சூரியநிலவு 8

சூரியநிலவு 8

அத்தியாயம் 8

காலை நேரத்து, மிதமான சூரிய ஒளி, முகத்தில் பட்டு,  அவள் தூக்கத்தைக் கெடுத்தது.

“ப்ச்” சலிப்புடன் திரும்பிப் படுத்தாள் ஓவியச்செல்வி.  கண்முன்னே தெரிந்த வெற்றியின் முகத்தைக் கண்டு ‘கனவா? நினைவா?’ என, ஒரு நிமிடம் குழம்பிப் போனாள்.

தன் முன்னால் இருக்கும் உருவம், ‘கனவல்ல நிஜம்’ என புரியவும்,  துள்ளி எழுந்தமர்ந்தாள். தூக்கம்! எங்கோ தூரம் சென்று மறைந்துவிட்டது.

ஓவியாவின் அசைவில், தூக்கம் தடைப்பட்ட வெற்றி,”அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்.  ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்றுவிட்டு, மீண்டும் கனவுலகத்துக்குள் நுழைந்துவிட்டான்.

படபடப்பு சற்று அடங்கவும், நேற்று நடந்த நிகழ்வுகள் அவள் நினைவிலாடியது. ஓவியாவின் மூளை,‘இவன் உன் கணவன்.’ என தெளிவாக எடுத்துரைத்து, அதன் வேலையை மிக சிறப்பாக செய்தது.  கூடவே அவளின் குறும்புப் பேச்சும் தலைதூக்கியது.

‘ஆமா இவரு, வயக்காட்டுல போய் களை எடுத்துட்டுவந்தாரு, ரொம்ப…வும் டயர்….டாயிட்டாரு, ’ என நக்கலடித்தாள்.

வெற்றி, மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லவும்,  இவள் விழிகள், அவனை ரசிக்க ஆரம்பித்தது.  மனம் கேள்வி எழுப்பியது!

‘நான் ஏன் அவனை ரசிக்கிறேன்?  ஏன் நேற்று மேடையில், மதுவின் பெயருடன் வெற்றியின் பெயரை,  பார்க்கவும் கண்கலங்கினேன்? நான் வெற்றியை விரும்புகிறேனா?’ சிந்தனையின் முடிவில், கிடைத்த விடை ‘ஆம்.’

அவளின் மனம் மகிழ்ச்சியடைந்த,  அதே நேரம் வேதனையில் சுருங்கியது.

‘ஒரு வேளை, மது நேற்று செல்லாமல் இருந்திருந்தால்?  நான் எவ்வளவு பெரிய பாவி ஆகியிருப்பேன்? அக்கா கணவனை, விரும்பிய துரோகி ஆகியிருப்பேன்? அந்தத் துரோகத்திற்கு, மன்னிப்பு என்பதே இல்லையே.’ மனம் கவலை கொண்டது.

‘மது! நான் உனக்கு நன்றி சொல்லனும். நீ மட்டும் போகாமல் இருந்திருந்தா, என் வெற்றி எனக்கு கிடைத்திருக்கமாட்டார். இது சுயநலம் தான், இல்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் துரோகத்திற்கு சுயநலம் எவ்வளவோ மேல். உன்னைக் கூட்டிச் சென்றவரை, உன்னுடைய புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். நீ எங்க இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.’  மானசீகமாக மதுநிலாவிடம் உரையாடினாள் ஓவியச்செல்வி.

ஆம்! மதுவுடன், பிரதாப், ஆகாஷ் இருக்கும் புகைப்படத்தை, அனைவரும் பார்த்திருக்கிறார்கள். என்ன மதுவின் பல புகைபடங்களில், இவர்கள் இருக்கும் சில படங்கள், பத்தோடு பதினொன்று எனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் பெரியவர்களின் மனதில் சரியாக, அந்த இருவரின் முகமும் பதியவில்லை. 

நேற்றிருந்த பதற்றத்திலும், அடுத்தடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளிலும்,  மனம் சென்றதால், யாருடைய சிந்தனையிலும், இந்த புகைப்படம் வராமல் போய்விட்டது. பிறகும் பெரியவர்களின் மனஅழுத்தம், இதை மறைத்து வைத்துவிட்டது.

