தண்ணிலவு தேனிறைக்க… 13

TTIfii-8b7455b1

தண்ணிலவு தேனிறைக்க… 13

தண்ணிலவு – 13

சிந்தாசினிக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமென்று பேச்சு துவங்கிய நாளிலிருந்தே, தொடங்கிய மஞ்சுளாவின் ஆட்டம் அத்துமீறிதான் சென்று கொண்டிருந்தது.

உற்றார் உறவினர்கள், தனது குடும்பத்தை கௌரவமாக தலையுயர்த்தி பார்த்திட வேண்டுமென்ற எண்ணமே அடங்காத அலையாக அடித்துக் கொண்டிருக்க, அதற்கு சம்மந்தி வீட்டினரை பகடையாக்கிக் கொண்டார் மஞ்சுளா.

மகள் மிதுனாவை பகைத்து, மருமகன் தயானந்தனை நிந்தித்து, மகன் பாஸ்கரை ஊமையாக்கி, அனைத்திற்கும் மேலாக மருமகள் சிந்தாசினியின் சுயத்தை காலில் போட்டு மிதித்தே, தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டுமென்ற தீர்மானத்தில் நின்றார்.  

திருமணத்தின் போது செய்ய இயலாத நகை மற்றும் சீர்வரிசையை வளைகாப்பிற்கு செய்தே ஆகவேண்டுமென்று கட்டளையிட்டு விட்டார். இதற்கு மிதுனா மாற்றுக் கருத்து சொல்லியும், மஞ்சுளா தனது முடிவினை மாற்றிக் கொள்ளவில்லை.

பேச்சோடு பேச்சாக மருமகளை தட்டிக் கழிக்கும் எண்ணம், இன்றளவும் தனக்கிருப்பதாக திமிருடன் அனைவரின் முன்பும் மஞ்சுளா கூறியதும், சிந்துவும் தாளமுடியாமல் தன்னிரக்கத்திலேயே கரையத் தொடங்கினாள்.

“இந்த பேச்செல்லாம் கேட்டுட்டு கோழையா இருக்கிறதுக்கு பதிலா, அன்னைக்கே நான் செத்துப் போயிருக்கலாம்… சூதுவாது தெரியாம பழகிட்டு, அந்த தண்டனைய, இன்னும் எத்தனபேர் தலையில ஏத்திவிடப் போறேனோ!” அரற்றிய மனைவியை, பாஸ்கரால் சமாதானம் செய்யக்கூட முடியவில்லை.

இயல்பாய் மனைவியின் மீதுள்ள பாசத்தில் மனமுருகிப் போனாலும், தாயின் முன்பு அவளை அணைத்து ஆறுதல்படுத்திட வழியின்றியே ஊமையாகவே நின்றான்.

அவளுக்காகவே தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு வாழ்நாளினை கடக்க ஆரம்பித்தவன், ‘என்னுடைய மாற்றங்கள் எல்லாம் உனக்காகத்தான், உனக்காக மட்டுமே’ என்ற நம்பிக்கையை வார்த்தையாகவும் செயலாகவும் அவளிடம் காட்டிடத் தடுமாறியதே பாஸ்கரின் பெரும் தவறாகிப் போனது.

ஏதாவது ஒரு இடத்தில் மனைவிக்காக இவன் பேசியிருப்பானாகின் பல இன்னல்களை தவிர்த்திருக்கலாம். அவனது இருபத்திமூன்று வயதும், ஆராயாத அறிவும் அத்தனை பக்குவத்தை அளித்திருக்கவில்லை.  

**************************

மஞ்சுளாவின் விருப்பபடியே சீர்வரிசை, நகை, விருந்தோடு  உறவுகள் அனைவரும் அழைக்கபட்டு. சிந்துவின் வளைகாப்பு மிகசிறப்பாக நடைபெற்றது.

சீர்வரிசையில் குறை வைக்காதவர்கள் ஐந்துபவுனிற்கு பதிலாக மூன்றுபவுனாக நகையை குறையாக செய்துவிட்டனர். இந்த பற்றாக்குறையை விழா தினத்தன்றுதான் சபையினரின் முன்பு, மஞ்சுளாவிடமும் தெரிவிக்க, மிதமிஞ்சிய கோபத்தில் தனக்கு தெரிந்த முறையில் அனைவரையும் வசைபாடத் தொடங்கிவிட்டார்.

