பூவுக்குள் பூகம்பம் 10

பூவுக்குள் பூகம்பம் 10

பூவுக்குள் பூகம்பம் – 10

 

நீண்ட நேரம் தனது முகத்தையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தவரை நிமிர்ந்த பாராமல் யோசிக்கும் பாவனையில் கீழே பார்த்தபடியே கேண்டீன் டீயை மிடறு மிடறாக விழுங்கினான் ப்ருத்வி.

எதிரே இதுவரை செழியனால் எடுக்கப்படாமல் இருந்த தேநீரை செழியனுக்கு அருகே நகர்த்தி, “டீ குடிங்க சார்” என்றான்.

     எந்த பதிலும் பேசாமல் நான் கேட்டதற்கு பதில் எப்போது சொல்லப் போகிறாய் என்பதுபோல பார்வையைத் தாங்கி தனது முகத்தில் அவரின் பார்வை தேங்கியிருப்பதை பெருமூச்சோடு கடந்தவன், “சார்… பொண்ணு பாத்திட்டோம்.  இல்லைங்கறதையெல்லாம் மீறி உங்ககிட்ட ஓபனா ஒரு விசயம் சொல்லணும்” தான் கூறப்போவதை அவர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதில் இருந்தது.

     பீடிகையோடு துவங்கியவனை பதற்றம் தாங்கிய மனதோடு, “சொல்லுங்க தம்பி” என்றார் செழியன்.

சாதகமான பதிலுக்காக வாய்ப்பு குறைந்து போனதை மனம் உணர… சுற்றிலும் பார்வைச் செலுத்தி அதில் தனது பதற்றத்தை குறைக்க முனைந்தார் செழியன்.

“உங்க பொண்ணுதான் என்னோட எதிர்காலம்னு அத்தனை தடவை வந்து நேரடியாவும், வேற ஆளுங்களை வச்சும் நான் கேட்டதெல்லாம் உண்மைதான்!” ப்ருத்வியின் பேச்சைக் கேட்டு இடையிட்ட செழியன்,

“தம்பி… அப்ப நீங்க கேக்கு முன்ன நான் அவங்களை வரச் சொல்லிட்டேன்.  ஒரே தொழில்ல இருக்கறவங்க…” தயங்கி விவரிக்க,

“அப்ப ஏன் அவங்களை விட்டுட்டு வந்து இப்ப எங்கிட்டப் பேசுறீங்க?” சுளீர் என வந்தது கேள்வி.

“அது… அது… நாந்தான் லேட்டா பொண்ணோட மனசு தெரிஞ்சு உங்ககிட்ட வந்து பேசறேன்” திணறலோடு கூறினார் செழியன்.

“உங்க பொண்ணு இதுக்கு முன்ன என்னைப் பத்தி, எங்க காதலைப் பத்தி உங்கட்ட எதுவுமே பேசலையா?” ப்ருத்வி இயலாமையோடு கேட்டான்.

“சொல்லுச்சு… நாந்தான் அவசரப்பட்டுட்டேன் தம்பி” தனது தவறை ஒப்புக்கொண்டு பேசினார் செழியன்.

“நான் உங்க பொண்ணைத் தவிர வேற பொண்ணை கனவுலகூட நினைக்கக்கூடாதுன்னு வாழ்ந்தவன் சார்.  ஆனா…”

“ஆனா… என்ன தம்பி” பதறி ப்ருத்வியின் முகம் பார்க்க,

“உங்க பொண்ணுக்கும் வேற வரனுக்கும் மேரேஜ் ஒப்பந்த ஓலை எப்ப ரெடி பண்ணீங்களோ… இனி கவி எனக்கில்லைனு அன்னைக்கே முடிவெடுத்திட்டேன்!” சட்டென தனது எண்ணத்தை போட்டுடைத்திருந்தான் ப்ருத்வி.

“அது இனி செல்லாது தம்பி.  எல்லாத்தையும் கேன்சல் பண்ணியாச்சு.  வேணுனா… அந்தக் காப்பிகூட நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” அவசரமாக மொழிந்தார் செழியன்.

“அது இனி எனக்குத் தேவையில்லை சார்!” விட்டேற்றியாக பதில் கூறினான் ப்ருத்வி.

“தம்பி நீங்க அப்டியெல்லாம் சொல்லக்கூடாது” செழியன் கெஞ்சலாகவே பேச,

“கஷ்டமாத்தான் இருந்துச்சு.  இன்னும் அப்டித்தான் இருக்கு.  ஆனா வேற ஒருத்தரோட பரிசம் போட்ட பொண்ணு… அவனோட பாதிப் பொண்டாட்டினு சொல்லுவாங்க!” ப்ருத்வி.

“தம்பி இன்னும் பழைய பஞ்சாங்கமா யோசிக்கறீங்களே…! அதுலாம் இப்ப யாரும் போடுறதே இல்லை.  மனம் மனம் சாச்சியாத்தான் எல்லாம் பண்ணிக்கறாங்க!” செழியன் புரிய வைத்திடும் முயற்சியில் அங்கலாய்ப்போடு கூறினார்.

“இன்னொருத்தவனுக்கு பேசி முடிச்ச பொண்ணை ஏத்துக்கற அளவுக்கு எனக்கும் சரி… எங்க வீட்ல உள்ள ஆளுங்களுக்கும் சரி… சொந்தத்துல உள்ள மனுசங்களுக்கும் பெரிய மனசில்லை சார்!” சட்டென தனது எண்ணத்தைக் கூறியிருந்தான்.

“நிச்சயம்கூட இன்னும் பண்ணலை தம்பி!” செழியன் எப்படியேனும் தனது மகளை ப்ருத்விக்கு கொடுத்திடும் எண்ணத்தில் சில விசயங்களை எடுத்துரைக்க,

“வேற ஒருத்தவனுக்கு பேசி… பூ வச்ச பொண்ணை… இவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு என் முதுகுக்கு பின்ன நான் சாகற வரை பேசுவாங்களே சார்” ப்ருத்வி தனது பக்க அசௌகர்யத்தை எடுத்துக் கூறினான்.

