தாழையாம் பூமுடித்து🌺3

தாழையாம் பூமுடித்து🌺3

                         3

மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குலமகளே வா வா

தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா

பணமிருக்கும் பலமிருக்கும்

உங்கள் வாசலில்

நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்

எங்கள் வாசலில்

பொன் மணமும் பொருள் மணமும்

உங்கள் வாசலில்

புதுப் பூ மணமும் பா மணமும்

எங்கள் வாசலில்

மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

“அத்தேஏஏ… பொண்ணும், மாப்பிள்ளையும் வந்துட்டாங்க. ஆலத்திய எடுத்துட்டு வா!” தெருமுக்கில் திரும்பிய காரை பார்த்துவிட்டு, வாசலில் நின்று கொண்டிருந்த, மலர்க்கொடி, கத்திக் கொண்டே உள்ளே ஓடிவந்தாள்.

ஊர் மத்தியில் இருக்கும் மரத்தில் கட்டிய மைக்செட்டில் இந்தப் பாடல் ஒலித்தாலே மணமக்கள் ஊருக்குள் வந்து விட்டதாக அர்த்தம். 

பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டு கல்யாணம் தான் அங்கு எல்லாம். பெண்ணழைப்பு முதற்கொண்டு கல்யாணம் முழுமையும் மாப்பிள்ளை வீட்டு செலவு தான். ஒருகாலத்தில் பெண்ணழைக்க வசதி இருப்பவர்ளுக்கு கூட்டுவண்டி சென்றது. அடுத்து மகேந்திரா வேன், கார் என நாகரீகம் அடைந்து… இன்று டீலக்ஸ் பஸ்ஸாக பெண்ணழைப்பு வசதி அடைந்திருக்கிறது. இது கல்யாணம் என்றால் மட்டும் தான்.

காதுகுத்து, கிடாவெட்டு, சாமிகும்பிடு போன்ற, மற்ற விசேஷங்கள் என்றால் லாரி தான் சௌகர்யம் தெற்கத்திக்காரர்களுக்கு.

சமையல் பாத்திரம், விறகு, ஆட்டுக்குட்டி, கோழி இவற்றோடு மக்க மனுஷர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு போக லாரிதான் வசதிப்படும். இதில் தண்டட்டி கெழவிகள் இரண்டு கால்நீட்டி உட்கார இடம் கேக்கும். அவர்களுக்கு அமர்வதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, கால்வைக்கக்கூட இடமில்லாமல், கூட்டம் தொற்றிக் கொண்டு ஏறிக் கொள்ளும். இத்தனைக்கும் லாரியின் பின்கதவு மூடப்படமாட்டாது. மூடவும் முடியாது. அதையும் பெரிய தாம்புக்கயிர் போட்டு சாய்வாக இழுத்துக்கட்டி அதிலும் ஏழெட்டு இளவட்டங்கள் கெத்து காண்பித்து காலைத் தொங்கப்போட்டு அமர்ந்திருக்கும். லாரி குலுங்கும் குலுக்கலில், நின்று கொண்டு வந்தவர்கள், ஆங்காங்கே வட்டமடித்து உக்காரும் அளவிற்கு இடம் கிடைத்துவிடும். அதது வயசுக்குத் தக்குன ஆளுகளோடு செட்டு சேர்ந்து வட்டமடித்து அமர்ந்து விடும்.

ஒரு விசேஷம் முடிந்து வீடு திரும்புவதற்குள் உடல் கலகலத்துப் போகும். ஊர்க்கதை, உங்க வீட்டுக்கதை, எங்கவீட்டுக்கதை எல்லாம் பேசிமுடித்து வீடு வந்து சேர்ந்தால் மனமும் கலகலத்து இருக்கும். அத்தனை ரணகளத்திலும் ஏதாவது ஒரு விடலை ஜோடி கண்ஜாடையில் காதல் கதை பேசி வந்திருக்கும். 

கல்யாணம் முடிச்சு பொண்ணும் மாப்பிள்ளையும் ஊருக்குள்ள வர்றதுக்கு முன்னாடி  காதுகுத்துக்கு கதை போயிருச்சு. ஒரு யு டர்ன் போட்டு கல்யாணத்திற்கு வருவோம். 

மலர்க்கொடி கத்திக் கொண்டு ஓடி வர, ஆலாத்தியை கலக்க ஆயத்தமானார் சிவகாமி.

