தொலைந்தேன் 13 💜

தொலைந்தேன் 13 💜
“என்ன காரியம் பண்ணிட்ட ரிஷி? ஓ கோட்! நல்லவேளை டிரெக்டர் நம்ம பையனா போயிட்டான். அவனும் புரிஞ்சிக்கிட்டு அந்த சாணியையும் சமாளிச்சான். இல்லைன்னா… அந்த அரக்கி ஒருவழி பண்ணியிருப்பா. பட், நான் ஏன் அப்படி பண்ணேன். ச்சே! ராகவன் சார் முன்னாடி மட்டும் போயிடாத, அலெர்ட்டா இரு!”
கேரவனிலுள்ள அந்த ஆளுயரக் கண்ணாடி முன் தன்னைத்தானே திட்டி புலம்பிக்கொண்டு நின்றிருந்தான் ரிஷி. ஏதோ அவனை மீறி முத்தமிட்டுவிட்டான். இப்போது தன் உணர்வுகளுக்கான காரணம் தெரியாது புலம்பிக்கொண்டு நிற்கிறான்.
எப்படியோ நேரம் செல்வதை உணர்ந்து தன்னைத்தானே தேற்றி ஆடையை சரிசெய்தவாறு வெளியே வந்தவனின் விழிகள் முதலில் தேடியது சனாவைதான்.
அவளோ அங்கு ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையில் குளிர்பானத்தை ஸ்ட்ரோவால் உறிஞ்சியவாறு தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவளைப் பார்த்ததும் ரிஷியின் விழிகளோடுச் சேர்த்து இதழிலும் மெல்லிய புன்னகை.
பல வருடங்களுக்கு முன் மேக்னாவை பார்க்கும் போது அவனின் விழிகளிலும் இதழிலும் தோன்றும் அதே புன்னகை.
அந்த புன்னகையோடே அவளருகில் ரிஷி சென்று நிற்க, அரவம் உணர்ந்து குளிர்பானத்தை உறிஞ்சியவாறு விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தாள் சனா.
அவனோ “ஹிஹிஹி…” என்று இழித்து வைக்க, விழிகளைச் சுருக்கி அவனை அப்படியே சிறிதுநேரம் குறுகுறுவெனப் பார்த்தவள், “வேது, இந்த சவுரி முடிய எப்போ மண்டையிலயிருந்து எடுக்குறது, உள்ள ரொம்ப அரிக்குதுடா.” என்றாள் சலித்துக்கொண்டு.
இதில் ரிஷிக்குதான், ‘இவளை என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது.
அன்று சொன்ன நேரத்துக்கு முன்னே எடுக்க வேண்டிய சில காட்சிகளை படம்பிடித்து முடித்திருக்க, அன்றிரவு சனாவின் குடியிருப்பு ஏரியாவின் முன்னே காரை நிறுத்திவிட்டு ரிஷி அவளை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க, வீட்டுக்கு வந்ததைக் கூட உணராது கையிலிருந்த சாக்லெட்டை சப்பிக்கொண்டிருந்தாள் அவள்.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று அவன் குரலைச் செறுமியதுமே, அவள் ஓரக்கண்ணால் அவனை பார்க்க, ஒற்றை விரலால் வெளியே பார்க்கும்படி காட்டினான் ரிஷி.
கண்ணாடி வழியாக வெளியே பார்த்தவள், “ஓஹோ! வந்தாச்சா?” என்றுவிட்டு, “கடவுள்தான் உன்னை காப்பாத்தியிருக்கான் வேது, மாஸ்க் மட்டும் போடலன்னா என் மூஞ்சு ரியேக்ஷன பார்த்து நீ நடிப்பையே மறந்திருப்ப.” கேலியாகச் சொல்லிக்கொண்டே இறங்கப் போக, சட்டென்று அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் அவன்.
