சூரியநிலவு 7

சூரியநிலவு 7
அத்தியாயம் 7
சூரிய உதயம் ஒரு அழகென்றால், சூரிய அஸ்தமனம் ஒரு அழகு.
பொன்மஞ்சள் சூரியன்! தங்கமாக ஜொலித்து, கடலுக்குள் செல்லும்போது, வானுடன் சேர்ந்து கடல் நீரும் ஜொலிக்கும். அந்த அழகை, காண கண் கோடி வேண்டும்.
அன்றும், அப்படியொரு ரம்மியமான மாலை பொழுது.
நிலாவிடமிருந்தும் பிரதாப்பிடமிருந்தும் வீட்டில் தப்பித்த ஆகாஷ், கடலோரம் வந்து, வேண்டும் என்றே அவர்களிடம் மாட்டிக்கொண்டான். மணலில் அவனைத் தள்ளிய பிரதாப், அவன் மேலேறி அமர்ந்துகொள்ள, நிலா முட்டிப் போட்டு அவர்கள் அருகிலிருந்தாள்.
“நாங்க சண்டை போட்டா, நீ சமாதானம் பண்ண மாட்ட” எனப் பிரதாப், அவன் முகத்திலே, வலிக்காமல் ஒரு குத்துவிடான்.
“எங்களுக்கு நடுவுல வந்தா, உன்ன பந்தாடிடுவோமா? எப்படி எப்படி! முடியைப் பிச்சு, கைல குடுத்துடுவோமா? இப்போ குடுக்கறேன் பார்.” என நிலா, ஆகாஷ் முடியைப் பற்றி ஆட்டினாள்.
வலிக்கவில்லையென்றாலும், வலிக்கிற மாதிரியே ஆகாஷ் அலறினான்.
‘ஹய்யய்யோ! எல்லாத்தையும் கேட்டிடுச்சுங்க போல, ஏதாவது சொல்லிச் சமாளிடா ஆகாஷ், இல்ல உன் உயிருக்கு உத்தரவாதம் இல்ல. உன்னால முடியும், பி ஸ்டராங்(be strong).’ எனத் தனக்கு தானே தைரியமூட்டிக்கொண்டான்.
“என்ன பார்த்தா, உனக்குப் பீப்பா மாதிரியா இருக்கு?” என நிலா, அவன் முடியைப் பிடித்து, ஆட்டோ ஆட்டு என ஆட்டினாள்.
“ச்சச்ச உன்னைப் பார்த்தா, கண்ணு தெரியாதவன் கூடப் பீப்பா சொல்லமாட்டான், நீ என் அழகி” என ஆகாஷ், நிலாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான்.
அவன் கொஞ்சலைச் சகிக்க முடியாத பிரதாப், அவனுக்கு வலிக்கும்படியாகவே ரெண்டு அடி போட்டான்.
“டேய் வேணாம், வலிக்குது அப்பறம்,” என ஆகாஷ் இழுக்க
“அப்பறம் என்ன டாப் பண்ணுவ?” எனப் பிரதாப் கேள்வி எழுப்பினான்.
“ஒண்ணும் பண்ண மாட்டேன். அழுதுடுவேன்” என ஆகாஷ், வடிவேல் ஸ்டைலில்(style) கூறினான்.
அடுத்த நொடி, அங்கே கடலலைகளுக்குப் போட்டியாக, சிரிப்பலை பரவியது.
(அவர்கள் அப்படி தான், ஒரு நொடி அடித்துக் கொள்வார்கள். மறு நொடி சேர்ந்து கொள்வார்கள். ‘சண்டையா நாங்களா?,’ என, ஒரு அப்பாவி பார்வையை குடுத்து, மற்றவர்களைக் கதற விடுவார்கள். அவர்களுக்கு நடுவே செல்லும் நபர்,’ எங்களை ஆளைவிடுடா சாமி’ எனக் கும்பிடுபோட்டு, தலைதெறிக்க ஓடிவிடுவர். அவர்களுக்குள் இருப்பது நெருங்கிய நட்பா, காதலா, அதையும் தாண்டிய உறவா, அவர்கள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.)
