தீயாகிய மங்கை நீயடி – 11

ei34NQ073963-25501f10

தீயாகிய மங்கை நீயடி – 11

அருந்ததி தான் கேட்ட செய்தியை நம்ப முடியாமல் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்கள் வீட்டை வந்து சேர, அங்கே அந்த வீட்டின் வாயிலில் கிருஷ்ணா உயிரற்ற உடலாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான்.

பலர் சேர்ந்து அடித்து இருப்பார்கள் போலும், அவனது முகம் முழுவதும் இரத்தக் காயங்கள் நிறைந்து போயிருக்க, அதைப் பார்த்து அருந்ததிக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

இத்தனை கொடூரமான செயலை யார் செய்திருக்க கூடும் என்பது கூட அவளுக்குப் புரியவில்லை, அதிலும் கிருஷ்ணா இந்த ஊருக்குப் புதியவன், அப்படியிருக்கையில் அவனை அடித்தே கொன்று போடும் அளவிற்கு அவனோடு யாருக்கு விரோதம் இருக்கக் கூடும் என்று சிந்தித்தபடியே அவனது உயிரற்ற உடலின் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள் அவனது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

சில்லிட்டுப் போயிருந்த கிருஷ்ணாவின் கரங்களில் இரத்தக் கறை படிந்து போயிருக்க, அவனது முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் முதன்முதலாக அவனை சந்தித்த அந்த நாளை எண்ணி தனக்குள்ளேயே அமைதியாக அழ ஆரம்பித்தாள்.

கிருஷ்ணா அவளை வார்த்தைக்கு வார்த்தை, ‘அக்கா’ என்று அழைத்த போதெல்லாம் அவனை வேற்று ஆளாக நினைக்க அவள் மனது அனுமதித்ததே இல்லை, மாறாக தன்னுடன் உடன்பிறந்த ஒரு சகோதரனைப் போலத்தான் அவனைத் தினமும் நினைத்து வரச் செய்திருந்தது.

ஒரு சில நாட்களே அவனோடு பழக அவளுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் அவனது இந்தத் திடீர் இழப்பை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கிருஷ்ணாவின் கையை வருடிக் கொடுத்தபடியே அருந்ததி அமர்ந்திருந்த தருணம் அவனது கையிலிருந்த ஏதோ ஒரு காகிதம் அவளின் கையில் சிக்க, அதை மெல்ல எடுத்து பிரித்துப் பார்த்தவள் அது ஏதோ ஒரு அரசியல் கட்சியின் போஸ்டரின் ஒரு பகுதி என்பதை யூகித்துக் கொண்டு அது தேவையில்லாத ஒன்று என்று நினைத்து அதை தூரத் தூக்கிப் போட்டாள்.

அருந்ததி வெகு நேரமாக எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து சிறு கவலையுடன் அவளருகில் அமர்ந்து கொண்ட வைஜயந்தி, “இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கப் போற அருந்ததி? அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டாமா?” என்று வினவ,

விரக்தியாக புன்னகைத்துக் கொண்டே அவரின் புறம் திரும்பியவள், “எப்படி வைஜயந்தி ம்மா இதை சாதாரணமாக கடந்து போக சொல்லுறீங்க? ஒரு உயிரை அடித்துக் கொன்று போட்டுட்டு போவாங்க, நாம எதையும் கண்டு கொள்ளாமல் அப்படியே இருக்கணுமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அநியாயங்களைக் கண்டு நாம அடங்கிப் போகணும் வைஜயந்தி ம்மா?” என்று கேட்க, மறுபுறம் வைஜயந்தி அமைதியாக அமர்ந்திருந்தார்.

“சரி, அநியாயத்தைக் கண்டு நாம கோபம் கொள்ளவோ, அதை எதிர்த்துக் கேட்கவோ முடியாதுன்னே வைச்சுப்போம், ஆனா இந்தக் காரியத்தை யாரு செய்தாங்க வைஜயந்தி ம்மா? இந்தப் பையனுக்கு அப்படி யாரு எதிரி இருக்காங்க?”

