தொலைந்தேன் 26💜

eiURH1U33512

தொலைந்தேன் 26💜

தன் வீட்டிற்குள் சனாவை அழைத்துச் சென்ற மேக்னா, ஹோலிலிருந்து சமையலறை, படுக்கையறைகள் வீட்டினுள் அமைக்கப்பட்டுள்ள ஸ்டூடியோ, த்யேட்டர், டேபிள் விளையாட்டு என எல்லாவற்றையும் சுற்றிக் காட்டியவாறு பால்கனிக்கு வந்து நின்றாள்.

அவளெதிரே கடற்கரை. அந்த அலைகளோடு சேர்ந்து வரும் காற்று அவள் உடலை குளிரச் செய்தாலும் மனம் தீயாய் கொதிக்க, எதுவும் தெரியாத குழந்தைப் போல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த சனாவின் புறம் திரும்பியவள், “வீடு எப்படி இருக்கு?” என்று கேட்டாள் சற்று பெருமையோடு.

விழிகளை சுழலவிட்டு அங்குமிங்கும் பார்த்து, “வீடெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா… எனக்கு இப்போ வீடு வாங்குற ஐடியா இல்லை. அதுமட்டுமில்லாம, சுனாமி பயமிருக்கே! சட்டுன்னு வந்து வீட்டோட சேர்த்து என்னையும் அடிச்சிட்டு போயிட்டுன்னா? நீங்க வேற யாருக்காச்சும் விலை பேசுங்க. நான் வரேன்.” என்றுவிட்டு சனா அவள் பாட்டிற்குச் செல்ல, மேக்னாவுக்கோ பிபி எகிறியது.

“ஏய்! என்ன விளையாடுறியா?” அவள் கடுப்பாகக் கேட்க, “அய்யோ இல்லை மேடம், நான் நெசமாதான் சொல்றேன். எனக்கு வீடு வேணாம். இம்புட்டு பெரிய வீட்டை வாங்குற அளவுக்கு நம்மகிட்ட காசு லேது.” என்ற சனா முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள, “நான் வீட்டை விக்குறதா உன்கிட்ட சொன்னேனா?” என்று மேக்னா பற்களைக் கடித்துக்கொண்டுக் கேட்டாள்.

“அப்போ இல்லையா? அப்றம் எதுக்கு மேடம் என்னை கூப்பிட்டு வீட்டை சுத்தி காமிச்சு நேரத்தை வீணாக்குறீங்க, நான் உங்ககிட்ட கேட்டேனா?” என்று பதிலுக்கு அவள் கேலியாகக் கேட்கவும், “உனக்கு உன் தகுதிய புரிய வைக்கதான் இங்க அழைச்சிட்டு வந்தேன். உனக்கு நீ யாருன்னு நல்வாவே தெரியும். அப்படியிருக்கும் போது ரிஷி கூட…” என்று மேக்னா பேசிக்கொண்டிருக்கும் போதே இடைவெட்டினாள் சனா.

“நான் யாருன்னு எனக்கு சின்னவயசுலயிருந்தே தெரியுமே மேடம். இதை சொல்லதான் என்னை கூப்பிட்டீங்களா?” என்று இடைவெட்டியவள், “ஓஹோ! இப்படி பேசிதான் ரிஷ்ஷ வலைச்சுப்போட்டியா?” என்று மேக்னா ஏளனச் சிரிப்போடு கேட்டதும், “ஓஹோ! இப்படி பேசிதான் அவன் உன்னை விட்டு ஓடினானா?” என்று பதிலுக்குக் கேட்டாள் கேலியாக.

மேக்னாவுக்கு எடக்கு மடக்காக அவள் பேசும் விதத்தில் பைத்தியமே பிடித்துவிட்டது.

விழிகள் சிவக்க அவள் சனாவை முறைக்க, பதிலுக்கு அவளை முறைத்துப் பார்த்தவள், “சிவனேன்னு இருந்த என்னை இங்க கூட்டிட்டு வந்து வம்பிழுக்குற. எங்க ஏரியா பசங்களே என்கிட்ட வாலாட்ட மாட்டானுங்க. உனக்கு எம்புட்டு அதுப்பிருந்தா என்கிட்ட உன் திமிர காட்டுவ மேனாமினிக்கி!” என்று கிட்டதட்டக் கத்த,

அதில் ஆத்திரம் அதிகரிக்க, அவளை மேலிருந்து கீழ் முகத்தைச் சுழித்துப் பார்த்த மேக்னா, “அப்படி என்ன இருக்குன்னு அவன் உன் பின்னாடி திரிஞ்சிட்டு இருக்கான். ச்சே! நல்ல காரியக்காரிதான் நீ. எதுவுமே இல்லை. ஆனா, நல்லாவே மயக்கி வச்சிருக்க.” என்று அவளை அவமானப்படுத்துவது போல் பேச, சனாவோ கேலியாகச் சிரித்துக்கொண்டாள்.

