தேனாடும் முல்லை – 10

தேனாடும் முல்லை – 10

தேனாடும் முல்லை-10

கடந்தகால வாழ்க்கை சிலருக்கு கலைந்த மேகங்களாக தீராத ஏக்கங்களை நினைவுறுத்தும். சிலருக்கு பசுமையான, சந்தோஷத் தருணங்களாய் மனதினில் நிற்கும்.

வெகு சிலருக்கே அது கொடிய நரகத்தின் தீராத வடுக்களாக உயிரோடு வதைக்கும் அவஸ்தையைத் தரும். விஸ்வநாதனின் குடும்பத்தினர் அந்த வெகு சிலரில் அடங்கியது அவர்களின் துரதிர்ஷ்டம்.

சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, ஸ்வாதிக்கு புகுந்த வீட்டு உறவே வேண்டாமென்று வெட்டிக் கொண்டு மீண்டபோது ஒருமாதம் முழுதாக முடிந்திருந்தது. மேஜர் ஆகாத பெண்ணை திருமணம் முடித்து வைத்ததற்காக பெண்ணின் பெற்றோர்களுக்கு நீதிமன்றம் பெரும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மனதிற்கு பிடிக்காத விசயத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப் படும்போது அந்தச் சூழ்நிலையை பயம் கொள்ளாமல் தயக்கமின்றி எதிர்க்கும் துணிவை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டுமென்ற அறிவுரையை ஸ்வாதிக்கும் வழங்கியது. தற்போதைய மன அழுத்தத்தில் இருந்து அவள் வெளிவருவதற்கான மனநல ஆலோசனைகளும் தொடர்ந்த சில நாட்களில் வழங்கப்பட்டன.

தணிகாசலம், கந்தனின் கடத்தல் தொழிலும் வெளிச்சத்திற்கு வந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் மேல்முறையீட்டிற்கான முயற்சியில் வக்கீலை அமர்த்தும் பரபரப்பில் மருதாயியும் பஞ்சவர்ணமும் மருமகளை மறந்து விட்டிருந்தனர் .

விஸ்வநாதன் தனது தொழிலை முழுதாக உதவியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு தஞ்சாவூரில் தங்க ஆரம்பித்தார். பிரச்சனைகள் முடிந்திருந்தாலும் அதன் உஷ்ணங்கள் குறையாமல் அனலைக் கக்கத் துவங்கியதில் மகளை விட்டு நகர்வதில்லையென்ற முடிவினை எடுத்திருந்தார்.

சொந்தவீடு, நிலபுலன்கள், அறுவடை, குத்தகை வரவு செலவென மெய்யப்பனின் பொறுப்புகள் எல்லாவற்றையும் கவனித்து பார்ப்பதற்கே சொந்த ஊரில் இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலையும் அவரை அசைய விடவில்லை.

அங்குள்ள டுடோரியல் மூலம் மகளின் படிப்பு விசயத்தை மீண்டும் கையில் எடுத்தார். நேரடியான பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்விற்கு நிதானமாகவே தயார்படுத்திக் கொள்ள அவளுக்கு அறிவுறுத்தினார்.

“சோர்ந்து போய் உக்காராதே செல்லம்மா… உன் மனசுல உள்ளதை வெளியே சொல்லப் பழகிக்கோ, உன் முடிவை எடுத்துச் சொல்றதுக்கு எங்கேயும் தயங்கி நிக்காதே!” தந்தை புதிதாக பாடமெடுக்க, மகள் மலங்க மலங்க விழித்தாள்.

“மனசுல இருக்கிறத தயங்காம சொல்லுங்கற அட்வைஸ், உங்க மகளுக்கு மட்டும் தானா, எனக்கில்லையா?” காஞ்சனாவின் எதிர்கேள்வியில் ஸ்தம்பித்தார்.

இத்தனை நாட்களாக முகம் திருப்பாமல், தான் என்ன சொன்னாலும் சரியென்று சொல்லும் மனைவி, இப்பொழுது ஆதங்கத்தில் தனது மனத்தாங்கலை கோடிட்டுக் காட்ட, ரணப்பட்ட மனதில் மேலும் முள் குத்தியது.

“இந்த வீட்டுல எல்லாருக்கும் கண்ணு போன பிறகு, சூரிய நமஸ்காரம் பண்ணித்தான் பழக்கம். நீயும் அதையே ஃபாலோ பண்ணுடி!” மகளிடம் நொடித்துக் கொண்ட காஞ்சனா, கணவரை ஜாடையாகப் பார்த்தார்.

