தாழையாம் பூமுடித்து🌺18

தாழையாம் பூமுடித்து🌺18

18

“யோவ்வ்… மாப்ள கறிய நல்லா அள்ளி வைய்யா. என்னமோ பச்சப் பிள்ளைக்கி வச்ச மாதிரி வைக்கிற. எம் மகனுக்கே கடவாயிக்கி பத்தாது நீ வக்கிறது.” என பந்தியில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்க,

“பங்காளி!! அங்க மச்சானையே கவனிச்சா எப்படி? இந்த எலைக்கும் கொஞ்சம் வர்றது!” என ஒரு குரல் அதட்டி அழைத்தது.

“நல்லா நள்ளி எலும்பா அள்ளி வைய்யிடா. எலும்பில்லாத கறியாப் பாத்து பல்லுப் போன நம்ம மச்சானுக்கு வைய்டா தம்பி!” என நக்கல் பேச,

“அடியேய் மாப்ள… எங்களுக்கா பல்லு போச்சு? உங்க வீட்டு கெடா வெட்டுக்கு வந்தா கறிக்கொழம்ப வாசன புடுச்சுட்டு தான் போகனும் போலடா. பொண்ண கட்டுனவிங்களுக்கு, இப்படி விருந்து போட்டா எப்படிடா காடு கரைனு உழுகறது. ஏத்தம் எறைக்கிறது. எப்படி வெள்ளாம பண்றது. எப்படி உங்களுக்கு எல்லாம் பொண்ணப் பெத்து கொடுத்து சீரு செய்யறது.” என பேச்சில் சிலேடை தெறிக்க,

“யோவ்… பந்தியில உக்காந்துட்டு கவிச்சியா பேசாதய்யா. பொண்டு புள்ளைக இருக்குல்ல.” என ஒரு குரல் கண்டிக்க,

“போடா… வக்காளி! கவிச்சி திங்கிற எடத்துல கவிச்சியா பேசாம, வேறெங்க பேசச் சொல்ற.” என சிலேடையோடு, சலம்பலும், லந்தும் பந்தியோடு கலந்து கட்டியது. நக்கலை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரியும் ஜனங்கள். கிட்டத்தட்ட வந்திருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் நிதானம் தப்பித்தான் இருந்தனர். மீதிப் பேர் சின்னவருக்கு பயந்து கொண்டு ஒதுங்கி இருந்தனர். 

சித்தப்பாவிற்கு தெரிய சிகரெட் பிடிக்கவே பயந்த முத்துவேல் கூட, பட்டும் படாமல் தீர்த்த யாத்திரை சென்று வந்திருந்தான். 

தவசியோடு, முத்துவேலும் இன்னும் சிலரும் பந்தி பரிமாறிக் கொண்டு இருந்தனர். கிடா வெட்டு விருந்து எப்படி இருக்கும் எனத் தெரியும். எனவே பெண்களை பரிமாற விடவில்லை. 

ஒவ்வொரு இலையிலும் சோத்துக்கு கறியா‌, கறிக்கு சோறா என போட்டி போட்டது. கரண்டியில் அள்ளிப் பரிமாறும் பழக்கம் எல்லாம் இங்கு இல்லை. தள்ளிப் பரிமாறும் பழக்கம் தான். 

சூரியனுக்கு முன் எழுந்து பின் தூங்கி… தோட்டம், காடு என நேரங்காலம் பார்க்காமல் உழைக்கும் கூட்டம். அவர்களுக்கு அளவு சாப்பாடெல்லாம் வயிற்றில் ஒரு மூளைக்கு காணாது. சோற்றில் குழி பறித்து குழம்பு ஊற்றி சாப்பிடும் மண்ணோடு மல்லுக் கட்டும் கூட்டம்.  

சக்திவேலின் மச்சான்கள் தங்கராசும், தண்டபாணியும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். 

“நல்லா சாப்பிடுங்க மாப்ள… ஆடிக்கும், தீபாவளிக்கும் கறி எடுத்து காச்சி குடிக்கிறவங்க நீங்க.” என அவர்களுக்கு மச்சான் முறையில் இருந்த ஒருவன் நக்கல் பேசிக் கொண்டே பரிமாற,

“அத… மாமியா வீட்டுக்கு விருந்துக்கு வந்தா மட்டுமே கறி கஞ்சிய அடையாளம் பாக்குற நீ சொல்லாதடி மாப்ளேய்!” என அவர்களுக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்னொருத்தன், பரிமாறுபவனுக்கு பதில் கொடுத்தான். இந்த மாதிரி கேலிப் பேச்சுக்கள் விசேஷ வீடு எனில் சகஜம். 

