நான் பிழை… நீ மழலை..!
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…27
தேஜஸ்வினி புகுந்த வீட்டிற்கு, அப்பா ராஜசேகருடன் வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது. அவள் வந்ததும் வீட்டு நிர்வாகத்தை அவளது பொறுப்பில் கொடுத்து விட்டார் அருணாச்சலம்.
“ஓய்வா இருக்கிற நேரத்துல பதறாம வீட்டு நிர்வாகத்தை பார்க்க பழகிக்கோ கண்ணு… அப்புறமா தொழில் நிர்வாகத்தை பெரியவர்கிட்ட கத்துக்கலாம்.” என ஆதித்யனை பார்த்துக் கூற, அவனுமே ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
தேஜுவிற்கு வேண்டாமென தட்டிக் கழித்தால் கணவன் இதற்கும் சேர்த்து கோபித்துக் கொள்வானோ என்கிற பயம்… உடனே சரியென்று ஏற்றுக் கொள்ளவும் அவளிடத்தில் தெம்பில்லை.
மகளின் நிலையை உணர்ந்தவராக, “பொண்ணு ஃபுல் ரெஸ்டுல இருக்கணும்னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருக்காங்க ய்யா… இத்தனை நாளா எப்படி இருந்ததோ அப்படியே நடக்கட்டும்.” ராஜசேகர் தெரிவித்த மறுப்பு அருணாச்சலத்தால் மறுக்கப்பட்டது.
“என்னதான் ரெஸ்டுல இருந்தாலும் எந்நேரமும் சுவத்தை பார்த்துட்டு இருக்ககூடாது சேகர்…. அப்புறம் புள்ளையும் அதே அசமஞ்சமா பொறக்கும், வீட்டு நிர்வாகம் ஒன்னும் பெரிய கம்பசூத்திரம் கிடையாது.” என்றவர்,
தேஜூவை பார்த்து, “நீ ஜாமாய்ச்சிடுவ கண்ணு… எந்த தயக்கமும் இல்லாம பொறுப்பை கையில எடுத்துக்கோ!” மேலும் ஊக்கப்படுத்தி பேச, தேஜூவால் மறுக்க முடியவில்லை.
பெரியவரின் எண்ணமெல்லாம் மீண்டும் ஒருமுறை இந்தப் பெண்கள் பிறந்த வீட்டில் அடைக்கலமாகி விட வேண்டுமென்ற எண்ணத்தை மனதளவில் கூட நினைத்தும் பார்க்கக் கூடாது என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது.
அதையே கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நயமாகப் பேசியே அவளின் கைகளில் வலுக்கட்டாயமாக வீட்டின் வரவு செலவு பொறுப்புகளை திணித்துவிட்டார்.
கிராமத்தில் இருக்கும் நிலபுலன்களின் வரவு செலவினையும் வீட்டில் வைத்து பார்ப்பார் அருணாச்சலம். அந்தப் பொறுப்புகளும் தேஜுவின் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இனி மெல்ல மெல்ல அனைத்து பொறுப்புகளையும் இரண்டு பேத்திகளிடத்திலும் ஒப்படைப்பதே அவரின் முக்கிய வேலையாக கொண்டு செயல்படத் தொடங்கினார்.
பிறந்த வீட்டில் இருந்தவரை சற்றே மட்டுப்பட்டிருந்த தேஜஸ்வினியின் மசக்கை, புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் வீரியம் கொண்டு நன்றாகவே ஆட்டம் காட்டி அவளை மிரட்டியது.
ஒருசொட்டு மிடறு விழுங்கினாலும் குமட்டிக் கொண்டு வர, சமீப நாட்களாக திட ஆகாரத்தை எடுத்துக் கொள்வதற்கே பயந்து போனாள் தேஜு.
அவளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மடி தாங்கிக்கொள்ள தாயுமில்லாமல், சரியான ஆலோசனை கூறி தைரியமூட்ட அனுபவம் வாய்ந்த பெண்களும் அருகில் இல்லாமல் தனியாளாக நின்று தவித்துப் போனாள்.
தந்தை ராஜசேகர், அவளது தாயின் அனுபவத்தை கூறினார்தான். ஆனாலும் அதில் பெண்ணின் மனம் சமாதானம் அடையாமல் மசக்கையை மிகப்பெரிய நோயாகவே எண்ணி மிரண்டு போனது.
ஏதுமறியாத பேதையாக ஆதரவிற்கும் அரவணைப்பிற்கும் தன்னை தாங்கிக் கொள்ளும் நெஞ்சை மட்டுமே அவளின் அகமும் புறமும் தேடிக் கொண்டிருக்க, அவளுக்கு தகுந்த ஆறுதலை அளித்தே தாங்கிக் கொண்டான் ஆதித்யரூபன்.