“புள்ளைக்கு நல்லது சொல்றது கூட பொறுக்கலையா?” விஸ்வநாதனின் பதிலுக்கு,

“உனக்கு புத்தி சொல்றவர், அவர் மனசு சொல்றபடி நடந்துகிட்டறான்னு கேளு, செல்லம்மா…” மகளை இடையில் நிறுத்தியே பேச்சினை வளர்த்து, கணவரை குற்றம் கூறத் தொடங்கினார்.

“என் பொண்ணு சூதுவாது தெரியாம இருக்கிறதால இந்த குடும்பத்தை விட்டு இன்னும் ஒதுங்காம இருக்கா… அவளுக்கு அட்வைஸ் பண்ண நமக்கு யோக்கியதை இருக்கான்னு யோசிக்கணும். இவளோட இந்த நெலமைக்கு நாமதான் காரணம்னு அவளுக்கு தெளிவா புரிஞ்சு, கேள்வி கேட்டா, சொல்றதுக்கு பதில் இருக்கா உங்ககிட்ட?” முறைப்புடன் கேட்ட கேள்விகள் மாமியாரையும் தொட்டு மீண்டன.

“பெத்தவங்க மனசு சங்கடப்படக் கூடாதுன்னு பார்த்து, புள்ளைய வளர்க்கிற என் ஆசையையும் புதைச்சு வைச்சீங்க… மக வாழ்க்கையை முடிவெடுக்கிற சராசரி ஆசையை கூட அவங்களுக்கே விட்டுக் கொடுத்து வேடிக்கை பார்த்துட்டு, இன்னைக்கு புத்தி சொல்ல வந்துட்டீங்களா? ஒரு பொண்ணோட எதிர்காலத்தை கேள்விகுறியாக்கின பாவத்தை என்ன செஞ்சு நேர் பண்ணப் போறீங்க?” வெகுநாள் மனதில் கிடந்த ஆற்றாமைகளை காஞ்சனா வெளிப்படுத்த, குடும்பத்தில் புதிய உட்பூசல் உண்டானது.

“சொல்லிக்காட்ட இதுதான் நேரமா? நானும் முக்காடு போட்டுட்டு அழவா… அவ எதிர்காலம் பிரகாசமா ஜொலிக்க ஆரம்பிச்சிடும்.” கோபமாய் பதிலடி கொடுத்தார் விஸ்வநாதன்.

“என் பொண்ணு நல்லா இருப்பாங்கிற ஆசையிலதான் பொறுத்துகிட்டேன். ஆனா இப்ப அவளை பாக்கற ஒவ்வொரு நிமிசமும் செத்துப் பொழைக்கிறேன். போதும் சாமி… இனிமேலும் அவ இந்த ஊருல இருந்து சீரழிய வேணாம். என் புள்ளைய நான் கூட்டிட்டுப் போறேன். நீங்க, உங்க வீடு, உங்கம்மா, உங்க ஊருன்னு கட்டிட்டு அழுங்க…” புதிதாக ஒரு தர்க்கத்தை தொடர, ‘ஐயோ’ என கதறினார் சோலையம்மாள்.

முடிந்து போனவைகளை நினைத்து வேதனைப்படுவதை விட எதிர்காலத்தை சீர்படுத்திக் கொள்வதே அறிவான செயலென்று நினைத்தாலும், தாயின் மனம் தனது ஆதங்கங்களை, குற்றங்களாகச் சொல்லிக்காட்டி மனதின் ஆத்திரங்களை தணித்துக் கொண்டது.

கணவனும் மாமியாரும் மாற்றி மாற்றி பலவாறு சமாதானம் பேசியதில் சற்றே சகஜமானார் காஞ்சனா. ஆனால் புதிதாக அவர் கையில் எடுத்திருந்த கண்டிப்பான தோரணை, அதட்டல் மொழிகள் மட்டும் மாறவேயில்லை.

அந்த மாற்றம்தான் அந்தக் குடும்பத்தை பழைய நிலைக்கு மீட்டெடுத்தது. சகஜமாக்கியதும் கூட… எந்த நிமிடம் யார் சோர்ந்து அமர்ந்தாலும் அதட்டி உருட்டி இயல்பாக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டார் காஞ்சனா.

