சில்லென்ற தீப்பொறி – 14

சில்லென்ற தீப்பொறி – 14

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே

ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே

இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்

செய்வது செய்தல் இனிது.

விளக்கம்

மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

சில்லென்ற தீப்பொறி – 14

மறுநாளின் விடியலில் சற்றுக் கடினப்பட்டே கண் விழித்தாள் லக்கீஸ்வரி. புது இடத்தின் சீதோஷண நிலை அவளை முற்றிலும் முடக்கிப் போட்டிருந்தது. 

ஏனோ அவளுக்கு எழுந்து கொள்ள மனம் வரவில்லை. குளிருக்கு இதமாய் கணவனின் மார்போடு ஒட்டிக்கொண்டு சுகமாய் தூங்க வேண்டுமென ஆசைப்பட்ட மனதை கடிவாளம் போட்டே அடக்கினாள்.

இனி எந்த சந்தர்ப்பத்திலும் அவன், தன்னை அணுக அனுமதிக்க கூடாது என்ற மிக உறுதியான தீர்மானத்தை, நேற்றைய இரவின் குதர்க்கப் பேச்சிற்கு பின்னே எடுத்திருந்தாள்.

உயிரே போனாலும் உரிமைப்பாட்டை பாடி வந்தாலும் சகித்துக் கொள்ளக் கூடாது என இவள் எடுத்த தீர்மானத்தை பலமுறை தனக்குள் கூறிப் பலப்படுத்தியும் கொண்டாள். 

ஒரு வழியாக எழுந்து காலைக்கடன் முடித்து காஃபியும்  தயாரித்து வைக்க, அமிர் குளித்து முடித்து ஜம்மென்றே தயாராகி வந்தான். ‘கடமையாற்றுவதில் கர்மவீரன்தான்.’ மனதிற்குள் கணவனை மெச்சிக் கொண்டவாறு, அவன் கைகளில் காஃபி கோப்பையை திணிக்க, அன்றைய நாளின் மண்டகப்படி ஆரம்பமானது.

“உன் கையால சொட்டு தண்ணி கூட வாங்கிக் குடிக்ககூடாதுன்னு முடிவெடுத்து இருக்கேன். இனிமே எனக்காக செஞ்சு, என் காசை கரியாக்காதே!” அமிர்தசாகர் அதிராமல் உத்தரவைப் போட,  லக்கிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

“என் தேவையை நானே பார்த்துக்கணும். என் கையால செஞ்சதை எடுத்துக்க மாட்டீங்கன்னா… எதுக்கு என்னை இங்கே வரச் சொல்லணும்? பெரியவங்க முடிவு பிடிக்கலன்னு சொல்லி, உங்க ஆசைப்படியே இருந்திருக்கலாமே! என்னையும் சேர்த்து ஏன் அலைகழிக்கணும்?” பொருமலுடன் கேட்க, அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான் அமிர்.

“நான் கூப்பிட்டு, எனக்காகவா நீ வந்த? உன் அப்பா சொல்லி, நீதான், என்னைத் தேடி வந்திருக்க… தானா கைக்கு வந்த பொருளை, பத்திரமா பாதுகாத்து வைச்சுக்கற கடமை எனக்கிருக்கு. அதைத்தான் நான் இப்ப செஞ்சிட்டு இருக்கேன்.

நேத்து நீ வந்து இறங்கினதுல இருந்து, நைட் உன்னை நல்ல்ல்லாவே கவனிச்சு தூங்க வைக்கிற வரைக்கும் பக்காவா செஞ்சு முடிச்சிட்டேன். இதெல்லாம் பிடிக்கல… இங்கே இருக்க இஷ்டம் இல்லன்னா, இப்பவே நீ கிளம்பலாம். பாவம் பார்த்து உனக்கு டிக்கெட் கூட போட்டுக் குடுக்க மாட்டேன்டி! எப்படி வந்தியோ அப்படியே போய்ச் சேரு!” பழி வாங்குபவனாக வஞ்சக வார்த்தைகளில் முழங்கியவனை கொன்று போடும் ஆத்திரம்தான் வந்தது லக்கிக்கு.

“இப்படி குதர்க்கமா பேசிப் பேசியே என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறீங்க! இந்த பேச்சுக்கு பயந்துதான், என்னை நானே மொத்தமா மறந்து போயிடுறேன். இப்படியெல்லாம் பேசி என்னைப் பழி வாங்கியே ஆகணுமா?” கொதித்துப் போய் கேட்டாள் லக்கி.

