தோளொன்று தேளானது (ஈற்றியல்) 26
தோளொன்று தேளானது (ஈற்றியல்) 26
தோளொன்று தேளானது! (ஈற்றியல்) 26
பயணம் துவங்கியது முதல், ஜேப்பியும் ஷ்யாமும் சுமித்ராவைத் தாங்கியதைக் கண்டும் காணாமல் வந்தாலும் மனதிற்குள் வெறுப்பைச் சுமந்தபடி ஜேப்பியின் பெற்றோரும், ஏக்கத்தைச் சுமந்தவாறு கார்த்திக் தம்பதியினரும் வந்தனர்.
கார்த்திக்கிற்கும் மயூரிக்கும் ஜேப்பி சுமியைக் கவனிப்பதைக் கண்டு, தாங்கள் இதுபோன்றதொரு அருமையான வாழ்க்கையை மேற்கொள்ளவில்லையோ எனும் சந்தேகமும், வருத்தமும் ஒருங்கே எழுந்திருந்தது.
ஷ்யாம் சுமியை கருத்தாக பார்த்துக் கொள்வதைக் கண்டு பொறாமை உணர்வு எழ, கார்த்திக்கிற்கு அந்நேரத்தில் தனது மகன் அவன் என்கிற உரிமையுணர்வு தோன்றி, தனக்கு அதற்கான பிராப்தம் இல்லாததை எண்ணி நங்கூரம்போல மனதில் பாய்ந்து வேதனையை உண்டு செய்தது.
ஜேப்பியின் பெற்றோருக்கோ, ‘என்னத்தை புதுசா கண்டுட்டான்னு அவன் தாங்கறது பத்தாதுன்னு, இந்த பொடியனும் அவளை இந்தத் தாங்கு தாங்குது’ பொறுமலோடு இருந்தனர்.
ரூபிணி, சுமித்ராவும் அவர்களோடு திருச்சிக்கு கிளம்பியதைக் கண்டதும், “மாமா ஏற்கனவே நம்ம ஜேப்பியை அங்க சேக்கக்கூடாதுன்னு சொன்னாரே கார்த்தி. இதுல இவளையும் அங்க கூட்டிட்டுப் போனா, அவரோட கோபத்துக்கு நாம ஆளாகற மாதிரியில்ல இருக்கும்!” கார்த்திக்கிடம் கேட்டது, தமையனைக் காண வந்து கொண்டிருந்த ஜேப்பியின் காதில் அட்சரம் பிசகாமல் விழுந்திருந்தது.
ஜேப்பிக்கு தனது தாயின் பேச்சைக் கேட்டு சினமெழுந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாது, “நான் அங்க வரணும்னு பெரியப்பாதான் போன் போட்டு நமுத்தாரு. நான் வரும்போது அவளை வேற எங்க விடச் சொல்றீங்க? அப்டியொரு பயணம் எனக்குத் தேவையுமில்ல! வேண்ணா நீங்களே அவருகிட்ட பேசி அடுத்து என்ன செய்யலாம்னு கேட்டுச் சொல்லுங்க” கடுப்பாக உரைத்தவன்,
“எதுவுமே வேணானுதான் இவ்ளோநாள் இதுக்காகத்தா ஒதுங்கி இருந்தேன். அழையா விருந்தாளியா எங்கேயும் போற எண்ணம் துளிகூட இதுவரை கிடையாது. இப்பவும் அவங்கல்லாம் கூப்பிட்டாங்கனுதான் அங்க வர ஐடியால கிளம்பி வந்தேன்.
ஆனா, நான் அங்க வரணும்னா எம்பொண்டாட்டிய விட்டுட்டு வரமாட்டேன். சீக்கிரம் கேட்டுச் சொல்லுங்க! எனக்கு தலைக்குமேல வேல கிடக்கு” என்றுவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டான்.
ஜேப்பியை தனது மகன் என்கிற நிலையினைத் தவிர, அவனது உழைப்பால் உயர்ந்த நிலையினையோ, அந்த வீட்டின் பெரியவரான சிவபிரகாசத்திற்கு நிகரான என்பதைக் காட்டிலும், அவரைக் காட்டிலும் கூடுதல் மதிப்பும் மரியாதையும் அவனுக்கு சமூகத்தில் இருப்பது நான்கு சுவருக்குள் இருந்த ரூபிணிக்குத் தெரிந்திருக்கவில்லை.