இருவரின் கம்பீரமும் வசீகரமும்! ஓவியாவைக் கூர்ந்து கவனிக்கவைத்தது. அவளின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நேற்றிரவு வெற்றியிடம்,’அதிக நேரம் பனியில் நிற்க வேண்டாம்’ என்று சொல்லி, படுக்கையில் விழுந்த ஓவியச்செல்வியின் மனம், சி சி டிவியில் பார்த்த முகத்தை நினைவுகூர்ந்தது. ‘பரிட்சியமான முகம்,  எங்கே பார்த்திருக்கிறேன்?’ தன் நினைவடுக்கில் தேடியெடுத்தாள்.

அது பிரதாப் இல்லை ஆகாஷாக இருக்க வேண்டும்.  மதுவுடன் லண்டன் கல்லூரியில், ஒன்றாகப் படித்த தமிழ் மாணவர்கள்.

மது ஏன் அவனுடன் சென்றாள்? அவ காதலிப்பது போல் இதுவரை சொன்னதில்லையே? என சிந்தித்த, அதே நேரம்,

‘ஆமா நீ, தினமும் அவள்கூட பேசுன, மாதிரி யோசிக்கற.  அவ லண்டன் போனபின், அவளுடன் இருந்த தொடர்பு குறஞ்சுபோச்சு. அதுவும் கொரோனா வந்து, கடைசி இருபது மாசமா, டிஸ்டன்ஸ் லேர்னிங்ல(distance learning) படு பிஸி ஆகிட்ட. அவகூட பேசுறது சுத்தமா நின்னு போச்சு.

அவ்வளவு சீக்கிரம்,  அவ யாருகிட்டயும், மனசு விட்டு பேசவும் மாட்டா. சும்மா கெத்தா அதிரவிடுவா. இதுல உங்கிட்ட எல்லாம் சொல்லுவாளா. ரொம்ப மனக்கோட்டை கட்டாத.’ அவள் மனம் இடித்துரைத்தது.

தன்னுடைய அறியக் கண்டுபிடிப்பை,(மது யாருடன் சென்றாள்)  உடனே வெற்றியிடம் சொல்ல துடித்தது அவள் மனம். ஆனால் கூண்டு புலியைப் போல், பால்கனியில் அலைந்து கொண்டிருக்கும், அவனிடம் சொன்னால் என்ன ஆகுமோ, என பயந்து, காலையில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளலாம், என முடிவு செய்து உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

இப்போது அதை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் கவனம் வெற்றியை நோக்கித் திரும்பியது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவனின் முகம் இறுக்கமாக இருந்தது.

எப்பொழுதும் குறும்பும் புன்னகையும் ததும்பி,  பசுமையாகக் காட்சியளிக்கும் அவனின் முகம், நேற்றிலிருந்து வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது.

‘வெற்றி!  தூங்கும் போதும் முகத்தை, இவ்வளவு இறுக்கமா வச்சியிருக்கீங்க? மதுவின் மேல், உங்களுக்கு அவ்வளவு விருப்பமா? உங்களை வற்புறுத்தி, இந்த கல்யாணத்தை பண்ணிருக்கக்கூடாதோ? வேற வழி இல்லை, என்ன பண்ண முடியும். உங்க மனசு மாறும் வரை காத்திருக்கிறேன்.’ என மனதோடு பேசிக்கொண்டாள்.

வெற்றி முழிக்கும் முன் குளியலறையில் நுழைந்திருந்தாள்.

ஓவியா ஒன்றை புரிந்து கொள்ளவில்லை, வெற்றியின் இறுக்கத்திற்கு காரணம், அவன் மதுவின் மேல் கொண்ட காதலில்லை, மதுவினால் அவன் ஆண்மைக்கும் கற்பிற்கும் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நினைத்து.

கற்பு பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் உண்டு. 

****************************

லட்சுமி ஒர்கிங்  விமென்ஸ் ஹாஸ்டல்

சென்னையில், வேலை பார்க்கும் வெளியூர் பெண்களின்,  புகலிடம் தான் விடுதி. பெண்களின் பாதுகாப்பிற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் லட்சுமி ஹாஸ்டலின் அறை ஒன்றில், தலையோடு போர்த்தி, நல்ல உறக்கத்தில் இருந்தாள் ஒரு மாது.

அவளுடைய தொல்லைபேசி அழைத்தது.  வரும் அழைப்பு அப்படிப்பட்டது, அவளைப் பொறுத்தளவு தொல்லைபேசி தான். 

தூக்கக் கலக்கத்திலே அழைப்பை ஏற்றிருந்தாள்.

“ஹெ” சொல்லும் முன்னே, அந்தப் புறமிருந்து

“நிலா வந்ததை,  நீ ஏன் என்கிட்டே  சொல்லலை” என்ற குரல் கேட்டது.

