சூரியநிலவு 4
சூரியநிலவு 4
அத்தியாயம் 4
ஆகாஷ் மதுநிலா, பயணம் செய்த கார், சென்னை விமான நிலையத்திலிருந்து, ஈ சி ஆரில் உள்ள, ASN குரூப்ஸ்க்கு சொந்தமான, கடற்கரை பங்களாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
காரில் கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. மது அந்த காலை நேரத்து, கடல் ஈரக்காற்றை, மிகவும் ரசித்து, அந்த பயணத்தை மேற்கொண்டாள். தன் குடும்பத்தைப் பிரிந்த வலியை, சிறிது மறக்க உதவியது, அந்த சூழ்நிலையின் ரம்மியம். மனம் சற்று அமைதி அடைந்தது போலிருந்தது.
கார் ASN பங்களாவின் முன் நின்றது. வெளியே இருந்து பார்க்கும் பொழுது அளவான, அழகான வீடு. முழு இடத்தைச் சுற்றியும் பெரிய மதில் சுவர் (கோட்டைச் சுவர் போல) எழுப்பி, பெரிய இரும்பு கதவுடன் நிமிர்ந்து நின்றது.
காவலாளி, இரும்புக் கதவைத் திறந்துவிட, கார் வழுக்கிச் சென்று , வீட்டு வாசலில் நின்றது.
வீட்டையடையும் முன் மது, இனி கவலைப் படக்கூடாது. நம் கவலை இங்குள்ளவர்களை பாதிக்கும். ஒவ்வொரு நிமிடத்தையும், சந்தோசமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
காரிலிருந்து இறங்கிய மது, தோட்டத்தின் அழகில் தன்னை மறந்து, அங்கயே மயங்கி நின்றாள்.
என்ன அழகு! மதுவின் மனதில் முதலில் பதிந்தது, அந்த தோட்டம்தான். வெகு அழகாக, தோட்டக்காரர் அதைப் பராமரித்திருப்பது, அதன் நேர்த்தியில் தெரிந்தது.
கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில், அங்கு வண்ண வண்ண பூக்களின் அணிவகுப்பு. அதைப் பார்த்தால், அதன் மணத்தை (பூக்களின் மணம்! அந்த ஈரக்காற்றில் பரவி, நம்மை அதனுள் சுருட்டி விடும்) நுகர்ந்தால், மனம் அமைதியாகிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சமையலறை, பின் வாயிலைப் போலிருந்த இடத்தை ஒட்டி நிறையக் காய், கனி செடிகள் வளர்த்திருந்தனர். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் இங்கயே கிடைக்கும் போலிருந்தது. கொஞ்சம் இடைவெளிவிட்டு மரங்கள் நடப்பட்டிருந்தது. என்ன ஒரு ஊஞ்சல் மட்டும் மிஸ்ஸிங்.(தேவை)
ஆகாஷ், காரை நிறுத்தி விட்டு வரும் வரை மது சுயநினைவின்றி தோட்டத்தில் லயித்திருந்தாள்.
“ஹே நிலா! உள்ள போகாமல் இன்னும் இங்க என்ன பண்ணுற?” என்ற ஆகாஷின் கேள்வியில் தான் சுயநினைவடைந்தாள்.
அவன் பேச்சு அவளின் கருத்தை அடையவில்லை. அதனால் அவள், புரியாமல் விழித்தபடி ஆகாஷை பார்க்க
அவளைப் புரிந்தவன் மீண்டும் “ஏன் இங்கயே நின்னுட்ட? வா உள்ள போகலாம்.” என்றான்
“இல்ல தோட்டம் ரொம்ப அழகா இருக்கு, அதான் பார்த்துட்டே நின்னுட்டேன்” தோட்டத்தைப் பார்த்தபடியே கூறினாள்.
“இன்னைக்கு இங்கதான இருக்க போறோம். வா அப்பறம் பார்க்கலாம். சரியான தூக்கம் இல்ல. முதலில் வந்து ரெஸ்ட் எடு”
“ம்” எனத் தலையை உருட்டி, மனமே இல்லாமல் வீட்டுப் பக்கம் திரும்பினாள்.
அவளை அறிந்த ஆகாஷ், சிரித்துக் கொண்டே ‘இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கா. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? இவளை வச்சுகிட்டு எப்படிதான் காலத்தை தள்ளுறதோ? ‘என மனதில் சலிப்பது போல அவளை ரசித்து, தன் தலையைக் கோதிக் கொண்டு, புன்னகையோடு அவளை பின் தொடர்ந்தான்.