சிரித்த முகம் சட்டென்று தீவிரத்துக்கு மாற, “ஏன்டா இரண்டு பேரும், சூர்யாவை போட்டு அடிச்சீங்க? பாவம் அவன்” என்றாள் வருத்தமாக. ஆனாலும் மனதில், ஒரு இதம் பரவத்தான் செய்தது.
கடுப்பாகிய பிரதாப்,“ அவனைச் சூர்யா சொல்லாத.”
“ஏன், அவன் பேரை சொல்லக் கூடாது?” என முறைத்தாள்.
“சொல்லக் கூடாதுனா சொல்லக் கூடாது.” என்றான் உறுதியாக.
நிலா தான் இறங்கி வரவேண்டியிருந்தது, “சரி சொல்லல. தேவ்வை ஏன் அடிச்சீங்க?”
“அவனைப் பத்தி பேசாத. எனக்குப் புடிக்கல”
“அவன் சாதாரணமா தான பேசினான். நீங்க இரண்டு பேரும், ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?” நிலா, இந்த பிரச்னையை இத்துடன் முடிக்க தயாராக இல்லை.
“நிலா அவனைப் பத்தி பேசறதை விடு. வேற பேசலாம்” மீண்டும் பேச்சை மாற்ற முயற்சித்தான் ஆகாஷ்.
“நம்ம படிக்கும்போது, எவ்வளவு பேரோட, பேசிப் பழகியிருப்பேன்? அப்போதெல்லாம் நீங்க இப்படி நடந்துக்கிட்டது இல்லையே. இப்ப மட்டும் என்ன ஆச்சு? அவனை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா” என்றாள் சந்தேகமாக.
“அவனை இப்போது தான், முதல் தடவை பார்க்கிறோம். அவனும் அவன் பார்வையும். கண்னை பிடுங்கி கையில குடுத்திருக்கனும்,” ஆகாஷ் பல்லைக் கடித்தான்.
நிலா ஏதோ சொல்ல வர, அதைத் தடுத்த ஆகாஷ், ”அவன் தப்பா பார்க்கல, அதைத் தான சொல்லவர”
அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைக்க, “அது எங்களுக்கும் தெரியும். அவன் தப்பா பார்க்கலை.” ஆகாஷ்.
“அப்படி பார்த்திருந்தா, இப்ப அவன் உயிரோடவே இருந்திருக்க மாட்டான்.” என்றான் பிரதாப் இறுகிய குரலில்.
அவனின் குரல் மாற்றத்தில், பயந்த நிலா, ‘பின் ஏன்?’ எனப் பார்வையால், ஆகாஷை நோக்கி வினா தொடுத்தாள். பிரதாப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் கரத்தைப் பற்றித் தன்னருகில் அமரவைத்து கொண்டான்.
“அவன் பார்வையில், காதல் இருந்தது, தப்பான எண்ணம் இல்லை, ஆனாலும் ஏதோ தவறா படுது.”
“என்னது காதலா! இன்னமுமா!” நிலாவின் முகம் அஷ்ட கோணலானது.
(காதல்! அவள் வாழ்வில், ஏற்படுத்திய காயம் ஏராளம், அது இன்னமும் ஆறாமல், வடுவாக அவளுள் இருக்கிறது)
அஸ்தமன சூரியனை, வெறித்துக் கொண்டிருந்த பிரதாப்பின் செவிகளில், இந்த வார்த்தை தெளிவாக விழுந்தது. அவன் மூளை கூர்மையானது.
“இன்னமுமா, என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே அவன் உன்னிடம் காதலைச் சொல்லி இருக்கானா?”
மாட்டிக்கொண்ட நிலா, இனி மறைக்க முடியாது என,”காலேஜ் படிக்கும்போது, ஒரு தடவை ப்ரபோஸ் பண்ணினான், நான் மறுத்துட்டேன்” எனப் பாதியை மட்டும் கூறினாள்.
