தோளொன்று தேளானது 7
தோளொன்று தேளானது 7
தோளொன்று தேளானது! 7
“அப்தியா!” என சாதாரணமாகக் கேட்டவன், “மீக்கித்த போயித்தே பேசலாம்” முன்னே கை காட்டிவிட்டு நடந்த சிறுவனை, தானறியாமலேயே பின்தொடர்ந்திருந்தான் ஜேப்பி.
“இவ்ளோ நாள் நீங்க எங்க இதுந்தீங்க?” எனும் கேள்வியை ஜேப்பியை நோக்கி எழுப்பியபடி, படியில் ஏறத் தடுமாறினான் ஷ்யாம். தடுமாறினாலும், சமாளித்து ஏறியவனை, ஜேப்பியாகவே சென்று ஷ்யாமிற்கு உறுதுணையாக கைபிடிக்க, ஜேப்பியின் கையிலிருந்து தனது கையை உருவிக் கொண்ட ஷ்யாம், “நானே வதுவேன்” மிடுக்காகக் கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தான்.
எதுவும் பதில் கூறாமல், ஷ்யாமின் செயல்களைக் கவனித்தவாறே வந்தவனுக்குள், சுமித்ராவிற்கு இவனைப் பார்த்ததும் சரியாகிவிடுமா எனும் கேள்வியோடு, சிறுவனது செயல் பற்றிய தாக்கமும் சேர்ந்து, தெளிவாக சிந்திக்க இயலாத நிலையில் மேலேறினான் ஜேப்பி.
“உங்கத்ததான் கேத்தேன்” தன்னைப் பின்பற்றி பொறுமையாக வரும் ஜேப்பியை படியில் நின்றபடி திரும்பிப் பார்த்தவாறு கேட்டான் ஷ்யாம்.
“ம்ஹ்ம்… என்ன கேட்ட?” சலிப்போடு ஜேப்பி கேட்டதும்,
“தென்சனா இதுக்கீங்களா? நான் சொன்னதைக் கேக்கலையா?” சரியாகக் கணித்துக் கேட்டான் ஷ்யாம்.
சிறுவனின் இடைவிடாத பேச்சில் சட்டென மூண்ட எரிச்சலோடு, “டேய், பெரியவனாட்டம் வயசுக்கு மீறி என்ன பேச்சு. பேசாம வாடா!”என ஜேப்பி அதட்ட, அந்த இடத்தில் ஷ்யாம் வயதொற்றிய வேறு குழந்தையாக இருந்திருந்தால் அழுதிருக்கும். ஆனால் ஷ்யாம் மாறாக வந்தது ஜேப்பிக்கு வித்தியாச உணர்வைக் கொடுத்தது.
“கேத்ததுக்குப் ஒதுங்கா பதில் சொன்னா, நான் எதுக்கு திதும்பக் கேக்கப் போதேன்” என்றவன், தலையில் அடித்தவாறு நடையைத் தொடர்ந்தான்.
பொறுமையிழந்த ஜேப்பி, ஷ்யாமைவிட்டு முந்திய படியில் காலடி எடுத்து வைத்ததும், நினைவு வந்தாற்போல அன்னார்ந்து ஜேப்பியைப் பார்த்தபடியே, “ஜெயபிதகாஷ்னு கிளாஸ்மேத் இதுக்கான். அப்புதம், எங்க தாதி பேதும் இதுதான்னு மீ சொல்லிதுக்கா” என்றபடியே வந்த ஷ்யாம் ஒரு வழியாக முதல் தளத்திற்குள் அடியெடுத்து வைத்திருந்தான்.
ஷ்யாம் கூறியதைத் தான் கேட்டாலும், அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பது புரிந்தாலும், எதுவும் பேசாமல் ஒருவர்பின் மற்றொருவராக சுமியின் அறை வாசலை அடைந்திருந்தார்கள் இருவரும்.
ஜேப்பி சுமியின் அறைக்குள் நுழைய எத்தனிக்க, “இங்கதான் மீ இதுக்காளா?” ஜேப்பியிடம் பெரியாள் தோரணையில் வினவினான் ஷ்யாம்.
