தண்ணிலவு தேனிறைக்க… 20

TTIfii-9723e958

தண்ணிலவு தேனிறைக்க… 20

தண்ணிலவு – 20

வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு… புதுப் பொலிவோடு வாசலில் வாழைமரங்கள், தோரணங்கள், தென்னங்குழையால் அலங்கரிக்கபட்டிருந்தது.  .

அதற்கு இணைகூட்ட, வீட்டுச் சுவர்களில் சீரியல் விளக்குகளும், கண்சிமிட்டும் வண்ண மின்விளக்குகளும் சேர்ந்து வானவில்லின் வர்ணஜாலங்களை கொட்டிக் கொண்டிருந்தன.

சுமார் 900 சதுரடியில் உள்ள வீட்டுமனை… வீட்டைச் சுற்றி பெரிய சுற்றுசுவர். அம்சமான சிறிய கோட்டை வாசலாக அழகான இரும்புகேட், முன்வாசலில் பலவண்ணப் பூச்செடிகளை அலங்கரித்து நிற்கும் சிறிய போர்டிகோ… அதனைத் தாண்டியதும் வரவேற்பறை.

ஹாலின் வலப்புறத்தில் இரண்டு அறைகளும், அதற்கு எதிர்புறத்தில் சிறிய பூஜையறையைத் தொடர்ந்து டைனிங்கும், இக்கால மாடர்ன் கிச்சனும் வெகுஅம்சமாக அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்ததாக கம்பிகள் வைத்து அடைக்கப்பட்ட வராண்டா… பாஸ்கரின் குடும்பம் வாழத் தயாரான புதிய வீட்டின் அமைப்பு இது.

வீட்டின் முன்வாசலுக்கு அருகிலேயே மாடிப்படி எழுப்பப்பட்டு, முதல் தளத்திலும் இதே போன்றதொரு குடியிருப்பு, சற்றே சிறிய அளவில் கட்டத் தொடங்கி, அதுவும் முடியப்போகும் தருவாயில் இருந்தது.

வீட்டின் அனைத்து நிலைகதவுகளிலும் பலூன் தோரணமும், பூமாலையும் தொங்கவிடப்பட்டிருக்க, வெகுசிரத்தையாக கிரஹப்பிரவேச வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பஞ்சகச்ச பட்டுவேட்டியில் பாஸ்கரும், அவனுக்கு இணையாக, அடர்ஊதா காஞ்சிப்பட்டில் சிந்தாசினியும் தம்பதியராக அன்றைய சாஸ்திர சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தார்கள். 

தன் மனையாளை நினைத்து அத்தனை பெருமிதம் பாஸ்கருக்கு… அவளிடத்தில் மாற்றம் வருமென்று எதிர்பார்த்தவன்தான். ஆனால், அது இத்தனை விரைவாக நடக்குமென்று நினைக்கவில்லை.

மனமெங்கும் ஆராவாரமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருந்தது. கணவனுக்கு குறையாத உற்சாகத்தில் அன்றைய நாளின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் சிந்தாசினி.

இருவருக்குமான கோபங்கள் தீர்க்கப்பட்டதா அல்லது அவர்களுக்குள்ளேயே நீர்த்துப்போனதா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் இருவரும் செல்ல விரும்பவில்லை. ‘இந்தகணம், இந்தநாள், இதுபோதும் நமக்கு’ என்ற சந்தோசத்தில் திளைத்து தங்களுக்குரிய நாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.  

மிகநெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்க, வந்தவர்களும், பாஸ்கர் குடும்பத்தினரை மனதார வாழ்த்திவிட்டு விடைபெற்றனர்.

சிந்தாசினியின் பிறந்த வீட்டு சீர்வரிசைகளே, அந்த வீட்டினை நிறைத்து அழகுபடுத்தியிருந்தது. நாராயணன், அலமேலு தம்பதியர் சமையலறைக்கு தேவையான அனைத்து பாத்திரம் பண்டங்களையும், மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மளிகைகளையும் வாங்கி குவித்து விட்டிருந்தனர். தமிழ்செல்வன் தனது முறையாக ஃப்ரிட்ஜ் மற்றும் மிக்சி, கிரைண்டரை சீதனமாக அளித்திருந்தான்.

