தேனாடும் முல்லை-14

தேனாடும் முல்லை-14

தேனாடும் முல்லை-14

அடுத்த நாள் மீண்டும் ஷாப்பிங் என்று மனைவியை  இழுத்துச் சென்றான் ராம்சங்கர். இந்தமுறை சக்திமாறனிற்காக மட்டுமே அனைத்தையும் வாங்கிக் குவித்தான்.

அவனுக்கு  பொருந்தும்படியான அளவுகளில்  ரகத்திற்கு ஒன்றாக பலவகை உடைகளை வாங்கி முடித்து, படிப்பிற்கு தேவையானவற்றையும் பார்த்து வாங்கினான். ஒவ்வொன்றையும் வாங்கும் போதும் மனைவியிடம் கேட்டு அவளது விருப்பத்திற்கும் செவிசாய்த்து தேர்ந்தெடுத்தான்.

“நான் பணம் குடுக்கப் போறதும் இல்ல… அவனை நேருல பாக்கப் போறதும் இல்ல, பின்ன எதுக்கு ராம் என்கிட்ட கேக்கற?”

“லேடீஸ் ரசனைகள் எல்லாம் அழகானது, கவர்ச்சியானது செல்லா… அதை மனசுல வச்சுத்தான் கேக்கறேன்!” விளையாட்டாய் கண்சிமிட்ட,

“அனுபவம் பேசுதோ!” வார்த்தைகளில் அழுத்தம் கூட்டினாள் விஸ்வாதிகா.

“மே பீ… மனசுல உன்னை நினைச்சுட்டே இந்த டீ சர்ட்டை எடுத்தேன்னு சொல்லியே என் கேர்ள் பிரிண்ட்ஸ் நிறைய கிஃப்ட் பண்ணியிருக்காங்க! எல்லாமே அவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? யூ க்நோ… ஒரு பெஸ்டி அவ போனிடையில்ல போட்டுக்கற கிளிப் கூட என்னை நினைச்சு எடுத்ததா சொன்னா… அவ்ளோ கியூட்டா இருந்தது” வாய்விட்டு அதிகப்படியாக உளறியதில் அன்றைய ஏழரை ஆரம்பித்தது.

“அப்ப யூஎஸ் போனதும் அந்த ரசனைக்காரிகளோட ஐக்கியமாகிடுவேன்னு சொல்லு!” கூடுதலாய் போட்டு வாங்க,

“நானா போறதில்ல… தானா வந்தா அதிகமா தட்டிக் கழிக்கறதும் இல்ல. அப்படி நினைச்சாலும் முடியறதில்ல!” சிரித்துக் கொண்டு பெருமை பேசியவனை பொது இடமென்றும் பாராமல் வயிற்றில் குத்துவிட்டு கோபத்தை காட்டினாள்.

“ராட்சசி, பாவம் பார்க்காம கொல்றியே!” குரலை உயர்த்தாமல் அலறி விட்டான்.

“பாம்பு கூட நம்மை தேடித்தான் வருதுன்னு அதுகிட்ட ஆசையா கொத்து வாங்கி குடித்தனம் நடத்த வேண்டியது தானே பரதேசி… அப்போ மட்டும் ஏன் தலைதெறிக்க ஓடிப் போற?” பார்வையால் அவனை எரிக்கும்போது தான்,

“ஐயோ என் வாயிலதான் வாஸ்து சரியில்லயா! வசமா உளறிட்டேன்!” முணுமுணுக்க, அதையும் தப்பாமல் கேட்டு விட்டாள்.

“இனிமே எந்த பன்னியோடயாவது மேயப் போ… அந்த நிமிசமே உன்னை தூக்குல தொங்கவிட்டு சாக்கடையில வீசுறேன்!” கோபத்தில் கனன்றவளைப் பார்த்து ஒருநிமிடம் பின்னடைந்து தான் போனான்.

‘சாண் ஏறினா முழம் சறுக்குதுன்னு சொல்றது இதைத்தானா? நேத்து தானே என்னால சந்தோசமா சிரிக்கிறேன்னு சொன்னா… இன்னைக்கு காறித் துப்பி கதற வைக்கிறா!’ உள்ளுக்குள் புலம்பி நொந்து போன முகத்தைக் கூட வெளியில் காட்டிக்கொள்ள முடியாமல் தவித்தான்.

