தொலைந்தேன் 30 💜

தொலைந்தேன் 30 💜
“இப்போ சரியான நேரம் வந்தாச்சுப்பா, கான்செர்ட் முடிஞ்சதுமே பேசுங்க.” என்று சந்தோஷத்தோடு மேக்னா சொல்ல, “உன் விருப்பம் மேகாம்மா, ரிஷி எப்போவும் என் பேச்ச தட்ட மாட்டான்.” என்றார் மனோகர் உறுதியாக.
இருவரின் நினைவுகளும் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மீட்டின.
அன்று ரிஷி ராகவனோடு பேசியதை அலைப்பேசி வழியாக கேட்டவள், அடுத்தநொடி மனோகரை தேடித்தான் சென்றிருந்தாள்.
“என்னைம்மா என்னைக்கும் இல்லாம என்னை தேடி வந்திருக்க?” மனோகர் மேக்னாவை கூர்ந்துப் பார்த்தவாறுக் கேட்க, “அன்னைக்கு என்னாலதான் அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சா?” என்று கேட்டாள் அவள் இறுகிய குரலில்.
முதலில் புரியாது விழித்தவர், பின் மேக்னா ரிஷி பேசியது மொத்தத்தையும் சொன்னதும் அதிர்ந்து விழித்தார்.
“இம்போஸிபள்! அது எப்படி…” என்று அவர் தடுமாற, விழிகளை உருட்டியவாறு சனாவின் புகைப்படத்தைக் காட்டினாள் அவள். அதைப் பார்த்ததுமே அவருக்கு மேலும் அதிர்ச்சி.
“அன்னைக்கு இந்த பொண்ணுதான்…” என்று மனோகர் அன்று நடந்ததைச் சொல்ல, மேக்னாவோ புருவத்தைச் சுருக்கி ஆழ்ந்து யோசித்திருந்தாள்.
ஏதோ யோசித்தவராக, “மேகா, நீ ரிஷிய நிஜமாவே காதலிக்கிறியா?” என்று கேட்டு அவளை மனோகர் கழுகுப்பார்வை பார்க்க, “என்ன, இப்படி கேக்குறீங்க?” என்று அதிர்ந்துக் கேட்டவள், “நடக்குறதெல்லாம் நீங்க பார்த்துட்டுதானே இருக்கீங்க, உங்களுக்கு தெரியாம இல்லை.” என்றாள் ஒருமாதிரி குரலில்.
அதில் இதழை வளைத்துச் சிரித்தவர், “நடக்குறதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குறதாலதான் இந்த கேள்விய கேக்குறேன். அமுதாவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவ இப்படி பண்ணது எனக்கு ஆச்சரியமில்ல. ஆனா, அவ பேச்சை கேட்டு நீ ரிஷிக்கு இப்படி பண்ணதுதான் என்னால கொஞ்சமும் ஏத்துக்க முடியல.” என்று குற்றம்சாட்டும் குரலில் பேச, அவளுக்கோ சட்டென விழிகளிலிருந்து கண்ணீர் உருண்டோடீயது.
“அதுக்கான தண்டனையதான் இப்போ அனுபவிச்சிட்டிருக்கேன். ஆனா, இப்போ ரிஷிய நான் ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். ஆனா என் ரிஷ்…” என்ற மேக்னாவுக்கு ரிஷி சனாவுக்காக குடித்து உளறி அழுதது ஞாபகத்திற்கு வர, பேச்சை நிறுத்தி, “என் ரிஷ் எனக்கு வேணும்ப்பா.” என்றாள் அழுத்தமாக.
