தாழையாம் பூமுடித்து🌺17

தாழையாம் பூமுடித்து🌺17

                       ‌17

மாட்டை அடிக்கும் சாட்டை கொண்டு மான்குட்டியை விளாசி இருந்தார் நல்லசிவம். 

 பிள்ளைய கவனித்த லட்சணம் இது தானா என மனைவியை அதட்டி கேள்வி கேட்க,

 “எதுக்கு? நா… இவள கண்டிக்கப் போக, ஊருக்குள்ள சித்தி கொடுமைனு என்னையப் பேசறதுக்கா?” என அவர் விலகிக் கொண்டார்.

ஊருக்குள் புழுதி போல் புரளி கிளம்பி, குழாயடி, சாவடி, காடுகரை எல்லாம் இதே போச்சாக அடிப்பட்டது. கிராமங்கள்ல அப்படி தாங்க. 24×7 கேமராவுல சிக்காதது எல்லாம் கூட எப்படியாவது யாரு கண்ணுக்காவது சிக்கிரும். ஆனால் ஊருக்கே தெரிந்த பிறகு தான் உற்றாருக்கு விஷயம் தெரிய வரும்.

சின்னவர் வீட்டிற்கும் வந்த மொட்டைக் கடிதாசியைப் படித்தவர் துக்க செய்தி தாங்கி வந்த கடிதமாக நினைத்து கோபமாகக் கிழித்துப் போட்டார். கடிதப் போக்குவரத்து இருந்த காலகட்டங்கள்ல துக்க செய்தியை தாங்கி வரும் அஞ்சல் அட்டைகள்ல, ஓரத்துல கருப்பு மை தடவி வரும். அதைப் பார்த்தவுடன் துக்க செய்தி எனத் தெரிந்துவிடும். படித்தவுடன் கிழித்துப் போட்டு விடுவார்கள். அந்தக் கடிதத்தை வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அது போல எண்ணி இதையும் கிழித்துப் போட்டவர், சுதாவை அழைத்து விசாரிக்க, அவளுக்கு எதுவும் தெரியாது என கூறினாள். உண்மையிலேயே அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

யாரும் ஆதாரப்பூர்வமாக தகவல் கொடுக்காமல் பஞ்சாயத்து கூட்ட முடியாது. அதற்காக இப்படியே விட்டால் அடுத்து யாருக்கும் பயம் இல்லாமல் போகுமே என்கிற அதீத சமூக(சாதிய) அக்கறையோடு பொது நலன் கருதி இரண்டு குடும்பங்களையும் பஞ்சாயத்திற்கு அழைத்தனர். 

விஷயம் ஊருக்குள் பரவியவுடனே, அண்ணனுக்கு விபரம் கூறாமல் அவசரமாக வரவைத்திருந்தார் சின்னவர். வந்தவரும் விபரம் அறிந்து வானத்திற்கும் பூமிக்குமாக எகிறி குதித்தார். 

“அவன் அடிக்கடி ஊருக்கு வரும் போதே எனக்கு சந்தேகம் தான். இது தான் அவன நீங்க கவனிச்ச லட்சணமா. மொதல்லயே சொல்லக்கூடாதா?” எனக் கத்த, 

“அக்கா கிட்ட ஏற்கனவே ஃபோன் போட்டு எச்சரிச்சே மாமா. சீக்கிரம் அவனுக்கு பொண்ணு பாருங்கனு சொன்னேனே.” என அன்னபூரணியும் வாயை விட, 

“அப்ப… உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என சின்னவரும் கோபப்பட, அன்று தோப்பில் சாந்திக்கும் சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க சொன்னது அவருக்கு நினைவிற்கு வர, கை நீட்டி இருந்தார் இத்தனை வயதிற்கு மேல் மனைவி மீது. 

சந்தேகம் வந்த உடனே கூறியிருந்தால் ஆரம்பத்துலேயே இதை கண்டித்து இருக்கலாமே என்ற எண்ணம் அண்ணன், தம்பி இருவருக்கும். 

அவர்களுக்கு, இது ஆற்று வெள்ளம் அல்ல… அணைபோட்டு தடுத்து வைக்க, காதல் என்பது மறந்து போயிற்று.  