கலவையாய் வெள்ளிக்கம்பிகள் ஓடிய, நுனிமுடிந்த கூந்தலில், மரிக்கொழுந்தோடு சேர்த்துக் கட்டிய மல்லிகைப்பூ ரெண்டு கண்ணியை நுனிமுடியில்  சொருகி இருந்தார். மஞ்சள் பூசிய முகமும், சரிபாகம் பிரித்த உச்சிவகிட்டில், மீனாட்சி குங்குமமும் என கலையான முகம்‌. 

தனது தங்கை மகள் போட்ட சத்தத்தில், ஆலத்தி கலக்கும் மனைவியை பார்த்துக் கொண்டே வெளிவந்தார், தவசி.

“மாமா… இன்னும் ஒருவாரத்துல பேரனோ, பேத்தியோ வரப்போகுது. மருமக ஆன் தி வே. ஆனா இன்னும் கண்ணு அத்தைய சைட் அடிக்குது.” என தனது தாய்மாமனை மலர்க்கொடி வம்பிழுக்க. 

“போ கழுத அங்கிட்டு.” என தோளில் கிடந்த துண்டால் தங்கை மகளை செல்லமாக அடித்தவர், சிரித்துக் கொண்டார்.

“வந்துட்டாகளா டீ.” என்றவாறு மற்றொரு அறையில் இருந்து தொன்னூறுகளைக் கடந்த, அள்ளிமுடிந்த கொண்டையும், பின்கொசுவம் வைத்த சேலைக்கட்டோடு, காதில் தண்டட்டி, கழுத்தில் அந்தக்கால சரடு , நெற்றி நிறைய பட்டையாய் திருநீரு சகிதமாக எழுந்து வந்தார் தவசியின் தாயார் பேச்சியம்மா. நடமாட்டம் குறைவு. வீட்டுக்கும் வாசலுக்குமாக கம்பு ஊன்றி நடந்து கொள்வார். தன் தேவைகளுக்காக இன்னும் அடுத்தவர் துணை தேடாத அந்தக்கால வைரம் பாய்ந்த கட்டை. 

“கெழவிக்கு பாம்பு காது த்தே. மாமா வர்றதுக்குள்ள, கெழவி எந்திரிச்சு வருது பாரு.” என தனது அம்மத்தாவை மலர்க்கொடி கேலி செய்ய,

“யாரடி கெழவிங்குற. நீ போட்ட சத்தந்தா ஊரையே கூப்புட்டுச்சே? பொட்டச்சிக்கி எதுக்குடி இம்புட்டு பெரிய தொண்ட.” என அந்தக்கால மனுஷியாய் பேத்தியைக் கடிய,

“ரேடியோ சத்தத்துல கேக்காதுன்னு கத்தி சொன்னே. பொருக்காதே உனக்கு.” என அம்மத்தாவிடம் நொடித்துக் கொண்டவள்,  

“மாமா… நீங்களும் தான் இருக்கீங்களே? அத்தை எப்படி அண்ணே மகள மருமகளாக்க, மகனவச்சு ப்ளான் போட்டுருக்கு. நீங்க, உங்க தங்கச்சி மகளுக்கு… என்ன பண்ணுனீங்க?” என மாமனிடம் சிலுத்துக் கொள்ள,

“இப்ப உனக்கு என்ன வேணும்? எங்க அப்பா என்ன பண்ணனும்கற?” எனக் கேட்டுக் கொண்டே வெற்றிலையையும், சூடத்தையும்  எடுத்து வந்து தன் அன்னை சிவகாமியிடம் கொடுத்தாள், நிறைமாத வயிற்றை கையால் தாங்கிப் பிடித்து நடந்து வந்த தீபிகா. 

“வாங்க அண்ணியாரே!! என்னடா… நம்ம போட்ட சத்தத்துல, காதடைச்ச கெழவியே எந்திரிச்சு வந்துருச்சே.  இன்னும் ஒரு ஆளக்காணாமேன்னு பாத்தே. எங்க அண்ணன நீ கட்டிக்கிட்ட. அப்ப… உங்க அண்ணனுக்கு என்னையக் கட்டணுமா இல்லியா? உங்களுக்கு ஒரு நியாயம். எனக்கொரு நியாயமா?” என வாய்தா இல்லாமல் வழக்கு நடத்திய நாத்தனாரைப் பார்த்து சிரித்தாள் தீபிகா.

