நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…15

அந்த பெரிய மாளிகையே அமைதியில் அடங்கி இருக்க, அனைவரின் முகமும் இறுக்கத்தை பூசிக் கொண்டிருந்தது. சிறைச்சாலைக்கு சென்று கதிரேசனை சந்தித்து வந்த விசயத்தை அனைவரிடமும் சொல்லி முடித்திருந்தான் ஆனந்தன்.

அதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்தவர்கள், இனி என்ன என்ற கேள்வியுடன் இரு சகோதரர்களைத் தான் பார்த்திருந்தனர்.

சொத்து கொடுப்பது என்பது சொற்ப விசயமல்லவே! பாதிக்குபாதி என்றாலும் கணக்கென்று வரும்போது இருநூறு கோடிகளைத் தொட்டு அள்ளிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதோடு இவை எல்லாம் இவர்களின் முன்னோர் சம்பாதித்து வாரிசுகளுக்கென பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த பரம்பரை சொத்து.

‘எப்படி கொடுப்பது? சட்டத்தில் இடமுண்டா… அப்படியும் மனமுவந்து கொடுப்பதற்கு தான் மனம் வருமா!’ என்றபடி ஒவ்வொருவரின் மனதிலும் பலவிதமான எண்ணங்கள் அலைமோதிட அமைதியைக் கலைத்தார் அருணாச்சலம்

“சீக்கிரம் எதையாவது ஏற்பாடு பண்ணி பேத்தியை கூட்டிட்டு வர்ற வழியப் பாருங்கய்யா!” பெரியவர் வேண்டுதலாகச் சொல்ல, இடையிட்டார் சுலோச்சனா.

“கணக்கு பார்க்காம சொத்தை தூக்கி குடுக்கச் சொல்றீங்களா பெரியவரே? அதெப்படி அவ்வளவையும் ஈசியா கொடுக்க முடியும்!” என்று குரலை உயர்த்த, ஆத்திரம் அடங்காமல் மனைவியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டார் ராஜசேகர்.

“தாலி கட்டின பாவத்துக்கு கூட பார்க்காம கொன்னு போட்ருவேன்டி உன்னை!” ராஜசேகர் கர்ஜிக்க, நகுலேஷ் தடுத்து நிறுத்தினான்.

அப்பாவின் கோபத்தை பார்த்தவன், “அக்கா… அப்பாவை எப்பவும் பக்கத்துல இருந்து பார்த்துப்பியா?” என்று சம்மந்தமில்லாத கேள்வி கேட்க பெருமூச்சு விட்டாள் தேஜஸ்வினி.

“இந்த சமயத்துல என்ன கேள்விடா இது?” தம்பியை கடிந்து கொண்டவள், “நம்ம அப்பாவை பார்த்துக்க எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.” கேள்விக்கு பதிலும் கூறி தம்பியின் வாயடைத்தாள்.

“தெரியும் க்கா… ஆனாலும் ஒரு பேச்சுக்கு கேட்டேன்! நான் இந்த அம்மாவையும் அந்த கதிரேசனையும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுறேன். இரட்டை கொலைக்கு ஆயுள் தண்டனை கிடைக்காது, தூக்கு தண்டனைதான் கிடைக்கும். அதை சந்தோசமா ஏத்துக்கறேன்!” எனக் கூறி அனைவரையும் பதற வைத்தான்.

“என்ன பேச்சுடா இது?”

“வேறென்னக்கா செய்யச் சொல்ற? இங்கே ஒரு உயிருக்காக போராடிட்டு இருக்கோம். அப்பவும் இந்த ராட்சசி சொத்து பணம்னு பேயாட்டம் அலையுது!” என்றவனின் கண்களில் அடக்கிட முடியாத கோபமும் வெறுப்பும் கொந்தளித்தது.

மகனின் பேச்சைக் கேட்டதும் வாய் பூட்டு போட்டுக் கொண்ட சுலோச்சனா, அமைதியாக தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

“தம்பி இப்ப உன்ற கோபம் பெருசில்லை… அடுத்த காரியம் என்னனுதான் யோசிக்கணும். கொஞ்சம் பொறுமையா இரு!” என்ற அருணாச்சலம் மீண்டும் சகோதரர்களின் மேல் பார்வையை பதித்தார்.

