தொலைந்தேன் 09 💜

eiY4ERX64397-c608c832

தொலைந்தேன் 09 💜

ரிஷி, சனா இருவருக்குமிடையில் வெறும் நூலிடைவெளிதான். அவள் முழங்கையை இவன் இறுகப் பற்றியிருக்க, அவனின் சிவந்த விழிகளை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாணக்கியா.

சில கணங்களில் தன்னை சுதாகரித்தவள், “நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ…” என்று கோபமாக தன் கேள்வியை முடிக்கவில்லை, அவளை பேசவிடாது மீண்டும் இடைவெட்டி, “ஷட் அப்! என் கூட பேசணும்னு உனக்கு தோனல்லையா? எனக்குள்ள வர்ற ஃபீலிங்க்ஸ் உனக்குள்ள இல்லையா? அதுக்கு பதில் சொல்லு!” இறுகிய குரலில் ரிஷி கேட்க, சனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘ஒருவேள லூசா இருப்பானோ?’ என்ற ரீதியில் அவனை உற்று நோக்கியவள், மற்ற கரத்தால் அவனின் நெற்றியிலும் கழுத்திலும் தொட்டுப் பார்த்து, “நீ நல்லாதானே இருக்க, உடம்புக்கு எதுவும் இல்லல்ல? இல்லைன்னா, காத்து கருப்பு ஏதாச்சும் அடிச்சிட்டோ?” தீவிர முகபாவனையில் கேட்க, அப்போதும் அவனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அவனுக்குள் ஏதோ ஒரு உரிமை உணர்வு. தனக்குள் ஏற்படும் ஏக்கம் அவளிடத்தில் இல்லை என்றதும் உள்ளுக்குள் உரிமையுடன் கூடிய கோபம்.

விடாது அவளையே ரிஷி முறைத்திருக்க, கூடவே அவள் முழங்கையில் அவன் கொடுத்த அழுத்தம் வேறு அவளுக்கு வலியைக் கொடுத்தது.

“ஸ்ஸ்…” வலியில் முகத்தைச் சுருக்கி முணங்கலோடு சனா ரிஷியை நோக்க, உடனே அவள் முழங்கையை உதறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.

அவன் விட்டதுமே அவன் அழுத்தம் கொடுத்த பகுதியை பரபரவென தேய்த்தவள், அடுத்தகணம் தன் அலைப்பேசியை எடுத்து அவனின் எண்ணை சேமித்துக்கொண்டு, “போதுமா, சேவ் பண்ணிட்டேன். என்ன வலி! அப்பப்பப்பா…” என்று முறைத்தவாறுச் சொல்லி உதட்டைப் பிதுக்க, இப்போது கோபம் மறைந்து மனதில் இதம் பரவிய உணர்வு அவனுக்குள்.

இதழுக்குள் சிரித்துக்கொண்டவன், மெல்ல அவளின் கையை தன்னை நோக்கி இழுத்து, தான் கொடுத்த வலிக்கு தானே மருந்தாக மெல்ல வருடிவிட்டவாறு, “சரியான அரக்கிடீ நீ!” என்று விழிகளில் குறும்போடுச் சொல்ல, கோபமாக கரத்தை இழுத்துக்கொண்டவள், “அரக்கியா? அதுவும் நான் அரக்கியா? கொன்னுடுவேன் உன்னை. என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க? அன்னைக்கு என்னடான்னா சாணின்னு சொல்ற. இன்னைக்கு அரக்கின்ற. ஓய்! இது எங்க ஏரியா. என்கிட்ட வச்சிக்காத!” என்று கோபத்தில் காட்டுக்கத்து கத்தினாள்.

சனாவின் கத்தலில் தன்னை மீறி பக்கென்று சிரித்துவிட்டான் ரிஷி. “அடிங்க…” என்று அவனை அவள் கடுப்பாக நோக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையைச் செறுமி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன், “சாப்டியா?” என்று கேட்க, அவனை மீண்டும் குறுகுறுவென பார்த்தாள் அவள்.

அவனோ இப்போது அவளின் பார்வையில் புருவத்தைச் சுருக்கி, “வாட்?” என்று கடுப்பாகக் கேட்க, “இல்லை… நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்று இரு கால்களையும் கார் சீட்டின் மேலேற்றி சம்மணம் கொட்டியவாறு கேலிச் சிரிப்போடு கேட்டாள் சனா.