தனது மாமனாரின் வழிகாட்டுதலில்தான் இந்த உயரத்தினை தன் பிள்ளைகள் எட்டியிருப்பதாகவும், நன்றியுணர்வு இல்லாமல் தான்தோன்றித் தனமாக தெரிவதாகவும் எண்ணிக் கொண்டே இவ்வாறு பேசியிருந்தார் ரூபிணி.
முக்கியமாக, மகனை சாமான்யனாகவே எண்ணியதோடு, மாமனாரின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வில் அவ்வாறு பேசியிருந்தார்.
ரூபிணியின் செயல் பேச்சு அனைத்தையும் கேட்ட சுமியும், “என்னால எந்த பிரச்சனையும் உங்க குடும்பத்துல வேணாம் ஜேப்பி. நான் இங்க இருந்துக்கறேன். நீ போயிட்டு வா” என்றிருந்தாள்.
“என்னோட குடும்பங்கிறது என்னோட பெத்தவங்க, நீ, நான், ஷ்யாம், இனி வரக்கூடிய குழந்தைகள்னு நினைச்சிட்டுருந்தேன்டீ. ஆனா அவங்களை நம்ம குடும்பத்துக்குள்ள சேத்தாலும், வரமாட்டேன்னு தனியா விலகி நிக்கறவறங்களை எதுக்கு வம்படியா இழுக்கணும். இது எனக்கு நல்ல பாடம். இனி என்ன செய்யணுங்கறதை யோசிச்சு செய்துக்கலாம்” என்றவன்,
அப்டித் தனியாப்போயி அங்க நான் என்னத்தைப் பண்ணப் போறேன். அவங்களோட ஆதாயத்துக்காகத்தான் இப்பவும் என்னை எதிர்பாக்கறாங்க. நான் பாத்துக்கறேன். நீ ரிலாக்ஸா இரு.” மனைவியைத் தோளோடு அணைத்துத் தேற்றிவிட்டு, தொழில் சார்ந்த விசயங்களை வீட்டிலிருந்தவாறே கவனிக்கத் துவங்கியிருந்தான் ஜேப்பி.
அதனைக் கண்ட ஷ்யாமும் தாயின் அருகே வந்து, “நீ எதுக்குமா வதி பண்ந்த. நானும் தாதியும் இதுக்கும்போது எதுக்கும் நீ வதி(வர்ரி) ஆகக் கூதாது. என்ன சதியா!” தேற்றினான் சுமியை.
ஆனால் ஓரளவு ஜேப்பியைத் தெரிந்து வைத்திருந்த அவனது தந்தை, “சும்மா இரு ரூபி. அண்ணன்தான் இப்ப அவனை வரச்சொல்லி ரொம்ப வற்புறுத்தியிருக்காரு. அதான் நம்மைக் கூட்டிட்டு அங்க போறதுக்காக வந்திருக்கான். பேசாம கிளம்பு!” அதட்டினார்.
அதையும் மீறி லொட லொடத்த மனைவியை தனியே அழைத்துச் சென்ற சதானந்தன், “இடுப்புல தூக்கி வச்சிட்டு சோறு ஊட்டின ஜெயபிரகாஷில்லை இப்ப அவன்! எங்கப்பா நல்லா இருந்தவரை அவனைக் கைக்குள்ள வச்சிட்டுத்தான் எல்லாம் பண்ணாரு.
அப்பாவே எங்கிட்ட பலமுறை, ‘எனக்கப்புறம் எல்லாத்தையும் பாத்துக்க, வில்லாமக் கொள்ளாம நம்ம சாம்ராஜ்யத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக, நம்மளோட வாரிசுகளை நல்லபடியா வழிநடத்த அருமையான புள்ளையப் பெத்துக் குடுத்துட்டடா.