தந்தையின் துணையோடு ஸ்வாதி பயிற்சி வகுப்பிற்குச் சென்று வர ஆரம்பித்தாள். தினந்தோறும் செல்லும் வகுப்பில் அறிமுகமாகிய புது தோழமைகளுடன் பேச்சு, பாடத்தின் சந்தேகங்களை தானே முன்வந்து ஆசிரியரிடம் கேட்கும் ஆர்வம் என மெதுமெதுவாக வாழ்க்கை மாறத் தொடங்கியது.

பயிற்சி வகுப்பில், நண்பர்கள் வட்டத்தில், ‘ஆதி’ என அடையாளப்படுத்தப்பட, அதுவே அவளின் மனதிற்கும் பிடித்துப் போனது. வெளியுலக அனுபவத்தில் பல புதுமைகளை கற்றுக் கொண்டாள். பயந்து ஒதுங்கும் ஸ்வாதியின் சாயலை அறவே வெறுத்தாள்.

அதன் தொடக்கமாக கட்டுப்பெட்டியாக தன்னை அடையாளம் காட்டும் சேலை கட்டுவதை அறவே ஒதுக்கி வைத்தாள். எந்த நேரமும் சல்வார், லாங்ஸ்கர்ட் என நடை உடை பாவனைகளில் மாற்றம் வர, அவளின் மாற்றத்திற்கு யாரும் தடை சொல்லவில்லை.

ஏழாம் மாதத்தில் பேத்திக்கு வளைகாப்பு நடத்திப் பார்க்க ஆசைப்பட்டார் சோலையம்மாள். ஊரும், குடும்பச் சூழ்நிலையும் சற்றும் ஒத்துப் போகவில்லை. அதோடு விஸ்வநாதனும் பிடிவாதமாய் மறுத்து விட்டார்.

“அம்மா… அம்மா, கை வச்சு பாரேன், மிக்கி உள்ளே இருந்து ஜம்ப் பண்றான்.” சந்தோசத் துள்ளலுடன், காஞ்சனாவின் கையை தன் வயிற்றில் வைத்துக் காட்டினாள் விஸ்வாதிகா. வயிற்றுப் பிள்ளையும் தாயின் கருவறையில் அழகாய் உதை கொடுத்து தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது.

“என் பேரனுக்கு நீ கொடுக்குற சாப்பாடு பத்தலையாம் செல்லம்மா… இன்னும் நாலு வாய் அதிகமா சாப்பிடு!” காஞ்சனா விளையாட்டு பேச்சிலும் அதட்டல் போட,

“அப்படியா அப்பத்தா?” எப்போதும் போல் புரியாமல் கேட்டாள்.

“அவனுக்கும் பசிக்குது தங்கம். வளர்றான் இல்லையா… அதான் அம்மாவை எட்டி உதைச்சு கேக்குறான் என் பேராண்டி!” கொஞ்சியபடியே அவளின் வாயில் உணவை வைத்தார் சோலையம்மாள்.

வயிற்றுப் பிள்ளையோடு பேத்தி பேசும் பொழுதுகளில் பாட்டியும் சேர்ந்து கொண்டு சோகங்களை மறக்க ஆரம்பித்தார். படிக்கும்போது கூட குழந்தையுடனான அவளது பேச்சுகள் தொடர்ந்த வண்ணமிருக்கும்.

“இந்த பாயிண்ட்ஸ் மறக்காம எழுதுறோம். டெஸ்ட்டுல ஃபுல் மார்க் வாங்குறோம், சரியா மிக்கி? அப்பப்போ நீதான், எனக்கு  ஞாபகப்படுத்தணும்.” இவள் பேசுவதைப் பார்த்து மீண்டும் மனநல ஆலோசனைக்கு அழைத்துச் சென்றார் விஸ்வநாதன்.

“அவ போக்கல விட்டுடுங்க சார்… நடந்ததை நினைச்சு மூலையில ஒடுங்கி உக்காராம இருக்கிறதே பெரிய விஷயம். உங்க பொண்ணு அதுக்கும் மேலே அப்படியொரு வாழ்க்கையே வாழலன்னு தன்னோட மனசுல ஆழப் பதிய வைக்க முயற்சி எடுக்கறாங்க… அவங்களோட வலியை வெளியே சொல்லிக்கத் தெரியல. அதே போல அதிலிருந்து வெளியே வர்றதையும் அவங்களால உணர முடியல. வளர வேண்டிய பொண்ணு, போகப்போக இயல்புக்கு வந்துடுவாங்க!” பெற்றவருக்கு தான் மருத்துவர் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.  

உண்மையில் அவளால் வலிகளை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் போனது. ஒன்பதாம் மாத இறுதியில் கர்ப்பகால யோகா, மருந்துகள், முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் பிரசவ வலியோ, சுகப்பிரசவத்திற்கான அறிகுறியோ அவளுக்கு தென்படவே இல்லை.

