தண்ணிலவு தேனிறைக்க… 8

தண்ணிலவு தேனிறைக்க… 8
தண்ணிலவு – 8
இதயராகம் கூடுதே அமுத யமுனை நீயே!
பருவராகம் பாடுதே வசந்த சுகமும் நீயே!
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே…
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே…
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்…
இரண்டு நாட்களாக பாஸ்கர் அனுபவித்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. அன்றைக்கு கோபித்துக்கொண்டு சென்ற சிந்தாசினி, அடுத்து வந்த நாட்களில் இவனின் பார்வைக்கு தட்டுப்படாமல் வீட்டினுள் முடங்கி கொண்டதில், இவனுள் இப்படியொரு அவஸ்தை தொற்றிக் கொண்டது.
நாள்முழுவதும் வாசற்படியில் பெண்ணைப் பார்க்கவென இவன் தவமிருக்க, அவளோ பக்தனை சோதிக்கும் தேவதையாகவே உள்ளுக்குள் அடைந்து கிடந்தாள்.
சிந்தாசினி கீழே வராமல் போக, அவளுக்காக பூ பறித்து வைத்திருந்து பொறுத்துப் பார்த்தவன், துணிந்து மேலே அவள் வீட்டிற்கு வந்து நின்றான்.
கதவை மெதுவாகத் தட்டியே அழைத்தான். எப்படியும் மரகதம் உறக்கத்தில் இருப்பார் என்கிற குருட்டு தைரியம் இவனுக்கு.
அன்றும் மரகதம் உறக்கத்தில் இருந்தார்தான். ஆனால் கதவை தட்டிய சத்தத்தில் விழித்துவிட, வாசலில் வந்து நின்றவனை கேள்வியாக நோக்கினார்
“அது ஒண்ணுமில்லைங்க… இன்னைக்கு ஈபி பில் கட்டப்போறேன். அதான், உங்க சர்வீசுக்கும் சேர்த்து கட்டணுமான்னு கேக்க வந்தேன்…” என பேச்சை மாற்றி சிந்துவை அர்த்தப் பார்வையுடன் பார்க்க, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நல்லவேல கேட்ட தம்பி! என் பையனும் சொல்லிட்டு இருந்தான். செத்தநேரம் இருப்பா… பணமும் அட்டையும் எடுத்துட்டு வர்றேன்!” என்றவர், பீரோவை திறக்கவென முதுகை காட்டி திரும்பிக் கொள்ள, சிறியவர்கள் இருவரும் சைகையில் பேச ஆரம்பித்தனர்.
‘ஏன் சிந்தாசினி கீழே வரல?’
‘ம்ப்ச் வரல…’
‘ஏன்?’
‘பிடிக்கல…’
‘சரி… எதுவும் பேசல! நான் அமைதியா இருக்கேன். கீழே வா!’ சைகையில் இவர்கள் பேசி முடிக்கவும், மரகதம் அட்டையும் பணமும் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது.
“நான் மதியம் போல போவேன் ஆண்ட்டி… கட்டிட்டு வந்து ரசீது குடுக்கிறேன்” என சொல்லிச் சென்றவன், சிந்துவிடம் கீழே வா என கண்களால் அழைத்துச் சென்றான்.
இவளுக்கு போகாமல் இருக்கலாமென்ற நினைப்பு இருந்தாலும், ‘அதான் அமைதியா இருக்கேன்னு சொல்லிட்டானே’ என பெண்மனம், அவனுக்கு வக்காலத்து வாங்கிவிட, கோபத்தை மறந்து கீழே சென்றாள்.
சரியாக கால்மணிநேரம் கழித்து கீழே வந்த சிந்துவும் அமைதியாக வாசற்படியில் அமர்ந்துவிட,
“என்னாச்சு சிந்தாசினி? ஏன் உள்ளே வரல?”
“இங்கேயே பேசுவோம் பாச்சு!” என சுரத்தில்லாமல் சிந்து பேச,
“ஏன், என்மேல பயமா?”
