தாழையாம் பூமுடித்து🌺 24(2)

தாழையாம் பூமுடித்து🌺 24(2)

24 (2)

மானூத்து மந்தையில

மாங்குட்டி பெத்த மயிலே

பொட்டபுள்ள பொறந்ததுன்னு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்

சொமந்து வாரான்டி

அவன் தங்கக் கொலுசு

கொண்டு தாரான்டி

சீரு சொமந்த சாதி சனமே

ஆறு கடந்தா ஊரு வருமே… ஹோய்

சீரு சொமந்த சாதி சனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

மைக்செட்டில் பாட்டு ஊரையே அதிரவைத்துக் கொண்டிருக்க, தாய்மாமனாக ஸ்ரீ, இரட்டைக் கிடாய்களைப் பிடித்துக் கொண்டு முன்னால் வர, வீதியடைக்க சீர்வரிசை ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. 

தட்டு வரிசைகள், துணிவரிசை, நகைவரிசை என ஊரே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சீர்வரிசைகளைக் கொண்டு வந்து இறக்கினர் சக்திவேலும், முத்துவேலும் தனது பேரன் பேத்திகளுக்கு.

இன்று… தவசி, சிவகாமியின் மகன்வழிப்பேரன் பேத்திகளும், 

நித்தீஸ்வரன், சிவசங்கரியின் தவப்புதல்வர்களுமாகிய சர்வேஷ்வரன், சக்தீஸ்வரன், சம்யுக்தா ஆகியோருக்கு காதணிவிழா. 

உற்றாரும், உறவினர்களும், ஊராரும் கூடியிருக்க,

“சிவா… வந்துட்டாங்க. சீக்கிரம் வாடி!” என அழைத்துக் கொண்டே உள்ளே வர, இன்னும் பட்டுப்புடவையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், 

“எத்தன வருஷம் ஆனாலும் புடவை மடிப்பு எடுக்கத் தெரியுதா?” என குனிந்து புடவையின் மடிப்பை சரி செய்துவிட்டே நிமிர்ந்தான். 

“வா… வா… டைம் ஆச்சு… போலாம்!” என, கட்டிலில் குப்புறடித்து தவழ முயற்சி செய்து கொண்டிருந்த ஏழு மாத சம்யுக்தாவை தூக்கிக் கொண்ட மனையாட்டி…  இப்பொழுது அவனை அவசரப்படுத்திக் கொண்டு வெளியேறினாள். 

“எல்லாம் என் நேரம் டி. பிள்ளைகளக் கூட நீ ரெடி பண்ணல. நீ கெளம்பி வர்றதுக்கே இவ்வளவு நேரம்.” என அவளை சடைத்துக் கொண்டே இருவரும் வெளியே வர, 

சீர்வரிசைகளும் வாசல் வர சரியாக இருந்தது. 

ஆரத்தி எடுத்து  பிறந்தவீட்டு சீர்வரிசைகளை வரவேற்றனர் மாமியாரும் மருமகளும். 

அத்தை பங்கிற்கு தீபிகாவும் சிறப்பாக சீர்செய்ய, 

குறித்த நேரத்தில் மாமன் மடியில் வைத்து மூன்று பேருக்கும் காதுகுத்தி முடிந்தது. 

இப்பொழுது தீபிகா சௌந்தரபாண்டியனுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தையும், மலர்க்கொடி, வருண் தம்பதிகளுக்கும் கையில் ஒன்று வயிற்றில் ஒன்றும் என இரண்டு வாரிசுகள். 

பிரியாவிற்கும் திருமணமாகி அவளுக்கும் ஒரு குழந்தை.

ஒவ்வொரு விசேஷத்திலும் கூடிக் கும்மியடித்த இளவட்டங்களுக்கு,  இப்பொழுது அவரவர் பிள்ளைகளை சமாளிப்பதே பெரும்பாடாகிப் போனது. 

காதுகுத்து முடிய, குடும்பப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அனைவரும் ஒன்று கூட, நடுவில் பேச்சியம்மாவும், திலகவதியும் அமர, சுற்றிலும் விழுதுகளும், கிளைகளும், கொடிகளும் நிற்க, கேமராவுக்குள் அடங்க மறுத்த கூட்டம் அது.

