தேன் பாண்டி தென்றல் _ 5

தேன் பாண்டி தென்றல் _ 5

 

 
5
 
கேள்விக்காக விடை சொல்வது வேறு. விடைக்காக கேள்வி எழுதுவது வேறு. தேன்மொழி விசயத்தில் அப்படித்தான் ஆகிவிட்டது அழகிய வீர பாண்டியனுக்கு.
 
அவளைப் பிடித்துப் போனதும் அரை குறையாக இருந்த அவன் எதிர்பார்ப்புகளை முழுமைப் படுத்தினான்.
 
அவன் மனைவி தேன்மொழிதான் என்று மறுபடி மறுபடி கூறத் தேவை இல்லாதபடி அவன் மனதை முழுதும் பிடித்துக் கொண்டாள் அவள்.
 
அவளுக்கும் அவனைப் பிடிக்கும் என்று நம்பினான். குறைந்த பட்சமாக அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகாது என்று உறுதியாக இருந்தான்.
 
அப்படித்தான் இருந்திருக்கும். 
 
சொந்த ஊர் பெருமையை எடுத்துக் கொண்டு பாக்கியம் மகளிடம் இவனைப் பற்றிப் புகழ்ந்து பாடாமல் இருந்திருந்தால்.
 
 
அதுதான் மனித மனம். அதை வரையறுத்துக் கூற யாராலும் முடியாது. 
 
இப்போது அன்னையிடம் எப்படிப் பேசுவது என்று குழம்பிக் கொண்டு இருந்த போது தொலை பேசி ‘டாட் டட டாட்டன்  டாட் டட டாட்டன் ‘ என்ற ஆப்ரிக்கன் டெட் பாடி சாங்கைப் பாடியது.
 
டெட்பாடியை தூக்கும் போதும் என்ன ஒரு எனர்ஜி? அது போல எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்றுதான் வைத்திருந்தான்.
 
எடுத்துக் காதில் வைத்தால் இவனுக்கு ஒரு தரகு வேலை வந்திருக்க தன் கவனத்தைத் தொழில் திருப்பினான்.
 
அதன் பிறகு இத்தனை மாதங்கள் கடந்து விட்டது.
 
அவளைப் பார்ப்பதற்கு ஆறு மாதங்கள் முன்பு ஏதோ கொஞ்சம் இருந்த குடிப் பழக்கத்தை விட்டான். 
 
அவளைப் பார்த்து சரியாக ஒரு வருடம் ஆகப் போகிறது. 
 
‘ஒரு வருசமா ஒரு பொண்ணை வளைக்கத் துப்பில்ல? நீயெல்லாம் தரகு பார்த்து… என்று மனம் காறித் துப்ப… 
 
நானும்தான் இப்டி ஒரு மரியாதையான – நம்பி பொண்ணுங்க வர்ற இடத்துல இருந்துகிட்டு இதுக்கு மேல என்ன செய்ய’ என்று அதை கழுவித் துடைத்துக் கொண்டு இருந்தான்.
 
ஏதோ அந்த ஏழுமலையான் புண்ணியம் ஒரு வழியாக பாக்கியம் காதில் விசயத்தைப் போட்டுவிட்டான். 
 
அவர் அடுத்து அந்த மகராணி – அதுதாதன் அவரது மகள் – அவளுக்கு  விருப்பமில்லை என்று ஏதாவது கல்லைத் தூக்கி தலையில் போடுவதற்குள் செம்பாவிடம் விசயத்தைத் தெரிவித்து பொண்ணு கேட்டுப் போக ஆளைத் தயார் செய்ய வேண்டும்.
 
அதற்கு அவன் யோசனையும் ஒடவில்லை. அவனும் எங்கும் ஓடாமல் ஒரே இடத்தில் அதாவது அவன் கடையில் உட்கார்ந்து லேப்டாப்பின் டெஸ்க்டாப்பை முறைத்துக் கொண்டு இருந்தான்.
 
 
இன்னும் பத்து நாட்களில் குடியிருப்பின் ஆண்டு விழா வந்து விடும். 
 