“அப்படியெல்லாம் இல்ல…” என நிறுத்தியவள், “வேண்டாமே!” என்ற மறுப்பில் நிற்க,
“சரி வேண்டாம்… நீ மேலே போ…” இவன் வெறுமையுடன் சொல்ல,
“கோபமா பாச்சு! நம்ம நல்லதுக்குதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதே!” இறங்கிய குரலில் சிந்து பேச, பாஸ்கருக்கும் என்னவோ போல் ஆனது.
“அப்படியென்ன யோக்கியம் இல்லாதவனா போயிட்டேன்னு என்னை அவாய்ட் பண்ற… அவ்வளவு மோசக்காரனா நான்? கல்யாணம் பண்ணி, ஒரு பொண்ணுக்கு சந்தோசமான வாழ்க்கையை என்னால குடுக்க முடியாதா? வீட்டுல அம்மா, அக்காதான் சோம்பேறி உருப்படாதவன்னு திட்டுறாங்கன்னா, நீயுமா அப்டி நெனைக்கிற?” ஆற்றாமையுடன் தன்னை தாழ்த்திக் கொண்டு பேச, இவளுக்கும் மனம் கலங்கிப் போனது.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல பாச்சு! அன்னைக்கு நடந்த பேச்சுக்குதான் எனக்கு கோபம் வந்தது. நீ… இல்ல நீங்க நல்லா வருவீங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு.
நீங்க ஒழுங்கா படிக்கல, பொறுப்பா இல்லன்னுதான் உங்க வீட்டுலயும் வருத்தப்பட்டு திட்டுறாங்க!” என அனைவருக்கும் சாதகமாகப் பேச பாஸ்கருக்கு அந்தகணமே, அவள் மீதான அவனுள் உறங்கிக் கொண்டிருந்த நேசம் பற்றிக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது.
“இவ்வளவு தூரத்துக்கு என்னை புரிஞ்சுகிட்டதுக்கு சந்தோஷம் சிந்தாசினி. அப்டி எனக்கு நல்ல வேலை கிடைச்சு லைஃப்ல செட்டிலானா, என்னை கல்யாணம் பண்ணிப்பியா?” ஆர்வக்கோளாறில் அவசரகோலத்தில் பாஸ்கர், தன் மனதை வெளிப்படுத்திவிட, இவளோ திரும்பவும் ஆரம்பிக்கிறானா என குழம்பத் தொடங்கினாள்.
“என்ன சிந்தாசினி? பதில் சொல்லாம நிக்கிற… என்னை பிடிக்கலையா?”
“அப்டியெல்லாம் இல்ல…” என மறுத்தவள், இவனை விட்டு விலகிச் செல்ல முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
“பின்ன… என்மேல நம்பிக்கை இல்லையா?”
“ம்ப்ச்… இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்கு? ஃபர்ஸ்ட் வேலை கிடைக்கட்டும். நீங்க செட்டில் ஆகுற வழியப் பாருங்க…” தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்த தயங்கியே, அவனிடம் கண்துடைப்பு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.
தான், அவனை முற்றிலும் மறுத்துப் பேசிவிட்டால், விரக்தியில் வேலை, படிப்பில் எடுக்கும் சிறு முயற்சியையும் கூட கைவிட்டு விடுவானோ என்கிற அனுதாபமும் பெண்ணின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.
தன்னால் ஒருவன் பின்னடைந்து விடக்கூடாதே என்ற இரக்கமே மனமெங்கும் வியாப்பித்திருக்க, சூழ்நிலையை முற்றிலும் மறந்து அங்கேயே நின்றாள்.
இவள் நினைத்திருந்தால் அக்கணமே ‘சொல்வதை சொல்லிவிட்டேன், இனி உன்பாடு உன் வேலைப்பாடு’ என விலகிச் சென்றிருக்கலாம். ஆனால், அங்கேதான் இவளின் வயதும் விதியும் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்ய வந்தது..
பாஸ்கரின் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு அவனைப் பார்த்து நின்றவள், எதிர்காலத்தை மட்டுமே மனதில்கொள் என மீண்டும் அறிவுறுத்த, அவனோ விடாக்கண்டனாய் இவளை வற்புறுத்த தொடங்கினான்.
