Neer Parukum Thagangal 13.1

NeerPArukum 1-d6610943

Neer Parukum Thagangal 13.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 13.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்!

எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், முற்றுப்புள்ளி வைத்துப் போனவன் நிற்கும் திசையை சில வினாடிகள் செல்வி பார்த்திருந்தாள்!

பின் எதைப் பற்றியும் யோசிக்காமல் திரும்பிக் கொண்டாள்.

சில வினாடிகள் எது ஒன்றைப் பற்றியும் சிந்திக்காமல் கழிந்தபின், சரவணன் பேசிப்போன வார்த்தைகள் மிகத் தோராயமாக ஞாபகத்தில் வந்து நின்றதும், அது குறித்து, ‘தன் நிலை என்ன?’ என்ற கேள்வி அவளுள் வந்தது!

‘தன் பேச்சிற்கான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறான். அவ்வளவுதான்! வேறொன்றும் இல்லை’ என்பதுதான் ‘தன் நிலை’ என பதில் வந்ததால், அதை அப்படியே விட்டுவிட்டுக் கைகளை முட்டியின் குறுக்காக கட்டிக் கொண்டு, மகன் விளையாடுவதைப் பார்த்திருந்தாள்.

வேறு எந்த எண்ணமுமே இல்லாமல் சில வினாடிகளை கடத்தினாள்!

அந்த வினாடிகள் முடிந்த நிலையில், ‘வேறொன்றுமில்லை’ என்று அப்படியே விட்டதைப் பற்றிய எண்ணம் வந்து நின்றது. அடுத்த நொடி நேராக அமர்ந்து கொண்டு, சரவணன் பேசிப் போனதைப் பற்றி செல்வி அசைபோட்டாள்.

‘பொறுமையாக, தெரிவு செய்த வார்த்தைகளால் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறான். அவ்வளவுதான்! வேறொன்றும் இல்லை’ என்று இத்தோடு இதை விட்டுவிடலாமே என தோன்றியது.

தோன்றியதை செயல்படுத்தும் வண்ணம் பல நொடிகளை நகர்த்தினாள்!

ஆனால் அதன்பின் அவன் தெரிவு செய்து பேசிய வார்த்தைகள் ஓரளவிற்கு ஞாபகத்தில் வந்தன.

அவளைக் காயப்படுத்தவே பேசப்பட்ட வார்த்தைகளால் கஷ்டப்பட்டிருந்த காலகட்டத்தைக் கடந்து வந்த ஒருத்திக்கு, அவளை எந்தவொரு விதத்திலும் காயப்படுத்திட கூடாதென பேசப்பட்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்துதான் தெரிவது போல் இருந்தது.

‘போதும்! ஏன் இதையே யோசிக்க வேண்டும்?’ என நினைத்து, எண்ணத்தை மடைமாற்றவென… மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, மகன் விளையாட்டில் களைந்து கிடந்த நாளிதழ்களை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தாள்.

அவளையும் அறியாமல் மீண்டும் எண்ண அடுக்கில், அவன் பேசிச் சென்ற வார்த்தைகள் வந்து உட்கார்ந்ததும், எடுத்து அடுக்குவதை நிறுத்திவிட்டு, கைகளை பிசைந்து கொண்டு அப்படியே அமர்ந்தாள்.

அவனது இயல்புகள் என்று அவன் கூறியவைகள் அனைத்துமே ஞாபத்திற்கு வந்தன. கூடவே அவனுக்கு அவளைப் பிடிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட அவளது குணாதிசியங்கள் நினைவிற்கு வந்தன.

இரண்டும் சேர்ந்து அவளை இதமாக உணர வைத்தது!

அடுத்த கணத்தில், ‘ஏன் இதைப் பற்றியே யோசித்திருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை உதறிவிட்டு, ‘இதைப் பற்றியும் சற்றே யோசித்துப் பார்த்தால் என்ன?’ என்ற கேள்வியில் வந்து அவள் உள்ளம் நின்றது!

