தொலைந்தேன் Final 💜

eiVIVT819175

தொலைந்தேன் Final 💜

ரிஷி மற்றும் மேக்னாவுக்கான நிச்சயதார்த்தம் நடைப்பெறவிருக்கும் நாள்,

இரு பிரபலங்களுக்கு நிச்சயதார்த்தமென்றால் சாதாரணமா என்ன? அந்த நகரத்தின் மத்தியிலிருக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவர்களின் நிச்சயதார்த்தம்.

நேரம் நெருங்க நெருங்க முக்கிய பிரமுகர்கள், தொழில்துறை நண்பர்கள் என எல்லோரும் வருகை தர, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தன் தனிப்பட்ட மேக்கப் ஆர்டிஸ்டின் உதவியுடன் அலங்காரத்தை முடித்து அந்த பிரம்மாண்ட கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேக்னா.

அவள் கண்ணாடியில் தேவதையாகத் தெரியும் தன் விம்பத்தை ரசிக்கவில்லை . அவளுடைய புருவங்கள் சுருங்கி ஏதோ சிந்தனையிலிருப்பதை உணர்த்திக்கொண்டே இருந்தன.

சரியாக, “மேகாம்மா…” என்று அழைத்துக்கொண்டு வந்த அமுதாவோ, தன் மகளை மேலிருந்து கீழ் விழிவிரித்துப் பார்த்து, “வாவ்! யூ லுக் கோர்ஜியஸ் மேகா” என்றார் வாயைப் பிளந்துக்கொண்டு.

ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய புன்னகை புரிந்தவள், “இஸ் எவ்ரிதிங் ஓகே?” என்று கேட்க, “எல்லாம் நல்லாதான் போயிக்கிட்டு இருக்கு. உங்க அப்பா வாழ்க்கையில பண்ண ஒரே நல்லது ரிஷிய சம்மதிக்க வச்சதுதான். இல்லைன்னா…” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், “ஆறு வருஷத்துக்கு முன்னாடி நீங்க குறுக்க வரலன்னா இது தேவையே இருந்திருக்காது” என்றாள் மேகா குத்தலாக.

அதில் ஒருகணம் அதிர்ந்து பின் சலிப்பாக உதட்டைச் சுழித்தவர், “நா..நான் அப்போ உன் நல்லதுக்காகதான் பண்ணேன். நீ மட்டும் அன்னைக்கு என் பேச்சை கேட்டு ரிஷிய விடலன்னா அவன் இவ்வளவு பெரிய ஆளாகியிருக்க முடியுமா என்ன? சொல்லப்போனா எல்லாம் உன்னாலதான் மேகா. அவன் இப்போ நல்லாயிருக்க காரணமே நீதான்” என்று பெருமையாகச் சொல்ல, மேக்னாவுக்கு சிரிப்புதான் வந்தது.

இருபக்கமும் தலையாட்டி சிரித்துக்கொண்டவள், அறையிலிருந்து வெளியேறி ஹோட்டலில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

தனிப்பட்ட பூக்களின் அலங்காரமே மனோகரும் அமுதாவும் தங்களின் ஒரே மகளின் நிச்சயதார்த்தத்திற்காக பணத்தை வாரி இறைத்திருப்பதை பறைசாட்டின. அதை சலிப்பாக சிறிதுநேரம் பார்த்திருந்தவள், அடுத்து சென்று நின்றது என்னவோ ரிஷியின் அறைக்குதான்.

அதேநேரம் அப்போதுதான் தயாராகி  அறையிலிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் தன்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி. பட்டர் நிறத்தில் ஆண்கள் அணியும் குர்தா அணிந்து லேசாக வளர்ந்த தாடியுடன் முகத்தில் மருந்துக்குப் சிரிப்பில்லாமல் இறுகிப்போயிருந்தான் அவன்.

அவனுக்குள் சனாவின் நினைவுகளே. அவளின் முறைப்பு, அவளின் சிரிப்பு, சேட்டை செய்யும் அவளின் குறும்புக் கண்கள், அவளின் அடாவடிகள் என ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவளுடன் கலந்த நினைவும் வர, விழிகளை மூடி கை முஷ்டியை இறுக்கி உணர்வுகளை அடக்க முயன்றான்.

ஆனாலும், அவளுடைய நினைவுகள் அவனை விட்டு விலகியபாடில்லை. கூடவே, அன்று கடைசியாக அவளை சந்தித்த போது அவள் சொன்ன வாழ்த்தும் ஞாபகத்திற்கு வந்து அவனின் கோபத்தைத் தூண்ட, “இடியட்!” என்று பற்களைக் கடித்துக்கொண்டவன், ட்ரெஸ்ஸிங் டேபிளிலிருந்த பூச்சாடியை சுவற்றில் விட்டெறிந்தான்.

அத்தனை கோபம் அவள்மேல்!