“இதை நீ என்கிட்ட பேசியிருக்கக் கூடாது. அவன்கிட்ட பேசியிருக்கணும். நானே அவன் தொல்லை தாங்க முடியாம அப்பப்போ தலை மறைவாகுறேன். உனக்கொரு கும்பிடு போடுறேன் தாயே! முடிஞ்சா ஏதாச்சும் பண்ணி அவன உன் பக்கம் திருப்பிக்கோ! எனக்கு தொல்லை ஒழியும்.” சனா சலிப்பாக விழிகளை உருட்ட, விழிகளைச் சுருக்கி அவனை கூர்ந்துப் பார்த்தாள் மேகா.

“அப்போ உனக்கு அவன்மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லையா? மனாலில அவன் கூட இருந்த பொண்ணு நீதான்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏதோ ஒரு சீக்ரெட் உன்கிட்ட இருக்கு. என்கிட்ட மறைக்கிறல்ல?” மேக்னா கழழுகுப் பார்வைக் கொண்டு கூர்மையாகப் பேச, அவளை சிறிதுநேரம் வெறித்தவள், “நீ என்ன வேணா நினைச்சிக்கோ! ஆனா அந்த சைக்கோ யாரை கல்யாணம் பண்ணாலும் எனக்கு பிரச்சினை இல்லை. நான் அதை கண்டுக்க போறதுமில்லை. இந்த சொகுசு வாழ்க்கையில எனக்கு ஆசையும் இல்லை. எனக்..எனக்கு அவன்மேல காதலில்லை.” என்று பேசிக்கொண்டே சென்றவள் கடைசி வசனத்தை மட்டும் ஏனோ தடுமாற்றத்தோடு நிறுத்தினாள்.

மேக்னா எதுவும் பேசவில்லை. அமைதியாக நிற்க, “இனி என்கிட்ட உன் தில்லுமுல்லு வேலையெல்லாம் வச்சிக்காத! இதுவே நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டும். அவன் ஒரு சைக்கோன்னா நீ அதுக்குமேல பெரிய சைக்கோவா இருக்க. தெரியாம ஒருதடவை உசுற காப்பாத்த போய் இப்போ நம்ம உசுற வாங்கிட்டு இருக்கானுங்க.” என்று திட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் சனா.

சனாவைப் பற்றி ஓரளவு தெரிந்துதான் வைத்திருந்தாள் மேக்னா. இருந்தாலும் எங்கு காதலித்து விடுவாளோ என்ற பயத்திலேயே சனாவை சந்திக்க முடிவு செய்தாள். ஆனால், இவள் தனக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை. ரிஷியிடம் பேசிக்கொள் என்றல்லவா சொல்லிவிட்டாள்!

இதே மிரட்டலை ரிஷியிடம் அவள் செய்ய முடியுமா என்ன?

நெற்றியை நீவி விட்டவாறு கடற்கரை மணலில் நடந்துச் செல்பவளை மேக்னா யோசனையோடு பார்த்திருக்க, இங்கு சனாவின் முகமோ இறுகிப் போயிருந்தது.

ரிஷியைப் பற்றி அலட்சியமாகச் சொல்லிவிட்டாள். ஆனால், ‘என் ரிஷ்’ என்று மேக்னா சொல்லும் போதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ ஒரு வலி. அவனை விட்டுக்கொடுத்து பேசும் போது அவளுக்கு இதயம் எம்பி குதித்தது.

‘ச்சே! இது என்ன ஃபீலிங். நாம என்ன நினைக்குறோம்னு நமக்கே புரிய மாட்டேங்குதே!’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தவளின் மனதின் சீற்றத்தை ஓடி வரும் கடலலைகள் கூட அடக்கவில்லை.