“யாரும் கவலைப்பட வேணாம் எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்!” சொன்னபடி ஆனந்தன் எழ முயற்சிக்க, அவனைத் தடுத்தான் ஆதி.

“எப்படி ஆனந்த்? எதுவா இருந்தாலும் ரெண்டு பெரும் சேர்ந்தே முடிப்போம்!” சொன்ன ஆதியின் பேச்சினை ஏற்காதவனாய் மறுப்பு தெரிவித்தான் ஆனந்தன்.

“எல்லாத்தையும் விலாவரியா சொல்ல முடியாது. நீயும் இதுல இன்வால்வ் ஆக வேண்டாம் ஆதி… நான் பார்த்துக்கறேன்!” சொன்னதையே சொல்லி நகர முற்பட, இம்முறை தேஜு பேசினாள்.

“நீங்க பார்த்துப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு ஆனா, அது எப்படின்னு தான் கேக்குறோம்!” நேருக்குநேராக நின்று கேட்டவளைப் பார்த்து பல்லைக் கடித்தான் ஆனந்தன்.

“இங்கே இருக்கிற இண்டு இடுக்குல கூட கேமரா வச்சுருக்கிறதா அந்த நாய் தைரியமா என்கிட்டே சொல்லி இருக்கான். அப்படியிருக்க நான் எப்படி உடைச்சுப் பேச முடியும்? உங்க தங்கச்சி பத்திரமா உங்ககிட்ட திரும்பி வருவா… அதை மட்டும் மனசுல நிறுத்துங்க!” என்று பொறுமையை இழுத்து வைத்து பேசி முடித்தான்.

“எம் புள்ளை உசிருக்கு உலை வச்சுடாதீங்க தம்பி!” ராஜசேகர் வழக்கம் போல் கரகரத்து பேச, தலையில் அடித்துக் கொண்டான் ஆனந்தன்.

“நானும் மனுஷன்தான்யா… எனக்கும் ஒரு உசிரைக் காப்பத்தணும்ங்கிற அக்கறை இருக்கு!” என்றபடி பெருமூச்சு விட்டான்.

“அப்படி என்ன பொல்லாத்தனத்தை, கெடுதலை அந்த கதிரேசனுக்கு நீங்க செஞ்சீங்க? இப்படி திட்டம் போட்டு பழி வாங்க நினைக்கிறான்!” தேஜு வார்த்தையை விட, இம்முறை ஆதி கோபத்தில் முறைத்தான்.

“இப்ப இந்த கேள்வி உனக்கு அவசியமா? என் தம்பியை தப்பானவனா பாக்கிறியா தேஜு!” வெகுண்டு கேட்க, அவளும் அசரவில்லை.

“நடக்கிறதையும், எதிராளி பேசுறதையும் வச்சு பார்த்தா சந்தேகம் வரத்தானே செய்யுது! இதுல என் தங்கச்சி இவருக்கு ஆகாத பொண்டாட்டியா வேற போயிட்டா… பணம் பெருசுன்னு அவளை இவர் அம்போன்னு விட்டுட்டா, நாங்க யார்கிட்ட போய் நியாயம் கேக்கிறது? எங்கே போனாலும் நீங்க பெரிய இடம்னு, எங்களை தட்டி கழிப்பாங்களே…” தேஜு ஆதங்கத்துடன் கேள்விகளை அடுக்கவும் பொறுமை இழந்து மனைவியின் கன்னத்தில் அறைந்தே விட்டான் ஆதி.

அவனது அதிரடியில் அனைவரும் அதிர்ந்து நிற்க, தேஜுவின் மனதில் பல படிகள் கீழிறங்கிப் போனான் ஆதித்யன்.

