தாழையாம் பூமுடித்து🌺7
தாழையாம் பூமுடித்து🌺7
7
“டேய் ஸ்ரீ!! அக்கா கூடப் போய்ட்டு வாடா. சின்னதப் பாரு, படுத்தவுடனே கும்பகர்ணனுக்கு அக்காவாட்டாம் தூங்குறா. அவள எழுப்பங்குள்ள என் தொண்டத்தண்ணியே வத்திப் போயிரும். இப்ப தான் நடந்துட்டு வந்தது மொழங்கால் வலிக்குது. இல்லைனா நானே போயிருவேன்.” என அதிகாலை நான்கு மணிக்கு அரைத்தூக்கத்துக்கு சென்று கொண்டிருந்த பேரனை திலகவதி எழுப்பினார். மாவிளக்கு எடுத்து வர மைக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது. அக்காவுடன் செல்ல தம்பியை எழுப்பிக் கொண்டிருந்தார் திலகவதி.
இப்பொழுது தான் சாமி அழைப்பு முடிந்து வந்து படுத்தான்.
பக்கத்து ஊரில் இருந்து சாமி சிலைகள் எடுத்து வரப்படும்.
இரவு பதினொரு மணி வாக்கில்… “சாமி எடுக்க போகணும். எல்லோரும் வாங்கப்பா.” என அழைப்பு விடுக்க ஊர் முதன்மைக்காரர்கள் அனைவரும் மேளதாளத்தோடு கிளம்பினர்.
ஆண்கள் பக்கத்து ஊருக்கு கிளம்ப பெண்கள் முளைப்பாரி எடுக்கும் ஏற்பாடுகளை செய்தனர்.
அம்மனை அலங்காரம் செய்து முடிக்க, முளைப்பாரியோடு சென்று பெண்கள் சாமியை அழைத்து வருவது வழமை.
பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட காளியம்மன், பகவதி அம்மன் சிலைகள். சாமி செய்பவர்கள் குடும்பம் பக்கத்து ஊர். அந்த ஊரில் இருந்து சாமியின் கண்ணைக் கட்டித்தான் எடுத்து வருவர். அவர்களும் பிறந்த வீட்டுப் பெண்ணை வழியனுப்பவது போல, வீதியில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் சாமி எடுத்து வருபவர் கால்களில் அந்நேரத்திற்கும் தண்ணீர் ஊற்றி வழியனுப்பி வைப்பர். இங்கு கொண்டு வந்து, ஊரின் பொதுத் தண்ணித்துறை அருகே வைத்து தான் கண்வரைந்து கண் திறக்கப்படும்.
மற்ற ஆபரணங்கள் எல்லாம் பூட்டி அம்மனை அலங்காரம் செய்யும் இடமும் ஊரணி தான்.
ஊர் முதன்மைக்காரர்கள் அத்தனை பேரும் கூடியிருக்க… அங்கு நித்தீஸ்வரனும் இருந்தான்.
வேண்டுதலுக்கு என வரும் நகைகளை கணக்கில் எழுதிக் கொண்டு, இருப்பில் இருக்கும் பழைய நகைகளையும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான்.
இது எப்பொழுதும் தாசில்தாரராக இருந்த இவனது தாத்தா சின்னவரின் பொறுப்பில் இருந்தது.
முறைப்படி இந்த கணக்கு வழக்கு பொறுப்பு சக்திவேலிற்கோ, முத்துவேலிற்கோ தான் அடுத்து வந்திருக்கும். அவர்கள் வெளியூரில் செட்டில் ஆகிவிட, வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த தவசி அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு சீக்கிரம் அடுத்த ஊர்க்காரரை பண்ணாட்டு பண்ண விட்டுவிட மாட்டார்கள். சின்னவரின் மரியாதையும், தவசியின் குணமும், அவரும் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இதே ஊரில் இருந்ததாலும், அவரது பின்புலமும் ஊராரை வாய் அடைக்க வைத்திருந்தது.
சின்னவர் வீடும் தற்சமயம் பொது வீடாகிப்போக, சாமி வீடு என நகைப்பெட்டி வைக்கும் இடமாகவும், பொறுப்பு தவசிக்கும் வர, இந்த வருடம் தந்தையின் பொறுப்பை கவனிக்க தனயன் வந்திருக்கிறான்.
தோப்பு வீடு, தோட்டம், வயல் என சொத்துகள் பிறந்த ஊரில் இருப்பதால் சின்னவரின், மூன்று பெண்களுமே இன்றும் சாமிக்கு வரி கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். வீடு இருந்தால் சாமிக்கு தலைக்கட்டு வரி கொடுத்தே ஆகவேண்டும்.