கணவனது இந்தக் கனிவில் நியாயமாக உருக வேண்டியவளின் மனமோ, உள்ளுக்குள் உருகிப் போனாலும் வெளியில் அவனை குற்றப்பார்வை பார்த்தே பந்தாடியது. ஆனாலும் அவனது சேவைகளை ஏற்றுக் கொள்ளுவதில் தயங்குவதில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளும் வரையில் கணவன், அவளை விட்டதும் இல்லை.
மனைவியின் அசௌகரியத்தை கண்ணுற்றே அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்தான் ஆதி. அவளைக் கீழே செல்வதற்கு நொடியும் அனுமதிப்பதில்லை. அவர்களது பால்கனியில் சென்று நின்றாலும் அங்கும் வந்து அக்கறை குடை பிடித்தான்.
இப்பொழுதும் பால்கனியில் அயர்ச்சியாக கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவளிடம் ஆரஞ்சு பழச்சாறினை கொண்டு வந்து கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். கால்வாசி குடித்து முடித்ததும் போதுமென்று வைத்து விட, ஆதியின் இம்சை ஆரம்பமானது.
“ம்ப்ச்… இன்னும் கொஞ்சம் குடி டா தேஜு! உமட்டல் குமட்டல் எல்லாம் நின்னுடும்.” எல்லாம் தெரிந்தவனாக பேச, முறைத்துப் பார்த்து தலையை கவிழ்த்து கொண்டாள் தேஜு.
“மார்னிங்ல இருந்து ரெண்டு கிளாஸ் லிக்யூட் கூட சரியா எடுத்துக்கல நீ!” கணக்கு கூறவும் கடுப்பின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.
“பத்து தடவைக்கும் மேல வாமிட் பண்ணிட்டேன். இனிமே குடிச்சு வெளியே எடுக்க எனக்கு தெம்பில்லை. விடுங்க என்னை!” சலிப்பாக கூறும்போது கண்ணில் மெல்லிய நீர்ப்படலம் அணைகட்டி நின்றது.
“அச்சோ… எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகுற? நேத்து போலவே இன்னைக்கும் ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுட்டு வருவோமா?” அக்கறையாகக் கேட்க, அவசரமாக மறுத்தாள்.
“ஐயோ… அந்த ஊசி, மருந்து வாடை இதுக்கும் மேலே வயித்தை புரட்டும். வேணாம்!”
“சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் தேஜுமா! இப்படியே அமைதியா சாஞ்சுக்கோ…” இதமாக கூறியபடி அவளை தோளில் சாய்த்துக் கொண்டவன்,
“உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு கொடுக்குறதுக்குன்னே ஒரு வயசான அம்மாவை ஸ்பெசல் குக்-கா அப்பாயின்மெண்ட் பண்ணியாச்சு… இனி நீ தேறி வந்துடலாம்.” மனைவிக்கு ஆறுதல் கூறி திடப்படுத்தினான்.
இவனது பொழுதுகள் எல்லாம் பெரும்பாலும் மனைவியின் அருகே அவளைத் தேற்றுவதிலேயே கழிந்து விடுகின்றன.
இதற்காகவே தனது அலுவல வேலைகள் அனைத்தையும் முடிந்தவரை வீட்டில் இருந்தே பார்க்கும்படியாக ஏற்பாடுகளை செய்து கொண்டான் ஆதித்யன்.
தனது பெற்றோரைப் போல காதல் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தவன் அதற்கான முதற்படியை அவனே ஆரம்பித்திருந்தான்.
தேஜுவும் கணவனது அனுசரணையான கவனிப்பில் மகிழ்ந்து போனாலும் தனது ஆற்றாமைகளை கோபங்களாக காட்டத் தவறுவதில்லை.
“எனக்கு என்னமோ டெலிவரி முடியுற வரைக்கும் பெரிய போராட்டாமாவே இருக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்!”
“ஏன் அப்படி சொல்ற?”
“அப்பனை போலவே பிள்ளையும் என் சொல் பேச்சு கேக்காம என்னை சிரமப்படுத்தி பார்க்கணும்னு அடம் பிடிக்கிறப்போ, எல்லாம் சரி ஆகும்ன்னு எப்படி சொல்றீங்க த்தான்?” குத்தலாகப் பேச, சட்டென்று கோபம் கொண்டான் ஆதி.
“உன்கிட்ட பிடிக்காத விஷயம் இதுதான்… என் நிழல்லயே இருந்துட்டு என்னையே குத்திக் காமிக்கிறியேடி!”