விருந்தோம்பல் முடிந்து, சிந்துவை முறைப்படி பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சமயத்தில், அதையே பெரிதுபடுத்தி தயானந்தனிடம் தனது தர்க்கத்தை ஆரம்பித்து விட்டார் மஞ்சுளா. 

“பிரசவத்துக்கு கூட்டிட்டு போறவங்க, கல்யாண நகை, சீர்வரிசை எல்லாம் சரியா எப்ப செய்ய முடியுதோ, அப்ப கொண்டு வந்து விட்டா போதும். அதுவரைக்கும் உங்க பொண்ண நீங்களே, பத்திரமா வச்சுக்கோங்க…” அலுங்காமல் குண்டைப் போட்டுவிட, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தே நின்றனர்.

பாஸ்கரும், தன் தாயிடமிருந்து இப்படியான எதிர்மறை பேச்சினை எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை நாட்களாக மருமகளை தாங்கிக்கொண்டவரின் மனதில் இத்தனை துவேசங்கள் இருக்கத்தான் செய்யுமா என்பதே அனைவரின் மனதிலும் கேள்வியாய் நிற்க, யாரும் அதை கேட்க முன்வரவில்லை.  

அனைவரின் முன்பும் தாயை எதிர்த்து பேசி, அவருக்கு மரியாதை குறைவாக நடந்து கொள்ள விருப்பமில்லாமல் பாஸ்கரும் அமைதியாக நின்றுவிட, அதுவே முதுகெலும்பற்ற கோழை இவன் என்ற அவமதிப்பினை பெறவும் வழிவகை செய்துவிட்டது.

எல்லாவற்றிக்கும் மேலாக இவனது குழந்தையை சுமந்து நின்ற மனைவியின் மனதிலும் மோசக்காரனாக, நம்பிக்கையற்றவனாக மதிப்பிழந்து போனான். இவனது அசையாநிலையை கண்ட, சிந்தாசினியும் தனது இல்லறபந்தத்தையே வெறுத்து ஒதுக்கும் முடிவிற்கும் வந்து நின்றாள்.

அடுத்த வருடம் சீர்வரிசைகளை முறையாக செய்வதாக கூறிய தயானந்தன், இன்றைய நிலைக்கு மஞ்சுளாவிடம் மன்னிப்பை வேண்டிட, அதுவும் சேர்ந்து சிந்தாசினியின் மனப்பொருமல்கள் உடைபட போதுமானதாகவே இருந்தன.

மஞ்சுளாவும் சற்றும் இளகாமல் அடுத்தடுத்த ஏளனப்பேச்சில், தயாவின் மன்னிப்பையும் பரிகாசம் செய்திட, அங்கே உள்ளவர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் சங்கடத்தையும் கொடுத்தது.

மொத்தத்தில் சிந்தாசினியின் வளர்ப்பையும், அவர்களின் குடும்பத்தையும் மஞ்சுளா இறக்கி வைத்து பேசிவிட, பதிலுக்கு மரகதத்தின் பெண்கள் பாஸ்கரின் குறைகளைப் பேசி, மிதுனாவிற்கு இன்னும் சீர்செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி வாதத்தை தொடர்ந்தனர்.

அனைவரும் அவரவர் நிலையில் பேசிக்கொண்டு நிற்க, மனம் குமைந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிந்தாசினியின் நிலையோ முற்றிலும் தலைகீழாக மாறிக் கொண்டிருந்தது.

வயிற்றின் பாரத்தைவிட இதயத்தின் பாரம், கடும் பாறையாக கனத்துபோக, நிறைசூல் கொண்டவளின் கண்களும் நெஞ்சமும் முழுக்க முழுக்க நிராசையை மட்டுமே சுமந்து நின்றன.

இனி, தன்வாழ்வு முழுமைக்கும் சாபம் போன்றே, தன் மாமியாரின் பேச்சுக்கள், வருங்காலத்தில் தன்னை துண்டாடப் போகின்றதா என நினைத்தே உயிரோடு புதைந்து போனாள். 

அந்த நிலையிலும் கணவன் மீது இயல்பாய் இருந்த நப்பாசையில், வேதனையுடன் பாஸ்கரை நோக்க, அவனோ தனக்கும் அங்கு நடப்பவற்றிக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை என்பதுபோல் நின்று கொண்டிருந்தான்.