அவளை ஆழ்ந்து நோக்கியவர், “நான் உன் பயலொஜிகல் ஃபார்தர் இல்லைன்னாலும் நான் பெத்த மகளாதான் உன்னை பார்க்குறேன். உன்னோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் மேகா. அன்னைக்கு சுந்தர் ஆசைப்பட்டது கூட ரிஷி என்னோட மருமகனாகணும்னுதான். அவனோடது மட்டுமில்ல என்னோடதும் கூட. கண்டிப்பா ரிஷி என் பேச்சை தட்ட மாட்டான். நான் நாளைக்கே அவன்கிட்ட பேசுறேன்.” என்றதும், விழிகள் மின்ன அவரை நோக்கியவள், “ரியலி?” என்றாள் ஆச்சரியமாக.
அவரோ சிரிப்போடு விழிகளை அழுந்த மூடித் திறக்க, துள்ளிக் குதிக்காத குறையாக சந்தோஷத்தில் மிதந்த மேக்னா, “தேங்க்ஸ்ப்பா, பட் நாளைக்கே வேணாம். சரியான நேரம் வரட்டும். நானே சொல்றேன். அப்போ பேசுங்க.” என்று சொல்ல, “உன் விருப்பம்டா.” என்றவாறு அவள் தலையை வாஞ்சையோடு வருடினார் மனோகர்.
அன்று தாங்கள் பேசிக்கொண்டது இருவருக்குமே ஞாபகத்திற்கு வர, “எப்போ பேசணும்னு சொல்லு மேகா!” என்றார் மனோகர் ஆர்வமாக.
“இன்னும் டூ வீக்ஸ்ல ரிஷியோட கான்செர்ட் நடக்க போகுது. அதுக்கப்றம் பேசுங்கப்பா. ஆனா…” என்று தயக்கமாக மேக்னா இழுக்க, “ஆனா என்ன?” என்று அவரோ புரியாதுக் கேட்டார்.
“ஆனா, அவன் என்னை ஏத்துப்பானா?” தன் மனதை அரித்த சந்தேகத்தை அவள் கேட்டுவிட்டு யோசிக்க, அர்த்தப் புன்னகை புரிந்தவர், “கண்டிப்பா அவன் என்னோட பேச்சை மீற மாட்டான். ஐ அம் டேம்ன் ஷுவர்!” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
அந்த வார்த்தைகளிலிருந்த உறுதியும் அழுத்தமும் அவளுக்கு மன ஆறுதலை கொடுக்க, அழைப்பைத் துண்டித்தவள், ராகவனுக்கு, “எவ்ரிதிங் இஸ் கொயிங் டூ பீ ஃபைன்.” என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.
இவ்வாறு நாட்கள் ஓடி ரிஷியின் கான்செர்ட்டுக்கான நாளும் வந்தது.
இரண்டு பேர் அவனுக்கான ஒப்பனைகளை செய்து அவனின் ஆடையை ஸ்டைலாக சரி செய்ய, கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தையே யோசனையோடு பார்த்திருந்தான் ரிஷி.
அவனின் நினைவில் சட்டென ஞாபகத்திற்கு வந்தது, தன்னவளென்று நினைத்து பைத்தியக்காரத்தனமாக மேடையிலிருந்து கூட்டத்திற்குள் குதித்து அவளை தேடி அலைந்த சம்பவம்தான்.
அவளை நினைத்தாலே அவனிதழில் ஒரு வசீகரப்புன்னகை. ஆனால் இந்தப் புன்னகையில் வலியின் சாயல்.
இடது கரத்திலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், நேரம் நெருங்கியதை உணர்ந்து தன் கிட்டாரை எடுத்துக்கொண்டு மேடையில் ஸ்டைலாக நுழைய, அத்தனை கரகோஷங்கள்.
கூடவே, அவனின் நண்பர்களான சில முண்ணனி நடிகர் நடிகைகளும் வருகை தந்திருக்க, மேடையில் ஸ்டைலாக நின்றிருந்த ரிஷியை விழி அகலாமல் பார்த்திருந்தாள் மேக்னா.
