தோளொன்று தேளானது 12
தோளொன்று தேளானது 12
தோளொன்று தேளானது! 12
சற்று நேரம் சுமியையே பார்த்தபடி நின்றவன், “ம்ஹ்ம். இப்பத்தான் ரொம்ப நாளுக்குப்பின்ன பழைய சுமி எட்டிப் பாக்கறா!” என்றவாறு சுமியின் அருகில் வந்தவன், அவளின் கன்னம் தட்டி, “இப்டியே இரு. இதுதான் நல்லாருக்கு உனக்கு” என்றான்.
“பேச்சை மாத்தாதே ஜேப்பி. நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே?” சுமி விடாது வினாவைத் தொடுக்க,
“கதவு முக்கியம்னு நான் நினைச்சிருந்தா, எங்கிட்ட இந்தக் கேள்வியக் கேக்க இப்ப ஒன்னால முடிஞ்சிருக்குமா சுமி?” என்றான்.
ஜேப்பியின் பதிலாக அடுத்து வினா வரும் என்பதை அறியாதவள், தன்னை சமாளித்துக் கொண்டு, ‘இவங்கிட்டப் போயி தேவையில்லாம வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கணும்னு இன்னைக்கு எனக்கு வேண்டுதல்போல’ என உள்ளுக்குள் தலையிலடித்தபடியே தன்னையே நொந்து கொண்டவள்,
‘நீ மட்டும் நேரத்துக்கு வந்து பாத்திருக்கலைன்னா, இன்னேரம் முடிஞ்சிருப்பேன்’ என நினைத்துக் கொண்டாலும் வெளியில் கூறவில்லை.
ஜேப்பியிடம் நேரில் தழைந்து செல்ல, சுமியின் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் செய்த அனைத்துமே அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதபோதும், அவனின் மேல் கொண்டிருந்த காதல் அவனை வெறுக்கவிடாமல் தடுத்தது.
ஜேப்பியின் செயலாலும், பேச்சினாலும் புண்பட்ட இதயம், அவனது தோல்வியைக் கண்டு ரசிக்க விரும்பியது. அதனால் எப்படியாவது எதிரில் நிற்பவனைத் திணறடித்துவிடும் நோக்கில், “இன்னும் எவ்ளோ நாளைக்கு என்னை இப்டி வச்சிருக்கப் போற ஜேப்பி!” என்றாள்.
“எப்டி வச்சிருக்கேன்?” எதுவுமே தெரியாததுபோல, தான் எதையும் அவளின் மனம் நோகச் செய்யவே இல்லை என்பதுபோலக் கேட்டான் ஜேப்பி.
“உனக்குத் தெரியாத மாதிரிக் கேக்காத ஜேப்பி” சூடாக பதிலளித்தாள் சுமி.
“நல்லா வச்சிருக்கிற மாதிரித்தான் எனக்குத் தோணுது. ஆனா உனக்கு, வேற எதுவோ தோணற மாதிரி இருக்கே!” சுமித்ராவை ஆழ்ந்து பார்த்தான்.
“ஜேப்பி! என்னோட பொறுமைய ரொம்பச் சோதிக்கற நீ” என்றவள், “நீயா உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டுப் போற. சம்பந்தப்பட்ட என்னைக் கன்சிடர் பண்றதே இல்லை. உன் மனசுல என்ன நினைச்சு இப்டியெல்லாம் பண்ணிட்டு இருக்க?
எனக்குன்னு ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்குமுல்ல. அதையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரி, உன்னோட இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறமாதிரி எனக்குத் தோணுது” ஜேப்பியின் பதிலால் பல்ப் வாங்கிய மனம், இயன்றவரை அவனை வார்த்தையால் தாக்கிட எண்ணி, மூச்சு விடாமல் அனைத்தையும் கூறிட முனைந்தது.
ஆகையினால் குற்றங்களைச் சுமத்தி, குற்றவாளிக் கூண்டில் அவனை ஏற்றிவிட்டு, அவனது பதிலுக்காக என்பதைவிட, தனது தவறை உணர்ந்து அவன் தன்னிடம் இறங்கிப் பேசுவான் எனக் காத்திருந்தாள் சுமி.