உணர்வுகளை கூறுபோட்டு, தனது உணர்ச்சிகளையும் அடக்கி வைக்கப் பழகியிருந்தவன், மனைவியும் அதேபோல இந்த கணத்தை கடந்து விடுவாளென்று நினைத்ததுதான் கெடுவினையாகிப் போனது.

கணவன் மேல் தான்கொண்ட நேசத்தின் ஒருதுளியளவு கூட, அவன் வைக்கவில்லையே என பெண்மனம் பிதற்றத் தொடங்கியது. இனி இவனோடு வாழத்தான் வேண்டுமா என மனசாட்சி எழுப்பிய கூக்குரலில் மீண்டும் தற்கொலை எண்ணம் தலைதூக்கியே விட்டது பெண்ணவளுக்கு….

தனது இழிநிலைக்கு வருந்தும் பொழுதே, அடிவயிற்றில் உதைத்த அவளது குழந்தை ஏன் எனக்காக வாழமாட்டாயா எனகேட்டு மனதில் முன்நின்றுவிட, கழிவிரக்கத்தில் நொந்து கொண்டிருந்தவள் நொடிநேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டாள். 

பிறந்த வீடும், அவர்களின் வளர்ப்பும் கூட கீழாய் விமர்ச்சிக்கபட்டதில், வெகுண்டு போனாள். உயிராய் நேசித்தவனின் பாராமுகம், அவளது தன்மானத்தை சீண்டிவிட, இனியும் தாழ்ந்து போகக்கூடாதென்று சபதமே எடுத்து நின்றாள் அந்த பேதைப்பெண்.

தனி மனுஷியாய் நின்றிருந்தால், இத்தனை வேகம் வந்திருக்குமா தெரியவில்லை. இத்தனை நாட்களில் தன்னை வதைத்த பேச்சுக்கள், இன்று தன் குடும்பத்தாரையும் சுற்றி வளைத்திருக்க, ஆவேஷம் கொண்டவளாய் தன்அண்ணனிடம் மட்டுமே பேசினாள்.

“என்னை இங்கேயிருந்து கூட்டிட்டு போயிடுண்ணே… இவங்க கேக்குற சீர்வரிசை இல்லாம, இனி இந்த வீட்டுப் வாசப்படிய மிதிக்க மாட்டேன், அப்படி நான் வரும்போது என்கூட வாழத் தகுதியானவரா இவர் இல்லைன்னா, இவரை ஒரெடியா தலமுழுகவும் தயங்க மாட்டேன்…” இதயமெல்லாம் வலி கொண்டாலும், நிமிர்வுடன்தான் பேசினாள் சிந்தாசினி. 

“என்ன பேச்சு இது சிந்து? ஏண்டி இப்டி இறுக்கிப் போயிருக்க? எல்லாம் சரி பண்ணிடலாம்” நிறைமாசக்காரியின் உடல் நலனில் அக்கறை கொண்ட பெரிய அக்கா நர்மதா, அவளை அமைதிப்படுத்தவென சாந்தமாகப் பேச,

“பேச்சு மட்டுமில்லக்கா, இனி நானும் இறுக்கத்தோடதான் வாழப்போறேன். என்னோட பத்தாம் பசலித்தனத்துக்கு எல்லாரையும் பலியாக்கினது போதும். நான் எப்படி இருக்கணும்னு எனக்கு புரியவச்சுட்டாங்க. ஒரு பொண்ணு வெகுளியாயிருந்தா, அது அவளை தாங்கிட்டு நிக்கிறவங்களுக்கு எத்தன கஷ்டங்கள கொடுக்குதுன்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.

இனிமே யாரும் எனக்காக, யாருகிட்டயும் கைய கட்டிட்டு நிக்கவேணாம். இவங்க கேக்குற நகைநட்டு, சீர்வரிசை, செய்முறை எல்லாம் என் சுயசம்பாத்தியத்துல செஞ்சுக்கப் போறேன்… இனி என் சொந்தகால்ல நின்னு வாழ்ந்து காட்டப்போறேன்!” மூச்சுவிடாமல் உறுதி தெறிக்க சொன்னவளின் ஒவ்வொரு வார்த்தையும், அங்குள்ளவர்களை மிரள வைத்தது. 

