6
கிருஷ்ணமாச்சாரி அந்த அகோரியின் சித்து விளையாட்டில் தன் மனத்தை பறிகொடுத்தார்.
“இப்படிப் பட்ட வித்தைகளை அந்த கிழவன் சொல்லிதருவானா…இல்ல இவர் கிட்ட எப்படியாவது இதை நாம கத்துகிட்டு அங்க போய் காட்டனும். நான் தான் பெரியாளுன்னு நிரூபிக்கணும்.” அகோரி அமர்ந்திருந்த அந்த சிறு குகை போன்ற அமைப்பை நோக்கிச் சென்றார்.
உக்கிரமாக ஏதோ மந்திரங்களைச் சொன்னவர் , பறந்து கொண்டிருந்த நெருப்பு உருண்டைகளைச் சுற்றி அந்த மண்டை ஓடுகளையும் சுழல வைக்க பலமாகச் சிரித்துக் கண்விழித்தார். எதிரே கண்களில் ஆவலுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்து கை காட்டி அழைத்தார்.
“உனக்கும் இது கத்துக்கணுமா?” எனவும்,
“ஆமா ஐயா.. எனக்கு சொல்லித் தரீங்களா?” என்றதும் , அவனது கண்களில் தெரிந்த எதுவோ ஒன்று அவர சம்மதிக்க வைத்தது.
“வா என் பின்னாடி..” வெகு தூரம் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். குளிர் உடலைக் கிழிக்க ஆரம்பித்தது. வெறும் பருத்தி வேஷ்டியும் மேல் துண்டும் போட்டிருந்தவருக்கு நடுங்க ஆரம்பிக்க , உடையே இல்லாமல் வெறும் கோமணம் மட்டும் கட்டி உடலெங்கும் விபூதியைப் பூசிக் கொண்டிருத்த அகோரி அதெல்லாம் ஒன்றுமே இல்லை எண்பது போல நடந்து கொண்டிருப்பது வியப்பை அளித்தது.
சில தூரம் சென்ற பிறகு, “ஐயா ரொம்ப குளிருது, இதுக்கு மேல நடந்து வர முடியாது. இன்னும் எவ்ளோ தூரம் கூட்டிட்டு போவீங்க” எனக் கத்த , அந்த அகோரி உடனே சிரித்துவிட்டு, கிருஷ்ணனைச் சுற்றி ஒரு நெருப்பு வளையும் உருவாக்கினார்.
அதன் கதகதப்பு சுகமாக இருக்க, அதை அனுபவித்த கிருஷ்ணன் , “குருவே, எனக்கும் இதெல்லாம் சொல்லித் தாங்க” என அவர் முன் மண்டியிட்டார்.
அதன் பிறகு அந்த அகோரியிடமிருந்து கற்கக் கூடாத மாந்த்ரீகத்தை கற்க ஆரம்பித்தார். காற்றில் கண்ணுக்குத் தெரியாமல் திரிகின்ற துஷ்ட சக்திகளை ஈர்க்கும் வித்தையை சுலபமாக கற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி தன் உடலை விட்டு வெளியேறி மீண்டும் தன் உடலுக்குள் புகும் தந்திரம் வாய்க்கப் பெற்றார்.
இவை அனைத்தையும் கற்கும் அந்த நேரத்தில் அனந்தாச்சாரி முறைப்படி ஆகம விதிப்படி மந்திரங்கள் கற்றுக் கொண்டார். தன் உடலில் இருக்கும் நூற்றிப்பண்ணிரடு நாடிகளை ஒரே நேர்க்கோடான சக்கரங்களில் பிடித்து நிறுத்தி அவற்றைக் கையாலும் முறையைக் கற்றுக் கொண்டார். அதுபோக, மூலிகை வைத்தியம் கற்றார்.
ஒரு நாள் அந்தப் பெரியவர் அனந்துவை அழைத்து, “உனக்கு சில ரகசிய ஏடுகள் தேறேன். அதை படிச்சுத் தெரிஞ்சுக்கோ. உனக்கு அது பிற்காலத்துல உதவும்” என்றவர் சில நைந்து போகும் நிலையில் உள்ள ஏடுகளைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அங்கிருந்த நதியில் குளித்துவிட்டு, கடவுளை வேண்டிக் கொண்டு அந்த ஏடுகளை படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க அவரது தொண்டை வரண்டது.
