Jeevan Neeyamma–EPI 23

171916099_840757923178210_3424615682123961255_n-b88558be

Jeevan Neeyamma–EPI 23

அத்தியாயம் 23

நிஜத்தில் சாத்தியமாகாவிட்டாலும், கற்பனையிலும் கனவிலும் உன்னைக் கணவனாகவேப் பார்க்கிறேன் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த அந்த மண்டபத்துக்குள் நுழைந்த ரஹ்மானை ஜில்லென்ற ஏசியும், இதமாய் காதை நிறைக்கும் இசையின் ஒலியும் வரவேற்றது. உணவு வாசம் ஒரு பக்கம் நாசியைத் தழுவ, கலர் கலராய் உடை அணிந்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்த மக்கள் கண்களை நிறைத்தார்கள்.

மண்டபத்தின் நுழைவாயிலில் பெரிதாய் ப்ரேம் செய்து வைக்கப்பட்டிருந்த ப்ரீ வெடிங் போட்டோவை முகம் மலர நோக்கினான் இவன்.(2000ல எல்லாம் இங்க ப்ரீ வெடிங் ஷூட் வந்திருச்சு) அதில் அழகாய் சிரித்தப்படி நின்றிருந்தனர் லோகாவும் ஹேமாவும். அவர்கள் இருவரின் திருமண விருந்துக்குத்தான் வந்திருந்தான் ரஹ்மான்.

திருமணம் இரண்டு நாட்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் கோயிலில் குடும்ப உறுப்பினர்களுடன் முடிந்திருக்க, இன்றைய இரவில் இரு பக்க சொந்தங்களையும், நட்புக்களையும் விருந்துண்ண அழைத்திருந்தனர். பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஓரளவு பணம் படைத்தவர்களாதலால் மிக பிரமாண்டமாக ஏற்பாடாகியிருந்தது விருந்து நிகழ்ச்சி. மேடையில் ஹேமாவும் லோகாவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, கீழே போடப்பட்டிருந்த வட்ட மேசைகளில் அமர்ந்திருந்தனர் விருந்துக்கு வந்தவர்கள். மண்டபத்தின் வலது பக்கத்தில் சைவ உணவும் இடது பக்கத்தில் அசைவ உணவும் அடுக்கி மூடி வைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்தவனின் பார்வை சுற்றும் முற்றும் அலசி, பின் ஓரிடத்தில் நிலைப் பெற்று நின்றது. தேவலோக ரம்பையைத் தோற்கடிக்கும் விதமாய் அவ்விடத்தில் அமர்ந்திருந்தாள் அந்த பூலோக மங்கை. வயலட் வர்ண சேலைக்கு பாந்தமாய் பச்சை வர்ண ப்ளவுஸ் அணிந்திருந்தவள், கழுத்தை நிறைத்தது போல அட்டிகையும் காதுக்கு சின்னதாய் குடை ஜிமிக்கியும் போட்டிருந்தாள். சுருள் கூந்தலுக்கு எந்த ஸ்டைலும் செய்யாமல் அப்படியே விரித்து விட்டிருந்தாள். முகத்துக்கு அளவான மேக்கப் போட்டு அப்சரஸ் போல இருந்தவளிடம் இருந்து பார்வையை விலக்க முடியாமல் தடுமாறி நின்றான் ரஹ்மான்.

அவளும் இந்தத் திருமணத்திற்கு வருவாள் என தெரிந்துதான் வந்திருந்தான். ஆறுவை சந்திக்கும் போது, தனது போனில் இருக்கும் குடும்பப் படங்களை காட்டுவான் அவன். அப்பொழுது உள்ள போனில் எங்கே இந்தளவு க்ளாரிட்டி! அந்தப் போட்டோக்களில் கூட்டத்தில் ஒருத்தியாய் நிற்கும் தன்னவளை மட்டும் ஃபோகஸ் செய்து மனதில் இருத்திக் கொள்வான். நிழற்படம் வேண்டாம் நிஜம் வேண்டும் என அவனின் மனம் சற்று நாட்களாய் அடம் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அதை சமாதானப்படுத்தி வைக்கவே திருமணத்துக்கு வந்திருந்தான் ரஹ்மான்.