“டேய்! அவ, இவன்னு என்னடா பேசற? மரியாதையாப் பேசுடா!” ஷ்யாமை ஜேப்பி அதட்ட,
“கேத்தா, பதிலே சொல்ல மாத்தியா நீ” ஷ்யாம் விடாமல் கேட்டதும்,
“முளைச்சு மூனு இலை விடலை. நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லணும். ஆனா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்ல மாட்டியா? இந்த வயசிலேயே எப்டிடா இப்டி வளந்த? எல்லாம் என் நேரம்” என்றவன்,
சுமியின் படுக்கையருகே சென்று, “சுமித்ரா, ஷ்யாம் வந்திருக்கான். கண்ணைத் திறந்து பாரு” இயந்திர கதியில் கூறினான்.
அதற்குள் சுமித்ரா படுத்திருப்பதைப் பார்த்ததும், அவளின் அருகே படுக்கையில் ஏறி, சுமியின் முகத்தருகே சென்று ஆழ்ந்து நோக்கியவன், அவள் உறக்கத்தில் இல்லை. வேறு ஏதோ உடல் உபாதையில் இருக்கிறாள் என்பதை அவளின் வதனத்தில் இருந்த வாடிய தன்மையில் உணர்ந்த ஷ்யாம், “மீ… மீ…” என இருமுறை கன்னம் வருடி அழைத்தான்.
எந்த பிரதிபலிப்பும் இன்றி, அப்படியே படுத்திருந்தாள் சுமித்ரா. ஷ்யாமிற்கு முகம் வாட, “மீ! நான் உன்னோத ஷ்யாம் வந்திதுக்கேன். கண்ணைத் திதந்து பாதுதா(பாருடா)!” தன்னை சுமி, அவனது உடல்நலக் குறைபாட்டின்போது அழைப்பதுபோல, தற்போது தாயிருந்த நிலையைப் பார்த்து அப்படி சுமித்ராவை அழைத்தான் ஷ்யாம்.
சுமியின் முகத்தை, தனது பிஞ்சுக் கரங்களைக் கொண்டு வருடியவன், “என்ன செய்யிது. நான் உன்னை ஆஸ்பிதல் கூத்தித்து போதேன்தா. ப்ளீஸ்தா. கண்ணைத் தொதந்து உன்னோத ஷ்யாமப் பாது” சிறுவனின் கெஞ்சலைக் கண்ட ஜேப்பிக்கு நெஞ்சில் ஏதோ செய்தது.
ஆனால் சிறுவன் விடாது, மீ, மீ எனக் கெஞ்சியும், கொஞ்சியும் பதினைந்து நிமிடங்களில் சுமித்ராவைக் கண் விழிக்கச் செய்திருந்தான்.
சுமியின் ஜீவனில்லாத கண் திறந்ததைக் கண்ட ஷ்யாம், “என்னதா(என்னடா) செய்யுது. மீக்கு ஷ்யாமித்த இதுந்து என்ன வேணும்” பிஞ்சுக் கரங்களால் கன்னங்களைப் பிடித்தபடியே தாயிடம் கேட்டான்.
ஷ்யாமைக் கண்டதுமே, புன்முறுவல் சுமியின் இதழ்களில் தோன்றிட, அனைத்தையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டு அருகில் நின்ற ஜேப்பிக்கு எங்கோ பயங்கரமாகத் தோற்ற உணர்வு.
ஷ்யாம் பேசத் துவங்கியதும் அமைதியானவன், தான் முந்தைய தினம் வந்தது முதல் நடந்ததை யோசித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜேப்பி.
சரியாக இன்றைய நாளில்தான் சுமித்ராவிற்கும், தனக்குமான திருமணத்தை முடிவு செய்திருந்தான் ஜேப்பி. ஆனால் அதற்குமுன்பே உண்ணாவிரதம் இருந்து, மயங்கியவளைக் கண்டதும், பதறி ஓடி வந்தவன் அவளின் மனம்போன போக்கிலான வாழ்வினால் எழுந்த கோபத்தை உதறிவிட்டு வந்திருந்தான்.
அவளின் உடல்நிலையில் இருந்த பின்னேற்றத்தால், அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்த தேவியை அறையிலிருந்து அகற்றிவிட்டு சுமியிடம் வந்தவனுக்கு அத்தனை வெறுமை மனதில்.