வாஷிங்மெஷின், ஷோஃபாசெட், கட்டில், பீரோ, பிளாஸ்டிக் சேர்கள், மற்றும் இரண்டு அறைகளுக்கான ஏ‌சி என அனைத்து ஃபர்னிச்சர்களையும், தயானந்தன் தனது பங்கிற்கு இறக்கி வைத்து பிறந்தவீட்டு சீர்வரிசையை குறையாமல் செய்திருந்தான்.

அதிகப்படியாக எதுவும் வேண்டாமென பாஸ்கரும் சிந்துவும் சொன்னதையெல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளவில்லை அந்த முரட்டு பாசமலர்.

“நான் விசேஷம் வைக்கிறப்ப, நீயும் உன் பங்கை செய்யலாம் மாப்ள… உனக்கும், நான் சான்ஸ் தர்றேன்!” ஒற்றைபதிலில் இருவரையும் வாயடைத்திருந்தான்.

அன்றைய தினமே பால்காய்ச்சி முடித்து, சர்க்கரை பொங்கலும் கதம்பசாதமும் செய்து, சமையலை ஆரம்பித்திருந்தனர். அனைவரும் அங்கேயே இரவு உணவை முடித்துக் கிளம்பியிருக்க, மிதுனாவும் சாந்தினியும் சேர்ந்து, எஞ்சி நிற்கும் வேலைகளை பொறுப்பாக முடித்துக் கொடுத்தனர்.

“மனம் நிறைஞ்ச சந்தோசத்தோட, உன்குடும்பம் உன்வீடுன்னு பொறுப்பை கையில எடுத்துக்கோ சிந்து! முடிஞ்சுபோன கஷ்டமெல்லாம் ஞாபகத்துக்கு வராத அளவுக்கு புதைச்சு வை! இதை பாஸ்கர்கிட்டயும் சொல்லு! இனிமேட்டு எந்தவொரு பஞ்சாயத்துக்கும், நாங்க வர்றமாதிரி இருக்கக்கூடாது” கண்டிப்பு கலந்த அன்போடு சாந்தினி பேசிய தோரணையில், மாமியார் மஞ்சுளாவே அந்த நொடியில் வந்து அறிவுறுத்தி விட்டு சென்றதைப் போலவே உணர்ந்தாள் சிந்தாசினி.

பெரிய நாத்தியின் பேச்சில் அதிர்ந்து நின்றவளை கண்ட மிதுனா, “சட்டுன்னு பேசி பயமுறுத்தி வைக்காதேக்கா… தம்பி வீட்டுக்கு விருந்தாட சந்தோஷமா வரணும்னு, அக்கா சொல்றா சிந்து. நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே! இனி விடியுற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நல்லநாள் தான்” வாஞ்சையுடன் கன்னம்தட்டி, தம்பி மனைவியை ஆற்றுபடுத்த, மொத்தமாக கலங்கி நின்றாள் சிந்து.

இத்தனை வருடங்களில் இவளின் மீதும் தவறிருப்பது தெரிந்தும், ஒருநாள் ஒருபொழுது கூட தவறாகவோ குற்றமாகவோ சகோதரிகள், இவளைப் பேசியதில்லை. வேறுபடுத்தியும் பார்த்ததில்லை. இத்தனை ஏன்? பாஸ்கரை முன்னிறுத்தி, தம்பியுடன் சேர்ந்து வாழப்பார் என்றும்கூட வற்புறுத்தியதில்லை.

மிதுனாவிற்கு நாத்தனார் முறையாக இருந்தாலும் சாந்தினிக்கு அப்படியில்லையே! ஆனாலுமே அவளும் தம்பியின் மனைவிக்கென அமைதிகாப்பாள். ஒரு பெண்ணிற்கு தாங்கிக்கொள்ளும் பிறந்தவீட்டு சொந்தங்கள் அமைவது வரமென்றால், எந்தநிலையிலும் உதாசீனப்படுத்தாத புகுந்தவீட்டு உறவுகள் கிடைப்பதும் மிகப்பெரும் பலமே!

