சூரியநிலவு 3

சூரியநிலவு 3

அத்தியாயம் 3

வெற்றி, பால்கனியில் நின்றுத் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.  கூண்டில் அடைக்கப்பட்ட புலியைப் போல், அவனின் மனம் உறுமிக் கொண்டிருந்தது.  மதுவின் மீதும், அவளை கூட்டிச் சென்ற ஆடவனின் மீதும், மிகுந்த கோபத்தில் இருந்தான்.

மதுவின் மேல் அவன் அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தான்.  எதிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் துணிச்சலான பெண்.  இப்பொழுது எப்படி, எங்கே தவறாகிப்போனாள்? சேர்க்கைச் சரி இல்லையோ?

வெற்றியின் மனதில், காலையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம், படம் போல் ஓடியது.

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும்,  வெற்றியின் மனமோ,  மது எப்படிச் சென்றிருப்பாள் என்ற சிந்தனையில்தான் உழன்று கொண்டிருந்தது.

வெற்றியின் மூளையில்,  திடீரென ஏதோ ஒரு பளிச்சிடல், சட்டென்று எழுந்து சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான்.  அவன் அவசரமாகச் செல்வதைப் பார்த்த, அவனின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவனை பின் தொடர்ந்து அங்கு நுழைந்தனர்.

“சார் யார் நீங்க?  இங்க வெளியாட்கள் எல்லாம் வரக்கூடாது.  வெளிய போங்க” என்று சிசிடிவி பொறுப்பாளர், வெற்றியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவனை தொடர்ந்து அனைவரும் அங்கு நுழைந்திருந்தனர்.

கூட்டமாக நுழைந்தவர்களைப் பார்த்த பொறுப்பாளர்,  என்ன செய்வதென்று தெரியாமல்,  மேனேஜர்க்கு அழைப்பு விடுத்து விட்டார்.

அடுத்த ஐந்தே நிமிடத்தில் மேனேஜரும் அங்கிருந்தார்.

வெற்றி, தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை, அவரிடம் விளக்கி உதவி கோரினான். மேனேஜரும் அவர்களுக்கு உதவ முன் வந்தார்.

மணமகள் அறையின் முன், இருந்த சிசிடிவி கேமரா ரீவைண்ட் செய்து பார்க்கப்பட்டது.

இரவு இரண்டு மணியளவில்,  மது கைப்பேசியில் பேசிக்கொண்டே,  தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.   சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டித் தன்னை யாரும் கவனிக்கிறார்களா எனப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். பிறகுத் தன் அறைக்கும், மேடைக்கும் நடுவே இருந்த, மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறிச்செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

மூன்று மணியளவில், ஒரு ஆடவனின் கையணைவில், கீழே இறங்கி வந்த மது, சிறிது நேரம் அங்குத் தாமதித்து, கண் கலங்கி நின்றாள்.  அந்த ஆடவன்! அவள் முகமேந்தி, கண்ணீரைத் துடைத்து, ஏதோ சொல்லி அனுப்புகிறான். மது தன் அறையை நோக்கியும், அந்த ஆடவன் வெளி வாயிலை நோக்கியும், செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

சிறிது நேரத்தில்,  வெளியே வந்த மது,  சுடிதாரில், ஆடம்பர நகைகளைத் தவிர்த்து, எப்போதும் தான் அணியும் சங்கிலி, கம்மல், வளையல் மட்டும் அணிந்திருந்தாள்.  (அந்த எளிமையிலும், அவளின் அழகு, சிறிதும் குறையவில்லை) அவள் கைகளில், கைப்பை மற்றும் ஆவணம்(ஃபைல்) ஒன்றுடன், வாயிலை நோக்கிச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

பின் வாகன நிறுத்துமிடக் கேமராவில்,   ஒரு விலை உயர்ந்த, சொகுசுக் காரின் பின்னிருக்கையில், மது மற்றும் அந்த ஆடவன் அமர்ந்து இருக்க, காரோட்டி அந்த காரை ஓட்டிச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது.

அந்த கேமராப் பதிவுகளை,  பார்த்துக் கொண்டிருந்த ஒன்பது நபர்களில், எட்டு பேர் மனதிலும், “யார் அந்த ஆடவன்?” என்ற கேள்வி எழுந்தது. ஒருவருக்கு மட்டும் விடைத் தெரியும். ஆனால் அவர், அதை வெளியிட விரும்பவில்லை.