அத்தோடு, “அதனால என்னை மன்னிச்சிருங்க.  உங்களுக்கு ஏத்த மாதிரி வேற எதாவது ஏற்பாடு பண்ணிக்கங்க” என்று திட்டவட்டமாகப் பேச,

“கொஞ்சம் யோசிச்சுகூடச் சொல்லுங்கப்பா… உங்களுக்கு மூத்தவளைவிட இரண்டு பங்கு எல்லாத்துலையும் அதிகமாவே செஞ்சிறேன்” செழியன் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவன் வேறு திசையில் பார்த்தபடியே, “யோசிக்க இனி எதுவுமே இல்லை சார்.  நாங்க இதுவரை மிடில்கிளாஸாவே இருந்துட்டோம்.  இனியும் அப்டியே இருந்தா நல்லதுன்னு எங்கப்பாவும் எங்க தகுதிக்கு ஏத்த மாதிரி பேசி முடிவு பண்ணிட்டாரு.  அதனால… என்னை தயவுசெய்து இது விசயமா தொந்திரவு பண்ண வேணாம்.” என்றவன் எதிரில் இருந்த டீயை எடுத்து செழியனின் அருகே வைக்க,

“வேணாந் தம்பி.” என எழுந்த செழியன்,

ப்ருத்வியிடம் அதற்குமேல் என்ன பேச என்பது புரியாமல், “நான் கிளம்பறேன்.  நல்லா இருப்பா…” அதற்குமேல் செழியனால் இறங்கிப் பேச, இறங்கிப் போக முடியும் என்று தோன்றவில்லை.

செழியனுக்கு தனது அவசர முடிவால் எழுந்த பிரச்சனைகள் இது எல்லாம் என்பது தாமதமாகவே புரிய வந்தது. ஆனால் அனைத்தையும் பணத்தைக்கொண்டு சரிசெய்துவிடலாம் என்கிற செழியனது நம்பிக்கை இன்று ஆட்டம் கண்டிருந்தது.

‘ஒரு சின்னப்பய எம்புட்டுத் தெளிவா பேசுறான்.  யோசிக்கிறான்.  நாந்தான் அவசரப்பட்டுட்டேன்போல…’ இதையே நினைத்தபடி இராமேஸ்வரம் வந்து சேர்ந்தவருக்கு, கடைக்குச் செல்லும் எண்ணமில்லை. நேராக வீட்டிற்கு வந்திருந்தார்.

வேதனையைச் சுமந்தபடி வந்தவர் வந்ததும் மனைவியிடம் விசயத்தைக் கூற, “கொஞ்சம் ஆறப் போடுங்கன்னா… விடாம இதையே தொங்கிக்கிட்டுத் திரியறீங்க?” என்று கேட்டவர்,

“ஒரு வருசம் போகட்டும்.  அப்புறம் எதுனாலும் பாக்கலாம்.  பேசலாம்.  இப்ப என்ன அவசரம்?” என்றார் மதி கணவனிடம்.

“பாம்பா… பழுதான்னே தெரியாம நம்பி எதையும் செய்ய பயமா இருக்கே” என்றார்.

“இத்தோட விடுங்க… நீங்க சொல்றது சௌமிக்கும் கேட்டுருச்சுல்ல.  அவ என்ன முடிவெடுக்கறான்னு பாத்துட்டு அப்புறம் யோசிப்போம்” இத்தோடு இந்தப் பேச்சை எடுக்க வேண்டாம் என்கிற ரீதியில் அங்கிருந்து வேகமாக அகன்றிருந்தார் வசுமதி.

சௌமிக்குத்தான் அடிமேல் அடி.  அவளால் தந்தை கூறிய விசயத்தை நம்ப முடியவில்லை.  ஏனெனில் திருமணத்திற்கு முன்பு வரை கஜினி முகமதுவைப் போல போராடிய ப்ருத்வியின் போராட்டம் பற்றித்தான் அவளுக்குத் தெரிய வரவில்லையே.

அலைபேசியை தாயிடம் அனுமதி கேட்டு வாங்கியவள் பெற்றோர் முன்பாகவே ப்ருத்விக்கு அழைத்தாள்.

இரண்டு முறை முழுவதுமாக அழைப்பு சென்று ஓய்ந்தது.  ஆனால் சௌமிக்கு பதற்றம் கூடியது.  ‘நான் பேசுனா ஒரே ரிங்க்ல எடுக்கற ப்ரூ என்னோட காலை அட்டெண்ட் பண்ணலை’ என்கிற நினைப்பே அவளைக் கொன்று கூறுபோட்டது.

விடாமல் அடுத்தடுத்து அழைத்தாள். எடுத்தவன், “எல்லாம் உங்கப்பாகிட்ட பேசிட்டேன்.  வேலை இருக்கு.” என்று வைத்துவிட்டான்.

அதற்குமேல் சௌமிக்கு அந்த விசயத்தைத் தாங்க முடியாமல் அழுகை பீறிட்டு வர, அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவளைப் பொறுத்தவரையில் ப்ருத்வி தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி அழுது கரைந்தாள்.

மதிக்கும் ப்ருத்வி வந்து செழியனை சந்தித்ததோ, அதன் பிறகு சிலரைக் கொண்டு முன்னிருத்தி சௌமியை தனக்கு பெண் கேட்டதோ தெரியவே இல்லை.

அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறைமை அவளைக் கேலி செய்து சிரித்தது.  தாயை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அறைக்குள்ளாகவே அடைந்து கிடந்தாள்.

நீண்ட நேரம் அழுது கரைந்த மகளைத் தேற்ற வழி தெரியாமல் குட்டி போட்ட பூனையைப்போல நடந்து திரிந்தவர் ரணத்தோடு இருக்கும் காயத்தை நன்கு கழுவி மருந்திட்டால்தானே அது சரியாகும்.  அதனால் மகளின் ரணத்தை கழுவி மருந்திடும் நோக்கோடு மகளை நெருங்கினார் வசுமதி.

“இவனுக்காக நீ செத்திருந்தா… அவன் வேற பொண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோசமா இருந்திருப்பான்.  நீ அவனுக்காக செய்ய இருந்த காரியம் எப்டிப்பட்டதுனு இப்பவாவது புரிஞ்சாச் சரி!” என்று தாய் கூறியதும் தாயின் மடியில் படுத்து தேம்பி அழுதாள் சௌமி.