“ஐயா, இது…” என்று தயங்க,
“இந்த உலகத்தில் யார் கண்களுக்கும் தெரியாத விஷயங்கள். இது அகத்தியர் கைப்பட எழுதியதுன்னு என்னுடைய தாத்தா வுக்கு தாத்தா அவங்க தாத்தா என்று பரம்பரையா பாதுகாத்து வரது. ஆனா என் பரம்பரைல யாரும் இதை முயற்சி செய்யல. நீயும் செய்ய முடியாது. ஏன்னா உனக்கு அந்த ரேகை இல்ல. யாருக்கு அது வைக்கணும்னு இருக்கோ அவனை நீ உன் வாழ்வுல சந்திப்ப. அவனுக்கு நீ ஒரு கருவியா இரு.” என்று வாசிக்கச் சொல்லிச் சென்றார்.
அவரின் ஆணைப்படி அவற்றைத் தெரிந்து கொண்டவர், உள்ளம் தூய்மை அடைவதை உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபதின் முடிவில் இருக்க, ஆனால் எண்பது வயதினைப் போல மனம் பக்குவப்பட்டது.
அவரின் குரு அவருக்கு ஆசி வழங்கி அனுப்ப, கிருஷ்ணனைத் தேடிச் சென்றார். ஊர் முழுக்கத் தெரியும் கிடைக்கவில்லை. பின்பு அவர் மட்டும் தனியே ஊருக்குச் சென்றார்.
கிருஷ்ணன் வரவில்லை. நடந்தது அனைத்தையும் தந்தையிடம் சொல்ல, அவரோ அன்று ஆரூடம் பார்த்து தெரிந்துகொள்ள நினைத்தார்.
அவன் திரும்பி வரும்போது அவனாக இருக்க மாட்டான் என்று அறிந்துகொண்டார்.
அவருக்கு அப்போதே அது தெரிந்திருந்தது.
ஆனால் அனந்துவின் முகத்தில் ஒரு புதிய ஒளி தெரிந்தது. முன்பை விட இன்னும் நிதானமாகவும் தெளிவாகவும் சிந்தித்து செயல்பட்டார். நாட்களும் வருடங்களாகிச் சென்றது.
அவரது தங்கை ஒரு நாள் கிணற்றடியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். மிகுந்த சிரமப் பட்டு அவள் வேலை செய்வதைப் பார்த்தவர் அவளுக்குத் திருமண வயது எட்டி விட்டதை அப்போது தான் உணர்ந்தார். அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துத் தர வேண்டியது அண்ணனின் கடமை என அவளிடம் சென்று கேட்டார்.
“சித்ரா உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்?” அவளுக்கு கிணற்றில் தண்ணீர் இரைத்து ஊற்றினார்.
சற்று வெட்கம் கொண்டவள், “எனக்கு இது மாதிரி எல்லாம் கஷ்டப் படாம வீட்டில் வேலையாட்கள் இருப்பது போல வாக்கப்படனும்.” தனது ஆசையைக் கூறினாள்.
தங்கையின் ஆசை புரிந்தது.
“சரிம்மா பாக்கறேன்.” என்றவர் அவளது ஜாதகத்தை கையில் எடுக்க, அந்த நேரம் அங்கு வந்தார் கிருஷ்ணமாச்சாரி.
“அவ அண்ணனான எனக்கும் அந்தக் கடமை இருக்கு. நான் பாத்துகறேன்.” பிடுங்கிக் கொண்டார். அந்த நல்ல பேரும் தனக்கே வந்து சேரவேண்டும் என்ற ஆசை.
“என்ன டா இத்தனை வருடம் என்ன பண்ண? எங்க போன?” அவர்களது தந்தை வந்து நின்றார்.
“எனக்கு வேண்டியதை நான் கத்துகிட்டேன். கேட்டது கிடைக்கும் சக்தி. நினைத்ததை அடையும் திறன். என்ன வேணும் கேளுங்க..என்னால கொண்டு வர முடியும். உங்க பையன நினச்சு நீங்க பெருமை படலாம்.” ஆணவத்தோடு கூறினார்.
அனந்துவிற்கு எல்லாம் புரிந்தது. கிருஷ்ணனின் நடவடிக்கை அவரது நெற்றியில் இருந்த கருப்பு நிற பொட்டு , அணிந்திருந்த கருப்பு உடை , கருப்பு மாலை சொன்னது, அவன் இப்போது ஒரு மாந்திரீங்கன் என்று. எதுவும் பேசாமல் அந்த இடம் விடு அகன்றார்.
அவரது தந்தைக்கு பொருக்கவில்லை. “டேய் கிச்சா.. உன்னை நான் எப்படி எல்லாம் பாக்கனும்னு ஆசைப் பட்டேன். இது என்ன கோலம். உன் நடவடிக்கை எனக்குப் பிடிக்கல. நான் யார் கிட்ட உன்னை பாடம் படிக்க அனுப்பினேன். நீ யார் கிட்ட என்ன கத்துட்டு வந்திருக்க..? வருத்தமாக ஆரம்பித்து கோபத்தில் முடித்தார்.