அந்த காரை ட்ரேஸ் பண்ணலாம்,  என்று நண்பர்கள் கூறினார்கள்.  ஆனால் வெற்றி அதற்கு அனுமதிக்கவில்லை.

இதுவரை அவன் மனதில்,  சிறு நம்பிக்கை இருந்தது ‘மது தப்பு செய்திருக்க மாட்டாள்’ என்று.  ஆனால் இப்போது வெற்றியின்,  மது மீதான,  அவனின் நம்பிக்கைப் பொய்த்துப் போனது.

அவளின் மீது, அவன் கொண்ட ஆசைகள் எல்லாம் கோபமாக உருமாறியது.

என்னை வேண்டாம் என்று சொல்லி,  அவன் தான் வேண்டும் என்று போன பெண்,   எனக்கும் வேண்டாம்” வெற்றி உறுதியாகக் கூறினான்.

“வெற்றி அவசரப்படாமல் இரு.  என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்” என்று பெற்றோர்கள் கெஞ்சினார்கள்.

“மது எனக்கு வேண்டாம்” என்பது மட்டுமே, வெற்றியின் முடிவாக இருந்தது.

எந்த ஆண் மனம்,  இந்த  (தான் திருமணம் முடிக்க இருக்கும் பெண். மற்றொரு ஆடவனுடன் நெருக்கமாக இருக்கும்)  காட்சியைப் பார்த்த பின்,  அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ளும்.

எதுவாக இருந்தாலும் தன்னிடம் சொல்லி இருக்கலாம், என்பது வெற்றியின் எண்ணம்.

வெற்றியின் உறுதியான முடிவைக் கேட்ட, அனைவரும் கவலை கொண்டனர். 

பிறகுதான் ராஜா,  ஓவியச்செல்வியை திருமணம் செய்து கொள்ள  சொல்லி, வெற்றியை வற்புறுத்தினார்.

*********************

படுக்கையில் விழுந்த, ஓவியாவின் நினைவுகளும் காலையில் நடந்த உரையாடலுக்குச் சென்றது:

வெற்றியை, இந்த திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கச் சொல்லி,  அவனது நண்பர்களுக்குக் கண்ணசைத்துவிட்டு, வெளியே வந்தார் ராஜா.

சுற்றும் முற்றும் உள்ள உறவினர்களை,  ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவரின் அறைக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து நால்வரும் அங்கு நுழைந்தனர்.

அறைக்குள் நுழைந்த பின்,  சுந்தரின் கைகளைப் பிடித்துக் கொண்ட ராஜா, மன்னிப்பை வேண்டும் பொருட்டு “எனக்கு வேற வழி தெரியலை சுந்தர்.  நீ தான் எங்களுக்கு உதவவேண்டும். ஓவியாவை வெற்றிக்குக் கொடுக்க உனக்கு சம்மதமா” என ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

“நான் தான் உனக்கு  நன்றி சொல்ல வேண்டும் ராஜா.  எவ்வளவு பெரிய பாவத்தில் இருந்து,  எங்களை காப்பாற்றி இருக்க.” எனச் சுந்தர் உணர்ச்சி வசப்பட்டார்.

“இல்ல சுந்தர், வெளிய நம்ம சொந்தங்களெல்லாம், ரொம்ப தப்பா பேசறாங்க, இது எவ்வளோ பெரிய அவமானம். அதுவும் இல்லாம இப்போ விட்டா வெற்றி மறுபடியும் கல்யாணத்துக்கு ஒத்துக்குவானானு தெரியலை. அவன் வாழ்க்கையும் இதில் அடங்கியிருக்குதே”

“என்ன ராஜா இது, ஊர், உலகம் ஆயிரம் பேசும். நம்ம பையனைப் பத்தி நமக்குத் தெரியாதா. வா நாம போய் அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்.”  என்று சமாதானப் படுத்தினர் சுந்தர்.

ராஜாவின் மனம் மனைவிக்கு இதில் விருப்பமா’ என்று யோசித்தது? அவருக்குத் தான் தெரியுமே, மதுவின் மேல் கற்பகம் கொண்ட பாசத்தைப் பற்றி.

சிறு வயதில் இருந்தே,  மதுவின் மேல் தனிப் பிரியமுண்டு.  அவளிற்காக ஒவ்வொன்றையும், பார்த்துப் பார்த்துச் செய்வார். அதற்காக ஓவியாவை பிடிக்காதென்றில்லை. ஓவியாவை விட மதுவைக் கொஞ்சமே கொஞ்சம் அதிகம் பிடிக்கும்.