“அண்ணன் இருக்கும்போது இப்படியெல்லாம் பேசக்கூடாது சிந்து…” தங்கையின் அருகில் நின்று, தயா தன்மையாகச் சொல்ல,

“போதும்ண்ணே… இன்னும் எத்தன காலத்துக்குதான், எங்கள தூக்கி சுமப்ப… உனக்கான வாழ்க்கைய நீயும் வாழனும். உன்னையே நம்பி வந்த அண்ணிக்கு, இனி பக்கபலமா இருக்கப் பாருண்ணே!” அழுதாலும் தடுமாற்றமில்லாமல் பேசிவிட, தயா திகைப்பில் அசையாமல் நின்று விட்டான்.

“எல்லாரும் கடமையோட, அவங்க வாழ்க்கையையும் வாழ்ந்துட்டுதான் இருக்காங்க சிந்து. இவ்வளவு அழுத்தம் இப்போ உனக்கு வேணாம்” அவளின் நிலையை உணர்ந்தவளாய் மிதுனா, தோள் அணைத்து ஆறுதல்கூற,

“இல்லையே அண்ணி… எனக்காக பேச வேண்டியவர் இன்னமும் அமைதியாதானே நிக்கிறாரு. இப்ப என்னை விட்டுக் கொடுத்துட்டு நிக்கிறவரு, நாளைக்கு என்னையும் என் புள்ளையையும் நடுத்தெருவுல நிக்க வைக்கவும் தயங்க மாட்டாரு.

மஞ்சதண்ணி தெளிச்சு பலியாடு மாதிரி, கழுத்துல தாலின்னு ஒண்ணு கட்டி, என்னை அடிமையாக்கிட்டாங்க…. நான் தப்பு பண்ணினவதான், ஆனா அதுல அவர் பங்கு எதுவுமே இல்லன்னு சொல்றத கேட்டு, என்னை, நானே அசிங்கமா உணர்றேன்.

பணத்தை மட்டுமே மதிச்சு வாழ்க்கைய எடை போடுறவங்க மத்தியில, நாமளும் சுயநலமா இருக்குறது நல்லதுதான் அண்ணி… என் முடிவுல இருந்து என்னை பின்வாங்கச் சொல்லாதீங்க…” கண்கள் சிவக்க, தன்னைதானே உணர்ந்து கொண்டவளாய் பேசிய பேச்சில், அனைவரும் உறைந்து நின்றனர்.

அப்பொழுதும் பாஸ்கர் வாயை திறக்கவில்லை. சமாதானம் பேச, மனைவியை அணுகினால் தாயின் வெறுப்பு பார்வை, அவனை பதம் பார்த்து விடும் வாய்ப்பு நிரம்பவேயிருக்க, அமைதியாய் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனது எண்ணமெல்லாம் விழாச் சந்தடிகள் அடங்கிய பின்பு, மனைவியை அழைத்து சமாதனப்படுத்தி விடலாமென்றே பல்லைக் கடித்து நின்று கொண்டிருக்க, நிலைமை என்னவோ அவனுக்கு எதிராகவே சென்று கொண்டிருந்தது.

உடன்பிறந்தவளின் பேச்சு உயிரையே உருக்கச் செய்ய, பாஸ்கரை தன் விழிகளால் பொசுக்கிய தயானந்தனின் கைகள் தங்கையை தாங்கிக்கொண்டு நின்றதே பாஸ்கரின் நல்லநேரம். இல்லையென்றால் அவனை துவம்சம் செய்துவிட்டேதான் ஒய்ந்திருப்பான். அத்தனை ஆவேசம், அவ்வளவு கோபம் அவன் கண்களில்…

“உன் உடம்பு இருக்குற அசதியில என்னென்னனவோ பேசிட்டு இருக்கடாம்மா, கொஞ்சநேரம் அமைதியா உக்காரு…” அதட்டல் போட்ட தயா, சிந்துவை அமைதிப்படுத்த முயல,

“என்னை இன்னைக்கு பேச விடுண்ணே… எப்டி அண்ணியே சம்பாதிச்சு அவங்களுக்கு சீர்வரிசை செஞ்சுக்கணும்னு சொன்னாங்களோ, அதே மாதிரி எனக்கான செய்முறைக்கு நானே சம்பாத்திக்க போறேன்.