இதுவரையிருந்த அவனின் அத்தனை வலிக்கும் அவனின் ரசிகர்களின் கரகோஷங்கள் மருந்தாகிப் போக, மெல்லிய சிரிப்போடு மைக்கை கையில் வாங்கியவன், “வணக்கம் டியர்ஸ்ஸ்…. உங்கள இப்படி மீட் பண்ண ரொம்ப நாளாச்சு. என்ன பண்றது வேலைப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை கூடவே காதல் பிரச்சினையும்…” என்றுவிட்டுச் சிரிக்க, ஓவென்று கத்தி ஓலமிட்டனர் சுற்றியிருந்தவர்கள்.
ரிஷியும் சிரித்தவாறு, “ஜஸ்ட் ஃபார் ஃபன். இதை ஹெட்லைன்னா மாத்திராதீங்க ப்ளீஸ்.” என்று கேலியாகச் சொல்லிவிட்டு, “சோ, ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான அன்னௌன்ஸ்மென்ட். லேடீஸ் என்ட் ஜென்டில்மேன் லெட்ஸ் வெல்கம்…” என்று சொல்லி சிலபேரை அழைக்க, ராகவன் உட்பட சிலபேர் மேடைக்கு வந்தனர்.
“முன்னாடியே சொல்லியிருந்தேன், ஒரு வெப்சீரீஸுக்கு லீடிங் ஆக்டரா நான் வர்க் பண்றேன்னு. அதைப் பத்தி எந்த அப்டேட்டும் இல்லைன்னு நீங்களும் யோசிச்சிருப்பீங்க. சோ, அதைப் பத்தி ஒரு முக்கிய அப்டேட். நம்ம சீரீஸ் இன்னும் ஒரு வாரத்துல ரிலீஸ் ஆக போகுது. சோ, அதோட மூதல் ஃபோஸ்டர்ர இப்போ ரிலீஸ் பண்ணிடலாம்.” என்றுவிட்டு அவன் ராகவனின் அருகில் நிற்க, அத்தனை பேரின் கைத்தட்டல்களோடு அவர்களின் சீரீஸ் படத்திற்கான விளம்பரம் செய்யப்பட்டது.
அடுத்த சில நிமிடங்கள் இதிலேயே கழிய, மீண்டும் ஆரம்பமானது ரிஷியின் பேச்சு.
“ஸப்பாஹ்! எப்படியோ எல்லாரும் கேட்டுக்கிட்டு இருந்த அப்டேட்ட கொடுத்தாச்சு. ஸ்ரேயா ஃப்ரொம் நியூஸ் வர்ல்ட், உங்க பேப்பருக்கான நியூஸ் இப்போ கிடைச்சது. இனி நோ மோர் கொஷன்ஸ்.” என்று அன்று இசை வெளியீட்டு விழாவில் சீரீஸ் சம்மந்தமாக பேட்டி எடுத்த பெண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லி அவன் சிரிக்க, அந்தக் கூட்டத்திலிருந்த அந்த பத்திரிகையில் வேலைப் பார்க்கும் பெண்ணிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“ஓகே எல்லாத்தையும் விடுங்க, நாம இங்க எதுக்காக கூடியிருக்கோமோ அதை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டு கிட்டாரை அவன் இசைக்க, எல்லாரும் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அதன்பிறகு மொத்தக் கூட்டமும் இசையிலேயே மூழ்கிவிட்டனர். அதுவும் ரிஷியின் குரலுக்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து விடுபடவும் மனமில்லை. ரிஷியும் யாரையும் விடுவிக்கவில்லை.
அடுத்தடுத்த பாடல்களை பாடிக்கொண்டே சென்றவன், சட்டென பாடுவதை நிறுத்தினான். அவனுடைய முகம் வேகமாக சிவந்து இறுகியது. எல்லாரும் தங்களுக்குள்ளேயே பேசி ரிஷியை எட்டி எட்டி என்னவென்று பார்க்க, மேக்னாவுக்கோ பொறி தட்டியது.
