தோளொன்று தேளானது 19(அ)

தோளொன்று தேளானது 19(அ)

தோளொன்று தேளானது! 19A

நெடுநாள் அலைச்சலும், மனதின் அலைக்கழிப்புமாக ஜேப்பியை அசத்தியிருக்க, உறக்கத்தை தழுவியிருந்தான்.  அந்த நேரத்தில் அழைப்பு வர கனவிற்கும் நனவிற்கும் இடையே அல்லாடிய மனதால் அதனை ஏற்காமல் அப்படியே விட்டிருந்தான் ஜேப்பி.

கணவன் போனை ஏற்கவில்லை என்றதும் முதல் அழைப்பின்போது பொருட்படுத்தாது விட்டிருந்தாள்.  அடுத்தும் அழைக்க, அதனை எடுக்க ஜேப்பியின் அணைப்பிலிருந்த சுமி எழ, அவளின் அரவத்தில் உணர்வு பெற்றவனாக கண்விழித்து போனை எடுப்பவளைப் பார்த்தான் ஜேப்பி. 

அதற்குள் படுக்கையருகே இருந்த டேபிளின்மீது வைக்கப்பட்டிருந்த போனை எட்டி எடுத்திருந்தவளிடம், அதனை வாங்க அவளை நோக்கிக் கையை நீட்டினான் ஜேப்பி.

சுமியும் அழைத்தது யாரென்று பாராமலேயே, “நேரங்கெட்ட நேரத்தில யாரு உனக்கு கால் பண்றது?” உறக்கக் கலக்கத்திலேயே ஜேப்பியிடம் கேட்க, அதற்குமுன் கார்த்திக்கின் அழைப்பைக் கண்டு அதனை ஏற்றிருந்தான். அதேநேரம் ஜேப்பியின் எதிர்முனையில் காத்திருந்த கார்த்திக்கிற்கு சுமி பேசியது தெளிவாகக் கேட்டிருந்தது.

கார்த்திக் அத்தி பூத்தாற்போலவே தனது அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் சுமியோடு அலைபேசியில் அலுவல் சார்ந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் உரையாடியிருக்கிறான் அவ்வளவே. 

அதனால், அந்த இடையுற்ற பெண்ணது பேச்சு குரல் சுமியுடையது என ஆழமாக அவனால் நம்ப முடியவில்லை.  ஆனாலும், அது சுமியாக மட்டுமே இருக்கக்கூடும் என திடமாகவே அனுமானித்தான்.

இந்த நேரத்தில் கார்த்திக் தனக்கு எதற்கு அழைத்திருக்கிறான் என எண்ணியபடியே எழுந்து அறையிலிருந்து ஹாலுக்குச் சென்ற ஜேப்பி, “என்ன கார்த்தி, எனி எமெர்ஜென்சி” கேட்டவனின் குரலில் என்னவோ, ஏதோ என்கிற பதற்றம் தெளிவாகவே எதிரிலிருந்தவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

“தாத்தா, உன்னைப்பத்தி என்னென்னவோ சொல்றாரேடா.  என்னடா? யாருக்கு என்னாச்சு!” பதறியவாறு கேட்டான் கார்த்திக்.

கார்த்திக்கின் வார்த்தையில் இருந்த பதற்றம் ஏறத்தாழ எண்ணூறு மைல் தூரத்திற்கப்பால் இருந்த ஜேப்பியால் அப்படியே உள்வாங்க முடிந்தது.

இருவரும் யாரிடமும் தங்களை விட்டுக் கொடுத்ததில்லை இதுவரை. ஆனால், தானறியாமல் ஏதோ பிரச்சனையில் தம்பியிருக்கிறான் எனக் கேட்டதும் மிகுந்த மனவேதனைக்கு ஆட்பட்டிருந்தான் கார்த்திக்.

அதேபோலத்தான் ஜேப்பியும்.  நூறு சதவீதம் கார்த்திக்கை நன்கறிவான்.  வேலையில் கெட்டிக்காரனாக, பெரியவர்களிடம் மரியாதையோடும், தம்பிக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதவன் என்று.

ஆரம்பத்தில், தாத்தாவின் வாயிலாக சுமிக்கு குழந்தை என்றதும், வேறு யாரையும் சுமி திருமணம் செய்து கொண்டாளா எனும் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் ஜேப்பி.