இது என் மாமியார் சொன்ன நியாயம்தான். என்னை தடுக்காதண்ணே… இனியும் நீ, என்னை தாங்கிக்க வேணாம். பக்கத்துல நின்னு ஆதரவு குடு. அது போதும் எனக்கு…” உணர்ச்சிப்பிழம்பாய் நின்றவள், உடலெல்லாம் நடுக்கம் பரவி தடுமாறித் தள்ளாடிவிட, சிந்துவின் தோள் அணைத்திருந்த மிதுனா, அவளை அமரவைக்க நாற்காலியை முன்னே இழுத்தாள்.

“இங்கே வேணாண்ணி… நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுங்க…” வீறாப்புடன் வெறுப்பினைச் சுமந்து கொண்டு பேசியவள், சூழ்நிலையின் கணம் தாளமுடியாமல் அங்கேயே மயங்கிச் சரிந்தாள். 

உணர்ச்சிக்கொதிப்பில் தத்தளித்தவளுக்கு கர்ப்பிணிகளின் இயல்பான இரத்த அழுத்தம் கூடியிருக்க, மனபாரமும் உடல்பாரமும் தாளமுடியாமல் கீழே சரிந்திருந்தாள் இருபது வயது சிந்தாசினி.

*********************

ஒரே மூச்சாக அனைத்தையும் கொட்டி முடித்து, அழுகையில் கதறத் தொடங்கியிருந்தாள் இன்றைய சிந்தாசினி…

மகளாக, தங்கையாக, அன்னையாக, தனியொருத்தியாக இந்த ஏழு வருடங்களில் நிமிர்ந்து விட்டாள். ஆனால் மனைவியாக, காதலியாக இன்னமும் தோற்றுக் கொண்டுதான் இருக்கிறாள்.

மனதிலுள்ள ஏக்கங்கள் எல்லாம் கரையான்களாக இவளை அரித்துக் கொண்டிருக்க, அதனை அகற்றும் வழிதெரியாமல் திண்டாடித் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

பருவமயக்கம், இனக்கவர்ச்சியில் விளைந்த காதலென்று, கணவனுடனான உறவை வெறுத்தாலும், மனதளவில் முழுதாய் ஒதுக்க முடியவில்லை.

அப்படிச் செய்திருந்தால் இன்றைய தினத்தில் இரண்டாம் திருமணமென்ற அத்தியாயத்தை தன்வாழ்க்கையில் எழுத முனைந்திருப்பாள்.

சுயமரியாதை இல்லாத வாழ்க்கையை தொடர்வதைவிட, மனவலியோடு மரித்தாலும் பெருமை என்றெண்ணியே பிரிவென்னும் ஆயுதத்தை கையில் எடுத்தவளின் நிலை, இன்று அவளையே அழுத்திக் கொண்டிருக்கிறது.

அதீத மனஉளைச்சலே இவள் அடிக்கடி மயக்கமடைவதற்கு காரணமென்று மருத்துவர் கூறியிருக்க, அதற்கான சிகிச்சைகள் இவளுக்கு உடனடியாக தொடங்கபட்டன.

இருமலும், சளிதொந்தரவும் தொடர்ந்து கொண்டு இருந்ததால் மருத்துவமனை வாசம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.  

அங்கிருந்தவாறே, மனஉள ஆலோசனைகள் ஏற்பாடு செய்யப்பட, கடந்த நான்கு நாட்களில், இன்று இரண்டாம் கட்ட ஆலோசனைக்கு அமர்ந்துள்ளாள்.

தன்னைக் கொன்று குவித்த மனபாரங்களை எல்லாம் மனநல மருத்துவரிடம் இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் சிந்தாசினி. 

அடக்கி வைக்கப்பட்ட அழுத்தங்கள், தொடர் அழுகைகளாக வடிவமெடுக்க, மனக்குமுறல்களை கொட்டிக் கொண்டே வந்தவள், இறுதியாக தான்வெடித்து, கணவனை வெறுத்து ஒதுக்கிய நிகழ்வுகளை கூறும்போது, தன்னையும் மீறி வெகுவாய் அரற்றி விட்டாள்.

காய்ச்சலின் போதே, மனைவியின் மனநிலையை மருத்துவர் விளக்கிக் கூறியதும் அதற்குரிய சிகிச்சைகளையும் அங்கிருந்தே எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டிருந்தான் பாஸ்கர். தனது விடுப்பை, மேலும் பத்துநாட்களுக்கு நீட்டித்து பொறுப்பாக மனைவியை கவனித்து கொள்கிறான்.