அப்படிபட்ட வரமும் பலமும் பெற்றும், வாழ்க்கையில் சறுக்கிய தன்நிலைக்கு, தனது தவறும் சரிபங்கு உண்டென்ற குற்றவுணர்வில் கலங்கிக் கொண்டிருப்பவள்தான் சிந்தாசினி. இன்று, அந்த உணர்வும் எல்லைமீறி அவளை உரசிப் பார்த்ததில் உணர்ச்சிவசப்பட்டு தன்னை வெகுவாய் தாழ்த்திக் கொண்டாள்.  

“என்மேல, உங்களுக்கு கோபமே வராதா அண்ணி? இல்லன்னா… நீங்களும் உங்க தம்பி மாதிரி கோபத்தை வெளியே காட்டாம பூட்டி வைச்சுருக்கீங்களா?” கரகரத்து கேட்டவளைப் பார்த்த சகோதரிகளுக்கு, தம்பி மனைவியின் மேலுள்ள வாஞ்சை இன்னும் கூடிப்போனது.

“நாங்க கோபபட்டு பேசினா மட்டும், எல்லாம் முடிவுக்கு வரப்போறது இல்லையே சிந்து… அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்க மனசைப் பொறுத்தது. அன்னைக்கு நீ சொன்னமாதிரி, முகத்துக்கு நேரா காறித்துப்பிட்டு, பின்னாடி வருத்தபடுறதும் பெரிய அவஸ்தை தானே!

அதுவுமில்லாம, ரெண்டுபேருமே வாழ்க்கை அனுபவமில்லாம, நிதானமில்லாம நிக்கிறப்போ யாரைக் குறைசொல்லி, என்ன ஆகப்போகுது? எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சு, வரப்போற காலத்தை நிம்மதியா, சந்தோசமா வாழப்பாருங்க!” சாந்தினியின் உள்ளார்ந்த பேச்சு, மனதை மயிலிறகாக வருடி அமைதிபடுத்தியதில் பெரியவளின் தோளில் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சிந்து.

“நீ மட்டும், அன்னைக்கு எங்க தம்பிய விட்டு விலகிப் போகாம இருந்திருந்தா, அவனுமே ரோஷபட்டு இந்த நிலைமைக்கு வந்திருப்பானாங்கிறது சந்தேகம்தான் சிந்து! நமக்கு நெருக்கமானவங்களோட கோபம், நம்மை பக்குவபடுத்தி அழகு பார்க்குதுன்னா, அங்கே உண்மையான அன்பும் பாசமும் இருக்குறதா தானே அர்த்தம். நடந்ததுக்கெல்லாம் நீதான் காரணம்னு நினைச்சு, மனசைக் வேதனைபடுத்திக்காதே!” மிதுனாவும் சமாதனம் கூற, மீண்டும் கண்ணீரில் கரைய ஆரம்பித்து விட்டாள் சிந்தாசினி.

“என்னை மன்னிச்சிருங்க அண்ணி! நான் அவசரபட்டிருக்க கூடாது. உங்களையெல்லாம் ஒதுக்கி வைச்சு எத்தனையோ நாள், யாரோ போல நானும் இருந்திருக்கேன்!” விசும்ப ஆரம்பித்துவிட,  

“நல்லநாள் அதுவுமா, எதுக்கு இப்டி கண்ணை கசக்கிட்டு இருக்க சிந்து? கண்ணத் துடை… இன்னும் சின்னபொண்ணாவே இருக்க…” சாந்தினி அதட்ட,

“டேய் பாஸ்கி! ரூம்ல என்னடா பண்ற? இங்கேவா…” மிதுனாவும் தம்பியை அழைத்து விட்டாள்.

தமக்கைகளின் அழைப்பில் வெளியே வந்தவன், மனைவியின் அழுத முகத்தைப் பார்த்துவிட்டு, “என்னாச்சுக்கா? எதுக்கு இப்போ டேம் ஓபன் பண்ணியிருக்கா இவ?” குழப்பத்துடன் கேட்க,

“படவா! வீட்டுக்காரி அழறாளேன்னு கொஞ்சமாவது ஃபீல் பண்றியா? கிண்டலடிச்சுட்டு இருக்க நீ…” மிதுனா கடிந்து கொள்ள,