“அடியேய்! கூறுகெட்டவளே. இந்த வீட்டுக்கு இன்னொருத்தி வந்துட்டா. அவ முன்னாடியும் இப்படி பேசி வைக்காத. நீ இன்னொரு வீட்டுக்கு போயிருவ. நாளப்பின்ன எம்மக பொறந்த வீடுன்னு இங்க வரப்போக இருக்கணும்.” என பேத்தியை, தன் மகளுக்கு பிறந்த வீட்டு ஆதரவு‌ வேண்டும் என அதட்டினார் பேச்சியம்மா.

மலர்க்கொடி தவசியின் தங்கை மகள். வாய்த்துடுக்காக இவ்வாறு பேசி வைப்பாள் எனத் தெரியும். ஆனால் அவள் பேச்சில் சூதுவாது இருக்காது. மாமனையும், மாமன் பெத்ததுகளையும் வம்பிழுப்பாள். அவ்வளவுதான்.

பெண்ணெடுத்து, பெண் கொடுக்கலாம் என தங்கை கேட்டதற்கு தவசி மறுத்து விட்டார். 

“ஒன்னு… பொண்ணு கொடுக்கறே. இல்லைனா பொண்ணு எடுத்துக்கறே. இந்தக் கொடுக்கல் வாங்கல் சமாச்சாரமெல்லாம் சரிப்பட்டு வராது. இங்க இடி இடிச்சா அங்க மழை பெய்யும். அங்க தீப்பிடிச்சா இங்கயும் புகையும். அதனால இது ஒத்து வராது ம்மா.” என கராறாக தங்கையிடம் கூறிவிட,

மறுக்க முடியாமல் அண்ணன் மகள் தீபிகாவை மருமகளாக்கிக் கொண்டார் தவசியின் தங்கை ஜெயந்தி. மகளை இன்னொரு அண்ணன் மகனுக்கு பேசி முடித்திருக்கிறார். 

இப்பொழுது பேருகாலத்திற்காக தீபிகா பிறந்த வீடு வந்திருக்கிறாள்.

இவர்கள் வாயாடலை பார்த்து சிரித்துக்கொண்டே, தாம்பூலத் தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூளை கலக்கி… அந்த மஞ்சத்தண்ணியில் சிறிது சுண்ணாம்பைப் போட மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து சட்டென செங்காட்டு மழைத்தண்ணீராய் கலங்கியது ஆலத்தி.

மஞ்சள் சரஸ்வதி, சுண்ணாம்பு லஷ்மி, இரண்டும் கலந்து சக்தி என முத்தேவியரும் ஆலத்தியில் இருப்பதாக ஐதீகம். அவசரம் என சிவப்பு நிறத்திற்காக குங்குமத்தை கலக்க கூடாது.

அறிவும், ஆஸ்த்தியும் ஒருவனிடம் இருந்தால் ஆக்கமும் ஊக்கமுமாகிய சக்தி தன்னால் கூடவே வருவது இயல்புதானே. அது போலத்தான் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்தவுடன் சட்டென சக்தி பிறந்துவிடுகிறது.

ஆலத்தி தட்டில் ஒரு வெற்றிலையை வைத்து, வெற்றிலை மீது ஒரு சூடமும் வைத்து ஆரத்தியை தயார் செய்தார் சிவகாமி… புதுமணமக்களை வரவேற்க. 

நிச்சய வீட்டில்…

சிவசங்கரி சம்மதம் கூறி நிற்க, மாப்பிள்ளை அஸ்வினோ அதற்கு மறுப்பு தெரிவித்து திமிரிக் கொண்டு வந்தான்.

அவனுக்கும் அது மானப் பிரச்சினை ஆயிற்றே. நாளை சொந்த பந்தங்கள் முன் சென்று, நிச்சயம் நின்றுவிட்டதாக கூற முடியாதே. 

“இதுக்கு என்னால ஒத்துக்க முடியாது. நிச்சயம் வரைக்கும் வந்துட்டு, என்னால பொண்ண விட்டுக் கொடுக்க முடியாது.” என தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த,

“அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது தம்பி. இது ஊரு வழக்கம். உரிமைப் பட்டவன் சபையில வச்சு கேட்டா மறுக்க முடியாது. கொடுத்து தான் ஆகணும். இப்ப, அந்தப் புள்ள சம்மதம் சொல்லலைனா இந்தப் பேச்சுக்கே எடமில்ல.” எனக் கூற, அவனது கோபம் முழுதும் சிவசங்கரியின் மீது திரும்பியது.