“புருஷன் தேவையில்ல, அப்பன்தான் முக்கியம்னு சொல்ற உன்கிட்ட, வேற எப்படி பேசச் சொல்ற? உன் பேரைச் சொல்லி கூப்பிடக் கூட எனக்கு வெறுப்பா இருக்கு.” தீக்கங்குகளை திவ்வியமாய் கக்கினான் அமிர்.

பொறுமை பறந்து விடும் நொடிகளில், நரம்பில்லா நாக்கும் வலுவோடு தனது வேலையை பார்த்து விடுகின்றது. தறிகெட்ட வார்த்தைகள் பொறி தட்டிப் பறக்க, சரிக்கு சரியாக நின்றாள் லக்கீஸ்வரி. தன்னிரக்கத்தில் வீழ்ந்த மனமும் மிரண்டு எழுந்து கொண்டது.

“நீங்க சொல்ற மாதிரியே, என்னோட எல்லா செயலும் என் அப்பாவுக்காக மட்டுமே இருந்துட்டு போகட்டும். அப்படியாவது நான் ஒருத்தருக்கு விசுவாசியா இருக்கேன். ஆனா, நீங்க… உங்களையே நம்பி வந்தவள குத்திக் கொல்லாத குறையா பேசியே சாகடிக்கிறீங்களே!

இப்படி பேசித்தான் உலகம் முழுக்க சுத்தி வியாபாரத்தை வளைச்சு போடுறீங்களா? உங்க மனசு போலவே என் வழிய நானே பார்த்துக்கறேன். உங்களுக்கு தொந்திரவா, உங்க வழிக்கு நான் வரல. ஆனா, என்னை அடிமையா மட்டும் நடத்தாதீங்க!” ஆற்றாமையும் கோபமும் போட்டி போட பொங்கியவளின் கோரிக்கை என்னவென்று அமிருக்கு விளங்கவில்லை.

“புரியல… அப்படியென்ன, உன்னை கட்டி வச்சா கொடுமைபடுத்துனேன்?” கடினக் குரலில் இவன் கேட்க, அசராமல் பதில் அளித்தாள் லக்கி.

“நேத்து ஹவுஸ் அரெஸ்ட்டா வீட்டுக்குள்ள என்னை பூட்டி வச்சுட்டு போயிட்டீங்களே! அதை நான் எப்படி எடுத்துக்க? எதுக்காக அப்படி செஞ்சீங்க?” கரகரத்த குரலில் கேட்க, இகழ்ச்சியாய் முகம் சுளித்தான் அமிர்.

“உன் உயிருக்கும் உன்னோட மூனு வேளை சாப்பாட்டுக்கும் மட்டும்தான் என்னால உத்திரவாதம் குடுக்க முடியும். மத்தபடி நீ வெளியே போனியா, வந்தியா… பத்திரமா இருக்கியான்னு எல்லாம் என்னால கவலை பட்டுட்டு இருக்க முடியாது.

இதெல்லாம் உடைச்சு சொன்னா, வீட்டுல இருந்து, திரும்ப ஒரு பஞ்சாயத்து வைப்பீங்க! அதுக்கெல்லாம் வந்து நிக்க எனக்கு நேரமில்ல, அவசியமும் இல்ல. நான் இப்படிதான். என் கன்ட்ரோல்ல இருக்கிறதா இருந்தா மட்டுமே, இங்கே இரு! இல்லன்னா உன் வழிய பார்த்து பொட்டியக் கட்டிக்கோ!” இலகுவாகக் கூறிக்கொண்டே அவன் நகர முயற்சிக்க, முன்னே வந்து நின்று கை கொண்டு தடுத்தாள் லக்கி.

“இந்த அழகுக்குதான் என்கூட வா… உன்னை படிக்க வைக்கிறேன், அப்படி இப்படின்னு சொல்லி கூப்பிட்டீங்களா?” அழுத்தமாக மனைவி கேட்க, அதற்கும் அனல் பார்வையை பரிசளித்தான் கணவன்.

“ஒரு தடவை சொன்னா மண்டையில ஏத்திக்க மாட்டியா நீ? நான் கூப்பிட்டதும் என் பொண்டாட்டியா வந்திருந்தா, உன்னை ராணியா நெஞ்சுல தாங்கி இருப்பேன். நீ, உங்கப்பனுக்கு பொண்ணா வந்திருக்கடி! அவர் ஆசைப்பட்டபடி அவர் மருமகன் கூட குடும்பம் நடத்தலாம்.