வேண்டுதல் என வாய்வார்த்தையாக கூறி விட்டாலும்… திலகவதி, பேத்தியின் திருமணத்தை முன்னிட்டு அம்மனுக்கு நகையும், கொலுசும் எடுத்து வந்திருந்தார்.
“சீக்கிரம் கிளம்புங்கடி. சாமி வந்திருச்சு.” என பேத்திகளை அவசரப் படுத்திக் கொண்டு இருந்தார்.
“அப்பத்தா! பாதி தூக்கத்துல எழுப்பிக்கிட்டு கிளம்புனு கொடும பண்றீங்களே.” என சிணுங்கினாள்.
“தூங்கணும்ங்கறதுக்காக நீ நெனச்ச நேரத்துக்கா சாமி வரும். சீக்கிரம் கெளம்பு.” என அதட்டி உருட்டி சின்ன பேத்தியை கிளம்ப வைக்க போராடிக் கொண்டிருக்க,
இளமஞ்சளும், அடர்பச்சை நிறத்தில் சிறு பார்டரும் கொண்ட மைசூர் சில்க்கில் சங்கரி கிளம்பி தயாராகி வந்தாள். இடுப்பளவு கூந்தலில் பின்னலிட்டு, மரிக்கொழுந்துடன் கூடிய நெருக்கக்கட்டிய மல்லிச்சரம் தொங்க வந்தவளை, கண்ணெடுக்காமல் அப்பத்தா பார்க்க,
“உங்க செல்லப்பேத்தி வந்தாச்சு. கூட்டிப்போங்க.” என்றாள் பிரியா.
“அப்ப நீ யாரு.”
“எங்களத்தான் தவிட்டுக்கு வாங்குனதாத்தான சொல்லுவீங்க.”
“ஆமா! இப்பவும் அப்படித்தான் சொல்லுவே. என்னைய காட்டுக்கத்து கத்த வைக்கிற. அக்காவப்பாரு அழகா கெளம்பி வந்துட்டா.” என்க,
“அப்ப அக்காவையே கூட்டிப்போங்க. நான் வரல.” என மீண்டும் படுக்க முற்பட,
“நாங்களாவது தவிட்டுக்கு வாங்குனோம். ஆனா இப்ப உன்னைய ஓசில கொடுத்தாக்கூட ஒருத்தனும் வாங்க மாட்டான். அப்படியே வாங்குனாலும், இதக்கட்டி யார்றா தீனி போடறதுன்னு எங்கிருந்தாலும் அட்ரஸ் கண்டுபுடிச்சு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருவாங்க.” என ஸ்ரீ கேலி செய்ய,
“இவனும் என்னைய யானைனு சொல்லிட்டான். நான் வரல.” என எப்படியாவது இவர்களை கிளப்பிவிட்டு, மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம் என நினைத்தவளை,
“அய்யே… ரொம்ப பண்ணாத. வா! திருவிழாவுக்கு கடையெல்லாம் போட்டுருக்காங்க. ஆப்பிள் பலூன், குச்சி ஐஸ் எல்லாம் வாங்கித்தர்ற.” என அவளைக் கிளப்பி அழைத்துச் சென்றனர்.
“இப்பவும் பாருங்க. இந்தப்பேத்திக்கு தான் வேண்டுதலே இல்லைனாலும், சாமிக்கு நகை எடுத்து வைக்கறீங்க.” என அப்பத்தாவை வம்பிழுத்துக் கொண்டே வந்தாள்.
“நல்ல மாப்பிள்ளை அமையணும்னு வேண்டுதல் பிரியா. உனக்கும் கல்யாணம் பேசும் போது அப்பத்தா செய்யுறேன் டி.”
“உன்னையக் கட்டப்போற மாப்பிள்ளை தான்டி வேண்டுதல் வைக்கணும்.” என ஸ்ரீ மீண்டும் கிண்டலைத் தொடர,
“அப்ப்ப்பத்த்த்தாஆஆ…” என காலை உதைத்துக் கொண்டு நின்றாள்.
“அட, ஏன்டா நீ வேற. அவள இங்கேயே சாமியாட வைக்கிற. பேசாம வாங்கடா. லேட்டாச்சுனா உங்க சித்தப்பன் வேற அங்க சாமியாடுவான்.” என பேரன் பேத்திகளை அதட்டி உருட்டி அழைத்துச் சென்றார்.
மேளதாளக்காரர்கள் வீதிவீதியாக சென்று முளைப்பாரியை அழைத்து செல்ல, பெண்கள் எல்லாம் வரிசையாக கரகமும், மொளப்பாரியும் எடுத்துச் சென்றனர் சாமியை அழைக்க. அவர்களோடு இவர்களும் கலந்து கொண்டனர்.