“இப்ப, இவன் வந்ததும், சம்மதம் சொல்றியே? நாளைக்கி இன்னொரு அத்தை மகனோ, மாமன்‌ மகனோ வந்து உரிமை இருக்குனு கேட்டா, அவனுக்கும் சம்மதிப்பியா? அதான் கல்யாணம் முடியும்வரைக்கும் கூட மரிக்க உரிமை இருக்குனு சொன்னானே?” என எகத்தாளமாகக் கேட்க, 

அவ்வார்த்தைகள், சங்கரிக்கு அவமானத்தையும், ஈஸ்வரனுக்கு கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது. 

பிரச்சினை வரும் என எதிர்பார்த்திருக்க, இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டுப் பழக்கமில்லாதவளுக்கு, சல்லடையில் ஊற்றிய தண்ணீர் சரட்டென வடிந்தது போல, மனதை வெறுமையாக்கியது.

‘இப்ப இவன் கேட்ட மாதிரி இன்னொரு அத்தை மகனோ,‌ இல்லை மாமன் மகனோ, எனக்கும் உரிமை இருக்கிறது எனக் கேட்டால் சம்மதித்து இருப்போமா?’ என சுய அலசல் செய்ய,‌ கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாய் அடித்துச் சொல்லியது மனது. அப்படி எனில் இவனுக்கு மட்டும், பிரச்சினை வரும் எனத் தெரிந்தும் மனம் சம்மதம் சொல்லியது எப்படி?’ என ஆராய்ச்சி செய்ய விடைதான் தெரியவில்லை பெண்ணவளுக்கு. 

தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்கக்கூட தைரியம் இல்லை. தந்தைக்கும் இது அவமானம் தானே. ஏற்கனவே‌ பிரச்சினையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் ஊரார் முன், அவரை அவமானப் படுத்திவிட்டு, வெற்றி கொண்டதாகத் தானே அர்த்தம். ஆனால் சொந்தபந்தங்களுக்குள் வெற்றி தோல்வி என்பது ஏது? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே.

ஈஸ்வரனை ஏறிட்டுப் பார்க்க, 

இவளது கருத்து சிவந்த முகமோ,  எனக்கு இது தேவையா எனக் கண்பார்த்துக் கேட்டது போல் இருக்க, என்ன சொல்வதென்று அவனுக்கும் புரியவில்லை. 

மூன்றாம் தலைமுறையில் புகைய ஆரம்பித்து, இரண்டாம் தலைமுறையில், துண்டுபட்டுப் போன சொந்தங்கள், தங்களது தலைமுறையிலாவது ஒன்று கூடட்டும் என அதிரடியாக இறங்கியாயிற்று. தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்று இறங்கிப் பார்த்துவிட வேண்டியது தான் என முடிவு செய்தவன்,  

“எத்தன பேர் வந்தாலும் சம்மதம் சொல்ல, அவ ஒன்னும், நீ பழகின பொண்ணுங்க மாதிரி, உன்னைய ஆப்ஷன்ல மட்டுமே வச்சுப் பழகின பொண்ணுங்க இல்ல அஸ்வின். நிச்சயத்தன்னிக்கி வந்து கேட்டும் உன்னைய விட்டுட்டு எனக்கு சம்மதம் சொல்றானா, நீ எந்த அளவுக்கு அவ மனசுல பதிஞ்சிருக்கேனு நெனச்சுப்பாரு. ஒரு பொண்ணு மனசுல ஒருத்தன் ஆழமா பதிஞ்சுட்டான்னா, மன்மதனே வந்தாலும் அவ மனச மாத்த முடியாது.” என பொறுமையாகத் தான் பதிலுரைத்தான்… ஊரார் முன் ரசபாசம் வேண்டாம் என எண்ணிக்கொண்டு. 

அதிகமாகப் பேசப் போக, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைத்தது போல் ஆகிவிடக் கூடாதே என பொறுமை காத்தான்.  

