தீயாகிய மங்கை நீயடி – 15

ei34NQ073963-9deab94f

தீயாகிய மங்கை நீயடி – 15

அருந்ததியின் சிவகுரு பிரசாத் என்ற அழைப்பில் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே தன் கைகளைத் தட்டிய அந்த புதியவன், “சூப்பர் மேடம் நீங்க, நீங்க மட்டும் என்னை ரொம்ப ஸ்பெஷலாக கூப்பிடணும்னு தான் எனக்கு ஆசை, அதேமாதிரி என் முழுப்பெயரை சொல்லி யாரும் என்னைக் கூப்பிட்டது இல்லையா, இப்போ நீங்க அப்படி கூப்பிடவும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. சிவகுரு பிரசாத் ரொம்ப ஹாப்பி போங்க” என்று கூற,

அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், “இப்போ நான் உங்களை எப்படிக் கூப்பிடணும், கூப்பிடக் கூடாதுன்னு சொல்லத்தான் இங்கே வந்தீங்களா? ஒருவேளை உங்களுக்கு நேரம் போகலைன்னு டைம் பாஸ்க்கு பேசிட்டு இருக்கலாம்ன்னு நினைச்சு இங்கே வந்திருந்தீங்கனா ஐ யம் சாரி, எனக்கு அதில் இஷ்டம் இல்லை. ஷோ நீங்க இப்போ இங்கேயிருந்து கிளம்பலாம்” என்று கூற, அவனோ அவளைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தான்.

“ஐயோ! நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க மேடம். ஒரு வக்கீல் இப்படி எல்லாவற்றையும் எடுத்தோம், கவிழ்த்தோம்ன்னு டீல் பண்ணா எப்படி ஒரு கேஸை தீர்க்க முடியும்?”

“அது என் பிரச்சனை, நான் அதைப்பற்றி யோசிக்கிறேன், நீங்க முதல்ல இங்கேயிருந்து கிளம்புங்க”

“ஓகே, ஓகே. நான் கொஞ்சம் ஓவராக பேசிட்டேன் போல. ஐ யம் சாரி. ஆக்சுவலா நான் உங்களைப் பார்க்க வந்ததே ஒரு கேஸ் விஷயமாகத் தான்”

“கேஸா? என்ன கேஸ்?” அருந்ததி இப்போது சிறிது ஆர்வமாக அவனை நோக்க, தன் கேலிப் பேச்சை சிறிது நேரம் நிறுத்தி வைக்க எண்ணியவன் தான் அவளை சந்திக்க வந்ததற்கான காரணத்தை தெளிவு படுத்தத் தொடங்கினான்.

“அருந்ததி மேடம், எங்க அம்மாவோட அப்பா இருக்காரே எங்க தாத்தா அவருதான் அவங்க அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. எங்க தாத்தா பிறந்த நேரம் அவங்க அம்மா இறந்து போக, எங்க தாத்தவை வளர்த்தது அவங்களோட அத்தை, அதாவது எங்க தாத்தாவோட அப்பாவோட தங்கச்சி. அவங்களுக்கும் ஒரே குழந்தை தான், அது ஒரு பெண் பிள்ளை. எங்க தாத்தாவோட அப்பா பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை, சாதாரண ஒரு விவசாயி தான், அவரு கொஞ்சம் கொஞ்சமாக உழைச்சு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வைத்து அந்த ஊரிலேயே ஒரு ஐம்பது ஏக்கர் காணியை வாங்கி அதில் இருபத்தைந்து ஏக்கரை எங்க தாத்தாவோட பேரிலேயும், மீதி இருபத்தைந்து ஏக்கரை அவரோட தங்கச்சி மகளோட பெயரிலேயும் எழுதி வைத்துவிட்டு அவரு இறந்து போயிட்டார்.