மாறாக குழந்தையின் தலை கீழிறங்கி நஞ்சுக்கொடியில் சுற்றும் அபாயத்தில் இருக்க அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சையில் குழந்தையை வெளியில் எடுத்தனர்.

விஸ்வாதிகா எதிர்பார்த்தபடியே ஆண்குழந்தை பிறந்தது. அவள் வைத்த, ‘மிக்கி’ என்ற செல்லப்பெயரே ஸ்திரமாக, மகனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளத் தொடங்கினாள்.

பயிற்சி வகுப்புகள், படிப்பிற்கு பிறகான நேரங்களை எல்லாம் மகன் ஆக்கிரமித்துக் கொண்டான். குடும்பத்தில் மீண்டும் சந்தோசத்தின் சாயல் எட்டிப் பார்க்க, விஸ்வநாதன் தனது தொழிலை கவனிக்கத் தனியாக சென்னைக்கு சென்று வர ஆரம்பித்தார்.  

குழந்தைக்கும் முழுதாய் ஏழு மாதங்கள் முடிவடைந்திருந்தது. விஸ்வாதிகா நல்ல முறையில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வினை எழுதி முடித்திருந்த பிறகு, மருத்துவ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் அவளை சேர்த்து விட்டிருந்தார் விஸ்வநாதன்.

படிப்பின் மீதிருக்கும் மகளின் ஆசையை மனதில் வைத்தே அவளை மருத்துவம் படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார். அவரின் ஆசைக்கு செவிசாய்த்து மீண்டும் படிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள் விஸ்வாதிகா.

“சென்னையில தான் நல்ல காலேஜ் இருக்கு. நீ ஹாஸ்டல்ல தங்கணும். இல்லன்னா, நாம எல்லாரும் சென்னைக்கு ஷிஃபிட் ஆகணும். என்ன பண்ணலாம் செல்லம்மா?” அவளிடமே ஆலோசனை கேட்கவும், முதன்முறையாக தன்னை முன்னிறுத்தி குடும்பத்தை யோசிக்க ஆரம்பித்தாள்.

“நான் ஹாஸ்டல் போயிட்டா, மிக்கி அழுவான்ப்பா!” அக்கறையாய் யோசித்தவளின் வயது பத்தொன்பது.

“யாரு சொன்னா? என் ராஜா பையன் ஜோரா இருப்பான். நீதான் அழுவேன்னு சொல்லு!” காஞ்சனா நடப்பை கூற ‘ஆமாம்’ என அசடு வழிந்தாள்.

அவளுக்காகவே மீண்டும் சென்னைக்கு குடும்பத்தை மாற்றிக் கொள்ளும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவென விஸ்வநாதன் சென்னைக்கு சென்றிருக்க, இவளும் பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்த நேரத்தில் இளமாறனின் குடும்பத்தினர் அடாவடியாக வீட்டினுள் நுழைந்தனர்.

மேல்முறையீட்டில் சொந்த ஜாமீனில் தணிகாசலமும் கந்தனும் வெளியில் வந்திருக்க, மருதாயி, பஞ்சவர்ணத்தை அழைத்துக் கொண்டு, தங்களின் பேரனை அழைத்து செல்ல வந்திருப்பதாகக் கூறி அந்த வீட்டுப் பெண்களை அதிர வைத்தனர்.

“நாங்க பிரச்சனை பண்ண வரல… எங்க குடும்ப வாரிசை தூக்கிட்டுப் போக வந்திருக்கோம். எங்க வீட்டுப் புள்ள எங்க வீட்டுல தான் வளரணும்னு கோர்ட்டுல இருந்தும் உத்தரவு வாங்கிட்டுத்தான் வந்திருக்கோம். எதுவும் பேசாம குழந்தையை கொடுங்க!” மிரட்டலாக கேட்டு நின்றனர்.

“அவ பெத்த குழந்தை மேல, அவளுக்கே உரிமையில்லன்னு சொல்றது நியாயமா? அந்த குழந்தைதான் அவ உலகமே… பிரிச்சுட்டு போகாதீங்க, என் பேத்தி உசிரையே விட்ருவா!” காலில் விழாத குறையாக கெஞ்சினார் சோலையம்மாள்.