ஆனால், ஷ்யாமின் பிறப்புச் சான்றிதழ் கைக்கு வந்ததுமே, ‘எப்படி இது சாத்தியம்’ என்கிற யோசனையின் ஆழ்ந்திருந்தான்.  அதனை நீட்டிக்க விரும்பாது, தனது கஷ்டடியில் சுமி மற்றும் ஷ்யாமை விரைவில் கொண்டு வந்திருந்தான்.

உடனடியாக சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள எண்ணி உரிய மருத்துவ அறிக்கைகளைப் பெற்று அனைத்தையும் தனது பார்வைக்குக் கொண்டு வந்திருந்தான் ஜேப்பி.

சுமியின் பேச்சைக் கேட்குமுன்னே, தெளிவின்றி இருந்தான் ஜேப்பி.  ஆனால் அவளறிந்த ஷ்யாம் பற்றிய விபரங்களைக் கேட்டதும், அவன் யாருடைய பிள்ளையாக இருக்க முடியும் என்பதை அப்போதே யூகித்திருந்தான்.

ஆனால், ஷ்யாம் எனும் ஒருவனை வெளி உலகிற்கு இன்னாருடைய மகன் எனக் கொண்டு வரும்போது உண்டாகக்கூடிய பெரும் பிரச்சனைகளையும் உணர்ந்திருந்தமையால், அவனை இறுதிவரை தனது பொறுப்பாக்கிக் கொள்ளத் தீர்மானித்திருந்தான் ஜேப்பி.

அப்படித் தெரிய வரும் நிலையில் குழந்தைக்குத் தகப்பனின் மனைவியை முதலில் சமாளிக்க வேண்டும்.  அதன்பின், அவனது தாத்தா.  அடுத்து அவனது குடும்பத்து உறுப்பினர்கள்.  இறுதியாக, தங்களது குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துள்ள அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது.

ஷ்யாம் தங்களோடு இருக்கும்போது, வெளி நபர்களை தங்களது திருமணத்திற்கு அழைத்தால் கேள்விகள் வரும்.  அதனைத் தவிர்க்கவே சொற்பமான நபர்களை மட்டுமே தனது திருமணத்திற்கு அழைத்திருந்தான்.

தாத்தாவின் முன்னிலையில் இதனைச் செய்ய நிச்சயம் அனுமதிக்க மாட்டார் என்பதும் ஜேப்பிக்குத் திண்ணம். மேலும், சுமியுடனான தனது திருமணத்தை அறிந்திருந்தால் நிச்சயம் அவளை உயிரோடு விட்டு வைக்க மாட்டார் என்பதும் அவன் அறிந்ததே. 

கார்த்திக்கை தனது திருமணத்திற்கு அழைத்திருந்தால், அவனையும் தன்னோடு சேர்த்து ஒதுக்கியிருப்பார் என எண்ணியே அவனையும் தவிர்த்திருந்தான்.

ஷ்யாம் என்பவன் யார் என்பதை, தான் கூறாமல் வெளி உலகிற்குத் தெரிய வரும் நிலையில் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான் ஜேப்பி.

ஷ்யாம் சார்ந்த விசயங்கள் அனைத்தையும் கண்டுகொண்டவன், தான் மேற்கொண்ட திருமணப் பந்தத்தோடு, அவனையும் தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகும் இடர்பாடுகளையும் சமாளிக்க எண்ணியே, இதுவரை கார்த்திக் வசத்தில்கூட எதையும் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை ஜேப்பி.

சகோதரன் தனக்காக பதறிப் பரிதவிப்போடு நடுஇரவில் பேசுவதைக் கேட்டதும் உண்மையை அப்படியே கூற விரும்பாமல், “விதைச்சவங்களுக்குத்தான என்ன போட்டோம், என்ன அறுவடை பண்ணோம்னு தெளிவாத் தெரியும் கார்த்தி.  அதைத்தான் சொல்லியிருப்பாரா இருக்கும். இதைக் கேக்கத்தான் இப்பக் கூப்பிட்டியா?” இலை மறை காயாக எஸ்ப்பியைப் பற்றிப் பேசினான் ஜேப்பி.

அவனது பேச்சைக் கேட்டவனுக்கு, அந்த பதிலின் வழியே ஜேப்பிக்கோ அல்லது அவனைச் சார்ந்தவர்களுக்கோ ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த கார்த்தி, “அவரு சொல்லித்தான் எனக்குத் தெரியணுங்கற அளவுல என்னை உங்கிட்ட இருந்து எட்டத்தான்(தூரத்தில்) நீ வச்சிருக்க.  அப்டித்தான?” தன்னை பொருட்டாகக் கருதாத தம்பியின் செயலில் உள்ளுக்குள் வலி தோன்றிட, ஜேப்பியிடம் தனது மனக்கிலேசத்தை உள்ளபடியே வெளியிட்டான்.

