MMM–EPI 1

122620776_740997409820929_9109553537495410146_n-2f8265ed

MMM–EPI 1

அத்தியாயம் 1

 

லாஸ் ஏஞ்சல்ஸ்—இன்றைய தினம்

(ஆங்கில உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்)

“நோ வே இன் ஹெல்!”

கண்கள் சிவக்க, நெற்றி நரம்பு புடைக்கக் கத்திய மகனை அமைதியாகவே எதிர் கொண்டார் சூசன்.

“அவர் உனக்கு அப்பாடா! உன்னைக் கூட வச்சிக்கனும்னு அவருக்கும் ஆசை இருக்கும்தானே!”

“அப்பான்னு சொல்லாதீங்க! ஹீ இஸ் ஜஸ்ட் அ ஸ்பெர்ம் டொனெர்”

“அலெக்சாண்டர்!!!”

“கத்தாதீங்க மாம்! அவருக்காக நாம ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்கறத நெனைச்சா சிரிப்பு சிரிப்பா வருது! அவர் உங்கள ஒர் உடம்பாத்தான் பார்த்தாரு! அப்படி………… புனிதமா வாழ்ந்த உங்க வாழ்க்கையில நான் வந்தது கூட ஆக்சிடேண்ட் மாதிரிதான்! என்னமோ தவம் இருந்து என்னைப் பெத்து போற்றி பாதுகாத்து வளர்த்த மாதிரி பில்ட் அப்லாம் வேணா!” என்றவன் அலட்சியமாக சோபாவில் சரிந்தான்.

அடிக்கடி அப்பா, அப்பா என ஏங்கிய மகனிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி வளர்த்தது தப்போ என நொந்துப் போனார் சூசன்.  

சூசன், லாஸ் ஏஞ்சல்சில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பதினாறு வயதுக்கே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். அந்த வயதுக்கு என்ன வேலை கிடைக்கும்! ரெஸ்டாரண்டுகளில் வெய்ட்ரெஸ் வேலைப் பார்த்தார். பதினெட்டு ஆனதும் பார்களிலும், பிஸ்ட்ரோக்களிலும் பார்டெண்டர் வேலைக்கு மாறினார். சம்பளமும் டிப்ஸிம் ஓரளவு குடும்பத்துக்கு உதவும் அளவு வந்தது.

பார்களில் வேலை செய்யும் போது சாதாரணமாக நாட்கள் கடந்து விடாது. டிப்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என மேற் சட்டைக்குள் பணத்தை நுழைப்பார்கள். நம்மூரில் கரகாட்ட பெண்ணுக்கு சில பொருக்கி ஜந்துக்கள் பணத்தை ரவிக்கைக்குள் சொருகுவார்களே அந்த மாதிரி! கையைப் பிடித்து இழுப்பது, நான் ரெடி நீ ரெடியா என அழைப்பது, நடந்துப் போகும் போது பின்னால் தட்டுவது, இன்னும் சில போதை தலைக்கு ஏறிப் போன கேஸ்கள் கட்டாய முத்தமிட முயல்வது வரை நடக்கும். தினம் தினம் போராட்டம் தான் சூசனுக்கு. வேலையையும் விட்டு விட முடியாத சூழல். தனக்கும் கீழே பள்ளி செல்லும் வயதில் மூன்று தம்பிகள். அப்பா இல்லாத குடும்பத்தில், மீன் மார்க்கேட்டில் வேலை செய்யும் அம்மாவின் சம்பளமும் சொற்பமே!

பணத்துக்கு குறை வைத்த ஆண்டவன் அவருக்கு குரல் வளத்தைக் கொட்டிக் கொடுத்திருந்தான். அவர் பாடினால், கேட்பவருக்கு உயிர் உருகி போகும்! பாத்ரூம் சிங்கராக இருந்தவருக்கு ஒரு நாள் அடித்தது அதிர்ஸ்டம். அவர்கள் பாரில் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக சிங்கிங் காண்டேஸ்ட் அறிவித்திருந்தார்கள். விளையாட்டுத்தனமாக முயன்றுதான் பார்ப்போமே என முதலாளியிடம் அனுமதி வாங்கி போட்டியில் பங்கெடுத்துக் கொண்டவருக்கு முதற் பரிசு கிட்டியது. சந்தோஷமாக பரிசுப் பணத்தை வாங்கிக் கொண்டவருக்கு இன்னொரு பரிசையும் தர காத்திருந்தது விதி.