“உங்க பேத்திக்கு வயசிருக்கு, அழகிருக்கு. மறுகல்யாணம் பண்ணிட்டு இன்னொரு குழந்தைய பெத்துக்கச் சொல்லுங்க… ஆனா எங்களுக்கு வாரிசுன்னு சொல்ல, இந்த ஒத்த புள்ள தானே! புருசனை காட்டிக் கொடுத்தவளுக்கு பிள்ளை மட்டும் இனிக்குதா? பிரச்சனை பண்ணாம குழந்தையை கொடுங்க… இல்லன்னா, வேற விதமா பேச வேண்டி வரும்.” பூடகமாகப் பேச அவர்களுக்கோ புரியவில்லை.

“நீங்க பிள்ளையை கொடுக்கலன்னா இந்த குழந்தை என் பையனுக்கு பொறந்ததில்லன்னு உங்க பேத்தியை விட்டு எழுதிக் கொடுக்கச் சொல்லிடுங்க… நாங்க விலகிடுறோம்.” படிக்காத பாமர மக்களின் வக்கிரப்பேச்சினை அவிழ்த்து விட்டு, பத்திரத்தையும் நீதிமன்ற உத்தரவையும் ஒன்றாகவே முன்வைக்க, மாமியாரும் மருமகளும் கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.

காலநேர அவகாசம் கூட கொடாமல், நின்ற பிடிவாதத்தில் பிள்ளையை கேட்கும்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. தொலைபேசி மூலம் விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்க, அவரும் லவுட் ஸ்பீக்கரில் பதிலுக்கு பதில் பேசினார்.

“உங்க வீட்டு பிள்ளை இல்லைன்னு என் பொண்ணை விட்டு எழுதிக் கொடுக்கச் சொல்றேன். இந்த ஊரோட எங்க உலகம் முடியல… எனக்கு ரெண்டு பிள்ளைங்கன்னு, என் வீட்டுப் பிள்ளையா வளத்துட்டு போறேன். நீங்க கெளம்பலாம்.” விஸ்வநாதனின் பதிலில் வந்தவர்களுக்கு மூக்குடைந்து போனது.

அடுத்த ஒரு மணிநேரத்தில் பேச்சு வார்த்தைக்கு மசியாத நிலையில் ரவுடிக் கும்பலை விட்டு குழந்தையை தூக்கிச் சென்றனர். இடையில் தடுக்கச் சென்ற சோலையம்மாளும் காஞ்சனாவும் பயங்கரமாகத் தாக்கப்பட, இருவரும் அதே இடத்தில் மயக்கமடைந்து விழுந்தனர். வீட்டையும் சூறையாடி அலங்கோலமாக்கி விட்டுச் சென்றிருந்தனர்.

வகுப்பில் இருந்த விஸ்வாதிகாவிற்கு முதலில் செய்தி வந்தடைய, முதலில் அதிர்ந்து, பிறகு சுதாரித்து செயலில் இறங்கினாள். விரைந்து ஆம்புலன்சில் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகே தந்தைக்கு அழைத்து இங்குள்ள நிலவரத்தை கூறினாள்.

மீண்டும் பிரச்சனை, காவல் நிலையம், நீதிமன்றம் என யோசிக்கும் போதே விஸ்வநாதன் முழுதாய் சோர்ந்து போனார். அவசரக்கால வழக்காக தாக்கல் செய்தும் நீதிமன்றம் எதிர்தரப்பினருக்கு கொடுத்த உத்தரவை வாபஸ் பெற்றுக்கொள்ள மறுத்தது. அந்த வகையில் பணம் பேசியிருந்தது.

பெண்ணின் வயதை, எதிர்கால வாழ்க்கையை உத்தேசித்தே இந்த தீர்ப்பினை கூறியதாக வழக்கினை முடித்து வைத்தது. அத்துமீறி வீட்டில் நுழைந்து துவம்சம் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி, நஷ்டஈடும் வழங்குமாறு  எதிர்தரப்பிற்கு ஆணை  பிறப்பிக்கப்பட அவர்களும் தப்பாமல் செய்து முடித்தனர்.

மழலையில்லாத வீட்டின் வெறுமை விஸ்வாதிகவிற்கு மிகக் கொடுமையாகத் தோன்றியது. அடிபட்ட இருவருக்கும் எலும்புமுறிவு, சிராய்ப்புகள் என மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

சோலையம்மாளின் நிலை சற்று கவலைக்கிடமாத் தான் இருந்தது. பேத்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தனக்குள்ளே குமுற ஆரம்பித்திருந்தார். ‘எல்லாம் தனது தான்தோன்றித்தனமான முடிவால் தான்.’ என்ற குற்ற உணர்வும் வயோதிகமும் சேர்ந்து அவரது இயக்கத்தை மெல்லமெல்ல குறைத்துக் கொண்டே வந்ததில் பேச்சு நின்று போய் மூச்சு மட்டுமே ஏறியிறங்க ஆரம்பித்தது.