தன்னையறியாமலேயே அந்த வீட்டில், வலது காலை வைத்து உள்ளே நுழைந்தாள் மதுநிலா.
வீட்டினுள் இருந்த ஆடம்பர சோபா, டிவி, கார்பெட் எதுவும் அவள் பார்வையிலும், கருத்திலும் விழவில்லை. அவள் பார்வை முழுவதும், வீட்டினுள் இருக்கும் படிகளில் இறங்கிய ஆடவனின் (ஆகாஷ் வயதை ஒத்த) மீது மட்டுமே இருந்தது.
மதுவைப் பார்த்த அடுத்த நொடி, மின்னல் வேகத்தில்! அவளை நெருங்கி, இறுக அணைத்திருந்தான், அந்த ஆடவன். உணர்வு பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.
எங்கே அவளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தவனின், வார்த்தைகளுக்கு அங்கே பஞ்சமாகிப் போனது. அவன் உதடுகள் தொடர்ந்து முணு முணுத்தது
“லவ் யூ நிலா பேபி. மிஸ் யூ மை ஸ்வீட் ஹார்ட்”
அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கினால், காற்றைப்போல் மறைந்து விடுவாளோ என்று அஞ்சியவன், அவளைப் பிரியாமல் தன் அணைப்பிலேயே வைத்திருந்தான்.
மதுநிலாவின் பின் வந்த ஆகாஷின் பார்வை, அந்த இளைஞனை எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.
“டேய் பிரது(பிரதாபின் சுருக்கம்) என் டார்லிங் கிட்ட இருந்து தள்ளிப் போடா.” ஆகாஷ் பொறுத்தது போதும் எனப் பொங்கிவிட்டான்.
அதில் தன் நிலை அடைந்த பிரதாப்பிற்கு, அப்பொழுதுதான் உணர்ச்சி வசத்தால், தான் செய்து கொண்டிருக்கும் காரியம், என்ன என்று அவன் மூளையில் உறைத்தது. தன்னை மீட்டுக்கொண்டு, முயன்று வரவழைத்த இலகு குரலில்
“எவன்டா அவன், நேரங்கேட்ட நேரத்தில் டிஸ்டர்ப்(தொந்தரவு) பண்ணிட்டு. கொஞ்சமாவது பீல் பண்ணவிடுறீங்களா.” எனச் சலித்தபடி, மதுவிடம் இருந்து பிரிந்தான். மது அந்த அணைப்பை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆகாஷை பார்த்து “எப்பவும் நீ தாண்டா என்னோட வில்லன் . உன்ன(பல்லைக் கடித்துக்கொண்டு) ஏன்டா நான் கொஞ்சம் சந்தோசமா இருந்தால் உனக்குப் பிடிக்காதா?” என்றான் சாதாரணமாக.
”சந்தோசமாவா. என் டார்லிங்க கட்டிபுடுச்சுட்டு, இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலையும் சொல்லுவ”
“அவள் என் நிலா பேபி. எனக்கு மட்டும் சொந்தம். நான் என்ன வேணாலும் பண்ணுவேன். போடா” என்று ஆகாஷ்க்கு பதில் சொல்லிவிட்டு, மதுவிடம் திரும்பி
“நீ வா ஸ்வீட்டி(sweety), இங்க கரடி தொந்தரவு, ரொம்ப ஜாஸ்தியா இருக்குது. நம்ம அந்த பக்கம் போகலாம்” என்று சொல்லி, மதுவைக் கூட்டிச் சென்றான். சோபாவில் அவளை அமரவைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்து, அவள் கைபிடித்துக் கொண்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஜெர்க்(jerk) ஆன ஆகாஷ்”என்னாது கரடியா! என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? நீ வர வர என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுற” எனச் சொல்லிக்கொண்டே சென்றவன்
பிரதாப் மதுவைக் கைபிடித்து அழைத்துச் சென்றதையும், சோபாவில் அமரவைத்ததையும், அவளின் அருகில் அமர்ந்து கொண்டதையும் பார்த்து, சலிப்பாக தலைசைத்தான் ஆகாஷ். மதுவின் இன்னொரு பக்கம் போய் அமர்ந்து கொண்டு, அவளின் அடுத்த கையை தன் இரு கைகளால் சிறைபிடித்திருந்தான்.