தலையாரி வந்து பஞ்சாயத்திற்கு அழைக்க,

“அஞ்சேகால் ரூவா கையில இருந்தா போதும்னு எவன் வேணும்னாலும் பஞ்சாயத்து கூட்டிரானுக.” என சத்தம் போட்டுக் கொண்டே பஞ்சாயத்திற்கு வந்தார் சின்னவர்.‌

பஞ்சாயத்தில் முக்கியஸ்த்தர்கள் வீட்டிற்கு வந்த மொட்டைக் கடிதாசி பற்றி விசாரிக்க, “எவனோ *ட்டப் பய மொட்டக் கடுதாசி போட்டான்னு எங்கள கூப்புட்டு வச்சு விசாரிப்பீங்களா? அதுல எழுதி இருக்கறது எங்க வீட்டுப் பையன் தான்னு எப்படி தெரியும்?” என தவசி கோபப் பட,

“இங்க பாரு தவசி… இது உங்க ஊரு இல்ல. நீ நாட்டாமை பண்றதுக்கு.” என கூட்டத்துள் ஒருவன் குரல் உயர்த்த,

“எவன்டா அது? நியாயத்தப் பேச எந்த ஊரா இருந்தா என்னடா?” என தவசியும் எகிற, 

“சத்தம் போடாதீங்க ப்பா… அதுல தான் தெளிவா எழுதி இருக்கே? பெரிய வீட்டு பட்டணத்து பையனுக்கும், எதிர் மாடி வீட்டுப் பொண்ணுக்கும்னு பேரோட போட்டுருக்கே.” என பஞ்சாயத்தாரும் கேள்வி கேட்க,

“நாளைக்கி இதே மாதிரி இன்னொரு கடுதாசி வந்தா அதுக்கும் விசாரிப்பீங்களா?” 

“நெருப்பில்லாம பொகையாது தவசி. இப்படியே பெரிய வீடுங்கறதுக்காக பாத்தோம்னா, நாளைக்கு எதுக்கும் ஒரு வரமொற இல்லாமப் போகும் ப்பா. இதெல்லாம் ஆரம்பத்துலயே தட்டி வைக்கனும்ல.” என ஆளுக்கொரு நியாயம் பேச, அனைவரையும்  கை அமர்த்திய பெரியவர்,

“இங்க பாருங்க… ஊருக்கு உண்டான கட்டுப்பாடு தான் எனக்கும். நானும் அதுக்கு கட்டுப்படுறே. அதுல இருக்கறது எந்த அளவுக்கு உண்மைனு தெரியாது. சம்பந்தப்பட்டவனும் இங்க இல்ல. பஞ்சாயத்துல பொம்பளப் புள்ளயக் கூப்புட்டும் விசாரிக்க முடியாது. அதனால எங்க வீட்டு பிள்ளைய நாங்க கண்டிச்சுக்கறோம். அவங்க வீட்டு பிள்ளைய கட்டுக்குள்ள வச்சுக்க சொல்லுங்க.” எனப் பொதுவாகப்  பேசிவிட்டு சுப்பையா சென்னைக்கு கிளம்பி விட்டார். சென்னை வந்தவரும் மகனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. தனக்கு எதுவும் தெரிந்தது போலவும் காட்டிக் கொள்ளவில்லை. ஊருக்கு செல்ல முடியாத அளவிற்கு, பள்ளியின் இறுதிக்கட்ட வேலைகள், அட்மிஷன் பொறுப்பு என அனைத்தையும் சின்ன மகனிடம் ஒப்படைத்தவர், தீவிரமாகப் பெண் தேட ஆரம்பித்தார்.  

பஞ்சாயத்திற்கு நல்லசிவம் வரவில்லை. அவங்க புள்ளைய கட்டுக்குள்ள வச்சுக்க சொல்லுங்க என்ற தகவல் மட்டும் வீடு வந்தது. மகளிடம் விசாரிக்க, அவளது பயந்து வெளிறிய முகமே உண்மையை பட்டவர்த்தனமாக்க, தாயில்லாப் பிள்ளை என கண்ணுக்குள் வைத்து வளர்த்த செல்ல மகளை, சாட்டைக் குச்சி கொண்டு விளாசியிருந்தார்.

குறுக்கே விழுந்து நல்லசிவத்தை தள்ளிவிட்டார் சித்தி.

“இப்ப அடிச்சு என்னய்யா பிரயோஜனம். எந்தம்பிக்கு கேட்டப்பவே கொடுத்துருக்கலாம்ல. இப்படி ஊரு சிரிச்சவள எந்தச் சீமையில இருந்து வந்து கட்டப்போறானுக. இன்னும் பத்து இருவது நாள்ல எந்தம்பி ஜெயில்ல இருந்து வந்துருவான். வந்த உடனே அவனுக்கு இவள கட்டி வச்சுறலாம். அவனுக்கு ஒரு டீக்கடையோ, பொட்டிக் கடையோ வச்சுக் கொடுத்துட்டா அவன் ஏன் சாராயம் காச்ச போறான்.” என சித்தி கேட்க, இந்த முறை நல்லசிவத்தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. 

கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. அவள் வடித்த கண்ணீருக்கு தூது செல்லும் சக்தி இல்லை போலும். இரண்டொரு வாரத்தில் அதற்கும் பஞ்சம் வந்தது போல… இருப்பு இல்லை என வற்றிப் போனது. 

ஆனால் இரவு ஏழு மணியானால் சின்னவர் வீட்டில் மூன்று முறை தொலைபேசி மணி அடித்து அடங்கும். கிராமத்து அமைதியில் அது நன்றாக இரண்டு தெரு தாண்டி இருக்கும் சாந்தியின் வீட்டின் கதவை தட்டிச் செல்லும். அது அவளுக்கான நலம் விசாரிப்பு என்று இப்பொழுது தான் வீட்டினருக்கே புரிய ஆரம்பித்தது. 

இவளது திருமண செய்தியை யாரும் அவனிடம் தெரிவிக்க கூடாது என, முக்கியமாக சுதாவிற்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அவளால் அண்ணனுக்காகவும் பார்க்க முடியவில்லை. தோழிக்காகவும் பார்க்க முடியவில்லை. அப்பாவின் பேச்சை மீறவும் பயம். அவளும் அழுது கரைந்தாள்.

பால்பாண்டியும் ஜெயிலில் இருந்து வந்து விட்டான். டீ கடை போட்டுத் தருவதாக ஒப்புக் கொண்டு, இனிமேல் சாராயம் காய்ச்ச போகக் கூடாது என்ற கட்டுதிட்டத்தோடு, அடுத்து ஒரு வாரத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது. அதுவரை சாந்தியை தனிமையில் விடாமல் வீட்டுச்சிறை வைக்கப்பெற்று யாராவது அவளுக்கு காவலுக்கு இருந்தார்கள். சாப்பிட மறுத்தவளை தம்பி தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கெஞ்சி சாப்பிட வைத்தான். ஆனால் இந்த ஒரு வாரமாக அவளே கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். அது அவளுக்காக சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. 

வேறு வழியின்றி மனதை மாற்றிக் கொண்டதாக வீட்டினர் எண்ணிக் கொண்டனர். 

தன்னவனுக்கு தகவல் சொல்லும் வழியின்றி தவித்துப் போனாள் பெண். இறுதி நாள் வரை உயிரைக் கையில் பிடித்துக் காத்திருந்தவள்… பருவமழை பொய்த்த பயிராக வாடிவதங்கிப் போனாள். 

மாப்பிள்ளை வீட்டு திருமணம் எனினும், அவனுக்கு சாதகமாக பெண் வீட்டிலேயே நடத்திக் கொண்டான். காலையில் திருமணமும் முடிந்துவிட்டது. கிடைக்காத தனிமை அன்று இரவு வாய்த்தது பெண்ணவளுக்கு. 

அவளை தயார் செய்து அறைக்குள் விட்டு விட்டு பெண்கள் வெளியேறி விட, அடுத்த நொடி சத்தமின்றி கதவை இழுத்து சாத்தினாள். அந்தக் காலத்து பெரிய பலகையாலான ஒற்றைக்கதவு.‌ கதவிற்கும் பின்னால் பெரிய இரும்பாலான அடிதண்டா. அதையும் எடுத்து இறுக்கி தாழ் போட்டாள். சிறிது நேரத்தில் பால்பாண்டி வந்து கதவைத் திறக்க, அவனால் திறக்க முடியவில்லை. கதவைத் தட்டிப் பார்த்தான். திறக்கவில்லை. சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட, கதவு உடைத்தே திறக்கப்பட, சுவற்றில் ஆணியில் தொங்கும் மணமாலை வாடும் முன், உத்திரத் கட்டையில் பிணமாலையாக தொங்கிக் கொண்டிருந்தாள் மலர்மங்கை, அன்றைய நாள் நினைவாக வைத்திருந்த அவளுக்கு பிடித்தமான தாவணியில். 

சாதி எனும் பெயரில் விதியும் கூடி கும்மாளம் இட்டதில் கருகிப் போனது இளங்குறுத்துகளின் காதல் பூ.

கிராமத்தின் ஆழ்ந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்த ஓலம், படுக்கைக்குள் பாம்பு புகுந்தது போல ஒட்டு மொத்தக் கிராமமே சட்டென தூக்கம் உதறி எழுந்தது. செய்தி அறிந்து துக்கம் உடுத்தி வருந்தியது.

