தொலைந்தேன் 10 💜

தொலைந்தேன் 10 💜
ராகவனின் வார்த்தைகளில் ரிஷி அதிர்ந்து நின்றது சில கணங்கள்தான்.
“என்ன சொல்றீங்கன்னு புரியல சார்.” தெரிந்தாலும் தெரியாதது போல் அவன் கேட்டு புருவத்தைச் சுருக்கி அவரை உற்று நோக்க, “நான் எதை பத்தி பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும் ரிஷ், யாரென்னு தெரியாம நீ பழகுறது எனக்கு சரியா தோனல.” என்றார் காட்டமாக.
அதில் விழிகளைச் சுருக்கியவன், “நீங்க நினைக்கிற மாதிரி இல்லை சார். சாணக்கியா என்னோட ஃப்ரென்ட். ஏதோ அவ கூட பழகுறது எனக்கு பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்.” என்று சற்று அழுத்தமாகச் சொல்ல, “அதுவரைக்கும் சந்தோஷம்தான். லுக் ரிஷி, நான் எப்போவும் உன் நல்லதை பத்திதான் யோசிப்பேன். இப்போ நீ இருக்குற உயரத்துக்கு சிலபேர் உன் புகழ், பணத்துக்காக உன்னை நெருங்க நினைப்பாங்க. எல்லாரையும் நீ புரிஞ்சிக்கணும். உனக்கு நான் சொல்றது…” என்று ராகவன் பேசிக்கொண்டேப் போக, அவரை இடைவெட்டினான் அவன்.
“ஐ நோ சார். ஐ நோ ஹவ் டூ ஹேன்டில்.” என்று அழுத்தமாக இறுகிய குரலில் அவன் சொல்ல, சிறிதுநேரம் அவனை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டவர், அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து “உனக்கொரு சப்ரைஸ் இருக்கு ரிஷ்.” என்றுவிட்டு ஒரு எண்ணிற்கு அழைப்பை ஏற்று அவனிடம் அலைப்பேசியை நீட்டினார்.
அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. புருவத்தை நெறித்து யோசித்தவாறு அலைப்பேசியை காதில் வைத்தவனுக்கு எதிரில் கேட்டை குரலில் உச்சக்கட்ட ஆச்சரியம்.
“பிரபா சார்!” அதிர்ந்த குரலில் அழைத்து ரிஷி ராகவனை அதே அதிர்ச்சியோடு நோக்க, அவரோ இதழில் மெல்லிய சிரிப்போடு விழிகளில் ஆர்வத்தோடு அவனையே பார்த்திருந்தார்.
ரிஷியோ எதிர்முனையில் சொல்லும் செய்தியில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுக்கொண்டிருந்தான். “யெஸ் சார்… யெஸ் சார்…” என்று மறுமுனையில் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு உரைத்துக்கொண்டிருந்தவனின் முகம், இப்போது மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, அப்படியே இறுகிப் போனது.
விழிகள் சிவக்க, இப்போது ரிஷி ராகவனை ஒரு பார்வைப் பார்க்க, அவருக்கோ அவனின் முக மாற்றத்திற்கான காரணம் நன்றாகவே புரிந்துப் போனது. ‘அய்யோ! தெரிஞ்சிருச்சு போலயே… இப்போ எப்படி இந்த அடங்காதவன சமாளிப்பேன்!’ உள்ளுக்குள் அரண்டவாறு அவனைப் பார்த்திருந்தவர், அவன் பார்த்ததும் எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
அழைப்பும் தான் சொல்ல வேண்டியது சொல்லப்பட்டதும் துண்டிக்கப்பட, “சார்…” என்று ரிஷி கர்ஜிக்கும் குரலில் அழைத்ததும்தான் தாமதம், “யெஸ் ரிஷ், பிரபா எல்லாம் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். மீ சோ ஹேப்பீ. அவன் சாதாரண ஆளில்லை. யூ நோ வெல், இந்த இன்டர்ஸ்ட்ரீயோட பெரிய ப்ரொடியூசர் என்ட் டிரெக்டர். கூடிய சீக்கிரமே அவனோட ட்ரீம் மூவீயோட ஷூட்டிங்க ஸ்டார்ட் பண்ண போறான். அதுல நீயும் ஒரு பார்ட்டுன்னு நினைக்கும் போது அவ்வளவு ஹேப்பீயா இருக்கு மை பாய். என் கனவை நீ நிறைவேத்திட்ட. அந்த படத்துல முக்கியமான மூனு பாடல்கள நீ பண்ணி கொடுக்க போற. வாவ்! பெஸ்ட் ஆஃப் லக் ரிஷ். சரி சரி நீ இப்போ போய் தூங்கு. காலையில நிறைய வேலையிருக்கு.” படபடவென அவனை பேசவிடாது பேசிவிட்டு நகர போனார் ராகவன்.
