kv-15
kv-15
15
விஜய் அந்தப் புத்தகத்தின் முகப்பைப் பார்த்தே வியந்தான். இன்னும் அதை நன்றாகவே பராமரித்து வந்திருந்தனர். அந்தப் புத்தகம் அவனது வாழ்வில் ஏற்படுத்தப் போகும் பலவித கடினமான காண்டங்களை அறியாமலே அவன் அதை கைகளில் ஏந்தினான்.
அவனுக்குள் ஒரு புத்துணர்வு. ஒரு புத்தகம் நம் வாழ்வை எப்படி வேண்டுமானாலும் மாற்றும். அதை நாம் மனதில் எந்த அளவில் உள்வாங்கி இருக்கிறோம் என்பதற்கு அதுவும் ஒரு சான்று. ஆனால் இந்தப் புத்தகம் விஜயின் வாழ்வை பல கோணங்களில் வைத்துப் பார்க்கக் காத்திருந்தது. புத்தகத்திற்கும் அவனை பிடித்திருந்தது போலும்.
முதல் பக்கத்தில் ‘வம்ச சரித்திரம்‘ என்று குறிப்பிட்டு இருந்தது. அதைப் படித்தவன், ஜானவி தொண்டையைச் செருமவும் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
“எங்க குல வழக்கப் படி இதை யாரும் , ஐ மீன், எங்க வம்சத்த சேர்த்தவங்களத் தவிர வேற யாரும் படிக்கக் கூடாது..” அவன் ஆரம்பிப்பதற்கு முன்னே அவள் கூறிவிட,
“படிச்சா என்ன ஆகும்? அதுவும் சொல்லிருப்பாங்களே!” தலையச் சாய்த்து நக்கலாகக் கேட்க,
“உங்களுக்குத் தான் கஷ்டம் வந்து சேரும். எங்களுக்கு ஒண்ணுமில்ல.” அவளும் தோளைக் குலுக்கி சாதாரணமாகக் கூறினாள்.
“அப்படி எத்தனை பேர் இத படிச்சு கஷ்டப் பட்டத நீ பாத்தா?” இமைக்காமல் அவளைப் பார்க்க,
“யாரும் இது வரை படிக்கல. ஏன்.. இப்படி ஒரு புத்தகம் இருக்குன்னு கூட யாருக்கும் தெரியாது. அப்படி எதாவது ஒன்னு நடந்தா நான் பொறுப்பில்ல. அப்பறம் என்னை சொல்லக் கூடாது. அதுக்குத் தான் முன்னாடியே சொல்றேன்.” பொறுப்பாக கூறுவதாக அவள் காட்டிக் கொண்டாள்.
‘உன்னை சொல்றதுக்கு தான் ஆயிரம் விஷயம் இருக்கே! சாட்சியே இல்லாம கொலை பண்ற அளவுக்கு நீ கேடின்னு எனக்குத் தெரியும். உன்னை சொல்லக் கூடாதா..!?’ மனதில் உருமியவன், “அந்தக் கஷ்டம் உங்களுக்கு வராது. வேணும்னா, எனக்கு எதாவது ஆனா அதுக்கு ஜானவி வர்மா காரணம் இல்லன்னு எழுதி தந்துடவா?” கையைக் கட்டிக் கொண்டு அவளிடம் கேட்க,
அவளுக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது.
“இந்த நக்கல் எல்லாம் என்கிட்டே வேணாம். நான் யாருன்னு தெரியும் இல்ல..” கோபத்தில் அவள் இருக்க,
“எனக்குத் தெரியும், அதை இந்த உலகத்துக்கு கூடிய சீக்கிரம் சொல்றேன். இப்ப நான் கிளம்பறேன்.” புத்தகத்துடன் எழுந்தான்.
அவன் வார்த்தைகள் அவளை உள்ளே கிழித்தாலும், புத்தகத்துடன் அவன் கிளம்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைக் குறையதை விட அதுவே முதன்மையாகத் தோன்ற,
“ சாரி. நீங்க இதை கொண்டு போக நான் அனுமதிக்க முடியாது. வேணும்னா இங்கேயே இருந்து படிங்க. தினமும் இங்க வந்து படிச்சுட்டு போக நான் அனுமதிக்கறேன். ஆனா இந்தப் புத்தகம் இந்த அரண்மனைய விட்டு வெளிய போகக் கூடாது, அதுக்குன்னு ஒரு மதிப்பிருக்கு. அதை நீங்க புரிஞ்சுக்கோங்க.” ஜானவி கூறியது அவனை ஒரு வகையில் யோசிக்க வைத்தது.
அவனைப் பின் தொடரும் கிருஷ்ணமாச்சாரிக்கு இது தெரிந்தால், நிச்சயம் ஆபத்துத் தான் என்பதை அவனும் உணர்வான்.