அதன்பின்னர்தான்… அப்பொழுதுதான் ஆரம்பத்திலிருந்து சரவணன் பேசிய பேச்சுகள் அனைத்தும் துள்ளியமாக ஞாபகத்தில் வந்து நின்று, அவளுக்குள் ஆழமாகச் சென்று அவன் மீது மதிப்பு, மரியாதையை கொண்டு வந்தது.

கலைந்திருந்த முடிக்கற்களை எல்லாம் ஒன்றாக ஒதுக்கிவிட்டு, கருவிழிகள் இரண்டும் இங்கும் அங்கும் மெதுவாக செல்ல, திண்ணமாக யோசித்தாள்.

அவளை… அவளது எண்ணங்களை ஒருகணமுமே ஒரு பொருட்டாக மதிக்காத தருணங்களைத் தாண்டி வந்தவளுக்கு… அவளுக்கு, அவள் வாழும் வாழ்விற்கு மதிப்பு தந்து பேசுபவன் எல்லா விதத்திலும் உயர்ந்துதான் தெரிந்தான்.

சிலபல நொடிகள் அந்த எண்ணத்திலே சரிந்து நின்று கொண்டாள்!

அக்கணம் விளையாட்டுப் போதுமென நினைத்த ஹரி, அம்மா முன் வந்து, மடியில் மண்டியிட்டு, கழுத்தோடு கட்டிக் கொண்டு, தோளில் முகம் புதைத்தான்.

சற்று நேரம் மகனை அணைத்திருந்தபடியே யோசித்தாள். அவன் நடந்து கொண்ட விதங்கள் அனைத்தும் அவள் முன்னே ஓடி வந்து நின்றன!

அது, அடிமைப் பண்புகள் குறையென்று சொல்லும் குணம் கொண்டவளுக்கு, மரியாதைப் பண்புகளோடு இருக்கின்ற ஒருவனின் குணத்தை நிறையாக, நிறைவாக தெரிய வைத்தது.

நிறைவாக தெரிந்த நிலையிலே நிறைய நேரம் நின்று யோசித்தாள்!

‘யாரென்றே தெரியாதவர்களுக்கும் உதவும் குணம்’, ‘மறுப்பை ஏற்கும் அவன் மனப்பக்குவம்’, ‘அனுதாபப்படும் நிலையில் உனது வாழ்க்கை இல்லை என்று அவன் கூறியது’, ‘ப்ரியத்தை அவன் வெளிப்படுத்திய விதம்’ இதையெல்லாம் மீண்டும் மீண்டும் செல்வி எடுத்துப் பார்க்கையில்… சரவணன் மீது ஒருவித பிடித்தத்தை ஏற்படுத்தியது!

பிடித்தம் என்ற ஓர் எண்ணம் வந்ததும் விழுக்கென்று நிமிர்ந்தாள். அதன்பின் யோசிப்பதை நிறுத்திவிட்டு வெகுநேரம் பிடித்தத்தையே பிடித்து நின்றாள்!

கடைசியாக, இவ்வளவு நேரம் யோசித்ததில், ‘சேர்ந்து பயணிக்கலாமா என்ற அர்த்தத்தில் கேட்டேன்’ என அவன் சொன்னதற்கு, ‘உன் நிலைப்பாடு என்ன?’ என்று அவள் அகம் தூக்கி வந்த கேள்வியைப் பார்த்தபடி இருந்தாள்.

அதிகநேரம் அக்கேள்வியிலே தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தாள்!

கடிகார நேரம் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. ஏதோ ஒரு நொடியில் அவளிடம் சொன்ன கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக, அதற்கான அவள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முறையாக… இதழ்களின் ஓரத்தில் ஒரு சிறு கீற்று போல புன்னகை வந்து எட்டிப் பார்த்தது!

அந்தப் புன்னகையுடன்… முற்றுப்புள்ளி வைத்துப் போன சரவணன் நிற்கின்ற திசையையே ஒரு முடிவுடன் செல்வி பார்த்திருந்தாள்!!