ஆனால், ரிஷி அவரை விட்டால்தானே!
காரணம், அதில் அவனுக்கு துணை பாடகியாக மேக்னாவே தெரிவு செய்யப்பட்டிருக்க, அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?
“ஹ்ர்ம் ஹ்ர்ம்… நான் இதை பண்ணிக் கொடுக்க போறதில்லை சார்.” அழுத்தமாகச் சொல்லி ரிஷி அவர் தலையில் இடியை இறக்க, ஆடிப் போனவராக, “வாட்?” என்று அதிர்ந்த குரலோடு திரும்பினார் ராகவன்.
“என்..என்ன சொன்ன ரிஷ்? என் காதுல ஏதோ தப்பா கேட்டுச்சுன்னு நினைக்கிறேன்.” அவர் தடுமாற்றமாக கேட்க, “உங்களுக்கு சரியாதான் கேட்டிச்சு. எனக்கு இது தேவையில்லை. அது ஏன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.” என்று ரிஷி இறுகிய குரலில் சொல்ல, முதலில் அதிர்ந்து விழித்தவர் பின் நிதானமாக அவனை ஏறிட்டார்.
“ரிஷி கண்ணா, நான் ஏன் உன்னை தேர்ந்தெடுத்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும். நான் அப்போ இந்த இன்டஸ்ட்ரீல இழந்த புகழையும் பேரையும் சம்பாதிக்க நீ தேவைப்பட்ட. என்ட், எனக்கு நீ பண்ண ப்ரோமிஸ்ஸயும் மறக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.” என்றூ ராகவன் சொன்னதும் ரிஷியின் விழிகளோ சாரசர் போல் விரிந்து அன்று ராகவனுக்கு அவன் கொடுத்த சத்தியத்தை ஞாபகப்படுத்தியது.
‘ட்ரஸ்ட் மீ சார், நீங்க என்ன சொன்னாலும் நான் கேப்பேன். இந்த இன்டஸ்ட்ரீல நீங்க இழந்ததை நான் உங்களுக்கு மீட்டு தருவேன். என்னோட பர்சனல் ப்ரோப்ளம்ஸ் இந்த துறையில உங்களுக்கு என்மேல இருக்குற எதிர்ப்பார்ப்புகள பாதிக்காது.’
அன்று ரிஷி சொன்ன வார்த்தைகள் இவை.
நினைவுகள் ஞாபகப்படுத்தியதில் உறைந்துப்போய் அவன் நின்றிருக்க, “அன்னைக்கு சொன்ன, உன்னோட பர்சனல் நம்ம துறைய பாதிக்காதுன்னு. இப்போவும் அதேதான். நீ இந்த ப்ரோஜெக்ட்ட பண்ணிக் கொடுக்கணும். மேக்னாவோட இருக்குற உன்னோட பர்சனல் ப்ரோப்ளம்ஸ் இதை என்னைக்கும் பாதிக்க கூடாது. சோ, பீ ரெடி ரிஷி!” அழுத்தமாக உரைத்துவிட்டு ராகவன் நகர்ந்திருக்க, எதுவும் செய்ய முடியாது நின்றிருந்தவனின் முகமோ கோபத்தில் சிவந்துப்போய் இருந்தது.
அடுத்தநாள் காலை, மேக்னாவின் வீட்டில்,
இயக்குனர் பிரபாவுடன் பேசிவிட்டு விடயத்தை தெரிந்துக்கொண்ட மேக்னாவுக்கு உள்ளுக்குள் குஷியாக இருந்தாலும் ஏதோ ஒரு யோசனை. அது சாட்சாத் ரிஷியை பற்றிதான்.