இப்பொழுது அவன் மட்டுமே மனைவிக்கு துணையாக வந்து ஆலோசனை அறைக்கு வெளியில் அமர்ந்திருக்கிறான். இவளது கதறல்களில் பெரிதும் சங்கடப்பட்ட மருத்துவரும், இவளை அழைத்துச் செல்லவென பாஸ்கரை உள்ளே அழைத்து விட்டார். 

“முடிஞ்சதா சார்… கூட்டிட்டு போலாமா?” கேட்டுக்கொண்டே உள்ளே வந்த பாஸ்கர், மனைவியின் முகத்தை பார்க்க, அவளின் பார்வையோ அத்தனை ரௌத்திரத்தை தாங்கி நின்றது.

பரிவோடு அவளருகே வந்து என்னவென்று கேட்பதற்குள் வெடித்துவிட்டாள் சிந்தாசினி.

“என்னை இப்படி தனியா விட்டுட்டுப் போற பழக்கத்த, இன்னும் விடலையா?” ஆத்திரத்துடன் கேட்க, அவனோ ஒன்றும் புரியாமல் விழித்தான்.

அவளின் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்போமென பாஸ்கர் அமைதியாக அவரின் முகத்தை பார்க்க,

“இவன் எப்பவும் இப்படிதான் டாக்டர்… அன்னைக்கும், இதே மாதிரிதான் அமைதியா வேடிக்கை பார்த்துட்டு நின்னான். எல்லார் முன்னாடியும் என்னை விட்டுக்கொடுத்து, என்னை தலைகுனிய வைச்சான். என்னை அழ வைச்சு பார்க்குறதுல இவனுக்கு தனி சந்தோஷம்… உண்மைதானே? நீயே உன் லட்சணத்த எடுத்துச் சொல்லு… சொல்லு!” பித்துபிடித்தவளாக கோபத்துடன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவள், வேகமாக அவனது சட்டையை பிடித்து உலுக்கி விட்டாள்.

மேலும் குரலை உயர்த்தியபடியே, “ஏன் இப்டி செஞ்ச? என்னை மனுஷியா கூட மதிக்கமாட்டியா? உனக்கு நான் வேணாமா? சொல்லுடா…” உஷ்ண கேள்வியுடன் யாரும் எதிர்பாரா வண்ணம் அடுத்தடுத்தடுத்து பாஸ்கரின் கன்னத்திலும் நெஞ்சிலும் மாறிமாறி அறையத் தொடங்கினாள்.

தன்னிலை மறந்தவளின் செய்கையை தடுப்பதற்கும்கூட தோன்றாமல் பாஸ்கர் அதிர்ந்து நிற்க, மருத்துவர்தான் அவளை விலக்கி நிறுத்தி,

“கூல்… கூல்டவுன் சிந்தாசினி!” என கையை தட்டிக் கொடுத்து அவளை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.

தன்னையும் மீறி நடந்த நிகழ்வினை உணர்வதற்கே சிந்தாசினிக்கு சிலநொடிகள் தேவைப்பட்டன. அதிர்ச்சியுடன் தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற, கணவனை பார்த்த பிறகே சுயம் உரைக்க, அவளுக்குள் ஒளிந்திருந்த படபடப்பும் நடுக்கமும் மீண்டும் அவளை ஆட்கொண்டது.

சென்றமுறை இப்படியான நிலையில்தான் மயங்கிச் சரிந்தாள் என்பதை அனுமானித்த பாஸ்கர், அவளின் கையைப் பிடித்துக் கொண்டே,

“சிந்தாசினி ஒண்ணுமில்லமா… அமைதியா இரு… பி கூல்…” அவளை ஆறுதல்படுத்த, அவளோ முற்றிலும் ஒய்ந்து போனவளாய், அவனது கையை தட்டி விட,

“கொஞ்சநேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு, ரூமுக்கு கூட்டிட்டு போங்க! சிஸ்டர்கிட்ட மெடிசன் குடுக்க சொல்றேன்…” என்றபடியே மருத்துவர் அகன்றுவிட்டார்.