****************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

அப்படிப் பேசிவிட்டு சுவரில் சாய்ந்து நின்ற கண்மணியின் முன்னே வந்து நின்று, “இதுக்கு என்ன அர்த்தம் கண்மணி?” என்று சேது கேட்டான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “அர்த்தம்?!” என்று அழுத்தமாக சொன்னாள். பின் குனிந்து, “அர்த்தம்?!” என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுவிட்டு… மீண்டும் நிமிர்ந்தவள், “உனக்குத் தெரியும் சேது. ஏன் என்கிட்ட வந்து கேட்கிற? கதவை உடைச்சிடு. வெளிய போகணும்” என்றாள் உறுதியேயில்லாமல்!

அவள் உறுதியின்மையை அவன் உணர்ந்தாலும், எதுவும் கேட்காமல், “ஓகே! உன் இஷ்டம்” என்று சொல்லி கதவின் முன் சென்று நின்றான்.

கதவில் கைவைத்தவன் லேசாக திரும்பி, “கண்மணி, ஆர் யூ ஷ்ஸுர்?” என்று உலர்ந்து போன குரலில் கேட்டதற்கு, இருவிழியும் உறைந்து போனது போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையை உற்று நோக்கியவன், “கெஞ்சலாம் மாட்டேன். ஒழுங்கா சொல்லு” என்று அவள் பேச்சை உறுதி செய்ய கேட்க, ‘ஆம்’ என்பது போலும், இல்லாமலும் தலையை ஒருமாதிரி அவள் உருட்ட, ‘ஏன் இப்படி கன்ஃப்யூஸ் பண்றா?’ என்று கதவை முட்டிக் கொண்டிருந்தான்.

சில வினாடிகள் இருவருக்கும் இடையே உரையாடல்கள் இன்றி கழிந்தன!

திரும்பவும் கண்மணி முன்னால் வந்து நின்ற சேது, “திடீர்னு ஏன் இப்படிச் சொல்ற?” என்று புரியாமல் கேட்க, “திடீர்னா? அப்போவே வெளிய போகப் பார்த்தேனே?” என்று புதிராகவே பேசினாள்.

“அப்போ என்னால உனக்கு ஆபத்தோன்னு பயந்த… அதனால அப்படி! இப்போ என்ன? பிடிக்கலையா?!” என்று குழம்பிப் போன குரலில் கேட்டான்.

“ஏன் இப்படிக் கேட்கிற? இங்க உன்னைப் பார்த்தப்ப ரொம்ப பயந்தேன். பட் இப்ப அந்த பயம் சுத்தமா இல்லை. அதைவிட அதிகமா உன்மேல நம்பிக்கை வந்திருக்கு” என்றவள், “அன்ட் நீ கேட்ட கேள்விக்குப் பதில்… சேதுவை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

“அப்புறம் ஏன் வெளிய போகணும்னு சொல்ற?”

“ஆனா இப்போ இன்னொரு சின்ன பயம் வந்திருக்கு” என்று அவன் குழப்பம் தீர்க்காமல் மேலும் குழம்பினாள்.

“புரியலை கண்மணி! நீ என்ன சொல்ல வர்றன்னு சுத்தமா புரியலை” என்று வெளிப்படையாக சொல்ல, “சரி, உனக்குப் புரியலை. புரியவும் வேண்டாம். போ… போ… போய் கதவை உடைக்கிற வழியைப் பாரு” என விரட்டினாள்.

அதற்குமேல் கேட்பதற்கு சேதுவிற்கு ஒருமாதிரி இருந்தது!

வேறு வழியில்லாமல் மீண்டும் கதவு முன் சென்று நின்று… அவள் பேசியதை உருபோட்டுக் கொண்டிருந்தவன், ‘அந்த இன்னொரு பயம் எது?’ என்ற கேள்வி வந்ததும், திரும்ப அவள் முன்னே வந்து நின்றான்.

“சும்மா இப்படி வந்து நிக்காத… அப்புறம் ஸ்ப்ரே அடிச்சிடுவேன்”

“ஏன் இப்படின்னு காரணம் சொல்லு. அப்புறமும் நான் வந்து நின்னா, ஸ்ப்ரே அடிச்சிக்கோ”

“ஏன் இப்படினா? எனக்கு இப்படித்தான் தோணுது சேது” என்று தன்மையாக சொன்னபின், அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை!