“அப்பா.. இந்த உலகத்தை ஆளும் திறமை என்னிடம் இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல அதையும் சாத்தியப் படுத்திடுவேன். இதை விட உங்களுக்கு என்ன வேணும்?” முறைப்பாகவே சொல்ல,
“ச்சீ… பேசாத. இந்த உலகத்தை ஆள ஒருத்தனால தான் முடியும். அது அந்தக் கோவில்ல பள்ளி கொண்டிருக்கும் பத்மநாபன். வேற யாருக்கும் அந்த அருகதை இல்லை. நீ எல்லாம் ஒரு தூசி. உன்னால ஒரு கல்லைக் கூட அசைக்க முடியாது. மொதல்ல இதை எல்லாம் கழட்டி வீசிட்டு குளிச்சுட்டு சுத்தமான வெண்ணிற ஆடை எடுத்து உடுத்து. நெற்றியில் சந்தனம் வை.” கோபத்தில் கத்தினார்.
“என்னால இனிமே அது முடியாது. என்ன சொன்னீங்க , கல்லைக் கூட அசைக்க முடியாதா… இப்ப சொல்லுங்க.. இந்த வீட்டில் இல்லாத பொருளை எல்லாம் கொண்டு வரவா? இல்ல இந்த வீட்டையே தங்கத்தாலா ஆக்கிடவா?” பதிலுக்கு கர்ஜிக்க,
கடைசி முயற்சியாக மகனை வழிக்குக் கொண்டு வர நினைத்தார்.
“அனந்து…” உள்ளே சென்றவரை அழைத்தார் தந்தை.
ஆனந்து சாந்தமாக வர, “நம்ம ஸ்வாமி அறையில இருக்கற அந்த சின்ன வெள்ளிப் பெட்டியைக் கொண்டு வா…” உத்தரவிட்டார்.
அனந்து சென்று அந்தக் கடவுளை ஒரு முறை வணங்கிவிட்டு அந்த சிறிய பெட்டியைக் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டார்.
“இதுக்குள்ள என்னோட தெய்வம் இருக்கு. உன்னால முடிஞ்சா இந்தப் பெட்டிய திறந்து எடுத்துக்காட்டு பாக்கறேன்.” தன் கையை நீட்டினார்.
கிருஷ்ணமாச்சாரி முதலில் சாதாரணமாக நினைத்து அதை தொடப் போக , அந்தப் பெட்டி நகர்ந்தது. ஆச்சர்யத்துடன் கிருஷ்ணன் பார்க்க, இப்போது தீவிரமாக மனதில் ஏதோ மந்திரத்தைக் கூறி மீண்டும் தொடப் பார்க்க , மறுபடியும் அது நகர்ந்தது.
தந்தை முன் அவமானப் பட மனமில்லாமல் கண்ணை மூடி அந்தப் பெட்டிக்குள் இருக்கும் கடவுளை காண நினைக்க, அவர் கண்களுக்கு ஐந்து தலை நாகம் காட்சி தந்தது.
சாட்சாத் அந்த பத்மநாப சுவாமி என புரிந்துகொண்டார். அது அவரால் தொடமுடியாத ஒன்று என்றும் தோன்ற,
“உள்ள இருக்கற அந்த சாளக்ராம கல்லை உன்னால தொடக் கூட முடியாது இல்லையா?” தந்தை ஏளனமாகச் சிரித்தார்.
“…”
“அதுக்குத் தான் சொன்னேன். ஒரு கல்லைக் கூட அசைக்க உன்னால முடியாதுன்னு.. இப்ப புரிஞ்சுக்கோ. தெய்வ சக்திக்கு மிஞ்சுன சக்தி எதுவும் இல்ல. உன் வாழ்க்கைய அழிச்கிக்காத. நான் சொல்ற படி கேளு.” சிறுபிள்ளைக்கு சொல்வதைப் போல அவனுக்கு எடுத்துரைக்க,
அவமானப் பட்ட கிருஷ்ணன் தந்தை சொல்லை ஏற்க மறுத்தார்.
“இப்ப வேணா என்னால முடியாம இருக்கலாம். ஆனா நான் செஞ்சுக் காட்டறேன்.” சபதம் செய்தார்.
“அப்ப உனக்கு இந்த வீட்டுல இடம் இல்ல. வெளிய போ” என்றுவிட்டார்.
அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றார் கிருஷ்ணன். போகும்போது அனந்து தங்கையின் ஜாதகம் கேட்க , அதை விட்டெறிந்து விட்டு சென்றார்.