என் கவலையெல்லாம் அவனைப் பாத்தப்புறந்தான் தீந்தது. அவனுக்கு நீண்ட ஆயுளை மட்டும் ஆண்டவன் போட்டு வச்சா போதும். குடும்பத்துப் பேரையும், சொத்து சுகம்னு நம்ம வாரிசுகளை பேரும் புகழோட உச்சத்துக்கு கொண்டு போயிருவான்’ பெருமையாக தன்னோடு பகிர்ந்து கொண்டதை மனைவியிடம் உரைத்தார் சதானந்தன்.
அத்தோடு, “இப்ப எங்கப்பா பேசறது யாருக்கும் ஒன்னுமே புரிய மாட்டுது. அவன் ஊருக்கு வந்தாத்தான், அவரு என்னென்னல்லாம் எங்கல்லாம் சேத்து வச்சிருக்காரு. அதை எங்க ஒயிட்டா வச்சிருக்காரு. பிளாக் எங்க இருக்கு.
அதை எப்டி வெளிய கொண்டு வரதுன்னு ஒரு முடிவுக்கு வர அவனில்லாம வேற யாராலும் எதுவும் செய்ய முடியாதுன்னுதான் எல்லாரும் சமரசமாப் போற பிளானுக்கே வந்திருக்காங்க.
நீ எதையாவது பேசி காரியத்தைக் கெடுத்திராத. இப்ப அவன் கோபத்தை மலையிறக்க என்ன செய்யறதுன்னு போயி யோசி. இல்லையா, அவன் கண்ணெதிரே வராம ஓரமா எங்கேயாவது போயி இரு” கண்டிப்பாகக் கூறிவிட்டு, கார்த்திக்கை அழைத்துக்கொண்டு ஜேப்பி இருக்குமிடம் சென்று அவனை தாஜா செய்து ஒருவழியாக பயணத்தைத் துவங்கியிருந்தனர்.
ஜேப்பிக்கு அனைத்துமே புரிந்தாலும், சின்னதாக தனது ஒதுக்கத்தைக் காட்டிவிட்டுக் கிளம்பியிருந்தான்.
இத்தனையையும் கனகச்சிதமாக செயல்படுத்தியவன் இனி என்ன செய்ய வேண்டும் என்கிற முடிவோடுதான் திருச்சி வந்தடைந்திருந்தான் ஜேப்பி.
***
வீட்டிற்கு வந்ததும் பெரியவர்கள் மூவரும், ஜேப்பியுடன் சிவபிரகாசத்தின் அறையில் கூடியிருந்தனர்.
எத்தனை விதமாக மாற்றிக் கேட்டாலும், ஒரே மாதிரியாகப் பேசினான் ஜேப்பி. “தாத்தா என்னை எடுபிடி மாதிரித்தான் அங்க போ, இங்க வான்னு சொல்லுவாரு. மத்தபடி இன்டெப்த்தா எனக்கு ஒன்னும் தெரியாது” என்று.
“அப்போ என்ன மாதிரியான தொழில்கள்ல, நீ அவருக்கு உதவின? அதுல இருந்து வந்த பணமெல்லாம் எங்க வச்சிருக்காருன்னு உனக்கு ஒன்னுமே தெரியாதா?” நம்பிக்கையின்றிக் கேட்டார் சச்சிதானந்தன்.
“அதையெல்லாம் அவருதான் மேனேஜ் பண்ணாரு பெரியப்பா” என்றவன், அவர்களுக்குத் தெரிந்த வழி வழியாக வந்த சொத்துக்களைப் பற்றிய விவரங்களை மட்டுமே உரைத்தான்.
ஜேப்பியின் பேச்சில் மூவருக்குமே நம்பிக்கை உண்டாகவில்லை. அவனை தனித்து விட்டால் அப்படியே அனைத்தையும் அவனே அபகரித்துக் கொள்வனோ என்கிற எண்ணம் அவனது தந்தை உட்பட மற்ற இருவருக்குமே இருந்தது.