“உனக்கு பாவமே பாக்க மாட்டேன்டா… வீடியோகால்ல அரைமணிக்கு ஒருதரம் பேசியே உன்னை நோக வைக்கிறேனா இல்லையானு பாரு! வெரைட்டியா கேர்ள் ஃபிரெண்ட்ஸ் கேக்குதா உனக்கு?” அங்கிருந்த நேரம்  முழுவதும் அவனை பயமுறுத்தி, உருட்டி, மிரட்டி ஒருவழியாக்கினாள்.

“உன்னோட இந்த அவதாரத்தை பார்த்த பிறகும் என் கண்ணு வெரைட்டி தேடிப் போகும்னு நினைக்கிறியா செல்லா? அப்பப்ப கொஞ்சம் கருணை காட்டலாம்டி!”

“அதான் நாள் தவறாம உன் ஆட்டத்துக்கு வளைஞ்சு கொடுக்கிறேனே… அதுக்கு பேரு என்னவாம்?” தினப்படி இவர்களின் இரவுக் கதைகளை அவிழ்த்துவிட உல்லாசமாய் சிரித்தான்.

“என் வெல்லமே… நீ இல்லாம நான் அங்கே எப்படி இருக்கப் போறேனோ தெரியலையே! என்கூட வந்திடேன்டி… அங்கே போயி நாம கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சுக்கலாம். நான் ஃபுல் சப்போர்ட் கொடுக்கறேன்.” புதிதான கெஞ்சலை ஆரம்பித்தான்.

இவளது இத்தனை கடிந்த பேச்சிற்கு பிறகுதான் அவனுக்கும் தனியாக இருக்கப் போகிறோம் என்ற நினைவே வந்து பெரும் வலியைக் கொடுத்தது. இத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் தனியாளாய் சுகபோகமாய் வாழ்ந்த வாழ்க்கைதான் என்றாலும் மனைவியுடனான இந்த இரண்டு மாத வாழ்க்கையில் சொர்க்கத்தையே உணர்ந்திருந்தான்.

இவனது கெஞ்சலும் அவளது கெடுபிடிகளும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரைகளும் அனுசரணைகளும் அவனுக்குள் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருந்தன. வெளிநாட்டில் இயந்திரகதியாகச் சுழலும் அவனது தினசரிகள் எல்லாம் இங்கே ரசனைகள் மிகுந்ததாய் நிறைந்திருந்தன.

எல்லாவற்றிக்கும் மேலாக இவன் எண்ணி வந்த காரியத்தை செயலாக்குவதைப் பற்றி இன்னமும் மூச்செடுக்கவில்லை. அதற்கான முதல் முயற்சியைக் கூட இன்னும் தொடங்காத நேரத்தில் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தனது துரதிர்ஷ்ட நிலையை நினைத்து நொந்து போனான்.

“என்ன ராம்? ரொம்ப திட்டிட்டேன்னு ஃபீல் பண்றியா!” ஒருவழியாக ஷாப்பிங் முடித்து காரினை இவள் ஓட்ட அவனோ யோசனையின் பிடியில் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

“இல்லையே செல்லா!” சோர்வான குரலில் சொல்ல,

“பின்ன ஏன் அமைதியா வர்ற? நீ இப்படி இருக்கிறவன் இல்லையே!” அவனது பேசாநிலையைக் குறிப்பிட்டுக் கேட்டாள்.

“அது… உன்னை விட்டுப் பிரியணும்னு யோசிக்கும் போதே கஷ்டமா இருக்கு செல்லா!” தளர்ந்த குரலில் சொன்னதும்,

“உனக்கு வேற வேலையில்ல ராம்! உன்னோட இடியாடிக் சென்டிமெண்டை தள்ளி வைச்சிட்டு வேலையை முடிச்சிட்டு வா… இறங்கு சீக்கிரம்!” அவனை இறக்கிவிட்டு காரினை சாலையின் ஓரமாக நிறுத்தினாள்.

ஷாப்பிங்கில் வாங்கியவைகளை கொடுப்பதற்காக சக்தியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்றைக்குப் போலவே வாசலில் அவனை இறக்கி விட்டு இவள் காரினுள் அமர்ந்து கொள்ள ராம்சங்கர் மட்டும் அந்த வீட்டிற்குள் சென்றான்.

முத்துவின் துணையோடு கந்தனிடம் விவரங்களைச் சொல்லி முடித்த பிறகு, சக்தியை தன்னோடு அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தான்.