அவள் பார்வையை வைத்தே, அவள் ஏதோ மறைப்பதை, புரிந்து கொண்ட பிரதாப், சந்தேகமாக அவளை நோக்கி
“அவன் வேற எந்தத் தொந்தரவும் தரலையா?”
‘இல்லை’ எனத் தலையசைத்தாள். மறைக்க நினைப்பதை சொல்ல வைக்கமுடியுமா?
“ஏன் அவனை வேண்டாம் சொன்ன?” பல அர்த்தம், அதில் உள்ளடங்கி உள்ளது.
கூரிய பார்வையை அவன்மீது செலுத்திவிட்டு, மறையும் சூரியனில் தன் பார்வையை பதித்து,“வேற என்ன சொல்லி இருக்கணும்? சம்மதம் சொல்லி இருக்கணுமா?”
“என்னமோ, நாங்க அவனை லவ் பண்ண, சொன்ன மாதிரி, எங்களைக் கேட்கற?” பிரதாப் அவளைச் சீண்டினான்.
அவனை நோக்கி, நிலா உஷ்ண பார்வையை கொடுத்தாள்.
“நீ நெற்றிக்கண்ணை திறக்காதே.”
“சரி நான் போய் சம்மதம் சொல்லிடறேன்.”
எங்க ரொம்ப சீண்டினால், லவ் பண்ண கிளப்பிடுவாளோ? என பயந்த பிரதாப்,
“ஹே கூல்(hey cool) பேபி! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”
சமாதானம் ஆகாத அவளை, ஆகாஷ் தன் தோளில் ஆதரவாகச் சாய்த்துக் கொண்டு, “அவனுக்குக் காதல் வந்தது, உன்னோட தப்பு இல்லை. என்ன நடந்தாலும், எதிர்கொண்டு தான் ஆகணும், வேற வழியில்லை.”
அவன் தோளில் இருந்த, தன் முகத்தை நிமிர்த்தி, அவனை நேர்கொண்டு பார்த்து,”என்னோட மனசுல, என்ன இருக்குதுன்னு தெரிஞ்சும், இப்படி பேசுற?”
அவளின் கேள்விக்கு, தன்னால் எந்தப் பதிலையும் கொடுக்க முடியாத ஆகாஷ்.
“விதி ஆட்டிவைக்கற பொம்மைகள் நாம். இப்ப நமக்கு முன்னால் இருக்கிற பிரச்சனையில், இருந்து முதலில் வெளிவருவோம். அப்புறம் இந்தச் சூர்யாவைப் பத்தி யோசிப்போம். என்ன ஆனாலும், நாங்க உன் கூடவே இருப்போம்” என ஆகாஷ், அவளைத் தேற்றி உறுதி கூறினான்.
அவன் பேச்சில் தன்னை திடப்படுத்திக் கொண்டாள் .
பிரதாப்! அவள் மனதை மாற்றும் பொருட்டு, “மணி ஏழுக்கும் மேல ஆகியிருக்கும். வாங்க போய்ச் சாப்பிட்டு, பேக் பண்ணலாம்.”
“ஆறு மணிக்குத் துபாய் ஃபிளைட். PCR test ரிப்போர்ட், ஏற்கனவே வந்துடுச்சு. கோவிட் ராபிட் டெஸ்ட்(rapid test) முடிச்சு போகணும், அதுக்கு நேரமே ஏர்போர்ட்ல இருக்கணும். நிலா எங்க பொருட்களை, ஏற்கனவே ப்ரது எடுத்துவச்சுட்டான். இப்ப உன்னோடதை எடுத்து வச்சுட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு கிளம்பலாம்” என்றான் ஆகாஷ்.
தன் இயல்பிற்கு வந்த நிலா, வீட்டை நோக்கி, அடியெடுத்து வைத்த பிரதாபின் கரம்பற்றி நிற்க வைத்தாள்.