யோசிக்க ஆரம்பித்தான்! ‘பாசம் காட்டினால் என்ன தவறு?’ என்று கேட்டவள், ‘இப்போது ஏன் இப்படி?’ என்ற கேள்வி வந்தது. அப்படியென்றால் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. ‘அது என்ன?’ என்று யோசித்தான்.

ஒருவேளை நடந்ததையே நினைத்து தன்னைக் குறுக்கிக் கொள்கிறாளோ? குறைத்துப் பார்க்கிறாளோ? தாழ்வு மனப்பான்மையோ? என்ற கேள்விகள் எழுந்ததும், அவளிடமே கேட்கலாம் என்று வார்த்தைகள் நுனிநாக்கு வரை வந்திருந்தன.

ஆனால் அந்த நேரத்தில் அவள் பேசிய விதம், பேசியது… அதிலும் குறிப்பாக, ‘என் ஆசை, கனவு நிறைவேறும்’ என அவள் சொன்னது ஞாபகத்தில் வரவும், இப்படிக் கேட்டால் நிச்சயமாக கோபப்படுவாள் என்று உதித்த கேள்விகளை உதறித் தள்ளிவிட்டான்.

இதுவல்ல என்றால் வேறு என்னவாக இருக்கும் என்று மீண்டும் யோசித்தான்!

எப்படி முயன்று யோசித்தாலும், அவள் பயம் என்னவென்று தெரிய முடியாத சலிப்பில், “என்ன பயம்னு சொல்லலாம்ல? ஏன் இப்படிப் பண்ணனும்?” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அவன் செய்கையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள், “சேது!” என்று ஓர் முடிவெடுத்து அழைக்க, மெதுவாக அவளைப் பார்த்தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் அழுதேனே சேது, உனக்கு அது ஞாபகம் இருக்கா?” என்று தன் பயத்தைச் சொல்ல நினைத்துக் கேட்டதற்கு, “இருக்கு…” என்றான் மந்தமான குரலில்!

“அது… போஸ்ட் ட்ராமா எஃபெக்ட்! அப்பப்ப இருக்கும். சம்டைம்ஸ் தைரியமா கடந்து போயிடுவேன். பட் சம்டைம்ஸ் இப்படித்தான் அழுவேன். அப்போ சொன்னேனே சேது, தலையணைகிட்டதான் அழுவேன்னு?!?”

“இன்னும் நீ விஷயத்துக்கே வரலை”

“சேது… நீ பக்கத்தில இருந்தா, உன்கிட்டதான் அழுவேன்”

“அழுதுக்கோ கண்மணி! அதுக்கென்ன?”

“அப்போ மட்டும், ‘அழாத. அழறதை நிறுத்து. அது, இது’ன்னு சொன்ன? இப்ப இப்படிச் சொல்ற?”

“அதுக்கும் உன் பயத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“எனக்கென்னமோ அதை ஹேண்டில் பண்ற மெச்சூரிட்டி உனக்கு இல்லைனு தோணுது. எனக்குத் தோனறது மட்டும் உண்மையா இருந்தா… நம்ம ரெண்டு பேருக்குமே லைஃப் கஷ்டம் சேது. இதான் என்னோட பயம்!”

‘என்னது எனக்கு மெச்சூரிட்டி இல்லையா? கிரேட் இன்சல்ட்!’ என்று தலையை உலுக்கியவன், “இதெல்லாம் ஒரு பயமா கண்மணி?” என சலிப்புடன் குரலை உயர்த்தினான்.

“பரிதாபப்படறதோ, அனுதாபம் காட்டறதோ எனக்கு வேண்டாம். அன்ட் தப்பு உன்மேல இல்லை அவங்கமேலதான்… தப்பு செஞ்சவங்கதான் கில்ட்டியா பீல் பண்ணனும் நீயில்லைனு… பேசறதும் வேண்டாம். எனக்கே அது தெரியும்!”