அதுக்கெல்லாம் ஓரவஞ்சனை பண்ண மாட்டேன். வேற எந்த கரிசனத்தையும் என்கிட்டே இருந்து எதிர்பார்க்காதே!” ஒரேடியாக அவளைத் தலை முழுகியவனாக பாறாங்கல்லை மனதிற்குள் ஏற்றிவிட்டு, மீண்டும் வீட்டின் முன்புறம் பூட்டு போட்டுவிட்டு சென்று விட்டான் அமிர்.

திக்குத் தெரியாத காட்டில் பீதியுடன் நின்றாலும் சுவாசிக்க காற்று கிடைக்கும். ஆனால், இந்த நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடக்கும் போது, பூமியோடு புதைந்து போன நிலையில் விதிர்விதித்துப் போனாள் லக்கி.

அவ்வளவு தானா? மூன்று முடிச்சு பந்தம், மஞ்சள் கயிற்றின் மகிமை என்று சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை அலங்காரத்திற்கு மட்டுமா! இப்படி எல்லாம் ஆணின் கைச் சிறைக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்தே தான் ஆக வேண்டுமா? இந்த கருமத்திற்கு உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன?

சுயபச்சாதாபம், மன அழுத்தத்தில் தள்ளி விட, வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து துவம்சம் செய்து விடும் ஆத்திரம் வந்தது லக்கிக்கு.

படபடத்த மனதை கட்டுப்படுத்த முடியாமல், பரபரத்த உடலை அடக்கிக் கொள்ளும் வழி புரியாமல் குளியறைக்குள் சென்று தண்ணீரை திறந்து விட்டு ஷவரின் அடியில் நின்று கொண்டாள்.

‘இப்படியே ஜன்னி கண்டு உயிர் போனாலும் போகட்டும். அப்படியாவது இந்தக் குடும்பத் தளையில் இருந்து தனக்கு விடுதலை கிடைக்கட்டும்.’ மனதில் எழுந்த விரக்தியுடன் குளிரில் வெடவெடத்தபடி குளிர்ந்த நீரில் முழுதாய் நனையத் தொடங்கினாள் லக்கீஸ்வரி. 

அவசர கோலத்தில் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வந்த அமிர்தசாகர், வழமையான உலக நியதியாக தனது அலைபேசி மற்றும் மடிக்கணினியை மறந்து விட்டு கிளம்பி இருந்தான்.

அலுவலகத்திற்கு செல்லும் வழியில் நினைவிற்கு வந்து மீண்டும் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல, விடாமல் தண்ணீர் விழும் சத்தம் அவனைத் துணுக்குற வைத்தது.

“ஏய் உள்ளே என்ன பண்ற? வெளியே வா! உன் இஷ்டத்துக்கு தண்ணியை கொட்ட, இது என்ன உங்கப்பன் வீடுன்னு நினைச்சியா?” கோபத்துடன் அழைத்தாலும் பதிலும் இல்லை, கதவும் திறக்கப்படவில்லை.

‘ஏதோ சரியில்லை.’ என உள்மனம் உறுத்த, ஆங்காரத்தில் மீண்டும் கத்தி அழைத்தவன், தன் பலம் கொண்டு கதவில் நான்கைந்து முறை சென்று மோத, தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்து கொண்டது.

அங்கே நீரில் நனைந்த வெடவெடத்த கோழியாக, உடல் விறைக்க தரையில் மல்லாந்து விழுந்திருந்தாள் லக்கி. அரைகுறை மயக்க நிலையில் இருந்தவளை கன்னம் தட்டி, உடலை உலுக்கியே சுயநினைவிற்கு கொண்டு வருவதற்குள் அல்லாடி விட்டான் அமிர்.

‘கொஞ்சினா மிஞ்சுவ… திரும்பி பார்க்க வேணாம்னு நினைச்சா, கழுத்துக்கு கத்தியா வந்து உசுர வாங்குற! ச்சே… நீ எல்லாம் அடிபட்டாலும் திருந்தாத கேசு!’ மனதிற்குள் வசைபாட்டை பாடிக்கொண்டே கொண்டே, அவளை தூக்கி வந்து படுக்கையில் விட்டான்.

