தேன் பாண்டி தென்றல் _ 4
தேன் பாண்டி தென்றல் _ 4
- Posted on
- Nanthlala Ramalakshmi
- July 11, 2021
- 0 comments
4
அழகிய வீர பாண்டியன் முன் இருக்கும் சவால்கள் இரண்டு .
ஒன்று: அம்மாவிடம் தேன்மொழிப் பற்றிச் சொல்லி அவளைப் பொண்ணு பார்க்கும் அளவுக்கு அவரைத் தூண்டுவது
இரண்டாவது முக்கியமானது: தேன்மொழியின் சம்மதத்தைப் பெறுவது.
‘அட மடப் பய மவனே, நீ ரெண்டாவது சொன்னதுதான்டா முதலாவது’ என்று அவன் அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் அவனுக்கு உரைக்கும்படிச் சொல்லி இருப்பார்.
அதில் அவன் கோட்டை விட்டதுதான் அவன் கல்யாணக் கதையே.
இப்போது என்ன? அவனுக்குப் பிடித்தப் பெண்ணை அம்மாவுக்குப் பிடிக்க வைப்பது.
முதலில் அவனுக்கு அவளை எப்படிப் பிடித்தது?
அன்று அந்த அதிகாலை நேரத்தில் முதன் முதலில் இந்த காலனிக்குத் தன் தாயைப் பின்னால் அமர்த்திக் கொண்டு வெள்ளைத் துப்பட்டா கழுத்தில் மாலையாக தவழ ஸ்கூட்டியில் வலம் வந்தவள் இன்றும் இவன் கண்களுக்குள்.
இப்போது கிட்டத்தட்ட அனைத்து வேலை செல்லும் மகளிரும் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறார்கள்.
அவ்வாறு ஓட்டும் போது அவர்களின் முகத்தில் தெரியும் கர்வம் அலாதியானது.
பில் போடும் வேலைக்குப் போனாலு சரி, பெட்டி போடும் வேலைக்குப் போனாலும் சரி, பெரிய மானேஜராகப் போனாலும் சரி .தங்கள் வண்டியை தாங்களே ஓட்டிக் கொண்டு குறித்த நேரத்தில் அலுவலகத்தை அடையும் ஆனந்தமே தனிதான்.
அப்படி தேன்மொழி ஆனந்தமாகத் தன் தாயை அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டோம் என்ற மகிழ்வில் இந்தக் காலனியில் முகப்பைத் தொடும் போது ஹேய் என்ற ஆனந்தக் கூச்சலிட்டவாறு உள்ளே வர அன்று காலனி ஆரம்பித்த நாள் என்று குடியிருப்போர் சங்கத்தில் இருந்து அதி காலையிலேயே கொண்டாட்டங்களை ஆரம்பித்து இருந்தார்கள்.
அதில் இளசுகள் தவுசண்ட்வாலா பற்ற வைத்த நேரமும் அவள் ஸ்கோட்டி உள் நுழைந்த நேரம் ஒன்றாக இருக்க வாசலிலேயயே பிரேக் போட்டு நின்றான்.
பட்டாசின் புகை மூட்டத்தின் நடுவே அதிலிருந்து வந்த நெடியைத் தாங்க முடியாமல் காற்றில் கைகளை அவள் அசைத்துக் கொண்டு இருந்த போதுதான் பால் பாக்கெட்டுகளை வாங்கி வைக்க வந்திருந்த இவன் அவளைப் பார்த்தான்.
அன்று கொஞ்சம் குளிராக இருந்ததால் குரங்கு குல்லாவும் கழுத்தைச் சுற்றி மப்ளரும் அணிந்து இருந்தான்.
சின்ன வயதில் இருந்தே அப்படித்தான். இத்தனைக் குளிர் ஆகாது அவனுக்கு. மதுரை கந்தக பூமியில் பிறந்து மூன்று நான்கு வருடங்கள் வளர்ந்தவன் இவ்வூரின் இதமான காலநிலையை ஏற்றுக் கொண்டாலும் அதிகாலைக் குளிரை ஏற்க முடியாமல் குல்லாவுடன் அலைவான்.
பாக்கியம் இதெல்லாம் கடந்து வந்தவர் அல்லவா? தெனாவெட்டாக பட்டாசு வெடிப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பட்டாசு நெடி அவரை ஒன்றும் செய்யவில்லையோ என்னவோ?
புது வீட்டில் பால் காய்ச்சுவதற்கான அனைத்து எற்பாடுகளும் செய்து விட்டு பழைய வீட்டை காலி செய்து அதிலிருந்த பொருட்களை முன்பே இங்குள்ள வீட்டில் வைத்து விட்டார்கள்
பால் காய்ச்சிய பின்தான் தங்க வேண்டும் என்ற சாங்கியத்திற்காக முன்தினம் இரவு தங்கள் பழைய வாடகை வீடடிற்குப் போய் தங்கிவிட்டு அதிகாலையில் இங்கு வந்தவர்களைத்தான் பட்டாசு வெடித்து வரவேற்றது ஸ்டார் காலனி.
