சில்லென்ற தீப்பொறி – 10

சில்லென்ற தீப்பொறி – 10

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே

எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்

கண்டெழுதல் காலை இனிது.

விளக்கம்

அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 10

தனக்கு சாதகமான முடிவை எடுத்து விட்டு அலைபேசியோடு உறவாடிக் கொண்டிருந்த அமிர்தசாகரை இன்னதென்று விளங்காத பார்வையில் துளைத்துக் கொண்டிருந்தார் நடேசன்.

‘பெரியவர்களுக்காக இல்லா விட்டாலும் கட்டிய மனைவியின் எண்ணத்தையாவது என்னவென்று கேட்கக் கூடாதா’ என்ற ஆதங்கம் மனதோடு எழுந்ததை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டார். 

‘எடுத்துச் சொன்னாலும் இவன் கேட்கப் போவதில்லை எனும்போது பேசிக் களைப்பானேன்.’ மனோபாவம் அவரை மௌனமாக்கி விட்டிருந்தது.

அவனது முடிவில் தனது பிடித்தமின்மையை வெளிக்காட்டும் விதமாக நடேசன் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து விட, கோமதியும் கணவனுக்கு சளைக்காத பாவனையை தந்தார்.

இத்தனை ஆட்சேபணைக்கு இடையிலும் தனது வேலையை கர்ம சிரத்தையாய் செய்து கொண்டிருந்த அமிரின் கவனத்தை கலைத்தாள் ஹரிணி.

“நிஜமாவே நீங்க அப்ராட்ல செட்டில் ஆகப் போறீங்களா ண்ணா?” வியப்புடன் கேட்க, ஆமென்று தலையசைத்தான் அமிர்.

“எங்க கம்பெனி ஃபேப்ரிக் குட்ஸ்க்கு ஃபாரின் கன்ட்ரீஸ்ல நல்ல வரவேற்பு இருக்கு ஹரிணி. அதுக்காகதான், கம்பெனியோட ஒரு கேபிடலை ஜெர்மன் இன்டஸ்டீரியல் ஃபேப்ரிக் கொலாபரேசன்ல அங்கே ரன் பண்ண நிர்வாகம் முடிவு பண்ணியிருக்கு..

அப்படி அங்கே தொடங்கற கம்பெனியில மார்கெட்டிங் ஹெட்டா என்னை புரமோட் பண்ணியிருக்காங்க. இந்த போஸ்டிங்ல ஊர் ஊரா அலையுற வேலையில்லை. அங்கேயே செட்டில் ஆகி வொர்க் பண்ணனும்னு அவங்க டிமாண்ட் பண்றாங்க. என்னோட சேலரி ஸ்கேலும் ஹை லெவல்ல ரீச் ஆகும். அதான் அங்கேயே செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” முற்றிலும் புதியதாய் மாற்றிக் கொள்ளப் போகும் தனது வாழ்க்கை பாதையை விளக்கிக் கூறினான் அமிர்.

“அப்போ அண்ணி ண்ணா?” வேகமாய் கேட்டு நாக்கை கடித்துக் கொண்ட தங்கையை, புன்முறுவலோடு பார்த்தான் அமிர்.

“உன் அப்பாவும் அம்மாவும் தனித்தனியா இருந்தா நல்லா இருக்குமா? அது உனக்கு பிடிக்குமா ஹரிணி?” பூடகமாய் கேட்க, அவ்ளோ நொடிநேரத் தாமதமின்றி மறுத்தாள்.

“அது எப்படி ண்ணா எனக்கு பிடிக்கும், அதோட, அப்படி இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” தெளிவாய் கேள்வி கேட்டவளின் கன்னத்தை செல்லமாய் தட்டிவிட்டு, 

“அதேதான். இப்ப நான், உங்க அண்ணியை விட்டுட்டு போக என்ன ரீசன், என்ன அவசியம் இருக்கு சொல்லு? நான் ஆபீஸ் போற நேரத்துல இவளுக்கும் ஏதாவது ஒரு அரேஞ்ச்மேன்ட் பண்ற ஐடியால இருக்கேன். சோ, ஃபாமிலியாதான் ஜெர்மன்ல செட்டிலாகப் போறேன்.