யோசனையோடு தலையை மெல்ல ஆட்டிய ரிஷி, “என்னை ட்ரை பண்றியா?” என்று பட்டென்று அவள் கேட்டதும், அதிர்ந்துப்போய் விழிகளை விரித்து, “நோ.” என்றான் படுவேகமாக.

கூடவே, “ஏ..ஏன் இப்படி கேக்குற?” அவன் தடுமாற்றத்தோடுக் கேட்க, “இல்லை… உன்னை பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு. இதோ பாரு! நான் அழகா இருக்கேன், ஐ நோ. அதுக்காக எல்லாம் அந்த மாதிரி நினைப்பெல்லாம் உனக்கு வந்துரவே கூடாது. அழகுலதான் ஆபத்திருக்கும்னு சொல்வாங்க. என்கிட்ட ஜாக்கிரதையா இரு!” விரலை நீட்டி சனா தீவிர முகபாவனையில் மிரட்டலாகச் சொல்ல, விழிகளில் அவள் மீது தெரியும் ரசனைப் பார்வையை மறைக்க அவனோ படாத பாடுபட்டுத்தான் போனான்.

அவள் கேட்ட கேள்வி அவனுக்குள்ளும் உண்டுதான். அவனிடத்தில் பழகும் பெண்களை விட வேறாகத் தெரியும் சனாவின் மேல் உருவாகிய உணர்வு வெறும் ஈர்ப்பென்றே நினைத்திருந்தான் அவன். அதனாலேயே அவளுடன் பழக ஏங்குகிறது என்று சாதாரணமாக நினைத்திருந்தான். ஆனால், ஈர்ப்பில் ஏது உரிமை உணர்வும் கோபமும்?

அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் ரசித்துக்கொண்டே மெல்ல அவள் முகத்தருகே நெருங்கியவன், “நோ ஐடியா. பட், ஃபியூச்சர் இஸ் அன்ப்ரெடிக்டபிள்.” ஹஸ்கி குரலில் சொல்லி அவள் விழிகளை ஊடுருவ, தன் முகத்தில் பட்ட அவனின் சூடான மூச்சுக்காற்றில் தன் மூச்சை அடக்கிக்கொண்ட அவனின் அரக்கி அவனின் வார்த்தைகளில் எச்சிலை விழுங்கிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

இதுவரை எந்த ஆடவனும் அவளருகே இப்படி நெருங்கியதில்லை. நட்பு ரீதியாக இந்தருடன் தொட்டுப் பேசி பழகியிருக்கிறாள். ஆனால், இவனின் தொடுதலும் நெருக்கமும் அந்த பெண்ணவளிடத்தில் வேறொன்றை உணர்த்தியது. முதல்தடவை அவனின் நெருக்கத்தில் ஒரு பெண்ணாக தன்னை உணர ஆரம்பித்தாள் சனா என்றுதான் சொல்ல வேண்டும்.

மூச்சு விட சிரமப்படுவது போன்ற உணர்வு. வேகமாக பின்னால் விலகியமர்ந்தவள், “நா..நான் போறேன்.” என்றுவிட்டு காரிலிருந்து இறங்கப் போக, “நாளைக்கு நைட் இதே டைம் இங்க வருவேன். வெளியில எங்கேயாச்சும் போகலாம் சாணி.” என்றான் ரிஷி சாதாரணமாக.

‘இது திருந்தாத கழுசற’ அவன் அழைத்த விதத்தில் உள்ளுக்குள்  அர்ச்சித்துக்கொண்டே அவனை முறைத்துப் பார்த்தவள், “நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” என்று சொல்லிக்கொண்டே காரிலிருந்து இறங்கி, காலால் ஒரு உதையும் கொடுத்துவிட்டுச் செல்ல, “உனக்கு வேற ஆப்ஷன் இல்லை மை டியர்.” என்று இதழை வளைத்துச் சிரித்தவாறு போகும் அவளின் உருவத்தையே கண்ணிற்கு மறையும் வரை பார்த்திருந்தான் ரிஷி.