“சரி இதுக்கு நான் சம்மதிக்கறேன். இப்ப ஒரு ரெண்டு மணி நேரம் எனக்குத் தனிமை தேவை, சோ…” என விஜய் ஜானவியை அனுப்ப முயல,
“நோ. என்னையும் இந்த பயணத்துல நீங்க இன்வால்வ் பண்ணனும்னு நான் கேட்டேனே. சோ நானும் இங்க தான் இருப்பேன். உங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப்ஃபுல்லா தான் இருப்பேன்.” அவள் வார்த்தைகளில் உண்மை இருந்தது.
விஜய் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த சோஃபா ஒன்றில் வாகாக அமர்ந்து கொண்டு அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் தல வரலாறு படிப்பது போலத் தான் ஆரம்பித்தது. பத்மநாப சுவாமி எப்படி அனந்தன் காட்டில் காட்சி தந்தார், பின்பு எப்படி தன்னுடைய நீளத்தை சுருக்கிக் கொண்டு மரத்தினால் ஆனா வடிவமாக மாறினார். பின்பு அரசன் மூலம் அங்கே கோவில் எழுப்பியதும் அதன் பின்னர் நடந்த தீவிபத்து ஒன்றில் மரத்தினால் ஆனா பெருமாள் சில சேதமடைந்துவிட, பின்பு மார்த்தாண்ட வர்மா கண்டகி நதியில் இருந்து சாளக்ராம கற்களைக் கொண்டு வந்து அங்கே பத்மநாபனுக்கு சிலை அமைத்தார்.
அதன் பின்னர் அவர்களின் சரணாகதி என வரலாறு போய்க்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அந்த ரகசிய அறைகளைப் பற்றி ஆரம்பித்தது. அப்போது சில குறிப்புகள் மட்டும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக தங்கமும் வைரமும் போன்ற பொக்கீஷங்களைப் பற்றி இருக்க , அதற்கு அடுத்த வரிகள் வேறு சில புரிந்துகொள்ள முடியாத எழுத்துக்களால் இருந்தது. அதில் எழுத்தும் படமும் இருக்க அப்படி ஒரு மொழி உலகிலேயே இல்லை என்பதை அவன் அறிவான். ஆனால் அதனை அவன் எப்போதோ தன் தந்தை வைத்திருந்த சில பழைய ஏடுகளில் பார்த்திருக்கிறான். அவர் பூஜை அறையில் அவரது முன்னோர்கள் வைத்திருந்தது என்று பாதுகாத்திருந்தார்.
அவசரமாக மற்ற பக்கங்களை அவன் புரட்ட ஆங்காகே இப்படித் தென்பட்டது. அவனது சந்தேகம் உறுதியானது. அனைவர்க்கும் தெரியும்படி பொக்கீஷக் குறிப்புகளைக் எழுதி வைத்துவிட்டு, அந்த ரகசிய அறையின் விஷயங்களை மட்டும் இப்படி புரியாத மொழியில் எழுதி இருப்பது விளங்கியது. உடனே நிமிர்ந்து அவன் ஜானவியைப் பார்க்க,
அவள் அருகில் எழுந்து வந்தாள்.
“இது மாதிரி இருக்கற விஷயங்கள் தான் அந்த ரகசிய அறையின் குறிப்புகள். இத மொழிபெயர்க்க உங்ககிட்ட எதாவது ஏடு அல்லது புத்தகம் மாதிரி இருக்கா.? நீயும் இதைப் பார்த்துத் தான் பல இடங்களுக்குப் போனியா?” கண்களில் பரபரப்புடன் நின்றான்.
“அப்படி எதுவும் இல்ல. ஆனா நானும் இது தான் அந்த ரகசிய அறையின் குறிப்புகள்னு தெரிஞ்சிகிட்டேன். அந்த வார்த்தைகள் எனக்கும் புரியல. அதுல இருக்கற படங்கள மட்டும் வெச்சு அப்படி இருக்கிற இடங்களை தேடிப் போய் பார்த்தேன். ஆனா அங்க எதுவும் இது சம்மந்தமா இல்ல.” விரக்தியில் சொல்ல,
“ம்ம்..அப்படி படங்கள மட்டும் வெச்சு கணிச்சுட முடியாது. உலகத்துல பல இடங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும். அது வச்சு கண்டுபிடிக்கறது சாத்தியமில்ல. கூடவே இதுல இருக்கிற அந்த எழுத்துக்களும் தான் அந்த இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டும். அதுக்குத் தான் படமும் எழுத்தும் சேர்ந்து எழுதி இருக்காங்க.