ஆனால் என்ன… தங்களை எப்பொழுதும் தாழ்த்தியே நினைத்துக் கொண்டு இருக்கும் ரெங்கநாயகி குடும்பத்திற்கு அது கௌரவக் குறைச்சலாகப் போயிற்று.

விசேஷ வீடுன்னா அப்படித்தாங்க. நக்கலும் இருக்கும். நக்கலோடு சேர்த்து, இடைச் செறுகலாக இடைக்குத்தலும் இருக்கும். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் கொடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கூட்டத்துக்குள்ள மூஞ்சி சுழிச்சு கோபப்பட்டா போச்சு. சண்டையில தான் போய் முடியும். அதெல்லாம் ஒரு தனிக் கலை. பேசுறவுக போக்குலயே போயி அவங்கள வாரி விடறது. நக்கலும் நையாண்டியும் உடன் பிறப்பு மாதிரி. அது புரியாமல்,

“நாங்க என்ன இந்த கறிக்கு தான் வந்திருக்கோமா?” என தண்டபாணி கோபப்பட, 

“கெடா வெட்டுற வீட்டுக்கு வேறெதுக்கு வருவாங்க. கறி திங்கத்தானே வருவாங்க.” என பரிமாறுபவனும் நக்கலாகவே பதில் கூற, 

“என்ன… இந்த ஊர்க்காரவுங்க, எங்கள பந்தியில வச்சு அசிங்கப் படுத்துறீங்களா?” என தங்கராசுக்கு கோபம் வந்தது.

“இங்க கொழம்பு கொண்டு வாப்பா… இங்க சாப்பாடு கொண்டா… அங்க எலய எடுங்கப்பா… அடுத்த பந்தி உக்காரட்டும்.” என மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த தவசி, வேகமாக அங்கே வந்தான். 

வெகுநாட்கள் கழித்து பெரிய மாமன் குடும்பம், விசேஷம் வைக்க என ஊருக்கு வந்திருக்க, ஆளும் பேருமாக எடுத்து செய்து விசேஷம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

“என்னடா மாப்ள…” என பரிமாறுபவனை தவசி வந்து விசாரிக்க,

“சும்மா கிண்டல் பண்ணோம் மாமா! அதுக்கு போயி கோவிச்சுக்கிட்டாக.” என அவனும் பதில் கூற, 

“அவங்கள யாருன்னு நெனச்சுக்கிட்டுப் பேசுற?” என்றான் தவசி.

“என்ன மாமா! சக்திவேலுக்கு மச்சான்னா, எனக்கும் மச்சான் தானே… இது கூடத் தெரியாத கேனப்பயலா நானு. அந்த உரிமையில தான் நக்கல் பேசினேன்.” என கூற, அவனும்‌ உறவுமுறை தெரிந்து தான் நக்கல் பேசியிருக்கிறான்… சொந்த பந்தங்களுக்குள் இது சகஜம் எனத் தெரிந்த தவசி,

“பந்தியில யாரு எவருன்னு பாத்து பேசுங்கப்பா.” என மேம்போக்காக சமாதானப்படுத்தி விட்டு செல்ல, அது என்னவோ போனால் போகுதென்று, தங்கள் குடும்பத்திற்கு தவசி, ஊர் ஆட்களிடம் மரியாதை வாங்கித் தருவதாகக் பட்டது அங்கு வந்த சக்திவேலிற்கும். இப்பொழுது தவசி ஊருக்குள் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக இவர்களுக்கு தோன்றியது. எல்லாரும் சொந்தபந்தம். யாருக்காகப் பார்ப்பது என தவசி சென்றுவிட்டான்.

இன்று அதிகாலையிலேயே குல தெய்வக் கோவிலுக்கு, அனைத்து குடும்பங்களோடும் சென்று, பொங்கல் வைத்து முடிக்க… கிடாயை பிடித்து இழுத்து வந்து சாமி முன் நிறுத்தி, மஞ்சள் தண்ணீரை அதன் மீது பூசாரி தெளிக்க… அது அசையாமல் அப்படியே நின்றது. கிடா தலையைக் குலுக்கி, வெட்டுங்கடான்னு சம்மதம் சொன்னாத்தானே வெட்ட முடியும். 

“ஏதோ சாமிக் குத்தம் இருக்கும் போல…” என கசமுசா என பேச்சு அடிபட,

 “வேறென்ன… சாதி விட்டு சாதி தொட்ட கொறையாத்தான் இருக்கும். அதான் கெடா குலுக்க மாட்டேங்குது போல.” என பேச்சுகள் கூட்டத்துள் கிசுகிசுக்கப்பட்டது. 