அடுத்தநாள் இரவு, அவன் நினைத்ததுபோல் அவனின் பக்கத்து இருக்கையில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு உர்ரென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபமாக சாணக்கியா அமர்ந்திருக்க, ரிஷியோ அவளுக்கு அப்படியே எதிரான பாவனையில் முகத்தில் வெற்றிச் சிரிப்போடு காரை செலுத்தியவாறு அமர்ந்திருந்தான்.

“நீ பண்றது கொஞ்சமும் சரியில்லை. உன் பாட்டுக்கு வந்து காரை விட்டு இறங்குவேன், வீட்டுக்கு வருவேன்னு மிரட்டுற. என்னை பத்தி உனக்கு தெரியல. என் ஏரியா பசங்ககிட்ட கேட்டு பாரு, சொல்வானுங்க. ரொம்ப பயங்கரமான ஆளு நானு.” சனா அவள் பாட்டிற்கு கத்திக்கொண்டு வர, அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை ரிஷி.

“சோ வாட்?” அலட்சியமாக கேட்டுவிட்டு அவன் தன் வேலையில் கவனமாக, சனாவுக்குதான் பிபி தாறுமாறாக எகிறியது.

“நான் ஒன்னு சொல்லவா, நீ சரியான லூசுப்பயல், மண்டகோளாறு புடிச்சவன். ஒரு செலப்ரிட்டி மாதிரியா நடந்துக்குற. கடவுளே! என் மூஞ்ச பேப்பர்ல வராம விடமாட்ட போல.” தலையில் வெளிப்படையாக அடித்துக்கொண்டு சனா முணங்க, சட்டென்று வீதியோரமாக காரை நிறுத்தியவன், அதே வேகத்தோடு அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

அவன் இழுத்த விதத்தில், ‘என்னடா பொசுக்கு பொசுக்குன்னு கைய பிடிச்சு இழுக்குற’ என்ற ரீதியில் மலங்க மலங்க விழித்தவாறு அவள் அவனின் விழிகளை பார்க்க, “லுக், எனக்கு உன் கூட பழகணும்னு ஆசையா இருக்கு. நான் பழகணும்னு நினைக்கிறேன். தட்ஸ் ரைட். ஏன் இப்படின்னு எனக்கு தெரியல. நான் யாரையும் நெருங்கினதும் இல்லை. என்னை நெருங்க விட்டதுமில்லை. பட், இது எனக்கு பிடிச்சிருக்கு. என்ட் ஐ  ப்ரோமிஸ், இப்போதைக்கு இது ஃப்ரென்ட்ஷிப்ப தாண்டி போகாது. ஆல்சோ, மீடியாவுக்கு உன்னை பத்தி தெரிஞ்சிக்காம நான் பார்த்துக்குறேன்.” என்றுவிட்டு அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

ஆனால், அப்போதும் அதே பாவனையில் அவள் அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்க, ‘உஃப்ப்…’ என்று ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், காதோரமிருந்த அவளின் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டவாறு, “உன்னை நான் ஃபோர்ஸ் பண்ணல்ல. நான் ஒன்னும் கெட்டவனும் கிடையாது. உனக்கு பிடிச்சிருந்தா என் கூட பழகு. பிடிக்கலன்னா…” என்றுவிட்டு சற்று நிறுத்தி அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவாறு, “அப்போவும் என் கூட பழகு.” என்று முடித்து தள்ளி அமர்ந்துக்கொண்டான்.

‘இதுல ஏதுடா ஆப்ஷன்?’ உள்ளுக்குள் நினைத்தவாறு இருக்கையில் நேராக அமர்ந்துக்கொண்டவள், ஓரக்கண்ணால் ரிஷியை பார்க்க, அவனும் ஸ்டீயரிங்கில் விரல்களால் தாளம் போட்டவாறு அவளைதான் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏனோ அவளுக்கு சிரிப்புதான் வந்தது. இதழுக்குள் சிரித்துக்கொண்டவள், “ஹ்ர்ம் ஹ்ர்ம்… சரி எங்க போகலாம்னு சொல்லு.” என்றுவிட்டு எப்போதும் போல் சீட்டின் மேல் காலை தூக்கி அமர்ந்து வாகாக சாய்ந்துக்கொள்ள, தாவி குதிக்காத குறையாக அவள் புறம் திரும்பி, “மை ஸ்வீட் அரக்கி!” என்று அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி உள்ளுக்குள் குத்தாட்டமே போட்டுவிட்டான்.

