தாழையாம் பூமுடித்து🌺 24(1)
தாழையாம் பூமுடித்து🌺 24(1)
24 (1)
“அக்கா தூங்கி எந்திரிச்சாச்சா?” என ஃபோனில் பிரியா விசாரிக்க,
“ஏன்டி, இவ்வளவு நேரமா தூங்குவாங்க. இப்ப டைம் என்ன தெரியுமா?” என எதிர்க் கேள்வி கேட்டாள் சங்கரி.
“இல்ல… மலர்க்கொடி தான் இங்க தூங்குறதுக்கு எடஞ்சலா இருக்குனு தோப்பு வீட்டுக்குப் போயிருக்குறதா சொன்னா. அதான் தூங்கி எழுந்துட்டா ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு வரலாமேனு தான் கால் பண்ணினேன் க்கா.” எனக் கூற,
“ஹேய்ய்ய்… பிரியா இப்ப நீ எங்க இருக்க?” என அவள் கைப்பேசியில் சந்தோஷக் கூச்சலிட்டது நேரிடையாக வீட்டிற்கே கேட்டிருக்கும்.
“எங்க இருக்க இல்ல… இருக்கீங்கே…னு கேளு. நீ அப்பாவ போட்ட போடுல, அப்பயே ஃப்ளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டாரு. காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துட்டோம்.” என தங்கை கொடுத்து தகவலில் கால் தரையில் பாவவில்லை அக்காவிற்கு.
சங்கரி ஃபோனில் அப்பாவிடம் பேசிய பிறகு,
“என்னடா முத்து, சங்கரி இப்படி எல்லாம் கேக்குது. வெவரம் தெரியாத பிள்ளைனு நெனச்சேன்டா. பிரியா அளவுக்கு அதுக்கு தைரியம் பத்தாதுன்னு தான் நமக்குப் பக்கத்துலயே மாப்பிள்ளை பாத்தது. ஆனா அது அப்படியே நம்ம வர்க்கம் டா.’ என தந்தையின் பேச்சில் பெருமிதம் அபரிமிதமாகப் பொங்கியது மகளைப் பற்றி.
“அப்பா, அக்காவ யாருன்னு நெனச்சீங்க. சித்தப்பா வளத்த சிவாவாக்கும்.” என பிரியா கேலி பேசி சிரிக்க,
“நாளைக்கே கெளம்பலாம்டா. எல்லாருக்கும் ஃப்ளைட் புக் பண்ணிரு.” என்று மகனுக்கு உத்தரவு போட, உடனே அதிகாலை ஃப்லைட்டிற்கே ஸ்ரீ டிக்கெட் புக் செய்தான்.
விடிந்தும் விடியும் முன் வீட்டுமுன் வந்து நின்ற அண்ணன் குடும்பத்தைப் பார்த்துவிட்டு தலைகால் புரியவில்லை சிவகாமிக்கு. பேச்சியம்மாவிற்கு சொல்லவே வேண்டாம். ஒரு மூச்சு அழுது ஓய்ந்தார் சந்தோஷத்தில்.
உபசரிப்பு பரபரப்பாக இருந்தது. அண்ணன் குடும்பத்தை வரவேற்று நலம் விசாரிப்பு முடிக்க, பேச்சியம்மா அனைவருக்கும் திருநீரு கொடுக்க, அதே போல் திலகவதியும், குடும்பத்தினருக்கு விபூதி போட்டு விட்டார். நெடுநாள் பிரிந்திருந்த சொந்தங்கள் ஒன்றுகூடும் பொழுது, செம்பில் தண்ணீர் மாற்றிக்கொண்டு, விபூதி கொடுத்துக்கொள்வது வழக்கம்.
ஆரம்ப கட்ட சங்கோஜம் இருந்தது சக்திவேலிற்கும். ஆனால் பழைய விஷயங்கள் எதையும் கிளறாமல் தவசி, மச்சானிடம் பேச்சை எடுத்துச் செல்ல, மெதுவாக இரு குடும்பமும் சரளமாக பேசத் தொடங்கியது.