“அவனுக்கு மட்டும் இல்லை அருந்ததி, நம்ம எல்லோருக்கும் ஒரே எதிரி தான், நம்மளோட அடையாளம். அந்த அடையாளத்தை வைத்துத் தான் இன்னைக்கு வரைக்கும் எல்லாத் தண்டனைகளும் நமக்கு கிடைக்குது”

“அப்படின்னா?”

“கிருஷ்ணாவுக்கு இந்த உலகம் புதுசு அருந்ததி, பல வருஷமா தனக்குள்ள இருந்த ஆசையை தைரியமாக இனி பின்பற்றலாம் என்கிற நம்பிக்கையுடன் அவனுக்குப் பிடித்த சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே போய் பார்த்துட்டு வர்றேன்னு கிளம்பிப் போனான், கொஞ்ச நேரம் கழித்து திடீர்னு எல்லோரும் பதட்டமாக ஒரு இடத்தில் குவிந்து நிற்பதைப் பார்த்து நாங்களும் அங்கே போய் பார்த்தோம், அங்கே கிருஷ்ணா இந்த நிலையில் விழுந்து கிடந்தான். என்ன நடந்தது? எப்படி இப்படி ஆச்சுன்னு அங்கே இருந்த எல்லோர்கிட்டவும் விசாரிச்சோம். ஆனா ஒருத்தர் கூட எங்களை சக மனிதனாகக் கூட மதிக்காமல் அவங்க போனில் விதம் விதமாக கிருஷ்ணாவை போட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து போயிட்டாங்க. இந்த சமூகத்தோட வெளி மாயையைப் பார்த்து அதை உண்மைன்னு நம்பி எல்லோர் கூடவும் சகஜமாக இருக்க நினைத்ததுதான் கிருஷ்ணா செய்த ஒரே தப்பு” என்றபடியே வைஜயந்தி எழுந்து சென்று விட, அருந்ததியினால் ஏனோ அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இத்தனை வருடங்களாக தாங்கள் பலபேர் இந்தப் பகுதியில் இருந்தும், பல பேரோடு சகஜமாக பிரயாணம் செய்தும் வந்திருக்கிறோம், அப்படியிருக்கையில் இத்தனை வருடங்களாக தங்களை எதுவும் காயப்படுத்த நினைக்காத அந்த மக்கள் ஏன் இப்போது கிருஷ்ணா விடயத்தில் மாத்திரம் அத்தனை கொடூரமாக நடக்க வேண்டும் என்பது மாத்திரம் அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

நிச்சயமாக கிருஷ்ணாவின் மரணத்தின் பிண்ணனியில் ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அருந்ததி அதை நிச்சயமாக நான் கண்டுபிடித்தே தீருவேன் என்ற நம்பிக்கையுடன் கிருஷ்ணாவின் கையின் மேல் வைத்திருந்த தன் கையை அழுத்தி அவனுக்கு வாக்களிப்பது போல கூறிக் கொண்டு அவனது இறுதிக் கிரியைகளை கவனிக்கத் தயாரானாள்.

கிருஷ்ணாவின் இறுதிக் கிரியைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்த அருந்ததிக்கு அதன் பின்னர் வந்த இரண்டு நாட்களும் ஏனோ எந்தவொரு வேலையிலும் ஈடுபடத் தோன்றவில்லை.

தன் பாட்டிற்கு தன்னறையிலேயே அமர்ந்திருப்பவள் கிருஷ்ணா அந்த ஊரிற்கு வரும் போது கொண்டு வந்த பையையே வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருப்பாள்.

அன்றும் அவ்வாறே அவள் அமர்ந்திருந்த தருணம் கிருஷ்ணாவின் உயிரற்ற உடலை வருடிக் கொடுத்த போது அவனது அருந்ததி கையிலிருந்து தான் எடுத்த காகிதம் இதற்கு முன் பல தடவை அவள் பார்த்த ஒரு காகிதம் போல இருக்க அவசர அவசரமாக தங்கள் வீட்டு முற்றத்தை நோக்கி ஓடிச் சென்றவள் அந்த கிழிந்த காகிதத்தை தேடி எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டின் பின்புறமாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை நோக்கி விரைந்து சென்றாள்.