‘கண்டிப்பா இது என் ரிஷி கிடையாது. அவன் எப்படி? ஏதோ தப்பா நடக்குற மாதிரி தோனுதே…’ தனக்குள்ளேயே பேசியவாறு தட்டிலிருந்த பாஸ்தாவை கரண்டியால் கிளறிக்கொண்டு யோசனையில் மேக்னா அமர்ந்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற மனோகரின் செருமல் சத்தம்.
அதில் தூக்கத்திலிருந்து விழித்தது போல் மலங்க மலங்க விழித்த மேக்னா, மனோகரின் பார்வையைப் பார்த்து தட்டில் முகத்தைப் புதைத்து சாப்பிடுவது போல் பாவனை செய்ய, “மேகா… மேகா…” என்று கத்திக்கொண்டு வந்தார் அமுதா.
அவளோ சத்தம் கேட்டும் கேட்காதது போல் அமர்ந்திருக்க, “ஏன்டீ கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன், எதுவும் கேக்காத மாதிரி இருக்க. நான் கேள்விப்ட்டது உண்மைதானா?” என்று தலையும் வாலும் இல்லாமல் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு அவள் பக்கத்திலமர, நிமிர்ந்து அமுதாவை புரியாது பார்த்தாள் மேக்னா.
“என்ன, எதுவும் தெரியாத மாதிரி முகத்தை வச்சிருக்க. அதான், பிரபா சார் டயரக்ட் பண்ண போற படத்துல மூனு சாங்க்ஸ் நீ பாட போறேன்னு நியூஸ் வந்திச்சு. உண்மைதானா? உன் ஒவ்வொரு விஷயத்தையும் அப்போதிலிருந்து நான்தான் கவனிக்கிறேன். இப்போ என்கிட்ட சொல்லாம செய்ற அளவுக்கு மேடமுக்கு தைரியமா?” அத்தனை ஆத்திரத்தோடு அவர் கேட்க, இருக்கையிலிருந்து மேசையில் கைகளை அடித்து எழுந்து நின்றவள், “வை ஷூட் ஐ? நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்னு கேக்குறேன். ரிஷிய நெருங்குறதுக்கு பல காத்திருப்புக்கப்றம் எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை உங்களால இழக்க நான் விரும்பல.” என்றாள் அழுத்தமாக.
அவளின் வார்த்தைகளில் முதலில் அதிர்ந்து நின்றவர், பின் சிரிப்போடு “நான் ஏன் மேகாம்மா உன்னை தடுக்க போறேன். ரிஷி யாரு, நம்ம பையன். அவன சின்னவயசுல தூக்கி வளர்த்தவ நான். இப்போ அவன் எவ்வளவு பெரிய ஆளா இருக்கான். அது எனக்கு சந்தோஷம்தானே! அம்மா அப்போ ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன். இப்போவும் அப்படியே இருந்துடுவேனா? அவன்மேல எனக்கு என்ன கோபம்? நீ தாராளமா அவன் கூட பழகு. இரண்டு பேருக்கும் இது ரொம்ப பெரிய வாய்ப்பு. ஐ அம் சோ ஹேப்பீ மேகாம்மா.” என்று தன் போக்கிற்கு பேசிக்கொண்டே போக, மேக்னாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘தன் அம்மாவா பேசுவது?’ என்ற ரீதியில் அவள் அவரையே பார்த்திருக்க, தன் மனைவியின் பச்சோந்தி குணமறிந்த மனோகரின் இதழிலோ ஏளனப்புன்னகை.
“மாம், என்..என்னால நம்பவே முடியல. நீங்களா பேசுறீங்க. ரிஷ் கூட பழகுறது முன்னாடியெல்லாம் உங்களுக்கு பிடிக்காது. இப்போ மட்டும் எப்படி?” என்று உள்ளுக்குள் எழுந்த சந்தேகத்தோடு மேக்னா தன் அம்மாவை குறுகுறுவென பார்க்க,
“அய்யோ மேகாம்மா, அன்னைக்கு உன் முடிவ சொல்லிட்ட. அப்றம் நான் என்ன தடுக்குறது? எப்போவும் அம்மா உன் நல்லதைதான் யோசிப்பேன். நல்லதா யோசிக்கிறதா நினைச்சுதான் அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா, ரிஷிய விட உனக்கு பொருத்தமானவன் யாருமில்லைன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்டா. கூடிய சீக்கிரமே நான் ரிஷ்கிட்ட பேசுறேன்.” என்று அமுதா தேன் வழியும் குரலில் பேச, மேக்னாவுக்கோ அதிர்ச்சி.