“சரி ஜேப்பி. நீ நம்ம பசங்களையெல்லாம் இங்க வரச்சொல்லு. அதுக்குள்ள முக்கியமான ஒரு விசயத்தைப் பேசி ஒரு முடிவுக்கு வந்திரோம்” ஜேப்பியை வெளியே அனுப்பிவிட்டு,
“சதா, உன் மயன் நம்மகிட்ட பெருசா எதையோ மறைக்க நினைக்கிறான். அவனை அப்டியே விடாம நம்ம கூடவே வச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பாப்போம். எதாவது வித்தியாசமாத் தெரிஞ்சா அதையெல்லாம் என்ன ஏதுன்னு கேட்டு விசயத்தை வெளியே கொண்டு வந்திரலாம்” முடிவு செய்தனர்.
பெரியவர்கள் எடுத்த முடிவினை அடுத்த தலைமுறையினரிடமும் அப்படியே உரைக்க இடையிட்ட ஜேப்பி, “இதுவரை எங்க உழைப்பில இருந்து வந்த பொருளோ, தொழிலோ, பணமோ தனித்தனியா என்ன தேடி வச்சிருக்கோம்னு லிஸ்ட் எடுத்துட்டு, உங்க மூலமா எங்க கைக்கு வந்தது என்னன்ன அப்டிங்கறதையும் தனியா குறிச்சி எடுத்துருங்க. அப்புறம் தாத்தாகிட்ட இருந்து உங்களுக்கு வந்தது. எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டா நல்லாருக்கும். அதை லீகலா ரெஜிஸ்டர் பண்ணிக்கறதும் நல்லது.
ஏன்னா, எது பங்குல வந்தது, எது சொந்தமா சம்பாத்தியம் பண்ணதுன்னு இப்பவே தெரிஞ்சாத்தான், பின்னாடி பிரச்சனை இருக்காது” என்றிருந்தான்.
அசையும், அசையாச் சொத்துகள் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும்படி பேசி முடிவுக்கு வர உதவினான் ஜேப்பி. நிழல் உலக தொழில் பற்றி யாரிடமும் வாயைத் திறக்கவே இல்லை ஜேப்பி.
சில அரசியல் தலைவர்களின் பினாமியாக, அவர்களின் தொழில்களில் பங்குதாரராக இருந்த விசயங்களை இங்கு வருமுன்னேயே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.
“இதுவரை எங்க தாத்தா நம்பிக்கையா பண்ண விசயங்களை இனி என் பேருக்கு மாத்திக் கொடுத்திட்டா, நானே எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்றதுமே பலர் ஜேப்பியின் பேச்சினை ஆமோதித்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
உரிய சொத்துகள் வழி வருமானத்தைக் காட்டிலும், எழுபது மடங்கு அதிக வருவாய் பெறக்கூடிய விசயங்களை தனது பொறுப்பில் கொணர்ந்திருந்தான்.
மருத்துவமனையில் இருந்தவரைச் சந்திக்கச் செல்லுமுன், “நீதான் அவருகிட்ட பேசணும் ஜேப்பி. நீ கேட்டா எல்லாத்தையும் அப்பா உங்கிட்ட சொல்வாருனு நினைக்கிறோம். அதனால இன்னைக்கு அவரைப் பாக்க டாக்டர்கிட்ட பர்மிசன் கேட்டுருக்கோம். அந்த நேரத்தில இரண்டு பேரைத்தான் அலவ் பண்ணுவாங்க. நீயும் நானும் மட்டும் போயிப் பேசிட்டு வந்திருவோம்” என்றார் சச்சிதானந்தன்.
கிளம்பும் வேளையில் அங்கு வந்த ஷ்யாம் ஜேப்பியை நோக்கி, “நானும் உங்ககூத வந்தா உங்களுக்கு ஹெல்ப்பா இதுக்கும்னா கூத வதேன் தாதி” கிளம்ப, ஜேப்பி சுமித்ரா இருவரும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.
“இல்லை ஷ்யாம். டாடி போயிட்டு வரட்டும். நீ மீக்கு ஹெல்ப்பா இரு” சுமி உரைத்ததும், வாடிய முகத்தோடு ஒப்புக் கொண்டிருந்தான்.