அவள் கையிலிருந்த காகிதமும் அங்கே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரும் ஒரே மாதிரியானது என்பதை கண்டுபிடித்தவள் அந்த போஸ்டரில் இருந்த நபரைப் பார்த்து கோபம் கொண்டவளாக வீட்டை நோக்கி திரும்பி வந்து வைஜயந்தியின் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வேக வேகமாக எங்கோ புறப்பட்டுச் சென்றாள்.

அருந்ததி தன் வண்டியில் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு நேரமும் அவளது மனது அப்போதுதான் பற்ற வைத்த நெருப்பு போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இத்தனை நாட்களாக தன்னை மாத்திரம் குறி வைத்து தாக்கி வந்த அந்தக் கதிர் இப்போது தன்னைச் சேர்ந்தவர்களை காயப்படுத்துவதையும் தாண்டி, அவர்கள் உயிரைப் பறிக்கும் நிலைக்கு கூட சென்று விட்டானே என்கிற ஆதங்கத்துடன் தனது வண்டியை தங்கள் பகுதிக்குரிய காவல் நிலையத்தின் முன் சென்று நிறுத்தியவள் தன் கோபம் சிறிதும் தணியாதவளாக அந்தக் காவல் நிலையத்தினுள் நுழைந்து கொண்டாள்.

எப்போது கிருஷ்ணாவின் கையிலிருந்த அந்த கிழிந்த காகிதமும், கதிரின் தந்தை மாணிக்கத்தைப் பாராட்டி ஒட்டப்பட்டிருந்த போஸ்டரும் ஒரே மாதிரியானது என்பதை உணர்ந்து கொண்டாளோ அப்போதே அவர்கள் அனைவரையும் உண்டு இல்லை என்று ஆக்கி விட வேண்டும் என்பது போல அவளுக்குள் வெறி எழுந்தது.

இருந்தாலும் எதையும் சட்ட ரீதியாக அணுக வேண்டும், அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தன் கையாலேயே தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவள் தன் மனக்குமுறலை அடக்கிக் கொண்டு காவல் நிலையத்தை வந்து சேர்ந்திருந்தாள்.

அருந்ததி இன்ஸ்பெக்டர் எங்கே இருக்கிறார் என்று தேடியபடியே அந்தக் காவல் நிலையத்தினுள் உள் நுழைந்த தருணம், “வாங்க வக்கீல் மேடம்? என்ன திடீர்னு இந்தப் பக்கம்?” என்று குரல் கேட்க, தனக்குத் தெரிந்த நபர் யாராவது இருப்பார்கள் போலும் என்றெண்ணியபடி அவள் திரும்ப, அங்கே அவளது வயதை ஒத்த ஒரு இளைஞன் புன்னகை முகமாக அவள் முன்னால் நின்று கொண்டிருந்தான்.

அந்த நபரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அருந்ததி சிறிது குழப்பம் அடைந்து நிற்க, அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்ட அந்த நபர், “என்னாச்சு என்னை ஞாபகம் இல்லையா? அது சரி, உங்களுக்கு இனி கோர்ட்டில் ஆயிரம் கேஸ் இருக்கும், அப்படியிருக்கும் போது என்னை எப்படி ஞாபகம் இருக்கும் இல்லையா?” என்று வினவ, அப்போதும் அருந்ததிக்கு அந்த நபரைப் பற்றி சிறிதும் நினைவுக்கு வரவில்லை.