“நான் அடுத்த மாசம் யூஎஸ் போயிடுவேன் சக்தி! என் வேலை அங்கே தான். அப்புறம் என் லீவ் பொறுத்து தான் வருவேன். ஒரே ஒரு வருசம் மட்டும் நீ, உன் தாத்தா பாட்டியோட இன்னொரு சின்ன  வீட்டுக்கு போயி தங்கிக்கோ! பில்டிங் கட்டி முடிச்சதுக்கு அப்புறம் இங்கே ஷிஃபிட் ஆகிக்கலாம். முத்து சித்தப்பா என்ன சொல்றாரோ அதுப்படி கேட்டு நடந்துக்கோ!” இவன் நிறுத்தாமல் பேசியது புரிந்ததோ இல்லையோ, ஆனால் சரியென்று தலையாட்டினான் சக்தி.

ராம்சங்கர் கொடுத்த பரிசுகளை எல்லாம் கண்ணெடுக்காமல் பார்த்து மகிழ்ந்தான். விலை அதிகமில்லாத செல்பேசி ஒன்றையும் இவனுக்கென வாங்கியிருந்தான்.

“சின்னப் பையனோட மைன்ட் டைவர்ட் ஆகிடும் ராம், பக்கத்துல இருந்து அவனை கைட் பண்றதுக்கோ வாட்ச் பண்றதுக்கோ அங்கே ஆளில்ல…” ஆதியின் பேச்சினை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

“நான் அங்கே இருந்து வீடியோகால் பேச கண்டிப்பா ஒரு மொபைல் வேணும் செல்லா… அடுத்த வருசம் அவனை பிரைவேட் ஸ்கூலுக்கு மாத்தச் சொல்லி இருக்கேன். அங்கே அசைன்மென்ட், குவஸ்டீன்ஸ் எல்லாம் வாட்ஸ்-அப்ல தானே வருது.” பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்பேசியை வாங்கியிருக்க, மனைவியின் மறுப்பெல்லாம் காற்றோடு கரைந்து போயிருந்தது.

சின்னவன் கைகளில் செல்பேசியைக் கொடுத்ததும்  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி துள்ளிக் குதித்தே ஆர்ப்பரித்தான். அவனது கையிலும் நவீன செல்பேசி, அதுவும் இணையத்தின் வசதியுடன்… எத்தனை நாள் ஏக்கம் இது!

“மொபைல் ஆன் பண்ணு சக்தி!”

“சிம் இருக்கா அங்கிள்?”

“எல்லாம் செட் பண்ணி, என் நம்பரும் சேவ் பண்ணிட்டேன்.”

“வாவ்… சூப்பர்… லவ்யூ அங்கிள்… லவ்யூ!” என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை அவனிடத்தில் இருந்து வெளிப்படவே இல்லை.

தனக்காக முதன்முறையாக அன்போடு இத்தனையும் வாங்கிக் கொடுத்தவனை மலர்ந்த முகத்தோடு பார்த்து, “தாங்க்ஸ் அங்கிள்!” கள்ளம் கபடமில்லாமல் கூறி, தானாகவே வந்து கட்டி அணைத்துக் கொண்டான்.

“ஒன்ஸ் மோர் அங்கிள்!” சந்தோஷத்தில் மீண்டும் பெரியவனை கட்டியணைத்து முத்தம் கொடுக்க,

“லவ் யூ சக்தி!” கனிவோடு அவனும் அணைத்து முத்தம் பதிக்க, இருவருக்குள்ளும் இனம் புரியாத பாசயிழை அப்போதே நேர்த்தியாக நேயப்பட்டது.

மீண்டும் விஸ்வாதிகாவைப் பற்றி ராம்சங்கர் பேச்செடுக்கவில்லை. அந்தப் பொடியனும் கேட்கவில்லை. தனக்கு ஸ்பான்சர் செய்யப் போவதை சொல்வதற்காக தன்னிடத்தில் கூறப்பட்ட பொய் என்றே எண்ணிக் கொண்டிருந்தான் சக்தி.

“சேச்சா… என்கிட்டயும் மொபைல் இருக்கு. இனிமே தங்கச்சிக்கு இதுல வீடியோ காமிச்சு ரைம்ஸ் சொல்லிக் குடுக்கறேன்.” தனது மகிழ்ச்சியை முத்துவிடமும் பகிர்ந்து கொண்டான்.