பிரதாப், அவளை நோக்கி, ‘என்ன?’ எனும் விதமாக, புருவத்தை உயர்த்தினான்.
“இல்ல நம்ம கிளம்ப, இன்னும் அஞ்சு மணிநேரம் இருக்கு.” என்றாள் ராகமாக.
“அதுக்கு?” எனக் கேள்வி எழுப்பினர்.
“அது கிளைமேட் வேற சூப்பரா இருக்கு.” என மறுபடியும் இழுத்தாள்.
அவள் எங்கே வருகிறாள், எனப் புரிந்த இருவரும், வந்த சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டு,
“ஆமா, ரொம்ப நல்லா இருக்கு. அதுக்கு இப்ப என்ன?” என்றான் ஆகாஷ்.
“அது பீச் ரோட்ல ட்ராபிக்(traffic) இருக்காது.” எனக் கண்ணைச் சுருக்கி கெஞ்ச
‘அதுக்கு?’ என்ற பார்வையை, மாற்றவில்லை இருவரும்.
‘சரியான கல்லுளிமங்கணுங்க. வாய திறக்கமாட்டானுங்க’ என நிலா, மனதில் தாளித்துவிட்டு. ஈஈ என அணைத்து பல்லையும் காட்டினாள்.
“இல்ல அப்படியே, பைக்ல ஒரு லாங் டிரைவ் போனா, அருமையா இருக்கும். என்னைக் கூட்டிட்டு போங்க.” கேட்டே விட்டாள்.
நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவளின் முகபாவத்தில், வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கி, தங்களின் வேலைப்பளுவை, மனதில் கொண்டு. உடனே மறுப்பு வந்தது பிரதாப்பிடமிருந்து
“என்ன நீ! புரிஞ்சு தான் பேசுறியா; உன்னோட திங்ஸ பேக் பண்ணனும்; அஷ் உன்ன கூட்டிட்டு வந்ததுல இருந்து, இன்னமும் ரெஸ்ட் எடுக்கலை; அவன் கொஞ்சமாவது தூங்கனும்; விடியக் காலையில் ஃபிளைட்;” என இடைவிடாமல் பொரிந்து தள்ளிவிட்டான்.
நிலா ‘பேசு ராஜா பேசு. எவளோ வேணா பேசு. எப்படியும் என் வழிக்கு வந்துதான் ஆகணும்.’ என லுக்கு விட்டுக்கொண்டிருந்தாள்.
“என்ன பார்க்குற! லண்டனுக்கு, டிக்கெட் போட்டா, துபாயில் சுத்தனும்னு அடம். இப்போ துபாய்ல ஒரு வாரம் தங்கணும். அதுக்கு ஹோட்டல் புக் பண்ணனும். இன்னமும் எவளோ வேலை இருக்கு.”
பிரதாப்பின் பேச்சு, முடிவது போலத் தெரியாததால். ஆகாஷை சரணடைந்தாள்.
“அஷ்! நான் உன் செல்ல டார்லிங் தானே. இப்ப விட்டா, மறுபடியும் இப்படியொரு சந்தர்ப்பம், கிடைக்குமான்னு தெரியாது. ப்ளீஸ்” என அவன் தாடையை பிடித்துக் கெஞ்சினாள்.
அவள் சும்மா கேட்டாலே மறுக்கமாட்டான். இதில் ப்ளீஸ், டார்லிங் போட்டுக் கொஞ்சினாள். கிளீன் போல்ட்!
அவளின் கொஞ்சலினால், ஆகாஷின் முக மாறுதல்களை, பார்த்திருந்த பிரதாப், தன் தலையில் கைவைத்து விட்டான்.
“அஷ்! வேணாம் இவ ஜகஜாலகில்லாடி. ஏமாத்திடுவா. நிறைய வேலை இருக்கு.”
“ப்ரது! வேலை எப்பவும் இருக்கத்தான் செய்யும். அவ ஆசைப்படுறால்ல.”
