தேனாடும் முல்லை – 5
தேனாடும் முல்லை – 5
தேனாடும் முல்லை-5
ராம்சங்கரின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் அவனது வீட்டில் அனைவருமே கூடியிருந்தனர். பரிமளவல்லி, மகள், மாப்பிள்ளைகளோடு அரவிந்தனும் இருக்க, புது சம்மந்தி விஸ்வநாதனும் காஞ்சனாவும் அவர்களுக்கு எதிரே அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இன்று இவர்கள் ஒன்றாக கூடியிருப்பதற்கு காரணம் புது மருமகள் விஸ்வாதிகா. இந்த அவசர கூட்டத்திற்கு காரணமான புது தம்பதியருக்காக அனைவரும் காத்துக் கிடக்கின்றனர். ஆசிரியப் பணிக்கு மீண்டும் செல்லத் தொடங்கியிருந்த கிருஷ்ணாவும் அந்த இடத்தில் இல்லை.
“ஆனாலும் இந்த பொண்ணு இவ்வளவு அழுத்தமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல…” பரிமளம் ஏகத்திற்கும் முகம் சுருக்கிப் பேச ஆரம்பிக்க,
“பெரிய இடத்து சம்மந்தம் விடாம தேடி வரும்போதே நாம யோசனை பண்ணி இருக்கணும்மா… உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு தயவு தாட்சண்யம் பார்த்ததுக்கு ரொம்ப நல்லாவே வச்சு செய்றாங்க!” ஒட்டுமொத்த பெண் வீட்டையே குறையாகப் பேசினார் சுதாமதி.
“உசந்த படிப்பும் பெரிய தொழில் பண்ற தைரியமும் கொடுக்குற திமிருதான் எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசச் சொல்லுது, வேறென்ன?” சாருமதி வழக்கம் போல பின்பாட்டு பாட யாருடைய பேச்சையும் விஸ்வநாதன், காஞ்சனாவால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
“எம் பெரிய மருமவளும் டீச்சர் வேலைக்கு போறவதான்… அதுக்குன்னு குடும்பத்த பார்க்காம இருக்காளா என்ன? புருஷன், புள்ளைங்க தோது பார்த்து வேலைக்கு போயிட்டு வரலையா… தேனியிலயே இருந்திருந்தா இந்நேரம் கவர்மென்ட் ஸ்கூல்ல போயிருக்கலாம். குடும்பத்துக்காக இங்கன மாத்திகிட்டதுல இப்ப பிரைவேட் ஸ்கூலுக்கு போறா… அது போல மாத்திக்க இவளுக்கு ஏன் வலிச்சுப் போகுதாம்?” பரிமளத்தின் உச்சபட்ச கோபம் சின்னமருமகளை குற்றஞ்சாட்டித் தீர்த்தது.
எந்த பேச்சிற்கும் மகளின் தரப்பில் இருந்து தகுந்ததொரு நியாயத்தை சொல்ல முடியவில்லை அவளின் பெற்றோரால்… அவர்களும் மகளின் மேல் அத்தனை கோபம் கொண்டிருந்தனர்.
பத்துநாள் தேனிலவை முடித்து விட்டு மறுவீட்டு விருந்திற்காக தாய் வீட்டிற்கு அவர்கள் வந்தபோது மகளின் புத்திசாலித்தனம் விஸ்வநாதனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது.
“அந்த ஹைதரபாத் புராஜெக்டுக்கு ஃபைனல் டாக்குமெண்ட்ஸ் அப்லோட் பண்ணி மெயில் அனுப்பியாச்சு டாட்… அந்த புராஜெக்ட் முடியுற வரைக்கும் நான் அங்கே போயி ஸ்டே பண்ணலாம்னு இருக்கேன். என்னோட நெக்ஸ்ட் சேலன்ஞ்சிங் டாக்ஸ் அதுதான்.” மதிய விருந்தை முடித்துக் கொண்டு ராம்சங்கர் ஓய்வெடுக்கச் சென்றிருக்க, விஸ்வாதிகா, தந்தையை பார்த்துப் பேச அலுவலக அறைக்கு வந்திருந்தாள்.
மகள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தார் விஸ்வநாதன். அவள் சொல்லும் விசயமெல்லாம் இவருக்கு இப்போதுதான் தெரிய வருகிறது.
“கம்பெனி சிஈஓ, நான் சொல்லாம நீ எப்படி அந்த புராஜெக்ட்ல இன்வால்வ் ஆக முடியும் செல்லம்மா? அதுல வொர்க் பண்றதுக்கு நான் உன்னை பெர்மிட் பண்ணவே இல்லையே?” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டார்.
மகளிடம் வெகுண்டு, வெளிப்படையாக கண்டிப்பு காட்டி பேசிப் பழக்கமில்லாதவரின் மனம், கொதிப்பை அடக்கிக்கொள்ள பெரும்பாடுபட்டது.