அதற்கு அப்புறம் எங்க தாத்தா வளர்ந்து பெரிய ஆளாகி, அந்த நிலத்திலேயே விவசாயம் பண்ணி, எங்க பாட்டியையும் கல்யாணம் பண்ணி, எங்க அம்மாவையும் நல்லா படிக்க வைச்சாங்க. அதே நேரம் எங்க தாத்தாவோட அத்தை பொண்ணு இருந்தாங்களே அவங்க என்ன பண்ணாங்கன்னா அந்த ஊரில் இருந்த ஒரு பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டுமில்லாமல் அவங்க பேரில் இருந்த இருபத்தைந்து ஏக்கர் நிலத்தையும் அந்த ஆளு, அதாவது அவங்க வீட்டுக்காரர் பேரில் மாற்றி எழுதிக் கொடுத்துட்டாங்க. அந்த ஆளு அந்த நிலத்தை வைத்து படாதபாடு படுத்தி கடைசியில் அதை எங்க தாத்தா கிட்டயே விற்றுட்டுப் போயிட்டாரு. எங்க தாத்தாவும் ரொம்ப சந்தோஷமா அந்த நிலத்தை வாங்கி அதையும் எங்க அம்மா பேரிலேயே எழுதி வைத்திருக்காங்க, இந்த விஷயம் அந்த நேரத்தில் எங்க அம்மாவுக்கு தெரியாது.

இதை சாதகமாகப் பயன்படுத்திக்கிட்ட எங்க தாத்தாவோட அத்தை பொண்ணோட பசங்க மூணு பேரும் அந்த நிலத்தை குத்தகைக்கு பாவிக்கிறதாக எங்க தாத்தா கிட்ட சொல்லி வாங்கிட்டு அவங்களுக்கு சொந்தம்ன்னு சொல்லி ஊரை ஏமாற்றி வைத்திருக்காங்க. இப்போ ஒரு இரண்டு, மூணு மாதங்களுக்கு முன்னாடி தான் இந்த விஷயம் எல்லாம் எங்களுக்குத் தெரிய வந்தது, அதோட எங்க தாத்தா இறக்கும் போது தான் அந்த நிலமும் எங்க அம்மா பேரில் தான் இருக்குன்னு சொல்லிட்டு இறந்துட்டாங்க. இப்போ பிரச்சினை என்னன்னா அந்த நிலத்திற்கான பத்திரம் எங்க கிட்ட இல்லை, குத்தகைக்கு எடுக்கிறதாக சொன்ன அந்த பசங்க கிட்ட தான் இருக்கு, அதை எப்படியோ நான் போய் எடுத்துட்டு வந்துட்டேன், அதை தெரிஞ்சுகிட்ட அந்தப் பசங்க அவங்க நிலத்தை நாங்க பலவந்தமாக பறிச்சுக்கப் பார்க்கிறோம்ன்னு வீணாக எங்க அம்மா மேலே பழி போடப் பாரக்கிறாங்க, ஆனா அது உண்மையாகவே எங்க அம்மாவுக்கு சொந்தமான நிலம்தான், டாக்குமெண்ட்ஸ் கூட பக்காவா இதை சொல்லுது.

நாங்க போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணி அங்கே வைத்து சமரசமாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சி பண்ணோம், ஆனா அவங்க அதை ஏற்றுக்கல, அதனால கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணி அது மூலமாக அந்த ஆளுங்களுக்கு உண்மையைப் புரிய வைக்கலாம்னு தான் உங்களைத் தேடி வந்தேன்” சிவகுரு பிரசாத் சொல்வதை கண்ணிமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்த அருந்ததி,

“இவ்வளவு பெரிய ஃபிளாஷ்பேக்கா?” என்று கேட்க, இப்போது அவளை முறைத்துப் பார்ப்பது அவனின் வேலையாகிப் போனது.

“இல்லை, இல்லை நான் தப்பாக எதுவும் சொல்லல சார். நீங்க எதையும் ஷார்ட்டா பேச மாட்டிங்களோன்னு சொல்ல வந்தேன், வேறு எதுவும் இல்லை” என்றவாறே அவனைப் பார்த்து புன்னகை செய்தவள்,

“அந்த டாக்குமெண்ட் எல்லாம் இப்போ உங்க கிட்ட இருக்கா?” என்று வினவ, அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் தன் கையிலிருந்த பைலை அவளின் புறமாக நீட்டினான்.