அது சுக்கு நூறாக வெடித்துச் சிதற, அறையிலிருந்த சோஃபாவில் நெற்றியை தாங்கியவாறு தொப்பென்று அமர்ந்துக்கொண்டவன், “ஓ காட்! இதுக்கான செலவு உன் அகௌன்ட்லதான் ரிஷ்” என்ற மேக்னாவின் குரலில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்.

அங்கு வாசல் கதவு நிலையில் சாய்ந்தவாறு மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு உடைந்திருந்த பூச்சாடியை விழிகளால் காட்டியவள், கொடுப்புக்குள் சிரிக்க, அவனோ ‘ச்சே!’ என்று சலிப்பாக விழிகளை உருட்டி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“ஓஹோ! ஒருவேள சார் இன்னைக்கு என் கூட நிச்சயதார்த்தத்துக்கு ரெடியா இருக்கீங்க போல! ம்ம்… மாப்பிள்ளை ரெடின்னா பொண்ணு ரெடிதான்” என்று அவள் கேலி தவழச் சொன்னதும்,  “அடிங்க…” என்று எழுந்தவன், அவள் பார்வையிலும் குரலிலுமிருந்த கேலியை உணர்ந்து சிரிக்க, அவளும் அவனோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இருவரின் இதழ்கள் புன்னகையில் மிதக்க, நினைவுகள் மனோகர் வந்து பேசிச் சென்றதும் நடந்த சம்பவத்தை மீட்டின.

மனோகரிடம் ரிஷி திருமணத்திற்கு சம்மதம் சொன்ன செய்தியை அறிந்தவளுக்கு கடலளவு சந்தேகம். அவ்வளவு இலகுவாக தன் காதலை விட்டுக்கொடுப்பவனில்லை ரிஷி. அப்படியிருக்கையில் இது எப்படி சாத்தியம்?

அதனாலேயே தந்தை சொன்னதுமே சந்தேகத்தில் ரிஷிக்கு அழைத்துப் பேசினாள். அந்தநொடியே அவனுக்குள் ஏதோ திட்டமிருப்பதை உணர்ந்துக்கொண்டவள், அப்போதே ரிஷியை தேடி ராகவனின் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தாள்.

மேக்னாவின் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்கள் கழிந்த நிலையில் அறையின் உள் தொலைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

‘ச்சே!’ என சலித்தவாறு சென்று அதையேற்றவன், “வெயிட்டிங் அவுட்சைட்” என்ற மேக்னாவின் குரலில் குழப்பத்தோடு புருவங்களை நெறித்தான். கூடவே, இன்னொரு யோசனையும் தோன்றியது.

அதே திட்டத்தோடு கதவைத் திறந்தவன், உள்ளே வந்தவளை கண்டுக்கொள்ளாதது போல் பால்கனியில் சென்று நிற்க,

“அச்சோ பாவம் ரிஷ் நீ! உன்னை சுத்தி எல்லாமே தப்பு தப்பாவே நடக்குதுல்ல, வாட் டு டூ? எனிவேய், உன் சாணிக்கிட்ட உனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன, சும்மா சொல்லு!” என்று நக்கல் சிரிப்போடுக் கேட்டு மேக்னா அவனைக் கூர்ந்து நோக்க, அவளை உக்கிரமாகப் பார்த்து, “என்ன நக்கலா, ஒழுங்கா போயிடு!” என்றான் ரிஷி பற்களைக் கடித்துக்கொண்டு.

மேக்னாவோ அவனின் கோபத்தில் கொஞ்சமும் அசரவில்லை. வாயைப் பொத்திச் சிரித்தவாறு, “ஓகே சாரி சாரி! பட் என்னன்னா, எனக்கொரு டவுட்டு. அந்த அம்மணி உன்னை ரொம்ப லவ் பண்றா போல, ஆனா ரொம்ப ஈகோ. கோட் சேஃப், நான் உன்னை காப்பாத்திட்டேன். டோன்ட் வொர்ரி ரிஷ், உன்னை கண்கலங்காம நான் பார்த்துப்பேன்” என்று கேலியாகச் சொல்ல, “ஷீ இஸ் பெட்டர் தென் யூ மேகா” என்றான் ரிஷி பதிலுக்கு கேலிக் குரலில்.

“ஓஹோ! சாருக்கு அம்புட்டு லவ்வோ?” ஒற்றைப் புருவத்தைக் தூக்கி தமாஷாகச் சொன்னவள், “யூ நோ வாட் ரிஷ், ஆரம்பத்துல நாம இரண்டு பேரும் ரொம்ப லவ் பண்ணோம். அப்றம் நீ மட்டும் காதலிச்ச. அதுக்கப்றம் நான் மட்டும் காதலிச்சேன். ஆனா கல்யாணத்துக்கு மட்டும் வாய்ப்பே இருக்கல்ல. இப்போ இரண்டு பேருக்கும் காதலில்லை. ஆனா, இன்னைக்கு நமக்கு நிச்சயதார்த்தம். என்ன வாழ்க்கைடா இது!” என்றுவிட்டு கத்திச் சிரிக்க, “மேகா!” என்று விழிகள் தெறிக்க அதிர்ந்து அவளைப் பார்த்தான் ரிஷ்.