“சிம்பிள் டாட்… நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி அன்ட் மாஸ்டர் பில்டர் முறையில நான் இன்வால்வ் ஆகுறதுக்கு யாருடைய பெர்மிசனும் தேவையில்ல.”
“நான் உனக்கு கொடுத்த பவரை நீ மிஸ் யூஸ் பண்ற செல்லம்மா!”
“சோ வாட்? நீங்க ஓகே சொன்னா நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி-யா இருந்து இந்த புராஜெக்டை முடிச்சுக் கொடுப்பேன். இல்லன்னா வெளியே போயி வேற புராஜெக்ட் என்னோட தனிப்பட்ட முயற்சியில எடுத்து செய்ய ஆரம்பிப்பேன்.” திட்டவட்டமாக பேசினாள் விஸ்வாதிகா.
“அந்த புராஜெக்ட்காக மூணு மாசம் டே அன்ட் நைட் உக்காந்து ப்ளூ பிரின்ட் போட்டது என்னோட டீம். எங்க உழைப்பு கண்ணு முன்னாடி பிரம்மாண்டமா எழுந்து நிக்கும்போது அதோட ஒவ்வொரு வளர்ச்சியும் நான் நேர்ல பார்த்தே ஆகணும். தட்ஸ் ஆல்.” இலகுவாக தோள்குலுக்கிச் சொன்னவளை அழுத்தமாய் பார்த்தார்.
மகளை நிமிர்வாய் அறிவாய் வளர்க்கும்போது அடைந்த பெருமை எல்லாம் இப்போது அவரைப் பார்த்து பல்லிளிப்பதாய் தோன்றியது.
“எனக்கு எதிரா புராஜெக்ட் பண்ற அளவுக்கு நீ தயாராயிட்டியா செல்லம்மா?”
“தப்பா புரிஞ்சுக்காதீங்கப்பா… என் லைஃப் ஆம்பீசனே கன்ஸ்ட்ரக்ஷன்ல அக்சீவ் பண்றது தான். சுருக்கமா சொல்லப் போனா இந்த விசயத்துல நான் வெறியா இருக்கேன். அதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யவும் நான் தயங்க மாட்டேன்.” தெளிவாய் அடித்துப் பேச தோல்வியோடு பெருமூச்செறிந்தார் விஸ்வநாதன்.
“இருபது மாடிக் கட்டிடம். கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் முடிய கிட்டத்தட்ட ரெண்டுல இருந்து மூனு வருசமாவது ஆகும்டா செல்லம்மா… அதுவரைக்கும் நீ அங்கே போயி தங்கியே ஆகணுமா?”
“எஸ் டாட்… என் முடிவுல மாற்றமில்லை.”
“அப்போ ராம்?”
“அவரும் என்கூட வந்துடுவார்.”
“சொல்லிட்டியா… மாப்ள ஒத்துக்கிட்டரா?”
“இன்னும் சொல்லல… அவர் லீவ் முடியுற வரைக்கும் எங்கூட அவர் தங்கட்டும். அப்புறம் கிளம்பி அப்ராட் போகட்டும். அடுத்து லீவ் கிடைக்கும் போது வரட்டும் ப்பா!”
“இப்படி தனித்தனியா பிரிஞ்சு இருக்கவா, உங்களுக்கு, கல்யாணம் பண்ணி வைச்சோம்?”
“லிசன் டாடி… இந்த கல்யாணம் முழுக்க முழுக்க உங்க கம்பெல்சன்ல மட்டுமே நடந்தது. உங்க பொண்ணுக்கு நீ செய்ய வேண்டிய கடமை அதோட முடிஞ்சு போச்சு. இனி என் வாழ்க்கை என்னிஷ்டம். என்னால என் புரஃபசனை விட்டுட்டு எங்கேயோ போயி நாலு சுவத்துல அடைஞ்சுக்க முடியாது. ஃபேமிலி, ஹஸ்பென்ட் எல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம்தான்.
என் பின்னாடி வந்தே ஆகணும்னு நான் ராமை கம்பெல் பண்ண மாட்டேன். அதே போல என்னை அவர் கம்பெல் பண்றதையும் நான் விரும்ப மாட்டேன். அப்படி செஞ்சா தட்டிக் கழிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என் போக்குல நான் இருக்கேன். அவர் போக்குல அவரும் இருக்கட்டும். கிடைக்கிற லெசெர் பீரியட்ல நாங்க சேர்ந்து வாழ்ந்துக்கறோம்.” முகத்தில் அடித்தாற் போன்று பேசியவளை அறைந்து விடும் ஆத்திரம் தான் வந்தது பெற்றவருக்கு!
“இந்த பேச்சு உனக்கே அழகா இருக்கா? உன்னோட முடிவுக்கு மாப்பிள்ளை ஒத்துப்பாரா? இதுவும் ஒரு கம்பெல்சன் தானே!” இயலாமையுடன் கேட்க,
“அவரோட சம்மதம் வாங்கின பிறகு என்னோட காரியங்களை செய்யுற நிலையில நான் இல்ல… என்னோட முடிவை அவருக்கு ஸ்ட்ரைட்டா சொல்லிடப் போறேன். அவ்வளவு தான்.” சட்டமாகப் பேசிவிட்டு தனதறைக்குள் சென்று விட்டாள் விஸ்வாதிகா.