அன்று மாலை ஏழு மணியளவில் காண அனுமதி வழங்கப்பட்டிருக்க, சச்சிதானந்தனும் ஜேப்பியும் சிவபிரகாசம் இருந்த அறைக்குள் நுழையச் செல்ல, “யாராவது ஒருத்தங்க மட்டும் உள்ள போங்க” வலியுறுத்தினார் வாயில் காவலர்.
அனுமதி வழங்கப்பட்டிருந்த அட்டையைக் காட்டி விசயத்தைக் கூற, “வேற ஒரு அம்மா இப்பதான் உள்ளே போயிருக்காங்க. அதனால இப்ப ஒருத்தவங்களைத்தான் உள்ளே அனுப்ப முடியும். அவங்க வந்தபின்ன இன்னொருத்தவங்க போங்க. இல்லைனா அந்தம்மா வெளிய வந்ததும் நீங்க போயிக்கங்க” என முடித்திருந்தார்.
பத்து நிமிடங்கள் கடந்திருக்க, ஜேப்பியை மட்டும் தனித்து அனுப்ப மனமில்லாத சச்சிதானந்தன் பொறுமையின்றி நின்றிருந்தார்.
ஜேப்பி வந்த தொழில்முறை அழைப்புகளை ஏற்று சன்னமான குரலில் பேசிக் கொண்டிருந்தான்.
இருபது நிமிடங்கள் கடந்தும் உள்ளே சென்றவர் வராததால், “நம்ம குடும்பத்துல நமக்குத் தெரியாம யாரு அந்த பொம்பளையா இருக்கும்?” சச்சிதானந்தன் ஜேப்பியிடம் வினவ,
“தெரியலையே பெரியப்பா”
“நெருங்குன சொந்தத்தில இருந்து யாரும் பாக்க வர்றதா இருந்தா, நமக்கிட்ட சொல்லித்தான பர்மிசன் கார்டு வாங்கிக் கேட்டுருப்பாங்க!” விடாமல் வினவினார்.
உள்ளே சென்ற பெண்மணி வருவதுபோலத் தெரியாததால், மருத்துவமனை நிர்வாக இயக்குநரைச் சென்று பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு ஜேப்பி சென்றிருந்தான்.
“ரொம்ப தேங்ஸ் டாக்டர். நீங்க சமயத்துல பண்ண ஹெல்ப்னால எங்க தாத்தாவோட என்கொயரி அன்ட் நெக்ஸ்ட் லெவல் புரசீஜர்ஸ் எல்லாமே நிறுத்திட்டாங்க.
குடும்பத்துக்கு வர இருந்த அவப்பெயரை உங்களோட சப்போர்ட்னால தடுக்க முடிஞ்சது. ஹெவி டோசேஜ் இல்லாம அப்டியே இன்னும் டூ மந்த்ஸ் கண்ட்டினியூ பண்ணா, எல்லாத்தையும் சுமுகமா மாத்திருவேன்” என்றதோடு அவருக்கான பெருந்தொகையை அனுப்பி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவன் எஸ்ப்பியைக் காணத் திரும்பினான்.
அப்படிக் கூறித்தான் எஸ்ப்பியை மருத்துவமனையிலேயே இருக்கும்படி செய்திருந்தான் ஜேப்பி.
இன்னும் சச்சிதானந்தன் வெளியில் காத்து நிற்க, “பெரியப்பா நான் உள்ளே போறேன்.” அவரின் பதிலுக்குத் தாமதிக்காது உள்ளே சென்றவன் எதிர்பாராதவரைச் சந்தித்ததில் நிற்க, அங்கு ஜேப்பியை எதிர்பார்க்காத எஸ்ப்பி அதிகளவு அதிர்ச்சியோடு அமர்ந்திருந்தார்.
“வாப்பா ஜேப்பி. நல்லாயிருக்கியா?” ஒரே நேரத்தில் மீனாட்சியும், வேதா மகதீரா என்கிற வேதவல்லியும் ஜேப்பியைப் பார்த்துக் கேட்டதும், மேலும் அதிர்ந்து போய் பார்த்திருந்தார் எஸ்ப்பி.
வேதாவிற்கு ஜேப்பியை ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்றால்… தன்னைப் பற்றியும் அவன் அறிந்துகொண்டிருப்பானோ! என்கிற தயக்கம் அவரைக் கொல்லாமல் கொன்றது.
