தோளொன்று தேளானது 18B

தோளொன்று தேளானது 18B

தோளொன்று தேளானது! 18B

நாக்பூரிலிருந்த பிளாட்டில் அடியெடுத்து வைத்த ஜேப்பியை, வேண்டாத விருந்தாளியைப்போல பார்த்துவிட்டு தனது லேப்பில் கண்ணைப் பதித்துக் கொண்டாள் சுமி.

          ஆவலாக மனைவியைக் காண வந்தவனுக்கு மனைவியின் செயலில் ஏமாற்றம் உண்டாக, “என்னடீ பார்வை இது?” கேட்டவாறே அவளின் அருகே சென்று, அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்த கணினியின் திரையை நோக்கினான் ஜேப்பி.

          அலுவலகப் பணியை சுமி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன், “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரியா மாறிப் போயிருறடீ.  வா வானு கூப்பிட்டியே வந்தவனை ஆசையா வந்து கட்டிப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா அலட்சியமாப் பாக்கற!” சுமியின் பின்னோடு நின்றணைத்தபடியே கன்னத்தோடு கன்னம் உரசியவாறு பேசினான் ஜேப்பி.

          “வந்ததும் நேராப் போயி குளி முதல்ல.  வெளியில எங்கங்கயோ போயிட்டு வந்து, அப்டியே எம்மேல வந்து ஈஷாதடா!” ஜேப்பியைத் தள்ளிவிட்டவள்,

“இப்ப என்னையும் அழுக்காக்கிட்ட.  நானும் குளிக்கணுமா?” சலிப்பாகக் கூறியவளைக் கண்டவன்,

          குதுகலத்தோடு, “வா வா, ரெண்டு பேருமாப் போயி குளிச்சிட்டு வந்திரலாம்” ஆரவாரமாக சுமியை அங்கிருந்து கிளப்பினான் ஜேப்பி.

          கணவனிடமிருந்து தன்னை விலக்கியவாறு, “கருமம்.  போடா முதல்ல நீ” என்றவள்,

“சின்ன வயசில எங்க வார்டன் சொல்லியிருக்காங்க.  பொண்ணும் பையனும் சேந்து குளிக்கக் கூடாதுன்னு“ என்று கூறியவளிடம்,

“அது அப்போ குளிக்கக் கூடாது.  ஆனா, இப்போ குளிக்கலாம்டீ.  இப்பதான் பெரியவளா ஆகிட்டல்ல!” என்றதோடு மனைவியின் காதில் கிசுகிசுக்க,

“ச்சீய்.  எப்பப் பாத்தாலும் உனக்கு இதே நினைப்புதானா!  எலி ஏன் அம்மனா ஓடுதுன்னு இப்பதான் புரியுது” என்றவள், அவனைத் தள்ளி நிறுத்தியதோடு,

“முதல்ல நீ குளி.  நான் அப்புறம் போயிக் குளிப்பேன்” என்றபடி எழுந்தவளை ஆரத் தழுவிக் கொண்டவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டாள்.

          “ஷிவானிய இங்க இருந்து கிளப்பறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாப் போச்சுடா.  இனி நான் தனியா இங்க மேனேஜ் பண்ணிப்பேன்.  யாரும் எனக்கு தொணைக்கு வேணாம்” ஜேப்பியிடம் கூறியவள், கணவனது பதிலுக்காக அவனை நோக்கினாள்.

          “யாருமே இல்லாம, இந்த நிலையில நீ தனியா இருந்தா, என்னால வொர்க்ல கான்சன்ரேட் பண்ண முடியாது சுமீ.  யாராவது ஒரு ஆளு இருந்தா எனக்கு திருப்தியா இருக்குங்கறதாலதான் அவளை இங்க உங்கூட தங்க வச்சிக்கச் சொன்னேன்” ஜேப்பி விளக்கம் கூற,

“உன்னோட ஆளு ஏதோ கெஸ் பண்ணிருச்சுபோல.  இன்னைக்கு முழுசும் முகத்தைத் தூக்கி வச்சிட்டே சுத்துச்சு. நேத்து ஈவினிங்போல, ஜேப்பி ரீசண்ட்டா மேரேஜ் பண்ணிட்டதாக் கேள்விப்பட்டேன்.  வயிஃப் யாருனு உங்களுக்குத் தெரியுமா, பாத்திருக்கீங்களானுலாம் கேட்டுச்சு!” கொசுறுச் செய்தியாக அன்றைய நடப்பைக் கூறினாள் சுமி.