அதற்கான திட்டங்களை குடியிருப்போர் சங்கம் தீட்டிக் கொண்டும் தொகை வசூல் செய்து கொண்டும்தான் இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் நிதி திரட்டுவது நிறுத்தப்படும். அதுவரை வந்த நிதிதான் விழாவிற்கு பயன்படுத்துவார்கள்.
 
ஒன்றிரண்டு ஸ்பான்சர்கள் பிடித்து அவசர தேவைக்கு சிறுதீனிகள் போன்ற உணவுப் பொருட்கள் குளிர்பானங்கள அஙகு நடததப்படும் சின்ன சின்ன போட்டிகளில் அவற்றி பெறும் வெற்றியாளாகளுக்க பரிசுகள் கொஞ்சம்  ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொள்வார்கள்.. மீதியை குடியிருப்பில் வசூலித்த நிதியை வைத்து சமாளிப்பார்கள்.
 
பாண்டி சங்கத்து ஆள் இல்லை. அவனுக்குத்தான் மூளை நாலாதிசையிலும் சுழல்கிறதே? இதற்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரவில்லை.
 
அந்த சமயத்தில்தான் இவனுக்கு ஒரு உதவியைப் போட்டு வைப்போம் என்று பாவம் பார்த்து அந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இயற்கை   அல்லது காதல் தேவன்.
 
சில மாதங்கள் முன்பு அவன் முடித்துக் கொடுத்த ஒரு தரகின் கமிஷன் பாக்கி கொஞ்சம் இருந்தது. 
 
சங்கத்தில் இருநது மறுபடியும் இவனிடம் நிதி கேட்டு வந்தபோது 
 
“ஏம்ப்பா தம்பிகளா? போன வாரம தானே ஆயிரம் ரூபா குடுத்தேன். மறுபடியும் கேட்டா நான் எங்கே இங்க நோட்டா அச்சடிக்கிறேன்?” என முணுமுணுத்தவாறே ஒரு இருநூறு ருபாயை எடுத்துக் கொடுக்க முயன்ற சமயம் 
 
“ஒரு பாக்கெட்  அரை லிட்டர் பால்” என்ற தெளிவாகச் சொல்லி இவனை முறைத்துக் கொண்டே வந்தாள் தேன்மொழி.
 
“இதப் பாருங்கம்மா இவ்வளவு பேச்சு வந்தப்புறம் அவன் கடைக்குலாம் நான் போக மாட்டேன்” என்று குதித்துதான் பார்த்தாள் தாயிடம் .
 
“அப்டிலாம் பாத்தா முடியுமா வேலம்மா ? நம்ம என்ன சும்மாவா வாங்கப் போறோம்? காசைக் குடுக்குறோம். பொருளை வாங்குறோம். அவ்வளவுதான். நம்ம காலனியில இருக்கிற கடையை விட்டுட்டு எதுக்கு வேற எடம் போகணும்? அப்டிப் போனாதான் வித்தியாசமாத் தெரியும் “  என மூளைச் சலவை செய்து மகளை அனுப்பி இருந்தார்.
 
அவருக்கு அழகிய வீர பாண்டியை – அவனது பேரை – அவன் பிறந்த ஊரை – மிகவும் பிடித்து இருந்தது. 
 
மாமியாரான அவருக்கு பிடித்தால் மட்டும் போதுமா? அவர் மகள் வேலம்மாவிற்கும்; அவன் மீது  பிடித்தம் வர வேண்டுமே?
 
பாண்டியைப் பொறுத்தவரை தனது வீட்டில் இருந்து பெண் கேட்டு வருவார்கள் என உறுதியாகச் சொல்லிவிட்டான்.
 
அப்புறம்?
 
இவள் மறுத்துக் கொண்டு இருந்தால் எப்படியாம்?
 
வேண்டும் என்றெல்லாம் அவர் மகளை அவனது  கடைக்கு அனுப்பவில்லை. தற்செயலாக நேர்நததுதான் அது.
 