அவள் நினைத்தது போல் அடுத்து ரிஷி பாடிய பாடல் சனாவுடன் அவன் நடித்த ஆல்பம் பாடல்தான். விழிகளை மூடி சனாவின் முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து அவன் பாட, மேக்னாவோ உதட்டைச் சுழித்தவாறு அவனைப் பார்த்திருந்தாள்.
அதேநேரம், தன் வீட்டில் தொலைக்காட்சி வழியே தன்னவனின் முகத்தை கால்களை கட்டி கண்ணீர் விட்டவாறு பார்த்திருந்தாள் சனா. இத்தனைநேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவள், அவன் இந்தப் பாடலை பாடியதும் ஒவென்று அழுதேவிட்டாள்.
அவளாலும் அவனின் நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ‘நான் என்ன பாவம் பண்ணேன், என் அம்மா குட்டிம்மாவ கொன்னவன காதலிச்சு சேரவும் முடியாம விலகவும் முடியாம தத்தளிச்சிக்கிட்டு இருக்கேன்’ உள்ளுக்குள் புலம்பியவாறு அழுதுக்கொண்டிருந்தவளின் தோளைத் தொட்டது ஒரு கரம்.
அது யாரென்று உணர்ந்த சனா, அடுத்தநொடி வேகமாகத் திரும்பி நின்றிருந்த ராஜலிங்கத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு சிறுபிள்ளைப்போல் அழ, அவரோ பதறிவிட்டார். அவர் மனம் திறந்து அன்று பேசியதிலிருந்து சனாவுக்கு அவர்மேலிருந்த மொத்தக் கோபமும் காணாமற் போன உணர்வு.
அதுவும் ரிஷியை விட்டு விலகியிருந்தவளுக்கு ஆறுதல் தேவைப்பட, தானாக ப்ரவினின் வீட்டிற்குச் செல்வது அதிகமாக இல்லையென்றாலும் ராஜலிங்கத்துடன் சில பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொள்வதுமாக இருந்தாள். சகுந்தலாவிடம் கூட.
ஆனால், ராஜா அத்தனை தடவை சொல்லியும் தனியாக தன் தாயின் வீட்டிலேயே இருந்துக்கொண்டாள். அவள் வீட்டிலிருக்கும் போது ராஜலிங்கமும் அடிக்கடி பார்க்க வருவதுண்டு. இன்றும் பார்க்க வந்த சமயம்தான் அவள் தொலைக்காட்சி திரையை பார்த்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு தூக்கி வாரிப்பட்டது.
அவள் கால்களைக் கட்டிக்கொண்டு அழுததும் அடுத்து என்ன செய்வதென்றே அந்த பெரியவருக்கு தெரியவில்லை. அவள் தலையைத் தடவியவர், “என்னாச்சு சனாம்மா?” என்று கேட்டு அவள் முகத்தை நிமிர்த்த, “ப்பா…” என்று கத்திக்கொண்டு அவர் மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள் அவள்.
சில நிமிடங்கள் அவளின் தலையை தடவிக்கொண்டிருந்தவர், எதுவும் பேசவில்லை. முழுதாக அழுது முடியட்டுமென விட்டிருந்தார் போலும்!
அவளும் அழுது ஓய்ந்து மூக்கை உறுஞ்சியவாறு அவர் மார்பிலேயே சாய்ந்திருக்க, “ஆரம்பத்துல உனக்கு ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியலன்னாலும் இப்போ அதுக்காகதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒருவேள, விசாலம் இருந்திருந்தா உன் மனசுலயிருக்குறதை சொல்லியிருப்ப. சரிடா! நீ சொல்லலன்னாலும் பரவாயில்லை. அழாதம்மா!” என்று ராஜலிங்கம் பேச, ஏனோ அவரின் வார்த்தைகள் அவள் நெஞ்சை முள்கொண்டு தைப்பது போலிருந்தது.
