நான் பிழை… நீ மழலை.. 32

நான் பிழை… நீ மழலை.. 32

நான்… நீ…32

ஆனந்தனுக்கு மெதுமெதுவாக மனித வாழ்வின் நிதர்சனத்தையும் நல்லது கெட்டதுகளையும் சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினார் அருணாச்சலம்.

அவனது மனம் நோகாதவாறு மன உள ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, சுமூகமான முறையில் சிகிச்சை நடைபெற ஆரம்பித்தது. சரியாக ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தது.

பல கட்டங்களில் மனநல மருத்துவர்களால் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் உலகின் தர்ம நியாயங்களை புரிய வைத்திருந்தன. அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவனின் மனதில் இப்பொழுது பெருங்குழப்பம் வந்து குடிகொண்டது.

அறியாமல் தான் செய்த தவறுகளும், அடங்காத செயல்களும் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருக்க, மனதளவில் தான் ஒரு குற்றவாளியா என தன்னைத்தானே பரிட்சித்து பார்க்கத் தொடங்கினான் ஆனந்தன்.

அப்படி அலசி ஆராய்ந்து கொண்டதின் முடிவு, ‘நீ குற்றவாளியேதான்! அதுவும் கொலைக் குற்றவாளி!’ என மனசாட்சி அழுத்திச் சொல்ல, உள்ளுக்குள் மொத்தமாய் உடைந்து போனான்.

“என்னோட தவறுகளுக்கும் உயிர் பலிக்கும் நான் தண்டனை அனுபவிக்கணுமா? ஜெயிலுக்கு போகணுமா!” அறியா வாலிபனாக இவன் மருத்துவரிடம் கேள்வியை முன் வைத்ததிலேயே அவனது மனமாற்றத்தை மெச்சிக் கொண்டார் அருணாச்சலம்.

‘கெட்டாலும் மேன்மக்கள், மேன் மக்களே!’ என்ற சொலவடைக்கு ஏற்ப இரத்தத்தில் ஊறிய குடும்பப் பாரம்பரியமும், அறிந்து கொண்ட அறநெறிகளும் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொண்டு பாவத்தை தீர்த்துக் கொள்ளச் சொன்னது.

அனைத்திற்கும் தயாராக இருந்தான் ஆனந்தன். ஆனால் தாத்தா, பாட்டி, அருணாச்சலம் என மூவருமே சேர்ந்து, அவனது தவறுகளை நியாயப்படுத்திப் பேசியே அவனது எண்ணத்தை மாற்றினர்.

அத்துடன் மனநல ஆலோசகரின் சிகிச்சை முறைகளும் சேர்ந்துகொள்ள அந்த எண்ணம் அப்பொழுதே மறக்கடிக்கப்பட்டது.

“இந்த அளவுக்கு நீங்க ஃபீல் பண்றேதே உங்களோட மனமாற்றத்துக்கு நல்லதொரு அடையாளம் ஆனந்தன். நீங்களா முன்வந்து, நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்னு கோர்ட்டுல போயி நின்னா கூட உங்களோட எதிர்காலமும் வயசையும் மனசுல வைச்சு உங்களை குற்றவாளியா பார்க்க மாட்டாங்க… கண்டிப்பாங்க!

இதே போல இன்னொரு கவுன்சிலிங்தான் எடுத்துக்க சொல்வாங்க… அதோட உங்களுக்கு நாங்க கொடுத்த ட்ரீட்மெண்ட் அண்ட் ஃபைல்ல நீங்க தவறை உணர்ந்துட்டீங்கன்னு நாங்க ரிப்போர்ட் பண்ணிடுவோம். நேச்சர் இதுதான். நிறைய பெரிய குடும்பங்கள்ல இப்படியொரு பாதிப்பு இன்னைக்கும் நடந்துட்டு இருக்கு.

சோ… குற்றம், தண்டனைன்னு எதைப் பத்தியும் யோசிக்க வேண்டாம். நடந்து முடிஞ்சதை மறந்திடுங்க… இனிமே கவனமா ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கப் பழகுங்க!” என்று மருத்துவர்கள் மனதில் பதியும்படி எடுத்துக் கூற, அரைகுறையாக தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் ஆனந்தன்.