“நான் ஒன்னும் இல்லாததைச் சொல்லலையே… அதோட, நீங்க உங்க பிள்ளையோட அக்கறையில தானே இதையெல்லாம் எடுத்து செய்றீங்க! இதுல நான் எங்கே இருந்து வந்தேன்?” சோர்வுடன் குத்தல் மொழிகளை தெறிக்க விட, ஆதிக்கு ஆத்திரம் கூடியது.
வீட்டிற்கு வந்த பிறகும் அன்றைய தர்க்கத்தை மனதில் வைத்து பேசுபவளை என்ன சொல்லி அடக்கி வைப்பதென்று அவனுக்கே புரியவில்லை. ‘முக அறுவை சிகிச்சையை செய்து கொள்.’ என்று விடாமல் அடம்பிடித்துக் கொண்டே இருந்தாள் தேஜு.
அதற்கு ஆதி மறுத்து அவளது கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட, தனது குத்தல் சொல் அம்புகளை தொடுக்கத் தொடங்கி விட்டாள்.
எதைப் பேசினாலும் எப்படியாவது அதில் கொண்டு வந்து முடிச்சு போட்டு விடுவாள். இப்பொழுதும் அந்த நினைவில் இவள் குற்றமாகப் பேச, அலுக்காமல் பதிலளித்தான் ஆதி.
“நீ நடத்து தேஜுமா… நீ எப்படி மடக்கிப் பேசினாலும் நான் அசைஞ்சு கொடுக்க மாட்டேன். எனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம் தான்! இத்தனை வருஷம் இந்த தழும்போட நான் வாழ்ந்து காட்டலையா… அதே போல வாழ்ந்துட்டு போறேன்!” வெகு கறாராக பேசினான்.
“அப்போ உங்க முக்காடை கழட்டி வைச்சுட்டு வெளி உலகத்துக்கு வாங்க த்தான்… யார் எப்படி பார்த்தாலும் எனக்கு ஒன்னுமில்லன்னு சாதரணமா எல்லாரையும் நேருக்குநேரா பாருங்க…. உங்க முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வாங்க! அப்படி செஞ்சா, நான் இந்த பேச்சையே விட்டுடுறேன்!” காட்டமாக பதிலடி கொடுத்தாள் தேஜு.
எப்படி என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பவனை என்ன சொல்லி புரிய வைப்பதென்று அவளுக்கும் தெரியவில்லை.
“ரெண்டுநாள் வித்தியாசமா முகம் சுளிச்சு பாப்பாங்க… மூணாம் நாள் இதுதான் உங்க உண்மையான தோற்றம்னு இயல்பா ஏத்துக்கிட்டு சகசஜமா பேச ஆரம்பிப்பாங்க. உங்களுக்கு ரெண்டு ஆப்சன் கொடுக்கறேன்…. நீங்க முக்காடை கழட்டி எறியணும்… இல்லன்னா லேசர் ஃபேஸ் சர்ஜரிக்கு ஒத்துக்கணும். முடிவு உங்க கையில!” மனைவி அடமாய் நிற்க, பதில் கூற முடியாமல் மலைத்து நின்றான் ஆதி.
‘இந்த நான்கு மாதத்தில் இவளிடத்தில் இத்தனை மாற்றங்களா!’ நினைத்தவனின் மனது திருமணநாளன்று அப்பாவியாக தன்னை வெறித்துப் பார்த்த பேதையை தேடி ஓய்ந்து போனது.
“வரவர ரொம்ப பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட தேஜு… அதை சொல்லிக் காமிச்சா மட்டும் ஹார்மோன்ஸ் சேன்சஸ், ப்ரக்னென்சி சீக்னெஸ்-ன்னு பக்கா ரீசன் சொல்லி சமாளிக்குற!”
“நான் மட்டுமா சொன்னேன்… டாக்டரும் அதையே தான் சொல்றாங்க!”
“அந்த சப்போர்ட்டு தான் டி அளவுக்கு மீறி, உன்னை அடம் பிடிக்க வைக்குது!”
“உங்களுக்காக, உங்ககிட்ட பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கேன், இது தப்பா! உங்களுக்கான நல்லதை நான் பார்க்காம வேறு யாரு பார்க்கப் போறா?” சலுகையுடன் தனது உரிமையை நிலைநாட்டிப் பேசியதில் அவளின் பாவனையும் நொடியில் மாறிப்போனது.
“கண்ணை கட்டுது தேஜுமா… குழந்தை பொறக்கறதுக்குள்ள எனக்கு நிறைய பாடம் கத்துக் கொடுத்துடுவ போல!” அலுத்துக் கொண்டே தலையை உலுக்கிக் கொண்டான் ஆதி.
