ரெண்டுபேரும் சேர்ந்து, இவளை விரட்டிகிட்டே இருக்கீங்க?” லச்சுவும் முகத்தினை சுருக்கி தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்தி விட்டாள்.
“அச்சோ பாவம்! நீ அழாதே சரணி…” ஐந்து வயது துளசியும் உச்சு கொட்டி, சரண்யாவின் கண்ணீரை துடைக்க முன்வர,
“இனிமே நீ இவகூட சேரக்கூடாது, விளையாடவும் கூடாது” அதிகாரமாய் துளசியையும் தடுத்தான் வெற்றிவேல்.
“அப்படின்னா உன் தங்கச்சிய, உன் வீட்டுல வச்சுக்கோ வெற்றி…” சட்டென்று சசிசேகரன் பேசிவிட,
“மரியாதை கொடுத்து பேச பழகுடா!” சக்திவேலும் சேர்ந்து கர்ஜித்தான்.
“போடா சின்னவனே! உன்னை மாதிரி சண்டை போடுறவங்களுக்கு எல்லாம் மரியாதை கிடையாது. யார் நம்ம கூட சண்டை போடாம விளையடுறாங்களோ, அவங்களுக்கு தான் மரியாதை கொடுக்கணும்…” மெத்தனமாக சொன்ன சரண்யா,
“அப்படிதானே சசி!” அவனையும் தன்னோடு கூட்டு சேர்த்துக் கொள்ள, ‘இதேதுடா வம்பா போச்சு’ என முகத்தை திருப்பிக் கொண்டான் சசிசேகரன்.
“எல்லாம், நம்ம அப்பாவும் பாட்டியும் கொடுக்குற இடம். வேலைக்காரங்கள பக்கத்துலயே வச்சுட்டு, எங்க தலைய உருட்டுராரு” என்று வெற்றிவேல் பல்லைக் கடித்து முணுமுணுக்க,
“காமாட்சி! உன் புள்ளைய எங்ககூட பேசும்போது மரியாதை கொடுத்து பேசச் சொல்லு…” சக்திவேல் மரியாதையின்றி சசிசேகரனின் தாயை பேர்சொல்லி அழைத்து உத்தரவிட,
இதை கேட்ட அடுத்த நொடியே, “நீ மொத மரியாதை கொடுக்க பழகுடா!” என சட்டையை பிடித்து உலுக்கி விட்டான் சசிசேகரன்.
வளர்ந்த சிறுவர்களின் பாகுபாடு பார்க்கும் குணம், வயது வித்தியாசமின்றி அனைவரையும் இளக்காரமாகப் பார்த்து, தள்ளி நிறுத்த ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே கோபத்தில் படபடத்த சசியும், தன் அம்மாவை, ஒருவன் அதிகாரத்துடன் பேர் சொல்லி அழைத்ததும் வெகுண்டு விட்டான்.
நொடியில் மூன்று ஆண் பிள்ளைகளும் கை கலப்பில் முட்டிக் கொள்ள, காமாட்சிதான் முயன்று விலக்கி விட்டாள்.
இந்த கைகலப்பும், வரம்பு மீறிய பேச்சும் லச்சு மற்றும் சரண்யாவின் வாய்மொழியின் வழியாக சிவபூஷணத்திற்கு தெரியவர, தன் புதல்வர்களை ராமசாமியின் முன்பே கண்டித்து, காமாட்சியிடம் மன்னிப்பு கேட்கவும் வைத்தார்.
சசிசேகரனையும் தன்னுடன் அமரவைத்து, “சேகரா… தன்மானம் நமக்கு ரொம்ப முக்கியம். ஆனா உன்னோட இந்த கோபம் நல்லதுன்னு சொல்ல மாட்டேன். யார் மேலயும் அதிரடியா கைவைக்கிற உரிமை யாருக்கும் கிடையாது. உன்னோட வயசுக்கு நீ செய்தது கொஞ்சம் அதிகப்படியான செயல்தான். இனி இப்படி நடந்துக்க கூடாது” என்று அறிவுரை கூறிட, மனம் சமாதானம் ஆகவில்லை என்றாலும், மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டான்.
அடுத்தடுத்த நாட்களில் சரண்யாவை காமாட்சியின் வீட்டில் தவிர்க்க தொடங்கினர். என்னதான் புத்திமதி சொல்லி சிறுவர்களை கண்டித்து விட்டாலும், அவர்களின் பரிகாசப் பார்வை, மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தத் தொடங்கியது.