எதுடா சிக்கும், வம்பு பேசலாம் என அலைபவர்களுக்கு தும்மலும், விக்கலுமே ஒரு காரணமாக அமையும். இதை சும்மா விடுவார்களா?

“என்ன குத்தங்கொற இருந்தாலும் ஏத்துக்கிட்டு, உம் பிள்ளைகளுக்கு நல்ல வழியக்காட்டு கருப்பா.” என கூட்டத்துள், அருள் வந்தவராக பெரிய மனுஷி ஒருவர் சாமி ஆடி திருநீரை அள்ளி எடுத்து ஆட்டுக்கிடா மீது வீசிவிட்டு, மஞ்சத்தண்ணீர் மீண்டும் தெளிக்க,‌ உடனே ஆடு தலையை ஆட்டியது.  

சாமி உத்தரவு கொடுத்து விட்டதாக எண்ணி, கிடா வெட்டி முடிந்து, இதோ பந்தியும் நடந்து கொண்டு இருக்கிறது.

வந்தவர்களுக்கான பந்தி முடிந்தது. அடுத்து வீட்டு ஆட்கள் எல்லாம் ஒன்றாக வெகு நாட்கள் கழித்து பந்தியில் அமர்ந்தனர். 

சிவகாமி, அண்ணன் பிள்ளைகள், நாத்தனார் பிள்ளைகள், தங்கை பிள்ளைகள் என அனைவரையும் அருகே அமர்த்திக் கொண்டு, “மருமகளே… இங்க வா!” என சிவசங்கரியை அழைத்து அருகே அமர்த்திக் கொண்டது ரெங்கநாயகி கண்ணில் பட்டது. 

ஒருவழியாக கிடா விருந்து முடிந்தது. வந்த சொந்தங்கள் கிளம்பி விட,‌ இப்பொழுது வீட்டின் சொந்தங்கள் மட்டுமே.

மறுநாள்…

காலை உணவை முடித்துக் கொண்டு, தோப்பிலிருந்து இளநீர், நுங்கு என வெட்டி எடுத்து வரப்பெற்று அனைவருக்கும் சீவிக் கொடுத்துக் கொண்டு இருந்தனர்‌. 

ஒரு இளநீரை எடுத்துக் கொண்டு தவசி அடுப்படி செல்ல, அங்கு மும்முறமாக சிவகாமி சமையல் வேலை செய்து கொண்டு இருந்தாள் அடுத்த வேளைக்கு. 

“உடம் பொறப்புகளப் பாத்துட்டா சந்தோஷத்துல எம் பொண்டாட்டிக்கு சோறு தண்ணி எறங்காது.” என கிண்டல் செய்து கொண்டே, மனைவிக்கு இளநீரை நீட்ட, அவளோ கைவேலையாக இருக்க, தவசியே இளநீரின் வழுக்கையை வளித்து அவளுக்கு ஊட்டிவிட, மனைவியின் உதட்டில் வளிந்த இளநீரை, அக்கம் பக்கம் பார்த்து விட்டு, சட்டென்று உதடு கொண்டு கணவன் துடைத்து விட, அந்தப் பக்கமாக சென்ற ரெங்கநாயகி முகத்தை சுழித்துக் கொண்டு சென்று விட்டார். இது சின்னவர் பார்வையிலும் விழுந்தது. 

பிள்ளைகளின் அந்நியோன்யம் பெற்றவர்களுக்கு சந்தோஷம். ஆனால் மற்றவர்களுக்கு அது உறுத்துதே.

பிள்ளைகள் உறுப்படி இப்பொழுது கிட்டத்தட்ட பதினைந்திற்கும்‌ மேல். இவர்களுக்கு எல்லாம் தலைமை ஈஸ்வரன் தான். அவனுக்கு ஒத்தாசையாக சௌந்தரபாண்டி, வருண் என ஒரு கூட்டம்.‌ 

விளையாட, தோப்பிற்கு கூட்டி செல்ல, பனை ஓலை காத்தாடி செய்ய, நுங்கு வண்டி செய்ய, தட்டாம்பூச்சி பிடிக்க, பட்டாம் பூச்சி பிடிக்க என ஈஸ்வரன் பின்னாலேயே அனைவரும் திரிந்தனர். சங்கரியும் எது ஒன்றும் வேண்டும் என்றாலும் இவனிடமே வந்தாள். 

