தாரகை – 7
தாரகை – 7
காலை சூரியனின் பொற்கதிர்கள் காவ்ய நந்தனின் வதனத்தின் மீது விழ இமை சுருக்கி கண்களை திறந்து பார்த்தான்.
எப்போதும் படுக்கையிலிருந்து எழும் போது அவன் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு இருக்கும்.
ஆனால் இந்த இரண்டு வாரங்களாக அவன் முகத்தில் அந்த புன்னகை இல்லை. அந்த பிசாசு தன் வாழ்வில் வந்த பிறகு இனி வாழ்க்கையில் சிரிப்பு ஏது!
இறுகிய முகத்தோடு எழுந்து அமர்ந்து தான் படுத்து இருந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்தான்.
வத்திப் பெட்டி போல சிறிய அறை. அதில் தன் ஆஜானுபாகுவனாக உடலை குறுக்கிக் கொண்டு படுத்து இருந்தான்.
எஸ்டேட்டிற்கு ஒட்டியே இருக்கும் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் எல்லாவித வசதியும் இருக்கிறது தான் ஆனால் ஏனோ அந்த வீட்டிற்குள் தூங்கினாலே அவனுக்குள் ஏதோ ஒன்று பிரளும். உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு உருளும்.
அதனாலேயே குளியலறை கூட இல்லாத இந்த அறையில் தஞ்சம் கொண்டிருப்பவன் அந்த வீட்டிற்கு சென்று தயாராவதற்காக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.
அவன் முகத்தைப் பார்த்து கூட்டத்தினரிடையே பெரும் சலசலப்பு. என்ன ஆயிற்று இவர்களுக்கு எதற்கு என் முகத்தை மூஞ்சூறு போல பார்த்து வைக்கிறார்கள் என்ற யோசனையோடே தாடையை தடவி கொண்டு நடந்தான்.
“ஏன்யா அந்த நெத்தியிலே ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் பொட்டையும் சட்டையிலே பூசியிருக்கிற குங்குமத்தையும் அழிச்சுட்டு போயா… எல்லா புள்ளைங்க கண்ணும் அங்கே தான் இருக்கு. நம்ம சந்தோஷமா வாழறதைப் பார்த்து பொறமைப்படற உலகம் இது” என அந்த எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மாணிக்கவேல் தாத்தா அவன் முகத்தைப் பார்த்து சொல்ல சப்-டைட்டில் இல்லாத படம் பார்ப்பது போல் முழித்து வைத்தான்.
‘நான் எதுக்கு பொட்டும் குங்குமமும் வைக்கப் போறேன்’ என சடைத்தபடி நிமிர்ந்தவன் எதிரிலிருந்த பெரியவரை குறுகுறுவென பார்த்தான். ‘ஒருவேளை சரக்கு போட்டு இருப்பாரோ!”
“ஐயா காலையிலேயே தண்ணியை போட்டுட்டு வந்து லந்து பண்றீங்களா… போங்க போய் வேலையை பாருங்க” நக்கலாக சொல்லிவிட்டு செல்ல முயன்ற காவ்ய நந்தனை பிடித்து நிறுத்திய மாணிக்கவேல் ஐயா அவன் நெற்றியில் ஒட்டியிருந்த பொட்டை எடுத்து கையில் கொடுத்தார்.
சட்டையில் பூசியிருந்த குங்குமத்தை சுட்டிக் காட்டி,”ஏன்லே எல்டேட்டுக்குள்ளே லந்து பண்றது நானா நீயா? கச்சேரியை வீட்டுலே வைச்சுக்க மாட்டியாடே?” என்று அந்த பெரியவர் கேட்கவும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
நான் எப்போது ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி கொண்டு தூங்கினேன். எப்படி அந்த குங்குமம் தன் சட்டையின் மீது வந்தது என்று அந்த நாசா சைண்டிஸ்ட் தீவிர ஆராய்ச்சிக்கு சென்று விட்டான்.