உடைகளை தன்மீது வைத்துக் காட்டி, “சரியா இருக்க அங்கிள்? எனக்கு இந்த கலர் நல்லா இருக்குமா சேச்சா?” சிறுவனின் கொண்டாட்டத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

“ஊருக்கு போன பிறகு என்கூட பேசுவீங்களா அங்கிள்?” திடீரென்று ஏக்கமாகக் கேட்க,

“ஷுயர் சக்தி… இது என்னோட பெர்மனட் அட்ரஸ்.” என்று மாஸ் மசாலா மற்றும் அரவிந்தனின் வீட்டு முகவரியையும் கொடுத்தான்.

“இந்த கம்பெனி உங்களோடதா?”

“இது என் அண்ணன் கம்பனி… என் பெர்மனட் அட்ரஸ் இதுதான். உனக்கு வேண்டியதை என்கிட்டே தயங்காம கேளு! சப்போஸ் எனக்கு கால் ரீச் ஆகலன்னா உடனே என் அண்ணனுக்கு கூப்பிடு! அவர் உனக்கு ஹெல்ப் பண்ணுவார்.” என்று சொன்னதே சிறுவனின் ஆர்வத்தை தூண்டியது.

தன்மேல் அக்கறைக் கொண்டு பார்ப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே பரவசத்தை ஏற்படுத்த, அந்த நேரமே சிறியவனுக்கு அரவிந்தனைக் காணும் ஆவலைத் தூண்டியது.

“அவங்க ஒன்னும் சொல்ல மாட்டங்களா?” பெருத்த சந்தேகத்துடன் கேட்க,

“சொல்வாங்களே…” இழுத்த ராமை கலக்கமாய் பார்த்தான் சக்தி.  

“உன்னை பார்த்ததும் அவங்க கூடவே வந்து தங்கிக்கோன்னு எங்க அண்ணனும் அண்ணியும் சொல்வாங்க… உன்னை தனியா விட்டுட்டு நீ மட்டும் ஏன் வந்தேன்னு என்னையும் கண்டிப்பாங்க…” என்று சோகமாய் சொன்னவன்,

“எங்கூட வந்துடுறியா? உனக்கு தம்பி, தங்கை இன்னும் நிறைய ஃபிரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் கிடைப்பாங்க!” சிறுவனின் மனதில் ஆசையைத் தூண்டினான் ராம்சங்கர்.

“அவ்வளவு பேரா உங்க வீட்டுல இருக்காங்க?” 

“எஸ்… அவங்க போட்டோஸ் பாக்கறியா?” கேட்டபடி அவர்களின் பெரிய குடும்பத்தினர்கள் இருக்கும் புகைப்படத்தை செல்பேசியில் இருந்து காண்பித்தான்.

அரவிந்தன், கிருஷ்ணா என ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லச் சொல்ல ஆர்வமிகுதியில் விழிகளை விரித்துப் பார்த்தான். 

“வீடியோகால்ல எங்க அண்ணன்கிட்ட உன்னை இன்ட்ரடியூஸ் பண்ணி விடுறேன். அப்போதான் நீ அடுத்து பேசும்போது சகஜமா பேச முடியும்.” என்றுவிட்டு அரவிந்தனுக்கு அழைத்தான்.

அடுத்தநொடியே அழைப்பினை ஏற்றாள் பிரணவி.

“சித்தப்பா எங்கே போனீங்க? என்னைப் பாக்க வரவே இல்ல…” எடுத்த எடுப்பில் குட்டிப்பெண் முகம் திருப்பிக் கொள்ள அந்த அழகைக் கண்டு, “சோ கியூட்!” என ரசித்தான் சக்தி.

“இந்த பெரிய மனுசனை பாக்க வந்தேன் லட்டுமா… நாளைக்கே உன்னை பாக்க ஓடி வந்துடுவேன்!” சிரிப்போடு சக்தியைக் காட்டிவிட்டு, ”இவன் உன்னோட புது அண்ணன்… பேரு சக்தி!” என்று அறிமுகப்படுத்த, 

“ஹாய் அண்ணா!” பிரணவி சொன்ன நேரத்தில், வைணவியும் வைபவும் வந்து நின்றனர்.

“ஹாய் லட்டுமா!” என்றே சக்தியும் அழைக்க, மற்ற இருவரும் சிரிக்க, ஏதோ ஒரு தயக்கத்தில் முகம் சுருக்கினான் சக்தி.

“சக்திண்ணா… என் பேரு லட்டுமா இல்ல, நான் பிரணவி, இது அக்கா வைணவி, அண்ணா வைபவ்” வரிசையாக கூறி பிரணவி அறிமுகப்படுத்த, “நான் சக்திமாறன் புது அண்ணன்” அவர்களிடம் தானாகவே அறிமுகமாகிக் கொண்டான் சக்தி.