“இவ டேம் ஓபன் பண்ணினா, அடுத்த நிமிஷம் மூச்சுமுட்டுற அளவுக்கு என்னை வச்சு செய்யப்போறான்னு அர்த்தம். அதெல்லாம் எங்க குடும்பரகசியம்…” வீராப்பு பேசியவன், மனைவியைப் பார்த்து,

“என்ன பஞ்சாயத்துடி வைக்கப்போற? வந்த அன்னைக்கே ஆரம்பிச்சுட்டியா!” பொய் முறைப்போடு கணவன் கேட்டதும், தாளமுடியாமல் சிந்து உள்ளறைக்கு சென்றுவிட,  தமக்கைகளின் கோபபார்வையை பரிசாக பெற்றுக் கொண்டான் பாஸ்கர்.

“வளந்து கெட்டவனே! ஏற்கனவே அவ பழசை நினைச்சு  அழுதுட்டு இருக்கா… என்ன ஏதுன்னு ஆறுதலா கேக்காம, கூட கொஞ்சம் அழவைக்கிற மாதிரி பேசிட்டு இருக்க… அவ உன்னை விட்டு விலகியிருக்கனும்னு நினைச்சதுல தப்பேயில்லடா…” சாந்தினி உடன்பிறந்தவனை கண்டிக்க,

“அக்கா… நீ வேற சமயம் பார்த்து புதுசா எதையும் ஆரம்பிக்காதே!” என இடையிட்ட மிதுனா, “பாஸ்கி, அமைதியா பேசி அவளை சமாதானப்படுத்துடா! ரொம்ப எமோசனலா இருக்கா… முடிஞ்ச வரைக்கும் பழசு எதுவும் பேசாம அமைதியா இருக்கப் பாருங்க! அதுதான் இப்போதைக்கு நல்லது. நேரமாகிடுச்சு… நாங்க கிளம்புறோம்டா, பார்த்துக்கோ!” சொல்லிக்கொண்டே இருவரும் புறப்பட்டு நின்றனர்.

“அக்காஸ்! வெயிட் பண்ணுங்க… துணைக்கு வர்றேன்!” பாஸ்கரும் உடன்வர ஆயத்தமாக,  

“வேணாம்டா… நம்ம ஆட்டோ அண்ணா ஏற்கனவே வந்தாச்சு! என்னை இறக்கி விட்டுட்டு, அக்காவையும் வீட்டுல கொண்டு போயி விட்டுடுவாரு! பசங்க ரெண்டுபேரும் ரூம்ல அடிச்சு போட்ட மாதிரி தூங்குறாங்க! காலையில எழுந்ததும் வீட்டுக்கு அனுப்பி வை! டிஃபன் பண்ண முடியலன்னா, ஃபோன் பண்ணு! ரெடிபண்ணி குடுத்து விடுறேன்” அடுத்தடுத்த கட்டளைகளை கூறிய வண்ணமே தமக்கைகள் கிளம்பி விட்டனர்.

அன்றைய நாளிற்கான ஓட்டங்கள் முடிந்த ஆயாசத்துடன் முன்கேட்டை பூட்டிவிட்டு பாஸ்கர், மனைவியைத் தேடி வர, அப்பொழுதும் மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள் சிந்து.

“இப்ப என்ன நடந்ததுன்னு, அழுது வடியுற சிந்தா!” கேட்டபடியே மனைவியை அருகில் இழுத்துக்கொண்டு அமர, தோதாக கணவனின் தோள்சாய்ந்தாள் சிந்தாசினி.

“ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா…. யாரையும் புரிஞ்சுக்காம சுயநலமா இருந்துட்டேனோன்னு உறுத்தலா இருக்கு” இறங்கிய குரலில் தன்நிலையை கூற,

“ஏய்! மொத இப்படி நினைக்கிறத நிறுத்து… நான் மட்டும் ரொம்ப ஒழுங்கா என்ன? உனக்கு குறையாம, என் கோபம் மட்டுமே பெரிசுன்னு, உன்னைத் தேடிவராம நானும் சுயநலமா இருந்திருக்கேன்! அக்காக்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் காதுல வாங்கிக்ககூட அந்த நேரத்துல நான் தயாராயில்ல… அதையெல்லாம் மறந்து இப்ப எல்லா காரியத்துக்கும் வந்து நிக்கிறாங்கன்னு நான் ஃபீல் பண்ணி அழுதுட்டு நின்னா, அடுத்த கட்டத்துக்கு போகமுடியாதுடி!” முடிந்தவைகளை பெரிதுபடுத்தாமல் நிதர்சனத்தை ஏற்கச்சொன்னான் பாஸ்கர்.