மகளின் இந்த புதிய அவதாரத்தை முற்றிலும் எதிர்பார்க்காத விஸ்வநாதன் மனைவியிடம் கூறி தன்மையாக மகளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லச் சொன்னார். ராம்சங்கரிடமும் அவ்வாறே சொல்லி மனைவியை கையோடு வெளிநாட்டிற்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்.
அத்தனையும் அவள் கேட்டால் தானே! அவளுக்கு சொல்லும் எந்தவொரு அறிவுரையும் கிணற்றில் போட்ட கல்லாக காதிற்குள் அடைந்து மந்தமாக புதைந்து போய் விடுகிறது.
இவளின் இந்த முடிவு தானாக கசிந்து பெரிதாவதற்கு முன், பெண்ணின் புகுந்த வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி விடுவதே உத்தமம் என்று புத்தி யோசனை கூறியதில் மனைவியோடு புறப்பட்டு சம்மந்தி வீட்டிற்கு வந்து விட்டார் விஸ்வநாதன்.
மகளின் முடிவை எடுத்துச் சொல்லி, தங்களுக்கும் அதில் உடன்பாடில்லை என்றும் கூறி, அவளுக்கு நல்லவிதமாக புரிய வைத்து விடுங்கள் என்ற வேண்டுகோளோடு இன்று அனைவரின் முன்பும் தவிப்புடன் அமர்ந்திருக்கிறார்.
“இவ சின்ன பிள்ளையில இருந்தே இப்படித்தான் நடந்துப்பாளா?” சுதாமதி மேற்கொண்டு குற்றமாக கேட்க,
“அப்படில்லாம் இல்லம்மா… ரொம்ப நல்ல பொண்ணு. சொல்லப்போனா அதிர்ந்து கூட பேசமாட்டா!” மகளின் சிறுவயதை நினைவு கூர்ந்து காஞ்சனா நெகிழ்ச்சியுடன் கூற, அவரின் கையைப் பிடித்து ஆறுதல் அளித்தார் விஸ்வநாதன்.
“நீங்க சரியா கண்டிச்சு வளக்கலன்னு இதுல இருந்தே தெரியுது. நீங்க செல்லம் கொடுத்துதான் இப்படி அதிகப்பிரசங்கியா நிமிந்துட்டு நிக்கிறா… எங்கம்மாவையும் மதிக்காம தான் பேசிட்டு போயிருக்கா!” சகோதரிகளின் வார்த்தைகள் மேலும் மனபாரத்தை கொடுக்க, ஊமையாகவே அமர்ந்திருந்தனர்
“அக்கா ஓவரா பேசாதே… அவங்களை பேசறதுக்கு நமக்கு ரைட்ஸ் இல்ல” சின்னக்குரலில் அக்காவை தடுத்த சுமதி, பின்னர் காதிற்குள் மெதுவாக, “நீ கேக்கிற இதே கேள்வி நம்ம பக்கமும் திரும்பினா நாம எங்கே போயி முட்டிக்க? நீங்க வளத்த லட்சணத்துல உங்க தம்பி ஊரே மெச்சுர அளவுக்கு பெருமையா நிமிர்ந்து நிக்கிற அழகுதான் தெரியுமேன்னு குதர்க்கமா நம்மளை கேக்கவும் வாய்ப்பிருக்கு. கொஞ்சம் அடக்கியே வாசி!” என்று கிசுகிசுத்தாள்.
பெண்களின் பேச்சு வளர்ந்து கொண்டே சென்றதே ஒழிய அமைதி அடையவில்லை. இதோ வருகிறேன் என்று சொன்ன புது ஜோடியும் மதிய உணவு நேரத்தில் தான் வந்து சேர்ந்தனர்.
முதல்முறை வந்தபோது கிடைத்த வரவேற்பு, விஸ்வாதிகாவிற்கு இப்போது கிடைக்கவில்லை. ‘கணவனே தேவையில்லையென்று சொல்லும் போது அவன் வீட்டு உறவுகளை இவள் எப்படி மதிப்பாளோ?’ மனதிற்குள் முளைத்த பெருத்த சந்தேகத்தில் அனைவரும் அவளின் முகம் பார்க்கவும் பிடிக்காமல் நின்றனர். சுமதி உட்பட!
தாயும் சகோதரிகளும் ராம்சங்கரை கேள்வியாகப் பார்க்க அவனுமே என்னவென்று புருவம் சுருக்கி பார்வையால் கேட்டான்.
“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியொரு பிரச்சனை, ஏன் மாப்ளே?” கதிரவன் ஆதங்கமாக கேட்க, பதிலே பேசவில்லை ராம்.