நான் அத கண்டுபிடிக்கறேன். நான் வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வரேன். நாளைக்கு நான் வரப்ப, இந்தப் புத்தகத்துல இருக்கற அந்த புரியாத வாசகங்களை மட்டும் தனியா ஒரு நோட்ல எழுதி வை. அதுல இருக்கற அதே ஆர்டர்ல இருக்கணும். அப்ப தான் சுலபமா கண்டுபிடிக்க முடியும். புரியுதா… அது மட்டும் இல்ல.. இதுல இருந்து ஒரு பக்கத்த நீ கிழிச்சு வெச்சிருக்கியே அதையும் நாளைக்கு நான் பார்க்கணும். காட் இட்..?” அவளுக்கு ஆணைகளைப் பிறப்பித்து விட்டு அவன் கிளம்ப எத்தனிக்க,
“என்ன ஆர்டர் போட்டுட்டு போறீங்க? நான் எதுக்கு இதெல்லாம் எழுதி வைக்கணும்.? நான் ஒன்னும் உங்க அசிஸ்டன்ட் இல்ல.” அவளின் வாய்துடுக்கு அவனிடம் எடுபடாது என்பதை மறந்தாள்.
உடனே அதற்கு பதில் தயாராக வைத்திருந்தான். “ஓகே நான் அப்ப புக்க எடுத்துட்டுப் போறேன்.” ஒரே வார்த்தையில் அவளை அடக்கினான். அவனது பார்வையே அவளை அடக்கி வைத்தது.
‘என்ன நெஞ்சழுத்தம் இருந்தா கொலையும் பண்ணிட்டுத் தெனாவட்டா திரிவ.. இதுல எனக்கு வேலை செய்ய மாட்டியா.. நான்சென்ஸ் ..’ அவனது உதடுகள் சொல்லத் துடித்தாலும் இப்போதைக்கு அவற்றை அடக்கியே வைத்தான்.
“இல்ல.. நானே எழுதி வைக்கறேன்..” முகம் உர்ரென வைத்துக்கொண்டு ஜானவி சொன்னது அவனுக்கு சற்று திருப்தி அளித்தது.
‘இதெல்லாம் சாதாரணம். உன்னை எல்லாம் கொட்டுற பனில நடுங்க நடுங்க இரவெல்லாம் நடக்கவிடனும்.’ இப்படி ஒரு தண்டனையை அவன் மனது ஏன் நினைத்தது என அவனுக்கே புரியவில்லை.
அவனுக்கே உரித்தான வேக நடையில் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்றதும், முதலில் அவள் கிருஷ்ணமாச்சாரிக்கு ஆள் அனுப்பி வர வைத்தாள். அவளுக்கும் அந்தப் புத்தகத்தைப் பற்றி அவரிடம் கூறும் எண்ணம் இல்லாததால் அதனை மறைத்து,
“அவன் அரசாங்க ஆர்டரோட வருவான்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல.” கத்தினாள்.
“நானும் இதை எதிர்ப்பார்க்கல. ஆனா, அவன் நீ சொல்ற பேச்சைக் கேட்க, நான் சொல்ற மாதிரி நீ செய்யணும்.” வழக்கம் போல அவளுக்கு ஐடியா சொல்ல ஆரம்பித்தார்.
“அத முதல்ல சொல்லுங்க. என்னையே வேலை வாங்கறான். சரியான திமிர். தலைலேந்து கால் வரைக்கும் திமிராவே அலையறான். அவன நான் சொல்றபடியெல்லாம் ஆட்டி வெச்சா தான் என் மனசு அடங்கும்.” கருவிக் கொண்டிருந்தாள்.
“அவனை நீ அடுத்த முறை பாக்கறப்ப எப்படியாவது இந்த கருப்பு சாந்தை அவன் நெத்தில வெச்சுடு.” என ஒரு சிறிய டப்பா ஒன்றை அவளிடம் நீட்ட,
“என்னது நான் அவனுக்கு வெச்சுவிடணுமா.. இதெல்லாம் என்னால பண்ண முடியாது. வேணும்னா அவனே வச்சுக்கற மாதிரி பண்றேன்.” ஆத்திரத்துடன் மறுத்தாள்.
“இல்ல மா. நீ தான் உன் கையால வைக்கணும். அப்ப தான் அவன் உன் வழிக்கு வருவான். உன்னோட லட்சியத்துக்காக நீ செய்யணும்.” கடைசியில் சொன்ன வார்த்தை அவளை அந்த டப்பாவை வாங்கிக் கொள்ள வைத்தது.
கிருஷ்ணமாச்சாரி, அவர் அந்த ரகசிய அறைக்குள் வந்ததைப் பற்றி ஜானவியிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஜானவியும் அவளது புத்தகத்தைப் பற்றி பேசவில்லை. இருவரும் தனித்தனியாக அவரவர் நோக்கங்களில் மூழ்கி இருந்தனர்.