கணவரிடம் வேறு இடத்திற்கு குடியேறி விடலாம் என்று காமாட்சி யோசனை சொன்னாலும் அதனை ஏற்கும் மனநிலையில் ராமசாமி இல்லை.
“எதுக்கு அத்தை என்கூட பேச மாட்டேங்குறீங்க?” விவரம் அறியாதவளாய் வருத்தத்துடன் சரண்யா கேட்கும் போதெல்லாம், ஏதோ ஒரு பதிலை சொல்லி மழுப்பி வந்தார் காமாட்சி.
சரண்யாவின் தொணதொணப்பை தாங்க முடியாமல் ஒருநாள், சசிசேகரனும் துளசியும் சேர்ந்து காரணத்தை சொல்லி விட்டனர்.
“எங்கம்மா அன்னைக்கு ரொம்ப நேரம் அழுதாங்க சரணி” துளசி மூக்கால் அழுதுகொண்டே குறைபட,
“நீ இங்கே வராதே சரண்… உன்னாலதான் எங்கம்மாக்கும், அப்பாவுக்கும் சண்டை வந்தது… நாங்க வேற வீட்டுக்கு போற வரைக்கும் எங்கள பார்க்க வராதே!” சசிசேகரனும் தனது சிறு வயதிற்கே உரிய பக்குவத்தில் சொல்லி முடிக்க, அருகிலிருந்த லச்சு, சரண்யாவை அதற்கு பிறகு அங்கே அழைத்து செல்லவில்லை.
சரண்யா பிடிவாதம் பிடித்து விளையாட அழைக்க, பெண் பிள்ளைகளின் ஜாகை, வீட்டிற்கு வெளியே என்றாகிப் போனது. இதன் காரணமே அவளை வீட்டில் நிறுத்திக் கொள்வதும் மிகுந்த கஷ்டமாகிற்று.
சரண்யா தவழ்ந்து, நடை பயின்றதே லயாவின் வீட்டினில் என்றிருக்கும் போது, சொந்த வீட்டில் இவள் ஒட்டிக் கொள்ளாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றில்லை.
என்னதான் மூன்று சிறுவர்களையும் அடக்கி வைத்தாலும் அவர்களுக்கு இடையேயான உரசல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதற்கு தீர்வு கட்டவென தன் மகனை விடுதியில் தங்க வைத்து படிப்பை தொடர வைக்கும் முடிவை எடுத்தார் ராமசாமி.
முதலாளி குடும்பத்தையும் பகைத்துக் கொள்ளக்கூடாது, அதே சமயத்தில் மகனின் வளர்ப்பும் தடம் மாறிப் போய் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தனது முடிவை சிவபூஷணத்திடம் சொல்ல, அவரும் அரைகுறை மனதுடன் சம்மதித்து, விடுதியில் சேர்த்து விட்டார்.
மதுரையில் உள்ள பிரபலமான பள்ளி விடுதியில் சேர்த்து அவனது பொறுப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டார் சிவபூஷணம். அன்றிலிருந்து சசிசேகரனின் இளம்பருவம் முழுவதும் கட்டுப்பாடுகள் நிறைந்த விடுதி வாசத்தில் கழிந்தது.
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தாலும் தனது குடும்பத்தை தவிர்த்து வேறெங்கும் கவனத்தை செலுத்தாமல் அமைதியாக நாட்களை கழித்து விடுவான் சசிசேகரன். முதலாளியின் பின்வீட்டிலேயே ராமசாமி தனது குடித்தனத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.
************************************
சிவபூஷணம் தனது நாட்களை எல்லாம் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திலேயே கடத்தி வந்தார். குடும்பத்தை கவனிக்க, பிள்ளைகளை பராமரிக்க தாயும் மனைவியும் போதுமென தனது கண்டிப்பு பார்வையை மட்டுமே காட்டி அமைதியாக இருந்து விடுவார். இவரது இந்த சுபாவமே பிள்ளைகளிடம் வெகுவாக அவரை தள்ளி நிறுத்தியது.
மகன்கள் இருவரின் அடாவடிச் செயல்கள், அகம்பாவப் பேச்சுக்கள் எல்லாம் அம்மா சௌந்திரவல்லியிடம் மட்டுமே! அப்பாவின் முன்பு சொல்லும் தைரியம் எல்லாம் இல்லை.