இதுக்காகவே என் ட்ரிப் முடிஞ்சு நேரா வயநாடுக்கு போயி, அங்கே இருக்குற வீட்டையும் கிரையம் பண்றதுக்கு  புரோக்கர்கிட்ட சொல்லி ஏற்பாடும் பண்ணிட்டு வந்துட்டேன்.” தங்கையிடம் விளக்கமாக கூறியவனை கோபத்தோடு பார்த்தார் நடேசன்,

“லக்கிகிட்ட கலந்து பேசி முடிவெடுத்து இருக்கலாம் அமிர். எனக்கென்னமோ நீ அவசரபடுறியோன்னு தோணுது.” இறங்கிய குரலில் தனது ஆட்சேபணையை தெரிவிக்க,

“அவகிட்ட கேக்கணும்ங்கிற அவசியமே இல்ல சித்தப்பா. நான் ஒரே இடத்தில வேலை பாக்கணும்னு தானே அவளும், அவங்கப்பாவும் விரும்புறாங்க. அப்ப நான் எடுத்த முடிவு சரிதானே?” தன்னை நியாயப்படுத்திக் கொண்டான் அமிர்.

“நீ சொல்றது எல்லாம் சரிதான். அதென்னவோ, என் மனசு இதுக்கு ஒத்துக்க மாட்டேங்குது. என்னை பெத்தவங்களுக்கு நானும் உங்கப்பாவும் வாரிசா இருந்தோம். ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து நீ ஒருத்தன் மட்டுமே வாரிசு. லக்கி வீட்டுலயும் அதே நிலைமைதான். வாழையடி வாழையா நம்ம ரெண்டு குடும்பமும் உங்களால தான் தலைநிமிர்ந்து நிக்கணும் அமிர். முடிஞ்சவரை குடும்ப வாழ்க்கையை சுமூகமா நடத்திக்க பாரு.

ஹரிணியோட கல்யாணத்தை நடத்துற பொறுப்பை கூட நான், உன் கையில ஒப்படைக்கிறதா முடிவு பண்ணி இருக்கேன். ஒரு ஆத்திர அவசரத்துக்கு தோள் கொடுத்து தைரியம் சொல்ல எங்களுக்கு, உன்னை விட்டா வேற யார் இருக்கா? என் மனசுல இருக்கிறத சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம்.” மனதில் உள்ளதை வெளிப்படையாக முறையிட்ட நடேசன், ஓய்வெடுக்க அறைக்குள் சென்று விட்டார்.

கணவனின் சோர்ந்த பேச்சினைக் கேட்ட கோமதியும், “உங்க சித்தப்பாக்கு தொழில் முன்ன மாதிரி இல்ல தம்பி. அதுலயே  ரொம்ப தளர்ந்து போயிட்டாரு. அடிக்கடி உடம்பு முடியாமலும் போயிடுது. அதோட பொண்ணுக்கு கல்யாண வயசு ஏறிட்டே போகுதுன்னு கவலை வேற வந்துடுச்சு.” வருத்தத்துடன் முடித்தார்.

“நீங்க சொல்றது நல்லா புரியுது சித்தி. வேலைக்காக மட்டுமே தூரமா போக முடிவு பண்ணியிருக்கேன். மத்தபடி நான் எப்பவும் உங்களுக்கு துணையா இருப்பேன். ஹரிணி படிப்பு முடிஞ்சதும் நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு.

பெத்த மகனுக்கு குறையாம நீங்க என்னை பாக்கும்போது, நானும், உங்க மகனா பொறுப்பெடுத்து செய்வேன். கவலையை விடுங்க.” உறுதியுடன் ஆறுதல் கூற ஓரளவு சமாதானமானார் கோமதி.

இரண்டு மாத பிரிவிற்கு பிறகு விடுமுறையில் வந்த அமிர், முதலில் வயநாடு சென்று வீட்டை விற்பதற்கென அக்கம் பக்கத்தில் பேசி, தரகரையும் ஏற்பாடு செய்து விட்டு வந்திருந்தான். 

இந்த அலைச்சலில் தனது வருகையை கோவையில் யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. தனது சொந்த வேலைகளை முடித்து விட்டு இன்று காலையில்  நடேசன் வீட்டிற்கு வர, அங்கேதான் இந்த பேச்சு நடந்தது.

இன்னும் மனைவியை அழைத்து பேசவில்லை என்ற நினைவு வர, ‘பேசிப்பேசியே பொண்டாட்டிய கூட மறக்க வைக்கிறாங்க இந்த பெரியவங்க’ மனதிற்குள் பாசமாய் சலித்துக் கொண்டு லக்கிக்கு அழைக்க, அவளோ அழைப்பினை ஏற்கவில்லை.

ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைக்க, அலைபேசியை எடுத்தவள் சற்றே அவசரமாக பேசுவது போல் தோன்றியது அமிருக்கு.