“அவக்கிட்டதான் உன் சந்தோஷம் இருக்கு ரிஷ், சனாக்கிட்ட போயிடு!” என்று அவள் வார்த்தைகளில் உறுதியோடு சொல்ல, ரிஷியோ “மேகா!” என்று அவள் சொன்னதன் அர்த்தம் பாதி புரிந்தும் புரியாமல் திகைத்துப்போய் அவளை அழைத்தான்.

அவனை நேருக்கு நேராகப் பார்த்து, “அவ உன்னை விட்டுட்டு போன சமயமே உனக்கு அவமேல உனக்கிருக்குற காதல் புரிஞ்சிடுச்சு. வற்புறுத்தி உன்னை கல்யாணம் பண்ற ஆசை எனக்கு எப்போவோ போயிருச்சு. உன்னையும் அவளையும் சேர்த்து வைக்க நான் ஒரு திட்டத்தை போட்டு ஒன்னு யோசிச்சா நீ வேற திட்டத்தோட என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லியிருக்க.” அர்த்தம் பொதிந்த பார்வை சிந்தினாள் மேக்னா, மெல்லிய புன்னகையோடு.

ஒருகணம் ‘மேகாவா இது?’ என்று அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தன் திட்டத்தை அறிந்ததில் சிலையாக உறைந்தேவிட்டான்.

‘உன்னை நான் அறிவேன்’ என்ற ரீதியில் கர்வமாகச் சிரித்தவள், “ஐ நோ வெல் அபௌட் யூ ரிஷ், காரணம் இல்லாம சம்மதம் சொல்லியிருக்க மாட்ட. என்னன்னு சொல்லு!” என்று மேக்னா அவனின் திட்டத்தை மோப்பம் பிடித்தது போல் கேட்டதும், அவன் முகமோ இத்தனை நேரமிருந்த அதிர்ச்சி மறைந்து வெற்றிப் புன்னகை புரிந்தது.

“மிஸஸ். அமுதா மனோகர்” என்று சொன்னவாறு அவன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஊத, அவளோ காரணம் புரிந்தது போல், “ஹாஹாஹா…” என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அமுதா செய்த காரியமென்ன கொஞ்சநஞ்சமா? அதுவும் ரிஷி அவர்களுடன் இருந்த போதே எத்தனை கொடிய வார்த்தைகள் கொண்டு அவனை காயப்படுத்தியிருக்கிறார் என்பதையும் அவளையே ரிஷிக்கு எதிராக அவர் தூண்டியதையும் அவள் மறக்கவே மாட்டாள்.

கௌரவம் பேசும் தன் அம்மாவிற்கு இது தண்டனை தேவையென்றே அவளுக்கு தோன்ற தடுக்க மனம் வரவில்லை. கூடவே, அவள் அவனுக்கு செய்த துரோகத்திற்கும்  பிரயாச்சித்தம் செய்ய சொல்லி மனம் கூவ, இதழை வளைத்துச் சிரித்து, “வாட்எவர்!” என்றாள் அலட்சியமாகத் தோளைக் குலுக்கி.

நடந்ததை நினைத்துப் பார்த்து,  “ஏதோ எங்க அம்மாவ பழிவாங்குற உன் சின்ன ஆசைய நான் ஏன் கெடுக்கனும்னுதான் அன்னைக்கே இதை நிறுத்தாம உனக்காக இவ்வளவு தூரம் வந்தேன். இதுக்கு மேல என் கண்ணு முன்னாடி நிக்காத! ரொம்பநேரம் இவங்க பரம்பரை ப்ளடி ஜூவர்ல்ஸ்ஸ போட்டுட்டு என்னால நிக்க முடியல” என்று மேக்னா முகத்தைச் சுழிக்க, “உன்கிட்ட மாறாத ஆட்டிடியூட்” என்றான் ரிஷி பாக்கெட்டுக்குள் ஸ்டைலாக கைவிட்டபடி.

சரியாக, “ரிஷ்…” என்று உள்ளே வந்த மனோகர், அங்கு மேக்னா நின்றிருப்பதைப் பார்த்து, “மேகாம்மா, நீ இங்க என்ன பண்ற?” என்று அதிர்ந்துக் கேட்டு, “ரிஷ் கண்ணா, ரெடியா?” என்று கேட்டவாறு அவனை மேலிருந்து கீழ் பார்த்தார்.

