தேன் பாண்டி தென்றல் _3

தேன் பாண்டி தென்றல் _3

 
3
 
அழகிய வீர பாண்டியன் இவ்வாறான தன் கொள்கையை எங்ஙனம் மற்றவருக்கு அறிவிப்பது என்ற லஜ்ஜையில் உழன்று கொண்டிருந்தபோது அவர்கள் இருந்த குடியிருப்பில் வலது காலை எடுத்து வைத்தவள்தான் தேன்மொழி.
 
ஆளைப் பார்த்ததும் இவன் அசந்து விட்டான்தான். 
 
அழகு எல்லோரிடமும்தான் இருக்கிறது. ஆனால் அவள் முகத்தில் இருந்த தெளிவும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவனுக்கு மிகவும் பிடித்தது.
 
இப்படி ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்;கும் என்று தோன்றியது.
 
அதற்காக? 
 
இவன் ஆசைப்பட்டால் பெண் ஓடி வந்து விடுவாளாமா?  தன்னை விரும்பாத ஒருத்தியை உயிராக தன் மனதில் நினைக்கும்  துன்பம் அவன் அனுபவிக்க வேண்டும் என்று இருந்ததால்  அவன் இதுவரை தெனாவெட்டாகத்தான் சிந்தித்து வருகிறான்.
 
அந்த சமயத்தில்  அவளைப் பற்றி யாருக்கும் சந்தேகம் வராதபடி மெல்ல விசாரித்ததில் இவன் கொள்கைக்கு ஒத்து வருவாள் போலவே?
 
அதனால்தான் அவள் கடைக்கு வரும் போதெல்லாம் சின்ன சின்ன பிட்டுகளாகப் போட்டுப் பார்த்தான்.
 
அவற்றை ‘மொக்கை’ எனக் கருதி அவள் அலட்சியமாகச் சென்று விட இவன் விழி பிதுங்கி நிற்பான்.
 
இப்படியே விட்டால் என்றைக்கு இவன் கல்யாணம் செய்வது ? அடுத்தடுத்த கடமைகள் இருக்கிறதா? இல்லையா? என்ற கோபத்தில் பேசாமல் பாக்கியம் அத்தையிடம் முதலில் கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தான்.
 
அதுதான் அவனுக்கு அவனே வைத்துக் கொண்ட வேட்டு.
 
இவன் சொல்லி இருந்தால்கூட தேன்மொழி நூற்றுக்கு ஒரு சதவிகிதம் இவனைப் பற்றி யோசித்து இருப்பாளோ என்னவோ?
 
தாய் மூலம் இவனது திருமண விருப்பத்தைக் கேட்டவள் ஒரே அடியாக மறுத்துவிட்டாள்.
 
சும்மாவே அவளுக்குத் தன் திருமண வாழ்வு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அதனால் அதைக் குறித்துக் கனவு கண்டு காலத்தைக் கடத்தாமல் தன் வேலைகளில் மட்டும்  முழு கவனத்தை செலுத்தி வந்தாள்.
 
பாக்கியம் முகமெல்லாம் மகிழ்ச்சியும் குழப்பமுமாக இவளிடம் இதுப் பற்றிப் பேச  தேன்மொழி பயந்து போனாள்.
 
ஏனெனில் பாக்கியத்திற்கு பாண்டியன் மீது நல்ல அபிப்ராயம் உண்டு என்பது தேன்மொழி அறிந்தது. ஆகவே பாண்டியன் விசயத்தில் பாக்கியம் எத்தனை மூளைச் சலவை செய்தாலும் இவள் மசியமாட்டாள். 
 
பேசாமல் இவர் பேச்சை கவனிக்காமல் போய்விடுவாள். இவள் கேட்டாளா? கேட்கவில்லையா? என்ற குழப்பத்தில், இதற்கு மேல் ஒரு வயசுப்பையனைப் பற்றி மகளிடம் பேசுவது சரியில்லை என்பதால் பாக்கியமும் அப்படியே விட்டு விடுவார்.
 