“சரி வேறென்ன வேணும்?”

“நான் உடைஞ்சி அழறப்போ… நீ ஸ்ட்ராங்கா இருக்கணும் சேது. இருந்தேனா எனக்கு சப்போர்ட்டா இருக்கும்” என்றாள் அவள் எதிர்பார்ப்பை!

கண்மணி எதிர்பார்ப்பில் இருக்கும் எதார்த்தம் புரிந்தது. அவள் கேட்ட விதம் பிடித்திருந்தது. கேட்டவளையும் பிடித்தது. ‘இவ்வளவுதானா உன் பயம்?’ என்ற எண்ணமும் வர, வேறு பக்கமாக பார்த்திருந்தவளைப் பார்த்தான்!

இயல்பாக… இலகுவாக… இல்லாமல் இறுக்கமாக இருந்தாள்!

உடனே சேது, “கொஞ்சம் பேசணும். கவனிக்க முடியுமா?” என்று கேட்டதற்கு, அவன்மீது அவள் கவனத்தை வைக்க, அவன் பேச ஆரம்பித்தான்.

“இங்க பாரு கண்மணி, ஃபர்ஸ்ட் நீ அழறப்போ கடமையேனு பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் நீ அழறதை பார்க்க கஷ்டமா இருந்தது. போகப் போக பாசம் காட்ட தோணிச்சி. உனக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசணும்னு நினைச்சேன்

ஆனா கண்மணி இவ்ளோ கம்மியான நேரத்தில… இப்படி ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டு இருக்கிறப்ப அந்தமாதிரி நான் பேசிக்கிட்டு இருந்தா, நீ எப்படி எடுத்துப்பியோன்னு பயந்தேன்!

அதான் என்னை நானே கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். அதனாலதான் நான் ஸ்ட்ராங்கா, சப்போர்ட்டா இருக்க மாட்டேங்கிற மாதிரி உனக்குத் தெரியுது” என்று தன்னிலை விளக்கம் தந்தான்.

எதையும் கூட்டவோ அல்லது குறைத்தோ சொல்லாத சேதுவின் விளக்கத்தில் ஒரு உண்மை இருந்தது. கூடவே அந்த உண்மைக்குள் ஒளிந்திருக்கும் அவன் விருப்பம் புரிந்தது… தெரிந்தது.

அதனால் வந்திருந்த சிறு பயமும் சிறுகச் சிறுக விலக ஆரம்பித்தது!

கொஞ்சம் இலகுவாக மாறியவள், ‘இன்னும் என்ன பேசப் போகிறாய்?’ என்று எதிர்பார்ப்புடன் சேதுவைப் பார்க்க, “அவ்வளவுதான் கண்மணி! பேசணும்னு நினைச்சது இதுதான். இதுக்குமேல பேச ஒன்னுமில்லை” என்றுவிட்டான்.

‘ஓ, அவ்வளவுதான?!’ என்று அவள் முகம் போனதைக் கவனித்தவன், “இன்னும் பேசணும்னா, சொன்னதையே திரும்ப சொல்லணும்” என்றவன், “பாசத்தைக் காட்றதுக்கு எனக்கு எந்த பயமும் இல்லை” என பேசினதையே பேசினான்.

மேலும், “அன்ட் ‘பாசம் காட்டினா என்ன தப்பு? பிடிச்சிருக்கு’-ன்னு சொன்ன நீதான் இப்ப பதில் சொல்லணும்” என்றான்.

இப்படிப் பேசிவிட்டு, ‘என்ன சொல்ல போகிறாய்?’ என்று எதிர்பார்த்து நின்றான்!

அவன் பேசியதைக் கேட்டு… பேசிய விதத்தை நினைத்து… இறுக்கம் போய் அவள் இலகுவாகியிருந்தாள்! ஆனால் எதையும் பேசவில்லை!!

அவள் இலகுவாக மாறிவிட்டாள் என்று தெரியவும், “சப்போர்ட்! ஸ்ட்ராங்! ம்ம், எப்படி சப்போர்ட்டா இருப்பேன்னு இப்போ காட்ட முடியாது. ஏன்னா நீ அழலை. ஆனா நீ சொன்ன மாதிரி கதவை உடைச்சா… நான் ஸ்ட்ராங்தான்னு உனக்கு காட்டலாம்” என்று பேசினான்.