“இப்ப நடந்தது எல்லாம் பாத்தா, இவளும் என்னைய ஆப்ஷன்ல தான வச்சுருந்துருக்கா?” என்றவனை, ஈஸ்வரன் புருவம் சுருக்கி உற்றுப் பார்க்க, அவனது கோபமுகத்தைப் பார்த்து,

“அதான் நீ வந்ததும் என்னைய வேண்டாம்னுட்டாங்ங்ங்க போல. இல்ல… இது ரெண்டு பேரும் ஏற்கனவே போட்ட திட்டமா? நீ ஏற்கனவே இவங்ங்ங்க மனசுல எடம் புடுச்சுட்டியா? பாத்து… இன்னொரு அத்தை மகன் வர்ற வரைக்கும் உன்னையும் ஆப்ஷன்ல வச்சுறப் போறாங்ங்ங்க.” என்றவன்‌ பேச்சில் நக்கலும் மரியாதையும் கலந்து கட்டியது. 

அவனது பேச்சு ஈஸ்வரனுக்கு வகைதொகை தெரியாமல் கோபத்தை தூண்டியது எனினும் இப்போதைக்கு இவன் மேல் கோபத்தைக் காட்டி பிரயோஜனமில்லை. அவனது ஆதங்கத்தை வார்த்தைளாக கொட்டிக் கொண்டு இருக்கிறான் என்பதை உணர்ந்தவன், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தான். இப்பொழுது காரியமா? வீரியமா? என யோசித்தவனுக்கு காரியம் தான் முக்கியம், வீரியம் இல்லை என புரிந்தது.

“என்ன மிஸ்டர் சக்திவேல், இதுக்கு நீங்களும் உடந்தையா? அதனால் தான் சொந்த ஊர்ல நிச்சயம் வைக்கணும்னு சொன்னீங்களா?” என சக்திவேலைப் பார்த்தும் கேட்டவன் வார்த்தைகளில் அத்தனை நக்கல்… துளிகூட மரியாதையின்றி.

“அஸ்வின்! இதப்பத்தி அண்ணனுக்கு ஒன்னும் தெரியாது.” என முத்துவேல், அண்ணனைப் பற்றி பேசவும் பொறுக்க மாட்டாமல் முன்னுக்கு வந்து கூற,

“அப்படினா உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” என்றான்.

“எல்லாம் சின்ன மாப்ள பண்ணின வேலையாத் தான் இருக்கும். இவர பாட்டில் வாங்கிக் கொடுத்தே, இவன் சரிக்கட்டி இருப்பானா இருக்கும்.” என சங்கரியின் தாய்மாமன் இருவரில் ஒருவர் கூற.

இவ்வார்த்தைகள், ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த சக்திவேலுக்கு மேலும் கோபத்தீயை, விசிறி விட்டது போல் ஆயிற்று. 

“நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம் தங்கராசு. எந்தம்பிய மட்டுமில்லாம, எம்பிள்ளையையும் சேத்து அசிங்கப் படுத்துற. ஒரு மாமங்காரன் பேசுற பேச்சா இது. என் தம்பிக்கி தண்ணிய வாங்கிக் கொடுத்து, எம்பிள்ளய சரிக்கட்ட பாத்தாங்கற மாதிரி இருக்கு நீ பேசறது.” என ஊரார் முன் வெளிப்படுத்த முடியாத தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் மச்சினன் பக்கம் திருப்ப,

“என்ன தம்பி நீங்க? உங்களுக்கு ஒரு பிரச்சினைங்கவும் என்ன பேசறதுன்னு தெரியாம பேசிட்டான். பிரச்சினை பண்றவங்கள விட்டுட்டு உங்க மச்சுனன் பக்கம் பாயுறீங்க. உங்க தம்பி கொடுக்குற தைரியத்துல தான் இவன் இப்படி வந்து கேக்குறான்.” என மருமகனின் கோபத்தைப் பார்த்து பதறிய, சக்திவேலின் மாமியார் மகனுக்கு பரிந்து கொண்டு வந்தார். மகனைப் பேசவிட்டால், பேசத்தெரியாமல் பேசி இருக்கும் இடத்திற்கே ஆபத்து வந்து விடும் என எண்ணியவர்.    

“பொண்ணு கொடுத்த வீட்லயே, குடும்பத்தோட உக்காந்து திங்கிற கூட்டமெல்லாம், என்னையப் பத்தி பேசக் கூடாது.” என்று முத்துவேலும் பதிலுக்குப் பேச, ஆளாளுக்கு பேச்சு வளர்ந்தது.