“சாரி, நீங்க யாருன்னு எனக்கு ஞாபகம் இல்லையே” அருந்ததி சிறு தயக்கத்துடன் அந்த நபரைப் பார்த்துக் கூற,

அவளைப் பார்த்து சத்தமிட்டு சிரித்தவன், “என் கன்னத்தில் பளார்ன்னு அறைஞ்ச நீ அதை மறந்திருக்கலாம், ஆனா அடி வாங்கின ஆளு நான் அதை எப்படி மறப்பேன்?” என்றபடியே அந்த நபர் தன் கன்னத்தை தடவிக் கொடுக்க, அப்போதுதான் அவளுக்கு அந்த நபர் யார் என்று மெல்ல மெல்ல நினைவு வர ஆரம்பித்தது.

சில மாதங்களுக்கு முன் கதிர் தன்னைத் திருமணம் செய்வதாக சொல்லி ஒரு காட்டுப்பகுதி கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது கதிரின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்த அந்தக் கயவர்களில் ஒருவன் தான் அந்த நபர்.

‘இவனை எப்படி அத்தனை சுலபத்தில் தான் மறந்தோம்?’ என்றெண்ணியபடி தன்னைத்தானே கடிந்து கொண்டவள்,

அந்த நபரைப் பார்க்கத் துளியும் விருப்பம் இல்லாதது போல, “நான் இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும், முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேசணும்” எங்கோ ஒரு புறம் பார்த்துக் கொண்டு கூற, அவள் முகத்தின் முன்னால் மீண்டும் சொடக்கிட்ட அந்த நபர் தன்னைப் பார்த்து பேசும் படி ஜாடை காட்டினான்.

அந்த நபரைப் பார்க்கும் போது அருந்ததிக்கு அவனை அங்கேயே அடித்துப் போட வேண்டும் என்பது போல ஆத்திரம் எழுந்தாலும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை நேர் கொண்டு பார்த்தவள், “நான் இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும் ” என்று கூற,

அந்த நபரோ, “சொல்லுங்க வக்கீல் மேடம், நான்தான் இந்த ஸ்டேஷனுக்கு புதுசா வந்திருக்கும் இன்ஸ்பெக்டர். உங்களுக்கு நான் என்ன பண்ணனும்?” என்று வினவ, அருந்ததிக்கோ அவன் தன்னை, ‘இன்ஸ்பெக்டர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“நீ… நீங்க இன்ஸ்பெக்டரா?”

“ஆமா மேடம், நீயூ அப்பாயிண்மெண்ட். ஜஸ்ட் நேற்று தான் ஜாயிண்ட் பண்ணேன், ஆனா பாருங்க வேலைக்குச் சேர்ந்து முழுசா ஒரு நாள் தான் ஆகியிருக்கும், அதற்குள்ள வக்கீலே நம்மளைத் தேடி கேஸ் தர வந்துட்டாங்க”

“திருடன் கிட்டயே சாவியைக் கொடுத்து கஜானாவைப் பாதுக்காக்க சொல்லியிருக்கும் கொடுமை இந்த ஊரில் மட்டும்தான் நடக்கும்” அருந்ததி அந்த நபரைப் பார்த்துக் கோபமாகக் கூறி விட்டு அங்கிருந்து செல்லப் போக,

“மேடம் ஒரு நிமிஷம்” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்று கொண்டவன்,

“ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போறீங்க? என்ன விஷயம்ன்னு சொன்னா தானே எங்களுக்குப் புரியும், அதற்கான அப்புறம் தானே நாங்க ஏதாவது உதவி பண்ண முடியும்” என்று கூற,

அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவள், “அதுதான் நான் திரும்பி போவதற்கான காரணத்தை சொல்லிட்டேனே, திருடன் கையிலேயே சாவி இருக்குன்னு. இதற்கு மேலேயும் உங்க கிட்ட நின்று பேசி எந்தப் பயனும் இல்லை” என்று விட்டு கோபமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றாள்.

‘சே! எங்கே போனாலும் அந்தக் கதிரோட சம்பந்தப்பட்ட ஆளுங்க தான் இருக்காங்க. அவனை எதிர்த்து நிற்க ஒரு ஆள் கூட நம்ம பக்கம் இல்லையே!’ என்றெண்ணியபடியே அருந்ததி தன் வண்டியில் ஏறி அமரப் போன தருணம் சற்று முன்னர் அவள் சந்தித்த அந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் அவள் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தான்.