“கரடியைக் கரடியென்று சொல்லாமல் வேற என்ன சொல்லுறது!” என பிரதாப் நமட்டு சிரிப்போடு பேச ஆரம்பித்து, ஆகாஷ் மதுவை நெருங்கி அமரவும் “டேய்! அங்க தான் வேற சோபா இருக்குல. அதுல போய் உட்காரு”
“நீவேணும்ன்னா அங்க போ. நான் என் டார்லிங் கிட்டத் தான் இருப்பேன்”
உடனே பிரதாப், அவள் கரத்தை பற்றி இருந்த தன் கைகளை எடுத்து, அவளின் தோளில் போட்டுக் கொண்டு. “நான் ஏன் போகணும்? நீ போ. என் பேபி கிட்ட நான் தான் உட்காருவேன். ஏன் அவளை என் மடியில கூட உட்கார வைப்பேன்” என ஆகாஷை பார்த்து சொல்லி விட்டு மதுவிடம் திரும்பி
“பேபி என் மடியில் உட்காரு வா”
ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்த மது, எல்லா பக்கமும் தலையை உருட்ட, ஆகாஷ் அவள் தலையைப் பிடித்து நிறுத்தி “என்ன நீ? அவன் என்ன சொன்னாலும் தலையை ஆட்டுற?”
கேள்வி தன் பக்கம் திரும்பவும் அலெர்ட்டான மது “நீங்க அடிச்சுக்கோங்க, இல்ல பிடிச்சுக்கோங்க, என்ன வேணாலும் செய்யுங்க, என்னை ஆளைவிடுங்க சாமி எனக்கு ரொம்ப பசிக்குது. நான் சாப்பிட போறேன்.” எனப் பெரிய கும்பிடுபோட்டு, அவர்களிடமிருந்து தப்பித்தாள்.
அவளின் பசி என்ற ஒரு சொல்! அவர்களின் சண்டைக்கு முற்றுப் புள்ளிவைத்தது. அப்போதைக்கு மட்டுமே! கண்டிப்பாக அது முற்றுப்புள்ளி இல்லை, தொடரும் இவர்களின் உரிமை சண்டைகள்.
அவள் எழுந்து கிட்சன் தேடிச் செல்லப்போக. அவளைத் தடுத்த பிரதாப் “நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா.”
மது திருட்டு முழி முழித்து “ஏர்போர்ட்ல பிரெஷ் ஆனேன். மறுபடியுமா” என இழுத்தாள். அவள் சொன்ன தினுசில், வந்த சிரிப்பை அவளுக்கு தெரியாமல் மறைத்தான்.
(மது மிகவும் பொறுப்பான பெண். இவர்களுடன் இருக்கும் போது மட்டும், கொஞ்சம் விளையாட்டு குணம் தலைகாட்டிவிடும்)
“பரவாயில்லை, கார்ல வேற வந்து இருக்க, மறுபடியும் ரெப்பிரேஷ் ஆகிட்டு வா. அஷ்! நிலாவுக்கு அவள் ரூமைக் காட்டு. நான் பிரேக்பாஸ்ட் எடுத்து வைக்க சொல்லுறேன்” என மதுவிடம் ஆரம்பித்து ஆகாஷிடம் முடித்தான்.
ஆகாஷ் மதுவைக் கூட்டிச் சென்று ஒரு அறையில் விட்டு “உனக்குத் தேவையானது எல்லாம் உள்ளயே இருக்கும்” பக்கத்து அறையைக் காட்டி “அது எங்கள் ரூம். எதுவும் தேவைப்பட்டா கூப்பிடு” சொல்லிச் சென்றுவிட்டான்.
மது ரெடி ஆகட்டும், இவர்களை பத்தி சின்ன அறிமுகம்.
ஆகாஷ், பிரதாப் கம்பீரமான இளைஞர்கள். பிறந்ததிலிருந்து, இந்த இருபத்தேழு வருடம் இணைபிரியாத நண்பர்கள். பள்ளி காலம் தொடங்கி இன்று வரை ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே தொழில் செய்து, ஒன்றாகவே உலகம் சுற்றும் வாலிபர்கள். ASN குரூப்ஸ் சாம்ராஜ்யத்தின், தற்போதைய இளைய வாரிசுகள்.
ASN குரூப்ஸ் ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரிசோர்ட்ஸை கொண்டது. பல முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது.
சென்னையில் பி இ முடித்துவிட்டு. இரண்டு வருடங்கள் ஆகாஷின் தந்தைக்கு உதவியாக இருந்தனர். அவர் வற்புறுத்தலால், தங்கள் ஆசைப்படி லண்டனில் நிர்வாகப் படிப்பில் மாஸ்டர்ஸ் முடித்தனர்.
அப்போது கல்லூரியில் அறிமுகமான பெண் தான் மதுநிலா. அவளைப் பிரிய மனமின்றி, அங்கயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, நிலாவிற்குத் துணையாக இருந்துவிட்டனர். இவர்கள் மூவரும், நான்கு வருடங்களுக்குப் பின், இந்தியா திரும்பி, பத்து நாட்கள் தான் ஆகி இருந்தது.