விரைவாக ஆடைகளைக் தளர்த்தி மாற்றி விட்டு, வீட்டில் உள்ள மாத்திரையை அதட்டியே முழங்க வைத்தான். அதனோடு குளிருக்கான மருந்தையும் கொடுத்து உறங்க வைத்தான்.

ஜெர்மனுக்கு வந்த புதிதில் குளிர் தாங்குவதற்கும் உடல் அசதிக்கும் என தனக்காக வாங்கி வைத்த மருந்து, வீட்டில் இருக்க அதையே கொடுத்து விட்டு பெருமூச்சு விட்டான். மருந்தின் வீரியத்தில் காய்ச்சல் வராமல் நிம்மதியாக உறங்கலாம் என தெரிந்து வைத்திருந்ததால் மனதை திடப்படுத்திக் கொண்டு தனது அலுவலகத்திற்கு கிளம்பினான் அமிர்.

அரைநாள் விடுப்பு எடுத்து வரவேண்டும் என்ற முடிவில் பணிக்கு சென்றவன், மதியம் கடந்ததும் வீட்டிற்கு வந்துவிட, அப்போதும் லக்கியின் தூக்கம் கலைந்திருக்கவில்லை. குளிரின் ஒவ்வாமையால் சிவந்த தடிப்புகள் தேகம் எங்கும் வட்டம் போட்டிருக்க, உடல் முழுவதும் சற்றே வீக்கமும் கண்டிருந்தது.

டாக்ஸியை வரவழைத்து ஒருவழியாக அவளை எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். இரண்டு நாட்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட, ஓரளவிற்கு தேறி வீட்டிற்கு வந்தாள் லக்கி.

அந்த இரண்டு நாட்களில் வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி மூலமாகக் கூட மகள் பேசவில்லையே என அரற்றிய ரெங்கேஸ்வரன், நடேசனை விட்டு அமிரிடம் பேச வைத்தார்.

“என்கூட இருன்னு அவளை அனுப்பிட்டு, எதுக்கு திரும்ப ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க? இடைஞ்சல் பண்ண மாட்டோம்னு கோர்ட் மூலமா எழுதிக் கொடுத்ததை தண்ணியில கரைச்சு விட்டுட்டீங்களா? இல்ல, என் மேல நம்பிக்கை விட்டுப் போச்சா! உங்க வீட்டுப் பொண்ணு உசுரோட இருக்காளா, இல்ல சமாதியாகிட்டாளான்னு வந்து பார்த்துட்டுப் போங்க!” அவளது பின்னடைவுகளை தெரிவிக்காமல், தன் பாணியில் பதில் கூறி வைத்தான்.

இருக்கின்ற கடுப்பை எல்லாம் கனலாக பெரியவர்களின் மேல் கொட்டியவனின் மனம் அத்தனை எளிதில் சாந்தமடையவில்லை. ‘இவள் வந்த பொழுதில் இருந்தே என் நிம்மதி போயிற்று. என்னை கொலைகாரன் ஆக்காமல் விட மாட்டாள் போலிருக்கிறது.’

அவனைப் பொறுத்தவரை மனைவியின் மேலுள்ள வெறுப்பு நூற்றியைம்பது சதவீதம் கூடிப் போனதைப் போல் முடிவு செய்து கொண்டான். மனைவியை கரித்துக் கொண்டே அவளை கவனமாய் பார்த்துக் கொண்டான். இரண்டு நாட்கள் மருத்துவமனையிலும், அடுத்த இரண்டு நாள் வீட்டிலும் இவனது கவனிப்பு பலமாக இருந்தது.  

மூன்றாம் நாள் ஒருவழியாக எழுந்து நடமாட ஆரம்பித்தாள் லக்கீஸ்வரி. உணர்ச்சி வசப்பட்டு தான் மேற்கொண்ட அதிகப்படியான செய்கையில் அவளுக்கே தன் மீது ஆத்திரம் வந்தது. அதன் காரணமே கணவனின் முகம் பார்க்கவும் அஞ்சி, அமைதியாக இருந்தாள்.

இவள் எழுந்து நடமாடவும், அமிர் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். வீட்டில் வழக்கம் போல இன்ஸ்டன்ட் உணவு வகைகள் மட்டுமே இருக்க, நாக்கு வக்கணையான உணவிற்கு ஏங்கியது.