“எங்கே இருக்கீங்க சாகர்? எப்போ இங்கே வரீங்க?” தொடர் கேள்விகளை கேட்டு கணவனின் பதிலுக்காக காத்திருக்க, அவளின் பக்கமிருந்து சலசலவென பேச்சு சத்தம் வந்து அமிரின் காதுகளை அடைத்தது.

“ஹாங்… இத்தனை நாள் இந்த கேள்வி எல்லாம் எங்கே ஒளிச்சு வச்சுருந்த? நான் வர்றது இருக்கட்டும். நீ இப்போ எங்கே இருக்க… என்ன சத்தம் அங்கே?’ மாறாத ஆளுமையில் கேட்க, லக்கியின் மனம் அலுத்துக் கொண்டது.  

‘ஆரம்பிச்சுட்டாரா… எத்தனை நாள் கழிச்சு பேசினாலும் அவரோட தோரணை மாறவே மாறாதா? எப்போதான் பொண்டாட்டிகிட்ட ஆசையா பேசுவாரோ?’ மனதிற்குள்ளாக புலம்பிக் கொண்டவள் பொறுப்பாக பதில் கூறத் தொடங்கினாள்.

இல்லையென்றால் அதற்கும் சேர்த்து எகிறி நிற்பானே? வந்தவுடன் வாங்கிக் கட்டிக் கொள்ள இவளுக்கு ஆசையுமில்லை, நேரமும் இல்லை.

“நான், நம்ம ஆபீஸ் பேக்கிங் செக்சன்ல இருக்கேன்ங்க… அதான் இவ்ளோ சத்தமா கேக்குது.” லக்கி பதில் கூற,

“நாம எப்போ ஆபீஸ் ஆரம்பிச்சோம்?” புரியாமல் அமிர் கேட்க, லக்கி தலையில் அடித்துக் கொண்டாள்.

‘இவர் புரிஞ்சு தான் பேசுறாரா, இல்ல வேணும்னே கேக்குறாரா?’ மனதிற்குள் அலுத்துக் கொண்டு,

“எங்க ஆபீஸ்ல இருக்கேங்க…” அழுத்திச் சொல்ல,

“ஒழுங்கா சொல்லுடி. நம்ம, எங்க… என்னதான் சொல்ல வர்ற நீ?” அதட்டலுடன் கேட்டான் அமிர்.

“ம்ப்ச்… நான் எங்கப்பா ஆபீஸ்ல இருக்கேன். அங்கேதான் இப்ப பேக்கிங் வொர்க்  நடக்குது, போதுமா?” பல்லைக் கடித்து பொறுமையுடன் விளக்கம் கூற, 

“அங்கே நீ எதுக்கு போன?” கூர்மையாக கேட்டான் அமிர்.

“இதென்ன கேள்வி? ஒரு மாசமா நானும் ஆபீசுக்கு வந்துட்டு இருக்கேன். வேலையை இப்ப இருந்தே கத்துகிட்டா, அப்புறம் ஈசியா இருக்குமில்லையா, அதான்…” மனைவி இழுக்க,

“என்னை கேட்காம உன்னை யாரு இந்த வேலைய கமிட் பண்ணிக்க சொன்னது?” சட்டென்று கேட்டவன் அந்த நேரம் கோபமலையின் சிகரத்தில் ஏற்றம் கண்டிருந்தான்.

“வீட்டுலயே இருக்க போர் அடிச்சது சாகர். படிப்பு முடிஞ்சதும் இங்கே வந்து பிசினஸ் கவனிக்கனும்ங்கிற முடிவே, நான் ஏற்கனவே எடுத்ததுதான். இடையில நம்ம கல்யாணம் வந்ததால கொஞ்சம் தள்ளி போயிடுச்சு.” தன்னை விளக்கி விடும் முயற்சியில் மனைவி பேச்சினை தொடர, கணவன் இடையிட்டான்.

“உன்னோட முன்கதை சுருக்கம் எல்லாம் எனக்கு தேவையே இல்ல… தொழிலும் வேணாம் சொத்தும் வேணாம்னு நான் சொல்லிட்டு இருக்கேன். அதை நல்லா மனசுல பதிய வைச்சுக்காதது உன்னோட மிஸ்டேக். சரியா இன்னும் அரைமணி நேரத்துல சித்தப்பா வீட்டுக்கு வர்ற…” மீறமுடியாத குரலில் கூற,

“ஈவ்னிங் வேலை முடிஞ்சதும் வர்றேன்ங்க…” மனைவியின் மன்றாடலை காதில் வாங்கிக் கொள்ளாமல்,

“நீ அங்கே இருந்து ஒரு ஆணியும் புடுங்க வேணாம்னு சொல்றேன். இங்கே நமக்கு அடுத்தடுத்து நிறைய வேலைகள் இருக்கு. சீக்கிரம் வந்து சேரு.” உஷ்ணத்துடன் கூறியவாறு பேச்சினை முடித்தான் அமிர்.