“நானும் உங்க அளவுக்கு கத்துக்கவும் செய்வேன் அத்தான்…” என கொஞ்சியவள் அதே பாவனையில்,
“ப்ளீஸ் அத்தான்… நான் சொன்னதை கன்சிடர் பண்ணுங்களேன்!” கண்களை சுருக்கி கெஞ்சலாக கூறவும் சற்றே யோசித்தான்
“எதுவா இருந்தாலும் பேபி பிறந்தப்புறம் பேசிக்கலாம் டா! இப்ப நிறைய வொர்க்ஸ் பெண்டிங்ல இருக்கு… அதோட பிசினஸ்ல ஹெவி இச்யூஸ் ஃபேஸ் பண்ணிட்டு இருக்கோம்.” சமாதானமாக இறங்கி வந்து பேசவும், சரியென்று சம்மதித்தாள்.
“குழந்தை உங்க முகத்தை பார்த்து பயப்பட்டு அழறதுக்குள்ள நல்ல முடிவா எடுங்க!” சட்டென்று யோசிக்காமல் கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் தேஜு.
“சாரி… சாரி அத்தான்! நான் ஏதோ ஒரு நினைப்புல… அவசரத்துல வாய் தவறி வந்துடுச்சு!” பலமுறை அவள் மன்னிப்பை வேண்டினாலும் கணவனின் மனது சமாதானம் அடையவில்லை.
“ஏன் தேஜு? இன்னமும் நீ, என்னைப் பார்த்து மிரண்டு போறியா?” சந்தேகமாக, வருத்தத்துடன் கேட்டான் ஆதி.
“ச்சே… ச்சே! அதெல்லாம் கல்யாணமான மறுநாளே மாறிடுச்சு!” அன்றைய அழுகையின் நினைவில் தேஜூ கூற,
“அதே போல குழந்தையும் ஒரு தடவை பார்த்துட்டு அப்புறம் என்னை புரிஞ்சுக்கும்!”
“சின்ன குழந்தை முகம் பார்த்து சிரிக்கவே மூணு மாசம் ஆகும்னு சொல்வாங்க… அதுலயும் கொஞ்சம் வித்தியாசமான உருவத்தை பார்த்தா பயப்படச் செய்யுமே! பேபிக்கு உங்க முகஜாடை இப்படித்தான்னு ஞாபகத்துல இருக்காதே அத்தான்!” தன்மையாக அவள் விளக்கம் அளித்ததும் மனதளவில் இறுக்கம் கொண்டான் ஆதி.
சிறிது நாட்களாக கண்ணுக்கு தெரியும் கோடாக இருந்த அவனது சிறுமை உணர்வு, பட்டை தீட்டப்பட்ட அழியாத முத்திரையாக இப்பொழுது மனதில் ஆழப் பதிந்து விட பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
தேஜூவிற்கும், தான் பேசியது சற்று அதிகப்படிதான் என நன்றாகத் தெரிந்தது. ‘வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே!’ என்ற ஆதங்கத்தில் விடாமல் கணவனுடன் போர் தொடுத்து வருகிறாள்.
கணவனுடனான அவளது போரில் வெற்றியா தோல்வியா என்பது ஆனந்தனின் மன மாற்றத்திலோ அல்லது ஆதியின் தன்னிச்சையான முடிவிலோ மட்டுமே கிடைக்கும்!
***
கோவை பீளமேடு பகுதியில் ஆனந்தனின் மேற்பார்வையில் தனிகுடித்தனம் வெகுஜோராக ஆரம்பித்தது. வில்லா டைப் சிறிய பங்களா அது. கீழே அலுவலகமும் மேலே நான்கு படுக்கையறைகள், ஹால், சமையலறை என சகல வசதிகளும் கொண்ட நவீன வீடு ஒன்றினை வாங்கியே அதில் குடியேறி இருந்தார்கள். ஹை-டெக் செக்யூரிட்டி சர்வீஸில் எந்த நேரமும் சகல பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் பகுதி அது.
வீடு பால் காய்ச்சிய தினத்தன்று பெரியவர்களாக ராஜசேகரும் அருணாச்சலமும் வந்து சென்றதோடு சரி! பயணம் மேற்கொள்ளக் கூடாதென தேஜு ஓய்வில் இருக்க, அவளுக்கு துணையாக ஆதியும் அவளுடன் இருந்து கொண்டான்.
இருவரும் கோவைக்கு வரவில்லை என்றாலும் நகுலேஷ் மூலம் புதுமனை புகுவிழாவில் நடப்பவை அனைத்தையும் காணொளியில் கண்டு களித்தனர்.