 
 
பாண்டி  அவளை ‘பே’ எனப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இவனுக்குக் கமிஷன் மீதம் தர வேண்டியவர் லெதர் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டே பற்களை நன்கு காட்டியவாறு-
 
“ அது தம்பி கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அடுத்தடுத்து வேலைங்க வேற. அட செல் போனுல போடலாம்னு பாத்தா.. கருமம் நமக்கு ஒரு எழவும் புரியல. அது விசயம் யார்கிட்டயும் சொல்லிப் போடச் சொல்லவும் தயக்கமா இருந்துச்சு. சரி.. நம்ம புள்ளதானேனு உங்ககிட்ட தாவா கேட்டேனே?
 
நீங்க பரவாயில்லனு சொல்லவும்தான் நிம்மதி ஆச்சு. தப்பா நினைக்காதீங்க தம்பி” என்று இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொடுக்க இவன் பேய் முழி முழித்தான்.
 
மற்ற நேரமாக இருந்தால் குறைவாக கமிஷன் பணத்தை வாங்கி வைத்து விட்டு “ உனக்கு ஒன்னுமில்ல போ “ என்று சங்கத்திடம் சொல்லி இருப்பான்.
 
இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுவரை அவனுக்கு ஆர்வம் இருந்ததில்லை.  
 
கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து குதூகலிக்க அவன் சின்னப் பிள்ளையாகவோ வயதுப் பையனாகவோ அல்லது குடும்பஸ்தனாகவோ இருக்க வேண்டும்.
 
இவன்தான் வெட்டரிவாளாக இருக்கிறானே? 
 
வெட்டரிவாளுக்கு விரையலா? காய்ச்சலா?
 
 
ஏதோ நமது சொந்த சங்கம் என்று ஒரு தொகை முன்பே கொடுத்துவிட்டான். 
 
விழா அன்று குளிர்பானங்கள் மொத்தமாக அவன் வாடிக்கையாக வாங்கும் இடத்தில் வாங்கிக் கொடுப்பான். மொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் ஒரு தொகை மாறுபாடு உண்டல்லாவா? அதை அன்று விட்டுக் கொடுப்பான். 
 
பொடிசுகள்  கேட்டால் ஏதோ அவனால் இயன்ற வரை அன்று ஒருவருக்கு ஒரு பலூன் இலவசம்.
 
அவ்வளவுதான். அதற்கு மேல் இழுத்துப் போட்டுக் கொள்வதில்லை.  அவன் வசதிக்கு இன்னும் செய்யலாம். போதும் .போதும் என்று விட்டு விட்டான்.
 
காலனிகாரர்களும் ‘அண்ணா நீங்க சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி பிள்ளையைப் பெத்தா எங்களுக்கு வசூல் அள்ளும். ஏந்தெரியுமா?  அண்ணி வந்ததும் ஒவ்வொரு வருசம் காலனி பங்சன்லயும்  மியூசிக்கல் சேர்ல இருந்து எல்லா லேடீஸ் விளையாட்டுலயும் சேத்து விட்ருவோம். 
 
பாப்பாங்க வந்ததும் குழந்தைங்க விளையாட்டு எல்லாத்துலயும் சேத்துருவோம். அப்ப தன்னால காசை அள்ளி டேபிள்ள வைப்பீங்க” என்று சிரிப்பார்கள்.
 
செண்பகம் தனது கெத்து மெயின்டெய்ன் செய்ய வேண்டி எந்த நிகழ்விலும் பங்கு கொள்ள மாட்டார்.
 
ஒருமுறை மியூசிக்கல் சேரில் ஒரே சேரில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து உட்கார அந்த பிளாஸ்டிக் நாற்காலி உடைய அவமானமாகப் போய்விட்டது அவருக்கு.
 
ஊரே ‘கொல்’ என்று சிரிக்க முகம் சிவந்து விட்டது அவருக்கு. 
 
போதாதற்கு மைக்கில் “ பாண்டி அண்ணா ஒரு சேர் வாங்கித் தந்திருவார்” என அறிவிப்பு செய்யவும் இவருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
 
முகத்தை சிரித்த மாதிரி வைத்து அன்றைய நிகழ்சியை முடித்தாலும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்து விட காரணம் எல்லோருக்கும் தெரிந்தாலும் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டு- 
 
“சொன்னா எங்க கேட்கப் போறாங்க?” என்று தண்ணி தெளித்து விட்டனர்.
 