கணவனின் மலையேற்றத்தை உணர்ந்து கொண்டவளின் மனம் வேலையில் லயிக்காமல் போக, மதிய உணவு நேரத்திற்கே அமிரை காண வந்து சேர்ந்தாள் லக்கி.

நடேசன் வீட்டு ஹாலில் ஹரிணியும் கோமதியும் அமர்ந்திருக்க, “எப்படி இருக்கீங்க ஆண்ட்டி? காலேஜ் லீவா ஹரிணி?” பொதுவான விசாரிப்புடன் கணவனை சல்லடை போட்டு தேடினாள்.

“அண்ணி உங்க கேள்விக்கு ஃபைன், எஸ் ஆன்சர்தான். அதுக்கு மேல என்ன சொன்னாலும் உங்க மனசுல ஒட்டாது. ஃபார் எ கைண்ட் இன்ஃபர்மேசன், அண்ணா இப்போதான் சாப்பிட்டு தூங்கப் போனாங்க. இப்ப நீங்க போயி எழுப்பினா, கடிச்சு வைச்சாலும் வைச்சுடுவார். ஏற்கனவே தலைவலிக்குதுன்னு டாப்லெட் போட்டுட்டு ரூமுக்கு போயிருக்காரு.” ஹரிணி நிலவரத்தை விளக்கவும் லக்கியின் மனம் ‘அச்சோ’ என உச்சு கொட்டியது.

“ரொம்ப டயர்டா இருந்தாரா ஹரிணி?” பரிதாபத்துடன் கேட்டவளின் மனம், ‘தேவையில்லாம நானும் பேசி தலைவலிய அதிகமாக்கிட்டேனோ? வெளியே இருக்கேன்னு சொல்லி, நேருல வந்து தெளிவா பேசி இருக்கலாம்.’ என தன்னைத்தானே கடிந்து கொண்டது.

“டிராவல் சிக்னெஸ்தான் அண்ணி.” ஹரிணி சாதாரணமாய் கூற,

“அவன் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும் லக்கி. நீ வந்து சாப்பிடு!” கோமதியும் சொல்ல, அவளுக்கோ கணவனை காணும் ஆர்வம் மனதிற்குள் அலைபாய்ந்தது.

“நான் மேல போயி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடுறேன் ஆண்ட்டி.” காரணத்துடன் அமிரின் அறைக்கு செல்ல, சரியென்று கோமதியும் விட்டுவிட்டார்.

சிறுவயதில் இருந்தே அமிர்தசாகர், நடேசன் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளும் பழக்கம் இருப்பதால், அவனுக்கென தனியறையும் அங்கே இருந்தது.  

அறைக்குள் நுழைந்த லக்கி, அமிரின் முகத்தை உற்றுப் பார்க்க அவனது உறங்கிய முகமும் பல யோசனைகளில் சுருங்கிக் கொண்டு இருந்தது.

‘தூங்குற நேரத்துலயும் யாரை அதட்டலாம், மிரட்டலாம்னு யோசனை பண்ணிட்டே தூங்குவாரா? ஒருவேள என்னை மனசுல நினைச்சதால வந்த கடுப்பா இருக்குமோ?’ பல யோசனைகள் மனதிற்குள் படையெடுக்க, அவளது வலதுகை தன்போக்கில் கணவனின் சிகையில் நுழைந்து கலைத்து விட்டது.

“மை ஸ்வீட் ஆங்கிரி பாய், என்னை வா வான்னு அனத்தி எடுத்திட்டு தூங்குறத பாரு!” செல்லமாய் கடிந்து கொண்டவள் குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்தாள்.

கணவனின் உறங்கிய நிலையில் அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம் வழக்கம் போல் தலைதூக்க, “ஒரு ஆள் வந்து நடமாடுற சத்தம் கூடவா கேக்காம இருக்கும்?” முணுமுணுத்துக் கொண்டே, நெற்றியில் முத்தம் வைத்தவள் அடுத்தகணமே அவனது கையில் நறுக்கென்று அடுத்தடுத்து கிள்ளினாள் லக்கி.