அத்தோடும் சௌமி விடாமல், கையில் இருந்த அலைபேசி மூலமாக தன்னை மறுப்பதற்கான காரணம் என்னவென்பதை தன்னிடம் கூற முடியுமா என்று கேட்டு ப்ருத்விக்கு குறுஞ்செய்தி அனுப்ப, செழியனிடம் கூறிய விசயத்தை அப்படியே வாய்ஸில் போட்டிருந்தான் ப்ருத்வி.

கூடுதலாக, “உன்னோட காதலை நான் எப்பவுமே டவுட் பண்ணதில்லை.  ஆனா நீ எடுத்த முடிவு ரொம்ப லேட்.

நான் உனக்காக இராமேஸ்வரத்துல வந்து கிடையாக் கிடந்து ஒவ்வொருத்தவங்க கையக் காலப் புடிச்சு கெஞ்சினப்போ எல்லாம் நீ அமைதியா இருந்திட்ட…

அப்போ எங்கூட சேந்து நீயும் போராடியிருந்தா, இன்னைக்கு நிச்சயம் இந்த நிலைமை நமக்கு வந்திருக்காது.

ஆனா… இனி அதைப் பத்திப் பேசறதும் வேஸ்ட்.  அவங்கவங்க வீட்ல காட்டுன பாதையில இனி ட்ராவல் பண்றதுதான் நல்லது.” என்றவன்,

“பழைய மாதிரி ஃப்ரண்ட்ஸா வேணா இருக்கலாம்.” என்று இழுத்தவன், “வேற எதாவது எங்கிட்டக் கேக்கணுமா?” என்றதும், அவனின் குரலில் இருந்த பேதம் பிடிக்காமல்… அழுகையோடு, “பை! தேங்க்ஸ் ஃபார் ஆல்” அதற்குமேல் அவளால் அவனோடு பேச முடியாமல் வைத்துவிட்டாள் சௌமி.

அதற்குமேல் அவர்களின் அந்தரங்கம் பற்றி தாய் முன் பேச அவளால் முடியவில்லை.  தான் இடம் கொடுத்ததால் அவன் தன்னோடு உரிமையாக நடந்துகொண்டான் என்பதும் புரிய அனைத்திற்கும் தானே காரணம் என்றெண்ணி அழுது கரைந்தாள்.

நீண்ட நேரம் அழுகையில் அரற்றியவள், ப்ருத்வியோடு இனி தொடர்பில் இருக்க அருவெறுப்பாக உணர்ந்து, இந்த அலைபேசி இனி தனக்கெதுக்கு என்பதுபோல தாயிடம் போனை ஒப்படைத்துவிட்டாள்.

அனைத்தையும் அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்த மதி, “அடுத்த வாரத்துல இருந்து காலேஜ் போ.  நான் அப்பாகிட்டப் பேசிறேன்” என்றதோடு அதற்காக ஏற்பாடுகளைச் செய்து, மகளை இராமநாதபுரத்தில் இருக்கும் தந்தை வீட்டிலிருந்து கல்லூரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.

ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப்பின் கல்லூரி செல்லத் துவங்கிய சௌமியிடம் பல மாற்றங்கள்.

யூகங்கள் பலருக்கு பலவிதமாக சௌமியைப் பற்றி இருந்தது.  ஆனால் அவளிடம் வந்து பேசவே அனைவரும் தயங்கினர்.

மெட்ரோ சிட்டி அல்ல அது.  என்ன ஒரு விசயமென்றாலும் காட்டுத் தீயைப்போல சட்டெனப் பரவிவிடும்.

பெண்களைப் பெற்றவர்கள் இதுபோன்று பெயர் கெட்ட பெண்களோடு சாதாரணமாகப் பேசினாலும் தன் பெண்ணது எதிர்காலம் பாழாகிவிடும் என பயந்து சௌமியோடு அண்டாமல் இருக்க ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லியே வாயிலைவிட்டு வெளியே அனுப்புவர்.

சௌமி அந்த நிகழ்விற்குப்பின் தனிமரமாகிப் போனாள்.

சில நாள்கள் அவ்வாறே சென்றது. அதன்பின்பெற்றோர் அறியாமல் என்ன ஏது என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிக்கொண்டனர். ஆனால் முன்புபோல யாரும் சௌமியோடு இழையவில்லை.

படிப்பைத் தவிர அவ்வப்போது வரும் ப்ருத்வியின் நினைவுகளோடு நாள்கள் சென்றது.  அவளால் முற்றிலுமாக அவனது நினைவுகளை நீக்க முடியாமல் நாள்கள் கழிந்தது.

ஏக்கமோ கழிவிரக்கமோ தற்போது இல்லை.  அருவெறுப்பும் அவமானமும் மட்டுந்தான் அவளை அலைக்கழித்தது.  அவளால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கரைந்தாள்.  வெளியில் அது தெரியாதபடி நடந்துகொண்டாள்.

முன்பைக் காட்டிலும் தேவையற்ற பழைய நினைவுகள் குறைந்திட, தனது புராஜெக்ட் வேலையில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினாள் சௌமி.

***

     தீர்த்தா இராமேஸ்வரம் வந்தபோது, நிலைமை அனைத்தும் அவனுக்கு சாதகமாகவே இருந்தது.

     செழியன் மாமா வெந்த புண்ணோடு வலம் வருவதை அவரது முகத்தைக் கண்டே கண்டு கொண்டவனால், அதில் வேலைப் பாய்ச்ச நினைத்தாலும் முடியவில்லை.

     விவகாரம் எதுவும் இல்லாதபோது விதண்டாவாதமாக எதுவும் செய்து உள்ளதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தவனாக தாயிடம் பேசச் சொன்னான் தீர்த்தா.