“சங்கரி எங்க அண்ணி?” என தாங்கள் வந்து இவ்வளவு நேரமாகியும், இன்னும் கண்முன் வராத மகளைப் பெற்றவர்கள் கண்கள் தேட,
“அவங்க ரெண்டு பேரும் தோப்பு வீட்ல இருக்காங்க மதினி.” என சிவகாமி, கயல்விழிக்கு பதில் சொல்ல, அதன் பிறகு அதைப்பற்றி விசரிக்கவில்லை.
காலை சாப்பாட்டிற்கே ஆட்டுக்கறி வீடு வந்தது. மதியத்திற்கு, பஞ்சாரத்திலிருந்து திறந்து விடப்பட்ட கோழிகளை இறை போட்டு விரட்டிக் கொண்டிருந்தனர். அவைகளும் உயிரை றெக்கையில் பிடித்து ஓடிக்கொண்டு இருந்தன.
காலை விருந்தை முடித்து விட்டு… பிரியா, மலர்க்கொடி, தீபிகா, ஸ்ரீ கூட்டணி ஒன்று சேர இவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டது குட்டிக் கண்ணன் தான்.
பதினொரு மணிவாக்கில் தான் பிரியா அக்காவிற்கு அழைத்தாள். அனைவரும் வந்து இருப்பது தெரிந்து உடனே கிளம்பி வருவதாக சங்கரி பரபரக்க, தாங்கள் தோப்பிற்கு வருவதாகப் பிரியா கூற, சரி எனக்கூறிவிட்டு அழைப்பை வைத்தவள் முகத்தின் பிரகாசாம், திருவிழா நேரத்துல சீரியல் பல்பாய் ஒளிற,
“இனி எம்பொண்டாட்டிய கையிலயே பிடிக்க முடியாதே. இதுல எங்க அப்பாவ நெனச்சாத்தான் பாவமா இருக்கு. இந்நேரம், கோழியப் பிடிங்க, சேவலப் பிடிங்கனு, அப்பத்தாவும், அம்மாவும் எங்க அப்பாவ பாடாப் படுத்திட்டு இருப்பாங்க.” என வாய்விட்டு புலம்ப ஆரம்பித்து இருந்தான் மருமகன்.
சற்று நேரத்தில், டிவிஎஸ் சாம்ப்பில், மாலர்க்கொடி ஓட்ட, பின்னால் பிரியா அமர்ந்து வந்தாள்.
“லேடீஸ் வண்டி வாங்கி இருக்கலாம்ல மலர்.” எனக் கேட்க,
“அது எதுக்கு ஷோகேஸ் பொம்ம மதிரி. இது தான் லோடு அடிக்க உதவும். சந்தைக்கெல்லாம் போறதுக்கு இது தான் தோதுப்படும்.” என பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.
சூடான இட்லியும், மட்டன் குழம்பும் என கேரியர் மணத்துக் கெடந்தது.
“எப்படி க்கா இவ்வளவு நேரம் பசி தாங்குன.” என்றவாறே கேரியரை எடுத்துக் கொண்டு வர,
“உங்க அக்காவ சுத்திக் கெடக்கறதப் பாத்துட்டு இந்த கேள்விய கேளு பிரியா.” என மாமன்காரன் கூற, சங்கரி அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலைச் சுற்றி அவித்த வேர்க்கடலை ஓடுகளும், தீயில்சுட்ட மொச்சை, தட்டாம்பயிறு, பச்சைப்பயறு தோல்களும் கிடக்க…
“ஒரே நாள்ல எங்க அக்காவ காட்டுவாசியா மத்திட்டீங்களே மாமா.” என பிரியா சிரித்தாள்.
கேலியும் கிண்டலுமாக கொண்டு வந்த இட்லியை இருவரும் ஒரு பிடி பிடிக்க, பேச்சு வாக்கில் தங்கையையும் ஆராயத் தவறவில்லை அக்காவின் கண்கள்.
கையில் ப்ளாஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. கேட்டவர்களிடம் வண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டாதாக கூறப்பட்டது.
சற்று நேரம் ஜாலியாக பொழுது கழிய, வீட்டுக்கு போலாமா என சங்கரி கிளம்ப…
“வேண்டாக்கா… எல்லாரும் இங்க வருவாங்க. மதியம் இங்க வந்து சமைக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க.” என கூறிவிட்டு பேசிக்கொண்டு இருக்க, சற்று நேரத்தில் அனைவரும் காரில் வந்து இறங்கினர்.