‘இந்த ஒரு வாரத்துக்கே நம்ம நாக்கு ருசி தேடுதே…  இப்படி காய்ஞ்சு போயி வர்றதாலதான் வீட்டுல இருக்கும் போது வக்கணையா வேணும்னு சட்டம் போடுறாரோ? இவர் எங்கே, என்ன சாப்பிடுறார்னு கூட நான் கேட்டுத் தெரிஞ்சுக்கல! இவ்வளவு ஏன், இவரோட மொபைல் நம்பரை கூட கேட்டு வாங்கி வைச்சுக்கல. மொதல்ல அதைச் செய்யணும்.” மனதோடு பல ஒத்திகைகளைப் பார்த்துக் கொண்டு கணவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

உடல்நிலை பின்னடைந்த பொழுதில் இருந்தே கணவனது பேச்சிலும் சிறிது காரம் குறைந்திருந்தது. அவனது அந்த அமைதியே இவளுக்கு பெருமளவு நிம்மதியைக் கொடுத்திருக்க, பூட்டிய வீட்டிற்குள் சகஜமாக நடமாடத் தொடங்கினாள்.

ஏறக்குறைய நடுநிசியைத் தொட்ட வேளையில் வீட்டிற்குள் நுழைந்தவனை உற்றுப் பார்த்தாள் லக்கி. அதிகமாக சிவந்திருந்த கண்களைக் கண்டு, பல யோசனைகள் இவளது மூளையைக் குடைந்தது. ஏனோ இங்கே வந்ததில் இருந்து இப்படித்தான் இருக்கிறான்.

எதுவும் பலவீனமோ, ஒவ்வாமையோ என அஞ்சிய மனதோடு, “ஏன் உங்க கண்ணு இவ்வளவு சிவப்பா இருக்கு?” கேட்டபடி அருகில் வந்தவளை தள்ளி நிறுத்தினான் அமிர்.

“டேப்லெட் போட்டு படுக்காம, இங்கே என்ன வேலை உனக்கு?” அதட்டலை குரலில் வரவழைத்துக் கொண்டே கேட்டான்.

“உங்ககூட கொஞ்சம் பேசணும். நீங்கதான் காலையில எழுந்ததும் அரைமணி நேரத்துல கிளம்பி போயிடுறீங்களே! நான் எப்போதான் உங்ககிட்ட பேசுறது?” தயக்கமின்றியே பேசத் தொடங்கினாள் லக்கி.

“பாருடா! என்கூட பேசவெல்லாம் உனக்கு விசயம் இருக்கா? ரம்பமா போட்டு அறுக்காம சட்டுன்னு பேசி முடி!” என்றவன் செய்தித்தாளின் பக்கங்களை புரட்டுபவனாக முகத்தை மூடிக் கொண்டான்.

“என் முகத்தை பார்த்து பேசவும் பிடிக்கலையா? இவ்வளவு வெறுப்பு எதுக்கு என்மேல?” அனுசரணையாய் இவள் கேட்கவும்,

“ம்ப்ச்… விஷயத்தை சொல்லு, எனக்கு தூக்கம் வருது.” தலைகுனிந்தபடியே பேசினான் அமிர்.

“என் மொபைல்ல நெட்வொர்க் கவரேஜ் சரியா கிடைக்கல. ஆன்லைன்ல ஆர்டர் போட்டு எனக்கு தேவையான திங்க்ஸும் வாங்க முடியாம, அவசரத்துக்கு யார் கூடவும் பேச முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க மொபைல் நம்பரை எனக்கு குடுங்க!

இங்கே எந்த நெட்வொர்க் நல்லா இருக்கும்னு சொல்லுங்க. நானா வெளியே போயி வாங்கிக்கிறேன். நீங்க என் கூட வந்தா பெட்டரா இருக்கும்தான். ஆனா, நான் கூப்பிட்டா எப்படியும் வரமாட்டேன்னு நீங்க முறுக்கிட்டு நிப்பீங்க!” தன்போக்கில் இஷ்டத்திற்கு அவள் பேசிக்கொண்டே வர, அதுவே அமிர் கோபம் கொள்வதற்கு அழைப்பு மணியாக இருந்தது.

“லிஸ்ட் இவ்வளவு தானா? இன்னும் இருக்கா!” நக்கலுடன் கேட்க,

“ஏன் கேக்குறீங்க?”