‘சிவபூஷணம் மகனா நீ? அவருக்கு இப்படி ஒரு தறுதலை பிள்ளையா?’ போகும் இடங்களில் எல்லாம் அவரின் குணத்திற்கு மாறுபட்டே கணிக்கப்பட்டது பெரியவன் வெற்றிவேலின் செயல்கள்.
சக்திவேலின் அடாவடித் தனமோ ஊரை விட்டுதான் அரங்கேறும். அதனால் பெரும்பாலும் அவை தந்தையின் பார்வைக்கு வருவதில்லை. இவை எதுவும் சிவபூஷணம் அறியாத, கவனத்தில் வராத விஷயங்கள்.
அவரைப் பொறுத்தவரை தனது மகன்கள் படிப்பில் மட்டுமே பின்தங்கி உள்ளனர். மற்றபடி நல்ல முறையில் பண்புள்ளவர்களாகதான் வளர்ந்து வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தார். இவரின் வருத்தம் எல்லாம் மகள் சரண்யா வளரும் விதத்தில் மட்டுமே.
கடைக்குட்டியாக சரண்யா பிறந்த பிறகு சௌந்திரவல்லியின் கவனம் எல்லாம் பெண் குழந்தையின் மீதே பட, மகன்களை சரிவர கவனிக்கவில்லையோ என்று சிவபூஷணம் மனதோடு ஆதங்கப்பட்டுக் கொள்வார்.
அகிலாண்டம் பாட்டி இருக்கும்வரை, சிவபூஷணத்தின் கண்டனப் பார்வையை தன் ஆதங்கப் பேச்சால் தடுத்து, பேரக் குழந்தைகளை அரண் போல் காத்து விடுவார். தாயின் முன்பு அவர் கண்டிக்காமல் விட்டதை மனைவியிடம் பேசியே தீர்த்துக் கொள்வார்.
“ஏன் சௌந்திரம்… நம்ம புள்ளைங்க ஒருத்தன் கிட்டயும் என்னோட இயல்ப பார்க்க முடியலயே? அதுலயும் இந்த குட்டி பொண்ணு அடங்காத கழுதையா ஊர் சுத்திட்டு இருக்கா? ஆஸ்பத்திரியில இருந்து கொழந்தைய மாத்தி எடுத்துட்டு வந்துட்டியா?” மகளை அருகில் அமர்த்திக் கொண்டு, சிவபூஷணம் சிரித்தபடி கேட்கும் தொனியிலேயே அவரின் ஆதங்கம் பட்டவர்த்தனமாய் தெரியும்.
“ம்க்கும்… ஆஸ்பத்திரியில பொழுதுக்கும் பொண்ண தூக்கி வச்சுகிட்டது நீங்கதானே… உங்களுக்கு தெரியாமையா?” என்ற அம்மாவின் வார்த்தைகளில் வரும் மென்னகையும், கனிவும் சரண்யாவிற்கு மிகப் பிடித்தம்.
ரசனையான பெற்றோரின் பேச்சுகளில் கிளுக்கிச் சிரித்து விடுவாள் மகள். இவர்களின் இந்த பேச்சை கேட்பதற்கென்றே, இன்னும் குறும்பு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள். அந்த நேரத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் அந்த அறியா வயதில் அவளுக்கு ஏற்படும்.
“சாப்பிட மாட்டேன்!”
“இங்கே இருக்க மாட்டேன்!”
“சொல் பேச்சு கேட்க மாட்டேன்!” அறியாத வயதில் அடம்பிடித்தவள், தந்தையின் ‘சரணீ…’ என்ற உயர்த்திய குரலில் மட்டுமே அடங்கிப் போவாள்.
பள்ளியை விட்டு வந்த நேரம் முதல் இரவு வரை லச்சுவுடன் அல்லது லயா வீட்டில் இருப்பவள், உறங்க மட்டுமே அன்னையுடன் ஒன்றிக் கொள்வாள்.
சௌந்திரவல்லியும் தன்னால் இயன்றவரை, மிக பொறுமையாக மகளை வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாலும், விளையாட்டுத் தனமாய் உம் கொட்டிக் கொண்டே தலையாட்டி, உறங்கிவிடுவாள் சரண்யா.