விழிநீரை அழுந்தத் துடைத்தவள், தரையை வெறித்தவாறு நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடிக்க, ஒருகணம் அதிர்ந்தேவிட்டார் அவர்.
அதே அதிர்ச்சியோடு அவர் பார்வை திரையில் தெரிந்த ரிஷியின் முகத்தில் படிந்து மீண்டும் தன் மகளின் முகத்தில் படிந்தது.
“நெசமாவா சொல்ற? இந்த பையனா…” என்று அதிர்ந்துக் கேட்டவருக்கு அதற்குமேல் பேச்சு எழவில்லை. முதல் அதிர்ச்சி தன் மகள் காதலிப்பது இத்தனை பெரிய பாடகனா என்று அவருக்கு தோன்றினால், அடுத்த அதிர்ச்சி தன் மனைவி மகள் இறப்பதற்கு காரணம் இந்த ஆடவனா என்றுதான்.
சில நிமிடங்கள் அவரிடத்தில் மௌனம். சுதாகரித்து ஆழ்ந்த மூச்செடுத்தவர், “நீ அந்த பையன காதலிக்கிறியாம்மா?” என்று கேட்டு அவள் முகத்தை கூர்ந்து நோக்க, “ம்ம்… நான் அதிகமா காதலிக்கிறதும் அவனதான். அதிகமா வெறுக்குறதும் அவனதான்.” என்றாள் சனா விட்டேற்றியான குரலில்.
அதில் மெல்லிய புன்னகை புரிந்தவர், “நீ அந்த பையன கல்யாணம் பண்ணுடா! எனக்கென்னவோ அவன விட பொருத்தமானவன் உனக்கு வேற யாருமில்லன்னு தோனுது.” என்று அழுத்தமாகச் சொல்ல, “அப்போ அம்மாவையும் குட்டிமாவையும் கொன்னவன கல்யாணம் பண்ண சொல்றீங்களாப்பா?” என்று ஆத்திரமாகக் கேட்டாள் அவள்.
“அது விபத்துடா, நீயே சொல்லு! அவன பத்தி கண்டிப்பா தெரிஞ்சு வைச்சிருப்ப. தெரிஞ்சே இப்படி ஒரு காரியத்தை அவன் பண்ணியிருப்பான்னு உனக்கு தோனுதா?” என்று ராஜலிங்கம் கேட்க, அவளிடத்திலோ அமைதி.
அதைப் பயன்படுத்தியவர், “எதிர்ப்பாராத நேரத்துல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்டா. அந்த பையன் கண்டிப்பா தெரிஞ்சு பண்ணியிருக்க மாட்டான். அதுமட்டுமில்லாம நீயே சொல்ற, அவனும் ஒரு இழப்ப சந்திச்சிட்டு இருந்த மனநிலையில அப்படி நடந்துருச்சுன்னு. அப்படியிருக்கும் போது அது எப்படி கொலையாகும். தெரிஞ்சே நான் பண்ண தப்ப மன்னிச்சு என்னை ஏத்துக்கிட்ட. தெரியாம பண்ண தப்புக்காக இத்தனை வருஷம் குற்றவுணர்ச்சியிலேயே இருந்திருக்கான். அவனோட நிலையிலிருந்து யோசிச்சு பாருடா!” என்றுவிட்டு எழுந்து நிற்க, சனாவோ சுவற்றையே வெறித்து யோசித்துக்கொண்டிருந்தாள்.
“இது உன்னோட வாழ்க்கை, நீ ஆசைப்பட்ட வாழ்க்கை. மன்னிக்குறது ஒன்னும் தப்பில்லைடா. அதுவும் நம்ம எல்லாரோட வாழ்க்கையையும் மாத்த போற பையன், அந்த பையன மன்னிச்சிருடா!” என்று ராஜலிங்கம் சொன்னதும் அதற்கான அர்த்தம் புரிந்தது சனாவுக்கு.