பிறந்த வீட்டு சொந்தங்களைப் பார்த்துவிட்டு துள்ளிக் குதிக்காத குறையாக ஓடிச்சென்று வரவேற்றாள் மகள். மகளின் பூரிப்பைப் பார்த்த பெற்றவர்களுக்கும், மனம் நிறைந்தது.
சித்தப்பனிடம் மட்டும், அனைவரையும் பார்த்த சந்தோஷத்தில் சலுகையாக கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அது ஏனோ அன்னையிடம் தோன்றாத உணர்வுகள் கூட சித்தப்பனைப் பார்த்ததும் தோன்றியது அவளுக்கு. அவருக்கும் கண்கள் பனிக்க, செல்லமாக உச்சி மீது கைவைத்து ஆட்டினார்.
இருவரையும் முறுவல் பூக்கப் பார்த்தவன், “இது என்ன பாசமலர்லயும் சேத்தி இல்லாம, கிழக்குச்சீமையிலயும் சேத்தி இல்லாம புதுரகமா இருக்கே.” என மாமனையும், மனைவியையும் கேலி பேச, சங்கரி அவனை முறைக்க,
“அதொன்னும் இல்லடாம்மா. அவனுக்கு நம்மலப் பாத்து பொறாமைடா சிவா.” என சித்தப்பன் கூற, அங்கு உண்மையில் சற்று பொறாமையோடு பார்த்தது என்னவோ கயல்விழியின் கண்கள் தான். பிள்ளைகளிடம் இருந்து எவ்வளவு விலகி இருந்திருக்கிறோம் என்பது இப்பொழுது தான் புரிய ஆரம்பித்திருக்கிறது.
கயிற்றுக் கட்டில்களை எடுத்துப்போட, சிறிது நேரம் கேலியும் கிண்டலுமாகக் கழிய, மதிய விருந்தை அங்கேயே தயார் செய்ய ஆயத்தமாகினர்.
கீழே ஜமுக்காளம் விரித்து அமர்ந்த பெண்கள் வெங்காயம் உரித்து மசாலா தயார் செய்ய ஆரம்பிக்க, சின்னமாமனோடு ஈஸ்வரனும், ஸ்ரீ யும் கோழிகளை எடுத்துக் கொண்டு தொட்டிப் பக்கமாக சென்றனர்.
தோட்டத்தில் வேலை பார்ப்பவரை அழைத்துக் கொண்டு தேங்காயும், இளநீரும் பறிக்க தவசி சென்றுவிட்டார்.
பிடித்து வந்த கோழிகளை, சிரச்சேதம் செய்து, அதனை சுத்தம் செய்து, வாட்டி எடுத்து, மஞ்சள் தூள் போட்டு கழுவ, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரியா, “மாமா… கோழிகளுக்கும் நீங்க தான் முறைமாமனா?” என மஞ்சத்தண்ணீர் ஊற்றி, கோழியை சுத்தம் செய்ய உதவிக் கொண்டு இருந்த மாமனை கொழுந்தியா கேலி பேச,
“இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு பிரியா, நம்ம காளையனுக்கும் மாமா தான் முறைமாமான். அதுவும் நம்ம ஈஸ்வரன் மாமா தண்ணி ஊத்துனா தான் சமத்தா குளிக்கும். மத்தவங்க கிட்டப்போனா, என்னமோ வாடி வாசலுக்கு வந்துட்ட நெனப்புல சிலுத்துக்கிட்டு நிக்கும்.” என மலர்க்கொடியும் சேர்ந்து கொள்ள, அங்கு தென்னங்கீற்றோடு கைகோர்த்து பெண்களின் சிரிப்பொலியும் சலசலத்தது.
தங்கைகளுக்கும் அண்ணன் குடும்பம் வந்திருப்பதை சிவகாமி ஃபோனில் தெரியப்படுத்த கீதாவுக்கும், சுதாவுக்கும் மிகுந்த சந்தோஷமே.