நடுநிசியில் உறக்கத்தில் கை, கால் அசதியில் மகள் புரண்டு புரண்டு படுக்க, அவளுக்கு எண்ணெய் தடவி விட்டு, அரிப்பு குறைய பாதத்தில் மஞ்சள் தேய்த்து விடுவது சௌந்திரவல்லியின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிப் போனது. மறுநாள் அது தெரிந்தாலும், அன்னையை கட்டிபிடித்து கொஞ்சி விட்டு மீண்டும் வெளியே சிட்டாகப் பறந்து விடுவாள்.
“பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு பிடிவாதம், சேட்டை ஆகாது. நீ ரொம்ப செல்லம் கொடுக்கிறோயோன்னு தோணுது சௌந்திரம்! சத்தம் போட்டு அவளை உன்னோட வச்சுக்க பாரு!” மனைவியை சிவபூஷணம் கடிந்து கொள்ளாத நாளில்லை.
மகளின் அதீத குறும்பும் விளையாட்டு தனமும், சிவபூஷணத்தை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல வைத்தது. செல்லப் பெண்ணாக சரண்யா பிறந்திருக்கவில்லை என்றால், கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த கருத்து வேறுபாடுமே வந்திருக்காது.
****************************************
சரண்யாவின் பத்தாவது வயதில், கமலாலயாவை மணமுடித்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் மங்களாம்பிகை பாட்டி.
“நானும் உன்கூட வர்றேன், என்னையும் கூட்டிட்டு போ, லயாக்கா! நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்?” அழுது ஆர்பாட்டம் செய்த சரண்யாவை தேற்றும் வழி யாருக்கும் தெரியவில்லை.
சொந்தமாக ஜவுளிக்கடை நடத்திக் கொண்டிருந்த மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில்தான் லயா வாழ்க்கைப்பட்டாள். வெகு நாசூக்கும் நாகரிகமும் வேகமாய் வளர்ந்து கொண்டிருந்த காலமது. மாப்பிள்ளை வீட்டினர் சிறுமி சரண்யாவின் அழுகையை ஒருவித அசூசையுடன் பார்க்க, லயாவிற்கு அவஸ்தையாகிப் போனது.
“நான் அடிக்கடி வருவேன்டா பட்டு! நீயும் என்கூட வந்தா பாட்டிய யார் பார்த்துப்பா? நீ பெரிய பொண்ணாயிட்ட… உன்னை நம்பிதான் பாட்டியை தனியா விட்டுட்டு போறேன்…” கரகரத்த குரலில் சமாதானம் செய்த லயாவிற்கும் மனம் பாரமேறிப் போனது.
பிறந்தது முதல் தன்னை தவிர, வேறு யாருடனும் ஒட்டிக் கொள்ளாதவளை, தவிக்க விட்டு செல்கிறோமே என்று பெரியவளும் அழுகையில் கரைந்து விட்டாள்.
“நீயும் நானும் சேர்ந்து, பாட்டிய பார்த்துக்கலாம் சரணி… இப்போ சிரிச்சுட்டே அக்காவை அனுப்பிவை!” லச்சு சமாதானம் சொன்னாலும், சரண்யா அரற்றலை நிறுத்தவே இல்லை.
அவளின் அழுகையை பார்த்துக் கொண்டே லயாவும் சென்றுவிட, சிறுமிக்கு தீராத கோபம் தமக்கையின் மேல் குடிகொண்டது. தன்னை தவிர்த்து சென்றவளை தானும் தவிர்க்க வேண்டும் என்கிற வீராப்புடன் அன்றிலிருந்து அவளிடம் பேசுவதை விட்டு விட்டாள்.
வீட்டுத் தொலைபேசியில் வாரம் ஒருமுறை பேசும் லயா, என்னதான் கெஞ்சினாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், லச்சுவுடன் தன் நாட்களை கடத்த ஆரம்பித்தாள். அறியாத பருவத்தில் உண்டான கோபத்தை அத்தனை எளிதில் மறக்கவில்லை.
கமலாலயாவின் திருமணம் முடிந்த ஆறுமாதத்தில் மங்களாம்பிகை பாட்டி உறக்கத்திலேயே சொர்க்கத்திற்கு பயணபட்டிருந்தார். தனக்கென இருந்த ஒரு சொந்தமும் இல்லாமல் போக, லயாவின் வரவு கிராமத்தில் சுத்தமாக நின்று போனது.