முச்சந்தியில் முளைப்பாரியை இறக்கி வைத்தனர்.
“எங்கேடி… இந்த போடிக்கார அம்மாவ காணாம்.” என பெண்கள் கும்மிப்பாட்டு பாடும் ஆளைத் தேடினர். இங்கு பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் சொந்தப்பெயரே மறந்திருக்கும். அவர்கள் பிறந்த ஊரைச்சொல்லியே, போடிக்காரம்மா, தேனிக்காரம்மா, உசிலம்பட்டியா, வாடிப்பட்டியா, மருதக்காரி… என ஊரின் அடைமொழியோடு தான் அழைக்கப்படுவர். வீட்டுக்கு ஒரு பட்டப்பெயர் இருக்கும். காரணமே தெரியாமல் நாலஞ்சு தலைமுறைக்கும் தொடரும்.
“கும்மிய அடிங்கடி!! இந்தா வந்துட்டே!” என கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அவர் வர, பெண்கள் முளைப்பாரியைச் சுற்றி, முன்னும் பின்னுமாக கும்மியடிக்க,
“சாணி தட்டுன மாதிரி சொத்துச்சொத்துனு அடிக்காம, ஒன்னு சேந்து அடிச்சு வாங்கடி.” என அதட்டல் போட, பிசிறு தட்டிய கும்மியடி, தாளம் மாறாமல் கால்களை முன்னும் பின்னும் அடிவைத்து கும்மியடிக்க துவங்கினர்.
தன்னன நாதினம்தன்னானே தன
தன்னன நாதினம்தன்னானே தன தன்னனம்நாதினம் தன்னானே… என மைக்கை வாங்கியவர் வெண்கலக்குரலில் கணீர் என பாடலைத் துவங்க, பெண்களும் அதையே கோரசாக பாடிக்கொண்டு கும்மியடித்து சுற்றி வந்தனர்.
கும்மியடி பெண்ணே கும்மியடி
கொண்டை குலுங்கிட கும்மியடி
செங்கோலன் நாயகனை தென்பழனி வேலவனை
கூடி வணங்கியே கும்மியடி
(தன்னன நாதினம்…)(கோரஸ்)
மஞ்சப்பட்டாம் மாராப்பாம்
மடிநிறஞ்ச வெத்தலையாம்
கொண்டை பெருத்த காளி பகவதிக்கு
கொட்டுங்களம்மா மல்லிகைய
(தன்னன நாதினம்…)
சின்ன குளத்துல நீராடி
வண்டி சிங்காரத்தோப்புல வந்திறங்கி
(தன்னன நாதினம்…)
வந்திறங்கிய காளி பகவதிக்கு
வந்தனம் சொல்லியே பாடுங்கம்மா
(தன்னன நாதினம்…)
சோலை படர்ந்தத பாடுங்கம்மா
சோலை சுத்திப் படர்ந்தத பாருங்கம்மா
(தன்னன நாதினம்…)
சோலைக்குள்ள இருக்கும்
காளி பகவதிக்கு
சூது விளையாட்ட பாருங்கம்மா
(தன்னன நாதினம்…)
பாவை படர்ந்தத பாருங்கம்மா
பாவை பற்றிப்படர்ந்தத பாருங்கம்மா
(தன்னன நாதினம்…)
பாவைக்குள்ள இருக்கும் காளிபகவதிக்கு
பதக்கம் மின்னல பாருங்கம்மா
(தன்னன நாதினம்…)
ஊருக்கு மேற்கே ஊரணியாம்
ஓடி படர்ந்தாளாம் தாமரையாம்
(தன்னன நாதினம்…)
தாமரையிலை தண்ணிமேலே நின்னு சத்தியம் கேட்டாளாம் காளியம்மா
(தன்னன நாதினம்…)
தேங்கா உடைக்கவே தண்ணி தெறிக்கவே.
தெப்பங்குளமெல்லாம் தத்தளிக்க
(தன்னன நாதினம்…)
மதுரை மீனாட்சி
மாயவன் தங்கச்சி
தேரேறி வர்றாம்மா
தெப்பம் பாக்க
(தன்னன நாதினம்…)
கொண்டை முடியவே அலங்கரிப்பா
கொஞ்சுங் கிளியவே கையிலெடுப்பா
(தன்னன நாதினம்…)
மாணிக்க மூக்குத்தி ஒளிவீச
மரகதமயில் தேரேறி வாறாளே நம்ம மதுரை மீனாள்
(தன்னன நாதினம்…)
என கும்மியடித்து பெண்கள் காளியம்மன், பகவதி அம்மனோடு, மதுரைமீனாளையும் புகழ்ந்து பாடி கும்மியடிக்க, சாமிக்கு அலங்காரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
இவர்கள் வருவதைப் பார்த்து, கூட்டத்தில் அமர்ந்திருந்த சித்தப்பா எழுந்து வந்து, இவர்களை அழைத்துச் சென்றார்.