“இது எப்படி என் மேலே வந்துச்சு?” என அவன் தலையை சொறிய பெரியவரிடம் நக்கலான புன்னகை.
“ஏடே எம்புட்டு அழகா நடிக்கிற! இது எப்படி மேலே வந்ததுனு தெரியாதாக்கும்” என பெரியவர் ஒரு பக்கம் நக்கலாக கேட்க, அவன் சோகமாக இல்லையென்று தலையை தலையாட்டினான்.
‘ராத்திரி எதுவும் மோகினி பிசாசு வந்து தூசு படாத என் கற்பை வேட்டையாடிடுச்சோ! சே ஒரு பையனுக்கு இந்த உலகத்துலே பாதுகாப்பே இல்லை. பேய் கூட விட்டு வைக்க மாட்டேங்குது’ அவன் மூளை ஏடாகுடமாய் யோசித்தது.
“தம்பி நடிச்சது போதும்… நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டோம்” என்று பக்கத்திலிருந்த பெண்மணி மொட்டையாக சொல்லவும் அவனுக்கு பதறிப் போனது.
“என்னத்தை பார்த்திங்க… எதைப் பார்த்திங்க” தூக்கி கட்டிய தன் வேட்டியை தழைய விட்டபடி கலவரமாக மாட்டான். அவசரமாக தன் சட்டையை சரி செய்து கொண்டான்.
“நீங்க எப்பவும் தூங்குற ரூமிலே இருந்து இப்போ தான் உங்க பொண்டாட்டி நகத்தை கடிச்சுக்கிட்டே வெளியே போறதைப் பார்த்தோம்” என கோரஸாக ஒரு கும்பல் சொல்ல அவனுக்கு முகம் அவமானத்தில் சிறுத்துவிட்டது.
“பாவி என் மானத்தை வாங்கிட்டாளே… எங்க அந்த ராட்சஷி” என திரும்ப அவள் உதடு கரும்பு சக்கையாக நசுங்கியிருந்தது. பத்து மூட்டை நெல்லை அருவடை பண்ணவள் போல நின்று இருந்தாள். ஆனால் முகத்தில் மட்டும் அப்படியொரு தேஜஸ்.
“ஆனாலும் காவ்யன் உன் முரட்டுத்தனத்தை எப்படி அந்த புள்ளை தாங்கும். பாரு சோர்ந்து போய் நிற்கிறா. ஏதாவது காப்பி தண்ணீ வாங்கி கொடுயா… மயங்கி விழுந்துடாமா” என கூடியிருந்தவர்களில் ஒரு பெண் சொல்ல அவன் கண்களில் அத்தனை கொதிப்பு.
‘யார் முகத்தையும் நேராக பார்க்க முடியாதபடி செய்துவிட்டாளே… இந்த ராட்சஷி’ சுற்றியிருந்தவர்களின் கேலி பார்வையும் கிண்டல் சிரிப்பும் அவனை கூராய் கிழிக்க, அங்கிருக்க முடியாமல் தரதரவென அவள் கைகளை இழுத்துக் கொண்டு போனான்.
ஆனாலும் விடாமல் அவனை தொடர்ந்தது அவர்களின் கிண்டல் சிரிப்பும், கேலியான வார்த்தைகளும்.
“நம்ம பெரிய ஐயாவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியும் பொறுமை இல்லை. கல்யாணத்துக்கு அப்புறமும் பொறுமை இல்லை. பாவம் அந்த பொண்ணு அவர் இப்படி பாஞ்சா எப்படி தாங்கும்” என அவளுக்காக வருத்தப்பட்டனர்.
எஸ்டேட்டிற்கு எல்லைச்சாமியாக இருப்பதற்கு பதிலாக எமலோகத்திற்கு என்ட்ரி டிக்கெட் வாங்கிவிடலமா என அவனே நொந்துப் போகும் அளவிற்கு சம்பவம் செய்துவிட்டாள் அவன் தர்ம பத்தினி.