“அது… அது வந்து சாணி, எனக்கு ரொம்ப தாகமா இருக்கு. அதுவும் நான் வீட்டுத்தண்ணிதான் குடிப்பேன். என் வீடு ரொம்ப தூரம். சோ, நான் வேணா உன் வீட்டுல…” என்று ரிஷி தயக்கமாக இழுக்க, ஆவென வாயைப் பிளந்து அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்தவள், “வீட்டுத்தண்ணியா? இதென்னடா புது புரளியா இருக்கு.” என்றாள் அதிர்ச்சியாக.
“ஹிஹிஹி… வீட்டுசாப்பாடு மாதிரி வீட்டுத்தண்ணீ.” என்றுவிட்டு ரிஷி அப்பட்டமாக அசடுவழிய, ஏனோ சனாவுக்கே அவனின் முகபாவனையில் சிரிப்பு வந்துவிட்டது.
“அசிங்கமா சமாளிக்காத ஃப்ரோடு! இப்போ என்ன என் வீட்டுக்கு வரணும் அம்புட்டுதானே! ஆயே ஆயே!” என்று உற்சாகமாகச் சொல்லியவாறு காரைவிட்டு இறங்கி சனா செல்ல, “ரியலி!” விழிகளை விரித்து ஆச்சரியமாகக் கேட்டு தொப்பியையும் முகமூடியையும் அணிந்துக்கொண்டவன், அவள் பின்னாலே வேகமாக ஓடினான்.
அங்கிருந்தவர்களோ குறுகுறுவென்று தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு முகத்தை மறைத்திருந்த ரிஷியையும் முன்னால் எதைப் பற்றியும் கண்டுக்கொள்ளாமல் சாக்லெட்டை சப்பியவாறு சென்றுக்கொண்டிருந்த சனாவையும்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். ஆனால், அவளோ இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
முழுதாக நனைந்தாயிற்று இனி முக்காடு எதற்கு என்று நினைத்தாள் போலும்! எவர் பார்வையையும் கண்டுக்கொள்ளாது தன் வீட்டை நெருங்கியவளின் நடை சட்டென்று நின்றது.
விழிகள் விரிய, பின்னால் மலங்க மலங்க விழித்தவாறு வந்துக்கொண்டிருந்த ரிஷியை வேகமாக இழுத்து அங்கிருந்த பெரிய தூணொன்றின் பின்னால் மறைந்துக்கொண்டாள்.
ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்…என்னாச்சு சாணி, ஏய் என்னாச்சுன்னு சொல்லுடீ!” என்று அவன் பதட்டமாகக் கேட்க, ‘ஷ்ஷ்…’ என்று ஒற்றை விரலை உதட்டில் வைத்து அவனை அடக்கியவள், விழிகளால் தன் வீட்டு வாசலில் தலை குனிந்தவாறு நின்றிருந்த ராஜலிங்கத்தைக் காட்டினாள்.
ரிஷியும் அவரை புரியாமல் நோக்கி அதே கேள்வி தாங்கிய பார்வையோடு சனாவை நோக்க, அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “என்னை பெத்தவரு.” என்றாள் அவள் இறுகிய குரலில்.
முதலில், ‘என்ன சொல்றா இவ?’ என்ற ரீதியில் முழித்து பின் உணர்ந்த மறுகணம், “வாட்?” என்று அதிர்ந்த ரிஷி, “ஷ்ஷ்… கத்தாத!” என்று அதட்டியவளின் அதட்டலையும் கண்டுக்கொள்ளாது, “உன் அப்பாவா அது?” என்று கேட்டான் குறையாத திகைப்பில்.
அதேநேரம், திடீரென இன்னொரு ஆடவனின் குரல்.
“எவ்வளவு நேரம்ப்பா இப்படியே நின்னுட்டு இருப்பீங்க. அவதான் உங்கள கண்டுக்கவே மாட்டேங்குறாளே, அதுவும் அந்த ஆட்டக்காரி எங்க போய் தொலைஞ்சிருக்காளோ? மொதல்ல ஒரு குடம் தண்ணீய தலையில ஊத்தி அவள தலைமுழுகுங்க. ச்சே! உங்களோட இதே ரோதணையா போச்சு!” அங்கு ராஜலிங்கத்தின் முன் ப்ரவின் நின்று கத்திக்கொண்டிருக்க, அவனை விழிகள் இடுங்க உற்றுப் பார்த்தவாறு, “இவன்… இவன் அவன்தானே? அன்னைக்கு ராத்திரி உன்னை ஆளுங்களோட துரத்தினான், ரைட்? இவன் என்ன உன் அப்பாவ அப்பான்னு கூப்பிடுறான்?” என்று கேட்டான் ரிஷி மேலும் உண்டான அதிர்ச்சியில்.