“நான் கேக்கற இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” என தன்னை நெருங்கி வந்து நின்றவனிடம், கேளு என்பதுபோல அலட்சியமான பாவனையில் ஜேப்பியைப் பார்த்தாலும், ‘என்னத்தை பெருசா கேட்டு வைக்கப் போறான்னு தெரியலையே’ என மனம் பதறியது சுமிக்கு.
“என்னை நினைச்சுத்தான, அந்த வாண்டுக்கு ஷ்யாமள பிரகாஷ்னு பேர் வச்ச?” இப்படி ஒரு கேள்வி ஜேப்பியிடம் இருந்து வரும் எனத் தெரியாதவள், என்ன சொல்வது எனப் புரியாமல் சில நொடிகள் பார்த்திருந்தாள்.
ஜேப்பியின் பார்வையும், இதழில் தோன்றிய சிரிப்புமே அவளைக் கிண்டல் செய்தாற் போலிருந்தது.
‘நம்ம கேட்டதுக்கு எதுக்காவது ஒழுங்கா பதில் சொல்றானா பாரு? என்ன டிசைனோ தெரியலை. ஆளும் முழியும்!’ உள்ளுக்குள் ஜேப்பியை எண்ணி, நா உலர்ந்து பதறிய நிலையில்தான் சுமி இருந்தாள். ஆனால் வெளியில் காட்டாமல் சமாளித்தாள்.
ஆம் என்று கூறினால் அதற்கு என்ன சொல்வானோ, இல்லை என்று மறுத்தால் என்ன வில்லங்கம் வருமோ என்று புரியாதவள், எந்தப் பதிலானாலும் தலைவலி வரும்படிதான் செய்வான் என ஜேப்பியைப் புரிந்து கொண்டிருந்தவள், “இல்லை” என்றாள்.
அவளின் இல்லை எனும் பதிலைக் கேட்டு, “சரியாத்தான சொல்ற?” எனக் கேட்டான்.
சுமியும் தலையை அசைத்து ஆமோதிக்க, புன்முறுவலோடு அறையை விட்டு வெளியே சென்றவன், சற்று நேரத்தில் கையில் கோப்போடு உள்ளே நுழைந்தான்.
கோப்பிலிருந்து மிகவும் கவனமாக ஒரு தாளை எடுத்து, சுமித்ராவிடம் நீட்டினான். சுமி, ‘என்னவாம்’ என்பதுபோல அலட்சியாக வாங்கிப் பார்வையை அதில் ஓடவிட்டாள்.
தன்னவளை கர்மசிரத்தையோடு கவனித்திக் கொண்டிருந்தவன், சிறுகச் சிறுக சுமியின் மனதில் அலட்சியம் போனதை அவளின் உடல்மொழியின் வாயிலாகப் பார்த்திருந்தவன் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான்.
ஷ்யாமின் பிறப்புச் சான்றிதழ் அது. அதில், தெளிவாக, தாய் எனுமிடத்தில் சுமித்ரா என்றும், தந்தை எனுமிடத்தில் ஜெயபிரகாஷ் என்றுமிருந்ததை சுட்டிக் காட்டியவன், “இதுக்கு என்ன அர்த்தம்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்றான்.
“அது.. நீதான் ஷ்யாமோட அப்பான்னு நினைச்சுக் குடுத்தது” ஒளிக்க எண்ணாமல் அப்படியே உள்ளத்தில் இருந்ததை ஜேப்பியிடம் உரைத்தாள் சுமி.
“இதுலாம் எதுக்காகன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” ஜேப்பி.
மௌனமாக பார்வையை தூரத்தில் நிலைக்கவிட்டவாறு இருந்தவளைப் பார்த்தவன், “இப்டியெல்லாம் கற்பனையில என்னை நினைச்சு யாரோடைய குழந்தையவோ, என்னோட குழந்தையா நினைச்சு வளக்கறவளை, நிஜத்துல என்னோட வயிஃபா வாழ வைக்க நினைச்சுத்தான் இதையெல்லாம் பண்ணேன். இப்டியெல்லாம் பாத்துப் பாத்துப் பண்ணதுக்கு, நிக்க வச்சிக் கேள்வி கேக்கற?
என்னோட குழந்தைய என் மூலமா பெத்து, சந்தோசமா வளக்கறதுக்கு உனக்கொரு சந்தர்ப்பம் குடுத்திருக்கேன். இதுல நான் உன் ஆசைய மதிக்கலைன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா சுமி?” என்றான்.