“புருஷன், பொண்டாட்டி விசயத்துல தலையிடறது எனக்கும் பிடிக்கல ராம்… எதுவா இருந்தாலும் சபைக்கு வராம உங்களுக்குள்ளேயே பேசி முடிச்சுக்க பாருங்கடா! வாழப்போறது நீங்க ரெண்டு பேரும் தான்… இதுல நாங்க பேசி, அதைக் கேட்டு நீங்க நடக்கணும்ன்னா அங்கே குடும்பம் நடக்காது. மிலிட்டரி ஸ்கூல் தான் நடக்கும்.” அரவிந்தனின் நடுநிலையான பேச்சினை அனைவருமே சரியென்று ஒத்துக் கொண்டனர்.
“தேங்க்ஸ் மாமா!” என்று விஸ்வாதிகாவே முன்வந்து அவனுக்கு நன்றி கூற, வெறுமையாய் பார்த்தான்.
“உன் மனசுல இப்படியொரு எண்ணம் இருக்குன்னு நீ கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும்மா… அதை விட்டுட்டு உன் பிடிவாதத்தை எங்ககிட்ட இறக்கி வைக்கக்கூடாது.” அரவிந்தனின் அடுத்த பேச்சிற்கு உடனே இடையிட்டான் ராம்சங்கர்.
“நான் பார்த்துக்கறேண்ணே… நல்ல முடிவை எடுத்திட்டு உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள அங்கிள் அவசரப்பட்டுட்டார்.” அழுத்தமாய் விஸ்வநாதனின் முகம் பார்க்க அவர் சோர்வாய் தலைகுனிந்தார்.
தனது கடமையாக அவர் மகளின் விஷயத்தை பொதுவில் சொல்லியிருக்க, அதுவே இப்போது பெரும் குற்றமாகப்படுகிறது மகளுக்கும் மருமகனுக்கும்… ஆக இவர்கள் இருவருமே ஏதோ ஒரு முடிவில் தான் அனைத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் சொல்லாமலேயே அனைவரும் புரிந்து கொண்டனர்.
“எல்லாருக்கும் பொதுவாவே சொல்லிடுறேன். என் பொண்டாட்டி, என் குடும்பம்னு நான் நல்லபடியாவே இருப்பேன். என்மேலே இருக்கற அக்கறையில யாரும் அடுத்தவங்களை இஷ்டத்துக்கு பேச வேணாம். அண்ணேன் சொன்ன மாதிரி என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்.” தெளிவாக கூறிவிட்டு,
கதிரவனைப் பார்த்து, “சாரி மாமா… என்னால எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியெல்லாம் நடந்துக்க முடியாது. எனக்கு எப்படி விருப்பமோ அப்படி வாழ ஆசைபடுறேன்.” மிதப்பாய் பேசி முடித்தான்.
மனைவியைப் பார்த்து, ‘போகலாமா’ என்று ஜாடை பேச, அவளுமே சரியென்று எழுந்து நின்றாள். “நாங்க வர்றோம்.” என்றதோடு வெளிநடப்பு செய்தவர்களின் மீது அனைவருக்கும் அத்தனை ஆத்திரம்! இவர்களுக்காக கூடியிருந்தவர்களின் மீதான மதிப்பும் மரியாதையும் தரமில்லாத இலவசப் பொருட்களாகவே இறக்கிப் பார்க்கப்பட்டது.
“இவன் எப்பவும் நம்மள ஜோக்கராவே யூஸ் பண்றான்.” சுதர்சன் சத்தமாகவே பேச,
“பொண்டாட்டிக்காக வரிஞ்சு கட்டிட்டு நிக்கிறதுக்கு நம்ம மச்சானுங்க கிட்டதான் பாடம் படிக்கணும் தம்பி.” பெருமூச்செறிந்தார் முகிலன்.
“வீட்டுக்கு போயி ஃபேன் போடாம பொண்டாட்டிக்கு விசிறி விட்டா தானா பாடம் தெரிஞ்சிடும்ண்ணே…” அடாவடியாக பதில் கூறிய சுதர்சனை மனைவியின் உஷ்ணப் பார்வை காவு வாங்கியது.
***
தங்களின் புதிய பிளாட்டிற்கு வந்த பொழுதில் இருந்தே கணவனை முத்தமிட்டு கொஞ்சுப் பேசியே கொண்டாடித் தீர்த்து விட்டாள் விஸ்வாதிகா.
அதிசயத்திலும் அதிசயமாக தன் கையால் அவனுக்கு மதிய உணவினைப் பரிமாறினாள். வழமையாக பரிமாறுவதற்கு வந்து நிற்கும் பணியாளை உள்ளே அனுப்பி விட்டு, கணவனுக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் எடுத்து வைத்தாள்.
“இன்னைக்கு லன்ஞ் உன் பேவரைட் நான்வேஜ் தான். மீன் குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் பிரியாணியும் ரெடி!” உற்சாகமாக கூறிக்கொண்டே தட்டில் பரிமாறினாள்
“என்ன ஸ்பெசல் செல்லா? பசி நேரத்துல இவ்வளவு டேஸ்ட் அன்ட் ஃபேவரைட் வாவ்…” வாயில் எச்சில் ஊறியபடியே சாப்பிடத் தொடங்கினான் ராம்சங்கர்.