அவளோ உதட்டைப் பிதுக்கியவாறு கன்னத்தை தடவிவிட்டுக்கொள்ள, “கேஷினோ போகலாமா? இல்லன்னா… ஏதாச்சும் க்ளப்?” என்று தான் அதிகமாகச் செல்லும் சில இடங்களின் பெயர்களைச் சொல்ல, “அய்ய…” என்று முகத்தைச் சுழித்த சனா, “நல்லா சொல்றடா பால்டப்பா, நீ மொதல்ல வண்டிய கெளப்பு! நான் சொல்றேன்.” என்றாள் அசால்ட்டாக.

அவனும் அவளை லேசாக முறைத்தவாறு, “யூ நோ வாட், யாருமே என்கிட்ட இப்படி பேசினது கிடையாது. பேசுற தைரியமும் வந்ததில்லை. பட் யூ… வயசுக்காச்சும் மரியாதை கொடு!” என்றவாறு காரை செலுத்த, “நீயா வான்டட்டா வந்து வாங்கி கட்டிக்கிறதுக்கெல்லாம் நான் பலியில்லை.” என்றுக்கொண்டே கார் கண்ணாடி வழியாக வெளியே எட்டிப் பார்த்தவள், ஒரிடத்தைப் பார்த்து “ஸ்டாப்!” என்று குரல் கொடுத்தாள்.

அவனும் வண்டியை நிறுத்திவிட்டு கண்ணாடி வழியாக பார்க்க, “செம்ம ப்ளேஸ், இந்த நேரத்துல ஆளுங்க நடமாட்டம் அதிகமா இருக்காது. சோ, வா போகலாம்.” என்றுக்கொண்டே காரை விட்டு இறங்கி விளக்குகளின் ஒளியிலும் கூடவே அன்றைய பூரண நிலாவின் தயவிலும் மின்னிக்கொண்டிருந்த பூங்காவிற்குள் நுழைந்தாள்.

அவள் செல்லும் வேகத்தைப் பார்த்து வேகமாக தொப்பியை அணிந்துக்கொண்ட ரிஷி, “ஏய் சாணி!” என்று அழைத்தவாறு அவள் பின்னே ஓடி அவள் கரத்தைப் பற்றிக்கொள்ள, தன்னை மீறி அவன் விரல்களுக்கிடையே தன் விரல்களை நுழைத்து அவனின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவள், “இந்த நேரத்துல இங்க பூச்சாண்டி திரியும்னு எங்க ஆயா சொல்லிருக்கு, தெரியுமா?” என்று விழிகளை உருட்டிச் சொன்னாள்.

அதில்”ஆஹான்!” என்று பொய்யான ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தி கேட்டவன், “பக்கத்துல ஒரு பெரிய ப்ரோப்ளம் இருக்கும் போது, மத்ததெல்லாம் நொட் அ பிக்டீல்.” என்று கேலியாகச் சொல்லிவிட்டு வேகவேகமாக அவன் முன்னே நடக்க, அவன் பதிலின் அர்த்தம் புரியாது முதலில் பெக்கபெக்கவென விழித்தவள், பின்னரே அதன் அர்த்தம் புரிந்து, “அடிங்க கசுமாலம்! உன் மூஞ்சி…” என்று கத்திக்கொண்டு அவனை அடிக்கத் துரத்தினாள்.

அவள் கரங்களுக்குச் சிக்காது சுற்றி வளைத்து ஓடியவன், ஒருகட்டத்தில் அங்கிருந்த சிலைக்கு கீழிருந்த கல்லில் மூச்சு வாங்கியவாறு அமர்ந்து சனாவின் கரத்தையும் வலுக்கட்டாயமாக இழுத்து தனக்கருகில் அமர வைக்க, அவளோ சிரித்தவாறு அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறு தரையில் படுத்து அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

விழிகளுக்கு நேரே முழுநிலவு. இரவுநேரம். மெல்லிய காற்றோடு சேர்ந்த அந்த பூங்காவிலிருந்த பூக்களின் நறுமணம். ரிஷிக்கு இது அத்தனையுமே புது அனுபவம். விழிகளை அழுந்த மூடித் திறந்து நிலாவை பார்த்துவிட்டு தன் பக்கத்தில் படுத்திருந்தவளை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தான்.