“ஆனாலும் மனசு வலிக்குது மாமா! அவங்களை நேருக்குநேரா கூட என்னால பார்க்க முடியல”

“பெரியவங்களுக்கு, அவங்க பொறுப்பு என்னன்னு தெரிஞ்சிருக்குடா! அதான் எங்கேயும் விட்டுக்கொடுக்காம, நமக்கான்னு வந்து நிக்குறாங்க! நாமளும் இனிமே அப்படி இருக்கப் பழகிக்கணும். இப்படியெல்லாம் ஓவர் எமோசனல் ஆகுறதும் நல்லதில்லடா!” என்றவன் மனைவியின் கண்ணீரை துடைக்க முன்வர, அவன் கைகளில் முகத்தை கொடுத்தபடி,   

“நீங்களும் அப்படிதானே இருக்கீங்க? நான்தான்… நான் மட்டும்தான்! உங்கமேல இருக்குற கோபத்த ஊருக்கே தெரியுற மாதிரி ரீல் ஓட்டிட்டு இருக்கேன்!” மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ஹாஹா… இதக்கூட கோபமாதான் சொல்வியாடி?”

“என் நிலமை உங்களுக்கு சிரிப்பா இருக்கா? அப்படியென்ன கோபம் என்மேல உங்களுக்கு… அதையும்தான் சொல்லுங்களேன்! நானும், என் நியாயத்தை சொல்றேன்!” பேச்சை திசைதிருப்பி சண்டைக்கு நின்றாள் சிந்து.  

“மொதநாளே சண்டை போடனுமாடி?”

“எல்லாமே விலாவாரியா பேசி தீர்த்துப்போம் மாமா! நீங்க சொல்லியே ஆகணும்” உடும்பாகி கணவனை உலுக்கி எடுத்ததில், சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது பாஸ்கருக்கு…

“ஒண்ணா… ரெண்டா… கோபங்கள்!

எல்லாம் சொல்லவே…

ஓர்நாள் போதுமா?” கேலியாக மெட்டுபோட்டு பாடியவனை தலையணையால் அடிக்கவர,  

“நோ வயலன்ஸ் பேபி! சொல்றேன்… முடிஞ்சா லிஸ்ட் போட்டுக்கோ!” இலகுவாக கூறியவனின் குரல், நொடியில் கடினத்தை உள்வாங்கிக் கொண்டது.

“கல்யாணத்துக்கு முன்னாடி, என்மேல நம்பிக்கையில்லாம அவசரபட்டுட்டேன்னு உன் நெலமை தெரியாம கோபபட்டேன்! அது உனக்கே தெரியும். அதுக்கு பிறகும் நீ, என்னை தேடி வரணும்னு நினைச்சேன்… அது நடக்கல…

கல்யாணம் முடிஞ்சு ரெண்டுநாள் சந்தோசமா பேசி சிரிச்சிட்டு, திரும்பவும் நிறைய சண்டை சச்சரவுகள் ஓடி, நம்மை தூரமா நிக்க வைச்சது. அதுக்கும் காரணம் நீதான்னு உன்மேல கோபமா இருந்தேன். நிஜமா சொல்றேன்.., அந்த சமயத்துல ஒரு பொண்ணோட மனசுபடுற கஷ்டத்தையெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நான் தெளிவானவனா இல்லடி!

அப்புறம் உன்னோட வளைகாப்பு…. அன்னைக்கு நீ எடுத்த முடிவு, என்னை மொத்தமா புரட்டிப் போட்டுடுச்சு! என் நிலைமை தெரிஞ்சுமே, நீ என்னை வேணும்னே அவமானப்படுத்துறதா நினைச்சு, உன்மேல அத்தனை ஆத்திரம் வந்தது” என்றவனை கண்களால் எரித்தாள் சிந்தாசினி.