“ஏன் சித்தப்பா? எதுக்கு இவனை எங்க அண்ணன்னு சொல்றீங்க? யாரிவன், இவனோட பேரண்ட்ஸ் எங்கே இருக்காங்க?” புதிய்வனைக் கூர்மையாகப் பர்த்துக் கொண்டே வைபவ் கேட்க, அந்த நொடியே சக்தியின் முகம் கசங்கிப் போனது.

“யாரா இருந்தா என்னடா? உன்னை விட பெரியவனை அண்ணான்னு சொல்லக் கத்துக்கோ!” ராம் அதட்டிய நேரத்தில் அரவிந்தனை இழுத்து வந்திருந்தாள் வைணவி.

“சொல்லு ராம், எப்போ ரிட்டர்ன் வர்ற? நீ போன வேலை முடிஞ்சுதா?” என்று பொதுவாகக் கேட்டான்.

ஊரை விட்டுக் கிளம்பும் போதே மேலோட்டமாக அரவிந்தனிடம் சொல்லிவிட்டுத் தான் வந்திருந்தான் ராம்சங்கர். கடந்த இரண்டு நாட்களாக இங்கே நடப்பவற்றை அண்ணணிடமும் பகிர்ந்து கொண்டிருக்க அவனுக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது.

“எல்லாம் முடிஞ்சது.” விவரம் சொல்லி முடித்து, சிறுவனையும் அறிமுகப்படுத்தி வைக்க,  

“எப்படி இருக்க சக்தி?” நேரடியாகவே பேசத் தொடங்கினான் அரவிந்தன். 

“நல்லா இருக்கேன் அங்கிள்!” அவனும் சொல்ல,

“அங்கிள்னு சொல்லாதே… பெரியப்பான்னு கூப்பிடு!” அரவிந்தன் சொன்னது சிறுவனுக்கு விளங்கவில்லை.

“பெரியாப்பான்னா யாரு? எதுக்கு அப்படிக் கூப்பிடணும்?” இவன் அறிவாளியாகக் கேள்வி கேட்டதும்,

“அப்போவோட பிக் பிரதர்தான் பெரியப்பா” வைபவ் விளக்கம் கொடுக்க,

“எனக்குதான் அப்பாவே இல்லையே… அப்புறம் எப்படி இவரை பெரியப்பான்னு கூப்பிடுவேன்?” சக்தியின் வெடுக்கென்ற பதிலில் பெரிய சகோதரர்கள் ஊமையாய் நின்றார்கள்.

‘கொஞ்சம் விட்டா பட்டிமன்றம் நடத்தி சண்டைக்கு நிப்பாங்க போல இந்த பொடியனுங்க!’ உள்ளுக்குள் அலுத்துக் கொண்டான் ராம்சங்கர்.

“அச்சோ பாவம்… நீ அப்பான்னு கூப்பிடு சக்திண்ணா, எங்கப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க… இல்லப்பா!” பிரணவி தன்னால் சொல்லிவிட்டு,  ‘ஆமான்னு சொல்லிடுப்பா’ என்று தகப்பனைப் பார்த்து பார்வையால் கெஞ்ச, “ஆமாடா பட்டு!” என்று சிரித்தவன்,

“அப்பான்னே கூப்பிடு சக்தி! நீயும் எங்க வீட்டுப் பிள்ளைதான்!” அன்போடு சொன்ன விதத்தில் சக்தியும் தயங்கி, “சரிப்பா!” என்று மென்று முழுங்கி சம்மதம் சொல்ல, தான் சொன்னது தவறாமல் நடந்த சந்தோஷத்தில் “ஹோய்!” என்று ஆர்ப்பரித்தாள் பிரணவி.

“அண்ணே நான் ஊருக்கு போன பிறகு அடிக்கடி இவனுக்கு ஃபோன் பண்ணி என்னன்னு கேட்டுக்கோ!” ராம் சொல்ல,

“எனக்கே சொல்றியா? நேரம்ந்தான்!” அரவிந்தனின் ஜாடைப் பேச்சில்,

“ஹிஹி… அப்படியே அண்ணியையும் கூப்பிடுண்ணே… இவனை காமிச்சிடுறேன்!” என்றதும் வைணவி வேகமாக செல்பேசியை எடுத்துக் கொண்டு கிருஷ்ணாவை நோக்கி ஓட, அவளின் பின்னோடு, “நானு, நானும் சொல்வேன்!” என்று பிரணவியும் வைபவும் சேர்ந்து ஓட, சக்தியும் இங்கே குதூகலித்தான்.