அவனோ மேக்னாவையே அதிர்ந்துப் பார்த்திருக்க, “இங்க என்ன நடக்குது? அங்க எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள நிச்சயதார்த்த பத்திரிகைய வாசிக்கணும். இரண்டு பேரும் இங்க நின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருக்கீங்க.” என்று சற்று கோபத்தோடு மனோகர் சொல்ல, தொண்டையை செறுமிக்கொண்டு, “ரிஷ், வர மாட்டான்ப்பா” என்றாள் மேக்னா அமைதியாக.

கேள்வியாக புருவத்தை நெறித்து, “வரமாட்டானா, ஏன் என்னாச்சு?” என்று கேட்ட மனோகர், “ரிஷ் கண்ணா!” என்று அவனை அழைத்து  கூர்ந்து நோக்க, அவன் பதில் சொல்வதற்கு முன், “எனக்கும் ரிஷிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போறதில்லை. அவன் சனாக்கிட்டயே போகட்டும்ப்பா, அவக்கிட்டதான் அவனோட ஹெப்பினெஸ் இருக்கு.” என்று மேக்னா குறுக்கிட்டுச் சொல்ல, அதிர்ந்துவிட்டார் அவர்.

அதேநேரம் ரிஷியை தேடி வந்திருந்த ராகவனும் மேக்னா சொல்வதைக் கேட்டு விக்கித்துப்போய் வாசலிலே நின்றுவிட்டார்.

“என்..என்ன சொல்றம்மா, என்ன விளையாடுறியா?” என்று பதறியபடிக் கேட்டவர், “ரிஷ், இது உன் வேலைதானா, நீதான் இப்படி…” என்று கேட்டு முடிக்கவில்லை,

“இப்போ வரைக்கும் ரிஷி இதை நிறுத்த சொல்லி ஒருவார்த்தை கூட பேசல. உங்க பேச்சை மீற கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கான். பட், அவன் அவளதான் ரொம்ப லவ் பண்றான்.” என்றாள் அவள் கலங்கிய விழிகளோடு.

மனோருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முயன்று வார்த்தைகளைக் கோர்த்து, “நீ ரிஷிய ரொம்ப லவ் பண்றியேடா, அப்படி இருக்குறப்போ…” என்று நிறுத்த,

வலி நிறைந்த புன்னகையுடன், “அதனாலதான் அவன் சந்தோஷத்துக்காக அவன போக சொல்றேன். அவன நான் எந்தளவு காதலிச்சேனோ, அதே அளவு வலியையும் கொடுத்திருக்கேன். நான் பண்ண தப்புக்கு பிரயாச்சித்தமா இதை விட்டா வேற எதுவும் எனக்கு தோனல. நாம காலிக்கிறவங்களோட சந்தோஷத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம்” என்று அவள் பேசிக்கொண்டுப் போக, கலங்கிய விழிகளோடு மேகாவை பார்த்தான் ரிஷி.

இதற்குமேல் செய்வதற்கில்லை என்று நினைத்தாரோ, என்னவோ! மெல்லிய புன்னகையோடு அவள் தலையை வருடி, “நிஜமாவே மொதல் தடவை உன்னை நினைச்சு பெருமைப்படுறேன் மேகாம்மா” என்றுவிட்டு, “நல்லாயிரு கண்ணா!” என்று ரிஷியைப் பார்த்து சொன்னவர், அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறியிருக்க, இப்போது மேக்னாவின் பார்வை ரிஷியின் மீது சலிப்பாக படிந்தது.

“அவர் பொண்டாட்டிய பழிவாங்கதான் இவ்வளவும்னு அவர்கிட்டயே சொல்ல முடியாதுல்ல, என்ட், அப்பாவும் சுயநலமா நிறையவே யோசிச்சிருக்காரு. அவர் பண்ணதுக்கு நான் சாரி கேக்குறேன்.” என்று எமோஷனலாக சிலகணங்கள் பேசியவள் சட்டென முகபாவத்தை மாற்றி, “சரி… இன்னும் எதுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க? என் மனசு மாறுறதுக்குள்ள இங்கயிருந்து போயிடு!” என்று விழிகளை உருட்டிச் சொல்ல, சிரிப்போடு வேகமாக வந்து மேக்னாவை தாவி அணைத்துக்கொண்டான் அவன்.

“உன்னைப்போய் சீரியல் வில்லிங்க ரேன்ஞ்சுக்கு நினைச்சிட்டேனே, யூ ஆர்  சோ ஸ்வீட். தேங்க் யூ! தேங்க் யூ சோ மச் மேகா!” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தத்தை பதித்துவிட்டு வெளியேறப் போனவன், அவளின் முகம் ஏதோ ஒரு கேள்வியை தாங்கியிருப்பதை உணர்ந்து மெல்லிய புன்னகை புரிந்தான்.