“டேய் ஈஸ்வரா! அங்க சங்கரி கோவிச்சுட்டு ஒக்காந்துருக்குடா. ஏன்டா…” என சௌந்தரபாண்டி வர,

“அவளுக்கு ஊருக்கு கொண்டு போக தூக்கணாங்குருவிக் கூடு வேணுமாம் டா. குருவி முட்ட வச்சுருக்கு, இப்ப எடுக்க முடியாதுன்னு சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டா.” என்றான் இன்னும் அரைக்கால் ட்ரவுசர் முழுக்கால் ட்ரவுசராக மாறாத ஈஸ்வரன். 

“நான் இன்னொரு மரத்துல காலியான கூடு பாத்தேன்டா.” எனக் கூற,

“அப்ப வாடா… எடுத்துட்டு வந்துறலாம். நாளைக்கி அவ ஊருக்கு கெளம்பிருவா.” என சௌந்தரபாண்டியை அழைக்க,

“டேய்… அது பனைமரம். ஏறுனா அறுத்துறும்.” 

“பாத்துக்கலாம் வாடா.” என மாமன் மகளுக்கு குருவிக்கூடு எடுக்கும் ஆர்வத்தில் இருவரும் தோப்பிற்கு கிளம்ப, 

“நித்த்த்தியாஆஆ!” என வேண்டுமென்றே சத்தமாக அழைத்தாள். கூடு எடுக்க முடியாது என்று சொன்ன கோபம் அவளுக்கு. அவள் அழைப்பதை பார்த்து சௌந்தரபாண்டி சிரிக்கவும,

“இவள… எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டா.” என வாய்க்குள் திட்டிக் கொண்டே நின்றான்.

அப்பொழுது மற்ற பிள்ளைகள் எல்லாம் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருக்க, இவனைப் பார்த்த சங்கரி, “ஒளிஞ்சா கண்டு பிடிக்க முடியாத மாதிரி ஒரு நல்ல எடமா சொல்லுடா.” என வந்து நின்றாள். 

“வைக்கோல் படப்புக்க அடியில ஒளிஞ்சுக்கோ… யாரும் கண்டு புடிக்க முடியாது.” என அவசரமாக, அவன் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் இடத்தை அவளுக்கு சொல்லிவிட்டு சென்று விட்டான். வைக்கோல் போருக்கும், தரைக்கும் இடையில் எப்படியும் ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருக்கும்.

எண்ணவோட்டமே நமது கண்ணோட்டமும். தர்மருக்கு எல்லோரும் நல்லவர்களாகவும், துரியனுக்கு எல்லோரும் கெட்டவர்களாகவும் தெரிந்த மாதிரி. 

ரெங்கநாயகிக்கும் எப்பொழுதும் இவர்களை ஏதாவதொரு குறை சொல்லும் நோக்கிலேயே பார்த்துப் பழகியவருக்கு, பிள்ளைகளின் வயதுகூட மறந்து, சிறுபிள்ளைகளையும் அவ்வாறே என்ன வைத்தது.

“அய்யோ… அய்யோ… டேய்ய்ய்… என்னடா பண்ற பிள்ளைய. மொளச்சு மூனு எல விடங்குள்ள என்ன வேல பாக்குற?” என கத்திக் கொண்டே வந்தவர், ஈஸ்வரனை கையைப் பிடித்து இழுத்து தள்ளினார் ரெங்கநாயகி. முழங்கை சிராய்க்க கீழே விழுந்தான் ஈஸ்வரன். 

பின்வாசலில் தான்‌ மாட்டுக்கொட்டமும், வைக்கோல் படப்பும். பெரிய வெட்டவெளி, அதைத் தொடர்ந்து அவர்களது தோப்பும், வயலும் ஆரம்பித்து விடும். அங்கு தான் பிள்ளைகள் அனைவரும் விளையாடிக் கொண்டு இருக்க,

பின் வாசலுக்கு வந்த ரெங்கநாயகி பார்த்தது, வைக்கோல் படப்பின்‌ பின்புறம் நின்று கொண்டிருந்த சங்கரியின் முன், முழங்கால் இட்டு அமர்ந்து முட்டி வரை இருந்த அவளது கவுனை தொடை வரை ஏற்றி விலக்கிப் பார்த்துக் கொண்டு இருந்த ஈஸ்வரனைத்தான்.

“என்னம்மா… என்னாச்சு…” என சத்தம் கேட்டு வந்த கயல்விழி, 

“என்னடீ ரத்தம்.” எனக் கேட்டுப் பதற, அப்பொழுதுதான் அவள் கால் வழியாக வளிந்த இரத்தத்தை ரெங்கயநாகியும் கவனித்தார். 