உறங்காத சின்னவர் வீட்டிலும், ஓலம் கேட்டு அனைவரும் அவசரமாக வாசலுக்கு வந்தனர். தவசியும், சின்னவரும் சாந்தியின் வீடு நோக்கி செல்ல, அடுத்த தெரு முக்கில் அவர்களை மறித்து நிறுத்தினர் சிலர்.

“அந்தப்புள்ள கயித்த போட்டுக்குச்சு சுப்பு. முடிஞ்சு போச்சு. அங்க நெலம சரியில்ல. நீங்க இப்ப அங்க போறது நல்லா இருக்காது. ஏதொன்னுக்கும் பொண்டு பிள்ளைகள வீட்டவிட்டு வெளிய வர வேண்டாம்னு சொல்லுங்கப்பா.” எனக் கூறி இவர்களை திருப்பி அனுப்பினர். அதிர்ச்சி தாங்கி செய்வதறியாது திரும்பி விட்டனர்.

செய்தி கேட்டு சுதாவும் அழுது ஓய்ந்தாள். “அவ செத்துப் போயிட்டாங்கற தகவலையாவது அண்ணனுக்கு சொல்லுங்கப்பா. என்னையவாவது போக விடுங்கப்பா… கடைசியா அவ மொகத்தையாவது பாத்துக்கறேனே.” என கெஞ்சி கதறிப் பார்த்தாள். 

ஊர் நிலைமை அவரை எதுவும் செய்ய விடாமல் கையை கட்டிப் போட்டது. எதிர்த்துக் கொண்டு எங்க வீட்டுப் பையனுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என போய்விடலாம். ஆனால் உயிர் இழப்பு என்பது ஈடுகட்ட முடியாத ஒன்று. அதுவும் வாழவேண்டிய வாழைக் குறுத்தை, வாரிக் கொடுத்து இருப்பவர்கள் முன், வீரம் காட்ட இது சரியான நேரம் இல்லை என அமைதி காத்தனர்.

முத்துவேல் ஊருக்குள் வந்தால் நிலமையை சமாளிக்க முடியாது எனத் தெரியும். ஏற்கனவே கொதித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, இது இன்னும் எண்ணெய் ஊற்றிய நிலமை. அதை  இன்னும் மோசமாக்க விரும்பவில்லை. 

அதற்குள் துக்க வீட்டில் ஆளுக்கொன்றாக பேச ஆரம்பித்தனர். 

“விடியறதுக்குள்ள எடுத்துறலாம்ப்பா. எவனாவது போலீசுக்கு தகவல் சொல்லிட்டான்னா, அப்புறம் கேசு அதுஇதுன்னு பேப்பர்ல வேற போட்டு நாறடிச்சுருவானுக. அறுவ ஆஸ்பத்திரிக்கி வேற எடுத்துட்டு போயிருவாங்க. புள்ளய கூறு போட்டு கொடுப்பாங்க.” என முடிவு செய்து யாரையும் ஒப்பாரி வைத்துக் கூட அழவிடவில்லை. ராத்திரியோடு ராத்திரியாக காடு கொண்டு சேர்த்துவிட்டனர். 

கல்யாணத்திற்கு வந்தவர்கள் கருமாதி முடித்து திரும்பினர்.

பெற்ற வயிறு பற்றி எரிய இடிஞ்சு போய் அமர்ந்தவர் தான் நல்லசிவம். யாரிடமும் எதுவும் பேசவில்லை.

அன்று முழுதும் சின்னவர் வீட்டில் இருந்து யாரும் வெளிவரவில்லை. அவர் வீட்டிலும் துக்கம் போல ஆட்கள் கூடி இருந்தனர். அனைவருக்கும் துக்கம் நெஞ்சுக்கூடு நிறைந்து  இருந்தது. இது தெரிந்தால் முத்துவின் நிலை என்னவாகும் என்ற பயம் வேறு ஒருபக்கம் அச்சுறுத்தியது‌.

அவளைக் கொண்டு காடு சேர்த்த அன்றே சின்னவரின் வைக்கோல் படப்பு, கரும்பு வயல், சோளக்காடு எல்லாம் தீ பிடித்தது. தென்னந் தோப்பு, வாழைத்தோப்பு, மோட்டார் ரூம் என எல்லாமே சூரையாடப்பட்டது.

நிலமை உணர்ந்து சின்னவர் அமைதியாகப் போக, அவர் இனத்து ஆட்கள் தான் துள்ளினர். அவர்களை சின்னவர் தான் பேசி சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 

ஆனால் திடீரென முத்துவேல் வந்து நிற்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை‌. ஊர் நிலைமையை எடுத்துக் கூறி, முத்துவை ஊருக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அண்ணனை எச்சரித்திருந்தார். ஆனால் வீட்டிற்கே தெரியாமல் கிளம்பி வந்திருந்தான். 