“நீ சொல்ற மாதிரியே, நான் என்னோட ஃப்யூச்சருக்கு ஸ்டெப் எடுக்கதான் போறேன் சிந்தாசினி. ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, நான், உன்னைத் தேடி வந்தா என்னை ஏத்துப்பியா?” பிடிவாதப் பேச்சில் நிற்க,
“கல்யாண விசயமெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் பாச்சு!” முயன்றளவு இவள் தவிர்க்க பார்க்க,
“புள்ளைங்க விருப்பத்த நிறைவேத்தி வைக்கத்தான், பெரியவங்க இருக்காங்க… உங்க வீட்டு நிலமை சரியாகுறதுக்கும், என்னோட கேரியர் ஸ்டடி பண்ணிக்கவும் எப்படியும் அஞ்சு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுவியா?
நல்ல வேலையும் கைநிறைய சம்பாத்தியமும் இருக்குற மாப்பிள்ளையா நான் வந்து நின்னா, உங்க வீட்டுல அவாய்ட் பண்றதுக்கு எந்த காரணத்தையும் யாராலயும் தேட முடியாது தானே!” பாஸ்கர் அடுக்ககடுக்காக எதிர்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டேவர,
“போதுமே பாச்சு… இதோட நிறுத்திக்கோ! ரொம்ப எதிர்பார்ப்பு இருக்ககூடாது. சமயத்துல நடக்காம போனா, அதுவே பெரிய வலியக் கொடுக்கும்” சிந்து தன்மையாக சொல்ல,
“எனக்கு வேண்டியது, உன்னோட எஸ் ஆர் நோ ஆன்சர்தான். என்ன சொல்ற?” கிடுக்கிபிடியில் பேச்சை நிறுத்திவிட, சிந்துவிற்கு மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.
இவனை வேண்டாமென்று ஒதுக்கவும் முடியவில்லை பிடிக்கும் என்று தைரியமாக சொல்லவும் விருப்பமில்லை. இருவீட்டுப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒழுக்கமான வளர்ப்பு, அத்தனை எளிதில் மனம் போன போக்கில் முடிவெடுக்க தடைபோட்டது.
“இதுக்கு பதில் நாளைக்கு சொல்லவா பாச்சு?” அமைதியாக சிந்து கேட்க,
“ஏன் இத்தனை நாள் பழக்கத்துல என்னை பத்தி நீ எடைபோட்டு பார்த்ததில்லையா? இன்னைக்கு தான் என்னை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு பார்த்து ஆராயப் போறியா?” பாஸ்கர் நக்கலாக கேட்க, நீண்ட பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்தினாள் சிந்து.
‘இவன் வாய எப்படிதான் அடைக்கிறதுன்னு தெரியலையே! நல்லவந்தான்… ஆனா அவசரக்காரனா இருக்கான். அதுசரி… ஆம்பளைகளுக்கு இந்த புத்தி இல்லாம இருந்தாதான் அதிசயம்’ என அவனை தாரசு தட்டில் ஏற்றி இறக்கி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
இத்தனை நாள் பழக்கத்தில் ஒருமுறை கூட தப்பாக ஒரு பார்வை பார்த்ததில்லை. எந்த ஒன்றையும் இவளின் மேலுள்ள அக்கறையில் மட்டுமே கேட்டறிந்து கொள்வான்.
தனக்கான இலக்கை அடைந்துவிட்டால் பொறுப்பானவனாய் மாறிவிடுவான் என்பது சர்வநிச்சயம். இதனைப் போன்ற அவனின் மீதான மதிப்பீடுகளை இவளின் மனம் ஏற்றிக்கொண்டே போக, இவனை தவிர்ப்பதற்கான காரணமும் கிட்டவில்லை, அப்படி தவிர்க்கவும் இவள் மனதிற்கு பிடிக்கவில்லை.