“என்னய்யா இது? சூழ்நிலை தெரியாம நீங்களும் கைய நீட்டுறீங்க! அந்த பொண்ணு தங்கச்சி மேல இருக்கிற பாசத்துல பேசுது! அது புரியலையா உங்களுக்கு?” ஆதிக்கு கண்டனம் தெரிவித்த அருணாச்சலம், தேஜூவைப் பார்த்து,

“உன்ற கண்ணோட்டம் ரொம்ப தப்புங்க அம்மிணி… அவ்வளவுக்கு கல்நெஞ்சக்காரங்க நாங்க இல்ல! எங்களுக்கும் உசிரோட மதிப்பு தெரியும். எங்களை நம்பும்மா!” எனக் கெஞ்சவும் அமைதியுடன் தலைகுனிந்தாள் தேஜு.

“பாசம் பேச வைக்குது. பதறிக் கெடக்கிற மனசை அவளும் எவ்வளவு நேரம்தான் அடக்கி வைச்சுப்பா! நான் சொல்லி புரிய வைக்கிறேன்!” என ஆறுதல் சொன்ன ராஜசேகர்,

“எப்படியாவது என் புள்ளைய காப்பத்தி கொடுங்க தம்பி! வேற என்னத்த நான் சொல்ல…” மீண்டும் அவர் பாட்டைப் பாடி ஒய்ந்தார்.

“இந்த மாதிரி யூஸ்லெஸ் டிராமா பிளே பண்ணிட்டு இருந்தா, அடுத்து என்னன்னு நான் எப்படி யோசிக்க முடியும்? யாரும் என்கூட பேச முயற்சி பண்ணாதீங்க… ஆதி உனக்கும் சேர்த்துதான் சொல்றேன். எந்த சண்டையா இருந்தாலும் உன் ரூம்ல போயி பேசித் தீர்த்துக்கோ!” என வெட்டிவிட்ட பேச்சில் கிளம்பிச் சென்றான் ஆனந்தன்.

அறைக்குள் வந்த ஆதித்யன் மௌனமாக சோபாவில் சென்று அமர்ந்த தேஜஸ்வினியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கணவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை அறிந்துமே அவளும் எவ்வித உணர்வையும் காட்டாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

அவனது விரல் தடங்கள் மெல்லிய ரேகையாக அவளின் கன்னத்தில் பதிந்திருக்க, அவனுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.

‘ஏன் இப்படி? எப்போதிருந்து எனது கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தேன்!’ என தன்னைத்தானே கேட்டு நொந்து கொண்டான்.

அவளை அடிக்க வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் ஆனந்தனை கேள்வி கேட்டதும் அவனையும் மீறி கோபம் பொங்கிவிட, பொதுவில் என்றும் பாராமல் கையை நீட்டி விட்டான்.

நொடிகள் நிமிடங்களாக கரைந்தும் இருவருக்குள்ளும் மௌனத்தின் அலைகள் மட்டும் ஓய்ந்த பாடில்லை. தவறு தன்மீது தான் என உணர்ந்து கொண்டவனாய் தொண்டையை செருமிக் கொண்டு மனைவியிடம் பேச முற்பட்டான் ஆதி.

“தேஜு… ஏதோ ஒரு வேகத்துல…” எனத் தொடர்ந்தவனை அலைபேசி அழைத்து பேச்சினை தடை செய்தது. கீழே வருமாறு ஆனந்தன் அழைத்திருக்க அடுத்த நிமிடமே மனைவியை மறந்து விட்டு வேகமாக சென்று விட்டான்.

கணவனின் ஒவ்வொரு செயலிலும் மனம் புண்பட்டு ரணமாகிக் கொண்டிருந்தது தேஜஸ்வினிக்கு. ‘ஆண்கள் என்றால் இப்படிதானா? நான் பார்த்த தந்தையும் தம்பியும் இப்படி இல்லையே! ஒருவேளை பணக்காரர்களின் சுபாவங்கள் தான் இப்படியோ?’ விடைதெரியாத கேள்வியோடு தங்கையின் நினைவில் மூழ்கிப் போனாள்.

அலுவலகத்திலும் வீட்டிலும் இன்று தனக்கு ஏற்பட்ட தலைகுனிவில் மனதளவில் பெரிதாக மனமுடைந்து போயிருந்தாள் தேஜு. கணவனை காதலோடு சுமக்க ஆரம்பித்த மனம், தனது தன்மானத்தை உரசிச் செல்லும் இகழ்வினை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

‘எனது கோபத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதி கூட உனக்கு இல்லை.’ என தன்னைத் தள்ளி நிறுத்தியவனிடம், ‘இப்போது எந்த தகுதியில் என் மீது கையை நீட்டினாய்?’ என உலுக்கி கேட்க வேண்டும் போலத் தோன்றியது.