“நத்திங்… நான்தான் காருல வரும்போதே ஆர்டர் பண்ணேன். நமக்காக பிரிபேர் பண்ணியிருந்த வெஜ் மீல்ஸ் எல்லாத்தையும் வேலைக்காரங்களுக்கு தூக்கி கொடுத்திட்டேன்.”
“குட்… குட், நீயும் உக்காந்து சாப்பிடு செல்லா!” என்றவன் அவளையும் தன்னோடு உணவருந்த வைத்தான்.
“என்ன டெசர்ட் ஆர்டர் பண்ணட்டும் ராம்?” மனைவியின் அடுத்தகட்ட கவனிப்பில் திக்குமுக்காடிப் போனான் ராம்சங்கர்.
“இதுவே ரொம்ப ஹெவி டா… இதுக்கு மேல எதுவும் வேணாம். சாப்பிட்டு அப்படியே தூங்குனா சொர்க்கத்துக்கு போயிடுவேன்.” என்றபடி கண்களைச் சொருகிக் காட்ட,
“கை கழுவிட்டு சொர்க்கத்துக்கு போ மேன்? இல்லன்னா நாய் வந்து நக்கிட்டு போயிடும்.” கேலி செய்தபடி அவன் கைகளுக்கு தண்ணீர் ஊற்றி தட்டில் கை கழுவ வைத்தாள்.
“அய்யோயோ புல்லரிக்க வைக்கிறியே செல்லா டார்லிங்… என் பொண்டாட்டி என்மேல பாசத்தை அடைமழையா பொழியுறா… நோட் பண்ணுங்கடா… நோட் பண்ணுங்கடா!” குறும்பாகப் பேசியவன் வீம்புக்கென்றே அவளது ஓவர் கோட்டில் வாயையும் துடைத்து, வம்பை விலைக்கு வாங்கினான்.
“அடிங்… கொஞ்ச விட்டா ஓவர் அட்வான்டேஜ் எடுக்கிறடா!” இவள் குரலை உயர்த்த ஆரம்பித்த வேளையில் படுக்கையறைக்கு ஓட்டம் எடுத்திருந்தான்.
பின்னால் துரத்திக் கொண்டு வந்தவளை வகையாக தனது கை வளைவிற்கு கொண்டு வந்தவன், “இப்போ குடுடி… வஞ்சனையில்லாம வாங்கிக்கறேன்.” வகையான முத்தத்திற்கு ஆசையுடன் முகம் கொடுத்து நின்றான்.
“அதெல்லாம் ஒரு எமோசன்ல கொடுத்தது மை பாய், இப்படி எல்லாம் திடீர்னு கேட்டா வராது.”
“எனக்கு இப்ப கொடுத்தே ஆகணும். இல்லன்னா நான்ஸ்டாப்பா நான் ஆரம்பிச்சுடுவேன். எப்படி வசதி?” உல்லாசமாக மிரட்ட, அவனின் கிளிப்பிள்ளையாகிப் போனாள்.
மனைவி ஆரம்பித்ததை கணவன் தொடர்ந்திட மதிய நேரமும் காதல் பாடத்தை கருத்தோடு படித்து நிறைவான உறக்கத்தில் ஆழ்ந்து எழுந்தனர்.
“இன்னைக்கு உன்னோட ட்ரீட் அவ்வளவு தானா? இன்னும் ஸ்பெசல் எதுவும் இல்லையா?” ஆசை அடங்காமல் அவளை அள்ளிக்கொள்ள முயன்றவனை கையால் தடுத்து கண்களில் கண்டிப்பு காட்டினாள் விஸ்வாதிகா.
“உனக்கு டிரீட் கொடுத்தேன்னு யார் சொன்னா?”
“யார் சொல்லணும்? உன் பெர்ஃபார்மன்சே உன்னை காட்டிக் கொடுக்குதே செல்லம்!” இவன் கண்சிமிட்ட, செல்லமாய் மார்பில் அடித்தாள்.
“நிக்க வைச்சு கேள்வி கேக்க நினைச்ச எல்லார்கிட்ட இருந்தும் என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தியே… அதுக்கு சின்னதா ஒரு தாங்க்ஸ் கிவ்விங் மாதிரி, உன்னை கொஞ்சமே கொஞ்சம் கேர் எடுத்து பார்த்தேன். மத்தபடி எதுவும் இல்ல…”
“நிச்சயமா எதுவும் இல்லையா? கொஞ்சங் கூட எம்மேல லவ் ஃபீல் இல்லையா பேபி?” கொஞ்சல் குரலில் கேட்க,
“உனக்கு மட்டும் இருக்கா என்ன?”
“ஆமான்னு சொல்லித்தான் தெரியணுமா?”