கூடவே அத்தனை சந்தோஷம். “தேங்க்ஸ் மாம். நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்களோன்னு நினைச்சேன். பட், இவ்வளவு சீக்கிரம் நீங்க என் லவ்வ புரிஞ்சிக்கிட்டீங்க. தேங்க் யூ சோ மச் மாம்.” என்று விழிகள் கலங்க உற்சாகக் குரலில் பேசிக்கொண்டே அவள் அமுதாவை தாவி அணைத்துக்கொள்ள, வெற்றிப் புன்னகையோடு பெருமூச்சுவிட்டுக்கொண்டார் அமுதா.
மேக்னாவின் மூளையை சலவை செய்வதொன்றும் அவருக்கு கடினமான காரியமல்ல. நான்கு வருடங்களுக்கு முன்னும் இலகுவாக தன் மகளை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தவர், இன்றும் அதேபோல் தனக்குள் அவளை வலைத்துக்கொண்டார். அதுவும், காரணமில்லாமல் ஒரு விடயத்தை செய்பவர் அல்ல அமுதா.
அமுதாவோ தனக்குள் சிரித்துக்கொண்டு மேக்னாவின் கைவளைவுக்குள் இருந்தவாறு மனோகரை நோக்க, அவரோ ஏளனமாக சிரித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். அதில் அமுதாவிற்கு கன்னத்தில் அறைந்தது போன்று ஆகிவிட்டது.
மனோகர் அறியாததா, தன் மனைவியின் திட்டத்தை. பணமென்றால் பொணமாக இருந்தால் கூட அமுதா வாய் திறந்து விடுவாளே! அப்படி இருக்கையில் இப்போது ரிஷி இருக்கும் உயரத்தையும் புகழையும் தெரிந்த அமுதா, தன் மகளின் ஆசைக்கு குறுக்க நிற்பாரா என்ன?
இங்கு இவ்வாறு இருக்க, சனாவின் வீட்டில்,
“அடியே டோரா, உன்னை வச்சு சம்பாதிக்கிறதை விட உன்னை சும்மா சும்மா துடைச்சு பெட்டிக்குள்ள வக்கிறதுதான் அதிகம். இப்படியே போனா சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். வர வர நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது.” என்று தன் கேமராவை துடைத்துக்கொண்டே அதனோடு பேசியவாறு சனா இருக்க, “ஏய் சனா…” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் இந்தர்.
அவளோ அமர்ந்திருந்த இடத்திலிருந்தே இந்தரை புரியாது நிமிர்ந்துப் பார்க்க, அவனோ அவளை பார்க்காது பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டவன், “நீ பண்றது கொஞ்சமும் சரியில்லை.” என்றான் வெடுக்கென்று.
சனாவுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஙே’ என அவனையே அவள் ஒரு மாதிரி பார்த்திருக்க, “நானும் இரண்டு தடவை உன்னை நோட் பண்ணேன். நைட்டுக்கு உன்னை தேடி ஒரு கார் வாரதும், நீயும் பதறடிச்சிக்கிட்டு அந்த கார்ல ஏறுறதையும். உள்ள எவன் இருக்கான்னு தெரியாது. ஆனா, ஏரியால பார்த்த சில பேர் உன்னை தப்பா பேசுறாங்க. இது கொஞ்சமும் நல்லா இல்லை.” இந்தர் சொல்ல, இப்போது அனைத்தும் புரிந்துவிட்டது என்பது போல் அவளுடைய புருவங்கள் அலட்சியமாக ஏறி இறங்கின.
‘ஓஹோ! இதுதான் சங்கதியோ?’ உள்ளுக்குள் நினைத்து அப்போதும் எதுவும் பேசாமல் அவள் பார்த்திருக்க, “இதோ பாரு சனா, ஏரியால இருக்குறதுங்க உன்னை பத்திதான் பேசுதுங்க. என்னால காது கொடுத்து கேக்க முடியல. இன்னும் சொல்லப்போனா, அவங்க திட்டுறது நியாயம்தான். அர்த்த ராத்திரி ஏதோ ஒரு காருல நீ ஏறி ஊர் சுத்திட்டு வந்தா தப்பாதான் நினைப்பாங்க. அவங்கள குத்தம் சொல்ல முடியாதே! உன் நல்லதுக்குதானே அவங்களும் சொல்றாங்க. காலையில இதைப் பத்தி பேச வந்த கமலாம்மாவ நீ திட்டிபுட்டேன்னு அவங்க புலம்புறாங்க. நீ தனியா இருக்க. உன்மேல இந்த ஏரியாவுல இருக்குறவங்களுக்கு அக்கறை இருக்கு. அதை புரிஞ்சிக்க!” என்று பேசிக்கொண்டே சென்ற இந்தரின் வார்த்தைகள் சுவற்றில் விட்டெறிந்த சனாவின் பூச்சாடி நொறுங்கும் சத்தத்தில் அப்படியே நின்றன.