கௌரவத்தை கொண்டாட்டிக் கொள்ளும் மாளிகையில் அடுத்தவரின் சுயமரியாதை சுட்டுப் பொசுக்கப்பட்டு நிந்திக்கப்படுவதை தன்மானமுள்ள யாராலும் சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாதென தேஜுவின் மனம் தன்சார்பாக வாதாடிக் கொண்டிருந்தது.

‘மனு வந்ததும், போதும் உங்களது சகவாசம் என பெரிய கும்பிட்டு போட்டுவிட்டு இந்த வீட்டை விட்டு வெளியேறி விடவேண்டும்!’ என்ற உறுதியான முடிவினை அந்த நேரத்தில் எடுத்திருந்தாள்.

உயிர்பயமும் உடன்பிறப்பின் மீதான பாசமும் சேர்ந்து குடும்பம், திருமணம் என்ற பந்தத்தின் மீதே சொல்ல முடியாத வெறுப்பு வந்திருந்தது தேஜுவிற்கு.

அதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் ஆதி, ஆனந்த், நகுல் மூவரும் சேர்ந்து வீட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வகை கேமராக்களை கண்டுபிடித்து வெளியே எடுக்க ஆரம்பித்தனர்.

சமையலறை, வரவேற்பறை, தோட்டத்தில் செடிகொடி அடர்ந்த இடங்கள், அலமாரி, புகைப்படச் சட்டத்தின் உள்புறம் என இருபதுக்கும் மேற்பட்ட கேமிராக்களை வீட்டைச் சுற்றிலும் சல்லடை போட்டுக் கண்டெடுத்த சகோதரர்கள் பெரியவரை முறைத்தனர்.

“அப்படி என்ன அஜாக்கிரதை உங்களுக்கு? வீட்டுக்குள்ள யாரு வர்றா போறான்னு கூட கேர்ஃபுல்லா கவனிக்க மாட்டீங்களா? செக்யூரிடீஸ் என்ன பண்றாங்க?” ஆனந்த் கடுகடுக்கத் தொடங்க பெரியவர் தலைகுனிந்தார்.

சென்ற வாரம் வீட்டிலும் தோட்டத்திலும் மருந்தடித்து சுத்தப்படுத்துவதற்காக இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக வெளியாட்கள் வந்து சென்றிருந்தனர். அவர்களின் கண்ணோட்டத்தை அப்போதே கவனிக்கத் தவறி இருந்தார் பெரியவர்.

அதன் பிறகு எந்த அந்நியரும் மாளிகைக்குள் வந்து சென்றதில்லை. இப்பொழுது இந்த விவரங்களை பெரியவர் கூறவும் அதற்குமே எரிந்து விழுந்தான் ஆனந்தன். அந்த நேரமே வீட்டின் காவலர்களை நிற்க வைத்து காறித் துப்பாத குறையாக வசைபாடி ஒய்ந்தான்.

“இப்ப யார் எப்ப வந்தாங்கன்னு விசாரிக்கிற அளவுக்கு பொறுமையும் நேரமும் இல்ல, இனியாவது ஜாக்கிரதையா இருங்க…” கண்டனத்துடன் பேசி அவர்களை அனுப்பி வைத்தவன்,

“உங்களுக்கு உதவியா ஒரு ஆளை வச்சுக்க சொன்னா மட்டும் வீர வசனம் பேசி தட்டிக் கழிக்கிறது. உங்க அஜாக்கிரதையோட பலன் எங்க தலைமேல வந்து விடிஞ்சிருக்கு!” என பெரியவர் மீதான ஆனந்தனின் கண்டங்கள் குறைந்த பாடில்லை.

“முடிந்ததை பேசாதே ஆனந்த். அவர் வயதுக்கும் மரியாதை கொடுக்கப் பழகு!” பெரியவனாக ஆதி அறிவுறுத்த, அவனையும் இளக்காரமாய் பார்த்தான் தம்பி.