தேங்காய் பழத்தட்டின் மீது, இரண்டு அம்மனுக்கும் நகையும் கொலுசும் வைத்து, வரவு வைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரனிடம் திலகவதி கொடுக்க, நிமிர்ந்து பார்த்தான்.
அப்பத்தாவின் பின்புறம் நின்றிருந்தவள் தெரியவில்லை.
“வேண்டுதல் யாருக்கு?” என வேண்டுமென வினவினான் ஈஸ்வரன்.
“எம்பேத்திக்கு.” என்க,
“அப்ப அவங்க கையால தான கொடுக்கணும். எங்க அவங்க?” என அப்பத்தாவின் பின் நின்ற சங்கரியை எட்டிப்பார்த்து கேட்க, சங்கரி முன்னே வந்தாள்.
அப்பத்தாவிடம் தட்டை வாங்கியவள், அவன் கீழே அமர்ந்திருந்ததால், குனிந்து கொடுக்க, அவளையே பார்த்துக் கொண்டு வாங்காமல் அமர்ந்திருந்தான்.
மல்லிச்சரம் முன்வந்து விழுந்திருக்க, கண்களை உயர்த்தி தன்னைப் பார்த்து, தாம்பூலத்தட்டை கொடுத்தவள் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என உற்றுப் பார்க்க, அவளோ சாதாரணமாக இருந்தாள்.
அரைக்கால் ட்ரவுசரும், அரும்பு மீசை கூட அரும்பாத, ஒல்லியான வெடவெட உடம்பாக, தலை நிறைய சுருட்டி நின்ற முடியுமாக, அவனை இறுதியில் பார்த்தது.
இன்றோ திருவிழாவிற்கென வேட்டி சட்டையில், சற்று நுனி முறுக்கிய மீசையும், வெட்டும் பார்வை கொண்டு, கட்டிளங்காளையாக அமர்ந்திருந்தவனை அடையாளம் தெரியவில்லை.
அவனது பார்வை தன்மீதே இருக்க, சட்டென குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். இது பெண்களுக்குள் இயற்கையாக நிகழ்வது. ஆணின் பார்வை தன்னை உற்றுப் பார்த்தால், மாராப்பு போட்ட பெண்கள் சட்டென குனிந்து தன்னைப் பார்ப்பது அனிச்சை செயல். இவளும் அப்படிப் பார்க்க, கோபமாகத் தட்டைப் பிடுங்காத குறையாக வாங்கினான். வாங்கிய வேகத்தில் நகைப்பெட்டி அவன் மடியில் விழ, அதை அவன் கையாலும் தொட்டு எடுத்து வைத்தவன், நோட்டில் பெயரை எழுதிக்கொண்டு, தேங்காய் பழத்தை அர்ச்சனைக்கு அனுப்பினான்.
அர்ச்சனை முடித்து, நகையை எடுத்து அம்மனுக்கு பூட்டிவிட்டு, தட்டைக் கொடுக்க, தட்டில் இருந்த திருநீறை எடுத்துப் பூசிக்கொண்டு திரும்பினாள்.
“ஈஸ்வரா, இங்க வாப்பா!” என யாரோ அழைக்க… இரண்டு அடி எடுத்து வைத்தவள், சட்டெனத் திரும்பிப்பார்த்தாள். எழுந்து சென்றவனின் முதுகு தான் தெரிந்தது. கூடவே ஏன் அவன் தன்னை உற்றுப் பார்த்தான் என்ற யோசனையோடு, பெயரை கேட்காமல் எப்படி எழுதினான் என்ற சந்தேகமும் தீர்ந்தது.
அதற்குள் சாமி அலங்காரம் முடிய, கோவிலுக்கு சாமியை எடுத்துவர…
முச்சந்தியில் சக்தி கெடாவெட்டி பலிகொடுத்து, ஊர்வலம் தொடங்கியது.
சாமி முன் செல்ல, முளைப்பாரிகள் வரிசையாக பின்செல்ல, இளைஞர் அணி இளவட்டங்கள் வரிசையை ஒழுங்கி படுத்திக் கொண்டு சென்றனர்.
வெடிகளும், மேளதாளமும் விண்ணைப் பிளந்தது.
இவர்களும் கூட்டத்தோடு கலந்து சென்று கொண்டிருந்தனர்.