யாருக்காக தான் இத்தனையும் செய்தோமோ அவள் இந்த இடத்தை, அப்பியாசிக்க முடியாமல் மயங்கி இருப்பதைக் கண்டு சுணங்கியவன், சுமியின் அருகே வந்து, “சுமித்ரா நான் உன்னோட ஜேப்பி வந்திருக்கேன். எனக்காக கொஞ்சம் எந்திரி” அப்போதும் கட்டளையாகக் கூறியபடி தன்னவளின் அருகே வந்து நின்றான் ஜேப்பி.
அடுத்தடுத்து அவளின் கால்களை வருடியவாறும், பின் முகத்தைப் பிடித்து ஆட்டியும் அழைத்த ஜேப்பியின் இடைவிடாத குரல் அவளின் காதுகளை எட்டவே இல்லை என்பதே, பத்து நிமிடங்களுக்குப்பின்தான் ஜேப்பிக்கு புரிய வந்தது.
முகத்தை ஆவேசமாக அசைத்து கத்தி அவளிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் தனது செயலுக்கு இல்லை என்பதை உணர்ந்ததும், பயந்து போனவன், மருத்துவரை அழைத்திருந்தான்.
வந்து பார்த்த மருத்துவர், ஏதோ அதிர்ச்சி உண்டாகியதிலும், உண்ணாமையாலும் இந்நிலைக்கு வந்திருக்கிறாள் என்பதைக் கூறியதோடு, இந்த மருந்துகளை வாங்கிக் கொடுங்கள் என மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.
மருத்துவர் சென்றதும் மருந்துகள் வாங்கி தேவியின் உதவியோடு புகட்டப்பட்டு, நான்கு மணி நேரமாகியும் அவளிடம் எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இல்லாமல் போனதும், பதறி நகரிலிருந்து வேறொரு மருத்துவரை அங்கு தெரிந்த நபர் மூலம் ஏற்பாடு செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான் ஜேப்பி.
அப்போது காய்ச்சலோடு, அனத்தலாக ஷ்யாம், ஷ்யாம் என சுமித்ரா அழைத்ததைக் கண்ட மருத்துவர், சுமித்ராவின் இந்நிலைக்குக் காரணம், ஷ்யாம் எனும் பெயருக்குரிய நபரே. ஆகையினால், அவனை அழைத்து வந்தால் சுமித்ரா சரியாகிவிடக்கூடிய வாய்ப்புள்ளது எனக்கூறிக் கிளம்பியதும், சற்று நேரம் சிந்தனை வயப்பட்ட ஜேப்பி ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
அதன் பிறகு சாந்தனுக்கு அழைத்து, ஷ்யாமை இங்கு அப்போதே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தான். ஷ்யாம் வரும்வரை, அவளோடு ஒரே படுக்கையில் அணைத்தபடி, சுமீ என அழைத்துக் கொண்டேயிருந்தபோதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.
இடையில் நெற்றியை வருடிக் கொடுத்தான். கால்களைப் பிடித்து விட்டான். தலையை கோதி விட்டான். ஆனால் எந்த முன்னேற்றமும் அப்போது சுமித்ராவிடம் இல்லை.
ஆனால், ஷ்யாம் வந்து பத்து முதல் பதினைந்து நிமிடத்தில் கண்ணைத் திறந்த சுமித்ராவிடமும், ஷ்யாமிடமும் மட்டுமே தனது பார்வையைப் பதிந்திருந்தவன், இருவரின் பிணைப்பையும், ஒருவருக்கொருவர் அணைத்துக் கொண்டு, தங்களின் அன்பைக் காட்டியவாறு, தான் அங்கு நிற்பதையே பொருட்படுத்தாமல் இருந்த இருவரின் செயலில் உண்டான எரிச்சலோடு, இடர்பாடு செய்ய எண்ணிச் செருமினான்.
நடப்பிற்கு வந்த சிறுவன், “மீ இவது பேதும் ஜெயப்பிதகாசாம்” என சிரித்தபடியே தாயிக்கு ஜேப்பியை அறிமுகம் செய்தான். ‘ம்’ என மகனிடம் கூறிவிட்டு, சுற்றம் அப்போதுதான் உணர்வுபெற்றவளாய், ஜேப்பியின் முகத்தைப் பாராமலேயே, “ஜேப்பி, என்னையும் என் பையனையும் விட்டுரு. நாங்க எங்காவது போயிறோம்.” எனும் தலை குனிந்தபடி பேசிய சுமித்ராவின் வார்த்தையைக் கேட்டதுமே,
அதுவரை விளையாட்டுப் பிள்ளைபோல தாயிடம் கொஞ்சிக் கொண்டிருந்த ஷ்யாம், சட்டென தாயை, தாவி அணைத்துக் கொண்டவன், “என்ன மீ. இவன் கெத்தவனா?” குனிந்திருந்த தாயின் முகத்தை நோக்கிக் குனிந்தபடியே, மெதுவாக தாயிடம் ரகசியக் குரலில் கேட்டான்.