“இதையெல்லாம் எங்கிட்ட கூப்பிட்டு நீ கேட்டிருக்கணும், பேசியிருக்கணும். அதைவிட்டுட்டு, எல்லாத்தையும் உன்னோட இஷ்டத்துக்கு பண்ணது உனக்கு சரினு படுதா?” என்றாள்.
“கேட்டிருந்தா, என்னத்தைச் சொல்லிருப்பியாம்?” எகத்தாளமாகவே வந்தது ஜேப்பியிடமிருந்து.
“அதுக்காக…” சுமி சீறிக்கொண்டு கேட்டாள்.
“என்னோட நியாயம், உனக்கு அநியாயமாப் பட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது சுமி. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கும் என்னைப் பிடிக்கும்னு தெரியும்.
வீட்டுல அவசரமா பொண்ணு பாத்துப் பேசி முடிச்சாங்க. இன்னும் டிலே பண்ணா, என்னோட அத்தனை பிளானும் வேஸ்ட்டாகிரும்னு தோணுச்சு.
இதையெல்லாம் நான் எதுக்காக செஞ்சேனோ எல்லாமே வீணாகறதுக்கு முன்ன, நான் முந்திக்க நினைச்சேன். சோ, உன்னைத் தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிட்டேன்.” தனது இரண்டு கைகளையும் விரித்துக் கூறினான்.
“உன்னோட பிரச்சனைக்கு நாங்க பலிகடா ஆகிட்டோம்” என்றாள் சுமி.
“நாங்கன்னா?” ஜேபி
“நான், ஷ்யாம். வேற யாரு” சுமி வெறுப்போடு கேட்டாள். ப்ருத்வியின் நினைப்பு வந்தபோதும், அவளாகவே தவிர்த்துவிட்டாள்.
“பலிகடான்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத சுமி. இனிமே, என்னோட வயிஃபா எனக்காகவும், இனி வரக்கூடிய என்னோட குழந்தைகளுக்காகவும் வாழப் பழகிக்கோ. வெரி சிம்பிள்” சாதாரணமாகக் கூறினான் ஜேப்பி.
“இது, இந்த உன்னோட ஆட்டிட்யூட்தான் எனக்குப் பிடிக்கலை. என்னோட எந்தக் கருத்துக்கும் உங்கிட்ட மதிப்பில்ல. உன்னோட எல்லாத்தையும் எம்மேலத் திணிக்கற. அதனால, வெறுப்புதான் மிஞ்சும்” குனிந்தபடியே கண்களில் தோன்றிய நீரை மறைத்தபடி பேசினாள் சுமி.
“என்னை மட்டுமே இதுவரை நீ நினைச்சிட்டு இருந்திருந்தா, இந்த வாழ்க்கை உனக்கு வரமாத் தோணியிருக்கும் சுமி. இடையில, நீயா ஒரு கற்பனை வாழ்க்கைய அமைச்சு, அதோட வாழப் பழகிட்ட.
புதுப் புது உறவுகளைத் தேடி, அதுல உன்னோட ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் மறைக்கப் பழகி வாழ்ந்திருக்க.
ஆனா அது நிஜம்னு நம்பி, உனக்குன்ன கிடைச்ச இந்த வாழ்க்கைய இப்ப ஏத்துக்க மறுக்கற. அதான் இப்ப உனக்குப் பிரச்சனை” என்றவன், “நான் சொல்றதை நிதானமா யோசிச்சுப் பாரு. உண்மை என்னானு புரியும்.” திடமாக உரைத்தான் ஜேப்பி.
சுமியிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, “இனி இதுதான் உன்னோட வாழ்க்கை சுமி. இதை ஏத்துட்டு சந்தோசமா வாழப் பழகிக்கோ” என்றபடி நகர எத்தனித்தான்.
அவன் கிளம்புவதைக் கண்டு வேகமாக, “ஷ்யாமை மட்டும் திரும்பிக் கூட்டிட்டு வந்து எங்கிட்டேயே விட்ரு ஜேப்பி. எனக்கு அது போதும்.” என்றாள் சுமி.
“திரும்பத் திரும்ப நீயும் அவனையே கேக்குற. நானும் அதுக்கான பதிலை ஏற்கனவே உங்கிட்ட சொல்லிட்டேன் சுமி. வீம்பா நீ அவனை இங்க கூட்டிட்டு வரணும்னு சொன்னா, நான் இங்க இருந்து போயிருவேன்” என்றான் ஜேப்பி.