சின்னவரும், தவசியும் தகவல் அறிந்து சாவடிக்கு வரும்பொழுதே அவர்கள் கண்ணில் பட்டது பால்பாண்டி,‌ முத்துவேலின் சட்டையப் பிடித்து இருந்ததைத் தான். பெண்கள் முந்தானையில் கைவைப்பது எவ்வளவு அவமானச் செயலோ, அதே அளவிற்கு அவமானம், இங்கே ஆண்களின் சட்டையைப் பிடிப்பதும். 

“மொதல்ல கைய எடு பாண்டி!” என அதட்டிக் கொண்டு தான் வந்தார். 

“வாய்யா பெரிய மனுசா! என்னமோ சமஞ்ச பொண்ணாட்டம் எல்லாரும் வீட்டுக்குள்ளயே இருந்தீங்க. குடிசு விட்டு வெளிய வந்துட்டீங்களா?” என தகுதி தராதரம் பாராமல் எகத்தாளமாய்ப் பேச,

“வேண்டாம் பாண்டி. நாங்க அமைதியா போறோம்னு ரொம்ப துள்ளாதே!’ என தவசி எச்சரிக்க,

“என்னடா பண்ணுவீங்க? உங்க வீட்லயும் வயசுப் பொண்ணு இருக்குல்ல. எங்கதுலயும் எளந்தாரிப் பயலுக இருக்கானுக” எனக் கேட்க, இருந்த ஒட்டு மொத்த கோபத்தையும் அவன் மீது காட்டிய தவசி, பால்பாண்டியை அடித்து கீழே தள்ளி இருந்தான். 

அதற்குள் அங்கு கூடியிருந்த இரண்டு இனத்திற்குள்ளும் கைகலப்பு வருவது போல் இருக்க, எஞ்சியிருந்தவர்கள் அவர்களைப்‌பிரித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஊர் மொத்தமும் சாவடியில் கூடிவிட, 

“ஏம்ப்பா… பால்பாண்டி நீங்க இவ்வளவு பண்ணியும், சின்னவர் பொறுத்துப் போறார்னா, உங்க பக்கம் ஒரு உசுரு போச்சேனு தான். ஊர் ஆளுகளும் அதனால தான் அமைதியா இருக்கோம். அணஞ்ச தீய ஏன் மறுபடியும் ஊதி பெருசு பண்ற? அப்ப… ஊருக்குள்ள பெரிய மனுஷங்கனு நாங்க எல்லாம் எதுக்கு?” என கூட்டத்தில் ஒருவர் நியாயயம் பேச,

“எதுய்யா உங்களுக்கு அணஞ்ச தீயி. அவ தாலி கட்டின அன்னைக்கே தூக்குல தொங்கி… என்னைய ஆம்பளயே இல்லைனுட்டுப் போயிட்டா. இவன் என்னடான்னா மைனராட்டம் ஊருக்குள்ள வந்து போவானா? இவன சும்மா விடச் சொல்றீங்களா?” எனக் கேட்க, தனது காதில் விழுந்த செய்தியில்  யாரோ கோடாரி கொண்டு இதயத்தை பிளந்தது போல் இருக்க, இருக்கும் இடம் மறந்து போனது முத்துவேலிறகு. இடியென இறங்கியது அந்தச் செய்தி முத்துவேலின் மூளைக்குள். சித்தபிரமை பிடிக்காத குறை ஒன்று தான். 

சித்தப்பாவையும், தவசியையும் திரும்பி பார்க்க அவர்களும் பதட்டத்தோடு இவனைத்தான் பார்த்து நின்றனர்.

சென்றமுறை வந்த பொழுது கூடிக் களித்த கிளி, இந்த முறை வரும் பொழுது உயிரோடே இல்லை என்பதை ஏற்க மறுத்து, மனம் மருகி நின்றது. ஆளாளுக்கு பேசி சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்களே ஒழிய, இவனுக்கு நடப்பது எதுவும் நினைவில் பதியவில்லை. 

கூடியவர்கள் சமாதானம் பேசி அனைவரையும் கலைத்து விட்டனர். சின்னவர் மகனை அழைக்க… அவனோ வேரோடிய மரமாக அசையாது நின்றிருந்தான். 