“இவ்வளவு வேகமாக ஓடிப் போறாங்க? எப்பவும் இப்படித்தானா அங்கிள்?” அதிசயமாகக் கேட்டான்.

தனியாக வளர்ந்தவனுக்கு குறும்பென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து வயதானவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வு தன்னால் வந்து சேர்ந்திருக்க, மற்ற எந்த சிந்தனையிலும் சக்தியின் மனம் சென்றதில்லை. அரவிந்தனின் குழந்தைகளின் செயல்களை பேச்சுகளை எல்லாம் உலக அதிசயமாகவேப் பார்த்தான்.  

“ரொம்ப குறும்பு பண்ணுவாங்க சக்தி!” ராம் சொன்ன நேரத்தில், கிருஷ்ணாவின் முகம் செல்பேசி திரையில் தெரிந்தது.

“சொல்லுங்க ராம்? சக்தி என்ன சொல்றான்?” அவள் கனிவோடு கேட்ட விதத்திலேயே விழிகளை விரித்தான் சக்தி

“என்னைத் தெரியுமா உங்களுக்கு?” 

“ம்ம், தெரியுமே ப்பா… நேத்து முழுக்க உன்னைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம். உனக்கு எடுத்த டிரஸ் எல்லாம் பிடிச்சிருக்கா?” கிருஷ்ணா சகஜமாய் கேட்க,

“ஒஹ்… சூப்பரா இருக்கும்மா!” யாரும் சொல்லாமலேயே அவளை அம்மாவென்று அழைத்திருந்தான்.

அரவிந்தனை அப்பா என்று அழைத்தாயிற்று… குழந்தைகளின் அம்மா என்ற விளிப்பனைப் கேட்டே, இவனும் அவ்வாறே அழைக்க மறுப்பின்றி ஏற்றுக் கொண்டாள்.

“நல்லா படிக்கணும் சக்தி, எதுவும் தேவைன்னா எங்களை உடனே கூப்பிட்டு கேளு… சங்கோஜப்படாதே!” கண்டிப்பான அன்போடு சொல்ல, அந்த அறிவுரை கூட சிறியவனுக்கு அத்தனை இனிமையைக் கொடுத்தது. இதெல்லாம் இவனுக்கு புதிய அனுபவமே!

“அண்ணி சொல்றத நல்லா கேட்டுக்கோ சக்தி, இல்லன்னா டீச்சர் கையில பிரம்பு தூக்குவாங்க!” ராம் பயமுறுத்த, 

“பொய் சக்திண்ணா… எங்கம்மாவுக்கு அடிக்கத் தெரியாது.” பிரணவி கத்த, 

“இல்ல, இல்ல… அம்மா சின்னதா கிள்ளுவாங்க!” வைணவி இடையில் புக, 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சக்தி!” என வைபவும் தன்பங்கிற்கு சொல்லி முடித்தான்.

“வாலுங்களா… உங்களை வச்சுட்டு ஒன்னு பேச முடியுதா? என் பேரையே டேமேஜ் பண்றீங்க… போங்க, அந்தப் பக்கம்.” சிரித்துக்கொண்டே விரட்டினாள் கிருஷ்ணா. 

“அம்மா எங்கே அண்ணி?”

“கோவிலுக்கு போயிருக்காங்க ராம்!” 

“ஒஹ்… அப்போ சொல்லிடுங்க அண்ணி, கால் கட் பண்றேன்!” என்றவாறே அழைப்பினை துண்டித்தான் ராம். 

“வீட்டுல இவ்ளோ பேர் இருக்காங்க… பெரிய ஃபாமிலியா அங்கிள்?” சக்தி ஆசையுடன் கேட்க,

“ம்ம், எப்பவும் ஜேஜேன்னு இருக்கும். அதுக்கு தான் சொல்றேன் என்கூட வர்றியா?” வார்த்தைகளால் மீண்டும் தூண்டில் போட்டான் ராம். 

“எனக்கு தாத்தா பாட்டி போதும் அங்கிள், அவங்களை கவனமா பார்த்துக்கணும்னு எல்லாரும் சொல்லியிருக்காங்க!” ஆசையை புதைத்துக்கொண்டு கூற, ராம் பரிதவித்துப் போனான்.