அந்த இணை பிரியாத தோழர்களுக்கு, எப்போதும் அவர்களுக்குள் சண்டை வந்ததில்லை. நிலா என்று வரும்போது, சண்டை வராமல் இருந்ததில்லை.
(மதுவைத் திருமணம் செய்ய இருந்த வெற்றி, எப்படி இவர்களிடம் இருந்து தப்பித்தான் என்பது தான் தெரியவில்லை. பொறுத்திருந்து அவர்களிடமே இதைப் பற்றிக் கேட்போம்.)
தற்போது சென்னையில்! நிலாவுடன் சேர்ந்து ASN ஆடையகம் ஆரம்பிக்க இருக்கின்றனர் . இதன் முதலீடு முழுவதும் அவர்கள் மூவரும் லண்டனில் சம்பாதித்தது.
ASN ஆடையகம் முழுவதும் நிலாவின் பொறுப்பு. அவளின் உதவிக்கு, நிலாவின் தோழி மேகவர்ஷினி இணைந்துள்ளாள்.
மேகா நிலாவுடைய கல்லூரி தோழி. பெற்றோர்கள் அற்று ஆசிரமத்தில் வளர்ந்த பெண்.
இப்ப கிட்சனில் என்ன நடக்கிறது.
பிரதாப் “கண்ணா அப்பா! பிரேக்பாஸ்ட் ரெடியா? நிலா பசி தாங்கமாட்டாள்” எனச் சமையல் வேலை செய்யும் கண்ணப்பனிடம் கேட்டான்.
“ஆச்சு தம்பி! எல்லாம் டேபிள்ல வச்சுட்டேன். பாப்பா வரவும் சாப்பிடலாம்”
“சரி பா” என்று திரும்ப, அவன் முன் வருத்தமான முகத்தோடு ஆகாஷ் நின்று இருந்தான்
“என்ன அஷ்! நீயே இப்படி முகத்தை வச்சு இருந்தால், அவளை எப்படிச் சரி பண்ணுறது”
“முடியல ப்ரது! அவள் கண் கலங்கினாலே தாங்க முடியாது, ரொம்ப அழுதுட்டா”
“என்ன பண்ண முடியும். இதை சந்திச்சுதான் ஆகவேண்டும். நமக்கு அவங்க வீட்டுல எதற்கும் அவகாசம் குடுக்கல்லை. அவளுக்கு நம்ம இருக்கோம் பார்த்துக்கலாம்”
ஒரு பெருமூச்சுடன், தங்களைச் சமாளித்துக் கொண்டார்கள் இருவரும்.
மதுநிலா, வருவதைப் பார்த்து தங்கள் பேச்சை நிறுத்தினர்.
“என்ன ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா, என்னை விட்டுட்டு பேசிட்டு இருக்கீங்க”
“அது ஒன்றும் இல்லை, அடுத்து என்ன பண்ணுறதுனு பேசினோம்” ஆகாஷை முந்திக்கொண்டு பிரதாப் பதில் கொடுத்தான். அவன் கண்களில் எச்சரிகை இருந்தது.
அதைச் சரியாகப் படித்த ஆகாஷ் “ஆமாம் டார்லிங்! சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு, அப்பறம் போய் உனக்கு வேணும்கிற திங்ஸ்லாம் வாங்கிட்டு வரலாம். விடியக் காலை ஆறு மணிக்கு ஃப்ளைட் ” எனச் சொல்ல நிலாவின் முகம் சோர்ந்து போனது.
ஆகாஷ் டார்லிங் சொல்லவும், பிரதாப் அவனை முறைக்க. அடுத்தடுத்த வார்த்தைகளில், தன் நிலாவின் முக மாற்றத்தைப் பார்த்து, மானசீகமாக தன் தலையில் அடித்துக்கொண்டு பேச்சை மாற்றும் பொருட்டு
“ஸ்வீட்டி வா! எனக்கு ரொம்ப பசிக்குது. இந்த வெட்டி பையன் கூட, என்ன வெட்டிப் பேச்சு. பேசாமல் வா” என அவளை உணவருந்தும் மேசைக்கு அருகில், கூட்டிச் சென்று நாற்காலியைப் போட்டு, அவளை அமரச்செய்து “கண்ணா அப்பா” என பிரதாப் குரல் கொடுத்தான்.