அன்று இரவு ஷிப்ட் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தவரை எதிர்கொண்டார் ஓர் அழகான இந்திய இளைஞர்.

“ஹாய் சூசன்!”

தன் ஓட்டைக் காரில் ஏற முயன்றவரை வழிமறித்த அந்த இளைஞரை அச்சத்துடன் பார்த்தார் சூசன்.

“ஹாய்! நீங்க யாருன்னு தெரியலையே எனக்கு!”

“பயப்படாத சூசன்! நீ இன்னிக்குப் பாடனத நான் கேட்டேன்! வாவ்! என்ன சொல்லன்னு தெரியல! இட்ஸ் டிவைன்! உன் குரலால அப்படியே என்னை மயக்கி கட்டிப் போட்டுட்ட!”

“ஓ! தேங்கஸ்” என பட்டும் படாமல் சொன்ன சூசன்,

“நான் கிளம்பனும்! லேட் நைட் ஆகிடுச்சு” என கிளம்பிவிட்டார்.

தங்கள் நாட்டு ஆண்களின் லட்சணமே மணத்துப் போய் கிடக்கிறது. இதில் அந்நிய நாட்டு ஆடவனிடம் நின்று பேச பைத்தியமா அவருக்கு. அதோடு அந்த இளைஞனின் கண்ணில் தெரிந்த மயக்கமும் குரலில் தெரிந்த குழைவும் பயத்தைக் கொடுக்க, விட்டால் போதும் என ஓடிவிட்டார் சூசன்.

“குரல் மட்டும் இல்ல ஆளும் அழகாத்தான் இருக்கா! வாட் அ வெள்ளை!” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார் ஜெய்க்குமார்.

ஜெய்க்குமார் பரம்பரை பணக்காரர். ரூபாய் நோட்டில் காதை குடைந்து அதை குப்பையில் தூக்கிப் போடும் அளவுக்கு வசதி படைத்தவர். சோப் போடுவதில் வல்லவர் அவர். அதாவது அவருக்கு குடும்பத் தொழில் சோப் தயாரிப்பது என சொல்ல வந்தேன். அதோடு சின்ன வயதில் இருந்தே சினிமா மோகம் அவருக்கு. டைரக்டராக வேண்டும் எனும் ஆசைக்குத் தந்தை பச்சைக் கொடி காட்ட, லாஸ் ஏஞ்சல்சில் அது சம்பந்தமாக படிக்க வந்திருந்தார். திங்கள் முதல் வெள்ளி வரை படித்து கிழிப்பவர், வீக்கேண்ட்களில் நண்பர்கள் பட்டாளத்துடன் இப்படி பார் பாராக குடித்து விட்டு குட்டிகளுடன் கூத்தடிப்பார். அந்நாட்டில் தான் ஓன் நைட் ஸ்டாண்ட் சர்வசாதாரணமாயிற்றே! (ஓன் நைட் ஸ்டாண்ட் என்றால், இரவில் பிக்கப், காலையில் ட்ராப் அப். குடி போதையில் யாருடன் இருந்தோம் என்று கூட பலருக்குத் தெரியாது.) எந்த பெண்ணுடனும் நிரந்தர தொடர்பு வைத்திருக்கவில்லை அவர். ஆனால் சூசனின் மயக்கும் குரலும் கட்டி இழுக்கும் அழகும் ஒர் இரவுக்கு மட்டும் போதாது என புரிந்துப் போனது ஜெய்க்குமாருக்கு.  

சூசன் வேலைப் பார்க்கும் பாருக்கு தினம் வர ஆரம்பித்தார் அவர். முடிய முடிய கோக் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, ஒன்றும் பேசாமல் பார்வையாலே அவளைப் பின் தொடர்ந்தார். பார்களில் பீரை விட கோக் போன்ற பானங்கள் தான் இன்னும் விலை அதிகம். குட்டைப் பாவாடை, வெள்ளை ப்ளவுஸ், இடுப்பில் இறுக்கிக் கட்டிய ஏப்ரன் என அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த மாதுவே போதையூட்டி சித்தம் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் போது, மதுவுக்கு அங்கே என்ன அவசியம்!