அவன் கொடுத்த பைலிலிருந்த எல்லா தகவல்களையும் நன்றாகப் படித்துப் பார்த்தவள், “இதிலே தான் எல்லாம் தெளிவாக சொல்லியிருக்கே, அப்புறம் ஏன் அவங்க அந்த நிலத்தை உங்களுக்கு தர மாட்டேன்னு சொல்லுறாங்க” சிறு குழப்பத்துடன் அவனை நோக்க,

சிறு சலிப்புடன் தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், “அதுதான் மேடம் எங்களுக்கும் புரிய மாட்டேங்குது, எத்தனை தடவை சொன்னாலும் கேட்குறாங்க இல்லை. சட்டரீதியாக இந்த நிலம் உங்களுக்குத்தான்னு சொல்லட்டும், அப்போ நாங்க ஒதுங்கிப் போறோம்ன்னு சொல்லுறாங்க. அதுதான் வேறு வழியே இல்லாமல் கோர்டை நம்பி வந்திருக்கேன். என் பிரண்ட்ஸ் ஒண்ணு, ரெண்டு பேரு சொன்னாங்க கோர்ட்டுக்கு எல்லாம் போகாதேடா, ரொம்ப இழுத்தடிப்பாங்கன்னு, ஆனா எனக்கு அதில் உடன்பாடு இல்லை, அதுதான் நம்ம கிட்ட எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவாக இருக்கே, அப்படி இருக்கும் போது எப்படி இழுத்தடிக்க முடியும்?” என்று வினவ, அவனது கேள்விக்கு பதிலளிப்பது போல அருந்ததி ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“நீங்க சொல்லுறது ரொம்ப சரி, இந்த கேஸ் ஒரு ஹியரிங்கிலேயே முடிஞ்சுடும்ன்னு தான் நான் நினைக்கிறேன், நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம், நீங்க எதிர்பார்க்கிறது நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்” என்றவாறே அருந்ததி புன்னகை முகமாக அவனைப் பார்க்க,

ஒரு சில நொடிகள் கண்ணிமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், “நான் எதிர்பார்க்கும் எல்லாமே எனக்கு கிடைக்குமா அருந்ததி?” என்று வினவ, அவனின் அருந்ததி என்கிற உரிமையான அழைப்பில் அவனை சிறு அதிர்ச்சியோடு நோக்கினாள் அவள்.

“ஹலோ மிஸ்டர்! நீங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சு இல்லையா? இப்போ சரி இங்கேயிருந்து போங்க. உங்களுக்கு ஹியரிங் எப்போன்னு கோர்ட்டில் இருந்து ஆர்டர் வரும், அப்போ மறுபடியும் பார்க்கலாம்” என்றவாறே அருந்ததி அங்கிருந்து எழுந்து கொள்ள,

அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே எழுந்து நின்ற சிவகுரு, “ஆனாலும் நீங்க இவ்வளவு ஹிட்லராக இருக்கக் கூடாது அருந்ததி, சரி நான் கிளம்புறேன்” என்று விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறப் பார்த்த தருணம்,

“மிஸ்டர்! ஒரு நிமிஷம்” என்கிற அருந்ததியின் குரல் கேட்டு ஆவலாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இல்லை நான் கேட்கிறேன்னு தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இங்கே நிறைய எக்ஸ்பீரியன்ஸ் நிறைந்த லாயர் எல்லாம் இருக்கும் போது எதற்காக நீங்க உங்க கேஸை என் கிட்ட கொடுக்க நினைத்தீங்க? இல்லை, நான் ஏன் கேட்கிறேன்னா இதுவரைக்கும் நான் போய் பலபேர் கிட்ட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்ட போதும் யாரும் என்னை நம்பி அவங்க கேஸைத் தந்தது இல்லை, ஆனா நீங்க தானாகவே வந்து இவ்வளவு பெரிய ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கீங்க, அதுதான்” அருந்ததியின் தயக்கம் நிறைந்த பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே அவளெதிரில் வந்து நின்றவன்,

“எப்படியும் நாம எல்லோரும் ஒரே குடும்பம் தானே? குடும்பத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த சின்ன உதவியைக் கூட செய்யலேன்னா எப்படி?” என்று வினவ,

அவளோ, “என்ன? குடும்பமா? நீங்க என்ன சொல்றீங்க?” மிகுந்த அதிர்ச்சியோடு அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“பார்த்தீங்களா? மறுபடியும் நீங்க அவசரப்படுறீங்க? நான் இன்னும் முழுமையாக சொல்லியே முடிக்கல. உங்களுக்கு மாறனைத் தெரியும் தானே? உங்க சிஸ்டர் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ சென்னையில் இருக்காங்க, அந்த மாறன் என்னோட க்ளோஸ் பிரென்ட், அவன்தான் உங்ககிட்ட பேசிப் பார்க்க சொன்னான், அதைத்தான் நம்ம குடும்பம்ன்னு சொன்னேன்”