சங்கரியின் கண்கள் கூட்டத்தில் அவனைத் தேடிக் கொண்டு வட்டமடித்துக் கொண்டே வந்தாலும், அவளது பார்வை வட்டத்துக்குள் அவன் வரவில்லை. ஆனால் அவனது பார்வையை விட்டு அவள் அகலவில்லை.
ஆரியக் கூத்தாடினாலும் அத்தை மகளை சைட்டடிக்கும் காரியத்தில் கண்ணாயிருந்தான் காளையன்.
எப்படியும் கோவில் செல்ல ஒருமணி நேரமாவது ஆகும். கூட்டத்தை விலக்கி முன்னாலும் செல்ல முடியவில்லை. திலகவதியால் வேகமாக நடக்கவும் முடியாமல் இவர்கள் கூட்டத்தைப் பின் தொடர,
முளைப்பாரி எடுத்துச் சென்ற சிறுமி ஒருத்தி கைவலிக்கிறது என அழ ஆரம்பித்தாள். எல்லோரும் முளைப்பாரி போடும் பொழுது, ஆர்வத்தில் எனக்கும் முளைப்பாரி வேண்டும் என அடம் பண்ணும் சிறுமிகள், தூக்க கலக்கத்தில் தூக்கிநடக்க முடியாமல் முரண்டு பண்ணுவதும் உண்டு. கீழேயும் இறக்க முடியாது.
“அப்பவே வேண்டாம்னு சொன்னே. கேட்டியா. ஏன்டி உசுர வாங்குற.” என உடன் வந்த அவளது அம்மா கோபம் காண்பித்தாள். அவளது தலையிலும் கரகம் இருக்கிறதே. யாரிடம் மாற்றி விடலாம் என சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க, திலகவதியைப் பார்த்தவள்,
”அத்தை… உம்பேத்திக யாரையாவது மொளப்பாரிய தல மாத்த சொல்றீங்களா? தூக்கத்துல அழுகுறா.” எனக் கேட்க, சாமி காரியம்… மறுக்கக் கூடாது என எண்ணியவர்,
“சங்கரிகிட்ட கொடும்மா.” என்க,
சும்மாட்டோடு முளைப்பாரி சங்கரி தலைக்கு மாறியது.
அவளுக்கு தலையில் பாரம் தூக்கிப் பழக்கமில்லாததால், நழுவ ஆரம்பிக்க, இருகை கொண்டு தலையோடு அழுத்திப் பிடித்தாள்.
கவனம் முழுவதும், தலைமேல் இருந்த முளைப்பாரிக்கு சென்றுவிட, எடுத்துச் சொருகிய, இடுப்புச் சேலை இடைவெளி பார்த்த இளவட்டங்கள் கண்ணைப் பரிக்க, பார்த்திருந்தவன் கண்களோ கனலைக் கக்கியது.
இளவட்டங்கள் கைகளில் எல்லாம் கைபேசி. அவர்கள் சாமி ஊர்வலத்தை படம் பிடிக்கிறார்களா, இல்லை, கன்னியர் ஊர்வலத்தை படம் பிடிக்கிறார்களா… எனக் கண்டது யார்?
‘சும்மா பாத்ததுக்கே, குனிஞ்சு பாக்க தெரிஞ்சுது. இப்ப இப்படி ஷோ காமிச்சுட்டு வர்றாளே.’ என நெற்றிக்கண் திறக்காத குறைதான் ஈஸ்வரனுக்கு. இடுப்பைச் சுற்றிய பச்சைப் பார்டரில் சந்தனநிற இடை நான்கு விரலிடை அகலம்தான் வெளிப்பட்டது. இத்தனைக்கும் வரிசையாக கட்டப்பட்டிருந்த ட்யூப்லைட் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமும் இல்லை. அதற்கே கழுத்தறுத்த கோழியாட்டம் உள்ளுக்குள் துள்ளினான்.
அவளுக்கும் மைசூர் சில்க் புடவை நழுவும் உணர்வை கொடுக்க, கைவிட்டு, புடவையை ஏற்றிவிடவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் அவஸ்த்தையாக உணர்ந்தாள்.
“அப்பத்தா, சேல அவுர்ற மாதிரி இருக்கு. அவங்கள வாங்கிக்க சொல்லுங்க.” என்க,
கூட்டத்தில் அவர்களை எங்கு தேடுவது? எப்படியும் முளைப்பாரி கோவில் வந்துவிடும் என எண்ணிக்கொண்டு கூட்டத்தில் கலந்துவிட்டனர். அதற்குள் ஒரு பெண் வந்துகேட்க, அப்பாடா என அவள் தலைக்கு மாற்றிவிட்டாள்.