“மிஸ்டர் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்க போலீசாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா?” அருந்ததி தன் குரலை உயர்த்தி அவனைப் பார்த்து சத்தமிட,

“ஹலோ! பொறுமை! பொறுமை! நான் என்ன சொல்ல வர்றேன்னு கூடப் புரிஞ்சுக்காமல் எதற்கு இப்படி சத்தம் போடுறீங்க? அப்போ கோர்ட்டிலேயும் இப்படித்தான் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் உங்க இஷ்டத்துக்கு வாதாடுவீங்களோ?” என்றவாறே அவளை வண்டியை விட்டு இறங்கும் படி சைகை செய்தவன்,

“மேடம், நான் பர்சனாலாக உங்களுக்கு கெட்டவனாக தெரிஞ்சிருக்கலாம், ஆனா உண்மையாக நான் கெட்டவன் இல்லை. ஏதோ அன்னைக்கு கதிரோட பேச்சைக் கேட்டு அப்படியெல்லாம் பண்ணிட்டேன், பட் அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம். இப்போ உங்க முன்னாடி நிற்கிறது கதிரோட பிரண்ட் சந்திரன் இல்லை, இன்ஸ்பெக்டர் சந்திரன், ஷோ நீங்க தைரியமாக உங்க பிரச்சினையைப் பற்றி சொல்லலாம்” என்று கூற, அவனை ஒரு கணம் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றவள் இவனை நம்பி தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதா? வேண்டாமா? என்று தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு நின்றாள்.

வெகு நேரமாக அருந்ததி அமைதியாக நிற்பதைப் பார்த்து அருந்ததியின் முகத்தின் முன்னால் தன் கையை அசைத்தவன், “என்னைப் பொருத்தவரை வேலை வேறு, பர்சனல் வேறு. முதல்ல ஸ்டேஷனுக்குள்ள வந்து உங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க” என்றவாறே அவளை அதற்கு மேலும் சிந்திக்க விடாமல் அழைத்துக் கொண்டு சென்றவன் ஒரு காகிதம் மற்றும் பேனாவை அவளின் புறமாக நீட்டினான்.

அவனது செயலில் சிறிது வியப்புடன் அருந்ததி அவனை நோக்க அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “நீங்க ஏதோ பெரிய கம்ப்ளெயிண்ட் தர வந்திருக்கிற மாதிரிதான் எனக்குத் தோணுது, ஷோ அதுதான் நானே பேப்பர் அன்ட் பேனாவைக் கொண்டு வந்துட்டேன். இப்போ நீங்க உங்க கம்ப்ளெயிண்டை எழுதுங்க” என்று கூற, அருந்ததியும் அவனது பேச்சில் நம்பிக்கை கொண்டு கதிர் மற்றும் மாணிக்கம் மீதான தனது புகாரை எழுதத் தொடங்கினாள்.

அருந்ததி எல்லாம் சரியாக எழுதியிருக்கிறாதா? என்று மீண்டும் ஒருதடவை தான் எழுதிப் பார்த்ததைப் படித்துப் பார்த்து விட்டு இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க, அதை வாங்கி படித்துப் பார்த்தவன், “என்னங்க சொல்லுறீங்க? உங்களுக்கு தெரிஞ்ச பையனைக் கொலை பண்ணிட்டாங்களா? அதுவும் கதிரா?” என்றவாறே அதிர்ச்சியாக அவளை நிமிர்ந்து பார்க்க,