“உன்னோட ஹனிமூன் டிரிப் கூட எதிரிக்கு நல்ல ஒரு வழியை காட்டிட்டு போயிருக்கு ஆதி! உன்னோட ஆசைக்கு பலியாடா அவ மாட்டிகிட்டு, இப்ப என்னை சிக்கல்ல சிக்க வச்சுட்டா!” என அண்ணனிடமே காய்ந்தான் ஆனந்தன்.

தம்பியின் கேள்வியில் கோபம் மூண்டாலும் அதை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்லவே என உணர்ந்து என்றும் போல இப்போதும் அமைதி காத்தான் ஆதி.

‘நல்லவேளை இவன் பேசுறது தேஜூ கேக்கல. இல்லன்னா, அதுக்கும் ஒரு சண்டை பிடிச்சிருப்பா!’ என நினைத்தவனின் மனமெல்லாம் பாரமேறிக் கிடந்தது.

‘எப்படியெல்லாம் கொண்டாட நினைத்தேன் அவளை.. ஆனால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? சுடு சொற்கள், வெறுத்த பார்வைகள். இதெல்லாம் போதாதென்று கையை நீட்டி அடித்தும் ஆகிவிட்டது. மனிதனா நானெல்லாம்?’ ஆதியினால் மனதிற்குள் குமைந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

ஆனந்தனின் மனதில் மனைவியை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதி இருந்தாலும், அவள் மீதான கோபம் அதை விட அதிகமாய் இருந்தது.

“கேமிரா எல்லாம் எடுத்து ஒழிச்சாதான் நாம அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை ஆரம்பிக்க முடியும். நானும் வேலை வேலைன்னு வீட்டை கவனிக்காம அசால்ட்டா இருந்துட்டேன்!” ஆனந்தனின் கோபங்கள் ஆதங்கமாக மாறிக் கொண்டிருந்தன.

“பேச்சை விட்டுட்டு, ஆகவேண்டிய வேலையைப் பார்ப்போம் மாமா!” நகுல், ஆனந்தனை சமாதானப்படுத்த, முறைப்பு குறையாமல் மீண்டும் அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

தேடுதல் வேட்டைக்கு வெளியாட்கள் யாரையும் வரவழைக்கவில்லை. அதையும் கண்டுபிடித்து எதுவும் அசம்பாவிதம் கதிரேசன் மூலம் நடந்துவிடும் என்ற கலக்கத்தில் வீட்டு ஆட்களாக மட்டும் பணியை தொடர்ந்தனர்.

அந்த சமயத்தில் ஆதியின் அலைபேசி அழைக்க, “திருப்பூர் மேனேஜர் கூப்பிடுறாரு… என்ன இந்த நேரத்துல?” என்றபடியே அழைப்பை ஏற்றான் ஆதி.

“ஒரு எமர்ஜென்ஸி நியூஸ் சர்… நம்ம கார்மென்ட்ஸ் குடவுன்ல ஃபையர் ஆக்சிடென்ட் சர்!” பதட்டத்துடன் வந்த அவசரத் தகவலில் அதிர்ந்து போனான்.

“எப்போ? எப்படி!” ஆதி அதிர்ச்சியுடன் கேட்க, 

“பத்து நிமிசத்துக்கு முன்னாடிதான் சர்… எலக்ட்ரிக் சர்க்கியூட்ல ஹெவி டேமேஜ்.”

“ஒஹ் காட்! நான் இப்ப கிளம்பி வரேன். நீங்க அடுத்து என்னன்னு அங்கே பாருங்க!” என்றவனாய் பரபரத்து விசயத்தை வெளியே சொல்ல, அனைவரும் நொந்து போனார்கள். 

“நான் கிளம்புறேன் ஆனந்த்.,. நீ பார்த்து இருந்துக்கோ! எதுவா இருந்தாலும் கூப்பிடுடா!” என்றவன் நகுலிடம்,

“எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோடா… அக்காவை கவனிச்சுக்கோ!” என்றவாறே மேலே தங்கள் அறைக்கு கூட செல்லாமல் கிளம்பி விட்டான்.