“யாருப்பா இது, காலங்காத்தால கூப்பிட்டு மொக்கை போடுறது.  நிலா இரவு தான் வரும். இப்போ போனை வை.” என்றாள் பாதி தூக்கத்திலிருந்த பெண்.

“ஏய் இப்ப நான், அங்க வந்தேன் அவ்ளோ தான்.” எனக் கர்ஜித்தது அந்த குரல்.

குரலை அடையாளம் கண்டுகொண்ட  பெண், அடித்துபிடித்து எழுந்தமர்ந்தாள்.  அலைபேசி எண்ணைபார்த்தாள்.

ஐய்யோ! அவனே தான்.  கொஞ்ச மாசமா இவன்  தொல்லை இல்லாமல் இருந்தேன். மறுபடியும் வந்துட்டானாஎங்க இருந்து இப்ப குதிச்சான்.’  என மனதில் அவனை அர்ச்சித்துவிட்டு,

“சொல்லுங்க சீனியர்!  நான் தூங்கிட்டு இருந்தேன். அதுதான் நம்பரை கவனிக்கல. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு நீங்க பேசி?”  தலையிலடித்துக்கொண்டே அசடுவழிந்தாள்.

“நிலா எப்ப ஊருக்கு வந்தா?  நீ ஏன் என்கிட்டே சொல்லல?” அதே கர்ஜனை.

அடியே  மது என்ன  பண்ணி  தொலைச்ச?  இந்த அரை லூசு, என்ன தூங்கக் கூட விடாம  தொல்லை பண்ணுது’

“மது வந்து பத்து நாள் ஆச்சு சீனியர்.  அவ கல்யாணத்துக்குக் கூப்பிட்டு இருந்தா” என உளறினாள்.

“என்ன கல்யாணமா!  எங்க? எப்போ? ஏன் என்கிட்ட சொல்லல?” என அதிர்ச்சியில் கத்தினான்.

ஹய்யோ உளரிட்டியே வர்ஷூ உனக்கு அறிவேயில்ல  சமாளி டி

“நேத்து மதுரையில், அவளுக்கு, அவ அத்தை பையனோட கல்யாணம். எனக்கே நாலுநாள்,  முன்னாடி தான் தெரியும். வேலை இருந்ததால் நான் போகல.”

“நாலுநாள் முன்னாடி தெரிஞ்சும், நீ ஏன் கிட்ட சொல்லல.”  என எரிந்து விழுந்தான்.

“என்ன நீங்க ரொம்ப பேசுறீங்க. நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?  அவ தான் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டால? அப்பறமும் ஏன் தொல்லை பண்ணுறீங்க?” பொரிந்து தள்ளிவிட்டாள்.

“நிலா எனக்கு மட்டுமே சொந்தம். நான் அவளை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன். அதை ஞாபகம் வச்சுக்கோ. சரி அதை விடு, நேத்து மதுரையில் கல்யாணம்னு சொல்லுற, ஆனா இங்க மால்ல,  அவளை இரண்டு பசங்களோட பார்த்தேன்.”

“எனது மதுவை பார்த்திங்களா?”

மது எக்குத்தப்பா,  எங்கோ இவன் கண்ணுல மாட்டிக்கிட்டா போல. இந்த மூணும் சேர்ந்து(சூர்யா, ஆகாஷ், பிரதாப்) என்ன பண்ணுச்சுங்களோ தெரியலையே? பாவம் மது.

“ஒன்னும் தெரியாத மாதிரி, கேட்டா நம்பிடுவேனா.  நீங்க சேர்ந்து, டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கறதா சொன்னா. அவ சென்னை வந்தது உனக்கு தெரியாதா?”

இப்ப மதுவிற்கு அர்ச்சனை ஆரம்பித்தது,

’ஏண்டி மது! இது உனக்கே நியாமா?  ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை. இவன் கிட்ட என்ன கோர்த்துவிட்டுட்டு, நீ ஊரு சுத்த போய்ட்ட. இவனை எப்படி நான் சமாளிக்க? நீ மட்டும் என் கைல மாட்டு, அப்போ இருக்கு உனக்கு’

“அதுவா சீனியர், அவ கல்யாணத்துக்கு, கூப்பிட்ட அப்பறம் பேசவே இல்லை.”

“சரி விடு, அவ கூட இரண்டு தொடுப்பு சுத்துதே,  அவங்களுக்கும் என் நிலாவுக்கும், என்ன சம்பந்தம்?”