அவளைக் கண்டதும் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நிஜத்தைப் பார்த்தும் சமாதானமாகிப் போகாமல், கையருகில் அவள் வேண்டுமென சண்டித்தனம் செய்தது அவன் மனது. பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை சமன் செய்யப் போராடிக் கொண்டிருந்தான் ரஹ்மான்.

மீனாட்சியோ வந்து அமர்ந்ததில் இருந்து கூட்டத்தை அலசியபடியே இருந்தாள். கண்டிப்பாக ரஹ்மான் இந்தத் திருமணத்துக்கு வருவான் என தெரியும் அவளுக்கு. தாயின் இறப்புக்கு சோகத்தின் மொத்த உருவமாய் அவனைப் பார்த்ததுதான் அவளின் கடைசி சந்திப்பு. அதன் பிறகு கவனிலும் நனவிலும் அவனின் சோக முகமே வந்து இவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. ஆறு வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, வேலை மாற்றலாகி தந்தையுடனே தங்கி இருக்கிறான் என அறிந்துக் கொண்டாள் இவள். மற்றப்படி இவர்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாதது போல வீட்டினரிடம் காட்டிக் கொள்ளவில்லை இருவரும். இவளும் ஆசிரியர் வேலைக் கிடைத்து கெடா மாநிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்க, மாதம் ஒரு முறைதான் வீட்டுக்கு வருவாள். அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு இவர்களின் தற்போதைய நிலைத் தெரியாமலே போயிருந்தது.  

மீண்டும் நிமிர்ந்து சுற்றி முற்றி தேடியவளின் பார்வை வட்டத்தில் தன்னையேப் பார்த்தப்படி நின்றிருந்த ரஹ்மான் விழுந்தான். முகம் சட்டென மலர, கண்கள் வைரங்களைப் போல ஜொலிக்க உதடு தானாகவே புன்னகையைப் பூசிக் கொண்டது அவளுக்கு. அவளைப் பார்த்துக் கொண்டே இவன் அமர இடம் தேட, கண்களால் தனது பக்கத்தில் இருந்த நாற்காலியை சுட்டிக் காட்டினாள் மீனாட்சி. லேசாக தயங்கியவன், பின் மெல்ல நடந்துப் போய் அவள் அருகே அமர்ந்துக் கொண்டான். அருகருகே அமர்ந்துக் கொண்டாலும் இருவரும் ஒற்றை வார்த்தைப் பேசிக் கொள்ளவில்லை. மேடையைப் பார்ப்பதைப் போல இவர்கள் இருக்கைப் போடப்பட்டிருக்க, திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் தங்களது நண்பர்களை புன்னகையுடன் பார்த்திருந்தனர் இருவரும்.  

மேடையைப் பார்ப்பதும், ஓரக்கண்ணால் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தனதுயிரை பார்ப்பதுமாக இருவரும் நேரத்தைக் கடத்தினர். வளர்ந்த ஆண்மகனாய், திடகாத்திரமாய், ஆணழகனாய் இருந்த ரஹ்மானை கொஞ்சம் கொஞ்சமாக தன் ஓரவிழியால் படம் பிடித்து இதயக் கூட்டில் சேர்த்து வைத்துக் கொண்டாள் இவள். பேரழகியாய், ஐந்தடி மெழுகு சிலையாய், சேலையில் சோலையாய் இருந்தவளை ஓரப்பார்வையால் களவாடி தன் நெஞ்சாங்கூட்டில் பொத்தி வைத்துக் கொண்டான் அவன்.

“உன்னை எண்ணிக் கொண்டு

உள்ளே பற்றிக் கொண்டு

உள்ளம் நோகுதடி

என் உச்சி வேகுதடி!” என அவன் நிலமைக்கு ஏற்றவாறு டீ.ஜே சிஸ்டத்தில் இருந்து பாடல் வேறு ஒலித்து இம்சை செய்தது ரஹ்மானை.

பட்டென எழுந்துக் கொண்டான் இவன். என்ன என்பது போல நிமிர்ந்துப் பார்த்தாள் இவள்.