இதுவும் எதிரியின் கைவரிசையாய் இருக்குமோ என ஆனந்த் யோசித்த வேளையிலேயே அவனை அழைத்து விட்டான் கதிரேசன் 

“என்ன ஆனந்தா? சொல்லச் சொல்ல கேக்காம தப்பு பண்றியே! எனக்கு வந்து சேராத சொத்து உங்களுக்கும் பிரயோஜனப்படாது. அப்படித்தான் பிளான் பண்ணி வச்சிருக்கேன், புரிஞ்சுக்கோ மகனே… இன்னும் நீ சொத்து பிரிக்கிற வேலைய ஆரம்பிக்காம கேமிரா தேடி எடுத்திட்டு இருந்தா இப்படியே ஒவ்வொரு இடமும் தீயில கருகி காணாமப் போயிரும். உன் பொண்டாட்டியும் கோமாக்கு போயிடுவா… எனக்கு தீப்பந்தம் பிடிக்க பேரனை பெத்துக் கொடுக்குற வழிய மட்டுமே யோசிடா!” என சிரித்தபடி மிரட்டியவன், 

“இடம் தீப்பிடிச்சு கருகின மாதிரி, வெளியே போனா ஆளும் தீப்பிடிச்சு சாம்பலாக ரொம்ப நேரம் ஆகாது. புரியும்னு நினைக்கிறேன்!” என எச்சரித்து அழைப்பினை முடிக்க, ஆங்காரத்துடன் அலைபேசியை போட்டு உடைத்தான் ஆனந்தன்.

ஆவேசப் பெருமூச்சில் உக்கிரமாக கொந்தளித்தவனை, அந்த சமயம் கீழே இறங்கி வந்த தேஜுவும் பார்த்து பயந்து பின்னடைந்தாள்.

“நிதானம் தவறுது சின்னவரே! கொஞ்சம் அமைதியா இருங்க… எதையும் நிதானமா செய்வோம்!” என்றவாறே  அருணாச்சலம் மட்டுமே அருகில் சென்று அவனை சமாதானப்படுத்தினார்.

“அவர் ஃபோன் பண்ணினாரு தாத்தா! திருப்பூர் குடவுன்ல ஃபயர் ஆக்சிடென்ட்னு அங்கே போறதா சொன்னாரு. அதான் உடனே கீழே வந்தேன்… அதுக்குள்ள இவர் இப்படி?” என்று ஆனந்தனை கலக்கமாக பார்த்தபடி தேஜு கேட்க, அருணாசலத்திற்கு எப்படி புரிய வைப்பதென்றே தெரியவில்லை.

“சின்னவருக்கு கோபம் அதிகமா வந்தா கொஞ்சம் ஆவேசமா நடந்துப்பாரு ம்மா! அதான் இப்டி… வேற எந்த பிரச்சனையும் இல்ல.” இறங்கிய குரலில் பெரியவர் கூற, அங்கிருந்த நகுலேஷும் தலையில் அடித்துக் கொண்டான்.

“இன்னும் என்னவெல்லாம் மறைச்சுருக்கீங்க எங்ககிட்ட…” கோபமாக பெரியவரை முறைத்தவன், “நல்லா வந்து மாட்டி இருக்கோம் க்கா!” என வெறுப்பாக சலித்தான். 

ஆதிக்கு உடனே அழைத்து அனைத்து விவரங்களையும்  அருணாச்சலம் கூறி முடித்த நேரத்தில் ஆனந்தன் அங்கிருந்து மேலே செல்லத் தொடங்கினான்.

தனது நிலையையும் மறந்தவனாக கோபமிகுதியில் கைத்தடியை அழுத்தமாக பற்றிக் கொண்டு வேகவேகமாக படிகளில் ஏறிச்செல்ல, கால்கள் பல படிகளில் இடறியது.

வேகமாக அவனைச் சென்று தாங்கிக் கொண்ட நகுலேஷும், “லிஃப்டுல போகலாம் மாமா… இறங்குங்க!” என கைபிடித்து இழுக்க அவனையும் உதறித் தள்ளினான் ஆனந்தன்.