     தேன்மொழியோ, “கொஞ்ச நாள் போகட்டும்.  அப்புறம் பேசலாம்” என்றிட,

     “கொஞ்ச நாளுன்னு நீ சொல்ற கேப்புல வேற எவனுக்காவது பேசி முடிச்சா, உன்னை நான் சும்மா விட மாட்டேன் சொல்லிட்டேன்” வெறியோடு பேசியவனை சமாளித்து,

     “அவ படிப்பு முடியட்டும்.  அதுக்குள்ள நீ இன்னொருவாட்டி வெளிநாடு போயிட்டு வந்திரு.  அப்புறம் கல்யாணத்தை வச்சிக்கலாம்” தேன்மொழி மகனுக்கு யோசனை கூறி மறு பயணம் அனுப்பி வைத்திருந்தார்.

     இடையில் சௌமியிடம் பேச முனைந்தவனை அவள் தவிர்க்கவே எண்ணினாள்.  ஆனால் தீர்த்தா வாரயிறுதி நாளில் ஊருக்கு வந்திருந்தவளிடம், “எதுக்கும் கவலைப்படாத கவி.  நான் எதுக்கு இருக்கேன்.  உனக்கு எல்லாம நான் கடைசிவரை இருப்பேன். போனதை நினைச்சு வருத்தப்படாத… இனி நடக்கிறது எல்லாமே நல்லதாவே நடக்கும்.  நீ வேணா பாரேன்.” பெருந்தன்மையாக நடப்பதுபோல சௌமியிடம் பேசினான்.

     சௌமிக்கு தீர்த்தாவின் பேச்சு ரசிக்கவில்லை.  ஆனாலும் அவனிடம் மறுப்பேதும் கூறாமல் அமைதி காத்தாள்.

     தான் எதாவது தற்போது சொல்லப்போக அதுவே தனக்கு வேறு ஏதேனும் புதைகுழிக்கு இழுத்துச் செல்லலாம் எனப் பயந்து எதுவுமே பதில் கூறவில்லை.

     சௌமியை அருகில் இருக்கும் வரனுக்குக் கொடுப்பதைத்தான் தனது தம்பி விரும்பினான் என்பது நினைப்பில் இருந்தமையால், இன்னொரு முறை வெளிநாட்டு பயணத்தோடு மகனுக்கு உள்ளூரிலேயே எதாவது தொழில் துவங்கி வைக்கலாம் என்கிற முடிவோடு தேன்மொழி செயல்படத் துவங்கியிருந்தார்.

     தற்போது அதைப்பற்றி மகனிடம் எதுவும் கூறவில்லை.

அதே சமயம் செழியன் தேன்மொழியிடம் தனது உள்ளத்து வெம்மை அனைத்தையும் கடை பரப்ப… இதுதான் தனது தம்பியிடம் பேசி சௌமியை தனது மகனுக்கே என்று தீர்மானம் செய்துகொள்ள தகுந்த சமயம் என்றெண்ணிய தேன்மொழி,  “எதுக்கு தம்பி இவ்ளோ யோசிக்கற… இருக்கவே இருக்கான் தீர்த்தா…

உம்மக எம்மகனுக்குத்தான்னு இருக்கும்போது எதுக்கு உனக்கு கவலை.  நானாச்சு” எனும் தமக்கையின் பேச்சில் தொலைந்த நிம்மதி அனைத்தும் கிட்டியதாக உணர்ந்தார் செழியன்.

     “இப்ப அவங்க தாத்தா வீட்ல தங்கிப் படிப்பை முடிக்கட்டும்.  இன்னொரு பயணம் தீர்த்தா போயிட்டு வந்திருவான்.  வந்ததும் கல்யாணத்தை வச்சிக்கிடலாம்” என்று பேச, தமக்கையின் பேச்சில் உண்டான மகிழ்வோடு வீடு திரும்பினார் செழியன்.

***

     வந்தவர் மனைவியிடம் விசயத்தைக் கூற, “நான் பேச ஆரம்பிச்சாலே உங்களுக்கு ஆகாது.  ஆனா இந்த விசயத்தை நான் அப்படியே விட முடியாது.  சௌமி முழுமனசோட தீர்த்தபதியை கட்டிக்க முன்வந்தா மட்டுந்தான் அவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்.

     இல்லை… அவளுக்கு பிடிக்கலைன்னா… வற்புறுத்தி கட்டி வைக்கிற வேலையெல்லாம் இனி வச்சிக்காதீங்க… அவ படிப்பை முடிக்கட்டும்.  அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு பாப்போம்” என தீர்க்கமாக தனது எண்ணத்தை கணவனிடம் உரைத்துவிட்டார் மதி.

     “அப்போ சௌமி வேணாம்னு சொன்னா…” செழியன் இழுக்க,

     “வேணாம்னு சொன்னா… வேற மாப்பிள்ளை பாருங்க… அதக்கூட செய்ய மாட்டீங்களா?” மதியும் கணவனிடம் கட்டன் ரைட்டாக பேசியிருந்தார்.

     மனைவியின் பேச்சை மீறி என்பதைவிட, மகள் உயிர் பயத்தை காட்டியிருந்தமையால் அதை மீறியும் செழியனால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை.

     தனது புலம்பலால் தேன்மொழி வேறு தீர்த்தாவிற்குத்தான் சௌமி என்று பேசியது வேறு குழப்பியது செழியனை.

     ஒரு பக்கம் மகளின் மறுப்பு.  அதற்கு ஆமோதிப்பாய் மனைவி.  மற்றொரு பக்கம் தேன்மொழியின் ஆதரவு.  அனைத்தையும் இழுத்து வைத்துக் கொண்டது தனது மதியீனம் என்பது செழியனுக்குப் புரியவே செய்தது.

     இரண்டிற்கும் இடையே என்ன செய்யலாம் என முடிவிற்கு வரமுடியாமல் செழியன் குழம்பி, ‘தீர்த்தா பயணம் போயி இரண்டு வருசம் கழிச்சுத்தானே வருவான்.  அதுவரை பேசாம இருப்போம்’ என தனக்குத்தானே தைரியம் கூறி ஆறுதலடைந்தார் செழியன்.

     ஆனால் அந்த ஆறுதலுக்கும் வேட்டு வைக்கும் விதமாக தேன்மொழி தம்பியிடம் நேரில் வந்து பேசிய செய்தி செழியனை மேலும் குழப்பியது.