அதில் கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டவள், “அவன் என் தம்பிதான்.” என்றாள் வார்த்தையில் எந்தவித உணர்வுமின்றி. ரிஷிக்குதான் அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி.
விழிகளை விரித்து சனாவையே அவன் பார்த்திருக்க, தன் மகளுக்காக காத்திருந்து ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் ராஜலிங்கமும் ப்ரவினோடு அங்கிருந்து நகர்ந்திருக்க, வேகமாக ரிஷியை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக்கொண்டாள் சனா.
அவள் தாழிட்ட மறுகணம் வேகமாக அவள் தோளைப் பற்றி, “ஐ அம் கன்ஃப்யூஸ்ட். மொதல்ல, எனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்லு!” என்று ரிஷி அழுத்தமாகக் கேட்க, அவன் கைகளைத் தட்டிவிட்டவள், “இது உனக்கு தேவையே இல்லாதது. தாகத்துக்குதானே வந்த, இரு!” என்றுவிட்டு குடத்திலிருந்த தண்ணீரை ஒரு குவளையால் அள்ளி துணியால் துடைத்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.
ரிஷியோ அப்போதும் வாங்காது அவளையே அழுத்தமாகப் பார்த்தவாறு நிற்க, “சரியான பிடிவாதக்காரன்டா நீ! ஆனா, உன் பிடிவாதமெல்லாம் இந்த சனாக்கிட்ட செல்லாது. தண்ணீய குடிச்சிட்டு மொதல்ல இடத்தை காலி பண்ணு.” என்று பதிலுக்கு கோபமாகப் பேசியவள், அப்படியே நின்றிருந்தாள்.
ஆனால், அந்த பிடிவாதக்காரனோ அசைந்தபாடில்லை. அப்போதும் அவளாகச் சொல்லும் வரை ஒற்றை புருவத்தைத் தூக்கிய தோரணையில் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவன். ஏதோ ஒரு உரிமை உணர்வு அவனுக்குள். ‘என்னிடம் மறைக்கிறாளே!’ என்ற கோபமும்.
அவனின் பிடிவாதத்தில் சனாவுக்குதான் ஒருகட்டத்தில் அய்யோ என்றானது. ‘ஊஃப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவள், “இப்போ என்ன உனக்கு என் குடும்பத்தை பத்தி தெரியணும், அவ்வளவுதானே! குடி, சொல்றேன்.” என்றாள் மீண்டும் தண்ணீரை அவனிடம் நீட்டியபடி.
இதழை வளைத்து வெற்றிப்புன்னகை புரிந்தவன், குவளையை வாங்கியபடி, “ம்ம்…” என்க, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சுவற்றிலிருந்த புகைப்படத்தைக் காட்டியவள், “அதோ அதுதான் என் அம்மா. பக்கத்திலிருக்குறது என் தங்கச்சி. என் குட்டிம்மா. நாலு வருஷத்துக்கு முன்னாடி குட்டிம்மாக்கு ரொம்ப உடம்பு முடியாம போச்சு. ராத்திரியோட ராத்திரியா ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற வழியில ஆக்சிடன்ட் ஆச்சு. பைக்ல ஒரு பையன் நடுவுல வந்ததால அந்த ஆட்டோ பெரியவருக்கு தடுமாறிறிச்சு. முன்னாடி வந்த கார்ல மோதிட்டாரு. அப்போ, இரண்டு பேருமே இறந்துட்டாங்க. என்ட், அம்மா இருக்கும் போதே அப்பாவுக்கு அவங்க கூட தொடர்பு இருந்துச்சு. அம்மா அதை கண்டுக்கல. சின்ன வயசுலயிருந்து அப்பாவும் என்கூட அதிகமா பேசினதும் கிடையாது. சொல்லப்போனா, அவருக்கு என்னை அவ்வளா பிடிக்காது. அம்மா தங்கச்சி இறந்த ஒரே வருஷத்துல மிஸ்டர்.ராஜா அந்த பொம்பளைய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவரோட இரண்டாவது பொண்டாட்டியோட மொத புருஷனுக்கு பொறந்தவன்தான் இந்த ப்ரவின். அவ்வளவுதான் போதுமா?” என்று சொல்ல வேண்டியதை சொல்லி முடித்துக் கேட்டாள்.