“அப்டியெல்லாம் இல்லை கார்த்தி.  என்னோட பாரத்தை உன் தோள்ல இறக்கி வைக்கணும்னா, நான் இல்லாமப் போயிருக்கணும். நான் இருக்கும்போது நாந்தான அதுக்குப் பொறுப்பேக்கணும்” ஜேப்பி உரைத்திட,

ஜேப்பியின் பதிலில் மேலும் கோபமுற்றவன், “என்னடா? நான், நீன்னு எல்லாம் பிரிச்சுப் பேசுற!  எப்ப இருந்துடா இப்டி மாறின?” தாங்க இயலாதவனாகக் கேட்டான் கார்த்திக்.

அத்தோடு விடாமல், “பெரியவரு சொல்லிட்டா, உன்னை விட்டுக் குடுத்துட்டு எனக்கென்னானு எல்லாத்தையும் பிரிச்சிக்கிட்டு, நான் உண்டு என் வேலையுண்டுனு போயிருவேன்னு நினைச்சியா?

இல்லை, என்னப்பத்தி என்ன நினைச்சி இப்டியெல்லாம் நீ நடந்துக்கற?” சகோதரனிடம் உரிமைப் போராட்டம் நடத்தத் துவங்கியிருந்தான் கார்த்திக் அந்நேரத்தில்.

“கூல் கார்த்தி” என்ற ஜேப்பியின் வார்த்தைகளைக் கேட்டதுபோலக் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்தான் கார்த்திக்.

“எதுக்குடா இப்டி எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறைக்க நினைக்கிற?  எதுனாலும் எங்கிட்டச் சொன்னா, உனக்கு சப்போர்ட்டா நானும் இருப்பேன்ல.  நான் நினைக்கிற மாதிரி நீ இல்லைடா.  வரவர ரொம்ப மாறிட்ட” குற்றம்சாட்டும் குரலில் பேசினான்.

“மாறலாம் இல்லை கார்த்தி.  இப்போதைக்கு இந்தப் பேச்சை விடு.  அந்த அயர்ன்மேன் எப்டி இருக்கார்?” அப்போதும் எஸ்ப்பியைப் பற்றி விசாரிக்கத் துவங்கினான் ஜேப்பி.

“அவருக்கென்ன?  வீடே அவரைச் சுத்தித்தான் இங்கயும் இருக்கு.  நாமதான் ஆளுக்கொரு பக்கமா தனியா எந்த ஆதரவும் இல்லாம அனாதை மாதிரி இருக்கறோம்.” வருத்தமாகவே பகிர்ந்தான் தங்களின் நிலையையெண்ணி.

“என்னைக்கு நாம ரெண்டு பேருமா தொழில்னு தனியா இறங்கினோமோ, அன்னைக்கே அவருக்கு நம்மைப் பிடிக்காமப் போயிருச்சு. 

எல்லாம் ஈகோதான்.  அதுக்காக, அவரு பிச்சுப் போடற ரொட்டித் துண்டுக்காக நாயி மாதிரி வாலாட்டிட்டே இருந்தா, அவரு காலத்துக்குப் பின்ன நம்ம நிலைமை என்னானு நாம யோசிச்சு செயல்பட்டதுதான் தப்பாத் தோணுது அவருக்கு.

அந்தத் துண்டு நமக்கு கிடைக்குமா இல்லையான்னே தெரியாம அவரு சொல்றதையெல்லாம் கேட்டுட்டு, அசந்தா நடுத்தெருவுலதான் நிக்கணும்.  அது தெரிஞ்சும் எப்டி அப்டி இருக்கறது?

சுதாரிச்சு, நாமளே எல்லாத்தையும் யோசிச்சு கிடைச்சதை வச்சி, அப்டியே இந்த நிலைமைக்கு வந்திட்டோம்.

நாம நமக்கான தகுதிய வளத்துக்கிட்டு, இந்த அளவுக்கு முன்னேறுவோம்னு அவரோ, நம்ம குடும்பத்துல உள்ள யாரும் எதிர்பாக்கலை.  ஆனா, அப்டி ஒரு விசயம் நடந்ததும், அதை ஏத்துக்கவும் முடியலை அவங்களால.