     தீர்த்தபதியின் தீவிர வற்புறுத்தலால் தேன்மொழி, “தம்பி… உம் பொண்ணு எம் பையனுக்குத்தான்னு முடிவு பண்ணியாச்சில்ல. தீர்த்தா சௌமியோட பேசணுங்கறான்.  அவ நம்பரை தீர்த்தாவுக்கு அனுப்பி விடு.

     ரெண்டு வருசம் பேசி அதுகளுக்குள்ள புரிதல் வருமுல்ல…  என்ன நான் சொல்றது!” என தமக்கை கேட்டதும்… மறுத்துப் பேச முடியாமல் உடனே அதை அப்படியே ஆமோதித்து சௌமியின் தனி அலைபேசி எண்ணை தீர்த்தாவிற்கு கொடுத்திருந்தார் செழியன்.

     முதன் முறை  சௌமிக்கு தீர்த்தா அழைத்ததும் அவள் அதனை ஏற்காமல் தாயிடம் கொடுத்திருந்தாள் அலைபேசியை.

     மதி எடுத்ததும், “என்ன தீர்த்தா? என்ன விசயமா கூப்பிட்ட?”

     “அது… வந்து… அத்தை…” தடுமாறியவன், “நம்ம சௌமிகிட்ட பேசலாம்னு போட்டேன்.  அது இல்லையா அத்தை?”

     “ஏதோ வேலையா இருக்கா.  இரு குடுக்கறேன்” என்று மகளிடம் கொடுத்துவிட்டு, ‘வேலையிருக்குன்னு ரெண்டு வார்த்தை பேசினதும் வச்சிரு’ எனும்படியாக செய்கையில் கூறிவிட்டு அகன்றார் மதி.

     அத்தோடு கணவனிடம், “இது நீங்க பாத்த வேல தான?” என்று காளியாக நின்றிருந்தார் மதி.

     “சும்மா பேசுறதுல என்ன ஆயிறப் போகுது மதி.  அத்தை புள்ளை மாமம் புள்ளைக.  இதையெல்லாம் போயி தப்பா எடுத்துகிட்டு” செழியன் சமாளிக்கும் விதமாகத் துவங்க,

     “இதே மாதிரி எவன் அவகிட்ட பேசணும்னு சொன்னாலும் குடுப்பீங்களா? இல்லைல… அப்ப இவன் மட்டும் அப்டியென்ன உசத்தின்னு அவனை கொண்டு வந்து நடு வீட்டுல வைக்கணும்னு துடிக்கிறீங்க?

     இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க… மாமம் புள்ளை அயித்த புள்ளை எல்லாம் இருந்துட்டுப் போகட்டும்.

     ஆனா… சௌமி சரினு சொன்னாத்தான் தீர்த்தாவுக்கு.  இல்லை அவ அவனை வேணான்னு சொன்னா… சரினு விட்றணும். 

     அதைவிட்டுட்டு நாளப்பின்ன வந்து பிரச்சனைய உங்க அக்காவோ, இல்லை நீங்களோ, இல்லை அந்த தீர்த்தாவோ கூட்டணும்னு நினைச்சா… நான் இதே மாதிரி இருப்பேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுறாதீங்க…

     எம்புள்ளை வாழ்க்கை எனக்கு முக்கியம்.  அது பண்ணது ஒரே ஒரு தப்பு.  ஆனா உங்களோட அவசரத் தனத்தால அடுத்தடுத்து எம்புள்ளை நொந்து வெந்து போயி இருக்கு…

     இந்த நிலைக்கு காரணம் நிச்சயமா நீங்க மட்டுந்தான்.  அவளுக்கு ரொம்ப இடங் குடுக்காதீங்கன்னு நான் சொன்னதைக் கேட்டிருந்தா நிச்சயமா அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

     நானும் பெரியவ பிரசவத்துக்கு வந்திருக்காளேன்னு அவளை மட்டுமே கவனிக்கறேன்னு இவளை கொஞ்ச நாள் கருத்துல வைக்காம விட்டுட்டேன்.  அது நாம் பண்ண பெரிய முட்டாத்தனம்.

     அதை நினைச்சு நினைச்சு நான் வருத்தப்படாத நாளே இல்லை.  எப்டிடா எம்புள்ளை வாழ்க்கைய சீராக்கலாம்னு கிடந்து சீரழியறேன்.

ஆனா… உங்க மூப்புக்கு நீங்க பண்ண விசயம் இன்னைக்கு அவளை இந்த மாதிரியான இக்கட்டுல கொண்டு வந்து நிப்பாட்டிருக்கு.  உங்க அவசரத்தனத்துக்கு அவளை பலிகடாவா என்னால இனியும் ஆக்க முடியாது.

     அதுனால தெளிவா கேட்டுக்கங்க… சௌமி மனசார தீர்த்தாவைக் கட்டிக்க சம்மதிச்சா, நானும் சம்மதிப்பேன்.  இல்லையா… அதுக்கு நீங்க மறுப்பேதும் சொல்லக்கூடாது” தெளிவாக மிகவும் தீர்க்கமாக கணவனிடம் பேசியிருந்தார் வசுமதி.

     அனைத்திற்கும் செழியன் தலையாட்டி ஆமோதித்திருந்தாலும் மதிக்கு பயமாகத்தான் இருந்தது. தீர்த்தா சௌமிக்கு அழைத்துப் பேசத் துவங்கியிருந்தான்.  முகம் சுழித்த மனைவியிடம் அவ்வப்போது பேசி சமாளித்தார் செழியன்.  அதன்பின் அதுவே வழக்கமாகியிருந்தது.

     செளமிக்கு பிடிக்காதபோதும் வேறு வழியின்றி, தனது தந்தையால் உருவாக்கப்பட்டிருந்த நெருக்கடியை சமாளித்தே ஆக வேண்டிய தனது நிலையை எண்ணி வருந்தியபடி தாயிடம் விசயத்தைக் கூறினாள் சௌமி.