“அட பொறுங்கப்பா… ஆளாளுக்கு வழவழன்னு பேசிக்கிட்டு. பொம்பளப் புள்ள வெவகாரம். அந்தப் புள்ள சம்மதம் சொல்லியாச்சு. ஊர்க்கட்டுக்கு மரியாதை கொடுக்கிறதா இருந்தா பொண்ணு கொடுக்கட்டும். இல்லைனா அவர் இஷ்டத்துக்கு பண்ணிக்கட்டும்.” என ஊர்ப் பெரியவர் ஒருவர் கூற, 

“அதெப்படிங்க… சக்தி அண்ணே இஷ்டத்துக்கு விடமுடியும். ஈஸ்வரன் எங்களுக்கும் ஒன்னுவிட்ட தங்கச்சி மகன்தான். சிவகாமி சார்புல நாங்களும் பொண்ணு கேக்குறோம். சிவகாமி மகனுக்கு பொண்ணு கொடுத்தா கொடுக்கட்டும். இல்லைனா நாளப்பின்ன பங்காளி கும்பிடுல முதல் மரியாதைய, ஊர மதிக்காதவருக்கு கொடுக்க மாட்டோம்.” என சக்திவேலின் உடம் பங்காளி ஒருத்தர், இதை சாக்காக வைத்து முதல் மரியாதையை தட்டிப் பறிக்க பார்த்தார்.

நிச்சயதார்த்தத்தை சொந்த ஊரில் சக்திவேல் குடும்பம் வைத்ததற்கு காரணமே இதை முன்னிருத்தி தான். ஏற்கனவே பங்காளி கும்பிடில் எதிலும் தலையிடாமல், கும்பிடுக்கு மட்டும் வந்தோம், போனோம் என்றிருக்கும், சக்திவேல் குடும்பத்திற்கு முதல் மரியாதையை கொடுப்பது பங்காளிகள் சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அப்பா பெரியவர் காலத்திலிருந்தே அப்படித்தான்.

அனைவராலும் சின்னவர் என அழைக்கப்பெற்ற, இவர்களது சித்தப்பா இருந்த வரைக்கும், அனைத்தும் அவரே முன்னின்று எடுத்து செய்து வந்தார். அதனால் அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டு அமைதியாக வந்து சென்றனர். 

பங்காளிகள் என்றாலே ஒரு கொடியில் இருந்து பிரிந்து சென்ற கிளைக் கொடிகள் தான். எப்படியும் மூலக்கொடி ஒன்று இருந்திருக்கும். அவர்களுக்கு ஆதி கிழவன் என்ற மரியாதை கொடுத்து, அந்த வழியில் முதல் மரியாதை ஒரு குடும்பத்திற்கு வழிவழியாக வழங்கப்படும். 

எல்லா பங்காளி வகையிலும் இது உண்டு. அவர்கள் தான் சாமிக்கு முன் நின்று பூஜை பண்ண முடியும். பெருசா ஒன்னுமில்லைங்க. சாமிக்குப் போடும் தலுகை பொங்கல் அந்த குடும்பத்திற்கு கொடுக்கப்படும். அது வெறும் பொங்கச்சோறு மட்டுமல்ல. அதுதான் மூத்த குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த பங்காளிகள் தரும் மரியாதை. 

பூசாரித்தனமும் வேண்டாம், இந்த பொங்கச் சோறும் வேண்டாம் என எளிதாக இதை சக்திவேலால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

வழிவழியாக வரும் இந்த மரியாதை, குடும்பத்தை விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், ஆண் வாரிசு எதிர்பார்க்கப் படுகிறது. பெண்பிள்ளைகள் திருமணமாகி, வேறு வீடு சென்று, மாமன் மச்சான் வகையறாவில் சேர்ந்து விடுவார்கள். 

சின்னவருக்கு ஆண்வாரிசு இல்லாமல் மூன்றும் பெண்குழந்தைகள் என்றாகிவிட, பெரியவருக்கு தான் இரண்டு ஆண் வாரிசுகள். 

அவர்களுக்கு தான் அடுத்த மரியாதை. இவர்களோ ஊர் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், சாமிகும்பிடுக்கு மட்டும் வந்து முதல் மரியாதை பெற்றுக் கொள்வது மற்ற பங்காளிகளை உறுத்தியது.