“பொய்… பொய், உனக்கு இருக்கிற ஃபீல் எல்லாமே லஸ்ட் தான், லவ் கிடையாது.”
“போடி… நீதான் பொய் சொல்ற, சீட்டிங் பண்ற!”
“நான் ப்ரூஃப் பண்ணவா? ஒரு மணி நேரம் நான், உன் முன்னாடி இருக்கேன். என்னை டச் பண்ணாம உன்னால இருக்க முடிஞ்சா, உனக்கு என் மேல கொஞ்சமே கொஞ்சம் லவ் இருக்குன்னு அக்செப்ட் பண்ணிக்கிறேன். டீலா!” அமர்த்தலாகக் கேட்டு, கட்டைவிரலை உயர்த்த ஏகமாய் நெளிந்தான் ராம்சங்கர்.
“நான் தூங்கும் போது இந்த டாஸ்க் வைச்சுக்கலாமே செல்லா?”
“அந்த நேரத்துல கூட நீ என்னை டச் பண்ணிட்டே தான்டா இருக்க… யூ ஆர் இன் மை லிட்டில் ஃபிங்கர்.” சுண்டுவிரலை காட்டி, ‘நீ அங்கே இருக்கிறாய்.’ என்பதாகக் காட்டியவளின் பாவனையில் அவளது கன்னம் கிள்ளி செல்லமாய் கொஞ்சிக் கொண்டான்.
“உன் முன்னாடி நான் ரொம்ப வீக் தங்கம். எனக்கு இந்த டெஸ்ட் எல்லாம் வைக்காதே சரியா?”
“என்னை உரசிகிட்டே இருக்க எப்படியெல்லாம் ஜால்ரா அடிக்கிற நீ!”
“விட்டுத்தள்ளு… உன்னோட சின்ன தாங்க்ஸ்ல நானும் ரொம்ப ஹாப்பியா என்ஜாய் பண்ணேன். இதுபோல அடிக்கடி தாங்க்ஸ் சொல்லணும் செல்லா… என்னோட சின்ன ஆசை அதுதான்.”
“ஒஹ்… பொண்டாட்டி உன்னை கொஞ்சுறது சின்ன ஆசைதானா? அப்போ பெரிய ஆசை என்னவோ?” பொய்க் கோபத்துடன் கேட்க, விரிந்த சிரிப்பை உள்ளிழித்துக் கொண்டது ராம்சங்கரின் முகம்.
“பெரிய ஆசையும் ஒன்னு இருக்கு. அது நடக்கிறதுக்கும் நீதான் வேணும் செல்லா!” ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான்.
“என்ன ஆசை ராம்? யூஎஸ் வந்துடுன்னு என்னை கார்னர் பண்ணப் போறியா?” ரசனைகள் கரைந்த குரலில் சற்றே கறாராய் கேட்டாள் விஸ்வா.
“ச்சே… ச்சே, அதெல்லாம் இல்ல. அப்படி சொன்னாலும் அது நடக்காதுன்னு எனக்கு தெரியும்.”
“பரவாயில்ல, இந்த கொஞ்சநாள்ல என்னை நல்லாவே அப்செர்வ் பண்ணியிருக்க.”
“ஆனா, நீ என்னை புரிஞ்சு வச்சுருக்கியான்னு எனக்கு தெரியலயே செல்லா?”
“உன்னைப் பத்தி என்ன புரிஞ்சுக்கணும்? சொல்லு ராம், முடிஞ்சா ட்ரை பண்றேன்.”
“நிஜமாவா? ஆனா நீ என்னோட இருந்தா தான், நான் நினைக்கிறதும் நடக்கும்.” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
“நேரடியாவே கேக்கறேன். ஒளிவு மறைவில்லாம பதில் சொல்லு… என்னைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும் தானே!” அழுத்தமாக மனைவியைப் பார்த்து கேட்க நொடிநேரம் திகைத்து, பின்னர் அவனையே உற்றுப் பார்த்து தெரியுமென்று தலையசைத்தாள் விஸ்வாதிகா.
“என்ன தெரியும்? சொல்லேன், கேப்போம்.”
“இப்ப எதுக்குடா அதெல்லாம்?”
“இல்ல… நீ சொல்லு.” என்றதும் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“உன்னோட வெளிநாட்டு வாழ்க்கையில நீ பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்ததா சொல்லி இருக்காங்க…”
“அவ்வளவு தானா?”
“நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் கூட டேட்டிங் போயிருக்க, அப்புறம்….” தடுமாறி நொடிநேரம் நிறுத்தியவள்,
அவன் முகம் பார்த்து, “உன்னோட டுவின்ஸ் சில்ட்ரன்ஸ் உன் அண்ணன் குழந்தைகளா வளர்ந்து வர்றாங்க… லிவ் இன் ரிலேசன்ல உனக்கு பொறந்த குழந்தைங்க அவங்க… உன் பார்ட்னரோட, அந்த ரெண்டு குழந்தைகளையும் வேண்டாம்னு சொல்லிட்டு, திரும்பவும் கொஞ்சநாளுக்கு பிறகு, அவங்களை வளக்கிறதுக்காக உங்க வீட்டுல போயி கேட்டுருக்க… ஆனா உன்கிட்ட அந்த குழந்தைகளை ஒப்படைக்க மறுத்துட்டாங்க… நிறைய அட்வைஸ் பண்ணி இனிமேலாவது ஒழுங்கா வாழப்பாருன்னு மன்னிச்சு மறுபடியும் குடும்பத்துல ஏத்துகிட்ட பிறகுதான் உனக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க!” சுருக்கமாக கூறிவிட்டு அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.
தன்னைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொண்டு பேசியவளை இமைக்காமல் பார்த்தான் ராம்சங்கர்.
“என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் எப்படி என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்ச?” திகைப்பு மாறாமல் கேட்டான்.
“எங்கப்பா அம்மா செலக்சன்கிறது மட்டுமே எனக்கு போதுமானதா இருந்தது. ஆனா அவங்களுக்கு உங்க குடும்பத்து மேல இருந்த நம்பிக்கை, பிடிப்பு அவங்க பொண்ணையே கொடுக்கற அளவுக்கு உயரமா வளர்ந்து போச்சு.
உன் குடும்பம், உன்னை பத்தி நம்பிக்கையா என் பேரன்ட்ஸ் கிட்ட சொன்ன வார்த்தைகள். வயசுக்கோளாறுலயும் சகவாச தோஷத்துலயும் ஒரு மனுஷன் தடம்மாறிப் போறது இயல்புதான்னு எங்கப்பா, உனக்காக, என்கிட்ட சொன்னா சமாதானம்.
எல்லாத்துக்கும் மேல நீ என்னைக் கை விட்டாலும், உன் குடும்பம் என்னை தாங்கிக்கும் என்கிற சராசரி தகப்பனோட மனக்கணக்கு. இதெல்லாம் தான் எனக்காக உன்னை தேர்ந்தெடுத்தார் எங்கப்பா. அவர் முடிவுக்கு நான் சம்மதிச்சேன். அவ்வளவு தான்.” அழகாய் கூறி முடித்தாள் விஸ்வாதிகா.
“நீ நம்புறியா செல்லா? நான் மாறிட்டேன், பழைய வாழ்க்கையை மறந்துட்டு புது மனுசனா வாழறேன்னு நீ நினைக்கிறியா?”
“அவ்வளவு தூரம் உன்னை அப்செர்வ் பண்ணிக்கிற அளவுக்கு நாம இன்னும் பழகல ராம். அப்படியே நீ மாறாம இருந்தாலும் எனக்கு பெரிய பாதிப்பு இல்ல.” என்றதும் திடுக்கிட்டான்.
“ஏன்?”
“ஏன்னா, எனக்கு நீ எங்கேயும் முக்கியமில்லை. உன் சப்போர்ட்ல நான் வாழ விரும்பல… அதே போல என் சப்போர்டும் உனக்கு கிடைக்காது. மீண்டும் தனது நிலையை ஆணித்தரமாய் கூறி முடித்தாள்.
“பட், என்னால உன்னை மாதிரி இருக்க முடியாது செல்லா…”
“என்ன சொல்ற? உன்கூடவே என்னை வரச் சொல்றியா?”
“ம்ப்ச்… நீ உன்னை மட்டுமே நினைச்சு பாக்குற… சுருக்கமா சொல்லப் போனா என் முடிவும் கிட்டத்தட்ட உன் முடிவை போலத்தான்.”
“என்ன சொல்ல வர்ற? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றியா?”
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதே என் குழந்தைகளை என் பொறுப்புல எடுத்து வளர்க்கதான்.” என்றதும் அதிர்வுடன் பார்த்தாள் விஸ்வா.
“என் குழந்தைகளை நான் உரிமையா கேட்க, எனக்கொரு வாழ்க்கை துணை தேவை. எனக்கு மனைவின்னு ஒருத்தி இல்லன்னா, என் பிள்ளைகளை என்னை நம்பி எந்த காலத்துலயும் கொடுக்க மாட்டாங்க… அதுக்கு தான் உன் சப்போர்ட் எனக்கு தேவைப்படுது.” அசராமல் கூறியவனை முறிக்கக் கூடத் தோன்றவில்லை.
‘இவனும் இவன் முடிவும்… இவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?’ உள்ளுக்குள் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது அவளால்…
“அதுக்கு நான் என்ன செய்யணும்?” பொறுமையுடன் கேட்டாள்.
“என் அண்ணிகிட்ட என் குழந்தைகளை திருப்பி கேக்கணும். அதுக்கு நீயும் நானுமா சேர்ந்து போயிதான் கேக்க முடியும்.” என்றதும் சலிப்பாய் பார்த்தாள்.