“ஓஹ்! மாறன் அண்ணா சொன்னாரா? அவருக்கு எப்போதும் எங்க எல்லோர் மேலேயும் பாசம் ஜாஸ்திதான்” என்றவாறே புன்னகைத்துக் கொண்டு நின்ற அருந்ததி சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக,

“அப்படின்னா உங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?” என்று வினவ,

அவளை விசித்திரமாகப் பார்த்தவன், “நீங்க ஒரு லாயர், அது தெரிந்து தானே வந்திருக்கேன்” எனவும் அவளோ சிறு சலிப்புடன் தன் தலையை மறுப்பாக அசைத்தாள்.

“அது இல்லை மிஸ்டர் சிவகுரு பிரசாத், நான் ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளுன்னு உங்களுக்குத் தெரிந்துமா உங்க கேஸை என் கிட்ட கொடுக்க நினைத்தீங்க?”

“மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளுன்னா என்ன இப்போ? எல்லோரும் மனுஷங்க தானே? எனக்குத் தேவை லாயர் தான், அது ஆணாகவோ, பெண்ணாகவோ, இல்லை மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஆளாகவோ இருக்கணும்னு அவசியம் இல்லை. என் கண்ணுக்குத் தெரிவது உங்க வேலை தானே தவிர நீங்க யாரு என்கிற அடையாளம் இல்லை, சரி அருந்ததி, நான் வர்றேன்” என்றவாறே சிவகுரு அந்த அறையை விட்டு வெளியேறி விட, அருந்ததியினால் தான் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஆரம்பத்தில் அவளை சீண்டிப் பார்க்க வேண்டும் என்பது போலவே பேசிக் கொண்டிருந்த அதே நபர் தான் இப்போது தன்னைப் பற்றிய இத்தனை பெரிய விடயத்தை மிகவும் இயல்பாக பேசிக்கொண்டு சென்றவனா என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.

நாம் இந்த உலகத்தில் சந்தித்த, சந்திக்கின்ற, சந்திக்கப் போகின்ற எல்லா நபர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிற வைஜயந்தியின் கூற்று எவ்வளவு ஆழமான உண்மையை சொல்லியுள்ளது என்றெண்ணியபடியே தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கியவள் அதன் பிறகு சிவகுருவின் வழக்குத் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினாள்.

சிவகுரு அவளை சந்தித்து விட்டுச் சென்ற இரண்டாவது வாரத்திலேயே அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பும் வந்து விட, தன்னுடைய முதல் வழக்கு தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வெற்றியில் அருந்ததி எல்லையில்லாத ஆனந்தம் கொண்டிருந்தாள்.

சிவகுருவின் வழக்கு ஒரு சாதாரண எளிய வழக்காக இருந்தாலும் அவளது திறமையை நிரூபிக்க அவளுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் அல்லவா அது?

அருந்ததியின் வாதத்திறமையைப் பார்த்து இத்தனை காலமாக அவளை விட்டு ஒதுங்கிப் போன சக வழக்கறிஞர்கள் அவளைத் தேடி வந்து அவளோடு சகஜமாகப் பழகத் தொடங்கியிருக்க, அதைவிட வேறு எந்த விடயம் அவளுக்கு சந்தோஷத்தை வழங்க முடியும்.

இனி தங்களோடு சேர்ந்து வழமை போல் அருந்ததி அவளுக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, தங்களுக்கிடையே வரும் வழக்குகளைப் பிரித்து அவளுக்கும் ஒரு வாய்ப்பு அளிப்போம் என்று அவர்கள் வாக்கு அளித்திருக்க, இது அத்தனைக்கும் ஆரம்ப கர்த்தாவாக இருந்த சிவகுரு பிரசாத்திற்கு தன் நன்றியை கட்டாயமாகக் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் அவனைத் தேடி ஆர்வமாகப் புறப்பட்டுச் சென்றாள்.