“ரொம்ப யோசிக்கிற போல!” மீண்டும் பாஸ்கர் கேட்க,
“இது நீ நினைக்கிற யோசனையில்ல… கத்தியில நிக்க வைச்ச மாதிரி கேள்வி கேட்டா, எப்பவும் உனக்கு சாதகமான பதில்தான் வரும் பாச்சு… எந்த பதிலா இருந்தாலும் மனப்பூர்வமா சொல்லணும்னு நினைக்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு எடுக்குற எந்த ஒரு முடிவுக்கும் ஆயுசு ரொம்ப கம்மி!” என்ற வெட்டிய பேச்சில் மேலே சென்று விட்டாள் சிந்து.
அவள் செல்வதையே இமை தட்டாது பார்த்துக் கொண்டு நின்றவனை, மாடியில் தனது வீட்டு வாசல் அடைந்ததும், மீண்டும் வெளியே வந்து நாளைக்கு வர்றேன் என சைகையில் சொல்லிவிட்டு சிந்து உள்ளே செல்ல, அக்கணமே அகமகிழ்ந்து போனான் பாஸ்கர்.
ஏனோ அந்தப் பொழுதிலேயே தனது விருப்பம் கைகூடியதை போன்றதொரு சந்தோஷ ஆர்பரிப்பு மனமெங்கும் பூரிக்க, மறுநாள் பெண்ணின் வரவிற்கு அப்போதிருந்தே காத்திருக்கத் தொடங்கி விட்டான்.
சிந்துவிற்கும் இதுவா அதுவா என்ற சந்தேகமில்லாமல், இவனேதான் என உறுதியாக முடிவெடுத்து மனம் மகிழ்ச்சியில் படபடத்துக் கொண்டிருந்தது.
இந்த அதிசயம், இவள் படியேறி வந்த மிகச்சில நிமிடங்களிலேயே நடந்துவிட, இதைதான் பருவத்தின் கிளர்ச்சி என்பதா? மனம் எடுத்த முடிவை அவனிடம் சொல்வதற்குதான் இவளுக்கு பெரிதாக தயக்கம் வந்திருந்தது.
எப்படிச் சொல்ல, என்னவென்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள என்பதே இவளது எண்ணங்களாக இருக்க, மனமெங்கும் பாஸ்கர் வண்ணக்கோலம் தீட்டிக் கொண்டிருந்தான்.
தனது விருப்பத்திற்கு குடும்பத்தில் யாரும் தடை சொல்லமாட்டார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையும் மனதில் வேரூன்றியிருக்க, மறுநாளே அவனைப் பார்த்து தனது சம்மதத்தை கூறிவிடும் முடிவில் கண்ணயர்ந்தாள் சிந்தாசினி.
மறுநாளின் விடியல் அவர்களுக்காகவே என இருவருக்கும் தோன்றியது. என்றுமில்லாத திருநாளாக பாஸ்கர் அன்றைக்கு மிக சீக்கிரமாகவே எழுந்து விட்டிருக்க, மிதுனாவும் கிண்டலுடன் கேட்டே விட்டாள்.
“இன்னைக்கு சூரியன் மேற்கே உதிச்சதா பாஸ்கி?” தீவிர பாவனையுடன் அவள் கேட்டதில், பாஸ்கர் விளங்காது முழிக்க,
மகனை பார்த்த மஞ்சுளாவும், “அடேய்! நீ இன்னைக்கு அதிசயமா நேரமே, படுக்கையை விட்டு எந்திருச்சிட்டியாம்! உங்கக்கா கிண்டல் பண்ணிட்டு போறா… அது விளங்கல உனக்கு!” என தலையிலடித்துக் கொள்ள, இந்த கேலி கிண்டல் எல்லாம் தன்னை அசைத்து விடாதென ஒதுக்கி வைத்து, உற்சாகத்துடன் வலம் வந்தான் பாஸ்கர்.
இவனது மலர்ந்த முகத்தை ஆச்சரியமாக பார்த்த மிதுனாவும், “என்னடா… இன்னைக்கு அசராம அடிச்சு, எங்களை ஆச்சரியப்படுதுற? இது கனவில்லையே?” கிண்டலுடன் தம்பியை துளைக்கும் பார்வையில் நோக்கியவள், அவன் கைகளில் கிள்ளி வைக்க,
“ஐயோ… அக்கா உனக்கு வேலைக்கு நேரமாகலையா? என்கூட வம்பு வளர்க்க வந்துட்ட?” வேடிக்கையாக கேட்டுக் கொண்டே தனது தினப்படி வேலைகளை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.