கிருஷ்ணனைப் பொறுத்தவரை, ஜானவிக்கு அந்த ஆறவது அறையின் ரகசியம் அவளுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்று தான் சொல்லி இருந்தாள். ஆனால் அதற்குள் இருக்கும் மூலப் பொருளை அடைய அவள் போராடுவதை கிருஷ்ணனிடம் மறைத்தாள்.
அதே போல, கிருஷ்ணமாச்சாரி அவளுக்கு உதவ மட்டுமே உடன் இருக்கிறார். அவருக்கு வேண்டியது ராஜ உபசாரம் என்று மட்டும் தான் ஜானவி நினைத்திருந்தாள். ஆனால் அவருக்குப் பின் ஒரு பெரிய திட்டமும் கூட்டமும் இருப்பதை அவள் உணரவில்லை.
இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மறைத்துத் தான் அவர்களது கூட்டணி இருந்தது.
கிருஷ்ணன் சென்ற பிறகு, வேறு வழியே இல்லாமல், அந்தப் புத்தகத்தின் குறிப்புகளை தெளிவாக ஒரு நோட்டில் எழுத ஆரம்பித்தாள். ஒன்றையும் விடாமல் பார்த்துப்பார்த்து எழுதியும், வரைந்தும் வைத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி அமர்ந்து எழுதுவதால், கையும் கழுத்தும் வலி எடுக்கத் தொடங்கியது. வார்த்தைக்கு வார்த்தை விஜய் அவள் வாயில் அவலாகிப் போனான். திட்டித் தீர்த்தாள்.
‘இந்த பொட்ட உனக்கு வெச்ச பிறகு, நீ என் பின்னாடி நாய்க்குட்டி போல திரியனும். நான் என்ன வேலை சொல்லப்போறேன்னு காதை தீட்டி வெச்சுட்டு அலையணும். அப்ப தான் எனக்குத் திருப்தி. ஆனா அதை நான் இப்ப பண்ண மாட்டேன். எனக்கு வேண்டிய தகவலை நீ முதல்ல கண்டுபிடிச்சுக் குடு. அப்பறம் உனக்கு வைக்கறேன் ஆப்பு.. விஜயபூபதி… !.’
விஜய் அவன் வீட்டுக்குச் சென்றதும், உடனே அவனது பூஜை அறைக்குச் சென்றான். அவனது தந்தை பூஜை செய்யும் விக்ரகம் இருந்த அந்த சிறு மண்டபத்தின் கீழே ஒரு சிறு பெட்டி வைத்திருந்தார். அதை வெளியே எடுத்தான். அதில் பலவித ஓலைகளும், மக்கிய சில தாள்களும், பழுப்பேறிய சில பழைய காகிதங்களும் இருந்தன. அவரது அப்பா தாத்தா போன்றோர் வைத்திருந்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
அவர் அவ்வப்போது எடுத்து சுத்தப்படுத்தி வைக்கயில் விஜய் பார்த்திருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அதில் இப்படிப்பட்ட எழுத்துகளும் ஓவியங்களும் இருந்தது நினைவில் இருந்தது. வரிசையாக அவற்றை இப்போது பிரித்து வைத்தான். அப்படிப்பட்ட எழுத்துக்களுடன் ஓவியங்களும் இருக்கும் ஓலைகளை மட்டும் எடுத்துக் கொண்டான்.
காலையில் இருந்து வெறும் வயிற்றில் இருந்ததினால் இப்போது அவன் வயிற்றிப் பிசைந்து, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போக, நீண்ட நாட்களுக்குப் பிறகு கிச்சனுக்குள் சென்றான்.
அவனும் அவன் தந்தையும் சேர்ந்து சமைத்த காலங்கள் நினைவிற்கு வந்து அவனை வதைத்தது. இன்றும் அவன் வீட்டிற்கு வந்தால், அவனுக்காக அவனுக்குப் பிடித்த மிளகு போட்ட பருப்பு துவையலும் , வேப்பம்பூ ரசமும் மணமணக்க வைத்துக் கொடுப்பார்.
அவனுக்காக ஒரு கண்ணாடி பாட்டிலில் வேப்பம்பூ எடுத்து காய வைத்திருப்பார். அந்த பாட்டிலைக் கண்டதும் கண்ணைக் கறித்துக் கொண்டு வந்தது.
அந்த அனைத்து உணர்வுகளும் இப்போது ஜானவி மேல் கோபமாக மாறி இருந்தது.
சாதம் வைத்து, ரசம் வைத்து சூடாக உண்டவன், தனது ஆராய்ச்சி வேலையில் ஈடுபட்டான்.