மனைவிக்கு இன்னும் வேதாவை யாரென்று கூறாமல் சமாளித்தவரால், பேரனை எதிர்கொள்ள தர்மசங்கடமாக இருந்தது. தன்னை, வேதாவுக்கு தான் இழைத்த கொடுமையைக் கண்டு கொண்டால், தன் மீதான மரியாதை எப்படி மாறும் என்பதை அவரால் கணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இயலாமல், “சொல்லிட்டு வரமாட்டியாடா நீ” குழறலாக கோபத்தோடு கேட்டார்.
பாட்டியிடமும், வேதாவிடம் இன்முகமாகப் பேசிக் கொண்டிருந்தவன், எஸ்ப்பியின் புறமாகத் திரும்பி, “தலைக்கு வர இருந்ததை சமாளிச்சு இப்பத்தான் நிம்மதியா உங்களைப் பாக்க வந்திருக்கேன்.
ரொம்பப் பண்ணிட்டு இருந்தா, எல்லாத்தையும் வெளிய கொண்டு வரதோட, தலை நிமிரவே முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டுட்டு, எனக்கென்னானு என்னோட தொழிலைப் பாத்திட்டுப் போயிருவேன். எப்டி வசதின்னு யோசிச்சு சொல்லுங்க” மிரட்டியவன்
அவரின் நிழல் உலக தொழில்முறை சார்ந்த அனைத்து பணிகளையும் தான் ஏற்றுக்கொண்டதாகவும், மற்ற விசயங்களை தனது மேற்பார்வையில் செயல்படுத்தும் வகையில் செய்திருந்ததைப் பற்றிக் கூறிவிட்டு கிளம்ப எண்ணுகையில், வேதா தனது கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி எஸ்ப்பியின் காலடியில் வைப்பதைப் பார்த்த ஜேப்பிக்கு புரியாமல் பார்க்க, “நீங்க என்னை நம்பி அறுபது வருசத்துக்கு முன்ன” ஒரு குறிப்பிட்ட நாளைக்கூறி, “ஒப்படைச்சது. இத்தனை வருசமா பத்திரமா வச்சிருந்ததை இப்ப உங்கட்டயே ஒப்படைச்சிட்டேன். இது என் கழுத்துல இத்தனை வருசமா பாரமா இருந்தது. இனியும் அதை இறக்கி வைக்கலைனா என்னோட கடைசி காலம் என்னைக் கேலி செஞ்சு சிரிக்கும்.” என்றபடியே திரும்பியவர், அதிர்ந்து வேதா கழட்டி வைத்த தங்கத் தாலியைப் பார்த்தவாறு நின்றிருந்த மீனாட்சியிடமும், ஜேப்பியிடம் இருந்து விடைபெற்றிருந்தார் வேதா.
அதற்குமுன்பே பூஜா மகதீராவைப் பற்றியும், அவள் சுதாவின் வாரிசு என்பதையும் அவளுக்குப் பிறந்த குழந்தையைத்தான் ஜேப்பி, சுமித்ரா வளர்க்கிறார்கள் என்பதையும் கூறியிருந்தார் பேச்சுவாக்கில்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக, மீனாட்சிக்கு உலகமே காலுக்கு கீழே நழுவிய உணர்வில் மயங்கிச் சரிய, மருத்துவரைக் கொண்டு அவரை நார்மல் நிலைக்கு கொண்டு வரவே நேரமெடுத்திருந்தது. அதற்குள் வேதா கிளம்பிச் சென்றிருந்தார்.
வேதாவைப் பற்றித் துருவிய சச்சிதானந்தனிடம் வாயே திறக்காமல் மௌனித்திருந்தான் ஜேப்பி.
எஸ்ப்பிக்கு தனது உடல்நிலை நன்கு இருந்தாலும் அவரை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பாவித்து செயல்பட்ட மருத்துவர்களின் செயலுக்குரிய காரணம் விளங்கினாலும், அதனை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், தன்னை முடக்கி அமர வைத்து அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜேப்பியை ஒன்றும் செய்ய முடியாத தனது நிலையை எண்ணித் தவித்தார்.