ஆனால் ஷ்யாம் கேட்டது ஜேப்பியின் காதில் விழுந்ததும், “ஒரு குழந்தைய எப்டி நீ வளத்து வச்சிருக்க சுமீ. எனக்கு இப்ப உம்மேலதான் எரிச்சலா இருக்கு.” என்றதோடு,
“இன்னைக்கு ஏற்பாடு பண்ணியிருந்த கல்யாணம் உன் ஹெல்த்தால நின்னு போச்சு, ஆனா.. நாளைக்கு கண்டிப்பா நடக்கும். நடக்கணும். அதுக்குள்ள உன்னை ரெக்கவர் பண்ணிக்கோ. இவனை முதல்ல இங்க இருந்து அனுப்பிறேன்” என்றதும்,
“யாது மீ இது. அதகண்டா(அரகண்டா) இதுக்கான்” என்றதுமே, ஷ்யாமின் பேச்சில் எழுந்த சினத்தால், சட்டென ஷ்யாமின் பின்பக்க சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கியவன், சுமித்ரா விடாமல் ஷ்யாமைப் பிடித்ததை மீறி, வலுவோடு தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஜேப்பி.
சுமித்ராவிற்கு உடலெங்கும் அசதியால் ஓய்ந்து இருந்தமையால், அவளால் ஷ்யாமை இறுகப் பிடிக்க முயலாமல், “ஷ்யாம்ம்ம்…” எனும் ஈனஸ்வரக் குரலோடு கையிலிருந்து நழுவ விட்டிருந்தாள்.
தன்னைப் பின்னோடு ஜேப்பி பிடித்துத் தூக்குவதை உணர்ந்த ஷ்யாம், “மீ…” கைகளை சுமித்ராவை நோக்கி நீட்டியவாறு கால்களிரண்டையும் உதைத்தபடி கத்த,
“நான் ஒழுங்காத்தான் இவ்ளோ நாள் இருந்தேன். உங்கம்மாதான்…” என்றவன், உடனே சுதாரித்துக் கொண்டு, “இந்த சுமித்ராங்கிற சித்தராங்கிக்காக இவ்ளோ தூரம் யோசிச்சு, ஒவ்வொன்னையும் பிளான் பண்ணிச் செஞ்சா, குழந்தைனு நீ இருக்க. இன்னொருத்தன் கூடவே இருந்து இன்னும் என்னை கடுப்பேத்தறான்.” என்றவனது பேச்சைக் கேட்டு,
“ஜேப்பி. என்ன பேசுறோம்னு யோசிச்சுப் பேசு. ஷ்யாமை நீ குறைச்சு எடைபோட்டு, வாயில வந்ததை அவன் முன்ன பேசாத” என தன்னால் இயன்றவரையில் எச்சரிக்கைக் குரலில் பேசினாள் சுமி.
“இப்ப உன்னோட ஹெல்த் இஸ்யூனால, இவ்ளோதூரம் நான் இறங்கி வரவேண்டியதாப் போச்சு சுமி. இப்பவும் நீ சரினு ஒத்துக்கிட்டா எல்லாம் சுமூகமாப் போயிரும். இல்லைனா இன்னும் வேண்டாத விசயமெல்லாம் நடக்கும்” என்றவன்,
ஷ்யாமிடம் திரும்பி, “இது எதுவும் இனி உனக்கு வேண்டாத விசயம். முதல்ல நீ இங்க இருந்து ஊருக்குக் கிளம்பு. அப்பத்தான் நான் நிம்மதியா இருக்க முடியும்” கூறிவிட்டு அவனைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான் ஜேப்பி.
“மீ… இவன் யாதுன்னு இன்னும் நீ சொல்லவே இல்லை.” தன்னைத் தூக்கிக் கொண்டு ஜேப்பி சென்றாலும், அவனிடமிருந்து திமிறிக் கொண்டு இறங்க முயன்றபடியே கத்தினான் ஷ்யாம்.