“நான் வீட்டைப் பூட்டிட்டு போன பிறகு, நீ எந்த வழியா குதிச்சு வெளியே போகப் போற?” சிவந்த கண்களில் அழுத்தத்தை தேக்கிக் கொண்டு கேட்க, இவளுக்குள் லேசாய் பயம் துளிர் விட்டது.

“உங்க மின்னிக்காக ஒருநாள் பூட்டு போடாம போக மாட்டீங்களா? தப்பிச்சு போறது, குதிச்சு போற பழக்கம் எல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதுங்க!” இணக்கமாக பேசியவாறே அவன் அருகில் அமர, அன்று நுகர்ந்த அதே ஒவ்வாத வாடை சட்டென்று வந்து தாக்கியது.

“இதென்ன பேட் ஸ்மெல்? குடிச்சிருக்கீங்களா!” தள்ளி அமர்ந்தவள் முகம் சுருக்கிக் கேட்க,

“ஏன், குடிக்கிறவனை இந்த மகாராணிக்கு பிடிக்காதோ? வெளியே போய் பாருடி! இந்த குளிருக்கு ஊத்திக்காதவன் எவனும் இல்ல.” கூறிக்கொண்டே அவளின் தாடையை பிடித்து, முகத்தை அருகில் கொண்டு பார்த்தான்.

“தள்ளிப் போங்க, எனக்கு பிடிக்கல.” கைகளால் வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு திமிற, வீம்பாய் தன்னருகில் இழுத்து அமர்த்திக் கொண்டான் அமிர்.

“பிடிக்க வைச்சுக்கோ! உனக்கும் அதிகமா குளிர் எடுத்தா நீயும் போட்டுக்கோ… ட்ரை பண்றியா? கம்முன்னு தூங்கலாம்.” உடும்பாய் அவளின் கழுத்தில் முகம் புதைக்க ஆரம்பிக்க, பலத்தை திரட்டிக் கொண்டு வீம்புடன் நகர்ந்தாள் லக்கி.

“உங்க ஆசைக்கு நான் ஆள் இல்ல… எனக்காக ஒருநாள் வீட்டை பூட்டமா போங்க! நான் வெளியே போயிட்டு வர்றேன். ப்ளீஸ்!” இறைஞ்சுதலாகக் கேட்க, அவனுக்குள் உல்லாசம் துளிர்த்துக் கொண்டது.

“நான் எப்ப வெளியே கூட்டிட்டு போறேனோ, அப்ப உனக்கு தேவையானத நீ வாங்கிக்கலாம். உனக்காக கூஜா தூக்க நான் இருக்கேன்டி! இப்ப வா, படுக்குற வேலையை பார்க்கலாம்.” லக்கியை இழுக்க, அவளோ பின்னடைந்தாள்.

“ஒரு வாரம் ஆச்சு டி! கமான்…” மீண்டும் கைபிடித்து இழுக்க,

“என் பேர் சொல்லப் பிடிக்காம, என்னை வெறுத்து ஒதுக்கிறவருக்கு இப்ப மட்டும் நான் எதுக்காம்? எனக்காகன்னு நீங்க ரீல் விட்டா, அதை நம்ப நான் தயாரா இல்ல. நான் வரமாட்டேன்.” இவள் கண்டிப்புடன் கூற,

“குடிகாரன் கூட படுக்கறதை கேவலமா நினைக்கிறியா? சரி, இதுலயாவது உன் இஷ்டப்படி இருந்துக்கோ! ஆனா, எப்பவும் இப்படி உன்னை விட்டு வைப்பேன்னு நினைக்காதே!” மர்மச் சிரிப்புடன் கூறி நல்லபிள்ளையாக உறங்கப் போய் விட இவளுக்குதான் நம்ப முடியவில்லை.

தன் விசயத்தில் இவன் எப்பேற்பட்ட ஆட்டக்காரன் என்பதை அனுபவப் பூர்வமாய் உணர்ந்தவளாயிற்றே! உறங்குவதாய் பாசாங்கு செய்கிறானோ என பரிசோதிக்க, பூனை நடை நடந்து சென்று அவன் முகம் பார்க்க நிஜமாகவே உறங்கியிருந்தான் அமிர்.

‘இவரோட பேச்சுக்கு என்னை இழுத்தே, நான் கேட்டதுக்கு ஓகே சொல்லாம படுத்துட்டார். எல்லாம் என் நேரம்.’ தலையிலடித்துக் கொண்டு விதியே என அவளும் உறங்கினாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிந்தது. இவள் வெளியில் செல்ல வேண்டுமென்று சொல்லவும் இல்லை, இவனும் அவளை உறங்க அழைக்கவுமில்லை. குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் லக்கிக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. முதன்முதலாக இருவரும் அருகருகே இருந்தும் தூரமாய் இருந்தனர்.