எப்படி வீடு வந்தான் என அவனுக்கே தெரியாது. இவனைப் பார்த்தவுடன் சுதா கதறி அழ, அவனது விரக்தி தாங்கிய பார்வை கேட்ட கேள்வி தங்கையை வெகுவாகச் சுட்டது. அவள் என்ன செய்வாள். அப்பாவிற்கும் ஊருக்கும் பயந்து கொண்டு அமைதியாகி விட்டாள். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு விபரீதம் ஆகும் எனத் தெரிந்திருந்தால் அவளும் நடப்பது நடக்கட்டும் என சொல்லி இருப்பாளோ என்னவோ. நடக்கப் போவதை கணிப்பவர்‌ யார்?

மகன் வந்ததை அறிந்து, உடனே பெரியவர் குடும்பமே கிளம்பி வந்து விட்டது. பித்துப் பிடித்தவன் போல் யாரையும் கருத்தில் கொள்ளாமல் இருந்த மகனைப் பார்க்க தாளவில்லை அவர்களுக்கு. ஆரம்பத்திலேயே அன்னபூரணி விபரமாகச் சொல்லி இருந்தால், இந்த அளவிற்கு விவகாரம் வளர்ந்து இருக்காதே, தட்டி வைத்திருக்கலாமே என்ற எண்ணம் தான் இப்பொழுதும் வந்தது. அதைக் கொண்டே பிரச்சினையை ஆரம்பித்தார் ரெங்கநாயகி.

“சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணிட்டா, உங்க பங்காளிக எல்லாம் உங்கள தள்ளி வச்சுருவாங்க. அதுக்குப் பின்னாடி சின்ன அண்ணனே எல்லாத்துக்கும் முன்னுக்கு நின்னுக்கலாம்னு நெனச்சுட்டாரு போல ண்ணே.” என பேச்சில் நஞ்சு கலந்து ஊர்ப்‌பகையை குடும்பப் பகையாக திசை திருப்பி விட்டார்.

“எந்த நேரத்துல எதப்‌பத்தி பேசுற ம்மா. இந்த அவமானமும் கஷ்ட்டமும் எங்க அண்ணன் குடும்பத்துக்கு மட்டும் இல்ல. உள்ளூர்ல இருக்குற எங்களுக்கு தான் அதிகம். அவன் எனக்கும் தான் ஆம்பளப் பய.” என சின்னவர் கோபத்தை அடக்கிக் கொண்டு பேச,

“அதெப்படி… யாருக்கும் தெரியலைனாலும் சுதாவுக்கு தெரியாமலா போயிருக்கும்?” என எடுத்துக் கொடுக்க, அவளும் எனக்கு எதுவும் தெரியாது என சொல்லியும் யாரும் நம்பவில்லை.

இவர்கள் வழக்காடிக் கொண்டு இருக்க, அங்கே முத்துவேலோ தீப்பிடித்த காட்டின் சாம்பலுக்கு நடுவே கிடந்தான் முழு போதையில். கண்ணீர் வடிந்தது வடிந்த வாக்கில் இருந்தது. இன்றும் அவளது மூச்சக் காற்று அங்கு அவனை கதகதப்பாக வருடிச் சென்றது. வளவிச் சத்தமும் கொலுசுச் சத்தமும், சிரிப்பு சத்தமும் இதயத்தை இண்டு இடுக்கு விடாமல் குதறிச் சென்றது.

“எல்லாத்தையும் அவசர அவசரமா முடிச்சுட்டு என்னைய மட்டும் தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டியேடி.” என காற்றோடு கலந்தவளிடம் பேசிக் கொண்டு இருந்தான். 

போகின்ற போக்கில் பால்பாண்டி வீசிச் சென்ற வெடியே அவன் இதயத்தை சுக்குநூறாக வெடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

“கல்யாணம் முடிஞ்சு ஒரே நாள்ல செத்துப் போனவளுக்கு எல்லாம் சுமைதாங்கி கல்லு வச்சு எங்க அக்கா குடும்பத்த அசிங்கப்படுத்த விரும்பல.” என சாவடியில் அனைவரும் கலைந்து சென்ற பின்னரும், சிலையாக நகராமல் நின்றவன் காதருகில் அவன் கூறிச் சென்றதே ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

‘அப்படினா!!!’ என அதிர்ந்தவன் பித்துப்பிடித்த நிலையிலும் தனது சிந்தனை முழுவதையும் ஒன்று கூட்டி சிந்திக்க, அடிவயிற்றில் சுளீரென்ற வலி மின்னலென வெட்டிச் சென்றது. அவனுக்குள்ளும் கர்ப்பம் கலைந்த உணர்வு.  

வயிற்றுப் பிள்ளையோடு இறந்தவர்களுக்கு தானே அவர்கள் நினைவாக சுமைதாங்கி கல் வைப்பார்கள்.