காரணம், இவர்களின் குடியிருப்பை முழுதாக சுத்தம் செய்து புதிதாக நிர்மாணம் செய்ய, ரிஷி தன் செல்வாக்கு மூலமாக ஏற்பாடு செய்திருப்பதை அறிந்துதான் வைத்திருந்தாள் அவள்.
ராஜலிங்கமும் பேசிவிட்டு வெளியேறியிருக்க, மீண்டும் கால்களைக் கட்டிக்கொண்டு விழியிலிருந்து விழிநீர் ஓட திரையில் தெரிந்த தன்னவனை சனா பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால், அதேநேரம் அங்கு மேடையில் தன் ரசிகர்களின் கரகோஷங்களையும் கத்தல்களையும் சிரிப்போடு பார்த்திருந்தான் ரிஷி.
சட்டென அவன் முகம் மாறியது. அன்று தெரிந்தது போல் இன்றும். கூட்டத்திற்குள் சிரிப்போடு சனாவின் முகம்.
ஆனால், அவன் குதிக்கவில்லை. எங்கு குதித்தால் பிரம்மை மறைந்துவிடுமோ என்ற பயம். மேடையிலிருந்தவாறே அவன் கண்களுக்கு தெரிந்த கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் அவளவனின் பிரம்மை உருவத்தையே காதலாக வெறித்துக்கொண்டிருந்தான் ரிஷி.
மேக்னாவோ அவன் பார்வை செல்லும் இடத்தைப் பார்த்துவிட்டு விழிக்க, ரிஷியின் அந்த காதல் முகம் சரியாக அத்தனை கேமராக்களிலும் படம் பிடிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
சனா திருமணமொன்றிற்காக படம்பிடிக்க தன் கேமராவை எடுத்து வைத்து வெளியேற தயாராக, சரியாக, “யக்கோவ்…” என்று கத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான் ப்ரவின்.
அவனை முகத்தைச் சுழித்துப் பார்த்தவள், “ஒன்னு பேரை சொல்லி கூப்பிடு, இல்லைன்னா அக்கான்னு கூப்பிடு! அது என்ன யக்கோவ் யக்கோவ்னு…” என்று முறைக்க, “சரி விடு, நான் என்ன சொல்ல வந்தேன்னா… காம்படீஷனுக்கு ஃபோட்டோ எடுத்துட்டியா? இன்னும் மூனே நாள்தான் இருக்கு.” என்றான் அவன் யோசனையோடு.
பெருமூச்சுவிட்டவள், இல்லையெனும் விதமாக தலையாட்டி, “இன்னும் இல்லைடா, பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கலந்துப்பாங்க. என்னோட ஃபோட்டோ பெஸ்ட்டா இருக்கணும். ஆனா…” என்று பேசிக்கொண்டே சென்றவள், “வாவ்வ்வ்!” என்ற ப்ரவினின் ஆச்சரியக்குரலில் சட்டென தன் பேச்சை நிறுத்தி புரியாதுப் பார்த்தாள்.
சனாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவனைப் பார்த்துவிட்டு அவன் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவளுக்கு அங்கு ஃப்ரேம் செய்யப்பட்டிருந்த படத்தைப் பார்த்ததும்தான் விடயம் புரிந்தது. கூடவே, சில நினைவுகளும் சேர்ந்தே வந்தன.
அது மனாலியில் வைத்து சூரிய உதயத்தை ரிஷி படம்பிடித்தது. அத்தனை அழகான காட்சி. சனாவே அந்த புகைப்படத்தை பல தடவை பார்த்து ரசித்திருக்கிறாள்.
அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவள் தன் வேலையில் கவனமாக, “யக்கோவ்! எம்புட்டு அழகாயிருக்கு. ஆமா… இம்புட்டு அழகான ஃபோட்டோவ வச்சிக்கிட்டா நீ ஊரெல்லாம் காம்படீஷனுக்கு ஃபோட்டோ தேடி அலையுற. இதையே நீ போடலாமே!” என்று ப்ரவின் உற்சாகமாகச் சொல்ல, அவளோ சாரசர் போல் விழிகளை விரித்தாள்.