நேரம் பத்தை தாண்டி அரமணிநேரம் போயேபோய் விட்டது. இன்று வருகிறேன் என்று சொன்னவளை எதிர்பார்த்து மாடிப்படியினை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
சற்று அசந்தால் மாடிப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, சிதறு தேங்காயடித்து, சூடமேற்றி வழிபட்டு விடுவான். அவனது மனநிலை அப்படிதான்.
நேரம் செல்லச்செல்ல வராமல் போய்விடுவாளோ, என்னை ஏமாற்றி விட்டாளோ என்ற அவநம்பிக்கை பாஸ்கரின் மனதில் மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. அதனை நினைத்துப் பார்க்கக்கூட விரும்பாதவன், வழக்கமான தொலைகாட்சியில் தன்னை பிடிவாதத்துடன் பொருத்திக் கொண்டான்.
சரியாக ஒருமணிநேரம் விரயமாக, மிகத் தாமதமாகவே வந்து அவனின் தேவதை வெளியில் இருந்தே அழைத்தாள்.
“பாஸ்கர்… பாச்சு!” இருமுறை அழைத்ததில், வெளியில் வந்தவன், பறக்கும் பூச்சியினங்கள் அனைத்திற்கும் புகழிடம் கொடுப்பவனாய் வாய்திறந்து ஆனந்த அதிர்ச்சியில் நின்றான்.
“என்ன பாச்சு? அப்படி பார்க்கிற!” கேட்ட சிந்துவின் குரலும் அன்றைக்கு கிண்கிணி இசையாய் பாஸ்கருக்கு கேட்க,
“அழகிடி நீ! என் மஞ்சளழகி!” உரிமையாக அவளை கைநீட்டி அழைக்க, அவன் கைபிடித்தே வீட்டிற்குள் பிரவேசித்தாள்.
“தாங் காட்! எங்கே நீ வராம போயிடுவியோன்னு கவலப்பட்டேன்!” பாஸ்கர் தனது தவிப்பை வெளிப்படுத்த,
“இன்னைக்கு காலையில அண்ணன் அம்மாகூட கோவிலுக்கு போயிட்டு வந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு!”
“என்ன விசேஷம்?”
“நீயே கெஸ் பண்ணி சொல்லேன்… பார்ப்போம்!” என்றவளை முழுதாக தன் கண்களால் படம் பிடிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.
என்றைக்குமில்லாத திருநாளாக சேலையில் வந்திருந்தாள் அவனின் தேவதை. மயில்கழுத்து நிற மைசூர் சில்க்கில் மெல்லிய வெள்ளிசரிகை இழையோட, ஆண்மகனின் பார்வைக்கு மிகப்பெரிய பெண்ணாகவே தெரிந்தாள்.
அத்துடன் அவளது வழக்கமான மஞ்சள் பூசிய முகமும், மல்லிக்கைச் சரமும் தோளில் ஊஞ்சலாடி, அவனையே ஆட்டி வைத்தது. தன் தேவதையிடமிருந்து விழிகளை அகற்ற முடியாமல் தத்தளித்தே தடுமாறினான் பாஸ்கர்.
“வாவ்… அசத்துறீங்க மேடம்! ஷப்பா மூச்சு முட்டுது எனக்கு” என சிலாகித்தவன்,
“உனக்கு பிறந்தநாளா சிந்தாசினி?” மென்மையான குரலில் கேட்க, இப்பொழுது பெண்ணவள் மயங்கிப்போனாள்.
“ம்ம்…” புன்முறுவலுடன் சிந்து வேகமாய் தலையசைத்து ஆமோதிக்க,
“ஹாப்பி பர்த்டேடா சிந்தாசினி!” என வாழ்த்தியவன்,
“ஒரு வழியா மேஜராகிட்ட போல…” என கேலியில் இறங்க,
“என்ன பண்றது பாச்சு? வளர்ந்துதானே ஆகணும்…” அவனுக்கு குறையாமல் பேசியவள், தான் கொண்டு வந்திருந்த டிஃபன் பாக்ஸை, அவனது கைகளில் வைக்க, அது சூடாக இருந்தது.