‘இந்த சின்ன வயதில் இவனுக்குள் எத்தனை பொறுப்பு? தந்தை இல்லையென்றாலும் நான் எதற்கும் பொறுப்பெடுத்துக் கொண்டதில்லையே… பெற்றோர் உடன்பிறந்தோர் அமைவதற்கும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்.’ தனது குடும்பத்தினை நினைத்து பெருமை கொண்டான்.

“ஒரு குடும்பமே இருக்குன்னு சொல்றேன். ஆனாலும் பிடிவாதமா நிக்கிறேயேடா!” செல்லமாய் அவன் முடியை கலைத்து விட்டு அணைத்துக் கொண்டான். இப்பேற்பட்டவனின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் அவனது மனமும் கர்வம் கொண்டது.

“பிரணவி உங்களை சித்தப்பான்னு தானே கூப்பிட்டா! நானும் அப்படியே கூப்பிடவா?” அவளுக்கு நான் அண்ணன்தானே” மிக முக்கிய கேள்வியாக கேட்க, அரைகுறை மனதோடு சரியென்று தலையசைத்தான்.

‘சொந்தப் பிள்ளையே என்னை அப்பான்னு கூப்பிடுறதுக்கு வழியில்லாதப்ப… அடுத்தவன் பிள்ளை என்னை அப்பான்னு கூப்பிடுவான்னு எதிர்பார்த்திருக்க கூடாது.’ இயலாமைப் பெருமூச்சோடு தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டான்.

“உனக்காக நாங்க இருக்கோம்ங்கிறதை என்னைக்கும் மறந்துடாதே சக்தி! நல்லா படிக்கணும், தாத்தா பாட்டியை  பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோ… என்ன கஷ்டமா இருந்தாலும் தயங்காம சொல்லு, டேக் கேர்!” ஆதுரமாய் கூறிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டான். மனமெல்லாம் சொல்ல முடியாத உணர்வினால் பாரமேறிக் கொண்டது.

‘இரண்டே இரண்டு நாட்கள் இவனுக்காக யோசித்து அக்கறையுடன் பார்த்துக் கொண்ட பரிவிற்கே, பிரிந்து செல்ல மனம் இத்தனை வலித்துப் போகின்றதே! இதே வேதனையை என் பிள்ளைகளை நான் அழைத்துக் கொள்ளும்போது என் அண்ணன் குடும்பமும் அனுபவிக்குமா?’ உடன் பிறந்தவனின் நினைவில் யோசித்து  வருத்தம் கொள்ள,

‘அப்படி நினைத்தால் ஒரு தகப்பனுக்குரிய கடமையை செய்ய நினைக்கும் உன் பொறுப்பிலிருந்து நீ விலகிப் போக நேரிடும். உன் பிள்ளைகளை நீ வளர்க்க முடியாது.’  மனசாட்சி விடாமல் அவனுக்காக மட்டுமே யோசித்து பேசியதில் உள்ளத்தில் கொண்ட உறுதியில் மீண்டும் நிலையாக நின்றான்.

அறைக்குள் வந்த பிறகும் இறுக்கத்தோடு இருந்தவனைப்  பார்த்து மனைவிக்கு தான் வருத்தமாக இருந்தது. ‘எப்போதும் கலகலப்பாக இருப்பவன், நான் சோர்ந்திருக்கும் பொழுதெல்லாம் தானாகவே வந்து என்னை உற்சாகப்படுத்துபவன் இப்படி கவலையுடன் அமர்ந்திருக்கின்றானே!’ என அவளுமே ஆதங்கப்பட்டாள்.

‘நீ, எனக்கு தேவையில்லை.’ என்று கணவனை எடுத்தெறிந்து பேசியவள் தான், அவனது அரைமணி நேரக் கலக்கத்திற்கும் கலங்கி நிற்கின்றாள். இதை கவனித்திருந்தாலே அவளை அவளே உணர்ந்திருப்பாள். எதற்கும் ஒரு காலநேரம் வரவேண்டும்.

“என்னாச்சு ராம்?” 

“ஒன்னுமில்ல… உனக்கு சொன்னாலும் புரியாது.” வெறுமையான பேச்சில் தட்டிக்கழிக்க, விட்டு விடாமல் இழுத்துப் பிடித்தாள்.