ஆறுமாதத்திற்கு ஒருமுறை ராமசாமி மட்டுமே சென்னைக்கு சென்று நிலத்தின் வரவு செலவுகளையும், பணத்தையும் ஒப்படைத்து விட்டு வருவார். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் பிள்ளைபேறு தள்ளிப் போக, புகுந்த வீட்டினரின் சொல்லம்புகளுடன் வாழ்க்கையை சுவாரஷ்யமின்றி கடக்க ஆரம்பித்தாள் லயா.
*****************************************
தனக்கு துணையாக இருந்தவர்கள் விலகிவிட்டால், அதனை சமன் செய்ய பெரியவர்கள் தனிமையை நாடினால், சிறுவர்கள் அதீத விளையாட்டில் தங்களது கவனத்தை திசை திருப்புவர். சரண்யாவின் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
முன்னை விட, துடுக்குத்தனமும் குறும்பும் அதிகமாகிவிட, வீட்டிற்குள் அடங்காமல் ஊரை சுற்ற ஆரம்பித்தாள் சரண்யா. சிவபூஷணத்தின் கணிப்பில் பெண்பிள்ளை தவறிய தருணங்கள் எல்லாம் கணக்கில் அடங்காது.
வீட்டில் இவள் செய்யும் குறும்புகளும், வெளியாட்களிடம் குறிப்பாக ஆண்களிடம் பாரபட்சமின்றி நட்பு பாராட்டியது, அவர்களுடனேயே பள்ளிக்கும் சென்று வந்து கொண்டிருந்தது என எல்லாம் சேர்த்து, தந்தை சிவபூஷணத்திற்கு மகளை பிடிக்காமல் போவதற்கு காரணமாகிப் போனது.
அது உண்மை அல்ல… வெறும் பாவனைதான் என தேற்றிகொண்டு தன் போக்கில் நாட்களை கழிந்து வந்தாள் சரண்யா.
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளும் சிவபூஷணம். ஒழுக்கச் சீர்கேட்டை மட்டும் சகித்துக் கொள்ள மாட்டார்.
மாலை வேளைகளில் ஊரில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு பாரதியின் பாடல்களுடன், கூட்டல் பெருக்கல் வாய்ப்பாடுகளை சொல்லிக் கொடுக்கும் அழகே தனிதான்.
ஒழுங்கான பிள்ளைகளாக அந்த வகுப்பில் உட்காரா விட்டாலும் சரண்யாவும் லச்சுவும் மறைந்திருந்து கேட்பார்கள். மற்றவர்கள் அவர் கேட்கும் கேள்விகளுக்கு விழி பிதுங்கி நிற்பதை பார்ப்பதற்கே இருவரும் மறைந்திருப்பர்.
பிள்ளைகளின் தலை தெரிந்தால் போதும் சிவபூஷணம் அவர்களை அங்கே அமரவைத்து விடுவார். இரண்டு மணிநேரம் பொறுமையாக வளர்ந்த பிள்ளைகளால் ஓரிடத்தில் உட்கார முடியுமா என்ன?
“அடியே ரெட்டை வாலுகளா! ஏதாவது சேட்டை செஞ்சா உள்ளார இழுத்து விட்டுடுவேன்” என்று அகிலாண்டம் பாட்டியும் அவ்வப்பொழுது பயங்காட்டி வைப்பார்.
லட்சுமியுடன் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றும் போதுதான் முதன்முதலில் தந்தையிடம் அடி வாங்கினாள் சரண்யா.
பெண்பிள்ளை என்றும் பாராமல் அடி வெளுத்து விட்டார் மனிதர். பனிரெண்டு வயதில் ஆண் பிள்ளைகளுடன் முதுகுசவாரி செய்து வீதி உலா வந்தது பெருந்தவறாகப் போய் விட்டது.
“தேவையில்லாம ஆம்பளைங்க கூட சிரிப்பு என்ன வேண்டிக் கிடக்கு? அப்பா பார்த்து கண்டிக்கிற அளவுக்கு பசங்க சிநேகிதம் உனக்கு தேவையா?”
சரண்யாவின் பனிரெண்டு வயதில் டியூசனுக்கு வந்த தனது வகுப்பு தோழனிடம் பேசியதற்கு அம்மாவிடம் இருந்த வந்த கண்டனங்கள் இவை.
என்ன தவறு செய்கிறோம் என்பதே தெரியாத வயது. சகஜமாய் பேசுவதை கூட குற்றமாக கருதி சந்தேகிக்கும் வெளியுலகில் இன்னும் காலடி எடுத்து வைக்காத சமயம் அது.