சேட்டைகள் ஒன்றும் செய்யாமல் பார்வையால் தன்னை வருடும் ஜெய்யை சூசனும் கவனிக்காதது போல கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அந்நிய நாட்டவர் என தயக்கம் இருந்தாலும், டீசண்டாக தன்னை சைட் அடிப்பவரை இந்த சின்னப் பெண்ணுக்கும் பிடிக்கத்தான் செய்தது. அங்கே வரும் மற்ற ஆண்களைப் போல தொப்பை இல்லாமல், மாநிறத்தில், கத்தை மீசையுடன், திடகாத்திரமாக தெரிந்தவரை காண காண மனம் தடுமாறியது. தன் மீது வந்து விழும் மற்ற பெண்களை மறுத்து விட்டு தன்னையே பார்க்கிறாரே என மனம் பெருமையில் விம்மவும் செய்தது.  

அந்த வார இறுதியில் ஜெய்யின் மேசை அருகே போய் நின்ற சூசன்,

“என்ன வேணும் உங்களுக்கு?” என கேட்டார்.

“யூ!”

அவரின் ஒற்றை வார்த்தை பதிலில் புருவத்தை உயர்த்தினார் சூசன்.

“எனக்கு உன்னையும் உன் பட்டு போன்ற குரலையும் ரொம்ப பிடிச்சிருக்கு! உன் வாழ்க்கையில ஒரு அங்கமா இருக்க எனக்கு ஒரு சான்ஸ் குடுப்பியா பேபி?”

சட்டென சரி சொல்ல முடியவில்லை சூசனுக்கு. என்னவோ தயக்கம்.

ஜெய்க்கோ ஒரே கொண்டாட்டம். இத்தனை நாள் திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தவள், தானாக வந்து பேசவும், பட்சி சிக்கி விட்டது என புரிந்துப் போனது அவருக்கு. அதற்கு மேல் சோப் கம்பேனி ஓனருக்கு சின்ன வயது பெண்ணுக்கு சோப் போடுவதை சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.

இரண்டே வாரத்தில் அவளைத் தன் வசமாக்கி இருந்தார். நண்பர்களுடன் தங்கி இருந்தவர், தங்களுக்காக குட்டி அபார்ட்மேண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். காதல் மொழி பேசி, அக்கறை காட்டி, அன்பு செலுத்தி, நான் இருக்கிறேன் என புரிய வைத்து இரண்டாவது வாரத்தில் அந்தக் குட்டியை சொந்தக் குட்டி ஆக்கி இருந்தார். ஆங்கிலேயன் தான் இந்தியனை ஆள முடியுமா? ஓர் இந்தியனும் ஆங்கிலேயனை ஆளலாம் என நிரூபித்தார் ஜெய்க்குமார். சூசன் இன்னும் கன்னியாய் இருந்தது அவருக்கே ஆச்சரியம்தான். முதல் விருந்தை தனக்களித்தவள் மீது, கொஞ்சமாய் பாசம் துளிர் விட்டது ஜெய்க்கு.     

அந்த நாட்டில் இருந்த வரை சூசனை தனக்கே தனக்கு என வைத்துக் கொண்டார். வைத்துக் கொண்டார் என்பது சரியான உவமைதான் இங்கே. அவளை ராணி போல தாங்கினார். அவள் குடும்பத்துக்கும் சேர்த்து செலவு செய்தார். சூசனும் ஜெய்யின் அன்பில், அவர் காட்டிய காதலில் மயங்கித்தான் நின்றார். ஜெய் கேட்கும் போதெல்லாம் சலிக்காமல் பாடி அவரை மகிழ்விப்பார் சூசன். இப்படியே இவர்களின் உறவு, ஜெய்யின் படிப்பு முடியும் வரை தொடர்ந்தது.

அவர் கிளம்பும் போது கண்ணில் நீருடன் நின்றவரைப் பார்த்து,

“உனக்கு செலவுக்கு மாசம் மாசம் பணம் வர மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கேன் பேபி! நாம தங்கி இருந்த அபார்ட்மேண்டையும் உன் பேருக்கு வாங்கிருக்கேன். என் சூழ்நிலையைப் பொருத்து அடிக்கடி வந்து பார்த்துக்கறேன் உன்னை. ப்ளிஸ் டோண்ட் க்ரை” என அணைத்து சமாதானப்படுத்தினார்.