பொதுவாக எந்த ஆண் மீதும் தேன்மொழிக்கு ஈர்ப்பு வந்ததில்லை. ஆனால் பாக்கியம் பாண்டியை உயர்த்திப் பேசப் பேச அவன் மீது வெறுப்புதான் வந்தது. 
 
ஒருவரைப் பற்றி அடிக்கடி கேட்டால் ஒன்று அவரை மிகவும் பிடித்துப் போகும்;. அல்லது மிகவும் வெறுத்துப் போகும்.
 
இவளுக்கு வெறுத்து விட்டது.
 
சும்மா சும்மா இந்தப் பாண்டியைப் பற்றி பாக்கியம் பேசவும் , பாண்டியை அம்மாவுக்கு ஏன் பிடிக்கும்? என்று இவள் ஆராய்ந்த போது,  அவன் பிறந்த ஊர் மதுரை என்பதுதான் காரணம் என்பது புலனானது .
 
 
கணவனின் ஊர் மனைவிக்குப் பிடிக்கத்தானே செய்யும்? 
 
 
கைக்குழந்தையுடன் தன் அன்னை அனாதரவாக வெளியேறிய  ஊர் அது என்பதால் தேன்மொழிக்கு மதுரையைப் பிடிக்கவில்லை. அதன் காரணமாக பாண்டியையும் பிடிக்கவில்லை.
 
 
 
“அம்மா. நீங்க இவனுக்கு என்னைக் கட்டி வைக்கிறதுன்னு முடிவேப் பண்ணிட்டீங்களாம்மா?”  எனப் பதறிக் கேட்டவளை உணரவில்லை பாக்கியம்.
 
பரபரப்பில் இருந்த பாக்கியம் மகளின் பதட்டத்தை உணராது-
 
“அது எப்படி நான் மட்டும் சொல்ல முடியும் பாப்பா? அவங்க வசதியானவங்க. நம்ம வீட்ல பொண்ண எடுப்பாங்களா என்னனு தெரியலை. முதல்ல அவங்க வீட்ல சம்மதிக்கட்டும்” என்று  தன் நெஞ்சில் கை வைத்தவாற கண்களை மூடிக் கொண்டார்.
 
அதில்  அவருக்கு அப்போது மகளின் தவிப்புப் புரியாமல் போனது.
 
அதற்காக அப்படியே விட்டு விட மாட்டாளே தேன்மொழி. 
 
 
பாக்கியத்திற்கு பாண்டியன் மற்றும் அவன் குடும்பத்தாரை இங்கு வந்ததில் இருந்து நன்கு தெரியும். ஒரு குறை சொல்ல முடியாத பிள்ளை.
 
 
பேச்சு வாக்கில் முன்பு குடிப்பழக்கம் இருந்ததாகத் தெரிய வந்திருந்தது. ஆனால் தற்போது உத்தம சிகாமணி என்றுதான் ஊரில் அவனைப் பற்றி பேச்சு.
 
திருமணம் செய்ய ஏதோ கொள்கை வைத்திருப்பதாகக் கேள்வி. அதனால்தான் அவன் திருமணம் தள்ளித் தள்ளிப் போகிறது என்றும் கேள்விப்பட்டு இருந்தார்.
 
பெண் எடுக்கும் விசயத்தில் அவனுடைய விருப்;பம் தன் மகளுக்கு ஒத்து வந்தது எப்படி என்று அவர் யோசிக்கத்தான்  செய்தார். 
 
‘சரி. சரி. ஒத்தைப் பொண்ணு இருக்கிற இடத்துல பொண்னைக் கல்யாணம் செய்துக்கலாம்னு இருந்திருப்பார்.  நம்ம வேலம்மாவைப் பார்த்து பிடிச்சுப் போயிருக்;கும். 
 
பெத்தவ நான் ஒருத்திதானே உயிரோட இருக்கேன். மத்தபடி அவளும் யாருமத்தவதானே? அதனால் இவளைக் கல்யாணம் பண்ணிக்க  நினைச்சிருப்பாரு போல’  என்று கேள்வியையும்  தானே கேட்டு பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார்.
 
பொதுவாக மச்சினன் இல்லாத வீட்டில் பெண் எடுக்கத் தயங்குவார்கள் பாக்கியத்தின் உறவுகளில்.  நாளை பின்னே ஏதும் ஒரு இடுக்கன் ஏற்பட்டால் துணை நிற்பானே? என்ற தைரியத்தில்.
 
அப்படி இருந்தும் பாக்கியமும் அவரது தங்கையும் மட்டுமான இவர்கள் குடும்பத்தில் லட்சுமணன் பாக்கியத்தை ஆசைப்பட்டு மணந்ததில் பெரிய குறை அவர்களுக்கு உண்டு.
 
அதை எல்லாம் கேள்விப்பட்ட புஷ்பா  – ‘தம்பி இல்லா விட்டால்  என்ன? உனக்கு நான் இருக்;கிறேன் அக்கா ‘என்று பாக்கியத்திற்கு அவரால் என்னென்ன முடியுமோ அந்தந்த வழிகளில் உதவிக் கொண்டுதான் இருக்;கிறார்.
 
 
அந்த வகையில் ஒற்றைப் பிள்ளையாகப் போய்விட்ட மகளை மணம் முடித்துக் கொடுக்கும் போது ஏற்படவிருக்கும் சிக்கல்களாக பாக்கியம் கருதி இருந்ததில் முக்கியானது அதுதான்- வீட்டில் ஆண்பிள்ளை இல்லை என்பதுதான்.
 
பாண்டியன் தேன்மொழியை விரும்பி மணக்கக் கேட்டதும் பாக்கியத்தால் அவனது விருப்பமாக அதைத்தான் நினைக்க முடிந்தது. அந்த விசயம்தான் தேண்மொழிக்கு ஒத்து வந்தது என அவர் நினைத்தார்.
 
யாருக்குமே தங்கள் பிள்ளைகளின் திருமணம்  அதி முக்கியமானதுதான்.
 
வாழ்வில் எத்தனையோ அடிகளை வாங்கி வலிகளைத் தாங்கிய பாக்கியத்திற்கும் மகள் திருமணம் சாதாரண விசயம் அல்ல. 
 
அதே நேரத்தில் அவர் மகளை மணக்கக் கேட்டவனும் அவரைப் பொறுத்தவரை சாதாரணமானவன் அல்ல.
 
எல்லாவற்றையும் விட மகள் தன் பேச்சைக் கேட்பாள் என்ற நம்பிக்கை வேறு. 
 
தேன்மொழித் தன் தாயிடம் பொதுவாக மறுத்துப் பேச மாட்டாள். எப்போதாவது தாயின் முடிவுகள் தவறு என்று தெரியும் போது எடுத்துச் சொல்லி பாக்கியத்தை அதைக் கேட்க வைத்து விடுவாள்.
 
அதனால் மகளின் சம்மதத்தைப் பெரிதாக நினைக்கவில்லை பாக்கியம்.
 
அவருக்கும்;தான் யார் இருககிறார்கள்? தனது ஒரே கறிவேப்பிலைக் கொத்தை விட மற்ற எதுவும் முக்கியமா என்ன பாக்கியத்திற்கு?
 
 
 
அன்று அவனிடம் தக்காளி வாங்கியப் பின் அவனிடமே வாங்கி இருந்த துணிப்பையைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றுதான் மீண்டும் அவன் கடைககுப் பையுடன் சென்றார்.
 
“ வாங்க பாக்கியத்தம்மா” என்ற இனிமையாக அவன் வரவேற்றதில் இவருக்கு மனம் குளிர்ந்தது.
 
“அதான் தம்பி… உங்கக் கிட்ட காய் வாங்கிட்டுப் போகும் போது பை இல்லன்னு உங்க துணிப் பையை எடுத்துக் கிட்டுப் போனேன். “ என்றவரை முறைத்து அவர் கையில் இருந்த பையைப் பார்த்து வெளிப்படையாகவே சலித்துக் கொண்டான்.
 
“என்ன பாக்கயத்தம்மா இது? ஒரு துணிப் பைக்கு கூடவா நான் யோக்கியதை இல்லாதவன்?” என்று சங்கடப்பட்டான்.
 
“அட. அது இல்ல தம்பி. பிளாஸ்டிக் பைன்னா திருப்பித் தந்திருக்;க மாட்டேன். அதுதான் நிறைய கிடைக்குதே? துணிப்பைதான் பயன்படுத்தனும்னு கவர்மென்டு சொல்லுது. 
 
அதுல என்ன தம்பி இருக்;கு. பை உங்க கிட்ட இருந்தா என்ன? என் கிட்ட இருந்தா என்ன?” என்று பொதுப்படையாகப் பேசி வெளியேறப் பார்த்தார்.
 
முன்தினம் வேறு வழி இல்லாமல் அவனிடம் வாங்கியப் பை. யார் வீட்டு முதலும் நம்ம வீட்டுல இருக்கக் கூடாது என்பது மகளின் கொள்கை.
 
(என்னங்கடா இது?, ஆளாளுக்கு கொள்கை கொள்கைன்னு? கடுப்படிக்கிறாங்க யுவர் ஆனர்!)
 
அந்தப் பையைக் கொடுத்துவிட்டு வருமாறு மகளின் நச்சு தாங்காமல்தான் வேலைக்குப் போகும் போது கொண்டு போய்விட்டு திரும்ப வரும் வழியில் அவனைப் பிடித்துக் கையில் திணித்தார்.
 
 
அவனுக்குப் பொங்கி விட்டது ஆத்திரம். என்ன பேசுகிறோம் என்ற உணர்வில்லாமல், இதைப் பற்றி எப்படி எப்போது பேச வேண்டும் என்று அவன் போட்டு வைத்திருந்தத் திட்டங்களை மறந்துவிட்டு-
 
“ஓஹோ? உங்க வீட்டுப் பிள்ளையா இருந்தா இப்படித் திருப்பித் தருவீங்களா?” என்று கேட்க- 
 
“அதுனால என்ன சாமி. நீயும் என் மகன் மாதிரிதான்” என்று சிரித்தார் பாக்கியம்.
 
‘மகன்’; என்ற வார்ததையில் உஷாரான பாண்டியன் ‘அய்யய்யோ’ எனப் பதறினான் உள்ளுக்குள்.
 
“அத்தை! அத்தை! அத்தை! உங்க மருமகனா இருக்கத்தான் எனக்கு விருப்;பம் அத்தை!” என படபடத்தான்.
 
பாக்கியம் ஒன்றும் புரியாமல் விழித்தார். தன் காதில் விழுந்தது சரிதானா என்று குழம்பினார்.
 
அவர் ‘அலங்க மலங்க’ விழிப்பதைப் பார்த்த பாண்டி கைகளைப் பிசைந்து கொண்டான்.
 
பின் உறுதியாக அவரைப் பார்த்து- 
 
“ நீங்க கேட்டது சரிதான் அத்தை. நான் நம்ம தேனை கட்டிக்க ஆசைப்படுறேன்”  என்று முடித்தான்.
 
“இதுல்லாம் பெரிய பேச்சு தம்பி. யார் வேணா யார்கிட்ட வேணா எது வேணா பேசலாமா? அப்படியா நாங்க விதியத்துப் போயிட்டோம்?” என்றார் கோபமாக.
 
அத்தை என்று முறை வைத்து அழைத்ததில் பெரிய பிரச்சனை இருந்திருக்கவில்லை அவருக்கு. ஊரில் வயதுப் பிள்ளைகள் பொதுவாக அத்தை என்றுதான் கூப்பிடுவார்கள்.
 
ஆனால் மகளை செல்லமாக ‘தேன்’ என்று அவன் குறிப்பிட்டது கடுப்பானது அவருக்கு.
 
‘ஆத்தீ! பொண்ணுக்கு முன்னால அம்மாவுக்கு வேப்பிலை அடிக்கனும் போலவே? ‘என்று கலங்கிப் போனான் பாண்டி.
 
அவசர அவசரமாக “இல்ல அத்தை. நான் சீரியசாத்தான் சொல்றேன். இந்த விசயம் என் மனசுல ரொம்ப நாளா இருக்கு. அப்பா இல்லாத பொண்ணைக் கட்டிக்கனும்னு நான் நினைச்சேன். அப்பதான் என்னை நல்லாப் பாத்துப்பா. இல்லன்னா எங்க அப்பா மாதிரி வருமான்னு என்னை டார்ச்சர் பண்ணிட்டே இருப்;பா….” என்றவன் அவரின் முறைப்பில் அசடு வழிந்தான்.
 
 
“இல்ல அவங்க அவங்க கல்யாணம் இப்படி இப்படி  நடக்கனும்னு நினைக்கறது தப்பில்லையே?” என்று பம்மினான்.
 
பின்னே? அப்பா இருக்கிற பொண்ணுங்களை குத்தம் சொல்றியா? என்று ஏழரையைக் கூட்டிவிட்டால் என்ன செய்வது?  என்று நாலையும் யோசிக்கத்தான் செய்தான். 
 
இருந்தாலும் அவனுக்கு சனி திசை நடப்பதாக அம்மா சொன்னதை மறந்திருக்க வேண்டாம்.
 
“பையனுக்கு இந்த சனி திசையில கண்டிப்பா கல்யாணம் நடக்கும். கல்யாணம் நடந்தாதானே பிரச்சனை வரும்? பிரச்சனைதானே இந்தப் பெயர்ச்சியோட கான்செப்ட்“ என்று நக்கலடித்திருந்தார் ஜோதிடர்.
 
செண்பகம் அதை மட்டும் மறைத்துவிட்டார். பின்னே இதற்காக வீம்பு பிடித்துக் கொண்டு கல்யாணம் வேண்டாம் என்று இவன் சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்ற கவலைதான்.
 
 அவர் எதைச் சொல்லி இருந்தாலும் தேன்மொழியை மணந்தே ஆகனும் என்ற அவன் கொள்கையை (மறுபடியுமா?) கை விட்டிருக்க மாட்டான்.
 
கொழுத்த அந்த வெள்ளாடு தலையைத் தலையை ஆட்டி காசாப்புக் கடையில் காலை வைத்தது.
 
 
“ எங்க வீட்ல சொல்லி பொண்ணு கேக்க வரச் சொல்றேன் அத்தை ” என்று வலியப் போய் சிக்கினான்.
 
அவன் நினைத்தது என்ன? 
 
தாய்க்குப் பிடித்த –  தனக்கும் பிடித்த வீட்டுக்கு ஒத்தையாக இருக்கும் பெண்ணை காதலித்து பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது என்பதுதானே? 
 
நடுவில் இது என்ன பைத்தியக்காரத்தனம்? அப்பா இருக்கக் கூடாது என்றெல்லாம் அவன் நினைத்த மாதிரி நினைவு இல்லையே? ஆஹான்! என விழித்தான்.
 
எல்லாம் மனிதன் நினைத்தபடி நடந்து விட்டால் இறைவன் இருப்பதை அவன் மறந்து விடுவான் அல்லவா?
 
அதனால்தான் வாயில் வாத்தியத்தை வைத்துப் படைத்தான்; ஆண்டவன்.
 
நேரம் சரியில்லை என்றால் தனக்குத்தானே ஊதிக் கொள்ளும் சங்கு அது.
 
பாக்கியத்திடம் பெண் கேட்டது முதல் தவறு. பெண்ணைத் தன் வீட்டில் இருந்து பார்க்க வருவார்கள் என்றது இரண்டாது தவறு. இந்த இரண்டையும் சரி செய்தாலே அவன் பிரச்சனை தீர்ந்துவிடும். 
 
ஆனால் என்ன செய்ய ? இதில் ஒரு பிரச்சனையை ஏறெடுத்துப் பார்ப்பதும் அவனுக்கு ஒரு சாதனையாக இருக்கும் போலவே?
 
கொள்கையாவது ஒன்றாவது? அதெல்லாம் சும்மா!
 
  1. சும்மானாச்சுக்கும்  ஒரு வீம்பு. தலையைத் தட்டி ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்திருந்தால் வம்சத்தை விருத்தி பண்ணிக் கொண்டு உல்லாசமாக குழந்தைகளுடன் ஊரைச் சுற்றி இருந்திருப்பான்
மனைவியையா? அவளை அடுத்த பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு அனுப்பி இருப்பான்.
 
 
ஆனால் பாவம் அதுதான் இப்போதைக்கு நடக்கவில்லையே?
 
 
பெரிய குடும்பத்தில் பெண் எடுப்பதாக தாய் அலைய, குடித்தால் பெண் தர மாட்டார்களாமா? அந்தப் பெண் யாருக்;கு வேண்டும்? என்று பொருமிய  இவன் வீட்டில் ஒற்றைப் பெண்ணாக இருக்க வேண்டும்  என அலைய நடுவே தொழிலும் செய்தான்தானே? 
 
அதில் காலம் கரைந்ததுதான் மிச்சம்.
 
இவன் ரோசத்திற்கும் ஒரு அர்த்தம் இருந்தது. அதன்படி எப்போதாவது குடித்து வந்ததையும் தற்போது  விட்டு விட்டான். 
 
தன்னுடைய மதிப்பு அந்த  வழியில் இறங்குவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
 
எப்படியோ தேன்மொழியைப் பிடித்து விட்டான். இல்லை இல்லை. அவள் அம்மாவைப் பிடித்து விட்டான்!
 
அதை இதை சொல்லி தேன்மொழியை மணந்து கொள்ள வேண்டியதுதான் என முடிவெத்துதான் இந்தப்படியாக வாயை விட்டான்.
 
 
முதலில் சந்தேகம் இருந்தாலும் இந்த விசயத்தில் போய் யாராவது விளையாடுவார்களா என்ன? என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு முதல் வேலையாக மகளிடம் சொன்னார் பாக்கியம்.
 
தேன்மொழி தன் தாயின் ஆர்வம் கரையும் வரை எதுவும் பேசவில்லை.
 
பின் மெதுவாகக் கேட்டாள்:
 
 
“நான் இருக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்குதுங்களாம்மா?” என்று.
 
பாக்கியத்திற்குத் தூக்கி வாரிப் போட்டது.
 
“பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு? என்ன பேசுறதுன்னு அறிவு வேண்டாம்? “ என்று பொரிந்தவர்-
 
“உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறமும் நான் உசுரோட இருக்கறது உனக்காகத்தான் வேலம்மா ” எனத் தழுதழுத்தார்.
 
“அம்மா உனக்கு ஏப்ப சாப்பயா மாப்பிள்ளை பாத்துருவனாடா? பணம் வசதி என் தகுதிக்குத் தகுந்தபடிதான் பாப்பேன். ஆனா குணத்துல குறைவா இருந்தா நான் சம்மதிப்பேனா பாப்பா?”  என விசனப்பட்டு கண் கலங்கினார்.
 
தேன்மொழி தலையசைத்துக் கொண்டாள்.
 
 
“உங்களுக்கு அப்பா கிடைச்ச மாதிரி எனக்கும் நல்ல புருஷன் கிடைச்சிற மாட்டான்மா.
 
அப்படியே கிடைச்சாலும் என் விதி அவன் இருப்பானோ? அப்பா மாதிரி இவனும் பாதியில   போவானோ?. எவனும் நல்லவன் இல்லம்மா. இவனை மட்டும் இல்ல ….வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லம்மா”  
 
மகளை அருகே அழைத்துத் தலையைத் தடவிக் கொடுத்த பாக்கியம் –
 
“இந்தப் பாரு பாப்பா! பொண்ணு பாக்க அம்மாவை அனுப்பறேன்னு சொல்லியிருக்கான். அவ்வளவுதான். இப்பவே உன்னை அவன் கையில புடிச்சுக் குடுத்துப் போகவா சொன்னேன்? அவசரப்படாத தாயி. என்ன நடக்குதுன்னு பாப்போம். அம்மா இருக்கேன் உனக்கு! உனக்குப் பிடிக்காத எதையும் அம்மா செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியதா தங்கம்? என்னை மீறி யாரும் உன்னை அண்ட  விட்ருவனா?” என உறுதியோடு அவர் சொல்ல தேன்மொழி நிம்மதி அடைந்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!