‘போறதான போ’ என்று அவளால் அவனது முகத்திற்கு நேரே கூற முடியாமல் ஏதோ அவளைத் தடுத்தது. ஆனால் ஷ்யாமைப் பிரிந்தும் அவளால் இருக்க முடியாது என்று தோன்றிட, “பிளாக்மெயில் பண்ணாத ஜேப்பி. என்னோட நிலைமையைப் புரிஞ்சிக்கோ” என்று மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து கண்ணீரோடு அகன்றாள் சுமித்ரா.
சுமியின் பின்னே வந்தவன், “இவ்ளோ நான் சொல்லியும், நான் அப்டியொரு விசயத்தைப் பண்ணியிருப்பேன்னு நம்புறியா சுமி” எனக் கேட்டான்.
ஜேப்பி, ஷ்யாமின் பிறப்பிற்கு தான்தான் காரணம் என தீர்க்கமாக நம்புகிறாளோ என எண்ணியே இந்தக் கேள்வியை சுமியிடம் முன்வைத்தான்.
ஷ்யாம் தன்னுடைய குழந்தை என்பதை ஆணித்தரமாக நம்புவதால்தான், சுமி மிகவும் ஷ்யாமின் விசயத்தில் பிடிவாதமாக இருப்பதாக எண்ணினான் ஜேப்பி.
ஜேப்பி தன் பின்னோடு வருவது தெரிந்தாலும், அவனது இந்தக் கேள்வியில் நிதானித்தவள், “ஷ்யாம், உன்னோட குழந்தைங்கறதுக்கு, எங்கிட்ட எந்த ப்ரூஃபும் இல்லை ஜேப்பி. ஆனா, நான் பாத்ததும், கேட்டதும் அப்டித்தான் அப்போ என்னை நினைக்க வச்சது” என்றிட
சுமியின் பேச்சில் முகத்தைச் சுருக்கி, “நான் அந்த மாதிரி யாருகூட இருந்ததைப் பார்த்தன்னு சொல்ல வர்ற?” என குனிந்தவாறு பேசியவளின் தாடையை நிமிர்த்திக் கேட்டான். அத்தனை கோபம் ஜேப்பியின் வார்த்தையில்.
அதனைக் கூறாமல் நின்றவளிடம் இன்னொரு தாளை கோப்பிலிருந்து எடுத்து நீட்டினான். “அந்த வாண்டோட பர்த் சர்ட்டிபிகேட்டே ஃபேக்குனு என்னால ப்ரூஃப் பண்ண முடியும்” என்றபடியே சுமியிடம் அதை நீட்டினான்.
டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் அது.
பெற்றுக் கொண்டவள், அதனை நிதானமாகவே வாசித்துப் பார்த்தாள். சுமி, ஜேப்பி இருவரின் டிஎன்ஏவோடும் ஷ்யாமின் டிஎன்ஏ ஒத்துப் போகவில்லை என்பதை அதிலிருந்த விசயம் தெளிவாகக் கூறியது.
தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது சுமிக்கு.
‘அப்போ, அவ ஜெய்னு சொன்னாளே, ஜேப்பி இல்லைனா, அது கார்த்திக்கா?’ யோசித்தாலும், கார்த்திக்கை அப்படி அவளால் நினைக்க முடியவில்லை.
“இதையெல்லாம் காட்டியும் இன்னும் நீ என்னை நம்பலைல” என்றவனிடம், “அப்டியில்ல ஜேப்பி” என்றவள், ஆரம்பத்தில் அந்தக் குழந்தையை தான் தத்தெடுக்க நினைத்த காரணத்தை மட்டும் ஜேப்பியிடம் கூறினாள்.
“அதுக்காகத்தான் சொல்றேன். அவன் இங்க வேணாம். அவனை நல்லா போர்டிங் இருக்கற ஸ்கூலா பாத்து சேத்தாச்சு. வகேசன்கு நீ போயி அவனைப் பாரு. நான் தடுக்கலை.
இதுக்குமேல உனக்காக அந்த வாண்டுக்கு நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்கற” எனக் கேட்டவன், “எது எப்டிப் போனாலும், அந்த வாண்டு இங்க வரணும்னா” நிறுத்தியவன், தலையசைத்து பெருமூச்சொன்றை விடுத்ததோடு, அதற்குமேல் அங்கு நிற்காமல் நகர்ந்துவிட்டான்.