அன்றிரவு, வழக்கம் போல் ரிஷியிடமிருந்து வரும் அழைப்புக்களோ குறுஞ்செய்தியோ எதுவும் வரவில்லை. குழப்பத்தோடு அலைப்பேசியை பார்த்தவளின் மனம் ஏனோ அவளையும் மீறி சுணங்க, விழிகளை இறுக்க மூடி தூக்கத்தை வரவழைத்து உறங்க ஆரம்பித்தாள் சனா.

பல நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென, “சாணி… சாணி…” என்ற அழைப்பு.

கனவோ என்று நினைத்து அதை முதலில் அலட்சியம் செய்தவளுக்கு பின் கன்னத்தில் உணர்ந்த ஈரமான ஸ்பரிசத்தில் சட்டென்று விழிப்பு வந்தது. பக்கத்தில் ரிஷியேதான். அதுவும் அத்தனை நெருக்கமாக அவள்மேல் சாய்ந்து கன்னத்தில் முத்தமிட்டு அவளை அவன் எழுப்ப முயற்சித்துக்கொண்டிருக்க, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள் அவள்.

“ஹாய் சாணி!” ரிஷி உற்சாகமாகச் சொல்ல, அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தவள், “எப்..எப்படி இங்க வந்த? நான் கதவை பூட்டில்ல வச்சிருந்தேன், வெளியில ஆளுங்க கூட…” அதற்குமேல் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவளின் நிலை புரிந்து குடத்திலிருந்து நீரை அள்ளி அவன் அவளுக்கு குடிக்கக் கொடுத்து, “மொதல்ல குடி, அப்றம் சொல்றேன்.” என்க, அதை வாங்கி மடமடவென வேகமாக குடித்தாள் சனா.

தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொண்டவள், ‘இப்போ சொல்லு!’ என்ற ரீதியில் கோபமாக ஒரு பார்வைப் பார்க்க, “ஹிஹிஹி… முன் வாசலால வந்தா ஆளுங்க இருப்பாங்க. உன்னைதான் தப்பா நினைச்சிப்பாங்க. அதான், பின்வாசல் வழியா வந்தேன். ஒரே சாக்கடை தண்ணீ. பேட் ஸ்மெல் வேற, என் ப்ரேன்டட் ஷூ நாசமாகிட்டு. வாட் டு டூ? உன்னை பார்க்க இப்படிதான் வரவேண்டியதா போச்சு. ஷூவ ஓரமா வச்சிருக்கேன். போகும் போது க்ளீன் பண்ணி போட்டுக்குறேன்.” என்று அசடுவழிந்தவாறுச் சொல்ல, சனாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

எத்தனை பெரிய பாடகன். பணக்காரன். தன்னைப் பார்க்க அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு இடத்தில் சகித்துக்கொண்டு வந்திருக்கிறான். இது என்ன வகையான காதல்?

இருந்த கோபமெல்லாம் தடம் தெரியாமல் மாயமாக, “வழக்கம் போல கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே, எதுக்கு சாக்கடை வழியா வரணும்.” அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்துக்கொண்டு அவள் பேச, “அங்க யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்க ஸ்வீட்ஹார்ட்?” என்று கேலியாகக் கேட்டு அவளை கோபப்படுத்திய திருப்தியுடன், “நீ தூங்கும் போது எப்படி இருப்பன்னு பார்க்க ஆசையா இருந்துச்சு அதான்…” என்றான் கேலித்தொனியில்.

‘ஙே’ என அவனை ஒரு மார்கமாகப் பார்த்தவள், “இவன் வேற என்னை ஒரு மாதிரி டோர்ச்சர் பண்றானே!” என்று தலையில் கைவைத்துக்கொள்ள, வாய்விட்டுச் சிரித்து, “ஆமா… இன்னைக்கு ஒரு ஸ்பெஷலான இடத்துக்கு போனீங்க போல! உழவுத்துறை அமைச்சுலயிருந்து நியூஸ் கிடைச்சது.” என்று ரிஷி தீவிரப் பாவனையில் சொல்ல, “ம்ம்…” என்றாள் சாதாரணமாக.

“அவ வீட்டுக்கு கூட்டிட்டு போனா, வீட்டை சுத்திக் காட்டினா, அப்றம் ஏதேதோ பேசி என்கிட்ட நல்ல வாங்கிக் கட்டிக்கிட்டா. ஆங் முக்கியமான மேட்டர், உன்னை விட்டு விலக சொன்னா.” என்று பேசிக்கொண்டே அவள் கொட்டாவி விட, “ஓஹோ…” என்று புருவத்தைச் சுருக்கி யோசித்தவன், “ஆமா… விலக சொன்னதும் நீ என்ன சொன்ன?” என்று கேட்டான் ஆர்வமாக.

