தீயாகிய மங்கை நீயடி – 04

ei34NQ073963-7c9ffb25

தீயாகிய மங்கை நீயடி – 04

அருந்ததி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தனது வண்டியில் சென்று கொண்டிருந்த நேரம் திடீரென அவளின் வழியே குறுக்கே சபரி தன் வண்டியைக் கொண்டு வந்த நிறுத்த, அவனை அங்கே எதிர்பாராத அருந்ததி சட்டென்று பிரேக்கை அழுத்தப் பார்க்க அதற்குள் அவளது நிலை மொத்தமாக தடுமாறி அவளை கீழே விழச் செய்திருந்தது.

கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க, தன் கையிலும் காலிலும் ஏற்பட்டிருந்த சிறு சிறு சிராய்ப்புக்களை பார்த்தபடியே எழுந்து நின்றவள் தன் முன்னால் பெருஞ் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த சபரியை பார்வையாலாயே எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு நின்றாள்.

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இப்படித்தான் நடுவீதியில் கொண்டு வந்து உங்க வண்டியை நிறுத்துவீங்களா?” அருந்ததி கோபமாக சபரியைப் பார்த்து வினவ,

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளெதிரில் வந்து நின்றவன், “இது ஒண்ணும் உன் ரோடு இல்லையே, இது பப்ளிக் பிளேஸ், ஷோ யாரு வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் அவங்க வண்டியை நிறுத்தலாம். புரிஞ்சுதா அருந்ததி மேடம்?” என்று விட்டு பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக,

“அது சரி உன்னை மேடம்ன்னு சொல்லுறதா? இல்லை, சார்ன்னு சொல்லுறதா? இல்லை இரண்டையும் சேர்த்து மேடம் சார்ன்னு சொல்லவா? வெளியில் பார்க்க அப்படியே நார்மல் பொண்ணு மாதிரி இருந்தாலும் நீ ஒண்ணும் உண்மையான பொண்ணு கிடையாதே, ஆக்சுவலி நீ பொண்ணே இல்லையே” என்று பேசிக் கொண்டே செல்ல, அருந்ததி தன் கைகளை இறுக மூடித் தன் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

இருப்பினும் சபரியின் பேச்சு எல்லை மீறி சென்று கொண்டேயிருக்க, தன் பொறுமையை மொத்தமாக கைவிட்டவள் அவனை அடிக்க தன் கையை ஓங்கியிருக்க, அதற்குள் இன்னுமொரு கரம் குறுக்கே வந்து சபரியின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

தன்னை அருந்ததிதான் அடித்து விட்டாள் என்கிற எண்ணத்துடன் கோபமாக அவளைத் திரும்பிப் பார்த்த சபரி தனக்கும், அவளுக்கும் நடுவே நின்று கொண்டிருந்த கதிரைப் பார்த்து அதிர்ச்சியாகி நிற்க, அவனோ சபரியின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“உனக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி எல்லாம் அருந்ததி கிட்ட பேசுவ? உன் வீட்டு பொண்ணுங்க கிட்ட இப்படித்தான் நீ பேசுவியா? இல்லை வேறு யாரும் உங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட இப்படி பேசுனா நீ கேட்டுட்டு இருப்பியா? சொல்லுடா, இருப்பியா?”

“கதிர்! நீ தானேடா என்னை…”

“போதும்டா சபரி, போதும். உன்னை என் பெஸ்ட் பிரண்டாக நினைத்துதான் நான் அருந்ததி பற்றி உன்கிட்ட சொன்னேன், ஆனா நீ… நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை” என்று விட்டு அருந்ததியின் புறம் திரும்பிய கதிர்,

“சபரி உன்கிட்ட அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் அருந்ததி, நீ முதல்ல வா இங்கேயிருந்து போகலாம்” என்றவாறே அவளது சம்மதத்தைக் கூட எதிர்பாராமல் அவளது கைபற்றி அழைத்துக் கொண்டு சென்று அவளது வண்டியை இயக்கி அங்கேயிருந்து புறப்பட்டுச் சென்று விட, சபரியோ கதிர் அறைந்த தன் கன்னத்தில் கை வைத்தபடி விக்கித்துப் போய் நின்றான்.