“ஆஆ… பாவி, பாவி… மனுஷியாடி நீ? ஒத்த முத்தம் கொடுத்துட்டு, நூறு தடவ கிள்ளி வைக்கிற?” அலறியபடி கண்ணை திறந்தான் அமிர்

“அடப்பாவி சாச்சு… நான் வந்தது தெரிஞ்சும் தூங்கிட்டு இருந்தீங்களா?” செல்ல முறைப்போடு கேட்க,

“உன்னோட பெர்ஃபியூம் ஸ்மெல் என்னை தட்டி எழுப்பிடுச்சு மின்னி.” பேச்சோடு பேச்சாக அவளை தன்மேல் சாய்த்துக் கொண்டான் அமிர்.

“தலைவலி எப்படி இருக்கு?” கைகள் கணவனின் நெற்றியை அழுத்தி வருட, சுகமாய் அனுபவித்தான் அமிர்.

“நீ வந்து விசாரிக்கிற வரைக்கும் அப்படியே இருந்துச்சு.” என்றவன் உறங்கிய நிலையில் தன்மேல் அவளை படரவிட்டுக் கொண்டான்.

“ஆஹான்… இப்போ?” கேட்டபடி இவளும் விலக முயற்சி செய்ய, வழக்கம் போல் முடியவில்லை.

“இப்ப நீ கவனிக்கிறதை பொறுத்து தலைவலி போகவா வேண்டாமான்னு முடிவு பண்ணும்.” கிறங்கிய குரலில் தனது கைவண்ணத்தை அழுத்தமாக அவளின் இடையினில் பதித்தான் அமிர்,

“ஷப்பா! முரட்டு பிடி, வலிக்குதுங்க…”

“அதென்னடி சகட்டுமேனிக்கு வாங்க போங்க போடுற… எப்படி இந்த மாற்றம்?” மனைவியின் அழைப்பினை ரசித்துக் கொண்டே உல்லாசமாக சிரித்தான் அமிர்.

“அதெல்லாம் மாறவும் இல்ல மறையவும் இல்ல. நீ, வா, போன்னு கூப்பிட்டா உடனே நீங்க முகத்தை திருப்புவீங்க. அந்த கோணல் மூஞ்சியை பார்த்து சகிச்சுக்கிற கொடுமைய விட, இந்த ங்க கொடுமை எவ்வளவோ பெட்டர்.” நக்கலுடன் சொல்லி முடித்தவள், அதிகமாய் பேசிவிட்டோமோ என நாக்கை கடித்துக் கொள்ள,

“நோ… நோ, மின்னி! இங்கே பனிஷ்மெண்ட் கொடுக்கிற வேலை எல்லாம் என்னோட டிபார்ட்மெண்ட்.” என்றவன் வன்மையாகவே அவளின் இதழுக்கு இதழாலேயே தண்டனை கொடுக்க, மூச்சு முட்டிப் போனாள் லக்கி.

“இந்த அக்கபோருக்கு தான், வந்து சேருன்னு கோபமா சொன்னீங்களா சாகர்?” கோபத்துடன் கேட்க,

“அப்போ இந்த யோசனையே இல்ல… ஆனா, இப்ப ட்ரை பண்ணலாமேன்னு தோணுது.” என்றவன் தனது முயற்சியை திருவினையாக்கியே முடித்தான்.

தனது ஆர்பரிப்பை அவளிடம் அடக்கிவிட்டு சாந்தமாய் அமிர் உறங்கிவிட, லக்கியின் மனமும் சற்றே ஆசுவாசமானது. கணவனிடம் இருந்து பெயர் தெரியாத புயலை அல்லவா எதிர்பார்த்து வந்தாள். அது வலுவிழந்த நிம்மதி அவளுக்கு!

அன்றொருநாள் வயநாட்டில் இருந்து கணவனுடன் இங்கே வந்து இறங்கும் வேளையில் எதற்கும் இருக்கட்டுமென்று தனது இரண்டு செட் உடையை இங்கே வைத்தது இப்போது வசதியாகிப் போனது.

“சுத்த பேட் பாய் ரா நீ! என் சாப்பாட்டை கூட மறந்துட்டு பாவமேன்னு உன்னை பார்க்க வந்தா, நீ என்னை குளிக்க வைக்கிறதுலயே குறியா இருக்க!” உதட்டை பழித்துக் கொண்டு கூறியவளை, ஆசையுடன் பார்த்தவன்,

“ஹாஹா… நீ என்னை பாவம் பார்த்தியா? அவ்ளோ பெரிய மனுஷி ஆகிட்டியா நீ? இங்கே வா செக் பண்ணுவோம்.” மீண்டும் ஒரு ஆட்டத்தை ஆரம்பிக்க அழைக்க, சாதுரியமாக நழுவி குளியறைக்குள் தஞ்சமைடைந்தாள் லக்கி.