எல்லாம் நம்ம ஈஸ்வரன் தான் அவளது அவஸ்த்தையைப் பார்த்துவிட்டு, உறவுக்காரப் பெண்ணை அழைத்து,
“மதினி… அந்தப்பிள்ளைக்கு தூக்க தெரியல போல. எங்கேயாவது போட்டுறப் போகுது. நீங்க போய் தலமாத்தி விடுங்க.” என்க,
“யாரு ஈஸ்வரா அந்தப்புள்ள?” என இவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு கேட்க,
“நம்ம சக்திவேல் மாமா மக தான்.” என்றான்.
“என்னடா… வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குதேனு பாத்தே. நம்ம ஈஸ்வரன் கண்ணும் ஒரு பொண்ணு மேல விழுகுதேனு நெனச்சா… இதா சங்கதி.” என நீட்டி முழக்க,
“இப்படியே நம்மல நல்லவன்னு சொல்லியே சாமியார் ஆக்கிறாதீங்க மதினி. மொதல்ல போயி வாங்குங்க.” என்று சிரித்தவனிடம்
“அதான் சம்சாரியாக நோங்கிட்டயே. நீ நடத்து ஈஸ்வரா. போ… போ… நாம்போயி வாங்கிக்கறே.” என இவனை கேலி பேசி விட்டு, சங்கரியிடம் சென்று வாங்கிக் கொண்டாள்.
சாமி கோவில் வந்து சேர்ந்தது. இரண்டு நாட்கள் கோவிலில் கொலுவிருக்கும். வியாழக்கிழமை பூஞ்சோலை செல்லும். இதற்கே அதிகாலை மூன்று மணியாகிவிட்டது.
அடுத்து மாவிளக்கு எடுத்துவர வேண்டும். அதற்குள் விடிந்துவிடும். அதைத் தொடர்ந்து பால்குடம். பால்குடம் ஊர் சுற்றி முடிய, பொங்கல் வைத்தல், அதைத் தொடர்ந்து பூச்சட்டி எடுத்தல் ஆரம்பமாகிவிடும். ஆகமொத்தம் இன்று முழுதும் வேடிக்கைக்கும் குறைவிருக்காது. பெண்களுக்கு வீட்டில் வேலைக்கும் குறைவிருக்காது.
இப்பொழுது மாவிளக்கு எடுத்து செல்வதற்காகத்தான், அப்பொழுதுதான் வந்து படுத்த பேரனை எழுப்பினார். அவனும் தூக்கம் வருவதாக அலுத்துக் கொள்ள, பக்கத்து வீட்டுப் பெண் வந்து அழைத்தார்.
“அதான் என் பேத்தி போறாள்ல. அவன எதுக்கு எழுப்புற திலகா?” என்க,
“விடுங்க அப்பத்தா. அவன் தூங்கட்டும். நா… அந்த அக்கா கூட போயிட்டு வர்றே.” என சங்கரியும் கூறினாள்.
அனைத்து வீடுகளில் இருந்தும் மாவிளக்கு வெளியேறியது. மாவிளக்கு வரிசைகட்டி வீதியில் சென்ற அழகே எட்டு ஊருக்கு கண் விட்டு எரியும். ஒவ்வொருத்தர் மாவிளக்கும் ஒவ்வொரு வகையான அலங்காரம்.
சில்வர் குடத்திலோ, பித்தளை குடத்திலோ, தென்னம்பாலை கொண்டு செய்த அலங்காரம், செவ்வரளி, வெள்ளை அரளி பூ கொண்டு செய்த அலங்காரம், குன்றுமணி கொண்டு செய்த அலங்காரம் என பலவகையாக அலங்கரித்த மாவிளக்கு ஊர்வலம் பார்க்க பார்க்க இரு கண்கள் போதாது.
பக்கத்து வீட்டுப் பெண்ணொடு சங்கரியும் மாவிளக்கை தலையில் ஏந்தி வரிசையில் சேர்ந்து கொண்டாள்.
பச்சரிசி மாவிடிச்சு
மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு
பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு
மிளகிடுச்சு மிளகிடுச்சு
பக்குவமா கலந்து
வெச்சு கலந்து வெச்சு
கலந்து வெச்சு அம்மனுக்கு
மாவிளக்கு எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம் அம்மனவ
எங்களையும் காக்க வேணும்
காக்க வேணும் தாயி
மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
மானோட
பார்வை மீனோட
சேரும்
மாறாம என்னைத்
தொட்டுப் பேசும் இது
மறையாத என்னுடைய
பாசம்… என,
மாவிளக்குகள் வீதி வந்து சேர, பாடலும் ஒலிக்கத் துவங்கியது.