“இவன் லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறானா? அருந்ததி கிட்ட போய் அவளைப் பற்றி தப்புத் தப்பாக பேசி அவளைக் கோபப்படுத்த செய்ன்னு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவன்தான் சொன்னான், ஆனா இப்போ அவளைப் பற்றி தப்புத் தப்பாக பேசாதேன்னு என்னை அடிச்சுட்டு அவளைக் கூட்டிட்டு போறான். இங்கே என்னதான் நடக்குது?

ஓஹ்! ஒருவேளை இப்படி இருக்குமோ? அருந்ததி முன்னாடி அவனை நல்ல விதமாக காண்பித்து அப்படியே அவளை அவன் பக்கம் இழுக்கப் பார்க்குறானா? ஆமா, கண்டிப்பாக அப்படித்தான் இருக்கும். நான் கூட நம்ம பிரண்டை என்னவோ நினைச்சேன், ஆனா இவன் ரொம்ப ரொம்ப விவரமானவனா இல்லையா இருக்கான்? எது எப்படியோ நமக்கு தந்த வேலை முடிஞ்சுடுச்சு. ஆனாலும் கதிர் பொய்யாக அடிக்கிறதாக இருந்தாலும் இவ்வளவு ஃபோர்ஸா அடிச்சிருக்க வேணாம்” என்றவாறே சபரி தன் கன்னத்தை தடவிக் கொடுத்தபடி தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட, மறுபுறம் அருந்ததி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலேயே அமர்ந்திருந்தாள்.

சபரிக்கும் தனக்கும் இடையே பிரச்சினை ஆரம்பிக்கும் போது கதிரை அந்த இடத்தில் பார்த்தது அவளுக்கு முதல் அதிர்ச்சி என்றால், அதற்கு அடுத்தடுத்து நடந்த அனைத்து விடயங்களும் அவளுக்கு தொடர் அதிர்ச்சியைத்தான் அள்ளி வழங்கியது போல இருந்தது.

இதற்கிடையில் கதிருடன் இணைந்து ஒன்றாக தனது வண்டியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட அவளுக்கு உணர்ந்து கொள்ள வெகு நேரம் தேவைப்பட்டிருந்தது.

கதிர் தன்னுடன் இணைந்து வந்து கொண்டிருப்பதை உணர்ந்த அடுத்த கணமே அவனை வண்டியை நிறுத்தச் செய்தவள் அவனை தன் வண்டியில் இருந்து இறங்கி நிற்கச் செய்ய, அவனும் சிறு புன்னகையுடன் அவள் சொன்னபடியே அவளெதிரில் வந்து நின்று கொண்டான்.

“உங்க மனதில் நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க கதிர்? எதற்காக இப்படி எல்லாம் பண்ணுறீங்க? உங்களுக்கு என்னதான் வேணும்?”

“எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதா அருந்ததி?” கதிரின் கேள்வியில் சட்டென்று அமைதியாகிப் போனவள் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, அவளது முகத்தில் தன் கையை வைக்கப் போனவன் அவளது அதிர்ச்சியான பார்வையில் தன் கையைப் பின்னிழுத்துக் கொண்டான்.

“சாரி அருந்ததி, நான் வேணும்னே அப்படி பண்ணல”

“இட்ஸ் ஓகே” கதிரை திரும்பிப் பாராமலேயே தன் வண்டியில் அமர்ந்து கொண்டவள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, கதிர் அவள் சென்ற வழியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நிற்க, அவன் எதிர்பார்த்ததைப் போலவே அருந்ததி அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றிருந்தாள்.

“யாஹூ!” தான் நினைத்தது நடந்து விட்டது என்கிற சந்தோஷத்தில் தன்னை மறந்து சத்தமிட்டு கொண்டே துள்ளித் குதித்த படி கதிர் நின்று கொண்டிருந்த நேரம்,