மது,  ஓவியா இருவரும், சுந்தரின் வீட்டில் இருந்ததை விட, ராஜாவின் வீட்டில் தான் அதிகம் இருப்பார்கள். ‘அத்தைமாமா என அவர்களையே சுற்றி வருவாள் மதுநிலா. ஆனால் ஓவியா வெற்றியைத் தான் அதிகம் சுற்றிக் கொண்டிருப்பாள்.

மதுநிலா கல்லூரிக்குச் சென்ற பின், சிறிது இடைவெளி வந்து விட்டது. அதுவும் லண்டன் சென்ற பின், அவர்களின் பேச்சு மிகவும் அரிதாகி விட்டது.  ஆனாலும் மது இவர்கள் மேல் கொண்ட பாசமோ, இவர்கள் மதுவின் மேல் கொண்ட பாசமோ,  ஒரு துளி கூட இதுநாள் வரை குறையவில்லை. இனியும் அந்த பாசம் நீடிக்குமா?

இவர்கள் அனைவரின் மனதிலும் “மது ஏன் அவள் காதலைப் பற்றிச் சொல்லவில்லை?” என்னும் ஆதங்கம் தான் அதிகமாக இருந்தது.

அதை முன்னரே சொல்லி இருந்தால்,  இப்பொழுது நடந்துள்ள அவமானத்தைத் தடுத்திருக்கலாம் அல்லவா! 

விதியின் விளையாட்டு என்னவோ? யார் அறிவர், விதியின் ஆட்டத்தை!

ராஜா, கற்பகத்தின் பதிலுக்காக அவரை பார்க்க, சுந்தர் சுமித்ராவை நோக்கினார்.  இருவரும் விழி மூடி தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.

பின்னர் தான், இவர்களால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.  இப்போது அனைவரின் கவனமும் ஓவியாவை நோக்கித் திரும்பியது, அவளின் சம்மதத்திற்காக.  ஓவியாவின் முகத்தில் ஒரு கலக்கம் இருந்தது. 

கற்பகம் “ஓவியாமா உனக்கு இதில் சம்மதம் தானே.  வெற்றியைக் கல்யாணம் செய்துக்க”

அவளிடம் பதிலில்லை. வெற்றியால் தன்னை, மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா, என்று அவள் மனதில் குழப்பம் சூழ்ந்திருந்தது.

அவளுக்குத்தான் தெரியுமே, சிறு வயதிலிருந்தே, வெற்றியின் மனதில், மது மனைவியாக வீற்றிருக்கிறாள் என்று.  அதனால் தானோ என்னவோ, அவன் இதுவரை பிற பெண்களை சைட் அடித்ததுகூட இல்லை.  ஏன் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை.  மதுவின் இடத்தை வெற்றியால் தனக்குத் தரமுடியுமா?  என்று அவளின் மனம் சிந்தித்தது.

பதில் கூறாமல் இருக்கும்,  ஓவியாவின் அருகில் வந்த சுமித்ரா ”அம்முமா அத்தை கேட்கறாங்கள,  உன்னுடைய சம்மதத்தைச் சொல்லு”

வார்த்தைகளைக் கோர்த்த ஓவியா “அம்மா வெற்றிக்கு இதில் சம்மதமில்லை.  நான் எப்படிச் சம்மதிக்க.” என்று வார்த்தையை மென்று விழுங்கினாள்.

“சிறு வயதிலிருந்தே, உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.  நிச்சயம் அவன் மனம் மாறி உன்னை ஏத்துக்குவான்”  எனச் சொன்ன பிறகும், ஓவியா தயக்கமாக இருந்தாள்.

அதைப் பார்த்த சுமித்ரா  “அம்முமா நம்ம வெற்றி,  உன்னை நல்லா பார்த்துக்கொள்வான். எங்கள் மானம், மரியாதை எல்லாம், உன் கையில் தான் இருக்கு” என்று இறுதி அஸ்திரத்தை வீசினார்.

அதில் பதறிப்போன ஓவியச்செல்வி  “அம்மா என்ன பண்றீங்க! எனக்கு எது நல்லதென்று உங்களுக்குத் தெரியாதா.  உங்கள் எல்லாருடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம்” தன் குழப்பத்தைவிட்டு விட்டு, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.

மதுநிலாவினால் ஏற்பட்ட அவமானத்தை,  அவள் சகோதரியைக் கொண்டு சரி செய்ய முடிவெடுத்தனர். 

பெரியோர்களால் இந்த திருமணத்தை நடத்தி,  தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தைச் சரிசெய்ய முடியும்.