அவள் இயல்பிற்கு வர வேண்டுமென்றே இப்படிப் பேசினான்!

அவன் பேசியதைக் கேட்டு இதழ்களில் வரத்துடித்த புன்னகையை இழுத்துப் பிடித்து நின்றவளிடம், “ம்ம், சொல்லு… சொல்லு கதவை உடைக்கவா?” என்று பதில் கேட்டு விரட்டினான்.

‘கொஞ்ச நேரம் பேசலைனா எவ்வளவு பேசறான்?’ என்று தோன்ற, “ஏன் சேது, நான் பேசினதை என்கிட்டயே பேசிக்காட்டி, பதில் சொல்ல சொல்லி என்னை கார்னர் பண்றியா?” என்று அவள் இயல்பாய் பேச ஆரம்பித்தாள்.                                                                                                                                    

அவள் பேசிவிட்டாள் என்ற மனநிறைவில், “ரொம்ப பேசற. நான் கதவையே உடைக்கிறேன்” என்று பொய்யாய் சொல்ல, “அது உன் இஷ்டம்! ஆனா நான் இப்போ வெளிய போக நினைக்கலை” என்று உண்மை பேசினாள்.

அவனது ‘என்ன சொல்ல போகிறாய்?’ என்ற கேள்விக்குப் பதில் சொன்னாள்!

சாதகமான பதில் கிடைத்த சந்தோஷத்தில், “கண்மணி!” என்று முதல்முறை அன்புடன் அழைத்து அவள் முன் வர ஓரெட்டு எடுத்து வைக்க, “வெயிட் சேது!” என அவளிடமிருந்து வந்த இரண்டு சொற்களால், “என்னாச்சு?” என்று கேட்டு அதே இடத்தில் நின்றான்.

முகத்தில் சிறு புன்னகையுடன், “ம், எதுக்கும் ‘ரொம்ப பேசற’ இந்த கண்மணி உனக்கு ஓகேவா? நாட் ஓகேவா?னு பைவ் மினிட்ஸ் நல்லா யோசிச்சு முடிவு பண்ணு” என்று விளையாட்டாய் பேச ஆரம்பித்தாள்.

அவனது புன்னகை இன்னும் பெரிதாக, “ஸீ கண்மணி!” என்று விருப்பத்துடன் அவள் முன்னே வந்து நின்றவனிடம், “உன்னை யோசிக்க சொன்னேன் சேது!” என்று விரிந்த புன்னைகையுடன் சொன்னாள்.

அப்படியே பின்னால் நடந்து சென்றவன், எதிர்பக்கம் இருந்த சுவரில் சாய்ந்து கொண்டு சிரித்த முகத்துடன் விடாமல் அவளையே பார்த்தான்!

அதை ரசித்தாலும், “சொன்னது புரியலையா?! கண்ணை மூடி யோசி சேது. அப்பதான் நல்லா யோசிக்க முடியும்” என்று விதிமுறை சொல்ல, “உன்னை பத்திதான யோசிக்க சொன்ன கண்மணி? ஸோ உன்னை பார்த்துக்கிட்டே யோசிக்கிறேன்” என்று புதுவிதி சொன்னான்.

அதற்கடுத்த ஐந்து வினாடிகள் இரண்டு பேரும் இதழ்களில் ஒரு சிரிப்புடன் இமைதட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கழிந்தன!

மீண்டும் அவள் முன்பு வந்து நின்று, “பைவ் மினிட்ஸ் ஆயிடுச்சி. இப்ப கேளு” என்று பதில் தெரியாத கேள்வியைக் கேட்க சொல்வது போல் சொல்ல, “ஓகே! எங்க சொல்லு பார்ப்போம்… கண்மணி ஓகேவா? நாட் ஓகேவா?ன்னு” என்று அவளும் பதில் தெரியாதது போல் பாசாங்கு செய்தாள்.