“என்ன சார்? உங்க பிளான் சக்ஸஸ் ஆகிடுச்சா?” என்று குரல் கேட்க,

தன் முகத்தில் இருந்த புன்னகை மறையாமல் திரும்பிப் பார்த்தவன் தன்னெதிரில் நின்று கொண்டிருந்த சபரியின் தோளில் சாய்ந்து கொண்டு, “ஆமாடா மாப்பிள்ளை, சக்ஸஸ் ஆகிடுச்சுடா, சக்ஸஸ் ஆகிடுச்சு. இதுநாள் வரைக்கும் என்னைத் திரும்பிப் பார்க்கவே கூடாதுன்னு முடிவோடு இருந்தவ இப்போ திரும்பிப் பார்த்து சிரிச்சுட்டு போற அளவுக்கு மாறிட்டாடா. இதற்காக எவ்வளவு டிராமா? எவ்வளவு ஆக்டிங்? அப்பப்பா, நான் களைச்சே போயிட்டேன்டா, ஆனா இனிமேல் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, இதற்கு அப்புறம் அவளை என் பக்கம் வர வைக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப ஈஸி. இன்னும் கொஞ்ச நாள்தான் அதற்கு அப்புறம் அந்த அருந்ததி,’கதிர் நீங்க இல்லாமல் என்னால வாழவே முடியாது’ன்னு சொல்லுறாளா இல்லையான்னு பாரு” என்று கூற,

அவனை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்ற சபரி, “நீ எதற்காக இப்படி எல்லாம் பண்ணுறேன்னு சத்தியமாக எனக்குத் தெரியலடா கதிர். அப்படி அந்த அருந்ததி மேலே உனக்கு என்னதான் கோபம்?” என்று வினவ, அவனோ எப்போதும் போல ஒற்றைப் சிரிப்புடன் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் படி அவனுக்கு கட்டளையிட்டிருந்தான்.

இதுநாள் வரை எத்தனையோ விதமாக கதிரிடம் அருந்ததி மீதான அவனது இந்த ஈடுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிய சபரி முயன்றிருந்த போதிலும் இதுநாள் வரை அவனது முயற்சிக்கு பலன் எட்டவே இல்லை, என்றாவது ஒருநாள் தனது முயற்சிக்கு பலன் எட்டும் என்கிற நம்பிக்கையுடன் சபரி தன் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் அருந்ததி அவர்களது காலேஜ் நூலகத்தில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு தன் சிந்தனை மொத்தத்தையும் கதிரைப் பற்றிய எண்ணங்களில் லயிக்கச் செய்து விட்டது போல அமர்ந்திருந்தாள்.

அருந்ததி இந்தக் கல்லூரியில் இணைந்த நாளிலிருந்து இன்றுவரை கதிரின் பக்கமோ இல்லை வேறு எந்த நபரின் பக்கமோ தன் மனதை அலை பாய விட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள்.

ஆனால் இன்று தனக்கு என்ன ஆனது என்பது கூட அவளுக்குப் புரியவில்லை, கதிரின் உரிமையான தொடுகையைக் கூட உணர முடியாத ஒரு நிலையில் தான் இருந்திருக்கிறோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள் தன் கையிலிருந்த புத்தகத்தில் தன் கவனத்தை திசை திருப்ப முயல அதுவும் அவளுக்கு துணையளிக்கவில்லை.

‘எனக்கு என்னதான் ஆச்சு? எதற்காக இப்படி எந்நேரமும் கதிரைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்? ஒருவேளை நான் அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டேனா?’ அருந்ததி தன் மனதிற்குள் எழுந்த கேள்வியை எண்ணி அச்சம் கொண்டவளாக தன் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அந்த புத்தகத்தின் மேலேயே கண்மூடி தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

‘இல்லை, அப்படி எல்லாம் நடக்கவே கூடாது. எனக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் ரொம்ப நிறையவே இருக்கு. என்னை நம்பி பலபேர் இருக்காங்க, அவங்க எல்லோருக்கும் அவங்க உரிமையை பெற்றுக் கொடுக்கணும், அம்மாவுக்கு நான் நிறைய நிறைய விடயங்கள் செய்து கொடுக்கணும், இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்காக காத்துட்டு இருக்கும் போது நான் காதல், கல்யாணம்ன்னு போவது சரியே இல்லை. இப்படி எந்த ஒரு தப்பான ஆசைகளும் என் மனதில் வந்து விடக்கூடாதுன்னு தானே நான் கதிரை விட்டு விலகி விலகிப் போனேன், ஆனா நான் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிப் போகிறதே. இதற்கு நான் என்ன செய்வது?’ கதிரைப் பற்றிய தன் மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தடுமாறிப் போனவள் பல மணிநேரப் போராட்டத்திற்கு பின்னர் இனி கதிரை தன்னருகே நெருங்கி வர விடவே கூடாது என்கிற உறுதியான எண்ணத்துடன் தன் வகுப்பை நோக்கி நடை போடத் தொடங்கினாள்.