“அவந்தாட்டா உங்கப்பன்!” கோபத்தோடு, தன்னையும் மீறிக் கத்திவிட்டு, தலையைப் பிடித்தபடி கதறத் துவங்கியிருந்தாள் சுமி.
சுமியின் வார்த்தையைக் கேட்டதும் சட்டென நின்று, அறைக்குள் மீண்டும் ஷ்யாமோடு வந்தவன், ஷ்யாம் வலுக்கட்டாயமாக அவனது கைகளிலிருந்து இறங்க முயன்றாலும், விடாமல் பிடித்துக் கொண்டவன், “யாரு, யாருக்குடீ அப்பன்?” சுமியிடம் நேருக்கு நேராகக் கேட்டான் ஜேப்பி.
வெளியில் சென்றுவிட்டான் என எண்ணிக் குனிந்தபடியே அழுகையில் கரைந்தபடி இருந்தவளின் அருகே கேட்ட, ஜேப்பின் குரலில் பதறி நிமிர்ந்தவள், “நீதான். வேற யாரு?” என்றவள்,
“இதையெல்லாம் குழந்தைய வச்சிட்டுப் பேசுவாங்களா ஜேப்பி. ஏன் இப்டி நடந்துக்கற? எதுனாலும் தனியா பேசிக்கலாம். இப்போ நீ ஷ்யாமை எங்கிட்ட விட்டுட்டு, வெளிய போ” படுக்கையில் இருந்து இறங்கி ஜேப்பியின் அருகே வந்து, அவனது கையில் இருந்த ஷ்யாமை பிடித்தவாறு பேசினாள்.
சுமித்ராவால் நிற்க வலுவின்றி தள்ளாட, சட்டென ஷ்யாமை விட்டவன், “முதல்ல போயி ரெஸ்ட் எடு. நிக்கவே முடியாமத் தள்ளாடிட்டு இப்ப இவனைத் தூக்க வரலைன்னா என்ன?” சுமித்ராவிடம் ஜேப்பி கடிந்து கொள்ள,
அதற்குள் ஜேப்பியிடமிருந்து நழுவி சுமியின் அருகே சென்ற ஷ்யாம், அவளின் கையை மெதுவாகப் பிடித்துக் கொண்டவன், “மெதுவா எங்கைய பிதுச்சுக்கோ மீ. நாம நம்ம வீத்துக்கு பத்திதமா இப்பதியே ஓதிப் போயிதலாம். இவன எனக்குப் பிதிக்கலை.” சுமியின் கையைப் பிடித்தவாறு, அறைவாயிலை நோக்கி கைகாட்டியவாறு, சுமித்ராவிடம் கூறியவன், “ அப்பன்னா என்ன மீ?” சுமித்ராவிடம் வினவினான் ஷ்யாம்.
“டாடிகிட்டயே கொண்டு போயி விடச் சொல்லுவோம் ஷ்யாம். இப்ப மீக்கு டயர்டா இருக்கு. சோ ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குப் போகலாம்” ஜேப்பியைக் காட்டி ஷ்யாமிடம் பேச, சட்டென அவளை இறுக அணைத்துக் கொண்டு ஷ்யாம் பேசுவதைக் கண்ட ஜேப்பிக்கு தாங்கவொண்ணா சினம்.
“சுமீ..” எனக் கத்தியவன், “திரும்பத் திரும்ப என்னை அவங்கிட்ட டாடின்னு சொல்லாத. இரிட்டேட் ஆகுது.” பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான்.
ஜேப்பியின் கத்தல், சினம் இவற்றைக் கண்ட ஷ்யாமிற்கு, ஜேப்பியைப் பிடிக்காமல் போயிருக்க, “இவன் வேணா மீ. நாம பாத்துக்கு இவனை இங்கேயே வித்துத்து போயிதலாம். இந்த தாதி சுத்த வேஸ்து” என்றவாறு சுமித்ராவைப் பிடிவாதமாக தனது எண்ணத்தைச் செயலாக்கிக் கொள்ள அழைக்க,
அதேநேரம், “இன்னும் மூனடி வளரலை. என்னமா பிளான் போடுற. உன்னை இங்கே விட்டுட்டுப்போனா, கண்டிப்பா இவளை இங்க இருந்து கடத்துனாலும் ஆச்சர்யப்படுறதிக்கில்ல. மொதல்ல உனக்கு ஒரு வழி செய்யறேன்” ஷ்யாமை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்ட ஜேப்பியைப் பார்த்த சுமித்ரா,
“டேய்! ரெண்டு பேரும் சேந்து படுத்தாதீங்கடா! என்னால ஒன்னுமே செய்ய முடியலை!” என்றவாறு, படுக்கையின் சென்று அமர்ந்துவிட்டாள் சுமி.