ஆனந்தரூபன் பெரும்பாலான நேரங்களில் கீழே அலுவலகத்தில் தங்கி தனது வேலைகளை செய்யத் தொடங்கினான். அவன் வெளியில் செல்வதே மிக அரிதான விசயமாக இருக்கும். நகுலேஷும் மனஷ்வினியும் கல்லூரிக்கு காரில் சென்று வந்தனர்.
வேறெங்கு செல்ல வேண்டுமென்றாலும் காரணகாரியத்தைக் கூறி, தன்னிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டுமென்று கண்டிப்பாக கூறி விட்டான் ஆனந்தன்.
‘இந்தா ஆரம்பிச்சுருச்சுல்ல… இவனோட அக்கப்போரும் அலட்டலும்! நான் வெளியே போனா தானே உன்கூட பேசணும், பெர்மிஷன் வாங்கணும்! அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல ஆனந்தா!’ மனதிற்குள் நொடித்துக் கொண்ட மனஷ்வினி, தன் போக்கிலேயே நடந்தும் கொண்டாள்.
அதற்கும் மீறி அவள் வெளியே செல்ல வேண்டுமென்றால் நகுலை விட்டு அனுமதி கேட்கச் செய்து, அவனுடன் வெளியே சென்று வருவாள்.
கணவன் மனைவியாக இல்லாமல் இருவரும் தனித்தனி அறைகளில் தங்கிக்கொள்ள, நேருக்குநேராக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதே மிக அரிதான விசயமாகிப் போனது.
வீட்டு வேலை, சமையல் என எதையும் இவள் தலையில் ஆனந்தன் ஏற்றவில்லை. தினமும் காலை ஏழு மணிக்கு இரண்டு பேர் சுற்றுவேலை, சமையல் வேலைக்கென வருபவர்கள், மாலை ஏழு மணிக்கு இரவு உணவையும் சமைத்து வைத்து விட்டே செல்வர்.
வீட்டோடு தங்கும் வேலையாளாக யாரையும் ஆனந்தன் நியமிக்கவும் இல்லை. அலுவலகத்திற்கு வரும் பணியாட்களும் அப்படியே!
ஒவ்வொரு இடத்திலும் தங்களின் பாதுகாப்பினை பலப்படுத்தி வைத்தே சர்வ ஜாக்கிரதையாக இருந்தான் ஆனந்தன். மொத்தத்தில் சூடு கண்ட பூனையாக எப்போதும் கடுகடுவென்றே நடந்து கொண்டான்.
படிப்பு ஒன்றையே மூச்சாக கொண்டு மனஷ்வினியின் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தன. உண்மையில் அவளுக்கு ஒருநாளின் இருபத்திநான்கு மணி நேரமும் போதவில்லை.
நான்கு மாதங்களாக விடுபட்ட பாடங்களை கேட்டுத் தெரிந்து மனதில் நிறுத்திக்கொண்டே ஆகவேண்டும். தற்போதைய வகுப்பு பாடங்களையும் தேங்கவிடாமல் படித்து கொள்ள வேண்டும். அதற்குரிய செய்முறை மற்றும் எழுத்து வேலைகளையும் முடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் எந்நேரமும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள்.
எந்த வேலையை எப்போது செய்வதென்றே பெரும் குழப்பம் அவள் மனதை எப்போதும் அசைத்து பயமுறுத்தியது. இதன் காரணமே வீட்டில் என்ன நடக்கிறது? யார் எப்படி வந்து போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள மறந்தும் போனாள்.
இவளுக்கு நேர்மாறாக நகுலேஷ் ஊர் சுற்றிக் கொண்டு தினசரி நாட்களை மகிழ்வுடன் கடந்து கொண்டிருந்தான். கல்லூரியில் முதலாம் ஆண்டு என்பதால் அவனுக்கு படிப்பு சார்ந்த வேலைகள் அத்தனை அதிகம் இல்லை. தினமும் ஆனந்தனின் கடினப் பார்வையை பரிசாகப் பெற்றுக் கொண்டு வெளியில் சுற்றக் கிளம்பி விடுவான்.
‘அலுவலக வேலையில் பங்கெடுத்துக் கொள்!’ என ஆனந்தன் கூறினாலும் சொற்பநேரமே செய்துவிட்டு வெளியே புறப்பட்டு விடுவான்.
மச்சான் உறவையும் தாண்டி, ஆனந்தனின் செல்லத் தம்பியாக மாறியதே இவனது இந்த அலட்சியபோக்கிற்கு காரணமாகிப் போனது.