     வசுமதியும், “ரெண்டு வார்த்தை பேசிட்டு, படிக்கணும்.  வேற எதாவது வேலைன்னு வச்சிரு.  நாலு தடவை பாத்திட்டு, அவனே அதுக்கப்புறம் பேச மாட்டான்” யோசனை கூற,

     சௌமியும் அதை அப்படியே செய்தாள்.  ஆனால் அதைப் புரிந்துகொண்டதாகவே காட்டாமல் தீர்த்தா சௌமியோடு பேசுவது தொடர்ந்தது.

     சௌமிக்கு தனது வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் பூகம்பமான நிகழ்வுகளால் நிலை தடுமாறினாள். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அதிகம் போராடினாள்.

     கடந்து போன நாள்கள் கசப்பான அனுபவத்தை தனக்குள் விதைத்திருந்தாலும், அவளால் சென்ற நிகழ்வுகளை அப்படியே கடந்துவிட முடியவில்லை. அதன் கசப்புத் தன்மை வழிநெடுகிலும் வந்து வெவ்வேறு ரூபங்களில் இம்சித்தது.

     மிகவும் கேவலமாக உணர்ந்தாள். தனக்கு மட்டும் ஏனிப்படி அடுத்தடுத்து நிகழ்ந்தது என்பதனை தனக்குள் ஆராய்ந்து, தனது தவறை உணர முயன்றாள்.

     ப்ருத்வியை தான் கணக்கிட்டு காதலித்த செயல் தவறுதான் என்பது புரிந்தது.  ஆனால் அடுத்தடுத்து அவனை நம்பி தான் செய்த தற்கொலைக்கு முயன்ற முட்டாள்தனம் வேறு அவளை முகத்திலடித்து கிண்டல் செய்தது.

     ப்ருத்வியோடு செலவளித்த தினங்கள் அவளை நிம்மதியாக வேறு ஒரு வாழ்க்கையில் ஒன்றி வாழ வழிவிடுமா என்பதே அவளுக்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது.

***

     கல்லூரியில் பருவத் தேர்வுகள் துவங்கும்போது உண்டான பிரச்சனையை சமாளிக்க பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று அபராதத் தொகையை கட்டி வந்திருந்தார்கள்.

     சௌமி ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கல்லூரி செல்லாமல் இருந்தது பிரச்சனையாகியிருந்தது.  வருகையை கல்லூரி நிர்வாகம் புரொஜெக்ட் என்று ஓரளவு சரி செய்திருந்தது.

     ஆனாலும் அதன்பின்னும் உண்டான தொய்வை சரிகட்ட, பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று வந்திருந்தார்கள் சௌமியும் செழியனும்.

     சௌமி தேர்வுகளின்போது ப்ருத்விக்கு அவர்கள் வீட்டில் பார்த்திருந்த பெண்ணுடன் திருமணம்.  அதனைப் பார்த்தவளுக்கு, ‘வேற ஒருத்தங்கூட ஓலை வாசிச்சதுக்கு அவனுக்கு நான் பாதி பொண்டாட்டியாயிட்டேன்னு இவரு என்னை வேணானு போவாராம்.

ஆனா இவரு கையக் கால வச்சிக்கிட்டு ஒழுக்கமா இருந்தாரான்னா… அப்டியில்லை. இப்டி ஆளுங்களை எல்லாம் நிக்க வச்சு நடு ரோட்டுலேயே சுடணும்’ என தனக்குள் ஆவேசப்பட்டவள்,

‘நான் அவன் கூப்பிட்டதும் அவங்கூடபோனது முதல்ல எந்தப்பு.  அவனை மட்டும் குத்தம் சொல்லி எந்தப் பிரயோசனமும் இல்லை.  நான் புள்ளி வைக்காம இருந்திருந்தா… அவனால எப்டிக் கோலம் போட முடிஞ்சிருக்கும்’ என தனக்குத்தானே தனது கடந்து போன வாழ்க்கையை பரிசீலனை செய்து குட்டும் வைத்து, தன்னைத் தேற்ற முயன்றாள் சௌமி.

ஆனாலும் ப்ருத்வி அவன் மனைவியோடு வண்டியில் உல்லாச மனநிலையோடு செல்வதைப் பார்க்கையில் இதயத்தை கசக்கி வீசிய வேதனையை அடைந்தாள் சௌமி.

சௌமியைப் பார்த்தாலும் பாராததுபோல மனைவியோடு அங்கிங்கு வண்டியில் சென்றவனைக் காணும்போதெல்லாம் கசடை நீக்க முடியாத கரை படிந்த தனது பக்கங்களை கிழித்தெறியவும் முடியாமல் அழுகையில் கரைந்தாள்.

‘எப்டியெல்லாம் எங்கூட பேசினான்.  இப்ப இன்னொருத்திகூட குஜாலா இருக்கான்.  நான் ஒருத்தி! போனதையே நினைச்சி அருவருப்பு பட்டுட்டு உக்காந்திருக்கேன்.

அவனைப் பாரு!  எதையும் மனசுக்குள்ள ஏத்தாம வந்ததை வச்சி வாழ்ந்திட்டு நிம்மதியா இருக்கான்’ இப்படித்தான் மனதோடு பலமுறை வெந்து தணிந்தாள் சௌமி.

ப்ருத்வியோ மிதர்ப்பாக மனைவியோடு கைகோர்த்துச் செல்வது, வண்டியில் ஒருவரோடு ஒருவர் காற்றுகூட புக முடியாமல் ஒட்டி அமர்ந்தபடி செல்வது என அவனது வாழ்வினை ரசித்து வாழ்ந்தான்.

அதற்கும் காரணம் இருந்தது.  அந்தப் பெண் சௌமியைக் காட்டிலும் திருத்தமாக இருந்தாள்.

ப்ருத்வியின் செயல்பாடுகளைப் பார்த்து அருவெருப்பே சௌமிக்கு மிஞ்சியது. ‘கழிசடை! இவனைப் போயி லவ் பண்ணதோட நிக்காம, இவன் கிடைக்கலைனு சாகத் துணிஞ்ச என்னோட புத்திய சோட்டாலேயே அடிக்கணும்’ தனது செயல்பாடுகளை எண்ணி வெதும்பினாள்.