அவளுடைய கேள்வியையும் அவன் அறிவான். அந்த கேள்விக்கான பதில் எந்தளவு அவள் மனதிற்கு தேவையென்றும் அறிவான்.

மெல்ல அணைத்து, “என்னைக்கும் உன்னை அவமானப்டுத்த யோசிக்கல மேகா, அன்னைக்கு மாமா கேட்டதும் அத்தைய பழிவாங்க சம்மதிச்சேன். ஆனா, உன்னை இதுலயிருந்து எப்படி காப்பாத்தலாம்னு பல தடவை யோசிச்சேன். நானே உன்கிட்ட பேசலாம்னு முடிவு செஞ்சப்போதான் நீயா வந்த.” மெல்லிய குரலில் பேசி அவள் முகத்தை நோக்கியவன், அவளிள் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவாறே முகத்தில் உரசிக்கொண்டிருந்த ஒற்றை முடியை காதோரம் ஒதுக்கிவிட்டான்.

“உன்னை ரொம்ப காதலிச்சவன் நான். உனக்கு கலங்கம் வர எப்போவும் நினைக்க மாட்டேன்” அவனின் வார்த்தைகளிவ் அத்தனை அழுத்தம்.

அவனின் வார்த்தைகளில் அதிர்ந்துப்போய் மேக்னா ரிஷியை பார்த்துக்கொண்டிருக்க, வேகமா வெளியேறியவன், வாசலில் ராகவன் நின்றிருப்பதைப் பார்த்து, “அங்கிள்…” என்று ஏதோ சொல்ல வர, அவனை குறுக்கிட்டார் அவர்.

“எதுவும் பேசாத ரிஷ்! நானே மேகாக்கிட்ட பேசலாம்னு இருந்தேன். ஆனா, அவளே புரிஞ்சிக்கிட்டா.” என்று சிரித்தவாறு சொன்னவர், திரும்பி நின்று “ரிஷி, பொண்ணுங்க நெருப்பு மாதிரிடா. எப்போ நம்மள எரிக்கலாம்னு பார்த்துட்டே இருப்பாங்க. இப்போ போய் நீ பேசினாலும் ரொம்ப பிகு பண்ணுவா! நீதான் புரிஞ்சு அடங்கி…” என்று அறிவுரை போல் பேசிக்கொண்டே மீண்டும் அவன்புறம் திரும்ப, அங்கு ரிஷி இருந்தால்தானே!

அவன்தான் எப்போவோ அங்கிருந்து ஓடிவிட்டிருந்தானே!

அதேநேரம் ஹோட்டலில் மேக்னாவையும் ரிஷியையும் எதிர்ப்பார்த்து தொழில்துறை நண்பர்கள் பலர் ஹோலில் காத்திருக்க, தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நடுவே ரிஷி வாசலை நோக்கி ஓடினான்.

சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென்று பேசி ரிஷியை பார்த்திருந்தார்கள் என்றால், தன் வூமன் க்ளப் தோழியொருத்தியோடு பெருமை பேசியவாறு நின்றிருந்த அமுதா, எதிர்ச்சையாக ரிஷியை கவனித்து, “ரிஷ்…” என்று கத்தினார் சத்தமாக.

அவரை திரும்பிப் பார்த்தவன் பெருவிரலை தலைகீழாகக் காட்டி ஏளனமாகச் சிரித்துவிட்டு வெளியேற, அவனை புரியாது பார்த்திருந்தவருக்கு பக்கத்தில் மனோகர் வந்து விடயத்தைச் சொன்னதும்தான் அத்தனையும் புரிந்தது.

தலை கிறுகிறுவென சுத்த, அப்படியே தன் கணவரின் மேல் சாய்ந்துக்கொண்டார் அவர். ரிஷியின் திட்டமே அதுதானே!

சனாவை என்றும் விட்டுக்கொடுக்கும் நிலையிலில்லை அவன். அவளே வேண்டாமென்றாலும் அவன் அவளை விடப் போறதுமில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்து தனக்கு பிரச்சினையாக இருந்த அமுதாவுக்கு பதிலடி கொடுக்க எண்ணியே திருமணத்துக்கு சம்மதித்தவன், பிறகே மேக்னாவை பற்றி யோசித்தான்.

இதில் மனோகரை அவன் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. ஒருதடவை கடந்த காலத்தில் அவர் பேச்சைக் கேட்டு சுயநலமாக முடிவு எடுத்தவன், மீண்டும் அதே தவறை செய்வானா என்ன?

அமுதாவை அவமானப்படுத்த தான் செய்யப் போகும் காரியத்தில் மேக்னா பலியாகிவிடக் கூடாதென்று எண்ணியே என்ன செய்வதென்று தெரியாது தடுமாறிக்கொண்டிருந்தவனுக்கு வரமாக வந்து நின்றாள் மேக்னா.