அன்றையதினம் இரவு எட்டுமணி அளவில் தலைவலியால் அவதிப்பட்ட ஆனந்தன், கீழே அலுவலகத்தில் இருந்துகொண்டே, “ரொம்ப டயர்டா இருக்கு நகுல்… ஏலக்காய் டீ கொண்டு வரச் சொல்லு!” வெளியே கிளம்பத் தயாராக இருந்த நகுலேஷிடம் இன்டர்கம்மில் கூறினான்.
“வேலைக்காரங்க யாரும் இல்ல மாமா!” நகுல் பதிலளிக்க,
“எனக்கும் தெரியும் டா… வீட்டுல இருக்கிற உங்க அக்கா ஒரு டீ போட்டு குடுக்க மாட்டாளா?” ஆனந்தன் எரிச்சலுடன் கேட்க,
அவனும் மனஷ்வினியிடம், “அக்கா, மாமாக்கு டீ போட்டு கொண்டு போய் கொடுத்திடு!” சொல்லிவிட்டு அதே வேகத்தில் வெளியே கிளம்பியும் விட்டான்.
அக்காளும், ‘ம்ம்…’ என்று தலையசைத்தாளே தவிர மனதிற்குள் ஏற்றிக் கொள்ளவில்லை, தம்பியானவனும் அதை கவனிக்கவில்லை
“பத்து நிமிசத்துல அக்கா போட்டு கொண்டு வர்றேன்னு சொல்லி இருக்கா மாமா!” என்றபடி நகுல் சென்று விட, ஆனந்தன் தேநீருக்காக காத்திருக்கத் தொடங்கினான்.
நிமிடங்கள் மணிநேரமாகக் கழிந்தும் தேநீர் வந்தபாடில்லை. களைப்பின் மிகுதியில் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேலே வீட்டிற்கு வந்தவன் கோபத்துடன் மனஷ்வினியின் எதிரில் சென்று நின்றான்.
தனது அறையில் சுற்றிலும் நோட்டுப் புத்தங்கங்கள் பரப்பி இருக்க, நடுவில் தன்னை மறந்து எழுதிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி. இவன் வந்து நின்றதை அவள் கவனிக்கவே இல்லை.
அதுவும் சேர்ந்து அவனது கடுப்பை அதிகமாக்கி வைத்தது. அவள் எந்த நிலையில் இருக்கிறாள் என கண்டு கொள்ளாமல் கடுகாய் அவளை தாளிக்கத் தொடங்கினான் ஆனந்தன்.
“உன்னால ஒரு டீ கூட போட்டுக் குடுக்க முடியாதா?” காட்டத்துடன் கேட்க, அவள் காதில் வங்கிக் கொள்ளவே இல்லை.
“ஏய்… உன்னைத்தான் கேக்கிறேன்! காதென்ன செவிடா போச்சா?” இவன் குரலை உயர்த்தவும்தான், இவனுக்காக, நகுல் சொல்லிவிட்டு சென்றது நினைவிற்கு வந்தது.
‘ஐயோ மறந்து தொலைச்சுட்டேனே…. என்னென்ன சொல்லி திட்டப் போறானோ!’ மனதிற்குள்ளே புலம்பிய நேரத்தில் செய்வதறியாது, “மறந்துட்டேன்!” என ஒற்றை சொல்லில் இவள் இளித்து வைக்க, கோபத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிவிட்டான் ஆனந்தன்.
நிமிடத்திற்கு நிமிடம் தலைவலியின் வீரியம் அதிகரித்த நேரமது! இன்னதென்ற வரம்பில்லாமல் வார்த்தை அம்புகள் வசைமொழிகளாக வந்து விழுந்தன.
“இவனுக்கென்ன ஊழியம் பாக்கறதுன்னு மனசுல கருவிகிட்ட திமிரு உன்கிட்ட ஏகத்துக்கும் மண்டிப் போயி கிடக்குதுடி… ஒன்னு சொன்னா புத்தியில ஏத்தி வச்சிக்க மாட்டியா? சொன்ன உடனே மறக்கறத்துக்கு எருமைமாட்டு மூளையவா வாங்கிட்டு வந்துருக்க?” யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டியதும் மனுவின் சுயம் விழித்துக் கொண்டது.
இதற்கு முன்னும் இவனது வசைமொழிகளை, எள்ளல் பேச்சினை கேட்டிருக்கிறாள் தான். ஆனால் இது அதிகப்படி அல்லவா! எதிர்த்து பேசும் அவசரத்தில் அவளும் தனது வார்த்தை கட்டுப்பாட்டினை மறந்து போனாள்.
“இதுக்கு மேல என்ன பேசினாலும் மரியாதை கெட்டிடும் ஹிட்லர்… ரொம்ப பேசிட்ட நீ! படிக்கிறப்போ மறந்து போறது அவ்வளவு பெரிய தப்பா?” அவனைப் போலவே குரலை உயர்த்திக் கேட்க, இவனுக்குள் சற்றே அதிரத்தான் செய்தது.