இதுவரை அவளுக்கு தோன்றாத ஒன்று. அவள் யோசனையில் மூழ்க, “என்னக்கா யோசிச்சிட்டு இருக்க, இதுல மட்டும் நீ செலக்ட் ஆனேன்னா நீ வேற லெவல்தான்.” என்று அவன் துள்ளிக் குதிக்காத குறையாகப் பேச, மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள் சனா. அதுவே ப்ரவினுக்கு போதுமாக இருந்தது.
இங்கு இவள் வீட்டில் இவ்வாறு இருக்க, அங்கு ரிஷியின் வீட்டில் ராகவனுக்கு எதிரே அமர்ந்திருந்தார் மனோகர். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இருவரது எண்ணமும் ஒன்றுதான். காத்திருப்பும் ஒன்றுதான்.
சரியாக சில நிமிடங்கள் கடந்து போர்டிகாவில் காரை நிறுத்திவிட்டு அவர்களிள் காத்திருப்புக்கு விடையாக ரிஷி வீட்டினுள் நுழைய, “ஹாய் கண்ணா!” என்ற மனோகரை பார்த்ததும் அவனுக்கு அத்தனை சந்தோஷம்.
“மாமா…” உற்சாகமாக அழைத்தவாறு ஓடிச் சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி அவன் அணைத்துக்கொள்ள, வாஞ்சையோடு அவனின் தலையை வருடிவிட்டார் அவர்.
“எப்படியிருக்க ரிஷ், மாமா மேல கோபமா என்ன?” மனோகர் கேட்க, “அய்யோ மாமா, என்ன பேசுறீங்க? நான் இப்போ இந்த நிலைமைக்கு இருக்கேன்னா நீங்களும் ஒரு காரணம். அம்மா அப்பா இறந்ததுலயிருந்து நீங்கதான் துணையா இருந்தீங்க. அப்படியிருக்கும் போது எப்படி மாமா உங்க மேல கோபப்பட முடியும்?” என்று ரிஷி பேசிக்கொண்டே போக, விழிகளுக்கு எட்டாத புன்னகை புரிந்தார் அவர்.
ராகவன் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொணடு இருந்தாரே தவிர எதுவும் பேசவில்லை.
தன் மாமாவின் புன்னகையிலிருந்த உயிரில்லாத் தன்மையை கண்டுக்கொண்ட ரிஷி, “என்னாச்சு மாமா?” என்று உண்மையான அக்கறையோடுக் கேட்க, “மேகாம்மா…” என்றவர் விரக்திப் புன்னகைப் புரிந்தார்.
அதில் புருவத்தை நெறித்தவன், “அவளுக்கென்ன, நல்லாதானே இருக்கா. அதுவும் நிறைய விஷயங்களை காலம் தானாவே மறக்க செய்யும். நானும் மேகா கூட இப்போ சகஜமா பேசத்தான் செய்றேன். அப்றமென்ன?” என்று கேட்டுக்கொண்டே ராகவனின் அருகில் அமர, “அவ இன்னும் உன்னை காதலிக்கிறா ரிஷ் கண்ணா.” என்றார் மனோகர் தயக்கமாக.
அதில் அவரை உணர்ச்சியற்ற ஒரு பார்வை பார்த்தவர், “நீங்களுமா மாமா, நடந்ததை நேர்ல பார்த்தவரு நீங்க. நீங்களே இப்படி…” என்றுவிட்டு விரக்தியாக ரிஷி புன்னகைக்க, “உன்னால எப்போவும் மேகாவ வெறுக்க முடியாது.” என்றார் அவர் உறுதியாக.
ரிஷி எதுவும் பேசவில்லை.