வெளியவே கல் அடுப்பு கூட்டி, சமையல் ரெடியாக, அதற்குள் பறித்து வந்த தேங்காயை வெடி தேங்காய்க்கு தயார் செய்தனர் மலர்க்கொடியும், சங்கரியும்.
மலர்க்கொடி, உரித்த தேங்காய்களை கண்திறந்து, தண்ணீரை வடித்துவிட்டுக் கொடுக்க, அதில் பொட்டுக்கடலை, வெல்லம், ஏலக்காய் கலந்த கலவையை உள்ளே அடைத்து எரியும் அடுப்பில் போட்டாள் சங்கரி. சிறிது நேரத்தில் ஓடு வெடித்துவிட, எடுத்து ஆரவைக்கும் முன், உனக்கு எனக்கு என காலியான மாயம் தெரியவில்லை.
மதிய விருந்து தயாராவதற்குள், பறித்த வேர்க்கடலை, தட்டாம்பயிரு, பாசிப்பயறு என முன்பசிக்கு என அது ஒரு பக்கம் சென்று வயிற்றை நிரப்ப, அதெல்லாம் எந்த மூலைக்கு எனக் கேட்டு சற்று நேரத்தில் வயிற்றில் அலாரம் அடித்தது இளவட்டங்களுக்கு.
காரசாரமான நாட்டுக்கோழிக் குழம்போடு மதியவிருந்தை ஒரு கை பார்த்தவர்களுக்கு, தென்னந்தோப்பு காற்றில், கண்கள் சுழற்றிக் கொண்டு வர, கயிற்றுக்கட்டிலிலும், ஜமுக்காளத்திலும் என அனைவரும் குட்டித் தூக்கம் போட,
சக்திவேல், தவசியை அழைத்துக் கொண்டு டவுனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். திடுதிப்பென்று கிளம்பி வந்ததால் குழந்தைக்கென்று எதுவும் வாங்கவில்லை. எனவே நெடுநாள் கழித்து மச்சானோடு வண்டியை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பிவிட்டனர்.
இருக்கும் இடமும், உடனிருக்கும் சொந்தங்களும் சக்திவேலிற்கும், ஞாபகம் வருதே… உணர்வைக் கொடுக்க, பழைய நினைப்பில், அத்தை மகனும், மாமன் மகனும் வண்டியில் ஒரு ஜாலி ரைடு கிளம்ப, நகைக்கடை சென்று குழந்தைக்கு செயின் எடுத்துக் கொண்டு திரும்பினர்.
இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு அனைவரும் ஊருக்குள் திரும்பி விட்டனர். புது ஜோடியை நன்றாக தூங்கி எழுந்து வரட்டும் என, அங்கேயே விட்டுவிட்டு தான் மக்களே.
நெடுநாள் கழித்து ஒன்று கூடிய சொந்தங்களுக்கிடையே பேச்சு வார்த்தை, காலை உணவோடு சங்கோஜத்துடன் ஆரம்பித்து, மதிய விருந்தில் சற்று சகஜமாகி, இரவு உணவு கேலி கிண்டல் என கலகலப்பாக சென்றது. இதற்கு தான் சாப்பிடும் பொழுதாவது குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது. உறவுகளுக்குள் இருக்கும் எத்தகைய மன இறுக்கத்தையும் உணவுவேளை தளர்த்திவிடும் மாயம் கொண்டது.
கைபேசியில் நாம் பயன்படுத்தும் செயலிகளே கொஞ்ச நாள் கண்டுக்கலைனா அப்டேட் கேக்குது. கொஞ்ச நேரம் பயன்படுத்தினா, கம்ப்யூட்டர் ரெஃப்ரெஸ் பண்ணச் சொல்லுது.
சொந்தங்களுக்குள் விசேஷங்களும், விருந்துகளும் சும்மா சாப்பிட்டு மொய் வைக்கும் சம்பவம் மட்டும் இல்லீங்க. உறவுகளுக்கிடையேயான அப்டேட். ரிஃப்ரஷ் பட்டன்.