சொன்னதற்கேற்ப அடிக்கடி வரத்தான் செய்தார். பெற்றவர்கள் அவருக்கென்று ஒரு பணக்கார பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். பணம் பணத்தோடு சேர்வது தானே இயல்பு. பணம் இருந்தால் மனம் கவரும் அம்சங்கள் இருந்து விடுமா என்ன! அவர் மனம் என்னவோ வெளியூர் ஆட்டக்காரி சூசனையும் உள்ளூர் வீட்டுக்காரி சூர்யாவையும் ஒப்பிட்டுப் பார்த்து சுணங்கியது. அதனாலேயே வெளியூர் பயணம் அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. அப்பொழுதுதான் சூசனின் வயிற்றில் உதித்தான் அலெக்சாண்டர் ஜோனா! விஷயம் கேள்விப்பட்டு இவர் பிள்ளை தனது என நம்பக்கூட இல்லை. வெள்ளைக்காரி டபுள் கேம் ஆடிவிட்டாளா என சந்தேகம் பிடித்து ஆட்டியது.

பையன் பிறக்க, மனம் கேட்காமல் வந்து பார்த்தார். வெள்ளை வெளேர் என சூசனின் நிறத்தில் இருந்தாலும், மூக்கும் முழியும் இவரை ஒத்திருந்தது. அது கூட தன் மாதிரி இருப்பது, கண்கள் ஆடும் கபட நாடகமோ என பயந்து, டி,என்,ஏ டெஸ்ட் எடுத்து உறுதியானதும் தான் ஒழுங்காகவே மூச்சு விட்டார் ஜெய்க்குமார்.

ஊரில் சூர்யாவும் வயிற்றைத் தள்ளிக் கொண்டு தான் இருந்தார். என்னதான் சூசனுக்குப் பிறந்தது தன் குழந்தையானாலும், சூர்யா பெற்றுக் கொடுப்பது தானே குடும்ப வாரிசு! சூசனுக்குத் தேவையானதை செய்து விட்டு இந்தியாவுக்குப் பறந்து விட்டார் ஜெய்க்குமார்.

அவர் எடுத்த முதல் படமும் ஹிட் அடிக்க, அதன் பிறகு அவருக்கு ஏறு முகம்தான். அமெரிக்காவுக்கு ஷூட்டிங் என போனால் மட்டும் சூசனைப் பார்த்து, விட்ட குறை தொட்ட குறை என மேட்டரை முடித்து விட்டு வருவார். டாடி, டாடி என காலை சுற்றி வரும் வெள்ளை மகனைத் தூக்கி,

“அழகன்டா நீ!” என குண்டு கன்னத்தில் முத்தமிடுவதோடும் அவன் பராமரிப்புக்கு காசு கொடுப்பதோடும் கடமை முடிந்தது அவருக்கு.

இந்த வாழ்க்கை முறையால் சலிப்படைந்துப் போனார் சூசன். ஏழ்மை நிலையில் இருந்தவருக்கு, ஆரம்பத்தில் ஜெய் கொட்டிக் கொடுக்கும் பணம் பெரிதாக தெரிந்தது. வயது ஏற, பணம் மட்டுமே வாழ்க்கைக்கு எல்லாமும் ஆகி விடாது என உணர்ந்துக் கொண்டார். எப்பொழுதாவது கொட்டி போகும் வான் மழையை நம்பி இருந்தால், தரிசாக போய்விடாதா நிலம்!

அடுத்த முறை ஜெய் வந்த போது, தான் இன்னொருவரை திருமணம் முடிக்கப் போவதாக அறிவித்தார் சூசன். இது நாள் வரை, சென்னையில் இருக்கும் போது, இங்கே இவள் இன்னொருவனுடன் இருப்பாளோ என அடிக்கடி மனதை உளப்பிக் கொள்பவருக்கு, இத்தோடு முடித்துக் கொள்வோம் என தோன்றி விட்டது. அதோடு இவர் பிரபலமான டைரக்டராகி இருந்தார். இம்மெனுமுன் மேலே வந்து விழ பல நடிகைகள் காத்திருந்தனர்.  

அன்றோடு அவர்களின் காதல் சகாப்தம் ஒரு நிறைவையடைந்தது. மகன் தன்னுடனே இருக்கட்டும் என சொல்லி விட்டார் சூசன். தம்பிகளையே வளர்த்து ஆளாக்கியவருக்கு, மகனை விட்டுவிட மனம் வருமா! தனக்குப் பிடித்த ஒருவரை காதலித்து மணந்தும் கொண்டார். அவருடன் ஒரு பெண்ணும் ஒரு பையனையும் பெற்றுக் கொண்டார். பெரியவனை பாசமகத்தான் வளர்ந்தார். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் விலகிப் போக ஆரம்பித்து விட்டான் அலெக்ஸ்.