‘என்ன தொடுப்பா! இது அவங்க காதுல விழுந்தது,  அன்னையோட உன் கதை முடிஞ்சது. ம்ம்ம் அந்த பொன்னான நாள் எப்ப வருமோ?’

“அவங்க பிரதாப், ஆகாஷ்.  லண்டனில் பழக்கம். இப்ப அவளுக்கு எல்லாமே அவங்க தான்.” அந்த எல்லாமேவில், அளவுக்கு அதிகமா அழுத்தம் இருந்தது.

அதைக் கவனித்தும், கண்டுகொள்ளாமல், ”அவ கிட்ட,  ஒன்னு மட்டும் சொல்லிவை, என்னைக்கு இருந்தாலும் அவ எனக்குத் தான்.” என உறுதியாகச் சொல்லி தொடர்பைத் துண்டித்தான் சூர்யாதேவ்.

சிறிது நேரம் போனையே,  வெறித்துக்கொண்டிருந்தாள் மேகவர்ஷினி.

‘முன்னையாது பயந்தோம். இப்ப அவளுக்குப் பாதுகாப்பா, இரண்டு பேர் இருக்காங்க.  அவங்கள மீறி, உன்னால மதுவை நெருங்க முடியாது.’ என மனதில் நினைத்து கொண்டாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? எந்த மதுவிற்காக இவ்வளவு ஆதரவு தந்தாலோ? யார் அவளைப் பாதுகாப்பார்கள்  என்று நினைத்தாளோ?

அத்தனை தடைகளையும் மீறி, சூர்யா அவளின் வாழ்வில் நுழைவான். மதுநிலாவே, தன் பாதுகாப்பு கோட்டையை  விட்டு வெளியே வருவாள்.  தானும் அதில் ஒரு பங்கு வகிப்போம் எனத் தெரியாத மேகவர்ஷினி, குளியலறை சென்று விட்டாள்.

**********************

கொலுசின் இனிமையான ஓசையில், உறக்கம் கலைந்த வெற்றி, முதலில் பார்த்தது,  ஓவியாவின் ஓவியமான முகத்தைத் தான்.

மனம் அந்த இனிமையை ரசித்தாலும், அவன் மதிகெட்ட மூளை எச்சரித்தது,’ அவள் ஒரு குழந்தை’ என்று. தலையை உலுக்கி, தன்னை சுயத்துக்குக் கொண்டு வந்த வெற்றி,

“குட் மார்னிங் அம்மு.”

அவன் குரலைக் கேட்ட ஓவியா,  அவனைப் பார்த்து,”வெரி குட் மார்னிங் மாமு” என்றாள்.

“என்னது மாமுவா!!” புதிதான அழைப்பில் குழம்பினான்.

“சும்மா! சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்.”  தலையை ஒரு பக்கம் சாய்த்து, அவனைப் பார்த்துக் கண்ணடித்து, குறும்பாக சொன்னாள்.

அதை ரசித்த மனதை அடக்கி,  அவளை ‘வா’ என ஒரு விரலை ஆட்டி அலைத்தான். அவள் நெருங்கவும்,”இப்படி என்னை கூப்பிடாத. எனக்கு பிடிக்கல” என சொல்லிக் குளியலறை சென்று விட்டான்.

போகும் அவனை, முறைத்துப் பார்த்த ஓவியா,” நீ என்கிட்ட,’மாமு’ சொல்ல சொல்லி கெஞ்சல, இல்லை இல்லை உன்னைக் கெஞ்ச வைக்கல, என் பேரை மாத்திக்கறேன்.” என சவால் விட்டாள். ஆனால் பாவம், அவள் வார்த்தைகள் வெற்றியைச் சென்றடையவில்லை, அவன்தான் கதவை அடைத்து விட்டானே.

ஓவியா சலிப்பாக தலையசைத்துவிட்டு,  அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.

இவள் கீழே சென்ற நேரம், அனைவரும் அங்கே இருந்தனர். அவர்கள் பார்வை ஆராய்ச்சியாக, அவள்மேல் படிந்தது. அவர்கள் பார்வையில்,  இவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது,

”வெற்றி என்னை அடிக்கல்லாம் இல்லை. நான் நல்லா இருக்கேன்.  என்னை நல்லா பார்த்துக்கோங்க.” என தன்னை சுற்றி காட்டினாள்.

கொஞ்சம் இறுக்கம் குறைந்த, பெற்றோர்கள் நால்வரும் சிரித்துவிட்டனர்.