“நான் என்ன சொல்ல, உன் தொல்லை தாங்க முடியல. முடிஞ்சா அவன உன் கைக்குள்ள போட்டுக்க. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அப்பாடா சனியன் தொலைஞ்சிட்டுன்னு நானும் நிம்மதியா இருப்பேன். எனக்கு வேது மேல எந்த காதலுமில்லை. நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணாலும்…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, கோபமாக அவளை தரையில் தள்ளி அவள்மேல் படர்ந்தவன், அவளின் தாடையை இறுகப் பற்றி தன் விழிகளைப் பார்க்கச் செய்தான்.

அவனுக்குள் அத்தனை ஆத்திரம். “என்னடீ சொன்ன, என்னை விட்டுக்கொடுத்து பேசுற அளவுக்கு தைரியமா, நான் என்ன உங்களுக்கு பொம்மையாடீ? உண்மைய சொல்லு, உனக்கு என்மேல எந்த ஃபீலிங்க்ஸும் இல்லைன்னு. சொல்லிதான் பாரேன்!” என்று கிட்டதட்ட அவன் மிரட்ட, மிரண்டுவிட்டாள் சனா.

“நீயும் என்னை காதலிக்குற. ஆனா என்ன சொல்ல மாட்டேங்குற. உண்மையாவே என்னை உனக்கு பிடிக்கலையா சனா, என்னை லவ் பண்ண தோனவே மாட்டேங்குதா? ஏன்டீ என்னை இப்படி கொல்லுற, சரியான அரக்கிடீ நீ!” என்று பேசிக்கொண்டுச் சென்றவனின் விழிகள் தன்னை மீறி லேசாக கலங்கின.

அவள் விழிகளையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் “ஸ்ஸ் ஆஆ…” என்று முணங்கினாள் அவனவள்.

அதில் மெல்ல கரத்தை விலக்கியவன், “பிடிக்கலையா?” என்று ஹஸ்கி குரலில் கேட்டு அவளிதழ்களை நோக்க, அவளோ எதுவும் சொல்லவில்லை. அவனின் நெருக்கத்தில் துடிக்கும் இதழ்களோடு அவன் விழிகளையே சனா அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், இங்கு ரிஷியின் உணர்வுகள் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடின. மெல்ல அவளின் வலது கன்னத்தை வருடி அதைத் தாங்கியவன், அவளிதழில் முத்தமிட்டு அதிலேயே மூழ்கிவிட, சனாவுக்கோ மறுக்கத் தோன்றவில்லை. அவள் விழிகள் தானாக மூடிக்கொண்டன.

அவனுக்கும் அது சாதகமாகப் போக, இதழிலிருந்து பிரிந்து அவள் விழிகளை நோக்கிய ரிஷி, அவை மூடியிருப்பதை உணர்ந்து அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவனின் மீசை முடி மற்றும் இதழ்கள் செய்யும் குறுகுறுப்பில் உடல் சிலிர்க்க நெளிந்தவள், மெல்ல புன்னகைக்க, அவள் உணர்வுகளும் தாறுமாறாக எகிறியது.

“வேது…” என்று மெல்ல அவள் அழைக்க, நிமிராது இதழால் அவள் கழுத்தில் அழுந்த முத்தமிட்டு, “ம்ம்…” என்றான் ரிஷி. இருவரும் இந்த உலகை விட்டு வேறு உலகில் மிதந்துக்கொண்டிருந்தனர். அந்த மாய வலையிலிருந்து விடுபட இருவருக்கும் மனமில்லை.

“அது நான்… நான் வந்து…” என்று உணர்ச்சிகளின் பிடியில் அவள் ஏதோ சொல்ல தடுமாற, திடீரென கதவு தட்டும் சத்தம். அதில் முதலில் சுதாகரித்தது என்னவோ சனாதான்.

பட்டென்று விழிகளைத் திறந்தவள், தன்னிலை புரிந்து அவனை தள்ளிவிட்டு மூச்சு வாங்கியவாறு எழுந்தமர, ‘ச்சே!’ என்று எரிச்சல்பட்டுக்கொண்டான் ரிஷி.