சிவகுரு தான் வெளியே ஒரு வேலையாக இருப்பதாகக் கூறி தான் இருக்கும் இடத்தின் முகவரியை அவளுக்குச் சொல்லியிருக்க, அந்த விலாசத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தவள் அந்த இடத்தைப் பார்த்து ஒரு சில நொடிகள் வியந்து போய் நின்றாள் என்றால் மிகையாகாது.

அந்த இடம் வலது குறைந்த மற்றும் மன நலம் குறைந்த குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு இல்லம் என்பதை அந்த சூழலில் நடமாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் நடத்தை மற்றும் தோற்றத்தை வைத்துக் கண்டு கொண்டவள் மனமோ என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வில் சிக்கிக் கொண்டது போல துடித்துக் கொண்டிருந்தது.

அந்த இடத்தைப் பார்வையிட்டபடியே முன்னேறி நடந்து சென்றவள் அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி ஒரு பெரிய மரத்தின் கீழ் சிவகுருவும், அவனைச் சுற்றி பத்துப் பதினைந்து குழந்தைகளும் அமர்ந்திருப்பதைப் பார்த்து சிறு ஆர்வம் தூண்ட அவர்களை நோக்கி எட்டி நடை போட ஆரம்பித்தாள்.

சிவகுரு அந்தக் குழந்தைகளுக்கு ஏதோ கதை சொல்வது போல தன் கைகளையும், தலையையும் அசைத்து பேசிக் கொண்டிருக்க அவனைச் சுற்றியிருந்த அந்தக் குழந்தைகளும் அவன் சொல்வதை வெகு ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதேசமயம் சிவகுருவும் அருந்ததி அங்கே வந்து நின்றதைக் கூட அறியாதவனாக கதை பேசிக்கொண்டிருக்க, முதன்முதலாக அருந்ததி தன் மனதிற்குள் சிவகுருவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

யாரோ ஒரு புதிய நபர் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட அந்தக் குழந்தைகள் சிவகுருவிடம் குற்றம் சாட்டுவது போல சத்தம் போட ஆரம்பிக்க, அந்தக் குழந்தைகளின் சத்தத்தை கேட்டு தன் பேச்சைக் கை விட்டவன் அவர்கள் ஜாடை காட்டிய புறம் திரும்பிப் பார்த்து விட்டு, “அருந்ததி!” என்றவாறே ஆச்சரியமாக எழுந்து நின்றான்.

“என்ன அருந்ததி நீங்க? இங்கே வந்துட்டு ஒரு கால் பண்ணியிருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருப்பேனே? உங்களுக்கு எதுக்காக வீண் அலைச்சல்?”

“ஏன் நான் இங்கே எல்லாம் வரக்கூடாதா?”

“ஐயோ! நான் அப்படி சொல்ல வரல மேடம். உங்களுக்கு கஷ்டமாக இருக்குமேன்னு தான் சொன்னேன்”

“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் இந்த இடத்தையும், இந்தக் குழந்தைகளையும் பார்த்ததும் ஏனோ தெரியல ஒரு இனம்புரியாத உணர்ச்சி எனக்குள்ளே வந்தது போல இருக்கு”

“அதுதான் இந்த இடத்தோட சிறப்பே!” என்றவாறே தன் முன்னால் அமர்ந்திருந்த குழந்தைகளின் புறம் திரும்பியவன்,

அவர்கள் அனைவரும் அவனதும், அருந்ததியினதும் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டவனாக, “ஐயோ! சாரி பிரண்ட்ஸ், உங்ககிட்ட இவங்களை அறிமுகப்படுத்தவே மறந்து போயிட்டேன். இவங்க தான் அருந்ததி மேடம், பெரிய லாயர். மேடம்க்கு எல்லோரும் ஹாய் சொல்லுங்க” என்று கூற, அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்த வகையில் அவளைப் பார்த்து வரவேற்க அந்தக் குழந்தைகளின் செயலைப் பார்த்து சிலிர்த்துப் போனவள் அவர்கள் எதிரே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு அவர்கள் அனைவரையும் ஆரத்தழுவிக் கொண்டாள்.

அருந்ததியின் அணைப்பில் அத்தனை குழந்தைகளும் வாகாகப் பொருந்திக் கொள்ள, சிவகுருவின் பார்வையோ ஆசை ததும்ப அருந்ததியின் முகத்தில் நிலை குத்தி நின்றது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!