இப்படியே ஏனோ தானோ என இருந்தவன்தான் இன்று காசா? காலனியா? என்று விழித்துக் கொண்டு நிற்கிறான்.
 
நடுவே அவன் சாமந்திப்பூ வேறு!
 
அப்போது தேன்மொழியின் வாய் –
 
“இன்னும்  பணம் குடுக்கலியா? “  என முணுமுணுக்க 
 
அது போதாதா அவனுக்கு?
 
கையில் இருந்த காசில் ஒரு கட்டை எடுத்து இவளைப் பார்த்து பற்களைக் காட்டிக் கொண்டே ஃபண்ட் கேட்டு வந்தவனிடம் நீட்டினான்.
 
“அவங்க குடுத்ததை எண்ணிப் பாக்கலை. அப்படியே குடுக்றிங்க?” என்று அதையும் அவள்தான் கேட்டாள்.
 
என்னது?! அவள் அவனிடம் பேசினாளா?
 
பாண்டிக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
 
“அது எவ்வளவுன்னு சொல்லிட்டுதான் வந்தாரு” என மழுப்பலாக விளக்கினான் பாண்டியன்.
 
அப்படியும் அவனை குழப்பமாகப் பார்த்தாள் அவள்.
 
இப்படியும் சில லூசுகள்! என அவள் தோள்களைக் குலுக்கியதில்  வேறு சில மாற்றங்களும் அவள் மேனியில் நடந்ததை அவள் அறியவில்லை.
 
ஆனால் அவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த காளையவனுக்கு கள் குடித்தது போலானது.
 
 
கள்ளு குடிச்சும் போதையில்ல
ஃபுல்லு அடிச்சும் கிக்கு இல்ல
கண்ணத் தொறந்து பாத்தா
கனவுல நீதானே?
வேற யாரு வருவா?”
 
என அழகிய வீர பாண்டியன் மனது பருத்தி வீரன் கணக்காக கவிதை படித்தது.
 
 
“பால் கேட்டேனே?” என நினைவு படுத்தினாள் தேன்மொழி.
 
நிதி திரட்ட வந்தவன் விழாவிற்குத் தேவையான மொத்த பணமும் கிடைத்து விட்டதில் பல வாழ்த்து வார்த்தைகளை இவனைப் பார்த்துக் கூறிவிட்டுச் சென்று இருந்தான். 
 
அதை எல்லாம் இவன் கவனித்தால்தானே?
 
“என்னைக்கு?” என வழிந்தான்.
 
“என்ன என்னைக்கு?”என அவள் முறைத்தாள்.
 
அவன் எதைக் கேட்டான் என்று அவனுக்கேத் தெரிந்தால்தானே?
 
“வந்து.. இல்ல… பால்ல்…” மென்று முழுங்கினான் பயல்.
 
“ஊஃப்.. பால் அரை லிட்டர் பாக்கெட் ஒன்னு கேட்டேன்”  மறுபடியும் சொன்னவள் அதற்கான காசை எடுத்து முன்னால் இருந்த மேடையில் வைத்தாள்.
 
பால் பாக்கெட்டை எடுததுக் கொடுத்துவிட்டு “காசு எதுக்கு? ஏற்கெனவே நான் உங்களுக்கு மீதி தரணும். அதுக்கு இது சரியாப் போச்சு. “ என வாங்க மறுக்க 
 
ஒருவேளை அம்மா எதுவும் பணம் வாங்காமல் விட்டிருப்பார்கள் போல இருந்தாலும் _
 
“அது தனி கணக்கா இருக்கட்டும். இப்ப இதை வாங்கிக்குங்க” என போராட
 
“எல்லா கணக்கும் ஒன்னுதான். வேற எதாவது வேணுமா?” என ஆர்வமாகக் கேட்டவனைப் பார்த்து அல்லு விட்டது இவளுக்கு.
 
“இல்ல ஒன்னும் வேணாம்”  என்று பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டாள்.
 
“தேனு!”
 
‘என்னது? தேனா?’ அலறியடித்துக் கொண்டு அவள் பார்க்க-
 
“அத்தைகிட்ட நான் சொன்னதை உங்கிட்ட சொன்னாங்களா?”
 