கண்ணா வரவும், அவரை நிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் “நிலா, இவங்க கண்ணா அப்பா. இங்க எல்லாம் இவர் பொறுப்பு தான். எங்களுக்கு அப்பா போல” என்று சொல்ல, மரியாதை நிமித்தம் நிலா எழுந்து நின்றாள்.
கண்ணா பக்கம் திரும்பி “இவங்க மதுநிலா. என்னோட நிலா பேபி. லண்டனில் ஒரே கல்லூரியில் படித்தோம்”
“வா பாப்பா”
“வணக்கம் அப்பா. எப்படி இருக்கீங்க”
“நல்லா இருக்கேன் பாப்பா. என்னை அப்பாவென்று கூப்பிடத் தான் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்க, நீ என்னை மாமாவென்று கூப்பிடுறயா” என்றார் ஆசையாக.
நிலா தன் ராஜாராம் மாமா ஞாபகத்தில் கண்கலங்க ” சரி மாமா. அப்பிடியே கூப்பிடுறேன்”
நிலாவின் கண்ணீரைப் பார்த்த கண்ணா, “என்ன ஆச்சு பாப்பா. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா” எனப் பதறினார்.
முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்த மதுநிலா “இல்லை மாமா. வீட்டு ஞாபகம் வேற ஒன்றும் இல்லை”
“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும் கவலைப்படாத. காலையிலிருந்து, இந்த பிரதாப் தம்பி நிலா பசி தாங்கமாட்டானு, சொல்லியே என்னை ஒரு வழி பண்ணிடுச்சு. முதலில் சாப்பிடுங்கள்”
“ஆமா மாமா ரொம்ப பசி” என இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் அருகில் பிரதாப்.
ஆகாஷ் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு “கண்ணா அப்பா, நீங்களும் வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றான்.
என்னதான் பிரதாப் ஆகாஷ், அவரை வீட்டு மனிதர் போல் நடத்தினாலும், நிலா எப்படி எடுத்துக்கொள்வாள் என்று அவர் தயங்கினார். அவர் தயக்கத்தைப் புரிந்துகொண்ட நிலா, தானே அவர் தட்டில், உணவைப் பரிமாறி அவரிடம் நீட்டினாள். அதில் நெகிழ்ந்து போனார் கண்ணப்பன்.
“மாமா! இட்லி நல்லா சாஃப்ட்டா இருக்கு. சட்னி, சாம்பார் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு”
நிலாவின் அன்பான பேச்சு, புன்னகை முகம், பரந்த மனம், கல்மிஷமில்லா பார்வை எல்லாம் (நண்பர்களைப் போல) கண்ணாவையும் கவர்ந்தது.
கண்ணா ‘அருமையான பெண். நீண்ட காலம் சந்தோசமா வாழவேண்டும்’ மனதில் நினைத்து, ஆண்டவனையும் வேண்டிக் கொண்டார், ‘இந்த பெண்ணுக்கு, சந்தோசமான நீண்ட ஆயுளைக் கொடு இறைவா.’
“மாமா நல்ல சாப்பாடு. அருமையா செஞ்சிருக்கீங்க ”
“நன்றி பாப்பா. இப்போ போய் தூங்கு, ரொம்ப சோர்வா தெரியற” என்றார் அன்பாக, அவள் தலையைத் தடவி விட்டபடி.
இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாத பிரதாப், ஆகாஷ் தங்கள் வேலையில் படு பிஸி ஆகிவிட்டார்கள்.
என்ன வேலை இங்கனு பார்க்கிறீர்களா?
அதுதான்பா தங்கள் வயிற்றை நிரப்புகிறது(சாப்பிடறது)
சாப்பிட்டு முடியவும் நிலாவிடம் வந்து “நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. சாயங்காலம் நம்ம ஷாப்பிங் போகலாம்” ஆகாஷ் கூறினான்.
சரி எனத் தலையசைத்த நிலா, தனக்குக் கொடுத்த அறையில் சென்று படுத்துவிட்டாள்.
ஆகாஷ், பிரதாப் கிளம்பி ஹோட்டல் மற்றும் ரிஸார்ட் விஸிட்டிற்கு சென்றுவிட்டனர்.
திரும்பி வந்து,நிலாவை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்றனர்.
அங்கு ஒருவனை ஆகாஷ், பிரதாப் போட்டு வெளுத்துவாங்கப் போகிறார்கள்.
அவன் இவர்கள் மேல் வஞ்சம் கொள்ளப்போகிறான்.
யார் அவன்?
எதற்கு அவனை அடிக்கப்போகிறார்கள்?
அவனால் இவர்கள் வாழ்க்கை பாதைமாறுமா?
அடுத்த அடுத்த பதிவுகளில்