குலசாமி கும்பிடு என்பது தன் சந்ததியினருக்கு அங்காளி பங்காளிகளின் அறிமுகப் படலம். ஊர்த்திருவிழா என்பது நாலு சாதியினரும் ஒற்றுமையாக ஒன்று கூடும் தேர்த்திருவிழா. மொத்தத்துல குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லீங்க. (இதுக்கு மேல சொன்னா கட்டையத் தூக்கிருவீங்க🙏🏻)
மறுநாள் ஈஸ்வரனும், சங்கரியும் வீடு திரும்ப, சக்திவேல் அடுத்த விசேஷத்தைப் பற்றி பேச்சை ஆரம்பித்தார்.
“மாப்ள… தாலிபிரிச்சு கோர்க்க நாள் பாத்துறலாம் டா.” என சக்திவேல் கேட்க,
அப்படியே மலர்க்கொடி, வருண் நிச்சயதார்த்திற்கும் நாள் குறிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
“எல்லாரும் எம் மகன மறந்துட்டீங்க.” என, இரவுப் பணிக்கு சென்றுவிட்டு காலையில் வந்து சேர்ந்த சௌந்தரபாண்டி அங்கலாய்க்க,
“இப்ப அந்த பெரிய மனுஷன யாருடா மறந்தது?” எனக்கேட்ட மச்சானிடம்,
“ஏன்டா, அவனுக்கு பேரு வைக்க வேண்டாமா? எம்பொண்டாட்டி பிள்ளைய எங்க வீட்டுக்கு எப்படா அனுப்புவீங்க?” என அழுகாத குறையாக ஆதங்கப்பட,
எல்லா விசேஷத்திற்கும் ஒட்டு மொத்தமாக நாள் குறித்துவிடலாம் என வள்ளுவனைப் பார்க்க ஆண்கள் கிளம்பினர்.
“தவசி… தாலி மாத்துறதையும், நிச்சயத்தையும் மட்டும் எல்லாருக்கும் சொல்லுங்கப்பா. பேரு வைக்கிறத நம்ம வீட்டோட வச்சுக்குவோம். கண்ணுபட்டுப் போயிரும் டா.” என பேச்சியம்மா கூற, பேச்சி பேச்சுக்கு மறுபேச்சு ஏது அங்கு. முப்பெரும் விழாவிற்கு ஏற்பாடு நடந்தது.
அடுத்த பதினைந்து நாள் கழித்து விசேஷம் என முடிவு செய்யப்பட, சக்திவேல் குடும்பம் கிளம்ப, பிரியா மட்டும் அங்கேயே தங்கிக் கொண்டாள். அவளுக்கும் இந்த இடமும், சொந்தங்களும் மன அழுத்தத்திலிருந்து நல்லதொரு மாற்றத்தைக் கொடுக்க, விசேஷம் வரைக்கும் இங்கேயே தங்கிக் கொள்வதாகக் கேட்க, சரியென அவளை அங்கே விட்டுச் சென்றனர்.
தாலிக்கொடி செய்ய நல்லநாள் பார்த்து பெண்கள் அனைவரும் நகைக்கடை சென்று வந்தனர். அவர்கள் கூறிய பவுன் கணக்கை கேட்டவள், மலைத்துப் போய்,
“ஈசா! அவ்ளோ பெருசா போட்டு வெளில போனா காமெடியா இருக்கும். அவங்ககிட்ட சின்னதா செய்யச் சொல்லேன்.” என, பெரியவர்களிடம் மறுத்துக் கூற முடியாமல் தனிமையில் கூற,
“நீ விசேஷத்துக்கு வர்றவங்களப் பாத்துட்டு அப்புறமா இதச் சொல்லு சிவா. நான் ஏற்கனவே அம்மாகிட்ட இதப்பத்தி சொல்லிட்டே. கேக்கல…” என கூறிவிட்டான்.
இங்கு ஒரு ஆணின் மதிப்பும், மரியாதையும், குடும்ப கௌரவமும், விசேஷங்களில் அவன் வீட்டுப் பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகையை வைத்தே கணிக்கப்படுகிறது.
கயல்விழியின் பிறந்த வீட்டிற்கும் பெயருக்கு அழைப்பு சொல்லப்பட்டது. மற்றபடி இரண்டு பக்க சொந்தங்களும் பொது என்பதால் அழைப்பு ஒரே வேலையாக முடிந்தது.