“நான் இப்போ வரைக்கும் உன் நல்லதுக்காகதான் ரிஷ் யோசிக்கிறேன். சுந்தருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் என்னைக்கும் மீறல. இப்போவும் அப்படிதான் ரிஷ். என் பொண்ணு என்றதுக்காக மட்டுமில்ல, அவ ரொம்ப நல்லவ. அமுதாவோட பேச்சை கேட்டு ஒரு தப்பு பண்ணிட்டா, ஆனா அந்த வாழ்க்கையிலிருந்து உனக்காகதான் விலகினா. நிஜமாவே அவ உன்னை ரொம்ப லவ் பண்றா ரிஷ். அவள விட யாரும் உனக்கு பொருத்தமானவங்க கிடையாது.” என்று மனோகர் சொல்லி ராகவனை பார்க்க, அவரோ ரிஷியைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.
ரிஷியின் முகம் இறுகிப் போயிருந்தது. “இதெல்லாம் நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா மாமா, என்னோட மனநிலைய நீங்க யோசிக்கவே இல்லையா?” என்று அவன் உணர்ச்சியற்ற குரலில் கேட்க,
“யோசிச்சுதான் பேசுறேன். அதிகமா உன் கூட பேசலன்னாலும் உன்னை நான் கவனிக்காம இல்லை. ஐ நோ எவ்ரிதிங். பட், மேக்னா உனக்கு ரொம்ப பொருத்தமானவ. நீயும் காதலிச்சிருக்க.” என்று சொன்னவர், “உன் அப்பாவோட ஆசை, அவர் மகன் எனக்கு மருமகனாகணும்னு. எப்போவும் என்னோட பேச்சை நீ தட்டினது கிடையாது. இதுவரைக்கும் நானும் எனக்காக எதுவும் கேட்டதில்லை. மொதல் தடவை எனக்காக கேக்குறேன், மேகாவ கல்யாணம் பண்றியா ரிஷ்?” என்று கேட்டார் விழிகளில் ஆர்வத்தோடு.
ரிஷிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதுவரை மனோகரின் பேச்சை அவன் தட்டியதே இல்லை. அன்று விபத்து நடந்த சமயம் கூட மனோகர் சொன்ன ஒரே வார்த்தைக்காகதான் பெங்ளூருக்குச் சென்றான்.
ஆனால், இன்று?
இதயம் படபடக்க, அடுத்து யோசிக்க கூட முடியாமல் சிறிதுநேரம் அமர்ந்திருந்தவனை, “ரிஷ்…” என்று உலுக்கினார் அவர்.
“ஆங்…” என்று தூக்கத்திலிருந்து விழிப்பது போல் விழித்தவன், அவரின் பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து, “உங்…உங்க விருப்பம் மாமா.” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்திருக்க, மனோகருக்கோ சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
போகும் ரிஷியை பார்த்தவாறு வேகமாக அவர் மேகாவுக்கு அழைக்கப் போக, “விருப்பமில்லாத கல்யாணம் இரண்டு பேரோட வாழ்க்கையையும் அழிச்சிராதா மிஸ்டர்?” என்று ராகவன் கேட்டதும், “விரும்பி கல்யாணம் பண்ணவங்க மட்டும் என்ன காலம் முழுக்க சேர்ந்து வாழுறாங்களா என்ன?” பதிலுக்கு உள்ளர்த்தத்தோடு கேள்வியைக் கேட்ட மனோகர், “இரண்டு பேருமே ஒரு காலத்துல ஒருத்தர ஒருத்தர் காதலிச்சிருக்காங்க. கண்டிப்பா கல்யாணத்துக்கப்றம் சரியாகும்.” என்றார் உறுதியாக.
ராகவன் பதிலுக்கு எதுவும் பேசவில்லை. மனோகரும் மேகாவுக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல, ஒருபக்கம் ஆச்சரியம் இன்னொரு பக்கம் கூடவே சந்தேகமும் அவளுக்குள் உதித்தது.