வரிசையில் சங்கரியைத்தான் ஈஸ்வரனின் கண்கள் தேடியது.
பாடலின் முதல் பாதி சாமிக்கும், இரண்டாம் பாதியை இந்த ஆசாமியும் எடுத்துக் கொண்டு கண்கள் துலாவ… அவள் இவனது கண்பார்வையில் விழுந்ததும் சற்று ஆசுவாசப்பாட்டான்.
முளைப்பாரி தூக்கிய அனுபவம், இந்த முறை சுடிதாரில் வந்திருந்தாள். இருந்தாலும், பார்க்கும் கண்களுக்கு எல்லாம் அழகாகத் தெறிந்து தொலைகிறாளே? அவனும் என்னதான் செய்வான்?
வாடிதிறந்து புலியைக்குத்தி
வாயைப்பிளந்து கழி அறைஞ்சு
ஜோடி பொண்டாட்டிக்காரர்
மருதைவீரன்கிட்ட
தொடர்ந்து பிச்சிப்பூ கேளுங்கம்மா
வீதிய வீதிய தூறுங்கம்மா
வேப்பிலை தோரணம் கட்டுங்கம்மா
தேருக்கு வர்ற காளிபகவதிக்கு
வெள்ளி குஞ்சம்கட்டி வீசுங்கம்மா
மந்தைய மந்தைய தூறுங்கம்மா
மாவிலை தோரணம் கட்டுங்கம்மா
மகிழ்ச்சிக்கார காளி பகவதி
மகிழ்ந்து வாரத பாருங்கம்மா
சாணை சாணையா மா(வு)ப்பிணைஞ்சு
சாணை சதுர அரளிய பூச்சூடி
வீதிக்கு ஆயிரம் மாவிளக்கு
அங்கு வேடிக்கை பார்ப்பாளாம் மந்தையம்மா…
என கும்மிப்பாட்டும் மைக்கில் ஒலிக்க, கோயில் சுற்றிவந்து மாவிளக்கு எடுத்து வீடுவந்து சேர, பொழுதும் பளபளவென விடிய ஆரம்பித்தது.
அப்பொழுதுதான் பிரியா எழுந்து வந்தாள்.
“திருவிழா பாக்க வந்துட்டு தூங்கி எந்திருச்சு வர்ற.” என திலகவதி கேட்க, அதைக் காதிலேயே வாங்காமல்,
“அப்பத்தா என்ன டிஃபன்.” எனக்கேட்க, சிரித்து விட்டார்.
************************
“ஸ்ரீ… வாசல்ல தண்ணி எடுத்து வைடா. காவடியும், பால்குடமும் வருது பாரு. எல்லாருக்கும் தண்ணி ஊத்தணும்.” என சித்தப்பா கூற,
“எதுல சித்தப்பா ஊத்தி வைக்கறது?” என தெரியாமல் கேட்டு நின்றான்.
“அண்டாவ எடுத்து வெளிய வச்சு, ஹோஸ்ஸ போட்டு விர்றா. இது கூடத் தெரியல.”
“அவனுக்கு எப்படி முத்து தெரியும்? சொன்னா செய்யப்போறான்.” என திலகவதி பேரனுக்கு பரிந்து கொண்டு வந்தார்.
அனைவரும் குளித்து முடித்து, காலை உணவு வேலையை முடித்திருந்தனர்.
திருவிழா நடப்பது வெயில்காலம் ஆதலால், வீதி சூடு தெரியாமல் இருக்க… வீதியிலும், காவடி, பால்குடம் எடுப்பவர்கள் மீதும் வீட்டு வீட்டிற்கு தண்ணீர் ஊற்றப்படும்.
பொதுவாக கூட்டம் கூடும் இடங்களில் சொறி, சிறங்கு, அம்மை போன்ற தோல் வியாதிகள் எளிதில் பரவும். அதற்காக உருவானது தான்… திருவிழா எனில் ஒருத்தொருக்கொருத்தர் மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடும் விளையாட்டு. அதில் மஞ்சள், சுண்ணாம்பு, வேப்பிலை எல்லாம் கலந்திருக்கும். எல்லாமே கிருமி நாசினிகள்.
முக்கியமான இன்னொன்று, திருவிழா நேரத்தில் எல்லோருக்கும் முன்பெல்லாம் புளிப்பானகம் வழங்கப்படும். புளியும் வெல்லமும் ஊறவைத்துக் கரைத்து, மல்லிவிதை கலந்து வடிகட்டி திருவிழாவிற்கு வரும் அனைவருக்கும் வீட்டுவீட்டிற்கு தாகத்திற்கு கொடுப்பார்கள். இன்று மாடர்ன் யுகத்தில் கார்பனேட்டட் கூல்டிரிங் பாட்டிலாக மாறிவிட்டது.