எஸ்டேட்டை ஒட்டி இருக்கும் வீட்டிற்குள் அவளை தள்ளிக் கொண்டு சென்றவன் கதவை சாற்றிவிட்டு அவளை கட்டிலின் மீது தள்ளினான்.
“ஏன்டி இப்படி பண்ண? நான் என்ன காம கொடூரனா? பொண்ணுங்களை பார்வையாலே கூட தீண்டக்கூடாதுனு நினைக்கிறவன் என்னை திரும்ப திரும்ப அசிங்கப்படுத்துறலே… உன்னை என்ன பண்ணா தகும்” என்றவன் அவளை ஒவ்வொரு அடியாக வைத்து நெருங்கினான்.
“நீங்க ஏன் வீட்டுக்கு வராம இருந்தீங்க? இனி எஸ்டேட்டுலேயே தவம் கிடந்தா டெய்லி காலையிலே இந்த கூத்தை தான் பார்க்க வேண்டியது வரும். ஒழுங்கா வீட்டுக்கு வாங்க” என்றாள் தீர்க்கமாய் அவன் முகத்தைப் பார்த்து.
“நான் வீட்டுக்கு வந்தா என்ன வரலைனா என்ன? என்னை திரும்ப திரும்ப ஊர் முன்னாடி அசிங்கப்படுத்த சொல்லி உன் அண்ணன் சொல்லி கொடுத்தானா டி?” எனக் கேட்க அவள் மொழியில்லாமல் மௌனமாய் வெறித்தாள்.
அவனது கழுகுப் பார்வையில் உடல் வெடவெடத்தாலும் எழில் வெளியே காட்டி கொள்ளவில்லை. அவசரமாய் முகத்தைத் திரும்பி கொண்டாள். அவள் திரும்பிய வேகத்தில் முந்தானை விலக அவன் கண்களில் இன்னும் தீட்சண்யம் கூடியது.
“இந்த முந்தானையை நழுவி விடுற வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம். நீ ஒட்டுத்துணி இல்லாம நின்னா கூட நான் சபலைப்பட மாட்டேன்” என்றவன் சொல்லவும் கண்கள் மினுங்க எழில்மதி திரும்பிப் பார்த்தாள்.
ஆம் காவ்யநந்தவன் என்பவன் அப்படி தான்…
கற்பை உயிராய் மதிப்பவன். பெண்ணை ஏறெடுத்து பாராதவன். தன் மனதையும் உடலையும் பொக்கிஷ குவியலாய் பாதுகாத்தவன். அவன் கண்கள் இதுவரை துளி சபலைப் பார்வையை கூட யார் மீதும் சிந்தியதில்லை. வரப் போகும் துணைவிக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என சிறுவயதிலிருந்தே பாட்டி தாத்தாவால் சொல்லி வளர்க்கப்பட்டவன். அப்படியே வாழ்ந்தும் பழகி இருந்தான்.
ஊர் முழுக்க பல பெண் பட்டாம்பூச்சுகள் அவனை சுற்றி வட்டமடித்தாலும் அவன் கண்கள் இதுவரை யார் மீதும் சாய்ந்ததில்லை, எழில்மதி உட்பட. அவனது அந்த குணம் தான் எழிலை காந்தமாய் அவனை நோக்கி ஈர்த்தது.
தினமும் உணவு உண்பதை போல கடந்த ஐந்து வருடங்களாக அவனை மறைந்திருந்து ரசிப்பது அவளுடைய அத்தியாவசிய கடமையாகிப் போனது.
இதுநாள் வரை உரிமையில்லாமல் தூரத்தில் யாரோ ஒருத்தியாய் பார்த்தவள் இப்போது அவன் உடமையாய் அருகில் நின்று திகட்ட திகட்ட காதல் பார்வை பார்த்து வைத்தாள்.