“இப்போ தான் நிம்மதியா இருக்கு, வெற்றி ரொம்ப கோவமா இருக்கவும்,  பயந்துட்டு இருந்தோம்.” ராஜாராம்.

“அவன் நம்ம பையன்,  தப்பா எதுவும் பண்ணமாட்டானு சொன்னேன். நீங்க தான் கேட்கல.” கற்பகம் நொடித்துக்கொண்டார்.

“நேத்து இருந்த சூழ்நிலை,  பயம் இருக்க தான செய்யும்.” சுமி ராஜாவுக்கு ஆதரவாக பேசினார்.

தான் வந்ததிலிருந்து, பேசாமல் இருக்கும் தந்தையைப் பார்த்து,” என்ன ஆச்சு பா? ஏன் ஏதும் பேசமாட்டீங்கறீங்க?” ஓவியா

“மதுவை நினைச்சேன். என்ன பண்ணுறாளோ?  அந்த பையன் எப்படி பட்டவன்னு தெரியல? பயமா இருக்கு.”

மது! தன்னிடம் பேசியதைச் சொல்லலாமா? வேண்டாமா?  என்ற குழப்பத்தில் ராஜாராம், மௌனம் காத்தார்.

கற்பகம், சுந்தருக்கு ஆறுதலாக,”மது புத்திசாலி பொண்ணு.  அவ தப்பான ஒருத்தரை தன் வாழ்க்கைத் துணையா, தேர்ந்தெடுத்திருக்க மாட்டாள். தைரியமா இரு அண்ணா”

“மது, கண்டிப்பா பாதுகாப்பா இருப்பான்னு நம்புவோம். மீனாட்சி அம்மன் நம்மைக் கைவிடமாட்டாள். அந்த பையன் யாருனு தெரியல?” என்றார் சுமி.  மகளின் நலன் பற்றி தெரியவேண்டிய தவிப்பு.

ஓவியா!  இப்போது தன் அரியக்கண்டுபிடிப்பை கூறினாள்,

“மதுவை கூட்டிட்டு, போன பையனை நமக்கு தெரியும்.”

“என்ன?” “உனக்கு எப்படி தெரியும்?” “யார் அது?”  என அனைவரும் கேள்வியை முன் வைத்தனர்.

“பொறுமை, பொறுமை நான் சொன்னது,’நமக்கு தெரியும்’  அப்படினா உங்களுக்கும் தெரியும்.”

“என்ன எங்களுக்குத் தெரியுமா?” அனைவருக்கும் அதிர்ச்சி.

ஓவியா!  தன் கைப்பேசியை எடுத்து, ஏதோ புகைப்படத்தைக் காட்டினாள்.

“ஆம்! இந்த பையன் தான். இவனை பத்தி ஞாபகம் வரலை.  உனக்குத் தெரியுமா?” வரிசையாகக் கேள்விகள் கேட்கப்பட்டது.

ஓவியாவின் கரத்திலிருந்த கைப்பேசியை,  பறித்த வெற்றி அதில் தன் பார்வையை ஓட்டினான்.

ஓவியா பேச ஆரம்பிக்கும் போதே, அங்க வந்த வெற்றியை,  யாரும் கவனிக்கவில்லை.

வெற்றியின் கோபவிழிகள்! ஓவியாவைச் சுட்டெரித்தது.  அது கேட்ட கேள்வி, ‘உனக்கு முன்னவே, அவளை பத்தி தெரிந்தும், ஏன் என்னிடம் சொல்லவில்லை?’

அவன் பார்வையை, எதிர்கொள்ள முடியாத ஓவியா,”எனக்கு அவ இப்படி போவான்னு தெரியாது.  நைட் அந்த மாமாவை, எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அப்ப யோசிக்கும்போது ஞாபகம் வந்தது.”

புகைப்படத்தில் இருந்தவனை, அடையாளப்படுத்திய, அவளின் ‘மாமா’ என்ற சொல்,  வெற்றியைக் கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இப்போது கோபத்தைக் காட்டினால், உண்மை வெளியே வராது, எனப் பொறுமையை கடைப்பிடித்து

‘மேற்கொண்டு சொல்’ என்றான் பார்வையால்.