மூன்றாம் நாள் மாலையில் வீட்டிற்கு வந்தவன், “ஷாப்பிங் போவோமா? உனக்கான செலவை நீதான் பார்த்துக்கணும்.” கடுமையான சட்ட திட்டத்துடன் வெளியே அழைத்துச் சென்றான்.

வண்ண மயமான வீதிகள், ஜொலிக்கும் வணிக வளாகங்கள் என நகரமே கொள்ளை அழகுடன் காட்சியளிக்க, இருவரும் தங்களை மறந்து பார்த்து ரசித்தனர்.

அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போதும் தனக்கு பிடித்தமானதையே வாங்க வைத்தான். அவளது விருப்பம் தவிர்க்கப் பட்டாலும் லக்கியும் அதை பெரிதாக மனதில் கொள்ளவில்லை. எப்படியோ இவன் சகஜமாக இருந்தால் அதுவே போதுமென்று இருந்தது அவளின் மனதிற்கு.

“உன் பணத்தை, யூரோக்கு சேன்ஜ் பண்ணி வைச்சுக்கிட்டியா இல்லையா?” அதிகாரமாய் கேட்டவனிடம் அவளது கையிருப்பைக் கொடுக்க, அதுவோ போதவில்லை என்று அவளுக்கு பெரிய பல்பினை கொடுத்தது.

“கைநிறைய சம்பளத்தை அள்ளிக் கொடுக்குற நாட்டுல விலைவாசியும் குதிரைக் கொம்பாதான் இருக்கும். இப்ப நான் கொடுக்கிறேன். அடுத்து எனக்கு வட்டியும் முதலுமா வந்து சேரணும்.” கந்து வட்டிக்காரனாக மனைவி வாங்கிய அனைத்திற்கும் பணம் கொடுத்து அசத்தினான் அமிர்.

“கையில காசு இல்லாம தனியா வந்து, ஜெர்மனை வாங்கப் போற அளவுக்கு பேச்சு வேற உனக்கு.” உரிமையாக மண்டையில் கொட்டவும் தவறவில்லை.

உண்மையில் அந்த நேரத்தில் லக்கியின் மனதில் சிறு நம்பிக்கை துளிர் விட்டது. இதுபோல எல்லாம் சரியாகிவிடும். குடும்ப வாழ்க்கையின் வெற்றிப் படியினை தொட்டு விடலாமென்ற ஆசையும் மனதில் கூடு கட்டியது.

அந்த மகிழ்வுடன் பொறுப்பான மனைவியாக, “சூப்பர் மார்க்கெட் கூட்டிட்டு போங்க சாச்சு! அட்ஜஸ்ட் பண்ணி சமைக்கிறேன், நீங்களும் வீட்டுல சாப்பிடலாம்.” அமைதியாகச் சொல்ல, அதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து விட்டான்.

“என் வீக் பாயிண்டை டச் பண்ணி, என்னை கவுக்கப் பாக்கறியா? இதுக்கெல்லாம் நான் மசியமாட்டேன்.” கணவன் முறுக்கிக் கொள்ள, விதியே என மௌனித்தாள் லக்கி.

“உனக்கு வேணும்னா இப்ப தமிழ்நாடு தோசை வாங்கித் தர்றேன், சாப்பிடுறியா?” மிக நல்லவனாக, அவளின் ஆசையை தூர் வாரிவிட, வேகமாக சரியென்று தலையசைத்தாள்.

ஆசை மட்டுமல்ல, நாக்கும் வெட்கமறியாது ரோசமின்றி அவளை மயங்கச் சொன்னது. கணவனிடம் முறுக்கிக் கொள்வதை விட அவன் வழிக்கே சென்று மாற்றுவோம் என்கிற திடீர் ஞானமும் தலையை ஆட்டு என அறிவுரை கூறியது.