“இவளுக்கு ஒரு விசயம் தெரிஞ்சா, அது உடனே எல்லாருக்குமே தெரிய வந்திரும்.  அதனால உனக்கு எதாவது பிரச்சனை வந்திரக்கூடாதேனுதான், இங்க என்னோட வயிஃப்னு உன்னை இன்ரோ பண்ணலை சுமீ.  இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிரும்” மனைவிக்கு தேறுதல் கூறினான் ஜேப்பி.

“கப்புள்னு சொல்லாம நம்மளை வேற மாதிரி ரிலேசன்னு மத்தவங்க பேசிறக் கூடாதுல்ல!” சுமி ஜேப்பியிடம் கவலையோடு கூற,

“அதையெல்லாம் தப்புப் பண்றவங்களே யோசிக்கறதில்ல.  நாம அப்டியில்லல!” எனத் தேற்றியவன், “சில விசயங்களைக் கண்டுக்கிட்டா, காரியம் சாதிக்க முடியாதுடீ!” என்றவன்,

“இன்னும் கொஞ்ச நாள்தான்.  அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு” மீண்டும் வலியுறுத்தினான்.

“ஏதோ பெரிசா ஃபிராடுத்தனம் பண்ற மாதிரித் தெரியுதே? கடைசியில என்னை எதுவும் கழட்டி விடற ஐடியால இருக்கியா ஜேப்பி” சுமி கேட்க,

“வாயிலேயே போட்டுருவேன்” சுமியை செல்லமாக வாயில் அடித்தவன், “வாழறதுக்கு ஏத்தமாதிரி சூழலை க்ரியேட் பண்றேன்.  உனக்கு எப்போதுமே எம்மேல நம்பிக்கை வர மாட்டீங்குது” என்றவன்,

“நீ எப்டி வேணாலும் சொல்லிட்டுப் போடீ.  நான் எப்டினு வரப்போற எம்புள்ளைக்குப் புரியும்”

“உங்க தாத்தாவுக்கு இது தெரிய வந்தா திரும்பவும் நமக்குப் பிரச்சனை வருந்தான?  அப்போ ஒவ்வொரு இடமா என்னைக் கடத்தி மறைச்சு வைக்கப் போறீயா? அந்த வில்லங்கத்தை எப்டி கடைசிவரை சமாளிக்கப்போற!” சிரித்தபடியே கேட்டாள் சுமி.

அதுவரை சுமியுடன் இழைந்தபடி பேசிக் கொண்டிருந்தவன் அதற்குமேல் அந்த விசயங்களைப் பற்றி சுமியிடம் பேச விரும்பாததால், “குளிச்சிட்டு வரேன்” மனைவியிடமிருந்து விலகி குளியலறையை நோக்கிச் சென்றுவிட்டான்.

“போடா போக்கிரி.  எனக்கு பதில் சொல்லாம நீ எஸ்கேப் ஆகறதுகூடத் தெரியாமயா நான் இருக்கேன்.  எங்கிட்ட சொல்லாம இருந்தா உன்னோட பிளான் எல்லாம் கண்டிப்பா சொதப்பத்தான் போகுது பாரு” எனக் கத்தினாள் சுமி, ஜேப்பி சென்ற திசையை நோக்கி.

குளியலறையின் கதவைத் திறந்தபடியே, “ஒரு தடவை பட்டும் நான் அவேர்னஸ்ஸோட இருக்கலைன்னா நான் வாழவே தகுதியில்லாவன்னு அர்த்தம்டீ” என்றதோடு, “பிளானைச் சொன்னா, நீதான் டென்சனா இருப்ப.  அதுக்காகத்தான் சொல்லலை!” கூறினான ஜேப்பி.

“இப்டித்தான் நீயா எதுவோ பண்றேன்னு, எம்புள்ளைய கொன்னு எங்கிட்ட இருந்து பிரிச்சிட்ட” சட்டென விழிநீரோடு கூறியவளைக் கண்டதும், ஜேப்பியும் பதறிப் போனான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், “நடந்ததைப் பத்தியே யோசிக்காம, நடக்கப் போறதை மட்டுமே யோசி சுமி.” அதற்குமேல் தாமதிக்காது, உள்ளே சென்று குளியலறைக் கதவைப் பூட்டிக் கொண்டான் ஜேப்பி.

ஷவருக்கு அடியில் ஆடைகளை களையாமல் நனைந்தவாறு நின்றவனுக்கு, சம்பவம் நடந்த அன்று அவன் விரைந்து சென்றபோது நடந்த நிகழ்வுகள் அனைத்தும் படம்போல மனத்திரையில் ஓடியது.