நம்மால எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண முடியும்னு காட்டினதுல, தாத்தாவுக்கு தோத்துப்போன மாதிரியாகிட்டார்.  எல்லாத்தையும் இழந்துட்டு அவருகிட்ட வந்து தஞ்சம்னு நிப்போம்னு நினைச்சார்.  அது நடக்கலை. எதாவது நம்மைப் பத்திப்பேச குறையா கிடைக்குமான்னு அப்போப்போ வந்து நம்மைப் பாப்பார்.  ஒன்னும் கண்ணுக்கு சிக்கலை.

உன்னோட இஷ்டத்துக்கு கல்யாணம் நீ செய்ததும், அதையே சாக்கா வச்சிட்டு, உன்னை எதிரி மாதிரி பாவிக்க ஆரம்பிச்சிட்டாரு. 

அதுக்காக, நல்லா இருக்கறவங்களை, இப்படியெல்லாம் பேசற அளவுக்கு இருக்காருனு பாக்கும்போது, இங்க வந்ததை நினைச்சு அசிங்கமா ஃபீல் பண்றேன்.” என்றான் கார்த்திக்.

ஜேப்பியுடன் சுமி இருக்கும்போது, எப்படி இந்தத் தாத்தா அபசகுனமாகப் பேசலாம் என்கிற கோபம் அதில் மறைந்திருந்தது.

“நம்ம வீட்டுப் பெரியவங்களும், அவரு கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாங்க.  அவங்களை விட்டுத்தர முடியாமத்தான் இன்னும் இங்க வந்து போயி இருக்கற மாதிரி இருக்கு” வேண்டா விருப்பாக வேதனையோடு கூறியவன்,

“இனியும் இப்டி இருக்காத ஜேப்பி.  அவ்ளோதான் சொல்ல முடியும் என்னால.  தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிட்டேன்னு நினைக்கிறேன்.  நீ போயி தூக்கத்தை கண்ட்டினியூ பண்ணு.  நான் காலையில பேசறேன்” தனது மனதிற்குள் குமைந்த விசயங்கள் அனைத்தையும் தம்பியிடம் கொட்டியிருந்தான் கார்த்திக்.

ஜேப்பி அதற்குமேல்  எஸ்ப்பியைப் பற்றிய விசயங்களில் ஆர்வம் காட்ட, தனது காதுக்கு எட்டியதைப் பற்றி எடுத்துக் கூறிய கார்த்திக், “உண்மையில நீ இப்ப எங்க இருக்கடா?” மீண்டும் வினவினான்.

“நேத்தே சொன்னேனடா கொல்கத்தானு.” நிறுத்தியவன், “ஏன் கேக்குற?” ஜேப்பி கேட்டான்.

“எதுக்கோ பயந்துட்டு, போற இடத்துக்கெல்லாம் கையோட வீட்டம்மாவையும் கூட்டிட்டுத் திரியறியாடா?” கார்த்திக் தனது யூகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டிக் கேட்டான்.

தாத்தா கூறியதுபோல அல்லாமல் தம்பி தற்சமயம் குடும்பமாக இருப்பதுகூட நிம்மதியான உணர்வைத் தந்தது கார்த்திக்கிற்கு.

தாத்தாவிற்கு தங்களின்மேல் ஏதோ மனக்குறை உண்டு என்பதை மட்டுமே இதுவரை யூகித்திருந்தான் கார்த்திக்.  ஆனால், கொலை செய்யுமளவிற்கு இறங்குவார் என்பதை இன்றுவரை அறியாமல் இருந்தான்.

“கூட்டிட்டுத் திரியலைடா” என்றவன், வேறு விசயம் எதுவுமில்லையென்றதும், அழைப்பைத் துண்டித்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் ஜேப்பி. அதற்குமேல் கார்த்திக்காலும் வற்புறுத்திக் கேட்க முடியாமல் நாகரிகம் கருதி விட்டிருந்தான்.

படுக்கையில் அமர்ந்தவன், சிறிதுநேரம் அப்படியே கார்த்திக்கின் பேச்சை அசைபோட்டபடியே அமர்ந்திருக்க, அந்நிலையில் ஜேப்பியைப் பார்த்த சுமி, “என்ன இந்நேரத்தில பிரச்சனை?”

“பிரச்சனையெல்லாம் எதுவுமில்லைடீ” விட்டேற்றிபோல பதில் கூறினான் ஜேப்பி.

“அப்ப ஏன் உக்காந்திருக்க?  படுக்க வேண்டியதுதான!” சுமி கூறியதும், படுத்தவாறு நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்தான் ஜேப்பி.