“மாமா வீண் சபதம் போடாதே… நீ என் கிட்டே தொபுக்கடீர்ணு விழுற நாள் ரொம்ப தூரத்துலே இல்லை… அவசரப்பட்டு சபதம் சாத்துக்குடினு பிழியாதே…” அவள் கண்ணடித்து அவன் தோளைப் பிடிக்க வரவும் பட்டென அவள் கைகளை தட்டிவிட்டான்.
“இங்கே பாரு கற்பு பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இருக்கா என்ன? பசங்களுக்கு இல்லையா? என்னை ஊர் முன்னாடி நிற்க வெச்சு இத்தனை நாள் நான் கட்டி காத்த கற்பை ஒத்தை வார்த்தையிலே அழிச்சுட்டலே…” என்று முடிக்காமல் நிறுத்தியவனின் கண்களில் இன்னும் ஆற்றாமை ஆறாமல் மின்னிக் கொண்டிருந்தது.
“திரௌபதியை காப்பாத்த ஆயிரம் கிருஷ்ணன் இருக்கான்க… ஆனால் ஒரு பையன் கற்பை அழிச்சுட்டு திமிரா நிற்கிறவளை தண்டிக்க எவன்(ள்)டி இருக்கான்? ” சாட்டையாய் அவன் கேள்வி சுழல அசராமல் நின்றிருந்தாள் அவள்.
“பொண்ணுங்களை கை நீட்டி அடிக்கிறது ஆம்பளைத்தனம் இல்லைனு சொல்லி கொடுத்து வளர்த்து இருக்காங்க. ஆனால் நீ பண்றதுலாம் பார்த்தா எனக்கு பிபி எகிறுதுடி… என் கையாலே உன்னை கொன்னு போடுறதுக்குள்ளே ஒழுங்கா என் வாழ்க்கையை விட்டு ஓடி போயிடு” என சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்க்க விரும்பாமல் திரும்பி கொண்டான்.
தன் முந்தானையை நிறுத்தி நிதானமாக சரி பண்ணியவள் அவன் முன்பு வந்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.
“போறதுக்காகவா மாமா உங்க வாழ்க்கையிலே நுழைஞ்சேன். இதுநாள் வரை ஒரு தயக்கத்தோடவே ஒதுங்கி இருந்தேன். ஆனால் எப்போ உன் கையாலே தாலி வாங்குனேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் மாமா… வாழ்வோ சாவோ உன் கண்ணுலே எனக்கான காதலை ஒரு முறையாவது பார்த்துட்டு செத்து போயிடணும்னு” காதல் வழிய பேசியவளை கடுமை வழிய பார்த்தான்.
“ஹே இங்கே பாரு நாலு சினிமா பார்த்துட்டு டயலாக் பேசி என்னை மடக்க பார்க்காதே… நான் காவ்யன் டி யாருக்கும் எதுக்கும் மயங்க மாட்டேன்” என அவன் மார்தட்டி கொண்டு சொல்லவும் அவள் குறும்பாய் அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
“உன் வீக் பாயிண்ட் எனக்கு தெரியும்.. அதை வெச்சு அடிக்கிறேன்” என முணுமுணுத்தவள் உதடுகளை அழுத்தமாய் கடித்துக் கொண்டாள்.
ஏற்கெனவே காயமாகியிருந்த இதழ்களில் மேலும் உதிரத்தின் தடம். அடுத்து தான் கட்டியிருந்த சேலையை தன் கைகளால் அதிவேகமாக கசக்கினாள். கண்களைப் பரபரவென தேய்க்க ரத்த நிறத்தில் சிவந்துப் போனது. உடலை கொஞ்சமாய் குறுக்கிக் கொண்டு முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள்.
“பர்ஃபெக்ட்! ரேப் சீன் முடிஞ்சவள் மாதிரியே இருக்கேன்ல மாமா?” அவனிடம் கருத்தைக் கேட்க காவ்ய நந்தனுக்கு முகம் கருகியது.