ரிஷிக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. நடந்ததை சொல்லும் போது ஏதோ ஒரு வலி அவள் குரலில். அதை அவன் உணராமலில்லை.
சனாவோ வலியை மறக்க அலைப்பேசியில் எதையோ விளையாடியவாறு சிரிப்பை வரவழைத்துச் சிரித்துக்கொண்டு, “என்ன ஃபீலிங்க்ஸ்ஸா, அதெல்லாம் முடிஞ்சு போன சமாச்சாரம். நீ கேட்டு பிடிவாதம் பிடிச்சதால சொன்னேன். அவ்வளவுதான். ஆமா… நீ எப்போ இடத்தை காலி பண்ற?” என்று கேட்டாள் சாதாரணமாக.
அவனும் அவள் வலியை மறைக்கும் விதத்தில் மெச்சுதலாக அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வாசல்வரை செல்ல, சரியாக அவனுக்குள் ஒரு கேள்வி.
வேகமாகத் திரும்பியவன், “சாணி, இஃப் யூ டோன்ட் மைன்ட். நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. நாலு வருஷத்துக்கு முன்னாடின்னு சொன்னியே, எப்போ எங்கே ஆக்சிடன்ட் ஆச்சின்னு சொல்ல முடியுமா?” என தனக்குள் தோன்றிய ஏதோ ஒரு சந்தேகத்தில் கேட்க,
உதட்டைச் சுழித்து, ‘நீ இதை விட போறதில்லை’ என்ற ரீதியில் அவனை முறைப்பாகப் பார்த்தவள், பின் சற்று புருவத்தைச் சுருக்கி யோசித்து நடந்த திகதியையும் இடத்தையும் சொல்லி, “அன்னைக்கு பெரிய பெரிய நடிகர்களுக்கு விருது வழங்குற விழா நடந்துக்கிட்டு இருந்துச்சு. பாதுகாப்புக்காக சில தெருல போக முடியாம மூடி வச்சிருந்தாங்க. அந்த வழியால மட்டும்தான் போக முடிஞ்சுது. அந்த பைக்ல வந்த பையன் மட்டும் முன்னாடி வரலன்னா இப்போ அவங்க என் கூட இருந்திருப்பாங்க. ம்ஹூம்… அன்னைக்கு கடவுள் என்னையும் அவங்க கூடவே அனுப்பி விட்டிருக்கணும். இல்லைன்னா இப்படி நான்…” என்றவளின் வார்த்தைகள் சட்டென்று நின்றது.
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னைத்தானே தேற்றி சனா ரிஷியை நோக்க, அவனோ விழிகள் விரிந்து சிவந்துப்போய் முகம் இருள உறைந்துப்போய் நின்றிருந்தான். ஒருகணம் சனாவுக்கே அவனின் தோற்றத்தில் பக்கென்றானது.
“ஏய் வேது! என்னாச்சு?” அவள் பதட்டமாக அழைக்க, ‘ஆங்…’ என்றபடி பதறிக்கொண்டு விழித்தவன், “நான் வரேன்.” என்று பதட்டமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியிருக்க, விழிகள் இடுங்க போகும் அவனையே பார்த்திருந்தவளுக்கு வெறும் குழப்பம்தான்.