அந்த நிகழ்வின் தாக்கம் இன்னும் தன்னுள் அப்படியே இருப்பதை உணர்ந்தவன், ‘எதிரிக்குக்கூட இப்டியொரு நிலை வரக்கூடாது’ என நினைத்தவாறே குளித்து முடித்து வந்தபோதும், இன்னும் ஷ்யாமின் நினைவில் அழுகையிலிருந்து மீளாமல் இருந்தவளைத் தோள்வளைவில் அணைத்துத் தேற்ற முயன்றான் ஜேப்பி.

குளிக்கச் செல்கிறேன் என்றவளைத் தடுத்தவன், “வேணா ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கோடீ”, ஜேப்பியின் கூற்றை மறுத்துவிட்டு அவசரக் குளியலோடு வெளிவந்தாள் சுமி.

இன்னும் ஷ்யாமின் நினைவில் அழுகையோடு உண்ணாமல் அடம்பிடித்தவளை, “சொன்னா புரிஞ்சிக்கோடீ.  அழறதை நிறுத்து.  சாப்பிட வா.  நீ இப்டியே அழுதுட்டு இருந்தா, அது  வயித்தில இருக்கற குழந்தையையும் பாதிக்கும்ல” ஜேப்பி எடுத்துக் கூற,

“இதுவே உன்னோட குழந்தைனா இப்டி விட்டுருக்க மாட்டதான.  அது வேற யாரோட குழந்தையோன்னுதான போனாப் போயித் தொலையட்டும்னு எரிஞ்சி சாம்பலாகறவரை விட்டுட்ட! சரியான கல்நெஞ்சுடா உனக்கு” அழுகையோடு அவனது மார்பில் தனது கைகளால் அடித்தபடியே கேட்டாள் சுமி.

“சுமீ, நீ எப்டி வேணா என்னை இம்சை பண்ணு.  வேணாங்கலை.  ஆனா சாப்பிட்டு எங்கிட்ட தெம்பாப் பேசு, இல்லை திட்டு, அடி.  பட்டினியா மட்டும் இருக்காத” காரியத்தில் கண்ணாக இருந்தான் ஜேப்பி.

“சரியான சுயநலவாதிங்களா இருக்கீங்கடா, நீயும் உன்னோட ஃபேமிலியும்” என்றவள்,

“நீ என்னைக் கண்டுக்காம இருந்தப்போகூட இவ்ளோ வலிக்கலைடா.  ஆனா, கல்யாணம் பண்ணி, நீ ஷ்யாமைக் கன்சிடர் பண்ணாம இருந்தது. அப்புறம் அவன் மொத்தமா என்னைவிட்டுப் போனது, அப்புறம் உங்க குடும்பத்தைப் பத்தித் தெரிய வந்தபின்ன, என்னால சுத்தமா முடியலைடா” என்றபடியே அவன் ஊட்டியதை வேண்டா விருப்பாக அழுகையோடு உண்ணத் துவங்கினாள்.

“நான் வந்தாதான் நீ ரொம்ப முரண்டு பண்ற மாதிரித் தெரியுதுடீ.  இத்தனை நாள் சமத்தாதான இருந்திருக்க” என்றவனை நோக்கி,

“அது எப்டி அவ்ளோ கரெக்டா சொல்ற.  உன்னோட விழுது சொல்லுச்சா” சுமி தேம்பலோடு ஜேப்பியிடம் வம்பிழுக்குமாறு பேச,

“யாரும் இதையெல்லாம் சொல்லாமலேயே உன்னைப் பாத்ததுமே கண்டுபிடிச்சிட்டேன்” சிரித்தான் ஜேப்பி.

ஜேப்பியின் பளீர் சிரிப்பில் அவனது வரிசையான பல்வரிசையும், உதடுகளுக்கு மேலே ட்ரிம் செய்யப்பட்டிருந்த மீசையும் அவனது வசீகரத்தைக் கூட்டிக் காட்ட, அவனது சிரிப்பில் கவரப்பட்டு அதுவரை இருந்த மனநிலையில் இருந்து வெளிவந்தவள்,

“சிரிச்சே என்னை உம்பக்கமாச் சாய்க்கிறடா” என்றபடியே வாகாக அவனது தோளில் சாய்ந்துகொண்டு, கள்ளப் பார்வை பார்த்தாள் கணவனை.

சுமியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தபடி இருந்தவன், “புருசனை யாரும் இப்டி தெரியாம சைட் அடிக்க மாட்டாங்க சுமி.  இன்னும் ஏன் என்னைத் திருட்டுத்தனமாப் பாக்கற” ஜேப்பியும் சுமியிடம் சீண்ட,

“சகவாச தோசம்போல, இது பழக்க தோசம்” அதேநிலையில் அமர்ந்படியே உரைத்தாள் சுமி.

அடுத்து சிறிதுநேரம் காதலோடு மோதிக் கொண்டிருந்தவர்கள், கார்த்திக்கின் அழைப்பில் நடப்பிற்கு வந்தனர்.

அழைத்தவன், சச்சிதானந்தனிடம் மருத்துவர் கூறியதை அவர் கூறக் கேட்டு, அப்படியே ஜேப்பியிடம் கூறிவிட்டு, “இவரை ட்ரீட்மெண்ட ஒழுங்கா எடுக்க வைக்கணும்டா.  இல்லைனா பெரிசா ஏழரை எதையாவது இழுத்து விட்ருவாருனு எல்லாரும் பயப்படறாங்க.  நீ சொன்னா மட்டுந்தான் கொஞ்சம் கேப்பாரு.  வர்றியாடா?” தம்பியை திருச்சிக்கு வரும்படி அழைக்க,

“நான் கல்கத்தா சைட் விசிட்காக வந்தேன்.  இன்னும் நாலு நாள் கழிச்சித்தான் நீ சொன்னதை கன்சிடர் பண்ண முடியும்” என்றதோடு பொதுவான தொழில்முறைப் பேச்சுக்களோடு, தான் இருக்குமிடத்தையும் மறைத்துக் கூறி பேச்சை முடித்துக் கொண்டான் ஜேப்பி.

ஜேப்பிக்கு, தனது குடும்பத்திற்கு நடந்த அசம்பாவிதம் எதுவும் ஏனையோருக்கு பகிரப்படாது இருப்பதையும் கார்த்திக்கின் பேச்சின் வழியே யூகம் செய்து கொண்டவன், தானாகச் சென்று எதையும் பேச வேண்டாம் என இருந்துகொண்டான்.

கண்விழித்தவர், சச்சிதானந்தன் கூற வந்த செய்தியைக் கேட்கும் பொறுமையின்றி, “யாரையும் காணோம்.  எங்கடா எல்லாரும் போயித் தொலைஞ்சீங்க” சீற்றத்தோடு துவங்க,

“ப்பா, ரொம்ப கோபப்படாதீங்க” துவங்கிய சச்சிதானத்தை தனது முறைப்பாலேயே அடக்கியிருந்தார் சிவபிரகாசம்.

அதேநேரம் அங்கு வந்திருந்த கார்த்திக்கைக் கண்டவர், மற்றவர்களை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு, “எப்போடா அவனோட பிஸினெஸ் பார்ட்னர்ஷிப்ல இருந்து பிரியப்போற?” வினவ,

“அதுக்குரிய வேலைகள் போயிக்கிட்டு இருக்கு தாத்தா. இப்ப நீங்க இருக்க நிலையில இதைப்பத்திப் பேசாம, ட்ரீட்மெண்ட்கு கோவாப்ரேட் பண்ணலாம்ல” என்றவனை இடைமறித்தவர்,

“எனக்கென்னடா நான் ராஜாவாட்டம் இருக்கேன்” என்றுவிட்டு, தனது காதைக் காட்டி, “இதெல்லாம் சீக்கிரமாச் சரியாகிரும்டா” அசட்டையாக உரைத்தவர், “உந்தொம்பி ஃபேமிலி கூண்டோட கைலாசம் போன சேதி உனக்குத் தெரியுமா? தெரியாதா?” எனக் கேட்டதும் பதறியவன்,

“இப்பக்கூட அவனோட பேசினேனே.  அப்டி எதுவும் அவன் எங்கிட்ட சொல்லலையே” என்றவாறே தாத்தாவிடம் பேசிவிட்டு வெளியில் வந்ததும், முன்னிரவான போதும் ஜேப்பிக்கு மீண்டும் அழைத்தான் கார்த்திக்.

ஜேப்பி எடுக்காமல் தாமதிக்க, எப்போதும் மிஸ்டு கால் பார்த்துவிட்டு அழைக்கட்டும் என மிதர்ப்பாக இருப்பவன், விடாமல் மீண்டும் அழைப்பைத் தொடர்ந்தான் கார்த்திக்.

அழைப்பை ஜேப்பி ஏற்றபோது இடைப்பட்ட பெண்குரலைக் கேட்டதும் கார்த்திக் என்ன செய்தான்?

***

Leave a Reply

error: Content is protected !!