இதில் மிகவும் வருந்தியது தங்கை சித்ரா தான். வீட்டை விட்டு சென்ற அண்ணனை யாரும் அறியாமல் தேடிச் சென்றார். அவர் ஒரு மண்டபத் திண்ணையில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
சித்ரா அவருக்கு நீர் மோர் எடுத்துச் சென்று கொடுத்தார். தங்கையின் பாசத்தை உணர்ந்த கிருஷ்ணன் அதை வாங்கிக் குடிக்க ,
“அண்ணா, உன்னால எல்லாம் முடியுமா?” ஆசையாக கேட்க,
“முடியும்மா .. உனக்கு என்ன வேணும் சொல்லு..” என்றார்.
தான் வாழப் போகும் இடம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்ல,
“உன்னோட ஆசையை நான் நிறைவேத்தறேன். உன்னைத் தேடி மாப்பிள்ளை வருவான். நீ கவலைப் படாத.” என்றார்.
“நீ எங்க தங்குவ..” வருத்தம் மேலிட அவள் கேட்க,
“கவலைப் படாத நான் அரண்மனைல தாங்கிப்பேன்.”
ஆச்சரியமாக பார்த்தாள் சித்ரா. “என்னது அரண்மனையா?”
“ஆமா மா. அரண்மனைல இருக்கற ராஜா எனக்குத் தெரிந்தவர் , அவரை எப்படியாவது என் சித்து வேலை காட்டி மயக்கி நான் சொல்றபடி கேட்கவைப்பேன். அவரே எனக்கு அங்க தங்க ஏற்பாடு செய்வார்.” சிரித்தார் கிருஷ்ணன்.
“அப்பப்ப என்னை கவனிச்சுக்கோ அண்ணா…” தங்கையும் சிரிக்க , இருவரும் தங்கள் பாதையை நோக்கிச் சென்றனர்.
கிருஷ்ணன் சொன்னபடியே சில விஷயங்கள் நடக்க அந்த ராஜா அவரை அருகில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு அங்கேயே தங்க ஒரு இடமும் கொடுத்தார். ராஜ போக உணவை உண்டு நிம்மதியாக இருந்தார் கிருஷ்ணன்.
அனந்து முன்னை விட பூஜைகளில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது கோவிலுக்கு சென்று வந்தார். அப்போதே அவருக்கு கோவிலுக்குள் இருக்கும் ரகசிய அறைகள் பற்றி அகக்கண்ணில் தெரிந்தது.
அதுவும் பத்மனாபரின் நிவலரைக்குக் கீழ் இருக்கும் அந்த அறையில் இருக்கும் மர்மங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது என்று உணர்ந்தார். கண்ணை மூடி அவற்றைக் காண அவர் நினைக்கும் போதெல்லாம் ஒரு பெரிய ஒளி அதைக் காணவிடாமல் செய்தது.
அதை அறிந்து கொள்ள நினைத்து அவர் தன் குரு சொல்லிகொடுத்த படி தனது சக்திகளை அடக்கி மூன்றாவது கண் வழியாக அதைக் காண விரும்பினார். கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது அந்த சக்தியைப் பார்த்து.
கிருஷ்ணன் தன் தங்கைக்கு வரன் ஏற்பாடு செய்து கொடுக்க அன்றிரவு யாரும் அறியாமல் காட்டுப் பக்கம் சென்றார். அங்கே கோலமிட்டு அக்னியை அந்தரத்தில் வளர்த்தார். யட்சிணி உபாசனம் செய்தார். ஒரு சில நேரத்திலேயே தீயில் இருந்து ஒரு நீல உருவம் தலையை மட்டும் காட்டி காட்சி கொடுத்தது.
“என் தங்கைக்கு இருக்கும் வரை பணக்கார வாழ்வு வேண்டும். திருமணம் செய்து அவள் செல்வ செழிப்பில் இருக்க வேண்டும். அதற்கு ஒரு மாப்பிள்ளையை அனுப்பு” என்று கட்டளையிட்டார்.
“அப்படியே!” என்று கூறி யட்சி நிமிடத்தில் மறைந்தது.
அவர் கேட்டது போலவே அடுத்த நாளே மாப்பிள்ளை வீட்டார் வாசலில் வந்து நிற்க,
அனந்து வந்தவர்களை அழைத்து அமர வைத்தார். திடீரென எப்படி வந்தார்கள் என வெகுவாக யோசிக்கவில்லை. கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருப்பான் என்று தெரியும். ஆனாலும் அவன் எப்படி ஏற்பாடு செய்தான் என்பதை அந்த நேரத்தில் யோசிக்காமல் விட்டார்.
சித்ராவைத் தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக் காலில் நின்று அடுத்த ஒரே மாதத்தில் திருமணமும் செய்து கொண்டான். அதன் பிறகு தான் விதி விளையாடியது.