தந்தையின் கம்பீரமும், தாயின் குரல் வளமும் சொத்தாய் இருக்க, வேறெதுவும் தேவையில்லை என பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் அலேக்ஸ். படித்தது கூட ஹை ஸ்கூல் வரைதான். அங்கேதான் ஹை ஸ்கூல் வரை கவர்மேண்ட் பள்ளியில் படிக்கலாமே. அதற்கு பிறகு தானே காலேஜ் செல்ல வேண்டும் என்றால் சொந்த பணத்தைப் பயன்படுத்த வேண்டும். நல்ல பெற்றவர்கள் என்றால் குழந்தைப் பிறந்த உடனே, காலேஜ் ஃபண்ட் என சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெய்யும் பணம் கொடுக்க சம்மதித்தார்தான். எட்டிப் பார்க்காத தந்தையின் பணமும் கூட எட்டிக்காயாய் கசந்தது இவனுக்கு.

நண்பர்கள் நால்வர் ஒன்றாய் சேர்ந்து பேண்ட் ஒன்றை நிறுவி, பார் பிஸ்ட்ரோ என பாடி ஆடி சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். அலேக்ஸ் பாட்டெழுதி பாடுவான். கிட்டாரும் வாசிப்பான். மற்ற மூவரும் ட்ரம், ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார் என வாசித்து பட்டையைக் கிளப்புவார்கள். ‘ஃபோர்(4) டைரக்‌ஷன்’ என்பது இவர்களின் பேண்டின் பெயர். ஜோனா எனதான் பாடும் முன்னே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான் அலேக்ஸ். ஷோ செய்து கிடைக்கும் பணமெல்லாம் தண்ணி, தம், பெண்கள் என சரியாக இருக்கும். சில சமயம் ஜோய்ண்ட்(கனாபிஸ் என அழைக்கப்படும் போதை வஸ்து. சிகரேட் போல சுருட்டி புகைப்பார்கள்) கூட வாங்கி உபயோகிப்பார்கள்.

ஊர் ஊராக போய் கிடைத்த மோட்டேல்களில்(ஹோட்டேல் போல தான் ஆனால் விலை மலிவு) தங்கி, அனுமதி கொடுத்த பார்களில் பாடி என இளமையை அனுபவித்து வாழ்ந்தார்கள் நால்வரும். இதெல்லாம் அவர்களுக்கு ப்ரேக் கிடைக்கும் வரைதான். ஒரு பாரில் இவர்கள் பாடியது, யூடியூபில் வைரலாக ஜோனாவுக்கு மட்டும் சோனி மியூசிக்கில் ஆல்பம் செய்ய வாய்ப்பு வந்தது. வளர்ந்து வரும் இசை கலைஞர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாகும். நண்பர்களை விட்டு எப்படி என மறுக்கப் போனவனை மூவரும் சேர்ந்து ஒப்புக் கொள்ள வைத்தார்கள்.

அதன் பிறகு அவன் தொட்டது எல்லாம் துலங்கியது. அவனே எழுதி பாடியது எல்லாம் ஹிட்டடித்தது. அழகனாய் இருந்தவனை கிழவியில் இருந்து குழந்தை வரை தங்களது ஐடலாக(idol) வைத்துக் கொண்டார்கள். எங்கே போனாலும் ஜோனா, ஜோனா என கோஷம்தான். க்ரெம்மி அவார்ட், பில்போர்ட் மியூசிக் அவார்ட் என வந்து குவிந்தது.

பெயர் புகழ் வரவும் முன்பு போல சுதந்திரமாக உலாவ முடியவில்லை. பணம் கொட்டிக் கிடந்தது, ஆனால் நிம்மதி இல்லாமல் போனது அலெக்ஸுக்கு. புகழ் ஏற ஏற அதை தக்க வைத்துக் கொள்ள போராட்டம். அடுத்த ஆல்பத்தையும் ஜெய்க்க வைக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம். காளானாய் முளைத்து வரும் புதிய வரவுகளோடு போராடி பந்தயத்தில் முன் நிற்க வேண்டுமே! பாட்டெழுத உட்கார்ந்தால் ஸ்ட்ரெஸ்சில் மைண்ட் ப்ளாக் ஆகியிருந்தது. அவன் கூட இருந்து பாசம் காட்டி பரிவாய் தலை வருட யார் இருக்கிறார்கள்! நண்பர்கள் மூவரும் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிட, தாயும் தன் பிள்ளைகளோடு வாழ்ந்திட இவனுக்கு அனாதையாய் ஆகி விட்ட உணர்வு. ஸ்ட்ரெசில் போதை மாத்திரை ஓவர் டோஸ் ஆகிட, இரண்டு வாரங்கள் பேச்சு மூச்சின்றி கிடந்தான் அலேக்ஸ். எப்படியோ டாக்டர்கள் உயிரை மீட்டு கொண்டு வந்திருந்தார்கள்.