“ஹப்பா… செம்ம ஹாட்டு மச்சி!” என அவளை பார்த்து கண்சிமிட்டி விட,
“ஏய்…” என இவள் குரலை உயர்த்த,
“நான் டிஃபன் பாக்ஸை சொன்னேன்ம்மா…” என்றவன் திறந்து பார்க்க, மணக்கும் கேசரியில் நெய் மிதந்து, அவன் நாவினை மயக்கி கொண்டிருந்தது.
“இத செய்றதுக்குதான் லேட் ஆகிடுச்சு!” என்றவள் அங்கேயுள்ள ஸ்டாண்டில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அவனுக்கு கொடுக்கப் போக, அவன் வாங்கிக்கொள்ள மறுத்தான்.
“ஏன்… இந்த ஸ்வீட் பிடிக்காதா உனக்கு?”
“அதைவிட ஸ்வீட்டான விஷயம் சொல்வேன்னு நான் எதிர்பார்க்கிறேன் சிந்தாசினி…” முடிவாக தன்ஆசை மனதை வெளிப்படுத்திவிட,
“அதான், அலங்காரம் பண்ணிட்டு, இனிப்போட வந்து நிக்குறேனே… இன்னுமா புரியல?” இவள் பூடகமாய் சொல்ல, வெட்கமும் மெதுவாய் அவளுள் எட்டிப் பார்த்தது.
சிவந்த முகத்தை மறைக்கவென இவள் தலைகுனிந்து கொள்ள,
“ம்ஹூம்… உன் வாயால நேரடியா சொன்னா மட்டுமே நம்புவேனாக்கும்” சீண்டலுடன் முதன்முறையாக அவள் தாடையை தன் விரலால் தூக்கி, தன்னை பார்க்க வைத்தான்.
“போ பாச்சு… நீ ரொம்பத்தான் எதிர்பார்க்கிற!” என்றவள் மீண்டும் தலைகுனிய,
“பின்னே… என் வாழ்க்கை, என்னோட எதிர்காலமாச்சே! அவ்வளவு ஈஸியா விட்டுட முடியுமா?”
“யார் விடச் சொன்னா எங்கேயும் தப்பிச்சு போகாத மாதிரி உங்க கைக்குள்ளயே பத்திரமா, என்னை பொத்தி வச்சுக்கோங்க மாமா!” மென்மையாக சொன்னவளின் முகம் அத்தனை அழகாய் சிவந்து, மீண்டும் தலைதாழ்த்திக் கொண்டது.
“அதுக்கு உத்தரவு கேட்டுத்தான் நான் நிக்கிறேன் மகாராணி!” என்றவன், அவளின் முகச்சிவப்பை பார்த்த மயக்கத்கில் பெண்ணவளின் விளிப்பையும் வார்த்தையையும் கவனிக்கத் தவறியிருந்தான்.
“இதுக்குமேல என்னால வெளிப்படையா சொல்ல முடியாது, வரவும் வராது மாமா… புரிஞ்சுக்கோங்க!” என்று சிணுங்கிக்கொண்டு சொல்லும் போதும் அவள் விளிப்பினை கவனித்தானில்லை.
ஆசையும் காதலும் போட்டிபோட, பெண்ணவளின் கன்னச்சிவப்பினிலேயே லயித்திருந்தான் பாஸ்கர்.
“என்ன புரிஞ்சுக்க சொல்ற?” மீண்டும் விளங்காமலேயே கேட்க,
“மக்கு மாமா… இப்படி ஒரு மண்ணாந்தை மாமாவா நீ இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல மாமா… இதுக்கும் மேல என்னை சோதிக்காத மாமா!” பொய்கோபத்துடன் மாமாவை வாய்ப்பாடாக பாடியிருக்க, அப்போதுதான் பாஸ்கரின் மண்டையில் பல்பு எரிந்து, மேலே மணியடித்தது.