கார்த்திக்கிற்கு நடக்கும் விசயங்கள் எதுவும் தெரியாது.  ஜேப்பி கூறினாலும் அவன் எஸ்ப்பியை தவறாக எண்ண மாட்டான் என்பது ஜேப்பிக்குத் திண்ணம்.

சில விசயங்களை அவன் நம்புவான்.  சிலவற்றை ஏற்க மாட்டான்.

அவனிற்கு விசயம் தெரிந்திருந்தால், அதனைக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லவே வாயைப் பிடுங்கியிருக்கிறார் அந்த பெரிய மனிதர் என்பதை உணர்ந்தவன், இனி மிகவும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்று எண்ணியபடி, “சுமி, நாளைக்கு இயர்லியரா வெளியூர் போகணும்.  நீயும் கிளம்பி இரு” என்றான்.

“ஏன்?  எங்க போறோம்?” என்றவளின் கேள்வியில் மனைவியின் தலையை தடவிக் கொடுத்தவன், “பயப்படாமத் தூங்கு.  நாளைக்குப் போனதும் தெரிஞ்சிப்ப” என்றதும்,  எழுந்து படுக்கையில் அமர்ந்தவளை புரியாமல் பார்த்தான் ஜேப்பி.

“முதல்ல நீ எழுந்து உக்காரு.  உங்கிட்ட ரொம்ப முக்கியமான விசயம் பேசணும்” பீடிகையோடு துவங்கியவளின் முகபாவனையில், அவளின் தீவிரம் புரிய, ‘என்னத்தைக் கேட்டு தூங்கவிடாமப் பண்ணப் போறானு தெரியலையே?’ தனக்குள் யோசித்தவாறு மனைவியை நோக்கியவாறு படுக்கையில் சாய்ந்தவாறு எழுந்தமர்ந்தான் ஜேப்பி.

“நான் பயப்படலாம் இல்லை.  ஆனா நீ பயப்படறங்கறது நல்லாவே தெரியுது.  உண்மையிலேயே என்னதான் உன்னோட பிரச்சனை” அவளின் குரலில் கண்டிப்பாக நீ பதில் கூற வேண்டும் என்கிற தொனி தெரிய,

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், “நீ விசயம் தெரியாததால இப்டிப் பேசற” மெல்லிய குரலில் பதில் கூறினான் ஜேப்பி.

“விசயத்தைச் சொல்லு முதல்ல. அப்புறம் அது எப்டினு நானும் புரிஞ்சிக்கறேன்” என்றவள்,

கணவன் வாயைத் திறக்காமல் இருப்பதைக் கண்டு, “இப்ப சொல்லப் போறீயா மாட்டியா?” விடாமல் பிடிவாதமான குரலில் கேட்டாள்.

அமைதியாக இருந்தவனை நோக்கி, “பிரச்சனை எதுவும் இல்லை.  நீ பயப்படவும் இல்லைனு வச்சிக்குவோம்.  அப்புறம் எதுக்கு, கட்டுன பொண்டாட்டிய வேற ஊருக்குக் கூட்டிட்டு வந்து, புதுசா ஒரு போஸ்ட்டைக் கிரியேட் பண்ணி உன்னோட கம்பெனியிலேயே யாரோ மாதிரி வேலைக்கு வைக்கணும். 

அந்த பழைய வீட்டுலயே என்னை விட்டுருக்கலாம்ல. ஒரு வயசான மனுசனைப் பாத்து, ஏன் பயந்து ஊர், ஊரா என்னை மறைச்சு வச்சிக்க நினைக்கணும்.இப்பவும் பாரேன்.” நிறுத்தியவள்,

“யாரோ போன்ல பேசுனதும், உடனே அடுத்த ஊருக்கு கொண்டுபோயி என்னை மறச்சி வைக்க நினைக்கற.  அப்ப ஒன்னுமில்லைனு நீ சொல்றது எல்லாம் பொய்யிதான!

இப்டி நீ ஒருத்தவனே மண்டையப் போட்டு உருட்டிக்கிட்டு இருந்தா, ஷ்யாம் போன மாதிரி குடிசீக்கிரம்(விரைவில்) நானும் ஒரு நாள் அவம்போன இடத்துக்கே போயிச் சேந்திருவேன்னு நினைக்கிறேன்.” என்றவளின் வார்த்தையைக் கேட்டு கோபமானவன்,

“லூசு மாதிரிப் பேசாத!  எப்பப் பாத்தாலும் இதையே ஏன் சொல்லுற?” எனக் கத்தினான் ஜேப்பி.

***

Leave a Reply

error: Content is protected !!