அதன்பிறகு வந்த நாட்கள் எல்லாம் அவர்களுக்கான இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்சி வகுப்புகள் என்று வெகு வேகமாக நகர்ந்து செல்ல ஆரம்பித்திருக்க, அருந்ததி கூட கதிரைப் பற்றிய எண்ணங்களை மறந்திருந்தாள் என்றுதான் கூற வேண்டும்.

அன்று அவர்களது இறுதிப் பரீட்சைக்கான ஆயத்தத்திற்கான விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டிருக்க அதைப்பற்றி தன் தோழிகளுடன் பேசியபடியே நடந்து வந்து கொண்டிருந்த அருந்ததி கேன்டீனில் சென்று அமர்ந்திருக்க, அதேசமயம் கதிரும் அந்த இடத்தில்தான் தனியாக அமர்ந்திருந்தான்.

பலநாட்களுக்குப் பின்னர் கதிரைப் பார்த்தது அருந்ததிக்கு ஒருபுறம் படபடப்புடன் கூடிய சந்தோஷத்தைக் கொடுத்தாலும், மறுபுறம் அவனுடைய அந்த தனிமை அவளை ஏதோ செய்வது போல் இருந்தது.

தன்னால் தானே கதிருக்கும், சபரிக்கும் இடையே தேவையில்லாமல் பிரிவு ஏற்பட்டு விட்டது என்று எண்ணிக் கலக்கத்துடன் அமர்ந்திருந்தவள் கதிரின் அருகில் சென்று பேசலாமா என்று யோசித்து விட்டு பின்னர் தான் மனதில் ஏற்கனவே எடுத்திருந்த முடிவை ஒருமுறை மீட்டிப் பார்த்தபடியே அங்கிருந்த அவசரமாக விலகிச் செல்ல ஆரம்பித்தாள்.

இவ்வாறு பலமுறை கதிருடன் பேச எண்ணி எண்ணி அவனை நெருங்கிச் செல்பவள் பின் ஏதோ ஒரு தடையின் காரணமாக அந்த சந்திப்புக்களை எல்லாம் தவிர்த்துக் கொண்டே வர ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அருந்ததிக்கு இறுதிப் பரீட்சைகள் ஆரம்பத்திருக்க, தன் மனதை தற்காலிகமாக அதில் லயிக்கச் செய்தவள் தன் இறுதிப் பரீட்சை முடிவடையும் வரை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவே இல்லை.

ஏனென்றால் இந்த படிப்பும், அது தரப்போகும் பதவியும் தனக்கும், தன்னைப் போன்ற நபர்களுக்கும் எவ்வளவு முக்கியமானது என்று சிறு வயதிலிருந்தே அவளுக்குத் தெரியும், அப்படியிருக்கையில் இறுதிக் கட்டத்தில் தன் படிப்பிலான கவனத்தை சிதற விட அவள் நினைப்பாளா? என்ன?

அருந்ததி தான் ஆசை வைத்தபடியே தன் இறுதிப் பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்து விட்டு அதைக் கொண்டாடும் விதமாக தன் தோழிகளுடன் இணைந்து ஒரு ரெஸ்டாரன்டுக்கு சென்றிருக்க, அங்கே அவள் பார்த்த காட்சி அவளை முற்றிலும் நிலைகுலைந்து போகச் செய்திருந்தது.

அந்த ரெஸ்டாரண்டில் ஒரு தனிமையான பகுதியில் கதிர் அமர்ந்திருக்க, அவனெதிரில் பல உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என்றாலும் புன்னகை முகத்துடன் தன்னெதிரில் இருந்த இருக்கையைப் பார்த்து, ‘சபரி, சாப்பிடுடா. நீ சாப்பிடாமல் நான் எப்படி சாப்பிடுவேன்? சாப்பிடு மாப்பிள்ளை’ என்றவாறே சிரித்துப் பேசியபடி தன் தட்டிலிருந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்க, அதைப் பார்த்து அருந்ததியின் கண்கள் இரண்டும் குளமாகிப் போனது.

இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை, கதிரை இப்படியான ஒரு நிலையில் விடவே கூடாது என்று தன் மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டவள் தன் தோழிகளிடம் சொல்லி விட்டு கதிர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தாள்.