“சிந்தாசினி… என் சினிகுட்டி!” விழி விரித்து அழைத்தவன், “பாச்சு, மாமா ஆகிட்டானாடா?” என கிண்டலடிக்க,
“புருஷனை மாமான்னு கூப்பிடுறதுதான் எங்கஊர் வழக்கம் மக்குமாமா! இப்ப இருந்தே அதையெல்லாம் பழகிக்கோங்க…” என உத்தரவு போட்டவளை, ஒரு கையால் விரைந்து தன்னோடு இழுத்துக் கொண்டான் பாஸ்கர்.
இவன் அணைத்த வேகத்தில், சிந்தாசினியும் அவனது உடலோடு இடித்துக் கொண்டு நின்றதில், அவனின் மறுகையிலிருந்த கையிலிருந்த கேசரி அவனுக்கே அபிஷேகமானது.
அதைப்பார்த்து, “ஹாஹா…” என கலகலத்து சிரித்தவள்,
“இதுக்குதான் எதுலயும் நிதானம் வேணும்னு சொல்றது… சோ ஸ்வீட் மாமா!” என்றபடியே அவனது டிசர்ட்டில் ஒட்டியிருந்த கேசரியை எடுத்து அவனுக்கே ஊட்டிவிட்டு ஓடிவிட்டாள்.
இதற்கு பிறகான நாட்களில் இருவரும் சுவாசித்தது, வசித்தது எல்லாம் சொர்க்கத்தில் எனலாம். இருவரது இளமையின் வேகமும் புதிய அன்பின் வெளிப்பாடும் சேர்ந்து, காதலின் அவஸ்தையை புதைத்துக் கொண்டு அமைதியாக நடமாடிட அனுமதிக்கவில்லை.
இருவரின் அம்மாக்களின் பாராமுகமும் காதலர்களுக்கு மிக வசதியாய் போய்விட, எந்தவித நெருடலோ, பயமோ இல்லாமல் தங்களது காதல் பயிரை செழிப்பான கடலையை போட்டே வளர்த்து வந்தனர்.
காதலை சொல்லிக் கொண்ட இரண்டு வாரங்களிலேயே மனம் விரும்பிய கிளர்ச்சியில், காதலின் ஆரம்ப விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
மறுத்து, தயங்கி, தேங்கி நின்ற பெண்ணை தனது பேச்சால் மயக்கி மயங்க வைத்தே, தினம்தினம் புதுப்புது அத்தியாயங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான் பாஸ்கர்.
அவள் மேலே நின்று பார்க்குபோது பறக்கும் முத்தத்தையும், அருகில் இருந்தால் இறுக்கி அணைத்த இதழொற்றலையும் வாரி வழங்கும் வள்ளலாக மாறி, அவளை தனது கைப்பாவையாகவே மாற்றியிருந்தான் அந்தப் பொல்லாதவன்.
அவளது மாமா என்ற அழைப்பிற்கு அடிமைசாசனம் எழுதி வைத்தவன், சினிகுட்டி என்றே கொஞ்சிக் கொள்வான். மிக நெருக்கத்தில் அவளின் மேனியழைகை பார்த்தே மஞ்சளழகி என மயங்க வைக்க, வெட்கம் தாளாமல் அவன் நெஞ்சாங் கூட்டுக்குள் புதைந்து போவாள் சிந்தாசினி.
நாட்கள் செல்லச்செல்ல விளையாட்டுகள் அபாய வளைவை தாண்ட ஆரம்பிக்க, இருவரும் அதற்கு தடைபோடுவோ, விலகி நின்று, தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை.
அவனின் அழைப்பிற்கும் செயலுக்கும் மகுடியாக மயங்கியவளை, நோகாமல் கெஞ்சாமல் ஒருநாள் மொத்தமாய் அடிபணிய வைத்திருந்தான்.
தன்வசம் மயங்கி, தன்னிடம் நெகிழ்ந்த சித்தினிப் பெண்ணின் பத்தினித் தன்மையை அவளின் விருப்பத்துடனே வெகு சாதுர்யமாகவே களவாடியிருந்தான் பாஸ்கர்.