அவள் தயாராகி வரவும் அவளின் முன்னே உணவுத் தட்டு நீட்டப்பட, “ச்சோ ஸ்வீட் சாச்சு!” கொஞ்சலை கன்னத்திற்கும் கடத்திவிட்டு வேகமாக உண்ணத் தொடங்கினாள்.

“அப்பப்போ இந்த ஃப்ரீ சாம்பிள் மட்டும் குறையில்லாம வந்துடுது. வேற காம்ப்ளிமெண்ட் எல்லாம் இருக்குறது உனக்கு தெரியவே தெரியாதா மின்னி? வஞ்சனையில்லாம வாங்கிக்க மட்டும் செய்யுற?” மனைவிக்கு செல்லக் கொட்டை பரிசளித்து அதிகப்படியான கொஞ்சலை வாங்க முனைந்தான் அமிர்.

“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து சாச்சு! ஸ்கூல் சிலபஸ்ல சொல்லி கொடுத்திருக்காங்க.. அதை ஃபாலோ பண்ணுங்க மிஸ்டர்.” ஏகத்திற்கும் கிண்டலடித்துக் கொண்டே உண்டு முடித்து உறங்கியும் முடித்தனர் இருவரும்.

“ஆறு மணிக்கு மூவி டிக்கெட் புக் பண்ணி இருக்கேன். சீக்கிரம் ரெடியாகு மின்னி.” அவசரமாய் கூறி எழுப்பி விட்டான் அமிர்.

“ஐயோ வேலை இன்னும் முடியல. நான் வர்றேன்னு ஆபீஸ்ல சொல்லிட்டு வந்துருக்கேன்ங்க!” லக்கி உள்ளே போன குரலில் கூற, சட்டென்று சீற்றம் கொண்டான் அமிர்.

“ஏய், மார்னிங் என்ன சொன்னேன்? திரும்ப வந்து அதே கதைய சொல்ற… கல்யாணமாகி நாலு மாசம் முடிஞ்சு போச்சு. ஆனா, முழுசா பத்துநாள் கூட நாம சேர்ந்து இருந்தது இல்ல. நான் இருக்குறப்ப என் பக்கத்துல நீ இருந்தேதான் ஆகணும். இல்லன்னா என்னை மனுசனா பார்க்க மாட்ட!” கோபித்து, கொந்தளித்து கணவன் அடங்குவதற்குள் அடுத்த தவணையாக இவனுக்கு ஏற்றிவிட லக்கியே வழி வகுத்தாள்.

‘தனக்கு வாய்த்தது இவ்வளவுதான்’ என்ற முணுமுணுப்புடன் தயாராகிக் கொண்டே, தான்வெளியே செல்லும் விசயத்தை ரெங்கேஸ்வரனிடம் லக்கி கூறி முடிக்க, அவரோ அமிரிடம் பேசியே ஆக வேண்டுமென்று அடம் பிடித்தார்.

“ஃபோனை மாப்பிள்ளைகிட்ட குடு லக்கிமா… நான் பேசுனது தப்புன்னு சாரி சொல்லணும். நேர்ல சொல்ல எனக்கும் சங்கோஜமா இருக்கு. இத்தனை நாள் உன்னோடவும் சரியா பேசல, நான் கால் பண்ணினாலும் அட்டென்ட் பண்ணல.” அவர் தரப்பினை கூறி வற்புறுத்த, அவளும் மறுநொடியே,

“சாச்சு… அப்பா லயன்ல இருக்காங்க.” எனக்கூறி அலைபேசியை அவனிடம் நீட்ட மட்டுமே செய்தாள்.

புகையை கசிந்து கொண்டிருந்த கோபத்தீ காற்று வீசி பற்றிக் கொண்டதைப் போல, நாக்கில் நரம்பில்லாமல் வார்த்தைகளை கொட்டித் தீர்த்தான் அமிர்.

“எதுக்கு அவர் பேசணும்? திரும்பவும் இப்படி இரு, இங்கே வேலை பாருன்னு எனக்கு பாடம் எடுக்கவா? அவர்கிட்ட பேச வேண்டிய அவசியமோ அவசரமோ எனக்கு இல்லவே இல்ல. இந்த ஃபோனை தூக்கி வீசிட்டு இப்ப கிளம்புறியா இல்லையா?” வழக்கமான கண்டிப்பில் அமிர் இறங்கி விட, இவளது அலைபேசி தானாக பூட்டு போட்டுக் கொண்டது.