யாருடைய பேச்சையும் கருத்தில் கொள்ளாமல் சென்றவனை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அன்றைய இரவு முடிவதற்குள் அனைவருக்கும் பல கலவரமான எண்ணங்கள் வந்து அலைகழித்தன. நாளைய விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கப் போகிறது என்ற குழப்பத்துடன் ரூபம் மாளிகை அடுத்த நாளை வரவேற்றது.

காலையில் திரும்பி வந்த ஆதித்யன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் அனைவரையும் புரட்டிப் போட்டது.

“நான் டிபார்ட்மெண்ட்ல பேசி, கேசை வாபஸ் வாங்கிட்டேன் ஆனந்த்… இன்னும் கொஞ்ச நேரத்துல ஆடிட்டரும் வக்கீலும் வருவாங்க. சொத்துக்களை இரண்டு பாகமா பிரிக்கப் போறேன். கதிரேசன் கேக்கிறத செஞ்சு கொடுக்கற முடிவுக்கு நான் வந்துட்டேன்!” கட்டளையாக உறுதியுடன் கூறியவனை எதிர்த்து யாரும் பேச முன்வரவில்லை.

ஆனந்தன் மறுப்பு சொல்ல வாயெடுக்கும் நேரத்திலும் ஆதியே முந்திக் கொண்டான்

“கோபத்துல சுறுசுறுப்பா யோசிக்கிறத விட, அமைதியா அறிவுப்பூர்வமா வேலையை முடிப்போம் ஆனந்த்! நான் சொல்றதை மட்டுமே கேட்டுச் செய்ய ரெடியா இரு!” எனச் சொல்ல ஆனந்தன் மனமின்றியே ஒப்புதல் அளித்தான்.

அன்றைய தினத்தில் ஆதியின் வேகமான செயல்பாடுகளை ஒருவித ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்து வியந்தனர். தனது வேலைகள் அனைத்திலும் மனைவியை அருகில் அமர்த்திக் கொண்டே செய்தான் ஆதி.

வக்கீல் மற்றும் ஆடிட்டரிடம் பேசும் போதும் தேஜுவை வைத்துக் கொண்டே பேசினான். எந்தவொரு விவரத்தையும் அவளிடம் கூறி சம்மதம் வாங்கிய பிறகே நடைமுறைப் படுத்தச் சொன்னான்.

இதனைப் பார்த்த ஆனந்தனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தாலும் எதிலும் தலையிட முடியாமல் விரைந்து மேலே சென்று விட்டான். பற்றாக்குறைக்கு நகுலேஷையும் உடனழைத்துக் கொண்டான்.

“மிச்சசொச்ச இடங்களையும் பார்த்து அலசிடுவோம் நகுல். அப்படியே கொஞ்சம் ஆஃபீஸ் வொர்க் இருக்கு. அதுக்கும் உன் ஹெல்ப் வேணும் வா!” என தன்மையாக அழைத்தே மச்சானை தன்னோடு அழைத்துக் கொண்ட ஆனந்தனை விழியுயர்த்தி கேள்வியாகப் பார்த்தாள் தேஜு.

ஏனோ ஆனந்தனின் மேல் அவளுக்கு நல்லொதொரு நம்பிக்கையை வைக்க மனம் வரவில்லை. இவனுக்காக தங்கை பணயமாக சென்ற வலியும் வேதனையும் சேர்ந்து சந்தேகத்தின் சாயலில் அவனைக் குற்றவாளியாகவே பார்த்தாள்.

“தேஜு… உன்னோட ஆராய்ச்சி பார்வையை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு இப்ப வேலையை பாக்கறியா? கேள்வி கேக்கற வேலையை அப்புறமா பார்க்கலாம்!” என்ற கட்டளையோடு அவளது கவனத்தை திசை திருப்பினான் ஆதித்யன்.

அடுத்த இரண்டு தினங்களில் எத்தனை வேகமாக முடியுமோ அத்தனை வேகமாக சொத்துகள் பிரிக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்களும் எழுதி முடிக்கப்பட்டன.

சரிபாதியாக பிரித்து முடித்து பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு கதிரேசனை சந்திக்க சென்றான் ஆதித்யரூபன்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!