இங்கு மின்னல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த ரிஷி, “ரிஷ்… ரிஷ்…” என்று ராகவன் அழைப்பதைக் கூட கண்டுக்கொள்ளாது மாடிப்படிகளில் வேகவேகமாக ஏறி தனதறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டான்.
உள்ளே கதவைத் தாழிட்டு அப்படியே தரையில் அமர்ந்தவனுக்கு உலகமே தலை கீழாக சுழல்வது போன்ற உணர்வு. உதடுகள் துடிக்க, விழியிலிருந்து ஒரு சொட்டு விழிநீர் வேறு தரையில் பட்டுச் சிதறியது.
அவனுடைய இதழ், “மேகா…” என்று முணுமுணுக்க, நினைவுகளோ அவளுடனான பழைய நினைவுகளுக்குச் சென்றது.
ஆறு வருடங்களுக்கு முன்…
“மேகா… மேகா…” என்ற கத்தலோடு கையில் தன் கிட்டாரை தூக்கிக்கொண்டு தோட்டத்திலிருந்து பாய்ந்து ஓடி வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி. அவன் முகத்தில் அத்தனை உற்சாகம்.
ஆனால், சுற்றியிருந்தவர்களுக்குதான் அவன் வந்த விதத்தில் பக்கென்றானது. “ஸப்பாஹ்ஹ்….” என்று அமுதா சலித்துக்கொள்ள, “என்னாச்சு ரிஷி கண்ணா?” என்று கேட்டார் மனோகர் ஆர்வமாக.
“அது மாமா… மேகா எங்க?” விழிகளால் அவளை அலசியபடி தேடிக்கொண்டே அவன் கேட்க, சரியாக “ரிஷ் கம் அப்.” என்ற மேக்னாவின் குரல்.
பல வருடங்களாக இதே வீட்டில் அவளோடுதான் இருக்கிறான். ஆனால், அவளறைக்குள் அனைவர் முன் செல்வதற்கு அவனுக்கு ஒரு தயக்கம். அதற்கு காரணமும் அவளே!
அமுதாவுக்கோ இதில் உடன்பாடே இல்லை. அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, ஓரக்கண்ணால் பெரியவர்களை பார்த்துவிட்டு வேகவேகமாக படிகளிலேறி அவளறைக்குள் நுழைந்தான்.
நுழைந்த மறுகணமே கதவைத் தாழிட்ட மேக்னா, அவனை சுவற்றில் சாய்த்து அவன்மேல் முழுவதுமாக சாய்ந்து நிற்க, இரு கரத்தால் அவளிடையைப் பற்றி மேலும் தன்னோடு அணைத்தவாறு, “ஹோல்ல அத்தையும் மாமாவும் இருக்காங்க. இப்படி நாம கல்யாணத்துக்கு முன்னாடியே ரூம்ல தனியா இருந்தா ஏதாச்சும் நினைப்பாங்க. சோ…” என்று இழுத்துக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தான்.
விலக முடியாமல் விலகுவதாகச் சொல்லிக்கொண்டு அவளுள் மேலும் மேலும் மூழ்குபவனைப் பார்ப்பவளுக்கு உடல் சிலிர்த்தடங்கியது.
அவனின் பின்னந்தலையைப் பற்றி கழுத்திலிருந்து அவன் முகத்தை நிமிர்த்தியவள், “நாம காதலிக்கிறோம் ரிஷ். வெளியில உன் பக்கத்துல உட்கார்ந்தாலே அம்மா மூக்கால முறைச்சி பார்க்குறாங்க. காலேஜ் முடிஞ்சதிலிருந்து உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவும் முடியல. எனக்கு உன் கூட இருக்கணும்.” என்று வசீகரப் புன்னகையோடு சொல்ல, அவளிதழில் மெல்ல தன்னிழை பதித்தெடுத்தவன், “சின்ன வயசுலயிருந்து ஒன்னாதானே இருக்கோம்.” என்றான் குறும்புக்குரலில்.