     பருவத் தேர்வுகளை, புரொஜெக்ட் நல்லபடியாக முடித்து கல்லூரி விடுமுறையில் இருந்தவளுக்கு பழைய நினைவுகளே வந்து ஆக்ரமித்து இம்சித்தது.

வீட்டில் அடைந்து கிடக்க வேண்டாமென முடிவெடுத்து தட்டச்சு, தையல் போன்றவற்றை கற்கும் ஆர்வத்தோடு இராமேஸ்வரத்திலேயே பயிற்சியில் சேர்ந்திருந்தாள்.

     பயிற்சிகளுக்குச் செல்லத் துவங்கியபோது சில அறிமுகமில்லா நபர்களின் பகடிக்கு(RAGGING) உள்ளானாள்.

     “வர்றியா… குஷி பீச் போகலாம்” நடக்கும் தூரத்தில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தவளைப் பின்தொடர்ந்த நபர்கள் சௌமியிடம் வம்பளக்க, பதில் எதுவும் சொல்லாமல் பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தாள் சௌமி.

     வகுப்பு முடிந்து திரும்பும்போது அவளுக்குள், ‘இப்பவும் அவங்க வந்து தொந்திரவு பண்ணா… என்ன செய்யிறது’ வீட்டிற்குச் செல்லத் தயங்க, பயிற்சி மையத்து பொறுப்பாளரிடம் சொல்லி தாயிக்கு அழைத்தாள்.

     “ம்மா… வந்து என்னைக் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று கேட்க, இதே ஊரில் பிறந்து வளர்ந்து தனியாக சுற்றித் திரிந்து தோழிகளோடு அட்டகாசம் செய்தவள், இன்று தன்னை அழைப்பதை ஏதோ சங்கடம் உண்டானதாக தாயுள்ளம் உணர்ந்து கொண்டது.

     “அங்கேயே இரு சௌமி.  அம்மா வரேன்.  இல்லைனா அப்பாவை வரச் சொல்றேனு” என்று கூறிய ஏழாவது நிமிடம் மதி வந்திருந்து மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

மகளிடம் வீட்டிற்கு வந்து விசாரித்து விசயத்தை தெரிந்து கொண்ட மதி, கணவர் வந்ததும் கூற செழியன் கொந்தளித்து போய் நியாயம் கேட்க எண்ணிக் கிளம்ப… தடுத்த மதி அதற்கான வழிமுறைகளையும் கணவனை இழுத்து வைத்து நிதானமாக எடுத்துக்கூறி அதுபடி நடக்க வேண்டினார்.

***

     மகளின் நிலை பெற்றோருக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்தது.  வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது செழியனுக்கு தோன்றியதெல்லாம், “கட்டிக் குடுத்துட்டா நமக்கு கொஞ்சம் பயமில்லாம இருக்கலாம்” என்பதுதான்.

சில மாதங்களுக்கு முன்புதான் தீர்த்தா வெளிநாடு சென்றிருந்தமையால் அடுத்து ஒன்றரை முதல் இரண்டு ஆண்கள் கழித்தே மீண்டும் வருவான்.

     அதுவரை சௌமியை காபந்து செய்ய வேண்டும்.  இந்த முறை காவல்துறையின் உதவியோடு பகடி செய்தவர்களை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

     ஆனால் இதே விசயம் வேறு நபர்களால் மீண்டும் நடக்காது என்பதற்கு உறுதி கூற முடியாத நிலையில் மதி, “சௌமி மேற்கொண்டு படிக்கிறியாம்மா?” என்று கேட்டதும், உடனே ஆமோதித்திருந்தாள் சௌமி.

     படிப்பு, புராஜெக்ட், செமஸ்டர் தேர்வுகள் என சென்ற நாள்களில் அதிக பாதிப்புகள் இன்றி நாட்களைக் கடந்து வந்திருந்தாள் சௌமி.

     தேர்வுகள் முடிந்து வீட்டில் இருந்த சௌமிக்கு தனிமை மிகவும் கொடுமையான ஒன்றாக இருந்தது.  ஐந்து மாதங்களுக்குமேல் கடந்தும் அவளால் பழைய விசயங்களில் இருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை.

     தாயிக்கு வீட்டில் உதவுவது, வீட்டில் அவளாக எதாவது வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது என்றாலும் அதிக நேரம் வெட்டியாக இருக்கும்படி நேர்ந்தது.

     அந்நேரங்களில் வரக்கூடிய ப்ருத்வியின் நினைவுகள் அவளை கூறு போட்டு இம்சித்து கேலி செய்தது.

     அவனில்லாத வாழ்வை எண்ணிய ஏக்கமல்ல… இப்படி ஒரு நபரை நம்பி தான் தவறி விட்டோமே என்கிற கழிவிரக்கம் சௌமியை ஆட்டிப்படைத்தது.

     சில தருணங்கள், சில பேச்சுகள், சில பொருள்கள், சில இடங்கள், சில நிகழ்வுகள் இப்படி சில அவள் ப்ருத்வியோடு பேசிய, இருந்த நிமிடங்களை நினைவிற்கு கொண்டு வந்து நிம்மதியைக் கெடுத்தது.

     அவன் தன்னை ஒதுக்கிவிட்டு வேறொரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ்வதை அவளால் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதோடு வைத்துப் புழுங்கினாள். மேலும் அவனது திருமண வாழ்விற்குப் பிறகான அவனது செயல்களனைத்தும் அவளுக்கு மாறாத காயங்களை உண்டாக்கியது.

     ‘வேற ஏதோ கோபத்தை மனசுல வச்சிட்டு, இதை ஒரு சாக்காச் சொல்லிட்டு விலகிப் போனதை இனி நினைக்கவே கூடாது’ தனக்குத்தானே சங்கல்பம் எடுத்தாலும், அரைமணித் தியாலம்தான் அதற்கு ஆயுள்.

     மீண்டும் அதே கழிவிரக்கம் அவளை ஆட்கொள்ள அவளின் உயிர் அணு அணுவாக சித்திரவதையை உணர்ந்தது.