“மொய் குடுக்கலாம் வா!” என மெல்லிய குரலில் அழைத்தான் மீனாட்சியை.

அவளும் எழுந்துக் கொண்டாள். தோழிக்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொட்டலத்தையும் கையில் எடுத்துக் கொண்டாள் மீனாட்சி. இருவரும் சற்று இடைவெளி விட்டு மெல்ல நடந்து மேடை மேல் ஏறினார்கள். தங்களுக்கு முன் நின்றவர்கள் மொய் கொடுத்து விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு இறங்க, அடுத்ததாக இவர்கள் போனார்கள். அது வரை புன்னகை முகமாய் நின்றிருந்த லோகாவும் ஹேமாவும் இவர்களைப் பார்த்ததும் முகம் வாடிப் போனார்கள். அவர்கள் இருவரின் காதலுக்கு மௌன சாட்சியாய் இருந்தவர்கள் அல்லவா இவர்கள் இருவரும். வாழ்க்கையில் தாங்கள் இணை சேர்ந்திருக்க, இவர்கள் இருவரும் இன்னும் தனிமரமாய் நின்றது ஹேமாவுக்கும் லோகாவுக்கும் மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது.

மீனாட்சி இருவரின் கையை ஒன்றாக பிடித்து தனது பரிசை வைக்க, அந்தப் பரிசின் மேலே தனது மொய் அடங்கி இருக்கும் என்வலப்பை வைத்தான் ரஹ்மான்.

“இந்த கருவண்டும் செவ்வண்டும் ஒன்னா சேர்ந்து நெறைய அழகழகான வண்டுகள இந்த உலகத்துக்கு குடுக்கனும்னு நான் வாழ்த்தறேன்!” என சொல்லி நகைத்தான் ரஹ்மான்.

அங்கு நிலவிய கனமான தருணத்தை இலகுவாக்க அவன் முயல்வதைக் கண்டு,

“ஹேமாவ கல்யாணம் செஞ்சு கோமாவுக்கு ரெடியாகிட்ட மிஸ்டர் லோகா அவர்களே, உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என சிரிப்புடன் சொல்லி ரஹ்மானுக்கு உதவி புரிந்தாள் மீனாட்சி.

மணமக்களுக்கும் தங்களது பல்கலைக்கழக சண்டைகள் நினைவு வர, சிரிப்பு வெடித்தது அங்கே.

“கோமாவுக்கு போனாலும் தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பேன் நான்” என ஹேமா சொல்ல,

“நீ அடிக்கற வரைக்கும் என் கை என்ன பூப்பறிச்சிட்டு இருக்குமா? பட்டுன்னு காலுல விழுந்து சரண்டர் ஆயிட மாட்டேன்!” என இளித்த லோகாவைப் பார்த்து, துப்புவது போல சைகை செய்தான் ரஹ்மான்.

முகத்தைத் துடைப்பது போக சைகை செய்த லோகா,

“காதலுல எவ்ளோ வேணா கெத்து காட்டலாம்டா! கல்யாணம் ஆகிட்டா வெத்து பீஸாக்கி மூலையில உட்கார வச்சிடுவாங்க இந்தப் பொண்ணுங்க! நாமளும் ஆம்பளை சிங்கம் மாதிரி கம்முனு குந்திக்கனும்! இல்லைனா டங்குவாரு அந்துப் போயிடும்” என பாடம் எடுத்தான் அவன்.

“அடேய்! ரெண்டு நாளுலயே இப்படி ஆகிட்டயேடா” என சிரித்தான் ரஹ்மான்.

“ஹேப்பி மேரிட் லைப் மை டியர் ஜண்டா” என தன் தோழியைக் கட்டிக் கொண்டாள் ஜண்டாவின் அம்மன்.

லோகாவின் பக்கம் ரஹ்மான் நிற்க, ஹேமாவின் பக்கம் மீனாட்சி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

“மிஸ்டர் இசை, சாப்பிட்டுப் போங்க! அம்மன் நீயும் போய் சாப்பிடு” என அனுப்பி வைத்தாள் ஹேமா.