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா சார், என் மேலே இருக்கும் வன்மத்தைக் காட்ட இப்படி அப்பாவி உயிரைப் பழி வாங்கிட்டாங்க” என்று கூற, அவள் முன்னால் நின்று கொண்டிருந்த சந்திரன் திடீரென சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் எதற்காக சிரிக்கின்றான் என்று புரியாமல் அருந்ததி குழப்பத்துடன் அவனைப் பார்க்க தன் சிரிப்பை நிறுத்தி விட்டு தன் கையிலிருந்த காகிதத்தை துண்டு துண்டாக கிழித்தெறிந்தவன், “என்ன சொன்ன? உன் மேலே இருக்கும் வன்மமா? அதுசரி, நீ யாரு முதல்ல? பெரிய பிஸ்னஸ் பண்ணுற ஆளா? இல்லை அரசியல்வாதியா? இல்லை எங்களைப் போல சாதாரண ஒரு மனுஷனா? ம்ம்ம்ம்ம்ம், எதுவுமே இல்லை. உன்னையெல்லாம் கதிருக்கு சரிசமமாகக் கூட அவன் பார்க்க மாட்டான், அப்பிடியிருக்கும் போது இவ மேலே அவனுக்கு வன்மமாமே? இந்த வருஷத்தோட மிகப் பெரிய காமெடி இதுதான்” என்று கூற, அருந்ததி கோபமாக அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்னடா இவ்வளவு நேரம் பெரிய மகான் மாதிரி பேசுனவன் இப்போ இப்படி பேசுறான்னு பார்க்குறியா? ஆக்சுவலி இதுதான் உண்மை, அது டிராமா”

“நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே. உன்னைப் போய் அடிச்சுட்டேனேன்னு ஒரு செக்கன் நான் கவலைப்பட்டேன், ஆனா உன்னை எல்லாம் அடிப்பதில் எந்தத் தப்பும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுடுச்சு”

“அடடா! ஒரு தடவை அடிச்சுட்டு அதை ஓராயிரம் தடவை சொல்லிக் காட்டுறியே. சரி, பரவாயில்லை. உண்மையாக அவனை எதற்காக கொன்னாங்க தெரியுமா? உங்களோட இந்த அடையாளம் இந்த சமுதாயத்தில் கலந்திருப்பது எங்களுக்குப் பிடிக்கல. இந்த ஊரில் ஆண், பெண் அப்படித்தான் இருக்கணும், உங்களைப் போல தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் இந்தப் பூமிக்கும், ஊருக்கும் பாரமாக இருப்பது யாருக்குமே பிடிக்காது. அதுதான் அதற்குப் பிள்ளையார் சுழி அவனை வைத்து ஆரம்பிச்சாச்சு. இனிப்பாரு உங்க எல்லோரையும் ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கிறது தான் எங்க வேலையே”

“ஓஹ்! அப்படியா? இந்த உலகத்திற்கு நாங்க பாரமாக இருக்கோமா? அடடா! இது இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே. உன்னை மாதிரி ஏதோ ஒண்ணு எல்லாம் இங்கே வாழும் போது யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணாமல் நாங்க இருப்பது பாரம்தான் என்ன பண்ணுறது?” அருந்ததி வேண்டுமென்றே தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு பேச,

தன் கையை கோபமாக தன் முன்னால் இருந்த மேஜை மீது அடித்தவன், “என்ன வாய் ரொம்பதான் நீளுது? பரவாயில்லை பேசு, நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசு, ஆனா உன்னால் சட்டரீதியாக எதுவும் பண்ண முடியாது. ஒருவேளை நீ அப்படி ஏதாவது பண்ண நினைச்சா நீ யாரை சாக்காக வைத்து அந்த சட்டத்தை உன் பக்கம் எடுக்கப் பார்த்தாயோ அந்த சாக்கை ஒண்ணுமே இல்லாமல் பண்ணிடுவோம். என்ன புரியலையா? இனி அந்தப் பையனை சாக்காக வைத்து நீ எங்கேயும் கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாது, அப்படி ஏதாவது பண்ண நினைச்ச அவனோட ஒரு எலும்பைக் கூட எடுக்க முடியாத அளவிற்கு அவனை மொத்தமாக அழிச்சுடுவோம்” என்று கூற, அருந்ததியோ அதிர்ச்சியாக அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!