லச்சு, சரண்யாவின் பிணைப்பு முன்னை விட கூடியிருக்க, பெண் பிள்ளைகளின் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் வருமா என்ன? லட்சுமியின் அம்மா கோதாவரியும்,
“பொம்பளை புள்ளைங்களுக்கு எங்கே இருந்து இவ்வளவு தைரியம் வருது?” என அங்கலாய்த்து கொள்வதும் உண்டு.
இவர்களின் ஆட்டத்திற்கு கண்டனம் சொல்லாத ஒரே மனிதர் இருந்தாரென்றால் அது வேலாயுதம் மட்டுமே! நம் அப்பாவும் வேலாயுதம் மாமாவைப் போல் ஏன் இல்லை என்றெல்லாம் சரண்யா நினைப்பதில்லை. அவர் அப்படி என்றால், இவர் இப்படி என்று சமரசம் செய்து கொள்வாள்.
பனிரெண்டு வயதில் லட்சுமியும் சரண்யாவும் சேர்ந்து பூனையின் மீசைக்கு வண்ணமடித்தும், கோழிக்கு நகம் வெட்டியும், நாய்க்கு சட்டை மாட்டிவிட்டும் கணக்கில் அடங்காத குறும்புகளை நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருந்தார்கள்.
“இதெல்லாம் செய்ய வேணாம்டி சரணி” என லச்சு சற்று பின்னடைந்தாலும்.
“நாம நகம் வெட்டி, குளிச்சு நீட்டா ட்ரெஸ் போட்டுக்கலைன்னா மட்டும், வீட்டுல இருந்து ஸ்கூல் வரைக்கும் நம்மளை திட்டியே செய்ய வைக்குறாங்க! பாவம் இதுக்கு யார் சொல்லுவா? செஞ்சு விடுவா? நாமளே பண்ணி விடுவோம்… சோஷியல் சர்வீஸ் செய்யணும்னு ஸ்கூல்ல அட்வைஸ் பன்றாங்கதானே!” சரண்யா நியாயம் பேச, லட்சுமியின் வீட்டில் இருந்தே அனைத்தும் நடக்கும்.
லச்சு வீட்டில் இவர்களின் குறும்புகளை சொல்லியே கேலி செய்து சிரித்தால், சரண்யாவின் வீட்டில் திட்டுவதற்கென்றே சொல்வார் சிவபூஷணம்.
இன்றளவும் அலைபேசியில் கூட, ‘ஏண்டி பொண்ணே! அங்க எந்த நாயும் பூனையும் அகப்படலையா?” என்று கேலிபேசும் லச்சுவின் அம்மா இருக்க, சரண்யாவின் தாய் பாதியில் விட்டுவிட்டு சென்று விட்டார் என்பதை நினைக்கையில், விமானத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு கரித்துக் கொண்டு வந்தது.
இருமகன்களின் நடத்தையும், மகளின் பிடிவாத பிரிவும் சேர்ந்து அவரின் மனதை உருக்கி மரணத்திற்கு வழி வகுத்திருக்கும்.
உடலின் நோய்களுக்கெல்லாம் மனதின் பாரமே விதையாகி விடுகின்றது அல்லவா? தான் ஊரை விட்டு வந்தபிறகு அம்மா இன்னும் அமைதியாகி விட்டாள் என்று லச்சு அக்கா சொல்லியிருந்தாள்.
ஏன் இப்படி ஆயிற்று? யாருக்காக நான் பழி சுமந்தேன். கடைசி வரை அறிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் தான். அதில் அம்மாவும் ஒருத்தி என்பது சரண்யாவிற்கு நன்றாகத் தெரியும். அப்பாவிடம் என்றாவது சொல்லி இருப்பாளா மகள்மீது தவறில்லை என்று…
அப்படி சொல்லியிருந்தால் அப்பா என்னிடம் பேசி இருப்பர் அல்லவா? இல்லையென்றால் தனது எண்ணத்தை வேலாயுதம் மாமாவிடமாவது பகிர்ந்திருப்பார். அது லச்சு அக்கா மூலம் இவளை அடைந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
மிதமிஞ்சிய குறும்பும் சிரிப்பும், வீட்டினரின் வசைமொழிகளுடனும் தான் கழிந்தது இளம் பருவம். அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது. சரண்யாவால் அல்ல அவளது அண்ணன்களால்… ஆனால் பழி சுமந்தது அவள்!!!