அத்தனையும் சாதகமாக போக, பேயறைந்து போயிருக்கும் அமுதாவின் முகத்தில் திருப்திக்கொண்டு வெற்றிப் புன்னகை புரிந்தவாறு அவன் காரில் ஏறி பறக்க, செல்லும் தன் பழைய காதலனை விழிகளுக்கு எட்டாத புன்னகையுடன் பால்கனியில் நின்றவாறு பார்த்திருந்தாள் மேக்னா.

ரிஷி தன்னவளை தேடிச் செல்லும் அதேசமயம்,

ரிஷிக்கும் மேக்னாவுக்கும் நிச்சயதார்த்தமென வலைத்தளங்களிவ் பரவலாக இருக்கும் செய்தியை பார்த்த சனா, அலைப்பேசியை அணைத்துவிட்டு தன் ரயிலுக்காகக் காத்திருந்தாள்.

மும்பைக்கு செல்வதற்கான ரயில் அது. இங்கிருந்தால் தன்னவனின் நினைவுகளில் தவிக்க நேரிடும் என்பதை உணர்ந்தே சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் ஒரு புகைப்படமெடுக்கும் கம்பனியில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள்.

இப்போது அந்த கம்பனியில் அழைத்திருக்வும் உடனே கிளம்பிவிட்டாள். சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மூச்சடைப்பது போலிருந்தது.

சில நிமிடங்களில் அவளெதிரே அவள் ஏற வேண்டிய ரயிலும் பெரிய சத்தத்தோடும் புகையோடும் வந்து நிற்க, அவளுடைய மனம் இன்று காலை தன் தந்தை பேசியதை ஞாபகப்படுத்தியது.

வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சிராதும்மா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. ஒரு அப்பாவா உன்னை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. எங்க உன் சுதந்திரம் போயிருமோன்னு அந்த பையன வேணாங்குற. வாழ்க்கையில ஒன்னை இழந்தாதான் ஒன்னு கிடைக்கும். அவன இழந்துட்டு உனக்கு கிடைக்குற இந்த வாழ்க்கையில சந்தோஷம் இருக்கும்னு நினைக்கிறியா? கண்டிப்பா இல்லை. உன் மனசுக்கு என்ன தோனுதோ அதை பண்ணுடா!”

காலையில் வெளியேற தயாராகிக்கொண்டிருந்த சனாவிடம் சொல்லிவிட்டுச் சென்றார் ராஜலிங்கம்.

அவரின் வார்த்தைகள் சிந்தனையில் ஓட, தரையை வெறித்துக்கொண்டிருந்தவள், இறுதி அறிவிப்பு காதில் விழுந்த கணம் தன் உடைப்பெட்டியை தூக்கிக்கொண்டு ரயிலை நோக்கிச் சென்றாள்.

அடுத்த ஒருமணி நேரம் கழித்து,

சட்டென அடித்து பெய்தது மழை. தன் ஏரியாவின் முன் ஆட்டோவில் வந்து இறங்கிய சனா, ஓட்டுனருக்கான காசைக் கொடுத்துவிட்டு தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.

அவள் என்ன செய்கிறாளென்று அவளுக்கே தெரியவில்லை.

வீட்டை நெருங்கியதும் கிட்டதட்ட முழுதாக நனைந்த நிலையில் வேமாகப் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவள், அத்தனை ஜன்னல்களையும் அடைத்ததில் வீடு இருட்டிப்போய் இருப்பதை உணர்ந்து விளக்கை ஒளிரவிட்டாள்.

அடுத்தநிமிடம் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு விழிகளை மூடி தலையை பின்னால் சய்த்தவாறு கதிரையில் அமர்ந்திருந்த ரிஷியை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

சிலகணங்கள் அந்த இடத்திலிருந்து அசைய முடியவில்லை அவளால். அதிர்ச்சி, சந்தோஷம், தயக்கம், சங்கடமென பல உணர்வுகள் அடுத்தடுத்து போட்டிப் போட்டுக்கொண்டு அவளுக்குள் தோன்ற, அவளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

கூடவே, சிரிப்பு வேறு.

முயன்று அடக்கிக்கொண்டவள், தன் உடைப்பெட்டிகளை ஓரமாக வைத்து, தன்னை சுத்தப்படுத்தி உடை மாற்றிவிட்டு பொறுமையாக அவன் முன் வந்து நின்றாள்.

அப்போதும் ரிஷியிடத்தில் எந்த அசைவும் இல்லை. “ஹ்ர்ம் ஹ்ர்ம்… நிச்சயதார்த்தம் எல்லாம் நல்லபடியா நடந்துச்சா, வருங்கால பொண்டாட்டிய விட்டுட்டு இந்த ஓட்டு வீட்டுல என்ன பண்ற?” அடக்கப்பட்டச் சிரிப்போடுக் கேட்டு அவன் மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்ததும் பாவமாக சனா முகத்தை வைக்க, அவளின் விழிகளிலிருந்த குறும்பை அறிந்துக்கொண்டான் ரிஷி.