தண்ணீரை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளாமல் இவள் அடமாய் அமர்ந்திருக்க, இவனுக்குதான் கிறுகிறுத்து போனது.

‘இவகிட்ட அடியும் வாங்கிட்டு, இவளையே சமாதானமும் பண்ணிட்டு இருக்கேன்… என்னடா வாழ்க்கை இது?’ மனதிற்குள் புலம்பியவனை,

‘பொண்டாட்டிக்கு கூஜா தூக்குற ட்ரைனிங், உனக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு நினைச்சுக்கோ பாஸு’ மனசாட்சி நக்கலடித்தே தட்டிக் கொடுக்க, மனைவியை பார்த்து இன்னும் நொந்து போனான்.

தான் அருகில் இருந்தாலும், ஆதரவிற்கு தன்னை நாடாமல் உணர்வற்று அவள் அமர்ந்ததே, பாஸ்கருக்கு பெரும் வலியை ஏற்படுத்திவிட, மனதளவில் தாங்கள் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம்தானோ என்ற எதிர்மறையான எண்ணமும் வந்து இவனை குழப்பத் தொடங்கியது.

நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, மனைவியை எவ்வாறு அங்கிருந்து கிளப்புவதென்றே பாஸ்கருக்கு புரியவில்லை. இடையில் நர்ஸ் வந்து மாத்திரையும் கொடுத்துவிட்டுச் செல்ல, மீண்டும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள். 

“டாக்டர் ரூம்ல உக்காந்திருக்கோம்டி… எந்திரிச்சு வா! நம்ம ரூமுல போயி உன் கோபத்த கண்டினியூ பண்ணிக்கலாம்” பாஸ்கர் அமைதியாகச் சொன்னாலும் இவள் அசையவில்லை.

“நீயா வரலன்னா உன்னை தூக்கிட்டுத்தான் போகணும்” என்றவாறே, அவளை வலுக்கட்டாயமாக கைகளில் ஏந்தியும் கொள்ள,

“இறக்கி விடுடா என்னை… நானே வர்றேன்!” கணவனின் தொடுகையில் நிகழ்விற்கு வந்தவள் திமிறத் தொடங்கினாள்.

“உப்புமூட்டை தூக்கின பிறகு இறக்கி வைக்க முடியாது… சொல்பேச்சு கேக்காம இருந்தா, அப்படியே வேடிக்கை பார்த்திட்டு இருந்திடுவேன்னு நினைக்கிறியா? டாக்டர் என்ன மாமனா மச்சனா… அவரும் அடுத்த பேஷண்ட பாக்க வேணாமா? கதவை திறடி வெளியே போவோம்…” என மனைவியை ஏவ, 

“போடா புண்ணாக்கு… கிடைச்சது சாக்குன்னு ரொம்பதான் அராஜகம் பண்ற…” என்றவாறே அவனின் தோள்பட்டையை கடித்துவைக்க, அவன் அலறிய நேரத்தில் குதித்து வெளியே ஓடிவிட்டாள் சிந்தாசினி.

“காட்டுவாசியாட்டம் அடிச்சும் கடிச்சும் ஓடுறியா நீ? உன்ன…” பல்லைக் கடித்தே அதட்டியவன்,

“மெதுவா போ… பின்னாடியே வர்றேன்” என்றுவிட்டு அங்கிருந்த நர்ஸிங் ஸ்டேசனில் அடுத்தவருகை எப்போதென்று கேட்டுவிட்டே, அறைக்கு சென்றான்.

“என்னடி இப்படி இறங்கிட்ட?” தங்களுக்கான அறையில் கண்ணை மூடி, மூச்சு வாங்க அமர்ந்திருந்த சிந்தாசினியை கேலியாக நோக்க,

“எப்படி இறங்கிட்டேன்?”

“அடிக்கிற… கடிச்சு வைக்கிற! வாடாபோடா சொல்ற… அநியாயத்துக்கு திட்டுற… இது உன் சுபாவம் இல்லையே?” சீண்டலுடன் கேட்டவனுக்கு, இவையெல்லாம் அவளின் கோபத்தின் வெளிப்பாடென்று நன்றாகத் தெரிந்தது. எப்படியாவது மனதில் உள்ளதை இவள் வெளியில் கொட்டினாலே போதுமென்ற நிலைமைக்கு வந்துவிட்டான் பாஸ்கர்.  