அம்மாவும், பாட்டியும் மருத்துவமனையில், தந்தையும் நீதிமன்றமென அலைந்து கொண்டிருக்க, தனிமையில் முதன்முதலாக உழன்றவனில் மனம் அத்தனை நல்ல விதமாய் யோசிக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் வாழ்க்கையே வெறுத்துப் போனது.

தான் விவரம் தெரிந்து பாசம் வைத்த ஜீவனை, கருவில் உருவான நாள் தொடங்கி, பிறந்து ஏழு மாதங்கள் வரை அவனையே மூச்சாக நினைத்து வாழ்ந்ததெல்லாம் பொய்யாகிப் போனதில் முழுதாய் மனமுடைந்து போனாள்.

‘எதனால் இப்படி? எது தனது இத்தனை வேதனைக்கும் காரணமாகிப் போனது?’ என்றெல்லாம் தன்னைப் பற்றிய சுயஅலசலில் பக்குவப்படட்ட பெண்ணாக யோசித்துப் பார்க்க, குடும்பத்தினரின் அசட்டையான முடிவுகள் நன்றாகவே புலப்பட்டன.

அவர்கள் மேல் அடங்காத கோபம் கொண்டாள். ஆனால் அதை வெளிப்படுத்தத் தான் முடியவில்லை. ‘அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையாகத் தான் இப்படி அடிபட்டு வேதனைப்படுகிறார்களோ’ என்ற பச்சாதாபமும் தோன்ற முழுதாய் குழம்பினாள்.

எந்தத் தவறும் செய்யாமலேயே அனைத்தையும் இழந்துவிட்ட பற்றற்ற நிலையை உணர்ந்தாள். வாழ்வின் வெறுமையும் வெறுப்பும் உயிரோடு வாழ்வதையே பெரும்பாரமாக உணர வைத்தது.

‘எனக்காக நன்மை செய்வதற்கும் யாருமில்லை… அழகான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கும் நல்லதொரு துணையுமில்லை.’ விரக்தி உணர்வு நிமிடத்திற்கு நிமிடம் கூடிப்போனதில், யோசிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து விட்டாள்.

வீட்டுக் கிணற்றில் நடுநிசிப் பொழுதில் தண்ணீருக்குள் விழுந்த பெரும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டாள்.

உணர்ச்சிவசப்பட்டு அவசரக்கோலத்தில் சுயபச்சாதாபத்தில் எடுத்த முடிவென்று அறிவுக்கு தெரிந்தாலும், ஏனோ உயிர் பிழைத்ததை நினைத்து அவளால் அமைதிகொள்ள முடியவில்லை.

உடனே காப்பாற்றி விட்டதால் உடலில் எந்தவொரு பின்னடைவும் ஏற்பட்டிருக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே அவளுக்கு மயக்கம் தெளிய வைத்து சகஜமாக்கும் வேலையை அக்கம் பக்கத்தினர் மேற்கொண்டனர்.

“ஏண்டா செல்லம்மா?” என்றதற்கு மேலே விஸ்வநாதனுக்கு மகளிடம் கேட்பதற்கு வார்த்தைகள் வரவில்லை.

வீட்டுப் பெண்களின் பொறுப்பில் மட்டுமே மகளை விட்டு பழக்கியவரால் சட்டென்று அவளை அருகாமையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று யோசிக்கத் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்களுக்கு உடல் வலியென்றால் இவளுக்கு மனவலி. அதை மறக்க வைக்க இவளுக்காக என்ன செய்தோம்?

‘மகளைத் தனியாக விடாமல் தன்னருகில் வைத்துக் கொண்டிருந்தால் இந்த முடிவிற்கு சென்றிருக்க மாட்டாளோ!’ என்ற குற்ற உணர்வில் மேலும் குமைந்து போனார்.

இத்தனைக்கும் மகளின் மேல் உயிரையே வைத்திருக்கிறார். ஆனாலும் அவளின் விசயத்தில் தவறுக்கு மேலே தவறிழைத்து மகளை விட்டு தூரமாகிப் போகிறார்.

“என்னை ரொம்ப பாவியாக்கிடாதே டா…” மகளின் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதே விட்டார் விஸ்வநாதன்.