தன் முன்னால் இருந்த உணவை வெகு மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த கதிர் தன் அருகில் ஏதோ நிழலாடுவது போல இருப்பதைப் பார்த்து நிமிர்ந்து பார்க்க, அங்கே அவனது மனம் நிறைந்தவள் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தாள்.

“அருந்ததி!” அவளை அந்த இடத்தில் முற்றிலும் எதிர்பாராதவன் போல கதிர் அதிர்ச்சியோடு எழுந்து நிற்க,

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனெதிரில் அமர்ந்து கொண்டவள், “என்ன கதிர், தனியா உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்க,

அவனோ, “இந்த தனிமைதான் இப்போதைக்கு எனக்கு துணை. அதுதான் அந்த தனிமை கூட சேர்ந்து இன்னைக்கு எக்ஸாம் முடிந்ததை செலிபிரேட் பண்ணிட்டு இருக்கேன்” என்று கூற, அவனது பதிலைத் கேட்டு அருந்ததி அமைதியாகிப் போனாள்.

“என்னாச்சு அருந்ததி? ஏன் திடீர்னு அமைதியாகிட்ட?”

“ஏன் கதிர் நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க? சபரி உங்க பெஸ்ட் பிரண்ட் தானே? அவரு ஏதோ தெரியாமல் அப்படி பேசிட்டாரு, அதை நானே மறந்துட்டேன், ஆனா நீங்க இப்படி மொத்தமாக அவரோட நட்பை வேணாம்னு விலக்கி வைக்கலாமா?”

“இல்லை அருந்ததி, அவன் ஒண்ணும் தெரியாமல் அப்படி எல்லாம் பேசல, இதற்கு முன்னாடி பலதடவை உன்னைப் பற்றி அப்படி பேசியிருக்கான். அவன் அப்படி பேசும் ஒவ்வொரு தடவையும் அவனை நான் திட்டியிருக்கேன், ஆனா அவன் மாறவே இல்லை. இதெல்லாம் என் தப்புத்தான், நான் அவன் கிட்ட எந்த உண்மையையும் சொல்லியிருக்க கூடாது, ஐ யம் சாரி அருந்ததி”

“ஐயோ கதிர்! சாரி எல்லாம் எதற்கு? இது எல்லாம் எங்களுக்கு பழகிப் போன விடயம். நான் பிறந்ததிலிருந்தே பல அவமானங்களை சந்தித்துத்தான் இவ்வளவு தூ வளர்ந்து வந்திருக்கேன், பெற்ற அம்மா, அப்பாவே நான் பிறந்த உடனேயே என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க, அப்படியிருக்கும் போது யாருன்னு தெரியாதவங்க என்னை ஏற்றுக் கொள்ளக் கூடும்ன்னு நான் நினைக்கலாமா? அது பேராசை இல்லையா?”

“நிச்சயமாக இல்லை அருந்ததி, கடவுள் ஒவ்வொரு மனிதனையும் படைக்கும் போது அவங்களுக்கு நிறைய நல்ல ஆற்றலைக் கொடுப்பது போல ஒரு சில குறைகளையும் வைத்துத்தான் அனுப்பி வைப்பாரு. அப்படி ஒரு சின்ன குறை உடம்பில் இருப்பதால் நம்ம மனதை எதற்காக பூட்டி மறைத்து வைக்கணும் அருந்ததி?” கதிரின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்து விட்டு,

“சாரி கதிர், எனக்கு லேட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன், மறுபடியும் நேரம் கிடைக்கும் போது சந்திக்கலாம்” என்றவாறே எழுந்து கொள்ள,

கதிர் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே, “உன் கூட பேசுவதற்காகவே என்னோட நேரம் எப்போதும் காத்திருக்கும் அருந்ததி” என்று விட்டு அவளது முகத்தை ஆவல் ததும்ப பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனது கூற்றில் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தவள் பின் ஒரு சில நொடிகளுக்குப் பின்னர், “உங்களுக்கு இனி தனிமை மட்டும் துணையாக இல்லை கதிர், இந்த அருந்ததியும் துணையாக இருப்பா, என்றென்றும்” என்று விட்டு வெட்கம் தாளாமல் அங்கிருந்து வேகமாக விலகிச் சென்று விட, கதிரோ அவள் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகளைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!