அலஞ்சு திரிஞ்சு, வேலவெட்டிய எல்லாம் விட்டுப்புட்டு எடுத்து செய்யறது நாம, மரியாதை மட்டும் அவர்களுக்கா என புகைய ஆரம்பித்தனர். 

நானும் இந்த ஊர்க்காரன் தான் என்பதை முன்னிறுத்தியே விசேஷத்தை பூர்வீக ஊரில் ஏற்பாடு பண்ணியது. இதில் சித்தப்பா முத்துவேலின் பங்கு அதிகம். 

என்னதான் பிழைக்க சென்ற ஊரில் கோடிகோடியாகச் சம்பாதித்து கோட்டை கட்டினாலும், நம்மிடம் கைகட்டி நிற்கும் நாலு பேரைத்தவிர, நாம் யாரென்று வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. 

ஆனால் அதுவே சொந்த ஊரில், ஊரார் முன்னும், சொந்த பந்தம் முன்பும் கழுத்தில் விழும் ஐம்பது ரூபாய் மாலைக்கு இருக்கும் மவுசே தனி தான். அதை இழக்க சக்திவேல் குடும்பம் விரும்பவில்லை.

“இது வழிவழியா நம்ம குடும்பத்துக்கு வர்றது. உன்னோட தலைமுறையில அது நம்மலவிட்டுப் போச்சுன்னு இருக்கக் கூடாது.” என சக்திவேலின் அன்னை திலகவதி முடிவாகக் கூறிவிட, நிச்சயத்தை ஊரில் வைக்க முடிவு செய்தனர்.

ஈஸ்வரனும் அதை முன்னிட்டே, ஊரார் முன் வந்து பெண்கேட்டால் மாமனால் மறுக்க முடியாது என தனது திட்டத்தை சின்ன மாமன் உதவியோடு தீட்டினான். 

மாமனும், மருமகனும் இரண்டு நாட்களாக, ஊர்ப் பெரியவர்களை சந்தித்து,‌ இதுபற்றி பேசினர்.

“உங்க பெரியவர் குடும்பமும், சின்னவர் குடும்பமும் மறுபடியும் ஒன்னு சேரணும்னா, அது நீங்க பேசுற‌ பேச்சுல தான் இருக்கு.” என அவர்களை சரிக்கட்டி வந்தனர். 

அதன்படியே ஊராரும் ஈஸ்வரனுக்கு சாதகமாகப் பேச, பெண் இவனுக்கு தான் என ஊராரால் முடிவு செய்யப்பட, சக்திவேலால் மறுக்கு முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். 

மறுத்துப் பேசிவிட முடியும். ஆனால் நாளப்பின்ன ஊருக்குள் மரியாதையாக வந்து செல்ல முடியாது. 

“டேய் ஶ்ரீ!!! என்னடா இது!! எதிர்பாராததை எதிர்பாருங்கள்கற மாதிரி இருக்கு. ஊர் மக்களோட ஓட்டிங்ல அஸ்வின் எவிக்ஷனுக்கு வந்துட்டாரு.” என இதுவரை தந்தைக்குப் பயந்து கொண்டு, ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கரியின் தங்கை, தனது உடன் பிறப்பின் காதைக் கடித்தவள். 

“இருந்தாலும் ஈஸ்வர் மாம்ஸ் கெத்து டா.” என்றாள்.

“கம்முனு இருடி. நானே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதவச்சு என்ன சண்ட வருமோன்னு பயந்துகிட்டு இருக்கே. நீ வேற…” என சலித்துக் கொண்டான் அவளது உடன் பிறந்த சகோதரன். உடன்பிறப்பு என்பதற்கான உண்மையான அர்த்தத்தோடு ஒன்றாகவே பிறந்தவன். இருவரும் இரட்டையர்கள். ஸ்ரீப்ரியன், ஸ்ரீப்ரியா.

ஏனெனில் இத்தனை வாக்குவாதத்திலும் சக்திவேலின் மனைவி கயல்விழி அமைதியாகத் தான் நின்று கொண்டிருந்தார்.

“நீ இப்படியே எதுக்கெடுத்தாலும் பயந்துட்டே இருடா. மாம்சப் பாரு. எவ்வளவு கெத்தா, ஊரு முன்னாடி வந்து, நம்ம அப்பாவயே எதுத்து பொண்ணு கேக்குறாரு.”