ஆனால் வெற்றிச்செல்வன், ஓவியசெல்வியின் வாழ்கையை?

************************

வெற்றியின் சிந்தனையில்,  அந்த ஆடவனை எந்தளவு நம்பலாம்?  மதுவின் வாழ்வு என்ன ஆகும்? மனம் குழம்பிய குட்டை ஆனது.

வெற்றிக்கு மதுவின் மீது,  அளவு கடந்த கோபம் இருந்தாலும்,  இப்பொழுது அவன் கோபத்தைப் பாசம் வென்றது.

மதுவைப் பற்றி அறியும் பொருட்டு,  தன் கல்லூரி நண்பர்களுக்கு,   அவளின் தற்போதைய புகைப்படமும், கூடவே அந்த ஆடவனின் புகைப்படமும் அனுப்பி, “அவர்களை பற்றி எதுவும் தெரியுமா?” என விசாரித்தான்.

யாருக்கும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

‘யானைக்கும் அடி சறுக்கும்’ இந்த நிலை தான் வெற்றிக்கு.

எங்குச் சென்றாலும் முட்டிக்கொண்டது. வெற்றிக்குத் தலையை பிய்க்காத குறைதான்.

அவன் மதுரையில் குழம்பட்டும்.  நாம போய் விமானத்தில் பறந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாம்.

எவ்வளவு நேரம், தான் அவர்களும் வானத்தில் பறப்பார்கள்,  வாங்கக் கொஞ்சம் தரையிறக்கலாம்.

மதுரையில் வெற்றி ஓவியாவிற்குத் தாலி கட்டிய, அதே நேரம்,  மதுநிலா ஆகாஷ் பறந்த விமானம், சென்னையில் தரையிறங்கி இருந்தது.

விமான நிலையத்தை விட்டு வெளிவந்த இருவரும், தங்களுக்காகக்  காத்திருந்த காரை நோக்கிச் சென்றனர். மதுவை முன் இருக்கையில் அமரவைத்தான்.

காரோட்டியிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அவரை பேருந்தில் அலுவலகம் செல்லச் சொல்லி அனுப்பிவிட்டான்.  ஓட்டுநர் இருக்கைக்கு  சென்று காரை எடுத்தான்.

மதுவின் விழிகளில் ஒரு கலக்கம்.  இயலாமையுடன் திரும்பி ஆகாஷை பார்த்தாள். ‘யார் இருக்கிறார்கள் எனக்கு?  அடுத்து என்ன?’ என்று அவளது விழிகள், அவனைக் கேள்வி கேட்டது.

‘நான் எப்பொழுதும் உன் துணை’ என்று அவனது விழிகள், அவளது விழிகளுக்குப் பதில் சொன்ன அதே நேரம், அவனின் கரங்கள்,  அவளது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு அதே பதிலைத் தந்தது.

அதில் கொஞ்சமே,  கொஞ்சம் ஆறுதலான நிலா,  அவனின் தோள்களில் தன் தலைசாய்த்து விழி மூடிக் கொண்டாள் ‘நீயே என் துணை’ என்று.

அந்த துணை நட்பா? காதலா? விடை காலத்தின் கைகளில்.

கார் ஈ சி ஆர் சாலையில், சென்று கொண்டிருந்தது.  பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

காரிலிருந்து வீட்டை நோக்கிச் சென்ற மது,  தன்னை அறியாமல்,  வலது கால் வைத்து, வீட்டில் நுழைந்தாள்.

அவள் வருவதைப் பார்த்து, படிகளிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த,  ஆகாஷ் வயதை ஒத்த இளைஞன், ஓடி வந்து அவளை இறுக அணைத்திருந்தான். அவனது உதடுகள் முணு முணுத்தது

 “லவ் யூ நிலா பேபிமிஸ் யூ மை ஸ்வீட் ஹார்ட்

மதுநிலாவின் பின் வந்த ஆகாஷின் பார்வை, அந்த இளைஞனை எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.

இனி சுட்டெரிக்கும் சூரியனையும், குளிரவைக்கும் நிலவையும் சந்திக்கலாம்

மதுவை அழைத்துச் சென்ற ஆடவனை யாருக்குத் தெரியும்?

அவர் ஏன் அதைச் சொல்ல விரும்பவில்லை?

யார் இந்த ஆகாஷ்?

மதுவை அனைத்து லவ் யு சொன்ன இளைஞன் யார்?

அடுத்தடுத்த பகுதிகளில்

மீண்டும் சந்திக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!