‘என்ன காரியம் பண்ற சனா?’ என்று தன்னைத்தானே கடிந்தவாறு இருந்தவள், இவனின் எரிச்சலில் மேலும் கடுப்பாகி அவனை முறைக்க, உதட்டை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவன், மெல்ல எழுந்து சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

சனாவும் ஆடையை சரிசெய்தவாறு, ரிஷியை எட்டிப் பார்த்துவிட்டு பயத்தோடே கதவைத் திறக்க, எதிரே நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு ஒருபக்கம் அதிர்ச்சி என்றால் இன்னொரு பக்கம் அளவு கடந்த கோபம்.

எதிரே நின்றிருந்த ப்ரவின், “கதவை திறக்க உனக்கு இவ்வளவு நேரமா?” என்று கோபமாகக் கேட்டு, “அது உன்னை… உன்னை அப்பா…” என்று ஏதோ சொல்ல வர, கதவை அறைந்து சாத்திவிட்டாள் சனா.

அவன் பேசுவதைக் கேட்கக் கூட அவளுக்கு பிடிக்கவில்லை. வாசலில் நின்றிருந்த ப்ரவினுக்கோ கோபம் வரவில்லை. ஏனோ உள்ளுக்குள் ஒரு வருத்தம்.

“உன்னை அப்பா பார்க்கணும்னு சொல்றாரு. தயவு பண்ணி என் கூட வா! அந்த மனுஷன பார்த்துட்டு நீ போயிடு.” அவன் வெளியிலிருந்து கத்த, கதவில் சாய்ந்தவாறு உள்ளே நின்றிருந்தவளோ காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

“இப்போ என்ன உனக்கு ரொம்ப ஓவராதான் பிகூ பண்ற, மன்னிப்பு கேக்கணுமா கேக்குறேன். மன்னிச்சிடு! இப்போவாச்சும் வர்றீயா மகாராணி?” என்று எப்படியெல்லாம் பேச வேண்டுமோ விதவிதமாகப் பேசிப் பார்த்தும் அவள் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை. கதவையும் திறக்கவில்லை.

ஒருகட்டத்தில் முடியாமல், “நான் பண்ணது தப்புதான் அக்கா, எனக்கு புரியுது. எங்களை பார்க்க விரும்பாதவ எதுக்கு அன்னைக்கு அந்த முருகேசன்கிட்ட எங்க அம்மா வாங்கிய கடனை வட்டியோட திருப்பி கொடுத்தியாக்கும், என் காலேஜ் ஃபீஸ்ஸ எனக்கே தெரியாம கொடுத்தியாக்கும், இதெல்லாம் பாசம் இல்லாமலா?” என்று ப்ரவின் பேச, ‘இவனுக்கு எப்படி தெரியும்?’ என்ற ரீதியில் அதிர்ந்து விழித்தாள் சனா.

“ஆனா, நீ இம்புட்டு உதவி பண்ணியிருக்கன்னு நான் உன்னை தேடி வரல. அன்னைக்கு உன்னை அந்த முகம் தெரியாதவன் கூட சேர்த்து வைச்சு பேசினதும் என்னை ஒரு பார்வை பார்த்த பாரு! செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சுக்கா, எனக்கே அசிங்கமா போயிருச்சு. அப்பா உன்னை தேடி வரும் போதெல்லாம் கோபம் வரும். அது ஒரு வகையான உரிமையிலதான். ஆனா, நான் அப்படி உன்னை அசிங்கப்படுத்தியிருக்க கூடாது.” உண்மையான வருத்தத்தோடு அவன் பேசிக்கொண்டுச் சொல்ல, இங்கு இவளின் விழிகளிலிருந்து விழிநீர் ஓடியது.

அதற்குமேல் அவனும் நிற்காது அங்கிருந்து நகர்ந்துவிட, இத்தனைநேரம் ஒழிந்திருந்த ரிஷி மெல்ல வெளியே வந்து தன்னவளையே பரிதாபமாகப் பார்த்தான். அவனும் ப்ரவின் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டல்லவா இருந்தான்.

ரிஷியைப் பார்த்தவள் எதுவும் நடவாதது போல், “ஆமா… சாப்பிட்டியா நீ?” என்று விழிநீரை துடைத்து அங்கிருந்த பாத்திரங்களை புரட்ட, “உன் அப்பாவ நீ போய் பார்க்க மாட்டியா?” என்று கேட்டான் ரிஷி.