“இது அவங்க ஊருடி. ஊர் ஆளுங்க எல்லாம் அவருக்குதான் சப்போர்ட் பண்ணுவாங்க.”

“டேய் மடசாம்பிராணி. நமக்கும் இதுதான் டா சொந்த ஊரு. மாம்சுக்கு பக்கத்து ஊரு. எங்கே… நீ இதே மாதிரி கெத்தா போயி எந்தப் பொண்ணயாவது கேளு பாப்போம்?”

“ஏன்டி… நான் நல்லா இருக்கறது பிடிக்கலியா?”

“போடா… சரியான தொட நடுங்கிப்பய. பயந்தாங்கொளி”

“யாரப் பாத்து பயந்தாங்கொள்ளினு சொல்ற. ஐயா ரேஞ்சுக்கெல்லாம்  நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணும் இல்ல.”

“ஆமாமா… உன் ரேஞ்சுக்கெல்லாம் நாம, வண்டலூர் ஜுல தான் தேடணும். இல்லைனா குற்றாலம் போகணும். அங்க தான் ரகரகமா மரத்துல தொங்குங்க உன்னோட ஆளுக எல்லாம்.”

“எனக்காவது ஜுல கெடைக்கும். உனக்கெல்லாம் ஆப்பிரிக்க காட்டுல தான்டி தேடணும். காட்டுவாசி தான் உனக்கு செட்டாவானுங்க.” என இவர்கள் வம்பளந்நு கொண்டிருக்க,

“சக்திவேலு, ஒரு நல்ல நாளாப் பாத்து, உங்க தங்கச்சி குடும்பத்த பொண்ணுக்கு பரிசம் போட வரச்சொல்லுங்கப்பா.” என ஊரார் முடிவாகக் கூறினர்.

“ஊரே இங்க கூடியிருக்கு. சொந்தபந்தம் எல்லாரும் வந்திருக்காங்க. இதவிட நல்லநாள் வேற கிடைக்காது தாத்தா.” என ஈஸ்வரன் கூற,,

“அதுக்காக, இப்பவேவா கல்யாணத்த முடிக்க முடியும்?” எனக் கேட்டு ஒரு பெருசு சிரிக்க,

“கரெக்டா சொன்னீங்க தாத்தா. எள்ளுனா எண்ணெயா நிக்கணும். ஒரு காரியம் கூடிவர்றது கஷ்ட்டம். ஆனா அதக் கலச்சுவிட ரொம்ப பேரு இருக்காங்க.” என சக்திவேலின் மாமியாரைப் பார்த்துக் கொண்டே கூறியவன், முடிவாக இப்பொழுதே ஊரார் முன், உடன்பரிசம் போட்டு, திருமணமும் முடித்து கொள்வதாகக் கூறினான்.

என்னதான் ஊர்முன் பெண்‌ இவனுக்கு தான் என் உறுதி‌ செய்தாலும், கல்யாணம் முடிவதற்குள் ஏதாவது குளறுபடி நடக்க வாய்ப்பிருக்கிறது. இவர்கள் சென்னை திரும்பிய பிறகு முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம், என யோசித்தான்.

“அதெப்படி… நாங்க கூடிப்பேசி தேதி குறிக்கணும். இன்னும் நாங்க கல்யாணத்துக்கு தயாராகல. உங்க மாமா மேல நம்பிக்கை இல்லாத மாதிரி பேசுற?” என மாமியாரே இப்பொழுதும் கேள்வி கேட்க, 

“கல்யாணம், மாப்பிள்ள வீட்டுக் கல்யாணம் தான. நான் அதுக்கு தயாராத்தான் வந்திருக்கே. எனக்கு எங்க மாமன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா… கூட இருக்குறவங்க மேல தான் நம்பிக்கை இல்ல. நீங்க குட்டைய குழப்ப வேண்டாம். குழப்புன வரைக்கும் போதும்.” என அவருக்கு பதில் கொடுத்தான்.

இப்பொழுதே திருமணம் என ஒரே‌ முடிவில் அவன் நிற்க, வேறு வழியின்றி ஊரார் முன் சக்திவேலும் தலை ஆட்ட வேண்டியதாய்ப் போயிற்று.

 

 

 

 

 

error: Content is protected !!