“அவ லண்டன் போய், கொஞ்ச மாசம் கழிச்சு,  ஒரு நாள் பேசுனப்ப சொன்னா, ‘நம்ம தமிழ் பசங்க இரண்டுபேர், அவ காலேஜ்ல படிக்கறதாவும், அவங்க பேர் ஆகாஷ், பிரதாப்னும். அவங்க அவளுக்கு உதவி செய்றதாகவும் சொன்னா. போட்டோ அனுப்பும் போது இவங்களை பார்த்து இருக்கேன். இப்ப கொஞ்ச மாசமா அவகூட என்னால் பேச முடியால. அவளோ தான் எனக்கு தெரியும்.” ஓவியா முடிக்கும் வரை அங்கே மயான அமைதி.

இப்ப வெற்றியின் பார்வை, பெற்றோர்கள் பக்கம் திரும்பியது.

“எங்களுக்கும் எதுவும் தெரியாது, இப்ப அம்மு சொன்ன அப்பறம் தான் இவங்கள ஞாபகம் வருது.”  கற்பகம், சுமித்ராவின் கூற்று இது.

“அந்தப் பசங்க வசதியான குடும்பத்து பசங்க. அவங்களுக்கு சொந்தமா ஹோட்டல்ஸ், இருக்கறதா சொன்ன ஞாபகம். பேரை யோசிச்சு சொல்லுறேன்.”  என சுந்தர் யோசித்தார்.

“இப்ப மதுவை எங்க தேட சொல்லுறது. நம்ம வேண்டாம்னு போனாலும்,  அவ பாதுகாப்பா இருக்கானு, தெரிஞ்சாதான் நிம்மதியா இருக்க முடியும்.” கற்பகம்.

மனைவியின் வருத்தத்தை, தாங்க முடியாத ராஜா, திடீரென அரிச்சந்திரனின் வாரிசாகி,” மது சென்னையில் இருக்கலாம். பாதுகாப்பா இருக்கலாம்.” வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார்.

அனைவரின் பார்வையும், அவரை குற்றம் சாட்டியது,’ இது அனைத்துக்கும், நீங்க தான் காரணமா?’ என.

‘உணர்ச்சிவசப்பட்டு மாட்டிக்கிட்டேனா?’ என நொந்துபோன ராஜா,” என்ன எல்லோரும், நான் தான் அவளை அனுப்பின மாதிரி பார்க்கறீங்க?”

‘இல்லையா பின்ன?’ அவர்கள் பார்வை மாறவில்லை.

வேறுவழி இல்லாத ராஜா, மதுவுடன் தொலைப்பேசியில், நேற்று நடந்த உரையாடலை பகிர்ந்துகொண்டார்.  தெளிவாக மது சொல்லி தான், வெற்றி, ஓவியாவின் திருமணம், நடந்தது என்பதை மறைத்து.

‘மதுவிடம் கேட்காமல், முடிவு செய்துவிட்டோமோ?’ என அனைவரும் வருத்தம் கொண்டனர்.  இந்த இடைப்பட்ட நேரத்தில், ஆகாஷ், பிரதாப்பின் ஹோட்டல் பேரைக் கண்டுபிடித்திருந்தார் சுந்தர்.

“ஏ எஸ் என் குரூப்ஸ்(ASN groups) இதுதான் அவங்க தொழில்.”

மது இருக்கும் இடம், தெரிந்த அனைவர் மனதிலும் மகிழ்ச்சி.  அதில் வெற்றியை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

“இனி மதுவை பத்தி, யாரும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கறேன் அவளை.”  பற்களுக்கு இடையில் வார்த்தைகளை,  மென்று துப்பினான் வெற்றி.

அவன் குரலில் இருந்தது என்ன, கோபமா?  தோற்றுவிட்ட ஆற்றாமையா? ஏமாற்றப் பட்ட வலியா? 

ஓவியாவின் புறம் திரும்பி,“அவனை மாமா சொல்லாத.”

“அக்காவின் கணவனை,  மாமான்னு தான சொல்லணும்.”

“அந்த ஆகாஷ், ஒருபோதும் என் மதுவின் கணவனாக முடியாது, ஞாபகத்தில் வச்சுக்கோ.”  கர்ஜித்துவிட்டுச் சென்றான்.

மீதி இருந்த அனைவரும்,  விக்கித்து நின்றனர். திருமணம் முடிந்த மறுநாளே, வேறு பெண்ணை,’என் சொந்தம்’ என்று சொன்னால், அது என்ன மாதிரி வார்த்தை.

இதில் ஓவியாவின் நிலையைச்  சொல்லவும் வேண்டுமா?

மதுநிலா! தனக்கு மட்டுமே சொந்தம், என்று சொல்லும் இருவர்!

மதுவை பாதுகாக்க இருவர்!

கடைசியில் மது யாருக்கு சொந்தம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!