“படப்புக்கு கீழ… ஈஸ்வரன் தான்… என்னைய…” என முழுதாக முடிக்காமல், ரெங்கநாயகி அலறிக் கொண்டு வந்ததில், என்னவோ தப்பு பண்ணிட்டோம் போல என நினைத்துக் கொண்டு, அவள் அரையும் குறையுமாக அழுகையோடு நிறுத்த,

“படப்புக்கு அடியில வச்சு பிள்ளைய என்னடா பண்ணின?” என கோபமாகக் கேட்க, அதற்குள் அங்கு அனைவரும் வந்து விட்டனர். 

“நீ எல்லாம் பெரிய மனுஷியா? பச்சப் புள்ளயப் பாத்து என்ன கேள்வி கேக்குற?” என பேச்சியம்மா ஆங்காரமாகக் கேட்க,

“பொலிகாள வளக்குற குடும்பம் தான. அதான் பிள்ளையையும் பொலிகாள மாதிரி வளத்து விட்டுருக்கீங்க. பிஞ்சுலயே பழுத்து திரியுது.” என பொலிகாளைக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கும் வித்தியாசம் தெரியாமல் பழி போட்டார் ஈஸ்வரன் மீது. 

பொலிகாளைக்கு இருக்கிற அறிவு கூட மனுஷனுக்கு இருக்காதுங்க. ஒரு சினைப் பசுவ பொலிகாள முன்னாடி நிறுத்துனா, அது மேல இருந்து வர்ற வாசனையை வச்சே இது சினை மாடுன்னு கண்டு பிடிச்சிரும். அது கூட இணை சேராது. 

தவசி குடும்பம் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதையே பொலிகாளை என பேசிக் கொண்டு இருக்கிறார் ரெங்கநாயகி.

“ஏம்மா… பச்சைப் புள்ளைகள பாத்து என்ன பேசறதுங்குற விவஸ்த்தை இல்லாம, அறிவுகெட்டத்தனமா பேசிக்கிட்டு இருக்க?” என சின்னவர் ஆத்திரமாகக் கேட்க,

“அந்த வெவஸ்த்தை பெரியவங்களுக்கும் இருக்கனும். தலைக்கு மேல பிள்ளைக வளர்றாங்கனு எல்லாத்தையும் அடக்கனும். பிள்ளைக முன்னாடியே கொஞ்சி குலாவுனா பிள்ளையும் இப்படித்தான் பிஞ்சுலயே பழுத்து நிக்கும்.” என பேச, சிவகாமி கூசிப்போனாள்.

சின்னவருக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. அவரும் இவர்கள் வந்ததில் இருந்து பாத்துக் கொண்டு தான் இருக்கிறார். ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார் ரெங்கநாயகி. 

இதில் தன் பிள்ளைகளின் அந்தரங்கமும் அனைவரின் முன்னும் விமர்சிக்கப்பட, “அப்படி என்னத்தடா பண்ணித் தொலச்ச, கண்டவங்களும் கண்டபடி பேசுற அளவுக்கா உன்னைய வளத்தேன்.” என கோபமாகக் கேட்க, அவனோ ஒன்றும் புரியாமல், இவர்களது சண்டையில் என்ன தப்பு செய்தோம் என புரியாமல் திருதிருவென முழிக்க,

“நரிக்கி நாட்டாமை கொடுத்தா கெடைக்கி ரெண்டு ஆடு கேக்குமாங்குற மாதிரி சின்ன மாமன் மகளக் கட்டி, சின்ன மாமனோட சொத்த எல்லாம் வளச்ச மாதிரி, மகன வச்சு பெரிய மாமனோட சொத்தெல்லாம் வளைக்கலாம்னு திட்டம் போட்டாச்சு போல.” என ரெங்கநாயகி தவசியை ஜாடை பேசிக் கொண்டே போக,

ரெங்கநாயகி மீது இருந்த கோபத்தை, அவரை எதுவும் சொல்ல முடியாத பாட்டிற்கு, ஈஸ்வரன் மீது திருப்பினார் சின்னவர். 

“நான் ஒன்னுமே பண்ணல தாத்தா.” எனக் கதறக்கதற, பெல்ட்டை உறுவி… அடி பிண்ணி எடுத்து விட்டார். அன்னபூரணி ஓடி வந்து ஆத்திரமாக பெல்ட்டைப் பிடிங்கி எறிய, அழுது கொண்டே சிவகாமி மகனை தூக்கிக் கொள்ள, அவர்கள்‌ மீதும் இரண்டடி விழுந்தது. 