அவளிதழிலிருந்த புன்னகை இவனிதழ்களிலும். அந்த இதழ்களை  பார்க்கும் போது ஆண்மகனாக ஏதேதோ எண்ணங்கள் அவனுக்குள். ‘இதற்குமேல் பார்த்தால் தன்னை கட்டுப்படுத்த முடியாதோ?’ என்று பயந்தே மீண்டும் நிலாவின் புறமே பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

“வேது, இந்த ஃபீல் செம்மயா இருக்குல்ல?” நிலவைப் பார்த்தவாறு சனா வினவ, மீண்டும் அவள் புறமே திரும்பி, “ம்ம்…” என்ற ரிஷி, “நீ என் சாங்க்ஸ்ஸ கேப்பீயா, தெரிஞ்சிக்கணும்னு தோனிச்சு.” ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, “இல்லை.” என்றாள் அவள் பட்டென்று.

“நீயும் உன் பாட்டும். பும் பும் பும்னு… நான் எப்போவும் நைன்டீஸ் எய்டீஸ் சாங்க்ஸ்தான் கேப்பேன். உன் காதை கிழிக்கிற பாதி இங்லீசு பாதி தமிழ் பாட்டெல்லாம் என்னால கேக்க முடியாது.” அவள் போலியான சலிப்புடன் சொல்ல, முகத்தைச் சுருக்கி திருப்பிக்கொண்டான் ரிஷி.

அவனின் முகச் சுருக்கலில் சனாவுக்கு சிரிப்புதான் வந்தது. அவன் தோளைச் சுரண்டியவள், “தமாஸூ வேது, உன்னோட ஒவ்வொரு சாங்க்ஸ்லேயும் ஒவ்வொரு கருத்தை ஆணித்தரமா சொல்லியிருப்ப. சில பேர் பாடுற புரியாத, ஒன்னுக்கு ஒன்னு சம்மந்தமே இல்லாத வசனமில்லை உன்னோடது. இன்னும் சொல்லணும்னா, உன் குரலுக்காக மட்டுமே பாட்டு கேக்கலாம். அப்படியே உன் குரல் ஒரு மேக்னட் மாதிரி.” என்று அவள் தன் மனதிலுள்ளதை அப்படியே சொல்லிவிட,

ரிஷியோ அவள் சொன்ன ‘மேக்னட்’ என்ற வார்த்தையில் அதிர்ந்து போனான். சில கணங்கள் அவனுடைய நினைவுகள் பழைய ஞாபகங்களை கிளற, தன்னை மீட்டுக்கொள்ளவே அவனுக்கு சிலநிமிடங்கள் தேவைப்பட்டது.

எப்படியோ பழைய நினைவுகளை தூக்கியெறிந்து தன்னை சுதாகரித்துக்கொண்டவனுக்கு தன் அரக்கியின் வார்த்தைகளை விட கிடைத்த விருதுகள் ஒன்றுமேயில்லை என்றுதான் தோன்றியது.

தன்னை மீறி வெளிவரத் துடிக்கும் உணர்ச்சிகளை பெருமூச்சோடு அடக்கியவன், “அரக்கி, எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு. நான் யார்கிட்டேயும் இப்படி பழகினதில்லை. என்ட், ஐ நீட் டூ நோ வன்திங். டூ யூ லவ் சம்வன்?” என்று ஏனென்றே தெரியாத பதட்டத்தோடும் ஆர்வத்தோடும் கேட்க, சனாவிடத்திலோ பலத்த அமைதி.

சில கணங்கள் பொருத்துப் பார்த்தவன், “ஏய் சாணி, நான் ஏதாச்சும் தப்பா கேட்டுட்டேனா என்ன? பதில் சொல்லு!” மீண்டும் சற்று குரலை உயர்த்திக் கேட்க, அப்போதும் எந்த பதிலுமில்லை.

அதற்குமேல் பொருக்க மாட்டாது, “ஏய் அரக்கி, உன்கிட்டதானே கேட்டுட்டு இருக்…” என்று கத்திக்கொண்டே திரும்பிய ரிஷியின் வார்த்தைகள் தன் பக்கத்தில் தான் பேசுவதையும் உணராது தூங்குபவளைப் பார்த்து அப்படியே நின்றன.