நிலா அப்பாவியா முகத்தை வைத்துக்கொண்டு, ‘ஆமாம்’ எனத் தலை அசைத்துக்கொண்டிருந்தாள்.
அதற்கும் மேல், தாக்கு பிடிக்க முடியாமல் புன்னகை வந்தேவிட்டது.
“ப்ரது! ஒன்னு பண்ணலாம். இப்போ போய்ச் சாப்பிட்டு, நிலா டிரஸ் பேக் பண்ணலாம். அப்பறம் நீங்க இரண்டு பேரும், பைக்ல போங்க. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.”
ஆகாஷ் சொன்னதைக் கேட்டு, துள்ளிக்குதித்த நிலா, “டார்லிங்னா டார்லிங்தான்” எனக் கொஞ்சிவிட்டு, வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.
ஆகாஷை முறைத்த பிரதாப், “எல்லாம் நீ குடுக்கற செல்லம்தான். அவ இப்படி பிடிவாதம் பிடிக்கறா.”
பிரதாப்பை, நமட்டு சிரிப்போடு பார்த்த ஆகாஷ், “நீ ரொம்ப ஒழுங்கு. போடா” என்று கிளம்பிவிட்டான்.
பிரதப்பால் சிரிப்போடு, அவனை முறைக்கமட்டும்தான் முடிந்தது.
மூவரும் சாப்பிட்ட பின், மதுநிலாவின் பொருட்களை, பேக் செய்து முடித்தனர்.
பிரதாப் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை, வீட்டின் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தினான்.
பைக்கை பார்த்த நிலா, குதூகலத்துடன் அதில் ஏறிக்கொண்டாள். அவர்களுக்கு விடை கொடுத்த ஆகாஷ், தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டான்.
பிரதாப்! வண்டியை ஓட்ட, நிலா! அவன் பின், இருபுறமும் கால்களைப் போட்டு அமர்ந்துகொண்டாள்.
இரவு, மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆளில்லா சாலையில் தனியானதொரு பயணம். காற்றின் குளுமை அவர்களைத் தழுவிச் சென்றது.
மிதமான வேகத்தில் வண்டி பயணித்துக்கொண்டிருந்தது.
நிலா ஏதோ சொல்ல, காற்றின் எதிர்விசையால், அவள் பேச்சு அவன் செவியை அடையவில்லை.
நிலா! அவனை நன்றாக நெருங்கி, அவள் உதடுகள் அவன் காதுமடலை உரச, “பேபி இன்னும் வேகமா போ” என்றாள்.
“ஹே ஏற்கனவே எண்பதுல போகுது”
“இன்னும் கொஞ்சம் வேகமா போப்பா” என்றாள் கொஞ்சலாக.
அவன் சற்று வேகத்தை அதிகரிக்க, நிலாவின் விரித்துவிட்டிருந்த கேசமும், அலையலையாய் காற்றில் பறந்து, அவளைப் பேரழகாகக் காட்டியது.
வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, அவள் பிடியின் அழுத்தமும், பிரதாப்பின் மேல் கூடியது. ஒரு கட்டத்தில் தன் கரங்களால், அவனை வயிற்றோடு இறுக அணைத்து, தன் தலையை அவன் முதுகில் சாய்த்திருந்தாள்.
பிரதாப்! வண்டியைச் சட்டென்று நிறுத்தி விட்டான். அவளின் நெருக்கம், அவனில் சில மாறுதல்களைத் தந்திருந்தது. உணர்ச்சிகளின் தூண்டுதலால், அவன் கரங்கள் மெல்ல நடுக்கமுற்றன. அதை உணராத நிலா,
”என்ன ஆச்சு? ஏன் நிறுத்திட்ட?” எனக் கேள்வி எழுப்பினாள்.
கண்களை இறுக மூடி, தன்னை கட்டுக்குள் வைக்க முயன்றான். அவனின் முயற்சி சிறிது வெற்றி பெற்றது.
“ஒண்ணுமில்ல, நீ வண்டி ஓட்டுறயா?”