எல்லாம் முடித்து வந்து சாந்தியின் அறையை சுத்தம் செய்கையில் சித்தியின் கையில் கிடைத்த கடிதத்தில் இருந்தது இந்தத் தகவல் தான். 

“நான் பச்சை நெல்லுனு நெனச்சு இவங்க எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க. நான் அவிச்ச நெல்லு விதைக்க முடியாதுங்கறது தெரியல. உங்ககிட்ட ஒரு செய்தி சொல்லனும்னு, உசுர கையில புடிச்சு காத்திருக்கே. என்னைய மாதிரியே உங்களையும் அடச்சு வச்சுட்டாங்களானு தெரியல. ஆனா எனக்கு தொணையா உங்க புள்ள இருக்கு. அந்த தைரியத்துல தான், நான் இங்க இருக்கேன்.” என எப்படியாவது இந்தக் கடிதத்தை அவனிடம் சேர்த்து விடவேண்டும் என்பது போல் அவசர அவசரமாக கிறுக்கியது போல் இருந்தது. கடிதாசி எழுதத் தெரிந்தவளுக்கு, கடிதாசி சென்று சேரும் விலாசம் தெரிந்திருக்க வேண்டுமே. கடைசியில் அவளும் விலாசம் எழுதா கடிதமாகிப் போனாள். உரியவனிடம் சென்று சேரவில்லை.

நல்லசிவத்திற்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார், ஊருக்குள் தெரிந்தால் தனக்கும் அசிங்கம் என அக்காவும் தம்பியும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர். 

சாந்தியின் நினைவுகளோடே முத்துவேலின் உலகம் நின்று விட்டது. எப்பொழுதும் போதையிலே இருந்தான். எதிலும் ஈடுபாடு காட்டவில்லை‌.

சுதாவையும் கல்லூரிப் படிப்பை நிறுத்தி விட்டார் சின்னவர். 

“ஏன் மாமா… அவிங்களுக்குப் பயந்துட்டு படிப்ப நிப்பாட்டனுமா? அது அவிங்களுக்கு இன்னும் எளக்காரமா போகாதா மாமா?”

“இது வீராப்பு காட்டுற விஷயம் இல்ல தவசி. அவுங்க புள்ளய பறி கொடுத்தவங்க. ஆத்திரத்துல ஏதாவது பண்ணிட்டா நாளைக்கி அசிங்கம் நமக்கு தான். நாலையும் யோசனை பண்ண வேண்டி இருக்குல்ல. பொம்பளப்பிள்ள விவகாரம் பாரு!” எனக் கூறிவிட யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

சாந்தியின் இறப்பிற்கு காரணம் அண்ணன் தான் என்ற கோபத்தோடு, இந்தக் கோபமும் சின்ன அண்ணனிடம் சேர்ந்து கொண்டது சுதாவிற்கு. 

அவளுக்கும் உடனே திருமணம் ஏற்பாடு செய்ய, “என்னையத்தான் படிக்க விடல. எனக்குப் படிச்ச, ஆஃபிஸ்ல வேல பாக்குற மாப்பிள்ளை தான் வேண்டும்.” எனக் கூறிவிட்டாள்.

முத்துவேலிற்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முற்பட, “உயிரோடு இருக்கணும்னா என்னைய இப்படியே விட்டுருங்க.” எனக் கோபமாக கூற, 

“ஏன்டா இந்த சொத்து சுகமெல்லாம் யாருக்குடா. இப்படி நீ மட்டும் ஒத்த மரமா நிக்கவா? நாளைக்கி உனக்குனு ஒரு வாரிசு வேண்டாமா?” என்ற பெற்றவர்களின் கேள்விக்கு, 

“இப்பவும் உங்களுக்கு காசு பணம் தானே பெருசாப் போச்சு.‌ என் வாழ்க்கையப் பத்தி, என் மனசப் பத்தி நெனச்சுப் பாக்கல இல்ல.” என ஆதங்கமாகக் கேட்க,

“ஏன்டா காசு பணத்த பாத்திருந்தா உங்க அண்ணனுக்கு இவங்க வீட்ல பொண்ண எடுத்துருப்போமாடா.” எனக் கேட்க அங்கேயும் ரெங்கநாயகி குடும்பம் கௌரவத்தில் அடிவாங்கியது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேச, சக்திவேலிற்கே தனது மனைவி குடும்பத்தை தாழ்த்திப் பேசிய அப்பாவின் பேச்சு சற்று சங்கடத்தைக் கொடுத்தது.