இதை வளர்க்க கூடாது என முடிவெடுத்து-
 
“அதுலாம் சரிவராது” என்றுவிட்டு திரும்பி நடந்தவளை ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் பாண்டியன்.
 
‘அவதான் மாட்டேங்கிறாளே?’  ஒரு மனம் எள்ளல் செய்ய-
 
‘ மாட்ட வச்சிருவோம்’ என சிரித்தது அவன் மறு மனது.
 
அதற்கான சந்தர்ப்பத்தை அவன் ஏற்படுத்திக் கொண்டாலும் அவன் கல்யாணத்தை முடித்து வைத்தது இன்னொரு பாண்டியன்
 
ஒருவழியாக இவர்கள் எதிர்பார்த்த ஆண்டுவிழா வர காலனியே கலகல என களைகட்டி இருந்தது.
 
போன வருடம் வரை சும்மா எட்டிப் பார்த்துவிட்டு காலனியில் ஒரு பெரிய புள்ளி என்பதற்காக மேடையில் அளிக்கப்படும் ஒன்றிரண்டு புகழ் வார்த்தைகளுக்கு உதடுகளை இழுத்துப் புன்னகைத்துவிட்டு கிளம்பிவிடுவான். தாயார் வர மாட்டார். அப்பாவிற்கு அத்தனை சத்தம் ஆகாது.  
 
 
இந்தமுறை இவனது சில்வண்டு என்ன செய்யப்போகிறது என்பதைக் காண ஆவலாக முன்கூட்டியே விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டான் .
 
 
வயதுப் பெண்களுக்கு ஒரு ஓரமாக போட்டிகள் நடந்து கொண்டு இருந்தது. இவன் தன் தேனைப் பார்க்க பார்வையைச் சுழற்ற அவன் விழிகளில் விழுந்தாள் கோலம் போட்டுக் கொண்டு இருந்த தேன்மொழி.
 
 
பொதுவாக அந்தப் பக்கம் சும்மா போய்விட முடியாது. அவர்கள் காலனிப் பெண்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள் அல்லவா? 
 
அதனால் பொத்திப் பாதுகாத்துதான் வைத்திருப்பார்கள் சங்கத்துக்காரர்கள்.
 
இவன் கண்கள் சுழலுவதைப் பார்த்த நிதி கேட்க வந்த இளைஞன் – கூட இருந்த குமாரு மாதிரி ஒரு பேரா என்று பார்த்தால் நிஜமாகவே அவன் பெயர் குமார்தான்- குமார் –
 
“அண்ணா! என்ன இந்தப் பக்கம்?” என கூவினான்.
 
“கத்தாதடா” என்ற பம்மினான் பாண்டியன்.
 
“என்னாச்சுண்ணா?” என்றான் குஷியாக குமார்.
 
பின்னே? அவன் வேலை எவ்வளவு குறைந்துவிட்டது இந்தப் பாண்டி அண்ணாவால்? இதுவுமா கேட்காமல் இருப்பான்?
 
“ஒன்னு இல்லடா. சும்மாதான். இந்தக் கோலம்லாம் எப்டி இருக்குனு பாக்கலாம்னு பாத்தேன்… ஆனா அது போட்டுட்டு இருக்கும் போது ஜென்ட்ஸ் நாட் அலவ்ட் இல்ல?” என்று முகத்தை சோகமாக்கிக் கொண்டான்.
 
“அண்ணா அதுனால என்னண்ணா? பெரிசா ஸ்பான்ஸர் பண்ணிருக்கீங்க! நீங்க கோலத்தைப் பாக்காமலா? இருங்க. உங்களை கோலப் போட்டி நடுவர்கள்ல ஒருத்தராக்கிடலாம்.” என்ற பரபரத்தான்.
 
“போட்டிக்கு எத்தனை நடுவர்கள் குமார்?”
 
“இதுவரை ஆறு பேரு சுத்திட்டு இருக்காங்க. நீங்க ஏழாவது” என்று சொல்லி எதிர்ப்பக்கம் சென்றவன் பேச்சில் நக்கல் இருந்ததா? என குழம்பினான் பாண்டியன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

error: Content is protected !!