அதற்கடுத்து வந்த நாளில் அவளிடம் கேட்காமல் மூன்றுநாள் பயணமாக ஊட்டிக்கு அழைத்துச் சென்று அவளுடனான தனிமை பொழுதினை கழித்தான் அமிர்.

“உன்னோட ரொட்டீன் எல்லாம் ரெகுலர் ஆகிடுச்சா மின்னி?” ஊட்டி பூங்காவில் அமர்ந்தபடி அமிர் கேட்க, சட்டென்று முகம் வாடிப் போனது லக்கிக்கு.

“எப்ப கேக்க வேண்டிய கேள்விய, எப்ப கேக்குறீங்க?” இவள் சோர்வாக கூற, இவனுமே வேதனையுடன் தலைகுனிந்தான்.

“சாரிடா… அந்த நேரத்துல வொர்க் டென்சன், அதோட பெரியவங்க கொடுத்த ஓவர் அட்வைஸ், அன்ட் ஹரிணி கூட என்னை தப்பா பார்த்தா… அதெல்லாம் உனக்கு தெரியுமா? எல்லாம் சேர்ந்து புரட்டி போட்டே, என்னை உன்கிட்ட பேச விடல… நான் இங்கே வந்ததும் உன்கிட்ட சாரி கேக்கனும்னு நினைச்சிருந்தேன் ஆனா எல்லாமே தலைகீழா மாறிபோச்சு!” ரசனையாகக் கூறி முகம் சிவந்து சிரிக்க, அதை வெகுவாய் ரசித்தாள் லக்கி.

“ம்ம்… நீங்க என்கிட்ட சாரி கேக்கிறவர்னு நம்பிட்டேன். அதான் பாக்குறேனே உங்க லட்சணத்த…” குறைவில்லாத கிண்டலில் இறங்கிய பொழுதெல்லாம் காதலின் உதட்டுச் சுவை பரிமாறிக் கொள்ளப்பட்டன.

“இனிமே கவனமா இருடா… போனது போகட்டும். நம்ம பேபி எங்கே இருந்தாலும் நம்மகிட்ட வந்து சேருவாங்க” பன்மையில் கூறியவனை கேள்வியாய் பார்த்தாள் லக்கி

“நம்ம வீட்டுல நிறைய குழந்தைங்க இருக்கணும் மின்னி. தனியா வளர்ந்த கொடுமை நம்ம ரெண்டு பேரோட முடியட்டும். அட்லீஸ்ட் நாலு குழந்தைங்க… ஓகேவா மின்னி?” கனிவாய் கேட்டு குறும்பாய் சிரித்தான் அமிர்.

“இந்த காம்பவுண்ட் வால் தாங்குமான்னு யோசிக்கவே மாட்டீங்களா பாஸ்? இஷ்டத்துக்கு பிளான் போடுறீங்க?” திருதிருத்தவளின் வயிறு, அப்பொழுதே கலவரம் கொள்ளத் தொடங்கியது.

“அதுக்கென்ன… பில்டிங் மட்டுமல்ல பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்க் ஆக்க வேண்டியது என் பொறுப்பு. யாமிருக்க பயமேன்!” அருள்வாக்கு கூறியவன் மனைவியின் தோள் அணைத்தே தைரியப்படுத்தினான்.  

“இதுல கூட நான் முடிவெடுக்க கூடாதா?” அலுப்புடன் கேட்க,

“அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேனே மின்னி! பின்ன எதுக்கு வேண்டாத யோசனைக்கெல்லாம் நீ போற?” கணவனின் வாய்மொழியை கேட்டவளின் மனம் இது கனிவா, காதலா, கண்டிப்பா, அடிமைத்தளையா எனப் புரியாமல் தவித்தது.

ஊட்டியில் இருந்த மூன்று நாட்களில் லக்கியை நொடிநேரமும் தன்னை விட்டு அகல விடாமல் பார்த்துக் கொண்டான் அமிர். முன்னை விட மனைவியிடம் அமிருக்கு பிரியமும் காதலும் போட்டி போட்டுக் கொண்டு எடை ஏறிக் கொண்டிருந்தது. லக்கிக்கும் அப்படியே!

எல்லாம்… எல்லாம், அமிர் வெளிநாட்டில் தனது வாழ்விடத்தை மாற்றிக் கொள்ளப் போவதாக கூறும் வரை மட்டுமே! அதன் பின்னே அவனது கோபமும் அவளது உரிமைச் சாடலுமே தர்க்கத்தை ஊதிப் பெரிதாக்கின.