“சாரிப்பா… இல்லப்பா!” என்றவளுக்கும் அதே அழுகையே துணை வந்தது.

“மிக்கி இல்லாம என்னால இருக்க முடியாதுப்பா, அதான்…” தந்தை கேட்காமலேயே காரணத்தை கூறி முடித்தாள்.

“ஒஹ்… நீயில்லாம என்னாலயும் வாழ முடியாதுடா… நானும் இதே முடிவை எடுத்துடவா? நானில்லாம உங்கம்மாவுக்கும் வாழத் தெரியாது. அவளும் அதே முடிவுக்குத்தான் வருவா.. மிஞ்சிப் போனா உன் பாட்டி… அவங்களுக்குதான் இப்பவோ அப்பவோ…” என மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பிக்க,

“இனி இப்படி முடிவெடுக்க மாட்டேன்ப்பா…. உங்கமேல பிராமிஸ்.” அவசரமாய் சத்தியம் செய்து, தந்தைக்கு ஆறுதலைத் தந்தாள். அந்த நேரமே தனது தவறினையும் உணர்ந்தாள் விஸ்வாதிகா.

மறுநாள் பேத்தியின் சோர்ந்த முகம் நடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ என்னவோ, இயலாமைப் பெருமூச்சுடன் பேத்தியை கண்களில் நிறைத்துக் கொண்டு தனது இறுதி மூச்சினை இழுத்து உயிரை விட்டார் சோலையம்மாள்.

அதன்பிறகு மீண்டும் மனநல ஆலோசனையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள் விஸ்வாதிகா. தான் வாழவேண்டும், தனக்காக மட்டுமே வாழ வேண்டுமென்கிற வீம்பான மனப்போக்கில் தன் மனம் சொல்வதை மட்டுமே செயலாக்க ஆரம்பித்தாள்.

“நான் எஞ்சினியரிங் படிக்கிறேன். என்னால ஒரு இடத்துல நிதானமா உக்காந்து வேலை பார்க்க முடியாது. என்னோட கடந்த காலத்தை நான் நினைக்காம இருக்கணும்னா, ஒரு இடத்துல நிக்காம நான் ஓடிகிட்டே இருக்கணும். அதுக்கு இந்த புரஃபசன் தான் சரி வரும்னு நினைக்கிறேன். வெளியுலகத்துல என்னோட பார்வை விரியணும். உங்க கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ஸ் எல்லாமே எனக்கு கைட் பண்ணுங்க!” விடாப்பிடியாக நின்று சிவில் எஞ்சினியரிங் படிப்பை எடுத்தாள்.

புதிது புதிதாய் சிந்திக்க ஆரம்பித்தாள். படிக்கும் காலத்திலேயே பல பயற்சிகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு தகுதிகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினாள். மறந்தும் இதமான சூழ்நிலைகளை, அன்பான பேச்சு வார்த்தைகளை பேசுவதைக் கூட தவிர்த்தாள்.

படிப்பும் தந்தையின் தொழிலும் மட்டுமே அவளின் கவனத்தில் நிலைத்து நின்றது. தன்னையே மறந்து போகுமளவிற்கு தனது தினசரிகளை மாற்றியமைத்துக் கொண்டாள்.  

வீட்டில் இருக்கும் சொற்ப நேரத்தில் மட்டுமே அமைதியை விரும்பினாள். இசையை ரசிக்க ஆரம்பித்தாள். இவளின் விருப்பத்திற்காகவே குடும்பத்தை மதுரைக்கு மாற்றிக் கொண்டனர். 

ஊருக்குள் சற்றுத் தள்ளிய திருப்பாலை பகுதியில் அழகான அமைதியான பங்களாவில் தனது இஷ்டம் போல் வாழ்க்கையை  வாழப் பழகிக் கொண்டாள். மதுரை பெருநகரமும் இவளுக்கான அடையாளத்தை அளித்து முற்றிலும் புதியவளாக இவளை நிமிர்ந்து நிற்கச் செய்தது. 

இவையெல்லாம் ஓய்ந்து மீண்டும் ராம்சங்கரை திருமணம் முடிக்கும் பொழுது முழுதாய் பதினோரு வருடகள் முடிந்து முப்பது வயதைத் தொட்டிருந்தாள் விஸ்வாதிகா.

“எப்படியோ வேதனைகளை கடந்து என் பொண்ணு நிமிர்ந்து நின்னா போதும்னு அவ போக்குலயே விட்டது தப்போன்னு இப்ப தோணுது மாப்ள…” தனது அருகில் ராம்சங்கரை அமர்த்திக் கொண்டு அனைத்தையும் சொல்லி முடித்தார் விஸ்வநாதன்.