அவள் மீது தீப்பார்வையை பதித்தவன், மெல்ல எழுந்து அவளெதிரே வந்து நிற்க, அவளோ தன் அலைப்பாயும் விழிகளை மறைக்க மெல்ல நகரப் போனாள்.

ஆனால், அடுத்தநொடி அவளுடைய வலது கன்னம் சிவப்பேறி எரிந்தது. காரணம், ரிஷியின் கைத்தடம் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது.

விரிந்த விழிகளோடு அதிர்ந்துப்போய் கன்னத்தைப் பொத்திக்கொண்டவள், “ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன்” என்று பாவமாக முகத்தை வைக்க, அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன், “சரியான அரக்கிடீ நீ!” என்றான் சிரிப்போடு.

சனாவுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. யாரை கானல்நீரென்று நினைத்தாளோ இப்போது அவன் அவளின் கைவளைவுகளுக்குள். அழுதுக்கொண்டே தன்னவனை அவள் இறுக அணைத்துக்கொள்ள, காற்று கூட புக முடியாத அளவுக்கு தன்னவளை தனக்குள் புதைத்துக்கொண்டான் ரிஷி.

“இது உண்மைதானே வேது, நீ.. நீ வந்துட்டல்ல, என்னால நம்பவே முடியல தெரியுமா? ஆனா, எனக்கு தெரியும், உன்னால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு. எங்க உன்னை இழந்துடுவேனோன்னு பயமா இருந்துச்சுடா” என்று சனா அழுதுக்கொண்டே படபடவென பேச, அவளின் நெற்றி, கன்னம், நாடி, கண்கள் என மாறி மாறி வேகமாக அழுந்த முத்தத்தைப் பதித்தவன், அவளின் இடையைக் கட்டிக்கொண்டு அவள் நெற்றியோடு நெற்றி முட்டி “இத்தனை காதல வச்சிக்கிட்டா என்னை ஒருவழிப்பண்ண. நிஜமாவே நீ சரியான இம்சைடீ.” என்றான் காதலாக.

அதில் உதட்டைச் சுழித்து முறைத்து “இம்சையா? அப்போ உன் பழைய காதலியையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே!” என்று போலிக் கோபத்தோடுச் சொன்னவள், “ம்ம்… அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. பண்ணிக்கிட்டா போச்சு.” என்று ரிஷி கொடுப்புக்குள் சிரித்தவாறுச் சொன்னதும், மேலமூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு அவனை கனல் கக்கும் பார்வைப் பார்த்தாள்.

மார்பில் கை வைத்து அவனை தள்ளிவிட்டு, “எவ்வளவு தைரியம்டா உனக்கு, என்னை விட்டு அவள கல்யாணம் பண்ணுவேன்னு சொல்ற, நான் ஏதோ பேச்சுக்கு சொன்னா நீயும் ஆமாசாமி போடுவியா! கொன்னுடுவேன் உன்னை!” என்று கத்திக்கொண்டு மாறி மாறி அடிக்க ஆரம்பிக்க, “ஏய் அரக்கி விடுடீ! விடுடீ என்னை!” என்று சிரித்துக்கொண்டு தன்னவளின் அடிகளை தாங்கிக்கொண்டவன், அவளின் இரு கைகளை தன் ஒரு கையால் அடக்கி “ஷ்ஷ்…” என்றான் அவள் உதட்டின்மேல் விரலை வைத்து.

அவளும் விழி விரித்து சட்டென அமைதியாக, “லவ் யூ ஸ்வீட்ஹார்ட், நீ எனக்கு வேணும். என் வாழ்நாள் முழுசும் எனக்கு வேணும்.” என்றான்  ரிஷி ஹஸ்கி குரலில் அத்தனை காதலை வார்த்தைகளில் தேக்கிக்கொண்டு.

அதில் சனாவின் விழிகள் சட்டென கலங்க, தன் உதட்டின் மேல் வைத்திருந்த தன்னவனின் விரலை எடுத்தவள், “லவ் யூ வேது!” என்று முதல்தடவை தன் வார்த்தைகளால் காதலை சொல்லி, தன் மென்னிதழால் அவனின் வன்மையான இதழை சிறைப்பிடிக்க, முதல்தடவை கேட்ட அவளின் காதல் வார்த்தைகளில் உடல் சிலிர்த்துப்போனான் ரிஷி வேதாந்த்.

சிறிய இடைவெளியில் மூச்சுக்காக அவள் விலகப் போக, இப்போது அவளை விலக விடாது அவளிதழை பிடித்துக்கொண்டான் அவன். நீண்ட நெடிய முத்தம்.