“ஆமா…. எனக்கு படிக்க உக்காந்தா சகலமும் மறந்து போகும்தான்! அதுக்காக, வாய்க்கு வந்தபடி பேசுவியா? அது சரி… உனக்கு டீ போட்டு கொடுக்க நான் என்ன நீ வச்ச வேலைக்காரியா? இல்ல பொண்டாட்டியா!
படிக்க வைக்கிறதுக்கு தானே என்னை கூட்டிட்டு வந்து இங்கே அடைச்சு வைச்சுருக்க… நீ சொன்னபடி நானும் அந்த வேலையை செஞ்சிட்டு இருக்கேனே! பின்ன எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்றே?” கேள்விகளை உஷ்ணமாக அடுக்கியதில் ஆனந்தன் மலைத்துப் போய் விழித்தான்.
அவளுக்குள் இருக்கும் படிப்பின் அழுத்தமும் இவனுக்குள் இருக்கும் தலைவலியின் வீரியமும் சேர்ந்து சதிராட்டம் ஆடத் தொடங்கியது.
“அறிவோட தான் பேசுறியா! யாருடி உன்னை அடைச்சு வைச்சா?” பல்லிடுக்கில் கோபத்தை கட்டுப்படுத்தி காறித் துப்பினான் ஆனந்தன்.
“பின்ன… நான் வெளியே போயிட்டு வர எத்தனை கெடுபிடி பண்ற? கொஞ்சம் லேட்டா வந்தாலும் என்னை கீழே இறக்கி பாக்கற உன்னோட அருவெறுப்பான பார்வையை நான் கவனிக்கலன்னு நினைக்கிறியா?” ஒருமைக்கு தாவி நிதானம் தவறி மனு பேசும் நேரத்தில் வெளியே சென்ற நகுலும் வீட்டிற்குள் வந்து விட்டான்.
அங்கு இருவருக்குள்ளும் பேச்சு நடப்பதை பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று அறிந்து கொண்டவனின் மனம் இவர்களுக்கு இடையில் பேசுவதா வேண்டாமா என குழம்பத் தொடங்கியது.
சிறியவன் முன் தர்க்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் மறந்து போனவர்களாய் இருவருமே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சண்டைக்கு நின்றனர்.
அர்த்தமில்லாத இருவரின் பேச்சுகளும் தொடர்ந்த நேரத்தில் நகுல் தான் இடையிட்டு இவர்களின் சண்டையை நிறுத்த வேண்டியதாய் இருந்தது.
“கொஞ்சம் நிறுத்துறீங்களா?” குரலை உயர்த்தி, பேச தடை விதித்த நகுல்,
“அக்கா… எதுக்கு இவ்வளவு ஹார்சா பேசுற?” மனுவை அதட்டி விட்டு,
“என்ன மாமா நடந்துச்சு?” அமைதியாக ஆனந்தனை கேட்டான்.
மாமனின் மீதான தம்பியின் அனுசரணையே மனுவின் கோபத்தை இன்னமும் அதிகப்படுத்த,
“போடா குள்ளநரி… நீ எப்பவும் இவனுக்குதான் சப்போர்ட் பண்ணி பேசுற!” என்றிவள் கூறவும், ‘நரி’ என்ற அழைப்பில் இப்போது தம்பிக்கும் கோபம் வந்தது.
தன்னைப் பற்றிய விவரங்களை கணவனிடத்தில் தம்பிதான் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றறிந்த பொழுதில் இருந்தே, மனஷ்வினி தம்பியை ‘நரி’ என்று அழைத்து தனது கடுப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அதில் அக்காவின் மேல் அடங்காத ஆத்திரமும் நகுலுக்கு உண்டு!
“வாயை மூடு!” எனக் கத்தியவன் ஆனந்தனைப் பார்க்க,
“நான் டீ கேட்டது தப்பா போச்சு நகுல்!” ஆனந்தன் குத்தலாக சொல்ல,
“கேள்வி கேட்டதுதான் தப்பு. சாதாரண மறதிக்கு வாய்க்கு வந்தபடி கேள்வி கேக்கத் தோணுதோ?” எகத்தாளமாக கேட்டவளின் சீற்றம் இன்னும் அடங்கிய பாடில்லை.
“ப்ளீஸ் அக்கா… அமைதியா இரேன்!”
“எதுக்கு? இன்னும் என்னை மட்டம் தட்டி பேசவா… அப்படியென்ன இவரை விட நான் குறைஞ்சு போயிட்டேன்!” என்றவளின் முகமும் கோபத்தில் சிவந்து பேச்சும் வெடித்தது.