“அவ மீண்டு வர்றதுக்கு என்ன செய்யணுமோ அதை தானே பண்ணியிருக்கீங்க, இதுல உங்கமேல தப்பென்ன இருக்கு அங்கிள்?” ராம்சங்ககர் ஆறுதலாய் கேட்க,

“ஆரம்பத்துல அவ போக்குல அடாவடியா மாற்றம் வரும்போதே ஆறுதலா பேசி கட்டுப்படுத்தி இருக்கணும். எல்லா விஷயத்துக்கும் துணிஞ்சு நிக்கறான்னு பெருமையா பார்த்து அவ விசயத்துல தப்பு பண்ணிட்டேன். ம்ப்ச்… நல்ல அப்பாவா இருக்க முடியாம இன்னும் அவகிட்ட தோத்துட்டு தான் இருக்கேன்.” ஆற்றாமையில் சோர்ந்து ஒலித்தது அவரின் குரல்.

“அப்படியில்ல அங்கிள்… அவ நிமிசத்துக்கு நிமிஷம் பயப்படுறா, எங்கே அவளை யாரவது பாவமா பார்த்து அவளோட பழைய வாழ்க்கையைப் பத்தி கேட்டு வேதனை படுத்திடுவாங்களோன்ற பதட்டத்தை மறைச்சுக்க தான் இப்படியெல்லாம் திமிரா நடந்து எல்லாரோட கவனத்தையும் மாத்துறானு தோணுது. நீங்க அவமேல வச்ச நம்பிக்கையும், அவளுக்கு கொடுத்த சுதந்திரமும் அதை செய்ய வச்சிருக்கு.” என்றவனை, ‘அப்படியா’ என்ற பார்வையில் பார்த்தார்.

“நாம தோத்துப்போற இடத்துல கூட ஈகோல பேசி நம்மை மறைச்சுக்கிறதில்லையா… அதுப்போலத் தானே அங்கிள்!” ராம்சங்கர் தனது சொந்த அனுபவத்தை மனதில் நிறுத்திச் சொல்ல, யோசித்து பார்த்து சரியென்று மனமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

ஏற்கனவே நொந்து போன மனநிலையோடு இருப்பவரிடம் மகளின் கறாரான பேச்சினைக் கூறி மேலும் கலவரப்படுத்த விரும்பவில்லை. ஏதோ அவசரத்தில் மனைவியைப் பற்றிய கடந்த காலத்தை இவனும் கேட்டிருக்க, அவரும் நடந்தவைகளை எல்லாம் ஒப்பித்து விட்டார். இதே போதுமென்ற நிலையில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மனமெங்கும் மனைவியின் நிலையை அலசிப் பார்த்து ஓய்ந்து போனான். கருவில் சுமந்து ஏழுமாதங்கள் மட்டுமே வளர்ந்த பிள்ளையின் நினைவை மறக்க முடியாமல் தனது சுயத்தையே மாற்றிக்கொண்டு இத்தனை வருடங்களாக வாழ்கிறாள்.

இவளுக்கே இந்த நிலையென்றால் கைக் குழந்தையாக இருந்த பொழுதில் இருந்தே கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக தனது உயிராக நேசித்து வரும் குழந்தைகளின் பிரிவினை பெண்ணின் மனம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும்? அந்த அழுத்தத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளுமா… அல்லது அதிலேயே உழன்று தனது சுயத்தை தொலைத்துக் கொள்ளுமா?

நினைத்துப் பார்க்கவே மனம் கிலி பிடித்துக் கொண்டது. காரணமே இல்லாமல் அண்ணன் அண்ணியின் முகம் மனக்கண் முன்வந்து, ‘உன் மனதிற்கு நியாயமெனப் பட்டதைச் செய்.’ என அறிவுறுத்துவது போல நிற்க, தலையை உலுக்கிக் கொண்டான்.

‘என் குழந்தைகளை என் பொறுப்பில் மாற்றிக் கொள்ளத் துடிக்கும் தனது முயற்சி வெற்றி கொள்ளுமா? அண்ணனின் குடும்பத்தை சிதறடிக்குமா?’ மனமெங்கிலும் குழப்பக் கேள்விகளின் கூச்சல் ஓங்கி ஒலிக்க நிதானமில்லாமல் வீட்டிற்கு வந்தடைந்தான் ராம்சங்கர். 

  

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!