இந்தரோ சட்டென்று பேச்சை நிறுத்தி அவளை திகைத்து நோக்க, ஒற்றை புருவத்தை தூக்கி பத்ரகாளி போல் கோபத்தில் முகம் சிவந்து நின்றிருந்தவள், “என்னடா, என்ன? உன் பாட்டுக்கு பேசிட்டு போற. என் முன்னாடி இப்படி பேசுற அளவுக்கு சாருக்கு தைரியமோ? ஏய் இங்க பாரு, நான் எப்படி வேணா இருப்பேன். எங்க வேணா போவேன். என்ன வேணா பண்ணுவேன். எவன் கூட வேணா சுத்துவேன். என் வீடு, என் காசு, என் துட்டு. உங்களுக்கெல்லாம் என்னடா பிரச்சனை ****? ” என்று உச்சகட்ட தொனியில் கெட்டவார்த்தை சொல்லி திட்டிக் கத்த, கோபத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டான் அவன்.
அவன் முன் சொடக்கிட்டு, “இத்தனைநாளா தனியாதான் இருக்கேன். இப்போ என்ன உன் கமலாம்மாவுக்கு புது கரிசனை? அன்னைக்கு இந்த ஏரியா பசங்க ப்ரனவ் கூட சேர்ந்து வீட்டு கதவை தட்டி வாசல்ல ஒன்னுக்கு அடிச்சிட்டு போனானுங்களே அப்போ எங்க போச்சு இந்த வீணாபோன அக்கறை? அன்னைக்கு வேலை முடிஞ்சு வரும் போது ஏரியா நடுவுல ஒருத்தன் என்மேல தப்பா கை வைக்க நான் அவன பொழந்து எடுத்தேனே, அப்போ எங்க போச்சுடா பரதேசி இந்த அக்கறை சனியன்?” என்று சனா தொண்டை கிழிய கத்த, பக்கத்து வீட்டாற்களே வீட்டுக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தரோ, “சனா, எல்லாரும் பார்க்குறாங்க. போதும்.” என்று மெல்லிய குரலில் சொல்ல, எட்டி வெளியே பார்த்தவள், “கேக்கதான்டா சொல்றேனே, இனி அவ இப்படி சொன்னா, இவ அப்படி சொன்னான்னு என் முன்னாடி வந்த… செத்தடா நீ!” என்று விரலை நீட்டி அவள் மிரட்ட, அதற்குமேல் அங்கு நிற்காது ஓடப் போனவனை மீண்டும் தடுத்தது சனாவின் குரல்.
“டேய் இந்தரு! கந்தனய்யா செத்துட்டாராமே. எப்போடா பொணத்தை எடுக்குறீங்க?” சோம்பல் முறித்தவாறு கேட்டு சனா மீண்டும் தன் கேமராவை துடைக்கும் பணியைத் தொடர, இதழை நாவால் ஈரமாக்கி சற்று பதட்டத்தோடே, “நாளைக்கு மதியம்.” என்றான் இந்தர் தடுமாற்றமாக.
“ஓஹோ! அப்போ சரி, மனுஷன சந்தோஷமா வழியனுப்பணும்ல. ஊர்வலத்துக்கு நானும் வரேன். செம்மயா ஒரு குத்தாட்டம் போடலாம்.” என்று சனா இதற்கு முன்னிருந்த மனநிலையை முற்றிலும் மறந்து கேமராவை துடைத்தவாறுச் சொல்ல, ‘ஆத்தாடி ஆத்தா! அந்நியன் மாதிரி நடந்துக்குறாளே!’ உள்ளுக்குள் அரண்டுப்போய் சிறிதுநேரம் அவளை உற்று நோக்கிய இந்தர், சனா விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடியே விட்டிருந்தான்.