இந்தக் கலவரத்தில் பிஞ்சுகள் இரண்டும் விதிர் விதிர்த்துப் போயின. 

“கயல்விழி! மொதல்ல அந்தப் புள்ளைய உள்ள கூட்டிட்டுப் போயி என்னானு பாரு! பத்து வயசுக்கு மேல ஆச்சுல்ல. என்ன ஏதுன்னு தெரியாம ஆளாளுக்கு வம்பு வளத்துட்டு இருக்கீங்க.” என ஜெயந்தியும் சத்தம் போட, சங்கரியை அறைக்குள் அழைத்து சென்றாள் கயல்விழி. 

உள்ளே சென்று கவுனை விலக்கிப் பார்க்க, இடுப்புக்குக் கீழே தொடைப் பகுதியில் கண்ணாடி துண்டால் நன்றாக கிழித்து காயம் ஆகி இருந்தது. இன்னும் இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. 

“எப்படி ஆச்சு?” என பொறுமையாக விசாரிக்க, “ஈஸ்வரன் தான் படப்புக்கு அடியில ஒளிஞ்சுகிட்டா யாரும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொன்னான்.” என அழுது கொண்டே கூற, 

“ம்மா… முழுசா வெவரம் தெரியாம சின்னப் பயல போய் கண்டமேனிக்கி பேசிட்டியே. இது தெரிஞ்சா குடும்பமே சாமி ஆடுமேம்மா.” என கயல்விழியும் கணவனை நினைத்துப் பயம் கொள்ள,

“எனக்கு என்னடி தெரியும். அப்படியே பிரச்சினை பெரிசாச்சுனா, இத வச்சே இவளுக சங்காத்தத்த முடிச்சு விட்டுறலாம். இப்பவே புள்ள வயசுக்கு வந்தா அப்படி சீர் செய்யணும், இப்படி சீர் செய்யணும்னு பேச ஆரம்பிச்சுட்டாளுக. காது குத்துல நடந்த மாதிரி தான் சடங்குலயும் நம்ம அசிங்கப்பட்டு நிக்கனும். எதுனாலும் பாத்துக்கலாம் வா.” என மகளுக்கு தைரியம் சொல்லி வெளியே அழைத்து வந்தார். 

வெளியே அனைவரும் என்னவென்று கேட்க, கண்ணாடி கிழித்து இருப்பதாக தயங்கியபடியே சொல்ல, சக்திவேலிற்கும் மாமியார் அவசரப்பட்டு பேசியதைக் கொண்டு கோபம் தான். 

“எதையும் முழுசா பாக்க மாட்டியா?” என மனைவியை அனைவர் முன்னும் ஓங்கி அறைய,

இதையே பெரிதாக்கி, “இவளுக கூட சேந்து விசேஷம்னு வச்சாலே எனக்கு பிரச்சினை தான். மொத மொதன்னு காதுகுத்தின அப்பதான் என்னைய திட்டுனீங்க. இத்தன வருஷம் கழிச்சு விசேஷம் வச்சுருக்கோம். இன்னைக்கும் இவங்க முன்னாடியே கை நீட்டுறீங்க. நீங்க, உங்க அக்கா தங்கச்சிகளோட சந்தோஷமா இருங்க. நான் போறேன்.” என அழுது கொண்டே வேகமாக சென்று கதவை தாழ் வைத்தவள்,‌ அலமாரியில் இருந்த சேலையை எடுத்து அவசர அவசரமாக ஃபேனில் போட்டு இருந்தாள். அதற்குள் கதவைத் தள்ளி திறந்து விட்டனர் கூடியிருந்தவர்கள். அதற்காகவே லேசாக தாழ் வைக்கப்பட்ட கதவு தானே. இது அடிக்கடி ரெங்கநாயகி தனது கணவனை மிரட்ட வீட்டில் நடத்தும் நாடகம் தான். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பதை கயல்விழியும் நிரூபித்தாள். 

அவசரமாக சேலையை உருவிப் போட்டு மனைவியை காப்பாற்றினான் சக்திவேல். இந்தக் களேபரத்தில் அது அமுங்கிப் போயிற்று.

சங்கரியின் காயத்தை யாரும் கவனிக்கவில்லை. திலகவதி தான் பார்த்து, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவேலை எழுப்பி, அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று தையல் போட்டு வந்தார். முழுபோதையில் மேலே சென்று படுத்தவனுக்கு நடந்தது எதுவும் கேட்கவில்லை. 