வெயில் காலத்தில் பேய்ச்சொறி என ஒரு வியாதி பரவும். நாலணா, எட்டணா அளவிற்கு சடைசடையாக சிவந்து தடித்து அரிக்க ஆரம்பிக்கும். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும். இதற்கு கிராமத்தில் இரண்டு வகையான கைவைத்தியம் உண்டு.
ஒன்று… புளிப்பானகம் குடிக்க கொடுத்து, அரிப்புக்கு அந்தப் புளியையே உடம்பிலும் தேய்த்து விடுவார்கள். ஒரே நாளில் சரியாகி விடும்.
இன்னொன்று… சொன்னா சிரிப்பீங்க. அய்யேஏஏ… இதுவான்னு கேப்பீங்க. அதனால வேண்டாம். (தெரிஞ்சவங்க சொல்லுங்க)
முன்பெல்லாம் திருவிழாவில் கண்டிப்பாக அண்டாவில் பானகம் கலந்து வைத்து விடுவார்கள். வெயிலில் சுற்றுபவர்களுக்கு நீர்க்கடுப்பிற்கும் ஏற்றது.
முத்துவேலும், ஸ்ரீயும் சேர்ந்து புளிப்பானகமும், தண்ணீரும் வாசலில் எடுத்து வைத்தனர்.
பெரிய வீட்டின் முன் காவடியும், பால்குடமும் வர, சங்கரி குடத்தை எடுத்து தண்ணீர் ஊற்ற வந்தாள். முன்னப் பின்ன குடம் தூக்கிப் பழக்கமிருந்தால் தானே.
இருந்தாலும் பெரியகாவடிக்கு தண்ணீர் ஊற்றி விபூதி வாங்குமாறு திலகவதி கூறியதால் வாசல் வர, சாமியாடி காலில் ஊற்றும் முன் குடம் நழுவ, இளைஞர் அணியினரோடு வந்து கொண்டிருந்தவன், வேகமாக வந்து தாங்கிப் பிடித்தவன், குடத்தை அவனே வாங்கி ஊற்றிவிட்டு குடத்தைக் கொடுக்க, வாங்கியவள் கண்கள் அவனைத்தான் வட்டமிட்டது.
சாமியாடி விபூதி கொடுக்க… வாங்கியவன், மாமனை அழைத்து அவரது கையில் கொடுத்தான்.
அடுத்து குங்குமத்தை வாங்கியவன்… சங்கரியிடம், “கைய நீட்டு!!” என்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல், அவளும் கையை நீட்ட, குங்குமத்தை கொடுத்தவன்,
“மாமா!!! நீங்க எல்லாரும் உள்ள போங்க. நம்ம பயலுக ஊத்தி குடுத்துக்குவானுக.” என மாமனிடம் கூறி அனைவரையும் உள்ளே போகச் சொன்னான்.
பானகத்தை இளைஞர் அணியினர் விநியோகம் செய்தனர்.
“இவனப்பாத்தா அப்படியே உங்க சித்தப்பாவ பாத்த மாதிரியே இருக்கான்ல முத்து. ஏதாவது விசேஷம்னா அவரு தானே முன்னுக்கு நிப்பாரு.” என ஈஸ்வரனை, நகை கொடுக்கும் போதே, அவனது ஜாடையை வைத்து பேரனை அடையாளம் கண்டு கொண்ட, திலகவதி கேட்க,
“எங்க சித்தாப்பா, மதிப்பும் மரியாதையுமா ஊருக்குள்ள இருந்தது தான, உங்க கண்ணை எல்லாம் உருத்துச்சு.” என, நல்ல நாளும் அதுவுமாக வேறு எதுவும் பேச வேண்டாம் என முத்துவேல் கோபமாக வெளியேறி விட்டார்.
தனக்குப் பின் பிறந்தவன், ஊராரால் மதிக்கப்படும் பொழுது, தோன்றும் சிறு பொறாமைத்தீ, சிலநேரங்களில் குடும்ப ஒற்றுமையையே எரித்து விடுகிறது. அதனால் தான் பொறாமையை தீயோடு ஒப்பிட்டார்கள் போலும். அனைத்தையும் அழிக்க வல்லது.
அடுத்து பொங்கல் வைக்க கோவில் சென்றபோதும் சரி, அக்கினிச்சட்டி ஊர்வலம் வந்த போதும் சரி, அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த ஈஸ்வரனைத் தான் சங்கரியின் கண்கள் துரத்திக்கொண்டிருந்தது… அவனது அத்தை மகள் மலர்க்கொடி திருவிழாவிற்கு வரும் வரை.