அடுத்து மொய் வைக்க மக்கள் காத்திருக்க, இவர்களும் அங்கே நிற்காமல் கீழே இறங்கி வந்து விட்டார்கள். தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் உணவுடன் வேறு ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வேறு மேசை தேடினார்கள் இருவரும். இரண்டு இடம் காலியாக இருக்க,

“உட்காரு! நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்” என சொல்லி விட்டு அகன்றான் ரஹ்மான்.

அவன் பஃப்பே முறையில் உணவு எடுக்கும் இடத்தில் வரிசையில் நிற்க, அவனைப் பார்த்தப்படியே அமர்ந்திருந்தாள் இவள். இவளது பக்கத்து இருக்கைக்கு, கையில் உணவு தட்டுடன் ஒரு பெண்மணி அமர வர,

“சாரிங்க, இங்க ஆள் வருது! என் வீட்டுக்காரு சாப்பாடு எடுக்கப் போயிருக்காரு” என சொல்லியவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

பொய்யாய் இருந்தால் என்ன!! அந்தப் பொய் சொன்னவளுக்கு உதட்டில் இருந்து உள்ளம் வரை தித்தித்தது.

இரண்டு கைகளிலும் இரண்டு தட்டுடன் வந்த ரஹ்மான், அதை மேசை மேல் வைத்தான். மீண்டும் போய் இருவருக்கும் சீராப்(சிவப்பு வண்ணத்தில் இருக்கும் ஜூஸ். கல்யாணங்களில் கண்டிப்பாக இருக்கும் இங்கே) எடுத்து வந்தான்.

அதன் பிறகு அமைதியாக இருவரும் உணவை உண்ண ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் இந்திய திருமணங்களில் நெய் சோறு, கோழி சம்பல், ஆட்டிறைச்சி மசாலா, அப்பளம், கேபேஜ் பொரியல், பாயாசம் என இவையெல்லாம் கண்டிப்பாக இருக்கும். கூட்டத்துடன் கூட்டமாக வரிசை நின்று உணவு வாங்கி, இடம் பிடித்து அமர்ந்து, திருமண விருந்துக்கென்று பிரத்தியேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பாடலைக் கேட்டுக் கொண்டே சாப்பிடுவதென்பது சொர்க்க சுகமாகும். இவர்கள் இருவரும் அதை அனுபவித்துக் கொண்டே ஒரு மோன நிலையில் உணவருந்தினார்கள்.

பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொண்டவள், தனது கைப்பையை ரஹ்மானின் அருகில் வைத்து விட்டு எங்கோ நடந்துப் போனாள். அவனைத் தாண்டிப் போகும் போது இவன் நிமிர்ந்துப் பார்க்க, அவளது முந்தானை இவன் முகத்தை உரசிப் போனது.

‘சேலைக்கு தனியாய் வாசம் உள்ளதா, இல்லை என் மங்கையின் மேனியைத் தழுவியதால் அதற்கு வாசம் வந்ததா?’ என சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் ரஹ்மான். அவனது சிந்தனையை கலைத்தார் அவன் அவருகே வந்து நின்ற ஒருவர்.

“தம்பி இந்த சீட்டுல ஆள் இருக்காப்பா?”

“இருக்குங்க! என் மிஸஸ் வருவாங்க” என்றவனுக்கு வாயெல்லாம் பல்.

கையில் இரண்டு ஐஸ்க்ரீம் கப்போடு வந்தாள் மீனாட்சி. ஒன்றை அவன் புறம் நகர்த்தி வைத்தவள், ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டாள். அவள் ஐஸ்க்ரீம் சாப்பிட முயல,

“முதல்ல சாப்பாட்ட சாப்பிட்டு முடி!” என மெல்லிய குரலில் கடிந்துக் கொண்டான் இவன்.

“ம்ப்ச்” என சலித்துக் கொண்டவள், உணவை மீண்டும் கரண்டியால் அள்ளி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் வருவதற்குள், சாப்பிட இலகுவாக கோழியை சின்னதாக வெட்டி வைத்திருந்தான் இவன். கண்கள் கலங்கும் போல் இருக்க, கஸ்டப்பட்டு உணவை விழுங்கினாள் மீனாட்சி.