‘நீ பேசமால் ஊமையாக இருந்துவிட்டு, என்மீது குற்றம் சுமத்துவாயா?’ என்ற கோபபார்வையே தொக்கி நிற்க,

“எல்லாம் சொல்லி முடிக்கிற வரைக்கும் அமைதியா இருடி!” மனைவியிடம் கோரிக்கை வைத்துவிட்டு, பழைய கதையினை தொடர்ந்தான் பாஸ்கர்.

“கர்ப்பமா இருக்குற பொண்ணுக்கு இப்படியெல்லாம் மனஅழுத்தம் வரும்னு எனக்கு தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தாலும் அன்னைக்கு, நான் இருந்த நிலமையில அதை முக்கியமா நினைச்சிருக்க மாட்டேன்.

என் மனசு முழுக்க வேலை தேடிக்கணும். என்னை கீழிறக்கி பார்த்தவங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கணும்… அது மட்டுமேதான் ஓடிட்டு இருந்தது. அக்கா, மாமாவையும் அந்த சமயத்துல வெறுப்பா பார்த்து வைச்சேன்.

குழந்தை பிறந்த விஷயம் தெரிஞ்சு உன்னை பார்க்க வந்தா, வாய்க்கு வந்தத பேசி குடும்பம் மொத்தமும், எங்களை கழுத்தை பிடிச்சு தள்ளிவிடாத குறையா வெளியே அனுப்பி வைச்சதுல இன்னுமே வெறுத்துப் போயிட்டேன்!

இனிமே, உன் முன்னாடி உத்தியோகஸ்தனா நிக்கனும்ங்கிற முடிவோட கிடைச்ச வேலைக்கு போக நினைச்சேன். அந்த நேரத்துல எதிர்பாராவிதமா அம்மா தவறிப்போனதும், மொத்தமா அரண்டு போயிட்டேன் சிந்தாசினி…” கமறிய குரலில் தன்னிலையை விளக்கிக்கொண்டே வந்தவனின் கண்களும் வேதனையை சுமந்து நிற்க, பதில் பேசாது ஊமையாகிப் போனாள் மனைவி.

“சாவு வீட்டுல, அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகள் எல்லாமே நடந்ததே ஒழிய, என்னை கவனிக்கவோ, என்னை நம்பி பொறுப்பை கொடுக்கவோ யாரும் முன்வரல… எல்லாருக்கும் வேண்டாதவனா வாய்விட்டு அழக்கூட உரிமையில்லாதவனா ஒருஓரமா நின்னுட்டு இருந்தேன்.

மகனா, அம்மாவுக்கு கொள்ளி வைச்சேன்! ஆனா, அந்த பொறுப்பை நான் கையில எடுத்துடுக்கல… அந்த வலி என்னை ரொம்ப அழுத்தி போட்டது. அந்த நேரத்துல வந்த நீயாவது, எனக்கு ஆறுதல் சொல்வேன்னு எதிர்பார்த்தேன் சிந்தா!

அப்பவும் நம்ம ஈகோ, நமக்குள்ள நல்லாவே விளையாண்து பார்த்துச்சு! குழந்தைக்கு பால் வாங்கவும் வக்கில்லாதவன், பெத்தவளை பார்த்துக்கவும் துப்பில்லாம, சுயநலமா இருக்குறவன்கூட வாழமாட்டேன்னு திரும்பவும் நீ கிராமத்துக்கு போயிட்ட… நானும் ரோசப்பட்டு ஊரைவிட்டு போயி, ராப்பகலா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

என்னோட உழைப்பு, என்னை நல்லாவே செதுக்க ஆரம்பிச்சது. அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறத்துக்கு நிறைய போராட வேண்டியிருந்தது. அந்த சமயத்துல உன்னைப் பத்தி நினைச்சு பார்க்ககூட எனக்கு நேரமில்ல!

மனசு முழுக்க நீ, என்னை நம்பாம போன வேதனைதான் இருந்தது. வக்கில்லாதவன் வளந்து நிக்கிறேன்… நீ எதிர்பார்த்த தகுதி வந்துருச்சான்னு உன்கிட்ட சண்டை போடத் தோணும். அதுக்குதான் ரெண்டு வருசத்துக்கு பிறகு அக்கா வளைகாப்பு காரணம் சொல்லி வந்தேன்!” பெருமூச்சுடன் சொல்லி நிறுத்தியவனை ‘அப்படியா’ என்ற கேள்விப் பார்வையில் துளைத்தாள் சிந்து.