“இப்போ இப்படியே கதவை திறந்து வெளியே போனா என்ன ஆகும் மாமா?” என அவள் சந்தேகம் கேட்டபடி கதவை திறக்க போக வேகமாய் குறுக்கே புகுந்து வழி மறித்தான்.
“உங்களுக்கு தான் நான் பக்கத்துலே வரதே பிடிக்காதே. இப்போ எதுக்கு இவ்வளவு கிட்டே வந்து நிற்கிறீங்க… தள்ளுங்க” உதடுகளில் வழிந்த குறுஞ்சிரிப்பை மறைத்துக் கொண்டு பேசினாள்.
காலையிலிருந்தே அவன் பொறுமையை காலாண்டு தேர்வு போல சோதித்து கொண்டு இருக்கிறாள். கோபம் எரிமலையாய் வெடிக்க தயாராக இழுத்துப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தவன், “ஒழுங்கா டிரெஸ்ஸை சரியா போட்டுட்டு வெளியே போ… இல்லைனா செகண்ட் ஷோவானு கேட்டு எல்லாரும் மானத்தை வாங்குவானுங்க” என்றான் எங்கோ பார்த்து திரும்பிக் கொண்டு.
“வீட்டுக்கு வந்து இனி தங்குவேனு சொல்லுங்க, நான் நீங்க சொல்ற பேச்சை கேட்கிறேன். இல்லை இப்படியே கதவைத் திறந்து வெளியே போயிடுவேன்” என அவள் மிரட்டவும் யாருக்கும் அடங்காத அந்த ஜல்லிக்கட்டு காளை அவளிடம் அடங்கிப் போக வேண்டியதாகி விட்டது.
“வரேன் டி வந்து தொலையுறேன். ஆனால் வந்து உனக்கு நரகத்தை காட்டுறேன்” அவன் ஆத்திரமாய் கர்ஜிக்க அவளோ அசட்டையாய் தோளை குலுக்கிக் கொண்டு,
“நான் 3டி கண்ணாடி வாங்கி இப்போவே ரெடியா வெச்சுக்கிறேன் மாமா. அப்போ தான் நரகத்தை இன்னும் பெஸ்ட் க்ளாரிட்டிலே பார்க்கலாம்” என சொல்லவும் காவ்ய நந்தன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.
‘ஐயோ இந்த பைத்தியத்தை சமாளிக்கவும் முடியலை தற்கொலை பண்ற அளவுக்கு தெம்பும் இல்லை… யாராவது என்னை கொன்னு போட்டுடுங்களேன்’ என்று எதற்கும் அஞ்சாத சிங்கத்தையே ஒரே நாளில் புலம்ப வைத்திருந்தாள் அவனின் மனையாள்.
கலங்காதே காவ்ய நந்தா!
காதலால் இனிக்க இனிக்க இனி கொல்லுவாள் இந்த எழில்மதி என்னும் ராட்சஷி.
“அடிங் எவடா அவள். நானே செம கடுப்புலே உட்கார்ந்துட்டு இருக்கும் போது கலங்காதே குழம்பாதேனு உருட்டிக்கிட்டு இருக்கிறது” காவ்ய நந்தன் கல்லைத் தூக்கவும் அதற்கு மேலும் இந்த அப்பாவி ரைட்டர் அங்கு நிற்பேனா… தொடர்பு எல்லைக்கு அப்பாலே போய்ட்டேன்.
சரியான வில்லங்க பிடிச்ச பையனா இருக்கேன் இந்த காவ்ய நந்தன். இவன் கிட்டே பீ கேர் ஃபுல்லா இருக்கணும் டூட்ஸ்… இல்லை உங்க அன்புக்குரிய நேசத்துக்குரிய பாசத்துக்குரிய ரைட்டர் அக்கா கபாளத்தை ரெண்டா பொளந்துடுவான் போல…