“என்னதான் எனக்கு உன்னை பிடிக்கலன்னாலும் வீட்டுக்கு வந்தவனுக்கு சாப்பிட கொடுக்காம அனுப்புற அளவுக்கு நான் வழக்கம் போல நீ சொல்ற அரக்கி கிடையாது. இதோ இந்த முறுக்கு சாப்பிடு! நல்லாயிருக்கும்.” என்றுக்கொண்டே சின்ன டப்பாவிலிருந்த முறுக்குகளை ஒரு தட்டில் வைத்து நீட்ட, “நான் பேசுறதுக்கு பதில் சொல்லு! அவர் சின்னவயசுல நீ இருக்கும் போது உன் மேல பாசம் இல்லாம இருந்திருக்கலாம். இப்போ உன்னை பார்க்க ஆசைப்படுறாரு. போய் பார்த்தா என்ன சாணி? நீயும் அவர போல நடந்துக்கிட்டா உனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.” என்றவனை விழிகள் சிவக்க பார்த்தாள் அவள்.

“ஏன் உன் பழைய ஆளு மறுபடியும் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி வர்றாளே, மன்னிச்சு அவள ஏத்துக்க வேண்டியதுதானே! ஏன் மறுக்குற?” என்று கோபமாகக் கேட்டவள், “அன்னைக்கு அம்மாவும் குட்டிமாவும் இறந்த அன்னைக்கு குட்டிமாவுக்கு ரொம்ப முடியல. இந்த மனுஷன் அதோ அந்த ப்ரவினோட அம்மா வீட்டுல இருந்தாரு. நான் போய் விஷயத்தை சொல்லி உதவிக்கு கூப்பிட்டதுக்கு பொட்டச்சிங்க மூனு பேருக்கும் ஊரு மேய தெரியும் ஆஸ்பத்திரி போக தெரியாதான்னு சொல்லி திட்டி அனுப்பி விட்டாரு. அதுலேயே அவர மொத்தமா வெறுத்துட்டேன். ஒருவேள அவர் வந்திருந்தா அவங்க இப்போ உயிரோட இருப்பாங்களோ என்னவோ!” என்றுவிட்டு உடைந்து அழுந்துவிட்டாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிறிதுநேரம் அவளை வெறித்தவன், ஆழ்ந்த பெருமூச்செடுத்து “என்னோட விஷயம் வேற சனா, துரோகம். எதிரிய மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க கூடாது. அவருக்கு இன்னொரு தொடர்பிருந்தும் உங்க அம்மா ஏத்துக்கிட்டிருக்காங்கன்னா அவங்க அவரை ரொம்ப விரும்பியிருக்காங்க. அன்னைக்கு உங்க அம்மா தங்கச்சியோட இறப்பை அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு.

எனக்கு அம்மா அப்பா இல்லை. உன்னோட இழப்பை என்னாலேயும் புரிஞ்சிக்க முடியுது. ஆனா ஒன்னு, அன்னைக்கு உன் அப்பா உன் வீட்டு வாசல்ல உனக்காக நின்னுக்கிட்டு இருக்கும் போது அவரோட முகத்துல அத்தனை வலி. பொண்ணை கண்டிக்குறதா சொல்லி வெறுப்பை சம்பாதிச்சிக்கிறாரு.” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல,

“அப்போ அவர் பண்ணதெல்லாம் தப்பே இல்லைன்னு சொல்றியா?” பாவமாகக் கேட்டாள் சனா.

“தப்புதான். அவர் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. ஆனா, இரண்டு பேரோட இறப்புக்கு பிறகு கண்டிப்பா மாறியிருக்காரு. அதான் அவர் அப்பா அப்படின்னு உரிமையில உன்னை கட்டுப்படுத்த நினைக்கல. உன்னை போய் அவரோட கொஞ்ச சொல்லல்ல. போய் பாரு! அது போதும் அவருக்கு.  நான் சொல்லிட்டேன். இதுக்கப்றம் உன் இஷ்டம்.” என்று முடித்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், அங்கிருந்து வந்த வழியாலேயே நகர்ந்திருக்க, அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் வெடிக்க, சுவற்றிலிருந்த தன் அம்மாவின் படத்தைப் பார்த்தவாறு கதறியழுதாள் சனா.

error: Content is protected !!