“காசு பணத்தை விட சாதிசனம் முக்கியம்டா. நாளைக்கு நாலு பேரு முன்னாடி நாந்தான் பெரிய மனுஷன்னு எப்படி நிக்கறது. சாமியப் பகச்சாலும் சாதிசனத்த பகச்சுக்க கூடாதுடா?” என சுப்பையா ஆத்திரமாகக் கூற,

“உங்க பிள்ளைக்கி நீங்க சொத்து சேத்தீங்க. ஆனா எம்பிள்ள தான் அவகூடவே செத்துப் போச்சே. நான் யாருக்கு சேர்க்கணும்.” எனக் கேட்க, விவகாரம் அந்த அளவிற்கு வளர்ந்து இருந்ததா என குடும்பமே அதிர்ந்து நின்றது. 

“நானும் அவள மாதிரியே பொசுக்குனு செத்துட்டா, நாலு நாள் அழுதுட்டு மனசத் தேத்திட்டு போயிருவீங்க. இப்படியே உங்க கண்ணு முன்னாடி நடமாடினாத்தான் தெனமும் உங்களுக்கு உறுத்தும்.” என உறுதியாக கூறிவிட்டான்.

முத்துவேல் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ள, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெங்கநாயகி தனது இரண்டு மகன்களையும் குடும்பத்திற்குள் இழுத்து விட்டார். மகனது கவலையில் பெரியவரும் ஆழ்ந்து விட,

பள்ளி நிர்வாகத்திற்கு சின்ன மகனும் மருமகளும், கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் மச்சானோடு பெரிய மகனும் என ஒட்டிக் கொண்டனர்.

விரக்தியில் வாழ்க்கையை வெறுத்த முத்துவேலிற்கு அப்போதைய ஒரே ஆறுதலாக இருந்தது அவனது கண்ணீரைத் துடைக்கும் சங்கரியின் பிஞ்சு விரல்கள் தான். போதையில் சாப்பிடாமல் படுக்கும் மகனை சரிக்கட்டி சாப்பிட வைக்க திலகவதியும் சங்கரியையே அனுப்புவார். 

அனைவரிடமும் வெறுப்பை காண்பிப்பவன், அண்ணன் மகளிடம் மட்டும் சற்று பிள்ளை பாசத்தில் இளகிப் போவான். சித்தப்பாவின் செல்லப் பெண் ஆனாள் சிவசங்கரி. 

காலமும் நேரமும் தன் கடமையை செவ்வனே செய்ய, இரண்டாம் தலைமுறையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டனர்… முத்துவேலைத் தவிர. 

நடந்த சம்பவத்திற்குப் பிறகு பெரியவரும் அதிகமாக ஊர்ப்பக்கம் வரவில்லை. முக்கிய விசேஷங்களுக்கு சக்திவேல் மட்டுமே வந்து சென்றான். 

சின்னவரும் ஊரில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒதுங்கிக் கொண்டு, தவசியை முன் நிறுத்தினார். 

நல்லசிவம் குடும்பம் இந்த அவமானத்தால், பிள்ளையையும் பறி கொடுத்து விட்டு, ஊருக்குள் இருக்க முடியாமல் வெளியூர் சென்றுவிட்டனர். 

வருடங்கள் சில கடந்த நிலையில்…

“இப்படியே இருந்தா எப்படிங்க? ஆறேழு வருஷம் ஆச்சு. வச்ச வேண்டுதல் எல்லாம் அப்படியே இருக்கு. ஸ்கூல் வேல முடிஞ்சதும் கிடா வெட்டறதா வேண்டிக்கிட்டது. அத நிறைவேத்த வேண்டாமா?” என திலகவதி மெதுவாக கேட்க, பெரியவரும் யோசனை செய்தார்.

“சக்திவேல் கிட்ட சொல்லு. எல்லாரும் போயிட்டு வருவோம். ரொம்ப வருஷங்கழிச்சு விசேஷம்கறதால எல்லாருக்கும் சொல்லனும். அப்படியே உன் சின்ன மகன்கிட்டயும் அங்க வந்து குடிச்சுட்டு இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிறாதேனு இப்பவே சொல்லி வச்சுரு.” எனக் கூற, 

அதன்படியே சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து கிடாவெட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அண்ணன் குடும்பத்தோடு வெகு நாட்கள் கழித்து ஊருக்கு வருகிறார் என்ற சந்தோஷம் சின்னவருக்கு. 

இதுவே அவர்களது இரண்டு குடும்பமும் சொந்தபந்தங்களோடு ஒன்றாக கொண்டாடிய இறுதி விசேஷம். 

error: Content is protected !!