அன்றைய தினம் அவளிருந்த மனநிலை இப்போது நினைத்தாலும் அத்தனை அதிர்வைக் கொடுக்கும் அவளுக்கு… கணவனிடம் கண்ணாலேயே அமைதிப்போர் புரிய ஆரம்பித்தது அன்றிலிருந்துதானே…

“ஆனா, அன்னைக்கு நீங்க, என்கூட பேசவும் முயற்சி பண்ணலையே மாமா?” அப்போதைய நினைவில் மனைவி கேட்க,

“எப்பவும் போல என்னோட ஈகோ, உன்னை நேரடியா பார்க்ககூட விடல… நீயும் அதுக்கு தப்பாம நடந்துகிட்ட! ஆனா, நம்ம பையனைப் பார்த்ததும் எல்லாமே மாறிப்போறிடுச்சு. கோபமிருந்த இடத்துல அவன் வந்து உக்காந்துட்டான். அந்த நேரத்தை மறக்கவே மாட்டேன்டி!” வெகுநேரத்திற்கு பிறகான அவனது மெல்லிய சிரிப்பில் மனைவியின் மனமும் அமைதியடைந்தது.

‘அப்பாடி! பழைய நிலைக்கு வந்துவிட்டான். இனி கவலையில்லை’ என்ற நிம்மதியில்,

“அன்னைக்கே என்மேல இருந்த கோபமெல்லாம் காலாவதியாகிடுச்சா மாமா?” சன்னச்சிரிப்புடன் கேட்டவளின் மூக்கினைத் திருகி,

“போயே போச்சு… இந்த பெரிய மனுஷி, பேசாத பெரிய பேச்செல்லாம் பேசி, எல்லாரையும் வாயடைக்க வச்சா பாரு! அப்பவே அசந்துட்டேன்… உன்னோட முடிவுக்கும் மதிப்பு கொடுக்கலாம்னு அமைதியா ஒதுங்கியிருக்க, அப்பதான் முடிவு பண்ணேன் சிந்தா!” என்றவனின் பேச்சில், அவளும் ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த மிதுனாவின் வளைகாப்பு தினத்திற்கு சென்றாள்.

அந்தநாளை அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன? மனதை கல்லாக்கிக் கொண்டு, பிரிவு ஒன்றே தனக்கு சாத்தியப்படுமென்று பிடிவாதம் பிடித்து, அனைவரின் அறிவுரையையும் செவிமடுக்காமல் தனித்து சென்றவள்தானே இவள்.

நீரூபூத்த நெருப்பாக மனதிலிருந்த ஆதங்கங்களை எல்லாம் ஒரெடியாக இறக்கி வைத்ததாக எண்ணிக்கொண்டு, புதிய பாரத்தை சுமக்க ஆரம்பித்ததும் அன்றுதானே! மலரும் நினைவுகளை தூண்டிய மனது, அந்த நாளிற்கே சென்று அவளின் தனி ஆவர்த்தனத்தை ஓட்டிப்பர்த்ததது.  

“அளவுக்கதிகமா அவரை நேசிச்சதாலதான் இதுவரைக்கும் அவரை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்ல… யார்கிட்டயும் குறைவா ஒருசொல்லும் சொன்னதில்ல! இத்தனை ஏன்? நேருக்குநேரா என் கோபத்தகூட, நான் காமிச்சதில்ல… என்னோட இந்த நெலமைக்கு, என்னோட முட்டாள்தனமும் வயசுக்கோளாறும்தான் காரணம்னு நினைச்சு, என்னை நானே தண்டிச்சிட்டு இருக்கேன்…” ஆழ மூச்செடுத்துக் கொண்டு பேசிய அன்றைய சிந்துவின் பேச்சில், தன்மீதான மனைவியின் காதல் பட்டவர்த்தனமாக வெளிப்பட, பாஸ்கருக்கு மிதமிஞ்சிய பெருமைதான். ஆனால் அதை கொண்டாடத்தான் முடியவில்லை.