அதுவும், அவள் தூங்கும் விதத்தில் முட்டிக்கொண்டு சிரிப்பு வேறு வந்தது அவனுக்கு. காரணம், நடுவிரலையும் மோதிர விலையையும் ஒன்றாகச் சப்பிக்கொண்டு சிறு குழந்தைப்போல் அவள் உறங்கிக்கொண்டிருக்க, வாயைப் பொத்திச் சிரித்த ரிஷி, மெல்ல அவள் மேல் படர்வது போல் அவளின் இருபுறமும் கையை ஊன்றி சாய்ந்துப் படுத்தவாறு அவளையே பார்த்திருந்தான்.

‘இது காதலா?’ என்று கேட்டால், நிச்சயம் இல்லையென்றுதான் சொல்வான். அவனைப் பொருத்தவரையில் இந்த உறவுக்கான பெயர் வெறும் நட்பு கூடவே, அவள் மேல் கொஞ்சம் ஈர்ப்பு. அவ்வளவுதான்.

ரிஷி அவளையே கண்கொட்டாமல் பார்த்திருக்க, ஏதோ ஒரு உந்துதலில் விழிகளை திறந்தவளுக்கு தன்மேல் படர்வது போல் நூலிடைவெளியில் கைகளை ஊன்றி அமர்ந்திருந்தவனின் தோரணையில் தூக்கி வாரிப்போட்டது.

“அட எங்கொப்பம் மவனே!” என்று கத்தியவாறு அவனை தள்ளிவிட்டு வேகமாக எழுந்தமர்ந்து சனா அவனை முறைத்துப் பார்க்க, எதுவுமே அறியாத முகபாவனையில் எழுந்து நின்றவன், “சரி வா, வீட்டுக்கு போகலாம்.” என்றான் சாதாரணமாக.

‘இவன் போக்கே சரியில்லையே!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், “வீடு பக்கம்தான். நான் போயிக்கிறேன். நீ ஜாவ் ஜாவ்!” என்று முறைப்புடன் சொல்லி எழுந்து கைகளை தூசி தட்டியவாறு முன்னே நடக்க, அந்த விடாக்கண்டன் கேட்பானா என்ன?

அவளை கதற கதற அவளின் ஏரியாவில் விட்டுவிட்டே தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

என்றும் இல்லாத உற்சாகம் இன்று அவனுக்கு. காரிலிருந்து இறங்கி விசிலடித்தவாறு கார் சாவியை விரலால் சுழற்றிக்கொண்டு பின்னந்தலையில் தட்டித் தனக்குத்தானே சிரித்து ரிஷி உள்ளே நுழைய, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்றொரு செருமல் சத்தம்.

சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பியவன், அங்கு படிகளில் நின்றிருந்த ராகவனை பார்த்து “சார், நீங்க இன்னைக்கு வாரதா சொல்லவே இல்லையே! ஐ அம் சப்ரைஸ்ட்!” என்று ஆரவாரமாகப் பேசியவாறு ஓடிச் சென்று அணைத்துக்கொள்ள, அவருக்கோ அதிர்ச்சி.

‘நிஜமாவே இது ரிஷிதானா?’ தனக்குதானே கேள்விக் கேட்டு சிலைபோல் நின்றார் அவர். இதுவரை தன் உணர்ச்சிகளை அவன் வெளிச்சம் போட்டு காட்டியதேயில்லை. ராகவன் வெளிநாடு செல்வதொன்றும் புதிதல்ல. பலதடவை மாதக் கணக்கில் பயணம் செய்திருக்கிறார்.

அப்போதெல்லாம் பல நாட்கள் கழித்துப் பார்த்தாலும் ரிஷியிடத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. ஆனால், இப்போது?

அவனை சிறிதுநேரம் கூர்ந்து நோக்கிய ராகவன், “நீ சரியில்லை ரிஷ். எனக்கு ஏதோ தப்பா தோனுது.” அழுத்தமாகச் சொல்ல, அவரின் வார்த்தைகளில் புருவத்தை நெறித்து இப்போது அதிர்ந்து விழிப்பது ரிஷியின் முறையானது.

Leave a Reply

error: Content is protected !!