உணவை முடித்ததும் மேடையேறி தங்களது நண்பர்களிடம் விடைப்பெற்று கிளம்பினார்கள் இருவரும். மண்டபத்தின் வாயிலை நெருங்கும் முன், இவர்களுடன் படித்த இன்னொரு நண்பன் ரஹ்மானை பார்த்து விட்டுப் பேச வந்தான். அவனிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்க்க, காணாமல் போயிருந்தாள் அவனின் மீனாம்மா. கண்கள் நாலாபுறமும் அலைந்துத் தேட, கால்களோ வேகமாய் வாசலைத் தாண்டி ஓடியது. காணவில்லை அவளை. வண்ணமயமாய் இருந்த அவன் உலகம் சட்டென இருட்டடித்துப் போனது.

“சொல்லிக்காம போயிட்டா!” வாய் மெல்ல முணுமுணுத்தது.

இதயம் பாராங்கல்லாய் கனக்க, தனது காரை நோக்கி வலுவிழந்தவன் போல மெல்ல நடந்தான் ரஹ்மான். கண்களை கண்ணீர் மறைக்க, நடந்துப் போகும் தன் ரஹ்மானையே, பூ அலங்காரத்தின் மறைவில் இருந்து பார்த்திருந்தாள் மீனாட்சி.  

“ஐ லவ் யூ ரஹ்மானு!!!!”

ஹேமாவின் திருமணம் முடிந்து இரு மாதங்கள் ஓடி இருந்தன. பள்ளியில் அரையாண்டுப் பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டிருக்க, பஸ் எடுத்து பினாங்குக்கு வந்திருந்தாள் மீனாட்சி. வரும் நேரம் சொல்லி இருந்ததால், முருகன் கார் எடுத்து வந்துக் காத்திருந்தான் தங்கைக்காக.

ஓரளவு பொருளாதார நிலைமை சீர் பட்டிருந்தது இவர்களுக்கு. இன்னும் கொஞ்சம் பெரிதாய் வீடு வாங்கி இருந்தார்கள். அங்கே புதுப்பிப்புப் பணிகள் நடந்துக் கொண்டிருந்ததால் இன்னும் பழைய வீட்டில் வசித்தார்கள். அப்பத்தா முன்பு மாதிரி ஓடியாடி வேலை செய்வதில்லை. வயோதிகத்தால் பாதி நேரம் படுத்திருப்பார், மீதி நேரம் தொலைக்காட்சி முன் வயர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பார்.     

தங்கையைத் தாய் வீட்டில் இறக்கி விட்டு, தனது வீட்டுக்குப் போய்விட்டான் முருகன். உள்ளே வந்தவளை அன்புடன் வரவேற்றார்கள் வீட்டில் இருந்த ஈசுவும் ராக்குவும்! அந்த அன்பு அன்றிரவே வம்பாக மாறப் போவதை அவர்கள் மூவருமே அறிந்திருக்கவில்லை.

அன்றிரவு பதினொரு மணி போல, அப்துல்லாவின் கைத்தொலைப்பேசி அலறியது. மெல்லிய புன்னகையுடன் போனை காதுக்குக் கொடுத்தார் அவர்.

“சொல்லு அழகு!”

“இத்தனை நாள் உசுரா பழகனதுக்கு, நம்ப வச்சி கழுத்தறுத்திட்டீங்கல்ல!”

அழகுவின் குற்றச்சாட்டில் அதிர்ந்துப் போய் நின்றார் அப்துல்லா.

 

(ஜீவன் துடிக்கும்….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. கதையோட எண்ட் எப்படி இருக்கும்னு நெறைய பேரு கேட்டிருந்தீங்க! நான் லைக் மட்டும் போட்டுட்டு பதில் சொல்லல! இப்பவே சொல்லிட்டா ஒரு சுவாரசியம் இல்லாம போயிடும்! பதில் சொல்லாததனால என்னைத் திட்டாதீங்க கண்மணிஸ் 😊 இத்தனை வருஷமா என்னை நம்பி வந்தவங்க, இந்தக் கதைக்கும் நம்பி வாங்க! லவ் யூ ஆல்!!!!!!!!!!!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!