“உயிரா நினைக்கிறவங்கள, ஒவ்வொரு நிமிசமும் வெறுப்போடு பார்த்து எப்படி குடும்பம் நடத்த முடியும்? அந்த சாமர்த்தியம் எனக்கில்ல… இந்த நிமிஷம் என் கோபத்துக்கு, அவரை பலியாக்கினாலும், பின்னாடி அத நினைச்சு வருத்தபடப் போறதும் நாந்தானே?

ஆறாத ரணமா பதிஞ்சுபோன என்னோட துன்பமெல்லாம், இவரை பார்க்கப்பார்க்க, இன்னும் பாரம் கூடிப்போய் கோபமா, வெறுப்பா மாறுமே ஒழிய, எங்களுக்குள்ள சந்தோஷம் இருக்காது. கோபத்துலயும் வெறுப்புலயும் புதுப்புது பிரச்சனைகள்தான் மறுபடியும் வந்து நிக்கும்” அழுகைக்கு மாறிய தொண்டையை சரிசெய்து கொண்டவாறே தொடர்ந்த மனைவியை இமைதட்டாமல் பார்த்து அதிசயித்தான் பாஸ்கர்.

“என் கோபம் அங்கீகரிக்கபடணும். என் உணர்வுகளுக்கு மதிப்பு வேணும். எனக்கும் உணர்ச்சிவசப்படாம, பொறுமையா எதையும் ஏத்துக்குற பக்குவம் வரணும். அது, நான் தனியா இருந்தா மட்டுமே முடியும். நடந்தத அத்தனை சீக்கிரம் மன்னிச்சு, மறக்க என்னால முடியாது” தீர்க்கமான முடிவுடன் பேசிய சிந்துவின் பார்வை பாஸ்கரை தொட்டே மீண்டது.   

இது உனக்கான தண்டனையல்ல… நம்மிடையே பரஸ்பர வெறுப்புணர்வு மேலும் வளராமலிருக்க, நமக்கான நன்மை இது என்பதை புரிந்து கொள்வாயா என்றவளின் மறைமுக கோரிக்கையை அவனுமே புரிந்து கொண்டான்.

“அம்மாவோட கடமையை நான் செய்றேன், அப்பாங்கிற கடமையை அவர் செய்யட்டும், அதுக்கு, நான் தடை சொல்ல மாட்டேன்! அதுக்கு மீறி ஒரு சொல்லோ, செயலோ,  என்னை நோக்கி வர்றத நான் அனுமதிக்க மாட்டேன்..!” உறுதியான முடிவோடு சிந்து கூறியதை குறை கூறிட, யாரும் முன்வரவில்லை.

பாஸ்கருக்கும், அதுவே அப்போதைக்கு சரியென்றும் தோன்றிட, தன் மனதில் இருப்பதை கூற ஆரம்பித்தான்.

“பக்கத்தில இருந்தாதானே கோபம் குறையாம வெறுப்பு கூடும்னு சொல்றா… நான் தூரமா இருந்தே பார்க்கிறேன்!

என் பிள்ளைக்கு, அப்பாவா, என் பொறுப்பை செய்யுறேன்! அவ இஷ்டபட்டு பேசினா மட்டுமே, நான் பதில் பேசுவேன். எனக்கும் இதுதான் நல்லதுன்னு தோணுது.

அவளோட கோபம் குறைஞ்சு, எப்போ என்மேல அவளுக்கு நம்பிக்கை வந்து, என்கூட வாழலாம்னு தோணுதோ, அப்போ என்மனசும் அத விரும்பினா, சேர்ந்து வாழ முயற்சி பண்றோம்.

அதுவரைக்கும் சிந்து சொன்ன மாதிரியே, பெத்தவங்களா எங்க கடமைய செய்யுறோம். இவளைத் தாண்டின இன்னொரு வாழ்க்கைய, நான் தேடிக்க மாட்டேன், இது என் அம்மாமேல சத்தியம்..!” அனைவரிடமும் தனது முடிவை ஆணித்தரமாக சொன்னவன், விலகலை உறுதியாக்கி விட்டு அன்றிலிருந்து பிரிந்து போனான்.

அன்று சென்ற பாஸ்கர், ஐந்து வருடத்திற்கு பிறகே மனைவியை தேடி வந்தான்.

 

Leave a Reply

error: Content is protected !!