அவளிற்கு பைக் ஓட்டி, பழக்கம் இருப்பதால், சந்தோசமாக ஒத்துக்கொண்டால். ஆனாலும் தயக்கம் இருந்தது.
“நான் இருக்கன்ல. ஏன் பயப்படுற? வந்து ஒட்டு.” எனப் பிரதாப், அவளிற்குத் தைரியம் கூறினான்.
இப்பொழுது நிலா, வண்டியை ஓட்டப் பிரதாப் பின்னிருக்கையில்.
காற்றில் பறந்த அவள் கேசம், அவன் முகத்தோடு மோதிக் கதை பேசியது.
தனிமை; காற்றின் குளுமை; இரவின் ஏகாந்தம்; அவளிடமிருந்து வந்த, அவளுக்கே உரித்தான மணம்; என அனைத்தும் அவனை வேறு லோகத்திற்குக் கூட்டிச்சென்றது.
அவன் மாயலோகத்தில் மிதந்து கொண்டிருக்க, நிலாவின் கைகளில் வண்டி ஆட்டம் கண்டது. உடனே பூலோகத்திற்கு வந்தான் பிரதாப்.
அனிச்சை செயலாக, தன் வலது கரத்தால், ஹாண்டில்பாரை பற்றி, பிரேக்கை பிடித்த அதே நேரம், தன் இடது கரத்தால், அவளை இடுப்போடு சேர்த்தணைத்திருந்தான். அவன் முன்னுடல் முழுவதும், அவளின் முதுகில் படர்ந்திருந்தது.
தன் பிடியை, விலக்க மனம் இல்லாமல் இன்னும் இறுக்கினான். பயத்திலிருந்த நிலா அதை உணரவில்லை.
“வேண்டாம் பேபி நீயே ஓட்டு எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.
“சரி” என்று வண்டியிலிருந்து இறங்கினான்.
பயம் தெளியாமல், இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்த, நிலா அவனை இழுத்தணைத்திருந்தாள்.
ஏற்கனவே தன் உணர்ச்சிகளோடு, போராடி கொண்டிருந்தவன், இதில் முற்றிலும் தன்னிலை இழந்தான்.
அவனது அனுமதியில்லாமலேயே, அவன் உதடுகள் அவள் உச்சந்தலையில் பதிந்திருந்தது. அவளும் அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.
சட்டென்று தன்னுணர்வு அடைந்த பிரதாப், பேய் துரத்துவது போல,”நீ வண்டியில் ஏறு. மணியாச்சு” எனப் பைக்கை, வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
‘என்ன காரியம் செய்துவிட்டேன்? எது கொடுத்த தைரியம்? அஷ்க்கு தெரிந்தால் என்னைக் கொல்லக்கூடத் தயங்க மாட்டான்? ஏன் இன்று என் சுயத்தை இழக்கிறேன்?’
அவன் மனம் புலம்பிக் கொண்டிருந்தது. அவன் அவஸ்தையைத் தெரியாத நிலா அவனுடன் பயணத்திற்குத் தயாரானாள்.
**************************
அதே நேரம் மதுரையில், வெற்றி தன் முதலிரவு அறையில், ஓவியச்செல்வியின் அருகில் படுத்திருந்தான்.
எந்தக் குழப்பமும் இல்லாமல், நிம்மதியாகத் துயில் கொள்ளும், அவளை விழி அகற்றாமல் பார்த்திருந்தான்.
‘அம்மு நீ ஒரு குழந்தை. உன்னை எப்படி என்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியும்? உன் வாழ்வை கெடுத்துட்டேனோன்னு பயமா இருக்கு’ என மனதோடு பேசிக்கொண்டான்.
அவளை இந்தப் பந்தத்திலிருந்து, விடுவிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டான்.
வெற்றி எடுத்திருக்கும் முடிவால் பாதிக்கப் படப்போவது யார்?
பிரதாப் அவனுக்குத் தோன்றும் உணர்வைப் புரிந்து கொள்வானா?
விடை காலத்தின் கைகளில்