வெளியுலகில் படித்தும் கேட்டும் அறிந்த பெண்ணிய வர்க்க பிரசங்கங்கள் எல்லாம் லக்கியின் மனதில் கொள்கைகளாக விரிய அங்கே போடப்பட்டது பிரிவிற்கான அஸ்திவாரம்.

“இன்னும் மூனு மாசத்துல ஜெர்மன்ல நாம செட்டில் ஆகப் போறோம் மின்னி! அதுக்கு தயாராகிக்கோ. உனக்கு தேவையான திங்க்ஸ் வாங்கி பேக் பண்ண ஆரம்பிச்சுடு, இந்தா என்னோட் ஏடிஎம் கார்ட்.” சாதரணமாய் கூறியவாறே அமிர், பண அட்டையை கொடுக்க, புரியாமல் பார்த்தாள் லக்கி.

சித்தப்பா குடும்பத்தினரும் அவளிடத்தில் இதுவரையில் சொல்லவில்லை என்பதை விட, அதை பற்றி பேசுவதற்கு இவள் வீட்டில் இல்லை என்பதே உண்மை.

நாளை அமிரின் பயண நாளாக இருக்க, இவனோ இன்று இரவுதான் இந்த விசயத்தை பற்றி மனைவியிடம் தெரியப்படுத்துகிறான். இதில் யாரைச் சொல்லி யாரை நோக?

தனது தொழிலின் மாற்றத்தினைக் கூறி அதற்கு தகுந்தாற்போல வீட்டையும் விற்க ஏற்பாடு செய்து விட்டதாக அமிர் கூறியதைக் கேட்டதும் அத்தனை ஆத்திரம் வந்தது லக்கிக்கு.

“ஏன் சாகர்… என்னை மனுஷியாவே பாக்க மாட்டீங்களா? உங்களோட நானும் செட்டில் ஆகணும்ன்னு தெரியுற உங்களுக்கு, என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு இந்த ஏற்பாட்டை செய்யணும்னு தோணலையா?” மனம் கொதித்துப் போய் கேட்டாள் லக்கி

“நீ இங்கே இருந்து என்னத்த கிழிக்கிறேன்னு உன்கிட்ட நான் கேட்டு செய்யணும்னு சொல்ற? என்கூட வான்னா நீ வரப்போற… பின்ன என்னடி தேவையில்லாத பில்டப்ப உனக்கு நீயே குடுத்துக்கிற?” வெகு அலட்சியத்துடன் பேசினான் அமிர்.

“ஏன் உங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ப்ரோஃபசன் இருக்காதா, அல்லது இருக்கக் கூடாதா? எப்பவும் நீங்க சாவி குடுக்குற பொம்மையா மட்டுமே நான் நடமாடணுமா?” தாங்க முடியாமல் கேட்க முகம் சுளித்தான் கணவன்.

“இதபாரு ஒரே இடத்துல இருந்து பார்க்குற மாதிரி  வேலையை மாத்திக்கோன்னு நீ, உங்கப்பா, சித்தாப்பான்னு  எல்லாரும் சொன்னதாலதான் இந்த வேலையை நான் கேட்டு வாங்கி இருக்கேன். இப்ப திரும்பவும் நீ முடியாது அதுஇதுன்னு சொன்னா சரிதான் போடின்னு சொல்லி போயிட்டே இருப்பேன்.” கனலை வாரியிறைக்க உடைந்து போனாள் லக்கி.

“இதுக்குதான் இந்த மூனுநாள் உருகி உருகிப் பேசி என்னை குளிர வச்சீங்களா?” ஆற்றாமையுடன் கேட்க, பல்லைக் கடித்தான் அமிர்.

“நான் ஒன்னும் வேஷம் போடல மின்னி! அதே நேரத்துல  பொண்டாட்டி பின்னாடி சுத்துற பைத்தியக்காரன்னும் என்னை ஈசியா நினைக்காதே! இன்னும் மூனு மாசம் டைம் இருக்கு. நல்லா யோசனை பண்ணு. எனக்கும் வொர்க் லோட் ஹெவியா இருக்கு. சோ, என்னாலயும் இடையில இங்கே வர முடியாது. நெக்ஸ்ட் டைம் நான் வரும்போது உன் முடிவை தெளிவா சொல்லு. ஆனா, என் முடிவு மாறவே மாறாது.” அழுத்தம் திருத்தமாக உறுதியுடன் கூறிச் சென்றான் அமிர்தசாகர்.

 

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே

முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது.

விளக்கம்

நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!