சச்சிதானந்தனுக்கு முன்பாக தான் எடுத்த முடிவுகளை, எஸ்ப்பியே எடுத்ததுபோல விளக்கிய ஜேப்பியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் அனைத்தையும் அமைதியாக இருந்து ஆமோதித்தாக பாவனையோடு அமர்ந்திருந்தார் எஸ்ப்பி.
அனைவரும் வெளிச்செல்ல தனித்திருந்த எஸ்ப்பியிடம், “இந்தம்மாவுக்கு நம்ம வீட்டைப் பத்தி இவ்ளோ விசயம் எப்டித் தெரிய வந்திருக்கும்னு மண்டையக் குடைஞ்சிட்டுருந்த விசயத்துக்கு, இன்னிக்குத்தான் விடை கிடைச்சிருக்கு. ஆனா, இன்னும் என்னலாம் பண்ணி வச்சிருக்கீங்கனு தெரிஞ்சா, துளி மரியாதைகூட உங்கமேல வராதுபோல!” என்ற ஜேப்பியின் வார்த்தையில் அடிபட்டிருந்தவர், தனது ஆட்டம் அனைத்தும் முடிவுக்கு வந்ததை எண்ணி பல்லுப் பிடுங்கிய பாம்பைப்போல இருந்தார் எஸ்ப்பி.
***
சுமியிடம் கூறி ப்ருத்விக்கு அழைத்துப் பேசிவிடுமாறு கூறிய ஜேப்பியை நம்ப முடியாமல் பார்த்தவள், நண்பனுக்கு அழைத்து பேசினாள்.
திருமணமாகிய விசயத்தைப் பற்றியெல்லாம் கூறாமல், தானும் ஷ்யாமும் திருச்சியில் உள்ள விசயத்தைக் கூறியவள், இத்தனை நாள்கள் தேடியும் அவனைக் கண்டு பிடிக்க இயலாமைக்கான காரணத்தை வினவ, அவன் தனக்கு நேர்ந்த விசயங்களைப் பற்றி சுமித்ராவிடம் கூறினான் ப்ருத்வி.
ஷ்யாமும் இரண்டொரு வார்த்தை பேச வேண்டி அழைபேசியைக் கேட்டதும் கொடுத்திருந்தாள். நீண்ட நேரம் அவனோடு பேசிய ஷ்யாம் பல விசயங்களைப் பற்றி ப்ருத்வியிடம் தெரிவிக்க, அவனுக்குப் புரியவில்லை.
அதை சுமியிடம் வினவ, சுமி தான் திருச்சியிலிருந்து கிளம்பியபின் அவனுக்கு அழைப்பதாகக் கூறிவிட்டு வைத்திருந்தாள்.
***
சற்று உடல்நிலை தேறியதும் ஜேப்பியை அழைத்த மீனாட்சி, “அந்தப் பூஜாவை நான் பாக்கணும்” என்றிட, தடையேதும் கூறாமல், “கொஞ்சம் டைம் தாங்க பாட்டி” என்றவன், “அவ இங்க வந்தா நிறைய பிரச்சனை வருமே?” தயங்கி உரைத்தான்.
“அத நான் சமாளிச்சிக்குறேன். நான் சொன்னதை மட்டும் செய்யி” என்றவர் அதன்பின் யாருடனும் பேசவில்லை. நீண்ட நேரத்திற்குப்பின் மயூரியை அழைத்துவரச் சொன்னவர் அவளிடம் வெகுநேரம் பேசினார்.
மயூரி கண்ணீரும் கம்பலையுமாக அறையை விட்டு வெளியேறுவதைக் கண்ட சுமி, “என்ன மயூரி? என்ன பிரச்சனைனு சொன்னா அதை சரிசெய்திரலாமே. சொல்ல முடியும்னா சொல்லுங்களேன்” வற்புறுத்திக் கேட்டதும்,
மயூரி கூறிய விசயத்தில் சுமித்ராவிற்கும் ஒப்புதல் இல்லாமல்போக, என்ன செய்தார்கள் என்பதனை நிறைவு அத்தியாயத்தில் வாசிக்கலாம்.
***