அடுத்து விருந்து. சீர் கணக்கிற்குதான் இரட்டைக் கிடா பிடித்து வந்தான் மாமன்காரன். ஆனால் விருந்திற்கான மொத்த கிடாயின் பொறுப்பும் தாய்மாமனாக ஸ்ரீ யே ஏற்றுக் கொண்டான். 

பந்தியை கவனித்துக் கொண்டிருந்த ஈஸ்வரனிடம்,

“மாப்ள… வருஷம் தவறாம வெள்ளாம போல?” என மச்சான் முறையில் இருந்த ஒருத்தன் கேலி பேச, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பேச்சியம்மா, 

“ஏலேய்… கோணவாய மகனே. பிள்ளைகளக் கண்ணு வக்காதடா!” என அதட்டியவர்,

“செவாமிகிட்ட சொல்லி முச்சந்தி மண்ண எடுத்து புள்ளைகளுக்கு சுத்திப் போடச் சொல்லணும்.” என பேச்சியம்மா வாய்க்குள் முணங்க,

“கண்ணுத் தெரியலனாலும் ஆத்தாளுக்கு காது நல்லா கேக்குதுடா.” என கூறிவிட்டு, அடுத்து அவன் சாப்பிடுவதற்கு தவிர வேறெதற்கும் வாய் திறக்கவில்லை.                              

*************

“ஏன் சிவா… தாலிச்செயினே சின்னதா வேணும்ன. இன்னைக்கி இத்தனையப் போட்டுருக்க.” என கட்டிலில் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்துக் கொண்டு, கண்ணாடியில் மனைவியைப் பார்த்தவாறே, நகைகளைக் கழட்டி வைத்துக் கொண்டிருந்தவளிடம் கேட்க,

“இங்க இப்படி போட்டா தானே. இல்லைனா தங்கச்சி வீடுன்னு எங்க அப்பா என்னைய சும்மா அனுப்பிட்டாருன்னுல பேசுவாங்க. பாத்துட்டே இருக்கியே. வந்து ஹெல்ப் பண்ணலாம்ல.” என நெக்லஸின் கொக்கியை கழட்ட முடியாமல் எக்கிக் கொண்டே கேட்க, 

“ஹெல்ப் பண்றதப் பத்தி எனக்கு ஆட்சேபனை இல்லடி. ஆனா… ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி இருக்கே?” என்றவனிடம்,

இன்னைக்கு விசேஷ வீட்டில் அவனது அலைச்சல் அதிகம் என்பதை அறிந்தவள், 

“ஏம்ப்பா… அலுப்பா இருக்கா… கை காலுக்கு தைலம் தேச்சு விடவா…” என கட்டிலில் அவனுக்கு அருகே வந்து அமர்ந்து அக்கறையாகத் தலையைத் தொட்டுப்பார்க்க,

“நான் அலுப்பா தெரியுதேன்னு சொன்னது உன்னய. செயின் கொக்கிய கழட்ட ஹெல்ப் பண்றதோட நிக்காது பரவாயில்லையா?” எனக் கேட்டு கண்சிமிட்ட,

“ம்க்க்கும்… இந்தப் பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.” என நொடித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொள்ள,

“என்னா…டீ பொசுக்குனு இப்படி சொல்லிட்டே. ஐத்த மகன் எதுலடி கொறஞ்சு போயிட்டே.”

“இன்னும் நீ எங்கிட்ட சொல்லவே இல்ல.” என மூக்கைச் சுழிக்க,

“நீ நீச்சல் கத்துக்கோ. நா… சொல்றே. அஞ்சாறு வருஷமா நீயும் கத்துக்க மாட்டேங்குறயே.” என இன்னும் காதலைச் சொல்லாத பஞ்சாயத்து தான் ஓடிக் கொண்டு இருக்கிறது இருவருக்கும். 