“ஆமாமா… நீ பெரிய சாக்ரடீஸ் பாரு, உன் தத்துவம் எனக்கு புரியாம போறதுக்கு…” நக்கல் பேச்சில் நொடித்துக் கொள்ள,

“ம்ப்ச்… விடமாட்டியே!” என்றவன் சக்தியின் வீட்டில் நடந்ததை எல்லாம் விவரிக்க ஆரம்பித்தான். “குழந்தைங்க எல்லாம் அருமையா வளர்ந்துட்டு வர்றாங்க செல்லா… மூனு பேரையும் என் பொறுப்புல கொண்டு வந்துட்டு இதே போல வளக்கணும். அதைதான் யோசிக்கிறேன். என்னை அப்பாவா ஏத்துப்பாங்க தானே?” தன்னிலையில் மட்டுமே யோசித்துப் பேச, அவனை முடிந்த மட்டுக்கும் முறைத்தாள்.

“சொன்னா மட்டும் கோபம் வருது. ஆனா இப்பவும் நீ உன்னோட விருப்பத்தை மட்டுமே யோசிக்கிற சுயநலவாதியா தான் இருக்கே!” என்றதும் கோபத்தில் விறுவிறுத்துப் பேசினான்.

“போடி, உங்ககிட்ட போயி கேட்டேன் பாரு… நான் தனியா நின்னே அவங்களை வளர்த்துப்பேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீ அலங்காரத்துக்கு அம்மாவா வந்து நில்லு போதும். அதுவும் உனக்கு இஷ்டமிருந்தா மட்டுமே…” சிடுசிடுத்தவனை காரப்பார்வையில் முறைத்தாள்

“உன் பல்லவிய ஆரம்பிச்சிட்டியா?”

“சும்மா என்னையவே குத்தம் சொல்லாதேடி… ஆம்பளையோட சுயநலத்துல தான் இன்னைக்கு பல குடும்பங்கள் நல்ல நிலமையில இருக்கு. அதை யோசி!” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“என்னடா புதுசா தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிக்கற?” 

“என் பொண்டாட்டி, என் குழந்தைங்க, என் குடும்பம்னு ஆம்பளைங்க நினைக்கப் போயிதான் அவங்களை கண்ணுக்குள்ள வச்சு தாங்குறாங்க… இல்லன்னு உன்னால மறுக்க முடியுமா?” கேட்டவனுக்கு பதில் சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை.

“அப்போ பொண்ணுங்க எல்லாம் ஜோக்கர்ன்னு சொல்றியா?”

“ம்ப்ச்… நீ டாபிக் மாத்தாதே! என் பொண்ணு என் பொண்ணுன்னு உங்கப்பா உன்னை தாங்கிட்டு நிக்கிறாரே… உனக்காக பேரனைக் கூட பாக்காம இருக்காரே… அவரை விட பெரிய சுயநலவாதிய உன்னால காமிச்சுட முடியுமா? அவரையும் தப்பானவர்னு சொல்வியா நீ?” உஷ்ணத்துடன் நியாயம் பேசியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“அவர் அப்படி நினைக்கலன்னா நீ இப்படி பேர் சொல்ற அளவுக்கு முன்னேறி வளர்ந்திருக்க மாட்ட…” என்றவனை,

‘அட மூளை செத்தவனே! எத்தனை பொம்பளைங்க உன்னை வந்து கும்ம போறாங்களோ?’ மனதோடு தாளித்து கொட்டினாள்.

“என்ன, பதில் சொல்ல முடியலையா? வந்துட்டா, என்னை குத்தம் சொல்றதுக்கு! ஊருக்கு போனதும் மொத காரியமா பிள்ளைகளை நான் போயி கேக்கத்தான் போறேன். யார் என்ன சொன்னாலும் எனக்கு அது தேவையில்லாத ஆணி தான்.” முடிவாகக் கூறிவிட்டு படுக்கையில் சாய என்றுமில்லாத அயர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள் விஸ்வாதிகா.

‘உன் பிள்ளைங்கன்னு பாக்கறானே தவிர அவங்களோட மனசை யோசிக்காம இருக்கிறானே? அருமையா வளர்றாங்கன்னு சொல்றவனே அதை கெடுக்கிறதுக்கு கங்கணம் கட்டிட்டு அலையுறான். இவனுக்கு என்ன சொல்லி, எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியலையே! திருப்பி திருப்பி ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்கிறானே! கடவுளே இவனுக்கு நல்ல புத்தி வருமா வராதா?’ மனதோடு மட்டுமே அவளால் புலம்பிக் கொள்ள முடிந்தது. 

 

  

 

 

 

 

error: Content is protected !!