உடனே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என கயல்விழி முரண்டு பிடிக்க… பெரியவர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டனர். 

கிளம்பும் முன் தம்பியை பார்க்க வந்தார் பெரியவர்.

“அட்டைப் பூச்சியாட்டம் வந்து உக்காந்துகிட்டு உறிஞ்சி எடுக்குறாங்கடா. சின்னவனும் எதுவும் கண்டுக்கறது இல்ல. எனக்கும் உடம்பு முன்ன மாதிரி இல்ல.” என அவர்களைப் பற்றி இப்பொழுதுதான் புரிந்து கொண்டவர், தம்பியிடம் அங்கலாய்த்தார். சின்னவர் எந்த பதிலும் பேசவில்லை.

“இப்படியே விட்டுறாதீங்க ம்மா. எப்படியாவது பொண்ண உம்பக்கம் இழுத்துக்கோம்மா.” என சிவகாமியிடமும் இறுதியாக கூறிவிட்டு சென்றார்.

சங்கரிக்கு ஈஸ்வரன் அடி வாங்கியதே மனதினில் ஓடிக் கொண்டு இருந்து. அவனை அடித்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் தன்னால் தான் அடி வாங்கினான் என்பது மட்டும் புரிந்தது.

ஈஸ்வரனுக்கும் ஏன் தாத்தா அவனை அடித்தார் என்ற காரணம் புரியவில்லை. கால் வழியே இரத்தம் ஒழுக நின்றிருந்த சங்கரி தான் நினைவில் நின்றாள்.

அவனும் சௌந்தரபாண்டியும் கூட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர,

”ஈஸ்வரா… சங்கரிய காணோம்ட.” என பிள்ளைகள் தேடிக்கொண்டு வர,

“இன்னுமா அங்க ஒளிஞ்சு இருக்கா.” என வேகமாக வைக்கோல் படப்பின் பின்னால் ஓடியவன், அங்கே சென்று குனிந்து குரல் கொடுக்க, அவளும் படுத்த வாக்கிலேயே ஊர்ந்து கொண்டே வேளியே வந்தாள். 

“யாருமே என்னைய கண்டு பிடிக்கல… நீ வந்து தான் காட்டிக் கொடுத்துட்ட.” என குறைபட்டுக் கொள்ள, 

“ஏய்! சிவா… என்னடீ ரெத்தம்.” என அவளது காலைப் பார்த்தவன், அதிர்ச்சியாகக் கேட்க, அவளும் குனிந்து கவனிக்க, கால் வழியாக ஒழுகிய இரத்தத்தைப் பார்க்கவும் பயந்து போனாள். 

“என்னான்னு தெரியல… வலிக்குது.” என இப்பொழுதுதான் வலியும் உணர, அழ ஆரம்பிக்க, மண்ணில் பதிந்திருந்த கண்ணாடித் துண்டோ, கூர்மையான கல்லோ ஏதோ ஒன்று இளம் தொடையைப் பதம் பார்த்து இருந்தது. 

அவனுக்கும் இப்படி பார்க்கலாமா என்றெல்லாம் தோன்றவில்லை. சட்டென அவள் முன் மண்டியிட்டவன் முட்டிவரை இருந்த அவளது கவுனை மேலே ஏற்றினான். இதைப் பார்த்துவிட்டு தான் ரெங்கநாயகி கூச்சல் போட்டது. 

புயல் அடித்து ஓய்ந்தது போல  வீடே நிசப்தமாக இருக்க… வடிச்ச சோறும், வச்ச குழம்பும் கரண்டி படாமல் அப்படியே இருந்தது.

வீட்டில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருக்க, அதைப் பார்க்க பிடிக்காமல் ஈஸ்வரன் தாத்தாவிடம் வந்தான்.

“தாத்தா… நான் எதுவுமே பண்ணல தாத்தா.” என சாய்வு நாற்காலியில், விபரம் புரியாத பேரனை அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்வில் படுத்து இருந்தவரிடம், வந்த பேரனை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டு கதறிவிட்டார் சின்னவர். 

வீட்டின் பெரிய மனுஷன் அழுவதைப் பார்த்த குடும்பத்தார் கண்களில் எல்லாம் கண்ணீர். 

“உம்மேல தப்பு இல்லடா. தாத்தாவுக்கு தான் கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது. அவங்கள ஒன்னும் செய்ய முடியாம உன்னப் போட்டு அடிச்சுட்டேன்டா.” என தடித்த தடயங்களை தடவிக் கொடுத்தார். 