ஆனாலும் அவளை சகஜமாக்கும் பொருட்டு, அவளை வம்பிழுக்கவென்றே பேச்சினைத் தொடர்ந்தான்.

“அது… தெரியல! ஆனா சாரி…” மீண்டும் தன் கூண்டிற்குள் அவள் ஒளிந்துகொள்ள,

“என்ன சாரி? எதுக்கு சாரி?”

“அதான் அங்கே நடந்ததுக்கு… ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்!” சிந்து தலைதாழ்த்தி சொல்ல,

“ரொம்ப பீல் பண்றியா சிந்தாசினி?” இவனும் அமைதியாக கேட்க, ஆமென்று தலையசைத்தாள்.

“ஒஹ் காட்! உன்னோட ஃபீலிங் எனக்கும் கஷ்டமா இருக்கு… ஒண்ணுவேணா செய்வோமா?” கேட்டவனை, என்னவென்று பார்வையால் இவள் நோக்க,

“நீ எத்தனை அடி அடிச்சியோ அத்தனை டைட் ஹக், அண்ட் லிப்லாக் குடுத்திடு, காம்பன்செட் ஆகிடும். என்ன ப்ரோசீட் பண்றியா சினிகுட்டி?” சிரிக்காமல் சீண்டலைத் தொடர்ந்து கொண்டிருக்க,

“அடங்கமாட்டியா நீ?” வெகுண்டவள் தலையணை கொண்டு கணவனைத் தாக்கத் தொடங்கினாள்.

“உன்னோட காம்பன்செட் கவுண்டிங் ஏறிகிட்ட போகுது சிந்தாசினி… நான் எவ்வளவுனாலும் வாங்கிக்க ரெடி… அதே அளவு உன்கிட்ட இருந்து வசூல் பண்ணாம விடமாட்டேன்… டாட்!” ஆள்காட்டிவிரலால் அவள் நெற்றியை தட்ட,

“என்னை அழ வைக்கணும் இல்லன்னா கோபபட வைக்கணும், அதுதான் உங்க ஆசையா?” என்றவாறே இவள் மீண்டும் அழுகையை ஆரம்பிக்க,

“நீ ரொம்ப டயர்டா இருக்கடா… ரெஸ்ட் எடு… அப்புறம் பேசலாம்”

“என்ன? இப்படியெல்லாம் கவனிச்சு, திரும்பவும் சேர்ந்து வாழறதுக்கு அடிபோடுறீங்களா? குற்ற உணர்ச்சியே இல்லாத ஜடமா நீங்க?” இவள் காட்டமாகவே கேட்க,

“ஆமா… சேர்ந்து வாழறதுக்குதான் அடிபோடுறேன்… இப்ப என்னாங்கிற? அதுக்கு அச்சாரமாதான் நீயும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை நல்ல்லலாவே கவனிச்சுருக்க… தப்பு பண்ணிட்டேன்னு நான் இதுவரைக்கும் அமைதியா இருந்ததுதான், உனக்குப் பிடிக்கலையே! அதான் அய்யா டெஸ்ட்மேட்ச்ல இறங்கிட்டேன்… இனி ட்வென்டி ட்வென்டி ஸ்டார்ட் பண்ணிடலாம்…” சிரிப்புடன் தன்னை நியாயபடுத்திக் கொண்டவனைப் பார்த்து கொதித்துக் கொண்டிருந்தாள் சிந்தாசினி.

“எனக்கு இங்க இருக்கவே மூச்சு முட்டுது… நாளைக்கே வீட்டுக்கு போக டாக்டர்கிட்ட பேசுங்க…”

“உன்னோட ஹெல்த் செட்டிலாகிட்டா அவங்களே அனுப்பிடுவாங்கடா!”

“வந்து ஒன்பது நாளாச்சு… வீட்டுல இருந்து நெபுலைசர் எடுத்துக்கறேன். எனக்கு இந்த கவுன்சிலிங் அலர்ஜியா இருக்கு. அதோட உங்க விளங்காத மூஞ்சிய மட்டுமே பார்த்திட்டு இருக்குறதும் பிடிக்கல… அதையும் மீறி இருந்தா எல்லாரையும் காயபடுத்திடுவேன்… நான் வீட்டுக்கு போயாகனும்” பிடிவாதம் பிடித்ததில் மறுநாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் சிந்தாசினி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!