காலனிக்குப் புதிதாக யாரோ வருகிறார்கள் என்பதுடன் அவன் விட்டிருந்தான்.
இப்போதும் அவர்கள்தான் இவர்கள் என அறியவில்லை இவன்.
பட்டாசு புகை மெல்ல மெல்ல மறைய இவன் கண்களை நிறைத்தாள் தேன்மொழி.
தங்கள் புது வீடு இருக்கும் இடத்தை ஆசையாகச் சுற்றிப் பார்த்தவள் கண்களில இந்தக குல்லாக் காரனும் பால் ஏஜெணட்டும் படத்தான் செய்தார்கள்.
அவர்களை அலட்சியாகக் கடந்து தன் விழிகளை பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த இளசுகளிடம் திரும்பி முகம் மலர்ந்தாள்.
அவள் அவ்வளவு செய்ததே பெரிது. அதெல்லாம் முன்னே பின்னே தெரியாதவர்களைப் பார்த்து சிரித்து விட மாட்டாள்.
அவளுக்குத் தெரிந்தவர்களைப் பார்த்தால்தான் சிரிப்பு என்ற வஸ்து அவள் உதடுகளில் ஒட்டும்.
இங்கு வந்த இத்தனை மாதங்களில் இங்குள்ளவர்கள் பழகி விட்டபடியால் முகத்தில் சிரிப்புடன் காணப்படுகிறாள். அவ்வளவுதான்.
பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்த ஏஜெண்ட்டான இவன் தோழன் “ இவங்க இங்க புதுசா குடி வர்றவங்க போல. நேத்து மத்தியானம் பால் கொண்டு வர்றப்போ இங்க சாந்திநகர் முதல் தெருவுல இருக்குற புது வீட்டை ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க” எனத் தகவல் தந்தான்.
அவமானப்பட்டான் ஆட்டோக்காரன் மொமன்ட் அது.
பின்னே? இவனுக்குத்தான் ஊர் விசயம் எல்லாம் தெரிந்திருக்கும். இவள் விசயத்தில் கோட்டை விட்டதுடன் இவன் தோழனே ஆனாலும் இன்னொருவர் எடுத்துக் கொடுக்கும்படி ஆகிவிட்டதே? என அவமானமாகப் போய்விட்டது.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்க அவள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டாள்.
நாம் பலரும் பலரையும் பார்க்கிறோம். ஆனால் அவரவரர்கள் துணையை – இணையை அவரவரர்கள் முதன்முதலில் பார்க்கும் தருணம் அழகானது.
பிற்பாடான வாழ்க்கை எப்படி இருந்தாலும் அந்த இனிய நிகழ்வுகளை அசைபோடும் போது மனதில் தென்றல் வீசத்தானே செய்யும்? (தலைப்புல வர்ற தென்றல் இந்தத் தென்றல் இல்லபா)
அப்படி ஒரு தருணம்தான் அது என்பதை அன்றே உணராத பாண்டியன் கடையை எடுத்து வைத்து கடவுளைக் கும்பிட்டு கல்லாவில் உட்கார்ந்தான்.
எப்போதும் காலையிலேயே பச்சைத் தண்ணியில் குளித்து விடுவான். வீட்டில் இருந்து கடைக்கு வரும்வரை குல்லாவுடன் இருப்பான் கடைக்குள் போனதும் அறை வெப்பநிலை இவனுக்கு சாதகமாக இருப்பதால் குல்லாவைக் கழற்றி விடுவான்.
இதனால் ஜலதோசம் இதுவரை அவனுக்குப் பிடித்தது இல்லை. அதனால் இது சரியா தவறா என்று யோசிக்காமல் அப்படியே செய்து வருகிறான்.
தேன்மொழி வீட்டில் நல்ல நேரத்தில் நிம்மதியாக பூஜை முடித்துவிட்டு பாலை நல்ல நேரத்தில் காய்ச்சத் தேடும்(!) போதுதான் சொல்லி வைத்திருந்த பசும்பால் வரவில்லை என்று உணர்ந்து பயந்து போனார்கள் தாயும் மகளும்.
உடனடியாக பாக்கெட்பால் நினைவு வர கைப்பையை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள் தேன்மொழி.
வருபவர்களுக்கு காபி டீ க்கும் காண்ட்ராக்டில் சொல்லி இருந்ததால் அதற்கு என்று தனியாக பால் வாங்கி இருக்கவில்லை.
தன் கடையின் முன் வந்து நின்ற தேன்மொழியை ஆர்வமாகப் பார்த்தான் பாண்டியன்.