ஜேப்பியின் கையில் விழுந்து கடித்து வைத்ததும், எதிர்பாரா நிகழ்வால் சட்டென ஷ்யாமின் வாயில் அடித்திட, வலி பொறுக்காதபோதும், ஜேப்பியின் கையை விட்டு இறங்கியவன், படுக்கையில் அமர்ந்து சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்ட சுமித்ராவிடம் வேகமாக ஓடி வந்தான் ஷ்யாம்.
தாயைக் கண்ட ஷ்யாம், விறுவிறுவென அருகில் சென்று, “மீ..” என பாவமாக முகத்தையும், பரிதாபம் வரக்கூடிய குரலோடும் சுமித்ராவை அழைத்தான்.
ஜேப்பிக்கு சுறுசுறுவென கோபம் எழுந்தாலும், முறைத்தவண்ணம் சுமித்ராவையும், ஷ்யாமையும் பார்த்தபடி நின்றிருந்தான்.
“மீ.. உனக்கு எதாவது வேணுமா?” சுமியின் கையை தனது கரங்களுக்குள் வைத்தபடியே முத்தமொன்றை வைத்தவாறு கேட்டான் ஷ்யாம்.
‘இத்தனூண்டா இருந்துட்டு என்னமா அவளை தன் பக்கம் இழுக்குது. பாக்கத்தான் பச்சா. சரியான காரியக்காரனா இருக்கான்’ எண்ணியவாறு ஷ்யாமையே கவனித்தவன், ஒரு முடிவோடு தனியறை ஒன்றில் ஷ்யாமை தூக்கிச் சென்று கதறக் கதற விட்டு அடைத்துவிட்டான்.
ஷ்யாமின் கதறலைக் கேட்ட சுமித்ரா அறையிலிருந்து வெளிவர, அவளைக் காண வந்து கொண்டிருந்த ஜேப்பி, “ஒழுங்கா வேணுங்கற அளவு இன்னைக்கே ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு நமக்குக் கல்யாணம். ரெடியா இரு” என்றுவிட்டு அகல,
“ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகிருச்சு ஜேப்பி. தேவையில்லாம என்னை எதுக்கு இப்டி ஃபோர்ஸ் பண்ற? என் ஹஸ்பண்ட்கு என்ன பதில் சொல்லுவ?” என்றதும், சட்டென நின்றவன், சுமித்ராவின் அருகே வந்து மெதுவான குரலில் அவளுக்குக் கேட்கும்படி மட்டும் பேசினான் ஜேப்பி.
அவனது பேச்சைக் கேட்டவளுக்கு, அதற்குமேல் எதுவும் பேச இயலாமல் வாயடைத்து நின்றுவிட்டாள்.
ஆனால், அதுவரை அங்கு தாமதிக்காதவன், அசட்டையான பார்வையோடு, “பொண்ணா லட்சணமா நாளைக்கு ரெடியா இரு” என்றுவிட்டு,
“கல்யாண வேலையெல்லாம் நிறைய இருக்கு. குட்டிச் சாத்தானைப் போயிப் பாக்காம, ஒழுங்கா உன்னோட ரூம்ல ரெஸ்ட் எடு. இல்லை அவனைப் பாக்கத்தான் செய்வேன்னா, அடுத்து அவனை இங்க இருந்து பழைய இடத்துக்கே அனுப்பிருவேன். எப்படி வசதினு நீயே முடிவு பண்ணு” என்றதும், சுமித்ரா ஷ்யாமின் கதறலால் உண்டான கண்ணீரோடு அவளின் அறையை நோக்கிச் செல்ல, நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுக் கிளம்பிவிட்டான் ஜேப்பி.
ஜேப்பி மறையும்வரை கண்ணீரோடு காத்திருந்தவள், என்ன செய்தாள்?
***