அதில் அவனின் கழுத்தைக் கட்டி கன்னத்தை இதழால் உரசியவாறு, “பட், இப்படி இல்லையே… காதலிக்கிறோம்னுதான் பேரு. மத்தபடி ஒன்னுமேயில்லை. இந்த டியூய்லைட்டுக்கு ஃபீலிங்க்ஸ் வரவே நான் பல மாசம் வெயிட் பண்ண வேண்டியதாச்சு.” என்றவள் அவனின் செல்லமான முறைப்பைப் பார்த்து வாயைப் பொத்திச் சிரித்தாள்.
அவளுடைய பாவனைகளிலும் நெருக்கத்திலும் ரிஷிக்குதான் உணர்ச்சிகள் தாறுமாறாக எகிறியது. “என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியல மேகா.” என்றுவிட்டு அவளிடமிருந்து விலகி கதவைத் திறந்துவிட்டவன், அவளிள் உதடு பிதுக்கலை ரசித்தவாறு பாக்கெட்டிலிருந்த ஒரு காகிதத்தை அவளிடம் நீட்டினான்.
யோசனையோடு அதையெடுத்துப் பார்த்தவளுக்கு விழிகள் சாராசர் போல் விரிந்தன. கதவு திறந்திருப்பதைக் கூட மறந்து ஓடிச் சென்று ரிஷியை தாவி அணைத்துக்கொண்டவள், “வைவா கம்பனியோட ஆடிஷனா! வாவ் வாவ்!” என்று தாவி குதிக்க, “இதுல நீ கண்டிப்பா செலக்ட் ஆகுவ மேகா பேபி.” என்றுவிட்டு காதலோடு அவள் நெற்றியில் முத்தமிட்டான் ரிஷி.
மேக்னாவின் தந்தை மனோகரின் நெருங்கிய நண்பர்தான் ரிஷியின் தந்தை சுந்தர். ரிஷியின் பாடசாலை பப்ளிக் பரீட்சையின் போது வங்கி மேனேஜராக பணி புரிந்த சுந்தர் ஒரு விபத்தில் இறந்துவிட, அவர் காதல் மனைவி ரம்யாவும் கணவர் பிரிந்த துயரத்தில் அடுத்த மூன்றே மாதங்களில் இறந்துவிட்டிருந்தார்.
ஆனால், அவனை மனோகர் தனிமையில் விடவில்லை. அப்போதே தன் வீட்டிற்கு அவனை அழைத்து வந்திருக்க, ஆரம்பத்தில் காட்டுக்கத்து கத்திய அமுதா ரிஷியின் சொந்தவீட்டை வெளிநாட்டவரொருவருக்கு வாடகைக்கு விட்டு பணம் கிடைத்ததும் வருமானம் கிடைப்பதால் அமைதியாகிவிட்டார்.
ஆனால், அன்று அவரறியாத ஒன்று சிறுவயதிலிருந்தே தன் மகளுக்கும் ரிஷிக்கும் இடையிலிருந்த காதல். ரிஷிக்கு தன் பத்து வயதிலிருந்தே மேக்னாவின் மேல் உருவான ஈர்ப்பு காதலாக மாற, அவனே எதிர்ப்பார்க்காது மேக்னாவுக்கும் ரிஷியின் மேல் ஈர்ப்பு காதலாக மாறி காதல் வேறே விட்டிருந்தது.
இன்று அது விருட்சமாக வளர்ந்து நிற்க, இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பெரியவர்களுக்கு இவர்களின் நடவடிக்கையில் விஷயம் புரிபட்டது. மனோகரருக்கு தன் நண்பனின் மகன்மேல் முழு விருப்பம் இருந்தாலும் ஏனோ அமுதாவுக்குதான் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது “ரிஷ்… ரிஷ்…” என்று தன்னவனை கட்டியணைத்து துள்ளிக்கொண்டிருப்பவள் அப்போது அறிந்திருக்கவில்லை,
தன் அம்மாவால்தான் தன்னவனை தான் தொலைக்கப் போகிறோமென்று.
ஒருவேளை, அறிந்திருந்தால் மேக்னா அந்த தவறை செய்திருக்க மாட்டாளோ, என்னவோ!