அவசரமாக ஐம்பது ரூபாயைக் கொடுத்து “ பால் ரெண்டு பாக்கெட்” என்றாள்.
“எத்தனை லிட்டர்?” என்றான் பாண்டியன் பதிலுக்கு.
பொதுவாக அரை லிட்டர் பாக்கெட் பால்தான் வாங்குவார்கள். இவள் எதற்கு கேட்கிறாள் என்று தெரியவில்லையே?
கடைக்கு வேலைக்கு வருபவர்கள் ஒன்பது மணிக்கு மேல்தான் வருவார்கள். அதுவரை அவன்தான் பார்த்துக் கொள்வான். எனவே இவன்தான் கேட்டான்.
அதற்கே அவளுக்குக் கோபம் வந்து விட்டது.
இருந்தாலும் அடக்கிக் கொண்டு “ பால் காய்ச்ச …ரெண்டு அரை லிட்டர்“ என்று சொன்னபோது எத்தனை அடக்கினாலும் அவளது கோபம் அவனுக்குத் தெரியத்தான் செய்தது.
ஆனால் அது பற்றி அவனுக்கு என்ன வந்தது?
ஏதோ பார்க்க அம்சமாக இருக்கிறாள் என்று சற்று நேரம் பார்த்தான்தான். அதற்காக அவள் என்ன சொன்னாலும் பொறுத்துப் போவானா என்ன?
அதே நேரம் வாடிக்கையாளர்களை மனம் கோணப் பேசக் கூடாது என்பதும் அவர்களின் தலையாய பாடம் அல்லவா?
பிரிட்ஜில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தவன் மீதி சில்லறையை எடுத்துக் கொடுப்பதற்குள் அவள் வண்டியில் ஏறி இருந்தாள்.
என்ன வேகம்? என்ன கோபம்? ஆனால் அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
அவளுக்குக் கொடுக்க வேண்டிய இரண்டு ரூபாயை எடுத்துத் தனியே வைத்தான். எப்போது பார்த்தாலும் கொடுத்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டான்.
எப்போது மறுபடியும் வருவாள் என்று உள்ளுக்குள் குறுகுறுக்கத் தொடங்கி இருந்தது.
செல்போனைக் கையில் வைத்து நோண்டிக் கொண்டு இருந்தவன் ஆர்வக் கோளாறு அதிகரிக்க பாக்கெட் பால் ஏஜெண்டுக்குப் போனைப் போட்டு இருந்தான்.
ஒரே ரிங்கில் போனை எடுத்தான் பால்தினகர் .
அவன் பெயர் தினகர். பால் பாக்கெட் போடுவதால் பால் தினகர் என்று காரணப் பெயர்.
“என்ன பாண்டி? இப்பதான் வந்தேன். அதுக்குள்ள போனைப் போட்டுட்ட?” என அளவளாவினான்.
“அது சும்மாதான். சும்மா உன்கிட்டப் பேசனும்னு தோணுச்சு…. அதான்…” என இழுத்தான்.
“சரி நம்பிட்டேன். கேக்க வந்ததைக் கேளு” என போலியாகச் சலித்துக் கொண்டது இங்கு இவனுக்குக் கண்ணாடியாகத் தெரிந்தது.
அதற்கு எல்லாம் அஞ்சினால் தகவல் சேகரிப்பது எப்படியாம்?
“இல்ல இன்னிக்கு ஒரு புதுப் பொண்ணு நம்ம காலனிக்கு வந்துச்சே?”
“ஆமா”
அதில் அவன் இவனை கேலி செய்வது போலத் தோன்றவும் –
“அதில்ல மாப்ள …”
“எதில்ல?”
“ச்சூ… நான் தப்பா ஒன்னும் கேக்கல..”
“நானும் தப்பா ஒன்னும் சொல்லலியே?”
இவன் இத்தனை பம்முவதற்குக் காரணம் இருந்தது.
பொதுவாகப் பெண்களைப் பற்றிப் பேசிக் கிண்டல் செய்து கொள்வான்தான். ஆனால் எந்தப் பெண்ணையும் குறிப்பிட்டுப் பேசியது இல்லை. அதே நேரம் பெண்களிடம் நாகரீகமாகத்தான் நடந்து கொள்ளுவான்.
அப்படித்தான் அவன் நடந்து கொள்ள வேண்டும். இரண்டு கடைகளை வைத்துக் கொண்டு மக்களுடன் தொடர்பில் இருப்பவன் நல்ல பெயர் எடுக்கவில்லை என்றால் கடையில் வியாபாரம் ஆகுமா என்ன?
அதுதான் இவர்கள் சரக்கு அடித்த சமயங்களில் ஒன்றிரண்டு கருத்துக்களைப் வாலிப வயசுக்காரனாகப் பேசி மனதைத் தேற்றிக் கொள்ளுவான்.