“புருஷன் பேச்சைக் கேட்டு, என்னோட முடிவை மூட்டை கட்டி வச்சுட்டேன். இந்த பிள்ளைகளை ராமோட சேர்ந்து வளர்த்து ஆளாக்கப் போறேன். குழந்தைகளோட சந்தோசமா குடும்பம் நடத்தப் போறோம்னு அவங்க நம்புற அளவுக்கு சொல்லி, நீ என்கூட யூஎஸ் வந்துடு!”.
“வந்துட்டு, என் ஆசையை எல்லாம் புதைச்சுக்க சொல்றியா?” ஆத்திரத்துடன் கேட்டாள்.
“அப்படியில்லை, கொஞ்சநாள்ல நமக்குள்ள சரிவரலன்னு நானே உனக்கு டிவோர்ஸ் கொடுத்து உங்கப்பா கிட்ட அனுப்பி வைக்கிறேன். அந்த கொஞ்சநாள் கேப்புல குழந்தைங்க கிட்டயும் நான்தான் அவங்க அப்பா சொல்லிப் புரிய வச்சுடுவேன். அங்கே உள்ள டிரெண்டுக்கு செட் ஆகிட்டா, குழந்தைகளும் இங்கே வர விரும்ப மாட்டாங்க… சோ, என் பிள்ளைகள் என் கைக்கு வந்து சேர, உன்னோட சப்போர்ட் எனக்கு ரொம்ப தேவையா இருக்கு.”
“இதுக்கு முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ ராம்?”
“சிம்பிள், உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன். குழந்தைகளுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லி வம்படியா அவங்களை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவேன். இந்த தடவை யாரையும் பார்க்க மாட்டேன். எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கற அளவுக்கு பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க… சோ, என் வேலை ஈஸி. பட், என் குடும்பத்துல தான் திரும்பவும் குழப்பம், வருத்தம் எல்லாம்.” பிடிவாதமாக கூறியவனை கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் போல அவளின் கைகள பரபரத்தது.
“ரொம்ப கேவலமா இருக்கு உன் முடிவு. சுத்தமா இது செட் ஆகாது ராம். இப்படியே இருப்போம். அப்பா செய்ய வேண்டிய கடமையை சித்தப்பாவா இருந்து செய். இதுல ஒன்னும் தப்பில்லை. பாவம் உன் அண்ணனும் அண்ணியும்… உன்னால நிம்மதி இழந்து நிறைய கஷ்டங்களுக்கு பிறகு இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுறாங்க! அதுல மண்ணள்ளி போட்டுடாதே!” என்றதும் வெகுண்டு விட்டான் ராம்.
“என்னடி, இன்னுமா இந்த நினைப்பு மாறல? இந்த சால்சாப்பு சொல்றதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதே… ஒழுங்கா நாளைக்கே என் கூட வர்ற, பிள்ளைகளை கேட்டு இங்கே கூட்டிட்டு வர்றோம். அடுத்த வாரம் விசா ரெடி பண்ணிட்டு எல்லாரையும் யூஎஸ் கூட்டிட்டு போறேன். நீ ஹைதராபாத் போகப்போற மூனு மாசத்துக்குள்ள உனக்கும் எனக்கும் சரிவராதுன்னு சொல்லி உன்னை இங்கே அனுப்பி வைக்கிறது என் பொறுப்பு.” இறுதியான முடிவாகக் கூற, அவளோ பிடிவாதமாக மறுத்தாள்.
“வேண்டாம் ராம்… திரும்பவும் பிரச்சனை ஆரம்பிச்சு கேவலப்பட்டு நிக்காதே… உன் அண்ணியை நினைச்சு பாரு, எத்தனையோ எதிர்ப்புகளை மீறி உன் குழந்தைகளை, தன் குழந்தைகளா நினைச்சு வளர்த்துட்டு வர்றாங்க… அவங்க மட்டும் மனசு வைக்காம போயிருந்தா இந்நேரம் உன்னோட குழந்தைகள் எந்த ஆசிரமத்துல எப்படி சீரழிஞ்சிட்டு வளர்ந்திருக்குமோ தெரியாது. அவங்க நல்ல மனசை புண்படுத்தாத ராம். அது உனக்கு நல்லதில்லை.” அவளின் இயல்பிற்கு மீறியே கணவனிடம் கெஞ்சினாள் மனைவி.
“எனக்கு யாரோட அட்வைஸும் தேவையில்லைடி… நாளைக்கு நம்ம வீட்டுக்கு போறோம், நீ வர்ற!”
“என்கிட்டயே உன் பிடிவாதத்தை காமிக்கிறியா? சரி, உன் பிள்ளைகளை கேட்க நான் வர்ற மாதிரி, என் பிள்ளையை கேட்க நீ வர்றியா ராம்? உன் பிள்ளைகளுக்கு அம்மாவா நான் வந்து நிக்கணும்னு நினைக்கிற நீ, என் பிள்ளைக்கு அப்பாவா, என் கூட வந்து நிக்கிறியா ராம்?” அதிராமல் அழுத்தமாக கேட்க, அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான் ராம்சங்கர்.