     இதிலிருந்து எப்படி மீள்வது என்று புரியாமல், அதற்கான வழி தெரியாமல் இருந்தவளுக்கு தையல் வகுப்பு, தட்டச்சு வகுப்பு நிம்மதியைத் தரும் என்று நினைத்துச் செல்லத் துவங்கினாள்.  ஆனால் அவள் எதிர்பார்த்தே இராத வேறு சில பிரச்சனைகள்.

     மீண்டும் வீட்டிற்குள் முடங்கும்படியான நிலை.  வெறுத்து வந்தது.  தன்னை எதற்காக பிழைக்க வைத்தார்கள் என்றெல்லாம் தோன்றத் துவங்கியது. அப்படி இருந்த நிலையில்தான் அவளை மேற்படிப்பு படிக்கக் கேட்டார் அவளின் தாய் வசுமதி.

     தனக்கு எதாவது விடிவுகாலம் வருமா என்றிருந்தவளுக்கு தாயின் பேச்சைக் கேட்டதும் தாமதிக்காது உடனே தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டாள் சௌமி.

     மகளின் விருப்பத்தை கணவரிடம் கூறி, சௌமியை சென்னையில் மேற்படிப்பிற்கு சேர்த்துவிடும் முடிவுக்கு வந்திருந்தார்கள் செழியன் மதி தம்பதியினர்.

     முதலில் மனைவியின் முடிவிற்கு மறுத்தவரிடம், செமியின் மேற்படிப்பு சௌமிக்கு உண்டாக்கும் சாதகங்களை எடுத்துக்கூறி சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகியிருந்தது மதிக்கு.

     சென்னையில் விடுதியோடு கூடிய கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கும் முயற்சியில் இறங்க, விசயம் அறிந்த செழியனின் மூத்த அக்கா வானதி, “ஏன் நாங்க சென்னையில இருக்கும்போது… ஹாஸ்டல்ல கொண்டு போயி புள்ளைய விடுற?” தம்பியிடம் உரிமைச் சண்டையிட,

     “எதுக்குக்கா உங்களுக்குச் சிரமம்?  அது காலேஜ் ஹாஸ்டல்ல இருந்து போயிட்டு வந்திக்கிடட்டும்.” செழியன்.

     “அப்ப நான் உங்க வீட்ல வந்து தங்குனா உனக்குச் சிரமம்னு நினைப்பியா?” குதர்க்கமாக தம்பியிடம் கேட்டு மேலும் சிக்கலை உண்டாக்கிட, பிரச்சனை வேறு திசையில் செல்வதைப் பார்த்து யோசித்துச் சொல்வதாகக் கூறினார் செழியன்.

     மதியோ, “கொண்டான் குடுத்தான் வீட்ல… கல்யாணத்துக்கு காத்திருக்கற புள்ளையக் கொண்டு போயி விட்டா… நாளப்பின்ன பொண்ணு எடுக்கறவங்க யோசிப்பாங்களேங்க…” கணவனிடம் தனது கருத்தைக் கூற,

     “இங்க என்ன லைன் கட்டியா மாப்பிள்ளை வருது?” சட்டெனக் கூறிய செழியன் தன் வார்த்தையின் கணம் உணர்ந்து அமைதியாகியிருந்தார்.

மதிக்குமே கணவன் அப்படிப் பேசியதில் வருத்தமே.

சமாளித்தவர், “அப்படியே வந்தாலும் பேச ஆரம்பிச்சதுமே யாராவது பழைய விசயங்களைக் காதுல போட்டு… அத்தோட எல்லாம் ஸ்டாப் ஆயிருது” வருத்தத்தோடு இயம்பினார்.

     “இதனால மூத்தவளுக்கு  எதுவும் பிரச்சனையினு வந்திராம… உங்க அக்காகிட்ட சரினு சொல்லுங்க.  பாப்போம்.  அப்புறம் எதாவது சௌமி சொன்னா… மாத்திக்கலாம்” மதி ஒரு மனதாய் முடிவெடுத்திருந்தார்.

     கவி சௌமியாவை கனி சௌமியாவின் மாமியாரும், அவர்களின் மூத்த அத்தையுமான வானதி வீட்டில் அவர்களின் பொறுப்பில் விடுவதாக முடிவு செய்யப்பட்டது.

     முடிவு விரைந்து செயல்படுத்தப்பட்டது.

     சௌமியும் தனது முதுஅறிவியல் படிப்பை மிகவும் ஆர்வத்தோடு கற்க முனைந்தாள்.  அவள் படிக்கும் அதே கல்லூரியில்தான் மகேந்திரவர்மனும் அவனது முதுஅறிவியல் படிப்பைத் தொடர்ந்திருந்தான்.

     மகேந்திரனுக்கு சௌமியை நன்றாக அடையாளம் தெரிந்தது.  திருமணத்திற்கு முன்பு ஊர் முழுக்க அவளைக் கட்அவுட்களில் பார்த்தது.  அதன்பின் உயிருக்குப் போராடிய நிலையில் கடைசியாக அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைவரை சென்றது என மகிக்கு அவளோடுடனான தனது நினைவுகளை யோசித்தபடி இருந்தான்.

சௌமிக்கு அவனைத் தெரியாது. ஒரே துறையில் ஒரே வகுப்பில் இருந்தபோதும் சௌமி அவனைக் கவனிக்கவில்லை.

ஆனால் அப்போதே கவனித்திருந்தான் மகி.  அவள் பேருந்திற்கு காத்திருந்தபோதுதான் மகி தன்னை அடிக்கடி திரும்பிப் பார்ப்பதை பயத்தோடும், கலக்கத்தோடும் பார்த்திருந்தாள் சௌமி.

வீட்டிற்குத் திரும்பும்போதும் தன்னைத் தொடர்ந்தவனைக் கண்டு பீதியாக உணர்ந்தாள். சிறிதுதூரம் தன் பின்னே தன்னைத் தொடர்ந்து வந்தவன் இடையில் காணாமல் போனது சற்று நிம்மதியைத் தந்தாலும், வேகமாக வீட்டை நோக்கி விரைந்தாள் சௌமி.

வீட்டை அடைந்தபோது அவள் கண்ட காட்சியில் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் சௌமி.

***

error: Content is protected !!