அதற்கும் வேட்டு வந்துவிட காதல் திருமணம் செய்து கொள்ளுவது என்று முடிவெடுத்திருந்தான்;.
பெரிய குடும்பத்துப் பெண்ணைக் காதலித்தால் எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டி இருக்கும் என்ற நினைப்பில்தான் குடும்பத்தில் ஒற்றையாக இருப்பவளாகத் தேடிக் கொண்டு இருந்தான்.
இவனெல்லாம் எங்க விளங்க? என்று காதல் தேவன் சுவற்றில் முட்டிக் கொண்டதில் அவருக்கு நெற்றி புடைத்து இருக்கும் பாவம்.
பேசாமல் இவன் … என்ற அவர் உதட்டை மடித்துக் கடிக்கத் தொடங்கினால் இவன் தந்தைக்கு உதவியாக மளிகை பொட்டலம் மடிக்கப் போய்விடுகிறான்.
இவனுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு அழகு பாக்கலை… பாக்கலை… பாக்கலை… என்று அறுந்த ரீலை ஓட்டிக் கொண்டு இருந்தார் காதல் தேவன்.
ஒரு வழியாக தேன்மொழி அவன் கண்ணில் பட்டதோடு கருத்திலும் பட்டு விட்டாள்.
பால் தினகருடன் உரையாடலைத் தொடர்ந்தான் பாண்டி.
“ அதில்லடா…. அந்தப் பொண்ணு பத்தி அப்பா கேக்கச் சொன்னாரு.”
“என்னது!”
“அட ஆமாண்டா. “ என மொட்டையாக இவன் முடித்து விட –
“இது அந்த ஈஸ்வரப் பெருமாளுக்கே அடுக்காதுடா.”
“ஏன்?”
“ம்? அப்பா?”
“ஆமா அப்பா”
“ஒரு பொண்ணைப் பத்திக் கேக்கச் சொன்னாராக்கும்?”
“டெபனட்லி மச்சான்” என இவன் வடிவேலு சார் மாடுலேசனில் கூற –
“சரி. சொல்லித் தொலை. என்ன வேணும்?”
“இவ்வளவு நேரம் என்ன சொன்னேன்? அந்தப் பொண்ணு பத்தி ஏதோ தெரிஞ்சிருக்குதானே உனக்கு? அதை எனக்கும் சொன்னா என்னவாம்?”
“ சரி நீ நல்லவன்தான். நம்பிக் தொலைக்கிறேன். விடு. நல்லாக் கேட்டுக்கோ. அந்தப் பொண்ணுக்கு அப்பா இல்லை. வீட்ல தாய் மக ரெண்டு பேருதான். லோனைப் போட்டு நகை நட்டை வித்து இந்த வீட்டை வாங்கி இருக்காங்க.
பொண்ணு காலேஜ் வரை படிச்சிருக்கு. சித்தியும் சித்தப்பாவும் இருக்காங்க இந்தப் பொண்ணுக்கு. அவங்கதான் கூட நின்னு அத்தனை வேலை இவங்களுக்குச் செஞ்சு குடுத்தாங்க. அவ்வளவுதான்டா எனக்குத் தெரியும்.
ஆக மாப்ள … பெரிய குடும்பத்துலதான் பொண்ணு எடுப்பேன்னு அம்மா சொல்லிகிட்டு திரியுது. பார்த்து பதனமா நடந்துக்கப்பா” என்று சொல்லி முடித்தான்.
பால்தினகர் பல ஊர்களுக்கும் வியாபார நிமித்தம் போய் வருவதால் குறிப்பிட்ட ஸ்லாங் அவனுக்கு வருவதில்லை.
பாண்டி மட்டும் ரொக்கமா என்ன? அவனும் எல்லா பாஷையும் எல்லா ஸ்லாங்கும் கலந்துகட்டிதான் அடிக்கிறான்.
தினகர் சொன்னதில் பலவற்றை இவன் காற்றில் விட்டு விட்டான்.
வீட்டுக்கு ஒரே பொண்ணு என்பதுதான் அவன் கவனத்தை நிறைத்தது.
தாயிடம் முதலில் ஏதோ உளறிவிட்டான். அதை பிறகு சரி செய்து கொள்ளலாம்.
தற்போது அவளை கரெக்ட் செய்யலாம் என நினைத்தவன் இடது கையை தலைக்கு மேலே தூக்கி … அடடாடா… பாட்டைப் போடாமல் விட மாட்டான் போலவே?
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
என மனம் பாட ஆரம்பித்தது.
மனம் ஏனோ சிறகை விரிக்க “ இதுவும் ஒரு மாதிரி.. ஜாலியாத்தான் இருக்கு” என்ற இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தான்.
சரி .சரி. அவனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு.