தொலைந்தேன் 07💜

ei9AFI172109-2fb7e056

தொலைந்தேன் 07💜

“யாரு சனா?” ராகவன் கோபத்தோடு புரியாதுக் கேட்க, “அது.. அது வந்து.. அந்த பொண்ணு…” என்று தடுமாறியவனுக்கு தன்னை நினைத்தே குழப்பம்தான்.

“ஃப்ரென்ட்.” அவன் திக்கித்திணறிச் சொல்ல, “ஓஹோ! ஃப்ரென்ட்ட பார்த்தா இப்படிதான் சுத்தி நடக்குறதை உணராம இப்படி நடந்துப்பியா?” என்று கடுப்பாகக் கேட்டவர், “வூஎவர் இட் இஸ், நீ அப்படி போயிருக்கக் கூடாது.” அழுத்தமாகச் சொல்லிவிட்டு வெளியேற, அப்படியே பின்னாலிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான் ரிஷி.

ராகவனின் திட்டல்கள் எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை அவன். மாறாக, ‘ஒருவேள, நிஜமாவே நம்ம கண்ணு முன்னாடி நின்னாளா, இல்லைன்னா இது நம்ம பிரம்மையோ?’ என்று தன்னைத்தானே கேட்டு குழம்பிக்கொண்டது அவன் மனம்.

இருந்தும் ஒன்று மட்டும் அவன் மூளையில் அழுத்தமாக உரைத்தது, ‘நிஜமாவே இருந்தாலும் ஒருநிமிஷம் எதைப் பத்தியும் யோசிக்காம ஏன் ரிஷி அப்படி நடந்துக்கிட்ட?’ என்ற கேள்விதான் அவனுக்குள்.

விழிகளை மூடிக்கொண்டு சோஃபாவில் இவன் சாய்ந்துக்கொள்ள, அதேநேரம்

“ஹா ஹா ஹா ஹா… கிஸ்தி, திரை, வரி, வட்டி! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கு ஏன் கொடுத்து கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா, ஏற்றம் இறைத்தாயா, நீர்ப்பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா, நாற்று நட்டாயா, களை பறித்தாயா, களனி வாழ் உழவர்க்குகஞ்சி கலயம் சுமந்தாயா, அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்து பணி புரிந்தாயா? அல்லது நீ மாமனா மச்சானா? மானம் கெட்டவனே!”

கட்டபொம்மன் வேடத்தில் கையில் போலியான வாளுடன் விழிகளில் பாவனையோடு சாணக்கியா அந்த தெரு நாடகக் குழுவில் எல்லோர் முன்னும் நடித்துக்கொண்டிருக்க, சட்டென்று, “ஏய் நிறுத்து!” என்றொரு ஆணின் குரல்.

பேச்சை நிறுத்திவிட்டு சனா வேகமாகத் திரும்பிப் பார்க்க, அவளோடு அடிக்கடி சண்டைக்கு நிற்கும் ப்ரனவ்தான். ‘இவனா…’ சலிப்பாக உள்ளுக்குள் நினைத்தவள், “என்ன?” என்றாள் கடுப்பாக.

சுற்றியிருந்தவர்களோ வழக்கம்போல் நடப்பதுதான் என்றாலும் நடக்கப் போகும் சண்டையை ஆர்வமாகப் பார்க்க, சனாவை மேலிருந்து கீழ் பார்த்த ப்ரவின், “ஆமா… நானும்  பார்த்துக்கிட்டு இருக்கேன். ஏரியாவுல நாடகம் போடலாம்னு வீட்டுக்கு அம்பது ரூவா எடுத்து ஒரே நாடகத்தை மூனு வருஷமா போட்டுட்டு இருக்க. என்ன எங்களை ஏமாத்த பார்க்குறியா?” என்று கோபமாகக் கேட்க, அவனை உக்கிரமாகப் பார்த்தாள் அவள்.

“அடிங்க! இப்போ திண்ணியே பஞ்சி சொஞ்சி எல்லாம் அந்த காசுலதான். உன்னை மாதிரி நினைச்சியா, ஏரியாவ சுத்தம் பண்றேன்னு ஃப்ரீயா ஆளுங்க வந்து பண்ணதுக்கு எங்ககிட்ட காசு கேக்குறாங்கன்னு கேட்டு காசை ஆட்டைய போட்டு ஏமாத்தின பரதேசிதானே நீனு! என்னை நீ குத்தம் சொல்றியா?” என்று பதிலுக்கு சனாவும் எகிற, அவளிள் வார்த்தைகளில் அவனுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஆனது.

ஏற்கனவே அவள்மேல் தனிப்பட்ட பகை அவனுக்கு. இப்போது அவமானப்படுத்தலாமேன அவன் பேச, அவளோ அவன் விட்ட அம்பை அவனுக்கே திருப்பி விட்டிருந்தாள்.

“ஏய் என்னடீ, உன்னை பத்தின உண்மைய நான் உடைச்சதும் என்னை பத்தி தப்பா பேசுற. ஓஹோ! அப்பா அம்மா கூடவே இருந்து வளர்த்திருந்தா நல்ல புத்தி பொறந்திருக்கும். இல்லல்ல அதான் இப்படி!” அவளை எதைக்கொண்டு தாக்குவதென்று தெரியாமல் அவளின் உறவுகளை வைத்து ப்ரனவ் சீண்ட, அவ்வளவுதான்.

“சனா, வேணாம். அவன் ஏதோ வீம்புக்கு பண்றான்.” என்ற இந்தரின் வார்த்தைகளையும் மீறி மேடையிலிருந்து குதித்தவள், “அடிங்க! எவ்வளவு அதுப்பிருந்தா என்னை நீ இப்படி பேசுவ…” என்று கத்திக்கொண்டே அவன் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பிக்க, அவனும் பதிலுக்கு அடிக்க என அங்கு பெரிய கலவரமே வெடித்துவிட்டது.

இருவரையும் பிரித்து நிறுத்துவதற்குள் ப்ரனவ்வின் நண்பர்களுக்கும் இந்தருக்கும்தான் நாக்கே தள்ளிவிட்டது.

அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடவாததுபோல் காதில் ஹெட்செட்டை போட்டு பாடல் கேட்டவாறு தெருவோரமாக ஆடிக்கொண்டே தன் வீட்டை நெருங்கிய சனா, அங்கு வாசலில் நின்றிருந்த ராஜலிங்கத்தை பார்த்ததும் அதிர்ந்த அடுத்தகணம் வேகவேகமாக ஓடிச் சென்று அங்கிருந்த ஆட்டோவின் பின்னே ஒழிந்துக்கொண்டாள்.

அங்கிருந்து அவரை எட்டிப் பார்த்தவள், அவராக போகும் வரை வெளியவே வரவில்லை. இதுவும் வழக்கமாக நடப்பதுதான். ராஜலிங்கமும் வாசலிலே தலைகுனிந்தவாறு தன் மகளுக்காக காத்திருந்தவர், ஒருகட்டத்தில் முடியாமல் விழியோரத்தில் உதிர்த்த விழிநீரை துடைத்துவிட்டு அங்கிருந்து தன் வீட்டை நோக்கி நகர்ந்திருக்க, போகும் அவரை இறுகிய முகமாக பார்த்திருந்தவள், கண்ணிலிருந்து அவர் மறைந்ததுமே வீட்டை நெருங்கினாள்.

வேகமாக உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டவள், கையிலிருந்து பையை தூர வீசிவிட்டு அப்படியே தரையில் அமர்ந்துக்கொண்டாள். எப்போதும் அவளை வாட்டும் தனிமை இப்போதும் அவளை தொற்றிக்கொண்டது.

சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள், பின் தன்னைத்தானே தேற்றி ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு எழுந்து குளித்து முடித்து உடை மாற்றி வந்து கையோடு கொண்டு வந்திருந்த உணவுப்பொட்டலத்தை விரித்து உண்ண ஆரம்பிக்க, அந்த சாதம் தொண்டையிலிருந்து இறங்கினால்தானே!

எப்படியோ மென்று கஷ்டப்பட்டு விழுங்கி மீண்டும் தொப்பென்று மெத்தையில் விழுந்தவளின் விழிகளில் சிக்கியது அறையினோரத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஃப்ரேம். அதைப் பார்த்ததுமே சனாவுக்கு சற்று நேரத்திற்கு முன் இந்தர் சொன்ன விடயம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

“சனா, கேள்விப்பட்டியா, ரிஷி வேதாந்த் கான்செர்ட் நடந்துட்டு இருக்கும் போதே ஸ்டேஜ்லயிருந்து கூட்டத்து நடுவுல குதிச்சு யாரையோ தேடி ஓடியிருக்காரு. இப்போ எல்லா சோஷியல் மீடியாவுலேயும் அதைதான் போட்டு ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க. அவரோட லவ்வர பார்த்து ஓடினதா கூட சொல்றாங்க. அய்யோ அய்யோ!” என்ற இந்தரின் வார்த்தைகளும் அவன் காட்டிய காணொளியும் அவளுக்கு நினைவு வந்தது.

அவளிதழில் மெல்லிய சிரிப்பு. அந்த ஃப்ரேமும் அன்று ரிஷியோடு காட்டிலிருக்கும் போது இரண்டு ஓணான்கள் பிணைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து செய்து வைத்திருந்த ஃப்ரேம்தான். ஏனோ அது விற்றுபடாததில் அவளறை மூலையில் கிடக்கின்றது.

அதை எழுந்துச் சென்று கையிலெடுத்த சனாவுக்கும் ஏனோ அந்த இரண்டு நாட்கள் அவனுடனிருந்த நினைவுகள் வர, வாய்விட்டுச் சிரித்தவள், “சரியான மென்டல்!” என்றாள் இன்று அவன் செய்த காரியத்தை எண்ணி.

ஆனால், அந்த காரியத்தை அந்த பாடகன் அவளுக்காகத்தான் செய்தானென்று அறியாமலே போனாள்.

அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிந்தது. ஆனால், அறையிலிருந்து வெளியவே வரவில்லை ரிஷி. காலையிலேயே ராகவனும் லண்டனுக்குச் சென்றிருக்க, அவர் போகும் போது கூட வழியனுப்ப எழும்பவில்லை அவன். கிட்டதட்ட தூங்கி எழவே பதினொரு மணியை தாண்டிவிட்டிருந்தது.

எப்போதும் காலை உணவை மறுக்காது எடுத்துக்கொண்டு ஜிம்மில் சிறிதுநேரம் செலவழிக்காவிட்டால் அவனுக்கு நாளே ஓடாது. ஆனால் இன்று நேற்றைய நிகழ்வினால் உண்டான களைப்பு போலும்!

மெதுவாகவே தூங்கி எழுந்து அப்போதும் குளிக்கச் செல்லாது படுக்கையிலிருந்துக்கொண்டே எதையோ யோசித்துக்கொண்டு இருந்தவன், குளித்து உடை மாற்றி வரவே  மதியத்தை நெருங்கிவிட்டிருந்தது. உணவை அளந்து பிசைந்து வாயிற்குள் திணித்த ரிஷிக்கு, நாளே ஏதோ மந்தமாக போவது போன்ற உணர்வு!

எப்போதும் மனதை திசைத்திருப்ப அவன் பயன்படுத்தும் இரு ஆயுதங்களே ஜிம்மும் இசையும். ஆனால், இப்போது இரண்டின் பக்கமும் மனம் செல்லவில்லை.

அலைப்பேசியை நோண்டிக்கொண்டு ஹோல் சோஃபாவிலேயே நேரத்தை ரிஷி ஓட்டித் தள்ள, மாலை கடந்து இரவும் வந்துவிட்டது. விழிகளை மூடி சோஃபாவில் சாய்ந்தமர்ந்திருந்தவனுக்கு ஏனோ அந்த ஒரு இடம் ஞாபகத்திற்கு வந்தது. அங்கு சென்றால் மனம் சமநிலையடையுமென்று யோசித்தானோ, என்னவோ?

புருவத்தைச் சுருக்கி யோசித்துவிட்டு அந்த இடத்தை நோக்கி காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வசதி படைத்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கக் கூடிய அந்த சாலையினோரத்தில் காரை நிறுத்தியவன், காருக்குள்ளேயிருந்தே ஒரு வீட்டை எட்டிப் பார்த்தான். அவன் வாழ்ந்த வீடு அது. இப்போது அங்கு வேறொருவர் குடியிருக்கின்றார்கள் போலும்! இருந்தாலும், சில சில மாற்றங்களைத் தவிர வேறெந்த மாற்றமுமில்லை.

அந்த வீட்டில் அவனுக்கு ஏகப்பட்ட நினைவுகள். மனக்கண் முன் அத்தனையும் விம்பமாகத் தோன்றி இறுதியில் மேக்னாவின் முகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இப்போது முகம் இறுகி சிவந்துப்போய் தரையை வெறிக்க ஆரம்பித்துவிட்டான் ரிஷி.

மனம் அமைதியடையுமென்று வந்தால், மேலும் ரணமானதுதான் மிச்சம்.

அதற்குமேல் அங்கு நிற்காமல் காரை வேகமாக செலுத்திக்கொண்டு வந்தவன், நினைவுகளின் தாக்கத்தில் அந்த ஆள் அரவற்ற சாலை நடுவே காரை நிறுத்தி மனதை ஆசுவாசப்படுத்த முயற்சிக்க, இப்போது லேசாக மனம் மட்டுப்பட்டாலும் எதையோ உணர்த்துவது போன்று தோன்றியது அவனுக்கு.

இத்தனைநாள் அவனுக்குள் புரண்டுக்கொண்டிருந்த குழப்பங்களுக்கான விடை நெருங்குவது போன்ற பிரம்மை. ‘என்னாச்சு எனக்கு?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், காரின் ஹெட்லைட்டை ஒளிர விட சரியாக அவன் கார் முன் பொனெட்டில் வந்து விழுந்தாள் அவள்.

ஒருநிமிடம் ரிஷிக்கே தூக்கி வாரிப்போட்டது. ஆனால், அடுத்தகணம் விழிகளைச் சுருக்கி காரின் முன் விழுந்த பெண்ண வெளிச்சத்தினூடே அவன் உற்று நோக்க, அது அவளேதான். சனா.

விழி விரித்து அசையாது, ‘இது அவதானா, இல்லை என் பிரம்மையா? ஓ கோட்! இது பிரம்மையா இருக்கக் கூடாது.’ தனக்குள்ளேயே பேசியவாறு முன்னிருந்தவளை அவன் பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருக்க,

“நடுரோட்ல எவன்டா காரை நிறுத்தியிருக்குறது, அறிவுகெட்ட மடச்சாம்பிராணி! மனுஷனோட நிலையை புரியாம வீட்ல தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி நமக்குன்னு வந்து சேருரானுங்க. ஓரமா போய் நிறுத்துடா என் டொமேட்டோ!” என்று கத்தவிட்டு, “அய்யய்யொ வரானுங்களே!” என்று பின்னால் பார்த்துவிட்டு பதறியபடி காரைக் கடந்து ஓடினாள் சாணக்கியா.

இவள் கடந்துச் சென்ற மறுநிமிடம் நான்கைந்து தடியன்களும் அவள் பின்னால் ஓட, ரிஷிக்கு சுதாகரிக்கவே சில கணங்கள் தேவைப்பட்டது. வெளியிலிருந்து காருக்குள் இருப்பவர்களை பார்க்க முடியாதபடி கார் கண்ணாடி இருப்பதால் ஏனோ சனாவுக்கும் யாரென்று தெரியவில்லை. ஆனால், இவன் கண்டுக்கொண்டான்.

கூடவே, அவளுக்கு ஏதோ ஆபத்தென்றும் மனம் உணர்த்த, எதைப் பற்றியும் யோசிக்காது காரை அப்படியே போட்டுவிட்டு இறங்கியவன், அவர்களின் பின்னே ஓடினான்.

அடுத்த சில நிமிடங்களில், முன்னால் ஓடிக்கொண்டிருந்த சனா, பின்னால் கேட்ட குரல்களில் சட்டென்று நின்று வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். தன்னெதிரே பார்க்கும் காட்சியில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளுக்கு முதுகுப்புறத்தைக் காட்டிக்கொண்டு ஒரு உருவம் துரத்தி வந்த ஒருவனை வெளுத்துக்கொண்டிருக்க, மற்ற மூன்று தடியன்களும் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம், அவளும் அதையேதான் செய்துக்கொண்டிருந்தாள். அந்த சாலை கும்மிருட்டு வேறா, முகமும் சரியாக தெரிந்தபாடில்லை.

அந்த ஒருவன் கீழே விழவும்தான் மற்ற மூவரும், “டேய் யாருடா நீ, தேவையேயில்லாம எங்க விஷயத்துல தலையிடுற…” என்றுக்கொண்டே அவன் மேல் பாய, அவர்களிடமிருந்து அசால்டாக விலகிக்கொண்ட ரிஷி, சனாவை நோக்கி ஓடி வந்து, அவள் கையை பட்டென்று பிடித்துக்கொள்ள, அடுத்தகணம், “வேது!” என்றாள் அவள் ஆச்சரியமாக.

அவள் உணர்ந்ததுமே மூச்சு வாங்கியவாறு சிரித்துக்கொண்டவன், “கண்டுபிடிச்சிட்ட, பட் இப்போ பேச நேரமில்ல வா ஓடலாம்.” என்றுவிட்டு இழுத்துக்கொண்டு ஓட, “அடி ஆத்தீ! உன்னைப்போய் ஹீரோன்னு ஒரு நிமிஷம் நினைச்சிபுட்டேனே…” என்று கத்திக்கொண்டே அவன் இழுத்த இழுப்பிற்கு ஓடினாள் சனா.

பாதை ஒருபக்கமாகத் திரும்ப, அந்த வளைவில் திரும்பி ஓடி வந்து நின்ற மூன்று தடியன்களும் மூச்சு வாங்கியவாறு சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு அவர்களைக் காணாது காலை கோபமாக தரையில் உதைத்துவிட்டு நகர்ந்திருந்தனர்.

அவர்கள் மறைந்ததும்தான் அங்கு ஓரமாக இருந்த வாகனமொன்றின் பின்னிருந்து ரிஷியும் சனாவும் மெல்ல எட்டிப் பார்த்தனர். விழிகளை சுழலவிட்டுப் பார்த்து அவர்களைக் காணாது ‘அப்பாடா!’ என்று மூச்சுவிட்டவாறு இருவரும் அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டு பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவனுக்கு இத்தனைநாளிருந்த வெறுமை காணாமற் போன உணர்வு!

கொஞ்சமும் யோசிக்காது அவளை இழுத்து ரிஷி அணைத்துக்கொள்ள, சனாவோ இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. ‘என்ன பண்றான் இவன்?’ என்ற ரீதியில் அவனின் அணைப்புக்குள் திருதிருவென விழித்தவாறு இருந்தவள், அடுத்து ரிஷி சொன்ன “ஐ மிஸ் யூ!” என்ற வார்த்தையில் முட்டிக்கொண்டூ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்… அன்னைக்கு உன்னை காப்பாத்தின நன்றி உனக்கு இப்போவும் இருக்குன்னு பார்க்கும் போது ஜிவ்வுன்னு இருக்கு. இந்த பண்பே உன்னை எங்கேயோ கொண்டு போக போகுது. முடிஞ்சா என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ, வாழ்க்கை அமோகமா மாறலாம்.” தன்னிஷ்டத்திற்கு அவள் பேசிக்கொண்டுப் போக, சட்டென்று விலகி அவளை முறைத்துப் பார்த்த ரிஷிக்கு ‘இதெல்லாம் திருந்தாத கேசு’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” அவள் சொல்வதுபோல் சொல்லிக்காட்டி அவன் விலகியமர்ந்துக்கொள்ள, அவனை அடக்கப்பட்டச் சிரிப்புடன் பார்ர்த்துக்கொண்டு, “சும்மா தமாஸூ வேது. இப்போ சொல்லு, என்னை ரொம்ப மிஸ் பண்ணியா நீ?” பாவமாக சனா கேட்க, “அப்படியெல்லாம் இல்லை.” என்று முறுக்கிக்கொண்ட ரிஷி ஏதோ ஞாபகம் வந்தவனாக, “ஆமா… யார் அவனுங்க?” என்று கேட்டான் சந்தேகமாக.

அவளோ எழுந்து கைகளைத் தட்டி மண்ணை உதறிக்கொண்டு, “அது ஒரு பெரிய கதை வேது.” என்றுவிட்டு முன்னே நடக்க, அவள் பின்னே ஓடியவன், “நீதான் ஏதோ பண்ணியிருக்க, என்ன பண்ணேன்னு சொல்லு.” என்று முறைத்தவாறுச் சொல்லி அவள் முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டான்.

ஆனால், அடுத்தகணம் திருதிருவென விழிக்க ஆரம்பித்துவிட்டாள் அந்த கேடி. முழித்துக்கொண்டே “அது.. அது வந்து…” என்று அவள் சொல்ல ஆரம்பிக்க, ஏனோ அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் ரசிக்கத்தான் தூண்டியது அவனுக்கு.

அந்த உணர்வில் தானாக விரிய முயன்ற இதழை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் சொல்வதைக் கேட்டான் அவன்.

“அது என்னன்னா வேது, இப்போ என்னை துரத்தி வந்தவனோட பேரு ப்ரவின். எங்க ஏரியாதான். ஆனா, எனக்கும் அவனுக்கும் எப்போவும் ஏழாம் பொருத்தம். எப்போவும் என்கூட முட்டிட்டே இருப்பான். இன்னைக்கும் அதேமாதிரி ஏதோ பழைய பகையில அவள் ஆளுங்கள கூட்டி வந்து என்கிட்ட பிரச்சினை பண்ணான். அப்போ…” என்ற சனாவுக்கு சற்று நேரத்திற்குமுன் நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

சிறிது நேரத்திற்கு முன்…

Leave a Reply

error: Content is protected !!