ஜேப்பியைப் பொறுத்தவரையில் தான் செய்த அனைத்துமே சுமித்ரா எனும் ஒருத்திக்காகத்தான் என்பதாக இருந்தது. அதனை அவளிடம் முன்பே கூறியாயிற்று. இதற்குமேல் கீழிறங்கி, அவளை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்குவது என்பது அவனது குணமே இல்லை.
சுமி தன்னை எதனால், எந்த சம்பவத்தைக் கொண்டு சந்தேகப்படுகிறாள் என்பதை ஒருவாராக அவளின் தடுமாற்றமான பேச்சின் வழியே யூகித்தாலும், அன்றைய தினம் அறைக்குள் பூஜாவுடன் இருந்தது தனது தமையன் கார்த்திக் என்பதை மனைவியிடம் விளக்கம் கூற இயலாத நிலையில் இருந்தான்.
சகோதரன் எத்தனை பெண்களைச் சுகித்தான் என்பதை கணக்கெடுப்பதையோ, அதைப்பற்றி வெளி நபர்களிடம் பெருமையாகப் பேசுவதையோ விரும்பாத ஆண் சமூகத்து சாதாரண பிரஜையாகவே ஜேப்பியும் இருந்தான்.
இந்த விசயத்தில் சக உதிரத்தின் தவறான செயல்களை நேரில் காண நேர்ந்தாலும், “பாத்து கேர்ஃபுல்லா இருடா மூ… நீ பாட்டுக்கு எதையாது இழுத்துட்டு வந்து தொலைஞ்சிராத!” என்பதோடு கடந்து விடுவர் சிலர். பலர் கண்டும் காணாமல் சென்று விடுவர்.
அதற்கு விதிவிலக்கில்லாமல்தான் ஜேப்பியும் இருந்தான். இத்தகைய செயல்களைப் பற்றி மார்தட்டிக்கொள்ள அந்தஸ்து எனும் மகுடத்தை சுமந்து திரிபவர்களுக்கு அதை மனைவியிடமேயாயினும் கூறுவது எளிய விசயமல்லவே! அதனால் தனது தமையன்பற்றிய உண்மையை உள்ளபடி ஒப்புக்கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது. ஆனால் அவனது குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. விடவும் மனமில்லை.
***
ஜேப்பியின் திருமணத்திற்கு முன்பே கார்த்திக்கின் மனைவி மயூரிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. சில வாரங்கள் கடந்திருந்தது.
ஜேப்பியின் விசயங்கள் அனைத்தையும் ஊருக்குச் சென்று வந்த கார்த்திக் தன் மனைவியிடம் பகிர்ந்துகொள்ள, “ஜேப்பி எல்லாரு கூடவும் நல்லா ஃப்ரண்ட்லியா இருப்பாரு. ஆனா, நீங்க அவர் லவ் மேரேஜ் பண்ணிட்டாருனு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியலை” என்றாள் மயூரி.
மயூரி கணித்ததைக் கணவனிடம் கூற, கார்த்திக்கோ சுமித்ரா தனது அலுவலகத்தில் பணி புரிந்ததை, அப்போதே சுமியின்பால் ஜேப்பி கொண்டிருந்த நேசத்தைப் பற்றிக் கூறினான்.
இடையில் இருவருக்கிடையே இடைவெளி உண்டானதால், தான் இப்படியொரு அவசரத் திருமணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் கூற, “நாம போயி யாருக்கும் தெரியாம அவங்களைப் பாத்திட்டு வரலாமா?” என்று கேட்டாள் மயூரி.
கார்த்திக்கோ, தனது தாத்தா கூறிய விசயங்களைப் பகிர்ந்து கொள்ள, “எந்தக் காலத்துல இருக்காரு உங்க தாத்தா. அவரு பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கட்டும். நாம யாருக்கும் தெரியாமப் போயி பாத்திட்டு வருவோம்” முடித்துவிட்டாள் மயூரி.
கார்த்திக்கும் மனைவியின் முடிவிற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஆமோதித்துவிட்டான்.
ஜேப்பி அவனது திருமண விசயத்தைப் பற்றி பகிர்ந்ததும், தற்போது நீ எங்கு இருக்கிறாய். உன்னுடன் நான் பேச வேண்டும் என மெயில் அனுப்பியும் எந்தப் பதிலும் ஜேப்பியிடமிருந்து வந்திருக்கவில்லை.
அடுத்து, தாத்தாவின் கோபம், அவரின் புதிய முடிவுகள் பற்றியும் அடுத்த மெயிலை அன்றுதான் ஜேப்பிக்கு அனுப்பியிருந்தான் கார்த்திக்.
ஜேப்பி, தான் எங்கிருக்கிறோம் என்பதை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, யாருக்கும் பதிலனுப்பாமல் இருந்தான்.
அவனது தாத்தா அந்தஸ்து எனும் ஒரே விசயத்திற்காக, சுமித்ராவை என்ன செய்யவும் துணிவார் என்பதை அறிந்திருந்தமையால், இத்தனை முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டான் ஜேப்பி.
இதனை அறியாத அவனின் மனைவியும், இதர நபர்களும் ஜேப்பியின் செயலுக்கான காரணம் புரியாமல் வருத்தத்திலும், கோபத்திலும் இருந்தனர்.
***
அடுத்தடுத்து வந்த நாள்களில் தனது உணர்வுகளுக்கான வடிகாலாக சுமியை நாடியபோது, அவனிடம் தனது மறுப்பைக் கூறி முரண்டாது இணங்கியபோதும், சுமியின் செயல்பாட்டில் உண்டான வித்தியாசத்தைக் கண்டவன், அவ்வார இறுதியில் ஷ்யாமின் விடுதியுடன் கூடிய பள்ளிக்கு சுமித்ராவை அழைத்துச் சென்றான் ஜேப்பி.
இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு, இருவரின் பாசப் பிணைப்பைக் காணப் பிடிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தான் ஜேப்பி.
“மீ! ஏன் இத்தனை நாளா நீ என்னைப் பாக்கவே வதலை” எனக் கேட்டுத் தன் தேடலை அவனது அணைப்பின் வழியே வெளிப்படுத்திய ஷ்யாமைக் கண்டு, முத்தமழை பொழிந்தாள் சுமி.
அன்றைய தினம் முழுமைக்கும் ஷ்யாமுடன் இருந்தவளை, மாலையில் திரும்ப எண்ணி அழைக்க, “ப்ளீஸ் ஜேப்பி. அவனை நம்மளோடயே கூட்டிட்டுப் போயிரலாமா?” எனக் கெஞ்சினாள் சுமி.
ஆரம்பத்தில் அவளின் கேள்வி கேளாததுபோல இருந்தவன், அவளின் மீண்டும் மீண்டுமான ஒரே கேள்வியில் சலிப்புற்று, தோளைக் குலுக்கி, “உன்னோட இஷ்டம் சுமீ” மனைவியின் முடிவிற்கு விட்டிருந்தான் ஜேப்பி.
ஷ்யாமின் விடுதிப் பொறுப்பாளரை அணுகி, அவனை இனி தங்களோடு வைத்துக் கொள்வதாகக் கூறிட, அதற்கான வேலைகளை முடித்துக் கொண்டு மூவருமாக வீடு திரும்பியிருந்தனர்.
“இது என்ன மீ” “அது எப்தி போகுது” இப்படி, தாயும் மகனுமாக தனியுலகில் சஞ்சரித்திருந்தனர்.
ஜேப்பியின் ஒட்டாத தன்மையினால், அவனிடமிருந்து ஷ்யாம் விலகியே இருந்தான். சுமித்ராவாக, டாடிக்கிட்ட கேளு எனக் கூறினாலும் தயங்கி நின்றான் ஷ்யாம்.
“இப்பத்தான உங்களைப் பாக்கறான். அதான் தயங்குறான்” ஜேப்பி கேட்காத கேள்விக்கும் பதில் கூறி வைத்தாள் சுமி.
ஷ்யாமைப் பார்த்தது முதலே ஜேப்பியின் நினைவே எழவில்லை சுமிக்கு.
ஷ்யாம், தன்னோடு இருந்த மகிழ்ச்சியில் ஜேப்பியை கவனிக்கத் தவறியிருந்தாள் சுமி.
சுமியின் பழைய கலகலப்பு மீண்டிருந்தது.
ஜேப்பி என்ன முடிவெடுத்தான்?
***