எப்படியும் சம்மதம் சொல்லப் போகிறான் என்று தெரியுமென்பதால், எவ்வித சுறுசுறுப்புபோ, சுவாரஸ்யமோ இல்லாமல் நின்றவளிடம், “கண்மணி மாதிரி ஒரு பொண்ண மிஸ் பண்ணிடுவேனோ-னு பயமா இருந்தது. இப்போ அந்தப் பயம் இல்லை” என்று சொல்லி, அவளை ஆச்சரியப்படுத்தினான்.

அப்படிச் சொன்னவனை அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்க்க, “இப்போ நீ சொல்லு. என்னை மாதிரி ஒரு பையன் உனக்கு ஓகேவா? நாட் ஓகேவா?” என கேட்டதும், “சேது!” என்று அழகாக, ஆனால் தொய்வடைந்த குரலில் அழைத்து, ஏதோ உணர்வுபூர்வமாகச் சொல்ல வந்தாள்.

அதற்குள் அவன், “நோ! நோ! என்கிட்ட நீ சென்டிமென்ட்டா பேசினா செட்டே ஆகலை. ஸோ… எனக்கு கண்மணி ஸ்டைல்ல பதில் வேணும்” என்று சேது ஆசையாக கேட்டான்.

உடனே, ‘ஓகோ அப்படியா?!’ என்று மிடுக்காக நின்று, “சரி, கொஞ்சம் தள்ளி நில்லு. பதில் சொல்லிடலாம்” என்றதும், பின்னாலே நடந்து சென்று மீண்டும் எதிர்பக்க சுவரில் சாய்ந்து நின்றான்.

சற்று நேரம் அவனை ஆராயும் தோரணையில் நின்றாள். பின், “ப்ளாக் ஜீன், ப்ளாக் டீஷர்ட்! வொயிட் லோஃபர் ஷூஸ்! கம்ப்ளீட்டா அவுட் ஆஃப் ட்ரென்ட்” என்று அவன் ஆடையலங்காரத்தை கேலி செய்தாலும், ‘இன்னும் வேண்டும்’ என்பது போல் சிரித்துக் கொண்டே நின்றான்.

‘இது போதாதோ உனக்கு?!’ என்று நினைத்தவள், “என்னபா நீ, கைல கோலம் போட்டு வச்சிருக்க?” என்று அவன் ஒப்பனையை நையாண்டி செய்ததும், ஒரு நொடி சிரிப்பை நிறுத்தி, “ஹலோ! அது டாட்டூ!!” என சொல்லிவிட்டு, மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

அவளும் சிரித்தபடியே, “ஹேர் கட் பண்றப்போ, பாதியிலயே எந்திரிச்சி வந்த மாதிரி… ஒரு ஹேர் ஸ்டைல்” என அவன் சிகையலங்காரத்தைச் சீண்டிவிட்டு, “ஸ்ஸோ…?” என்று அவள் இடைவெளிவிட… இரண்டு கைகளாலும் கேசத்தைக் கோதிக் கொண்டவன், “ஸ்ஸோ…?” என்று அவள் மாதிரியே சொன்னான்.

“ஸோ… ஓகே இல்லைதான். பட் அட்ஜஸ்ட் பண்ணலாம்” என விளையாட்டாய் பதிலளித்துவிட்டு, “ஏன்னா எனக்கு சென்ஸ் ஆஃப் ஸ்டைல் முக்கியமில்லை! பிராட் மைன்ட்டா, என்னை ஈக்வலா ட்ரீட் பண்றவன்தான் முக்கியம்!! ஸோ அப்படிப் பார்த்தா சேது டபுள் ஓகே” என்றாள் விருப்பமாய்!

சேதுவின் ஆசைப்பட்டபடி பதில் கிடைத்ததும், “சான்சே இல்லை போ!” என்று அவளை மெச்சிக் கொண்டு, “இதுதான் கண்மணி ஸ்டைல்!!” என்று சொல்லி, கைதட்டினான்!

கண்மணி சிரித்துக் கொண்டாள்!!

**********************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!