ஒருகட்டத்தில் முடியாமல் வலுக்கட்டாயமாக அவனிதழிலிருந்து தன்னிதழை பிரித்தெடுத்தவள், “மூச்சு விட டைம் கொடுடா!” என்று பாவமாகச் சொல்ல, வாய்விட்டுச் சிரித்தவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா சாணி?” என்றான் சட்டென்று.

அவனை விழி விரித்துப் பார்த்து பின் விழிகள் மின்ன, “நாளைக்கே பண்ணிப்போம். இல்லை இல்லை இப்போவே!” என்று அழுதுக்கொண்டே சொன்ன சனாவின் முகம் சட்டென சுருங்க, “ஆனா…” என்று ஏதோ சொல்ல வந்து தயக்கமாக இழுத்தாள்.

“ஆனா என்ன?” ரிஷி கேள்வியாக அவளை நோக்க, வேறுபுறம் பார்வையைத் திருப்பிக்கொண்டவள், “எனக்குள்ள உறுத்திக்கிட்டு இருக்குற ஒன்னு. நான் உனக்கு பொருத்தமானவதானான்னு…” என்று மேலும் சொல்ல வந்து ரிஷி பார்த்த பார்வையில் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

பாவமாக சனா முகத்தை வைத்திருக்க, “உன்னை விட பொருத்தமானவ எனக்கு யாருமில்லை ஸ்வீட்ஹார்ட்” என்று காதலாகச் சொன்னவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட, சரியாக சனாவுக்கொரு அழைப்பு.

அலைப்பேசி அதிர்ந்து ஒலிக்கவும் பேன்ட் பாக்கெட்டிலிருந்த அலைப்பேசியை எடுத்து திரையைப் பார்த்தவள், அதிலிருந்த எண்ணை புருவத்தை சுருக்கிப் பார்த்துவிட்டு அழைப்பையெடுத்து காதில் வைத்து, “சொல்லு இந்து…” என்றாள் யோசனையோடு.

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ! சனாவின் முகம் பல பாவனைகளுக்கு தாவ, ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.

சில நிமிடங்கள் மறுமுனையில் பேசப்பட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க, அலைப்பேசியில் சொன்ன செய்தியால் உண்டான அதிர்ச்சி குறையாது அப்படியே வாயைப் பிளந்துக்கொண்டு அமர்ந்திருந்தவள், “ஏய் சாணி, என்னாச்சுடீ? என்னன்னு சொல்லு!” என்று ரிஷி உலுக்கியதும், விழிகள் கலங்க அவனைப் பார்த்தாள்.

“என்னம்மா?” அவளின் கண்ணீரைப் பார்த்ததும் அவளின் கன்னத்தைத் தாங்கி அவன் மெதுவாகக் கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டு, “அது… அது வந்து… ஒரு ஃபோட்டோங்ராஃபி காம்படீஷனுக்கு போன மாசம் ஒரு ஃபோட்டோ அனுப்பியிருந்தேன். இப்போ நான் வின் பண்ணியிருக்குறதா மெயில் வந்திருக்கு. இது நெசம்தானா?” என்று அதிர்ச்சியோடே அவள் சொல்லி முடிக்க, இப்போது ரிஷியின் விழிகளும் சாரசர் போல் விரிந்தன.

“வாவ்வ்வ்! என்னால நம்பவே முடியல. இது எவ்வளவு பெரிய விஷயம் சாணி. ஹூர்ர்ர்ர்ரே… ஐ அம் சோ ஹேப்பீ. என்னோட ஸ்வீட்ஹார்ட் வின் பண்ணிட்டா. இதுக்கப்றம் மேடமும் செலப்ரிட்டிதான்” என்று துள்ளிக் குதித்து சனாவை தூக்கி ரிஷி தட்டமாலைச் சுற்ற, அவளுக்குதான் தலை சுற்றவே ஆரம்பித்துவிட்டது.

காதலும் கூடிவிட்டது. கனவும் நிறைவேறிவிட்டது. வாழ்க்கையில் முதல்பாதி மொத்தத்தையும் இழந்து நின்றவளுக்கு, இன்று அனைத்தும் கூடிவிட்டது.

இருவருக்கும் அளவு கடந்த சந்தோஷம்.

“லவ் யூ ஸ்வீட்ஹார்ட்… லவ் யூ ஸ்வீட்ஹார்ட்…” என்று ஒவ்வொரு காதல் வார்த்தைக்கும் ரிஷி அவளை முத்தத்தில் மூழ்கடிக்க, தன்னவனின் கைவளைவுக்குள் சிக்கி, விழிகளிலிருந்து விழிநீர் ஓட தன் அம்மாவின் மனக்கண் விம்பத்தை விழிகளோடு சேர்ந்து இதழிலும் புன்னகையை தாங்கிப் பார்த்திருந்தாள் சாணக்கியா.

error: Content is protected !!