ஃபுட் கவுண்டருக்குச் சென்று அவளுக்கு தோசையும், இவனுக்காக பழச்சாறையும் வாங்கி வந்தான். கணவனின் கையில் இருந்த இளம் மஞ்சள் நிற திரவத்தை பார்த்தவாறே,

“இதென்ன லைம் ஜூஸா?” லக்கி கேட்க,

“ஆமா… இங்கே கிடைக்கிற லைம் ஜூஸ். உனக்கும் வேணுமா?” கண்சிமிட்டலுடன் அமிர் கேட்க, அப்பாவியாக வேண்டுமென்று தலையசைத்தாள் லக்கி. புது இடத்தை, புது சுவையை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வக் கோளாறில் அவள் எதையும் யோசிக்கவில்லை.

“நீ சாப்பிட்டு முடி, வாங்கிக் தர்றேன்!” என்றவன் சொன்னபடி வாங்கியும் கொடுத்து, “கொஞ்சம் டெஸ்ட் ஒருமாதிரி இருக்கும். வெளியே எடுக்காம குடிச்சிடணும்!” அதட்டலுடன் கையில் திணித்தான்.

ஒரு மிடறு முழுங்கிவிட்டு முகம் சுளித்தவளை, “என்ன சொன்னேன் உனக்கு?” மிரட்டலுடன், அவளின் மூக்கினை இறுக்கப் பிடித்து, வாயினில் பழசரத்தை கவிழ்த்தான்.

இருமிக்கொண்டே முழுங்கி முடித்தவள், “ஐயோ, எதையோ ஒன்னு வாங்கி குடிக்க வச்சுட்டீங்க… உண்மையை சொல்லுங்க என்ன இது?” கேட்டவளின் முகம் அஷ்டகோணலாகிப் போனது.

“ரைஸ்லிங் ஒயின் வித் லைம் மிக்ஸ்டு, குளிருக்கு நல்லா இருக்கும். ஒன்னும் பேசாம அமைதியா வா!” அவன் விளக்கிக் கூறும் போதே லக்கி தள்ளாடத் தொடங்கி விட்டாள்.

“பாவி! குடிகாரா… என்னையும் குடிக்க வச்சுட்டியா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” கோபத்துடன் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து விட்டாள் லக்கி.

“ஒரு அவுன்ஸ் மிக்ஸுக்கு இவ்ளோ எபெக்ட் காட்டுதா உனக்கு?” அமிர் கிண்டலடித்து சிரித்துக் கொண்டே வர, தள்ளாடியபடி இவளும் நடந்து ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

“எனக்கு தலை சுத்துது. போய் குளிச்சிட்டு வரேன்!” என நகன்றவளை தடுத்து,

“உன் தலைசுத்தலை நிப்பாட்ட மருந்து தர்றேன். இந்த நேரத்துல குளிக்காதே!” மனைவியை தடுத்தவன், அடுத்து ஒரு அடர் திரவத்தை கொடுத்து குடிக்க வைத்தான்.

அதற்கு பிறகான பொழுதுகளில் லக்கியின் தள்ளாட்டம் அதிவேகமாய் உயர்ந்து பல பரிணாமங்களைக் காட்டியது. உளறலின் உச்சக்கட்டத்தில் அவளின் நிராசைகள் வரிசை கட்டியது.

கணவனை விட்டுப் பிரிந்திருந்த வேதனையை வெளியில் கொட்டி, உள்ளுக்குள் முகிழ்ந்திருந்த காதலை எல்லாம் தனது செய்கையில், வாய்மொழியில் வெளிப்படுத்த, சந்தோஷ திண்டாட்டத்தில் திக்கு முக்காடி முக்குளித்தான் அமிர்தசாகர்.

எந்த நிலையில் இருக்கிறோம் என்பதே புரியாமல் லக்கி, கணவனின் கன்னத்தில் கன்னம் உரசிக் கடிக்க, சில்லென்று பற்றிக் கொண்ட தீப்பொறியில் இருவருமே குளிர் காய்ந்தனர்.

பிரிவின் ஆற்றாமையைக் கூறி, லக்கி, அவன் விரலை கடித்த நேரமெல்லாம் அவனிடமிருந்து பதிலும் இல்லை கோபமும் இல்லை. காமம் ஊற்றெடுத்த நேரம் அவள் தன்னை வசை மொழிந்து பாடியது எதுவும் அமிரை பாதிக்கவே இல்லை.

நிதானத்திற்கு வந்த பிறகு இருவரும் ஆடப்போகும் ஆட்டத்திற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இரவின் ஆட்டம் களைகட்டியது.

 

 

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே

கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்

புல்லா விடுதல் இனிது.

விளக்கம்

ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனிது.

 

 

 

 

 

   

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!