“அக்கா… கோபத்தில் என்னென்னமோ பேசிட்டே போற…” நகுல் எச்சரிக்க, இவள் கேட்கவே இல்லை.
“படிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணினா எனக்கு பிடிக்கவே பிடிக்காது. வேண்டாம்னு ஒதுக்கி வைச்ச படிப்பை மறுபடியும் மனசுல ஒட்ட வச்சுட்டு படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்.
நீங்க ஈசியா படின்னு சொல்லிட்டு போயிட்டீங்க… இங்கே நான் படுற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்! கிளாஸ் அட்டென்ட் பண்ணுவேனா… பிராக்டிகல் பார்ப்பேனா, இல்ல விட்டுப் போன பாடத்தை படிப்பேனா!
நானே குழப்பத்துல சுத்திட்டு இருக்கேன். நீங்க என்னை நம்பிக் கொடுத்த வேலையை சரியா செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உங்க வாயை விட்டு அதை எல்லாம் வீணாக்கிடாதீங்க…
படிப்பை தவிர நீங்க சொல்ற எதையும் கேக்க எனக்கு விருப்பமும் இல்லை, கேக்கவும் மாட்டேன்!” படபடவென்று தனது தீர்மானத்தை பொரிந்து தள்ளி விட்டுச் செல்ல, வாயை பிளந்து கொண்டு பார்த்தனர் இருவரும்.
‘விளையாட்டாய், நக்கலாய் பதிலுக்கு பதில் பேசியிருக்கிறாள். ஆனால் இத்தனை காட்டமாய் இவள் பேசியதில்லையே!’ என்றெண்ணிய படி இவளை முற்றிலும் புதுமையாக பார்த்தான் ஆனந்தன்.
“என்னடா… இப்படி பேசிட்டு போறா?” ஆனந்தன் அதிர்ச்சி விலகாமல் கேட்க,
“அதான் எனக்கும் தெரியல மாமா… படிக்கிற நேரம் டிஸ்டர்ப் பண்ணினா எரிஞ்சு விழுவாதான்! ஆனா, இந்தளவுக்கு கோபப்பட மாட்டா!”
“எரிஞ்சு விழுவாளா… என்னடா சொல்ற?”
“படிக்க உக்காந்தா தன்னையே மறந்திடுவா… தண்ணி குடிக்கவும் அவளுக்கு நாமதான் ஞாபகப்படுத்தணும். படிக்கிறதுன்னா மனு அக்காவுக்கு அவ்வளவு இஷ்டம்.”
“ஒஹ்… அவ்வளவு இஷ்டமான படிப்பையும் தள்ளி வச்சிட்டு கல்யாணத்துக்கு எப்படி சம்மதிச்சா?” சட்டென்று ஆனந்தன் புரியாமல் கேட்க,
“அதான் கல்யாணம் முடிஞ்சதும் படிக்கலாம்ன்னு சொல்லி இருந்தாங்களே மாமா!”
“அப்ப படிப்புக்காகத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா?” இவன் சொன்னதை கேட்டதும்,
“என்ன? வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுதா!” கேட்டபடியே மனு அங்கே வந்து விட,
“ஐயோ திரும்பவும் ஆரம்பிக்காதே க்கா!” நகுல் அவளை சாந்தப்படுத்த முனைந்தான்.
அதை ஏற்றுக் கொள்ளாதவளாக, “முன்னாடி பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னீங்க… இப்ப படிப்புக்காக கல்யாணம் நடந்ததா தண்டோரா அடிக்கப் போறீங்களா?
எப்படியும் இந்த ஜென்மத்துல உங்க சந்தேகம் தீரப் போறதில்ல… நம்ம அர்த்தமில்லாத சண்டையும் ஓயப் போறதில்ல! டீ குடிச்சிட்டு தெம்பா குழம்பிட்டே இருங்க!” நொடித்துக் கொண்டே ஆனந்தனின் கையில் தேநீர் கோப்பையை திணித்து விட்டுச் சென்றாள் மனஷ்வினி.
கோபத்தில் கொதித்தவள் தன் இயல்பாய் கணவன் கேட்ட தேநீரையும் கொடுத்து விட்டே சென்றிருக்க, அதைப் பார்த்த இருவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
“உங்க அக்காவுக்கு இருக்கற ரோசத்தை அளக்க, இந்த உலகத்துலேயே ஸ்கேல் இல்லடா… என்னா ஒரு கோபம்! அம்மாடியோவ்!” அதிர்ச்சியில் விழி விரித்தவனாக, தன்னை மறந்து சிரித்தபடி தேநீரை ருசிக்கத் தொடங்கினான் ஆனந்தன்.