மகனின் நிலை கண்டு ஓடி வந்தார் சூசன். அவன் கையைப் பற்றிக் கொண்டு அழுதேவிட்டார். ஜெய்க்குமார் சில வாரங்களுக்கு முன் தான் இவரைத் தொடர்பு கொண்டு மகனை இந்தியா அனுப்பி வைக்க முடியுமா என கேட்டிருந்தார். ரீசன்டாக அவர் எடுத்த படங்கள் எல்லாம் படு தோல்வி.

தற்பொழுது இன்ஸ்டாவில் அலேக்ஸ் பதிவேற்றிய ஒரு பாடலால், இந்தியாவிலும் வைரலாகி இருந்தான் அவன். ஆம்! எப்பொழுதாவது வரும் தந்தை தன்னைப் பாராட்டி விடமாட்டாரா, மற்ற தந்தைகளைப் போல தன்னுடனே இருந்து விடமாட்டாரா என சிறு வயதிலேயே பணம் கட்டி தமிழ் பயின்றிருந்தான் அவன். அட்சர சுத்தமாக பேசாவிட்டாலும் ஓரளவு பேசுவான். அவ்வளவு கியூட்டாக இருக்கும் அவன் பேசுவதை கேட்கும் போது. பொழுது போகாமல் தமிழில் சில வரிகள் பாடி பதிவேற்றி இருந்த போஸ்ட் இந்தியா முழுதும் பரவி அவனுக்கு இன்னும் ரசிகைகளை(கொஞ்சூண்டு ரசிகனும் இருக்காங்க) அள்ளி குவித்திருந்தது.

புகழடைந்திருக்கும் மகனை நாயகனாக வைத்து படம் எடுத்தால் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் திரையுலகில் எனும் எண்ணத்தில் தான் சூசனை அழைத்திருந்தார் ஜெய்க்குமார். இடமாற்றம் மகனின் ஸ்ட்ரெஸ்சைக் குறைத்து அவனுக்கு நல்ல பாதையைக் காட்டக் கூடும் என நம்பிய சூசன் அவனை இந்தியா கிளப்ப முயன்றார். அவர் முயற்சி கைக்கூடுமா?

இங்கே இந்தியாவில் ஆயிரமாவது முறையாக ஜோனா பாடிய அந்த தமிழ் பாடல் வீடியோ கிளிப்பைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

“பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே!!!!”

அந்த குரலில் ஒலித்த ஏக்கத்தில், இவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய ஆரம்பித்தது!

“ஐ லவ் யூ ஜோனா!” என மிக மிக மென்மையாக முணுமுணுத்தாள் அந்த யுவதி.

        

{மயங்குவா(ன்/ள்)}

(இந்தக் கதை எப்படி வரும்னு தெரியல! கடைசில ப்ளேஷ்பேக் வச்சு டென்ஷன் பண்ணாம கதையோட கதையா ரெண்டு பேரோட பின்புலமும் வந்துடுச்சு. இனிமே கதை எப்படி நகரும்னு உங்களோட சேர்ந்து நானும் பார்க்கப் போறேன். அமெரிக்காவில் வாழும் மியூசிஷியன் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஓரளவு சொல்லி இருக்கேன். ட்ரக்ஸ், ட்ரீங்க்ஸ், குரூப்பீஸ்(ரசிகைகள்! மேலே விழுந்து பழகுவாங்க), இதெல்லாம் சர்வ சாதரணம் அங்க. ஒழுக்க சீலனான ஒரு அமெரிக்கன் சிங்கர்னு எழுதனா, கதையே ஃபேக்(fake)ஆ இருக்கும். அதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால என் எழுத்துல நல்லத எடுத்துட்டு கெட்டத விட்டுடுவோம்! உங்க ஆதரவை எதிர்ப்பார்த்து, எப்பொழுதும் போல அவங்க அவங்க குணநலனோடதான் கேரக்டர இந்த கதையிலும் உலவ விடறேன்! என்னை நம்பி வாங்க, பயணம் செய்வோம்! தேங்க்ஸ் அண்ட் லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!