“அது என் தப்பா. அஞ்சு வருஷத்துல மூனு பிள்ளைகனு… நீ கூட்டுப் போயி நீச்சல் கத்துக்க கொடுத்த லட்சணம் தான் நல்லா தெரியுதே.” என நொடிப்பாக நையாண்டி பேசியவளை, இழுத்து தன்மீது போட்டுக் கொண்டு வாய்விட்டு சிரித்தவன்,

“சர்வேஷ் கூட உனக்கு முன்னாடி  நீச்சல் பழகிருவான்டி. இன்னும் நீ பழகமாட்டேங்குற.” என இறுக்கி அணைக்க, இருந்த உடல் வலிக்கு, அந்த அணைப்பு இதமாக இருக்க, அப்படியே சிறிது நேரம் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருந்தவள், தலை தூக்கிப் பார்க்க, கண்பேசும் வார்த்தைகள் புரியாதவனா என்ன? குனிந்து இதமாக நெற்றியில் இதழ் பதிக்க, ஆசையாக மார்பின் மத்தியில் முத்தம் வைத்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனை,

“ஈசா…” எனும் அவளது ஆழ்ந்த அழைப்பு, இருவரின் களைப்பையும் களையும் வேலைக்கு அஸ்த்திவாரம் போட்டது. 

அவளுக்கு ஆசை வந்தால் ஈசா… கோபம் வந்தால், அவனைச் சீண்ட நித்தியா… பெரியவங்க முன்னாடி மட்டும் நல்ல பிள்ளையாக ஏங்க… என்னங்க… என்ற அழைப்பு.

பெட்டிக்குள் வைத்த தாழம்பூவாய் அவன் இன்னும் வாய்விட்டு சொல்லாத காதல் அவளுக்கு மட்டும் மணத்துக் கிடந்தது. 

தாழையாம் பூ

முடிச்சு தடம் பாா்த்து

நடை நடந்து வாழை

இலை போல வந்த

பொன்னம்மா என்

வாசலுக்கு வாங்கி

வந்தது என்னம்மா

பாலை போல்

சிரிப்பிருக்கு பக்குவமாய்

குணமிருக்கு

குணமிருக்கு

ஆணழகும்

சேர்ந்திருக்கு

கண்ணையா

………

தாயாரின்

சீதனமும் தம்பிமார்

பெரும் பொருளும்

மாமியார்

வீடு வந்தால் போதுமா

அது மானாபி மானங்களை

காக்குமா 

மானாபி மானங்களை

காக்குமா

மானமே

ஆடைகளாம் மரியாதை

பொன் நகையாம் 

நாணமாம்

துணை இருந்தால்

போதுமே எங்கள்

நாட்டு மக்கள் குலப்

பெருமை தோன்றுமே

நாட்டு மக்கள்

குலப் பெருமை தோன்றுமே…

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இதுவரை பெரியவர், சின்னவர் குடும்பத்தோடு பயணித்து, நித்தீஸ்வரன் சிவசங்கரி வீட்டு விசேஷத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த வாசக நண்பர்களுக்கு மிக்க மிக்க நன்றி. 

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

தாழம்பூ வாசம் எப்படி இருந்துச்சு? என்னுடைய நாலாவது கதைய வெற்றிகரமாக எழுதி முடிச்சுட்டே. கதை வெற்றிக் கதையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் மக்களே. சக்கரைப்பொங்கலா வெண்பொங்கலா என்று தான் இந்தக் கதைய ஆரம்பிச்சே. ஆனா, மண்மணம் மாறாத, கிராமிய மணத்தோடு ஒரு கூட்டாஞ்சோறு என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. உப்பு, புளி, உரப்பு எப்படி இருக்குனு சொல்லிட்டுப் போங்கப்பா. அடுத்து அடுப்பு கூட்டுறதுக்கு தெம்பா இருக்கும். சைலண்ட் ரீடர்சும் லைக் பட்டனை மட்டுமாவது தட்டலாம். சாமிக்குத்தம் வந்துறாது. ஊர விட்டு எல்லாம் தள்ளி வச்சுற மாட்டாங்க.🤣🤣🤣🤣🤣

 

 

error: Content is protected !!