“அண்ணே!” என பேச்சி அழைக்க, நிமிர்ந்து உட்கார்ந்தார். 

“எம்பிள்ளைகள என் வீட்டோட கூப்புட்டுக்கறே ண்ணே.” என பேச்சி அமைதியாகவே அண்ணனிடம் கூறினார். சின்னவர் எந்த பதிலும் பேசவில்லை.

“என்ன அத்தாச்சி, திடீர்னு இப்படி சொல்ற. பிள்ளைகள விட்டுட்டு எப்படி இருப்போம்.” என அன்னபூரணி பதறினார். 

“உனக்கே தெரியும் அத்தாச்சி. எமனுக்கு எத்தன பிள்ளைய தூக்கி கொடுத்தாலும், ஓசியில ஒத்த புள்ளய கொடுக்க மனசு வராது. அப்படி இருந்தும் நான் எம்மகன உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சே. ஆனா அது எவ்வளவு பெரிய தப்புனு இப்ப தான் தெரியுது.”

“அவங்களப் பத்தி தெரிஞ்சது தான அத்தாச்சி. அவங்க பேசுனதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்.” என்றார் ஆற்றமாட்டாமல்.

“அது இப்ப பிரச்சினை இல்ல. நா… எம் மகனப்பத்தி யோசிக்கல. எம் பேரன் பேத்திகளுக்கு அவங்க எடத்துல இருந்தா தான் மரியாதைனு புரிஞ்சு போச்சு. சட்டையில அழுக்குப் படாம வந்து போற மருமகனுக மத்தியில, மண்ணோட மல்லுக் கட்டுறவன் புள்ள எளக்காரமாத்தான் தெரிவான். எம் பிள்ளைய என் வீட்டுல ஒன்னுமே இல்லாம இங்க அனுப்பி வைக்கல. கண்ணுக்கெட்டுற தூரம் வரைக்கும் அவனுக்கு சொத்து சுகம் கெடக்கு. அண்ணனுக்கு மகனுக்கு மகனாவும் இருக்கட்டுமேனு தான் அனுப்பி வச்சே. எங்க ஊர்ல அவன் தான் ராசா. அது அவங்களுக்கு புரியல. அதுக்குதான் அவங்கவங்க எடத்துல இருக்கனும்கறது. நாளைக்கி எம்பேரனுக்கும் இந்த பேருதான். இப்ப அவங்க அப்பாவும் இல்லாததால, தவசி தான் அடுத்து எல்லாம் அங்கேயும் எடுத்து செய்யணும்.” என பொறுமையாக, ஆனால் உறுதியாகப் பேசிய தங்கையிடம் ஒரு வார்த்தையும் மறுத்துப் பேசவில்லை சின்னவர். 

“என்னங்க… அமைதியாவே இருக்கீங்க. பிள்ளைகள விட்டுட்டு எப்படிங்க இருக்கறது.” என அன்னபூரணி அழுதபடி கேட்க,

“பேச்சி சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அன்னம். அவங்கவங்க எடத்துல இருக்கறது தான் அவங்கவங்களுக்க மரியாதை. கூட்டிப் போகட்டும்.” என முடித்துக் கொண்டார். 

அன்னபூரணி விடிய விடிய அழுது ஓய்ந்தார். 

விடிந்தவுடன் படப்பு பக்கமாக வந்தான் ஈஸ்வரன். அங்கு அவன் மாமன் மகள் ஆசையாகக் கேட்ட குருவிக்கூடு கேட்பாரற்று கிடந்தது. 

சிறகு முளைத்த பிறகு தான் பறவைகள் கூட்டை விட்டு பறக்க வேண்டும் என்பது இல்லை. சில சமயங்களில் குரங்கின் பார்வை பட்டுக்கூட, குருவிக்கூடு அந்தலை சிந்தலை ஆகிப் போவதுண்டு. 

இதற்கு பிறகு தான் முத்துவேலுவும் குடும்பத்தின் மீதும், தொழில் மீதும் சற்று தனது கவனத்தை திருப்பினான். அவர்களது கொட்டம் சற்று அடங்கியது.

இத்தோடு பிரிந்த குடும்பம் தான், பெரியவர்களின் இறப்பிற்கு கூட மூன்றாம் மனிதர்கள் போல வந்து சென்றார்கள். அப்படியே இடைவெளி விழுந்து இரண்டு குடும்பமும் நீ யாரோ… நான் யாரோ… எனப் பிரிந்து விட்டனர். 

error: Content is protected !!