வருண், விசேஷத்திற்கு இரண்டு நாட்கள் முன் வந்து சேர்ந்தான். சங்கரி, தீபிகா, பிரியா இவர்களோடு, சின்ன அத்தை பிள்ளைகளும் வந்து சேர, இப்பொழுது இவர்களுக்கு சிக்கியது வருண், மலர்க்கொடி ஜோடி.
போதும் போதும் எனும் அளவிற்கு இவர்களை வைத்து கேலி கிண்டல் செய்ய, உங்களுக்கு நான் விட்டவளில்லை என அனைவருக்கும் மலர்க்கொடி பதில் கொடுக்க வந்தேன் வந்தேன் என விசேஷ நாளும் வந்தது.
சொந்த பந்தங்களும் வந்து வீடு நிறைந்தனர். இங்கு திருமணம் மாப்பிள்ளை வீட்டு திருமணம் என்பதால், தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் செல்லக் கல்யாணம் எனும் பெயரில் பெண் வீட்டில் தான் நடத்தப்படும்.
எனவே சொந்தபந்தங்களை லாரியில் ஏற்றிக் கொண்டு அனைவரும் பெரியவீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பஸ் எல்லாம் இந்தக் கூட்டத்துக்கு கட்டுபடியாகாதுங்க.
வெகு நாட்கள் கழித்து பெரியவீடு தனது ஒட்டு மொத்த வாரிசுகளையும் ஒன்றாகப் பார்த்தது. முத்துவேல், இப்பொழுதும் மாடிக்கு சென்று சிதிலமடைந்து கிடக்கும் சாந்தியின் வீட்டை, சிதிலமடையா நினைவுகளோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் வந்தார்.
தாலிகோர்க்கும் வைபவம்… வீட்டிற்கு மூத்த பெண்கள் முன்னிருந்து தாலிக்கொடியில் தங்கக்காசு, தாலிக்குண்டு, குழாய் என உருக்கள் கோர்த்துக் கொடுக்க, தன்னவள் சங்குக் கழுத்தில் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு அணிவித்தான் ஈஸ்வரன்.
இந்த விருந்து பெண்வீட்டார் சார்பாக ஊரே அல்லோகலப்பட்டது.
மறுநாள் நிச்சயதார்த்தம்…
எல்லாவற்றிற்கும் வசதி என தோப்பில் பந்தல் போட்டு விசேஷம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்க, அனைவரும் மீண்டும் அங்கு கிளம்பினர்.
இந்த விருந்தும் பெண்வீட்டாராகிய ஜெயந்தி குடும்பத்தார் சார்பில் சென்றுவிட, இந்த இரண்டு விசேஷங்களுக்கும் அசைவம் போட முடியாது என்பதால் மூன்றாம் நாள் மாமன் மச்சான் விருந்தை தவசி ஏற்றுக் கொண்டார்.
மூன்றாம் நாள் காலையில் வீட்டளவில் சௌந்தரபாண்டியன், தீபிகாவின் தவப்புதல்வனுக்கு அதிவீரபாண்டியன் என பெயர் சூட்டு விழா நடத்திவிட்டு,
தோப்பிலேயே விருந்தும் நடந்தது. தவசியின் சகளைப்பாடிகள் இருவரும் வெகுநாட்கள் கழித்து மச்சான் முத்துவேலோடு ஐக்கியமாகி விட்டனர். இன்றைக்கு அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது என கீதாவும், சுதாவும் அமைதியாகி விட,
“ஏன்டா மாப்ள… சாராயம் காச்சுற ஊர்லயே இருந்துட்டே எப்படிடா குடிக்காம இருந்த…” என தவசியை, சக்திவேல் கேள்வி கேட்க,
“நம்மலய நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கடா. அதே கெத்த மெயின்டெய்ன் பண்ண வேண்டியதாப் போச்சு.” என தவசி அலுத்துக் கொள்ள, வெகுநாட்கள் கழித்து அத்தை மகனும், மாமன் மகனும் மனம் விட்டு சிரித்தனர்.
அடுத்த ஒருமாதத்தில் வருண், மலர்க்கொடி திருமணம். திருமணத்தில் எலுமிச்சம்பழமும் கையுமாக சுத்திக் கொண்டிருந்தாள் ஈசனின் சங்கரி.
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொன்னம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்…