என்னதான் சமாதானம் செய்து அடக்கி கொண்டாலும் மனதின் ஒரு மூலையில், ‘இரண்டு உயிர் பிரியக் காரணமானவன்… பின்னாளில் இதே கோபம் உன்னை வதைத்திடும் போது, இதே போன்று அதிரடி முடிவெடுத்து உன்னையும் அறியாமல் கொலை செய்யவும் அஞ்ச மாட்டாய் என்பது என்ன நிச்சயம்?’ மனசாட்சி ஏகத்திற்கும் குத்திக் கிழிக்க, நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தான். தனது குற்ற உணர்விற்கு வடிகால் கிடைக்காமல் திண்டாடி தவிக்க ஆரம்பித்தான்.

குடும்பச் சூழ்நிலைகளும் விடாமல் அவனது கழுத்தினை நெறிக்க ஆரம்பித்தன. தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டே தணிகைவேலின் நிலம், விளைச்சல், சாகுபடி, குத்தகை மற்றும் வியாபர நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்.

அவ்வண்ணமே ஆதித்யனும் தந்தை விட்டுச் சென்ற தொழிலின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினான். ரூபம் குழுமம் மீண்டும் உயிர்பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது.

இந்த நேரத்திலும் ஆதியை தனியாகவே பொள்ளாச்சியில் வீடெடுத்து தங்க அறிவுறுத்தினான் ஆனந்தன். எக்காரணம் கொண்டும் தான் படும் இன்னல்களை தனது சகோதரனுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் செயல்பட்டான்.

‘பற்றற்றவனாக நான் மட்டுமே இருந்து விட்டுப் போகிறேன்!’ என்ற உணர்வு அவனை முற்றிலும் கடுமையானவனாகவே செயல்பட வைத்தது.

தணிகைவேலும் அருணாச்சலமும் இணைந்து இளைஞர்களின் கைகளில் தொழில்களை ஒப்படைக்கும் முன்னரே நல்லதொரு வளர்ச்சிடைந்த நிலையில் நிர்வாகத்தை கொண்டு வந்திருந்தனர்.

இவர்களின் மேற்பார்வையில் இரு இளைஞர்களும் தொழில்துறையில் மேம்பட்டு வளரத் தொடங்கினர். பெரும் முனைப்புடன் ஆதி தனது பங்களிப்பை அளித்து ரூபம் குழுமத் தொழில்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றதில் தம்பியின் விவசாயம் மற்றும் குடும்பத்தில் நடக்கும் நிலவரங்களை அறிந்துகொள்ள மறந்து போனான்.

இந்நிலையில் பாட்டி வடிவாம்பாள் உடல்நிலை மோசமடைய, பேத்தி மிருதுளா விடுதியில் இருந்து வரவழைக்கப்பட்டாள்.

‘உனது எதிர்காலத்தை ஆனந்தனுடன்தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.’ என்று வலியுறுத்தி, தனது திருமாங்கல்யத்தை ஆனந்தனின் கையால் பேத்திக்கு அணிவித்து அழகு பார்த்து, இறுதி மூச்சினை நிறுத்தினார் பாட்டி. இந்தச் செயல் சம்மந்தப்பட்ட இருவருக்குமே தர்மசங்கடத்தைக் கொடுத்தது.

பதினாறு வயது நிரம்பிய பெண்ணின் மனம், ‘தான் ஆசைப்பட்ட வாழ்கையை வாழ முடியாமல் போய்விடுமோ!’ என்ற பயத்தில் வயதும் புத்தியும் குறுக்கு வழியில் சாதித்துக் கொள்ள நினைத்தது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த சமயத்தில் விடுமுறைக்கு வீட்டிற்கு வராத மிருதுளா, ஸ்ரீராமின் துணையோடு ஊரை விட்டுச் சென்று கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்ட பிறகே வீட்டிற்கு வந்தடைந்தாள்.

இந்த விசயம் இரு தரப்பு குடும்பங்களையும் கொந்தளிக்க வைக்க, ஸ்ரீராமின் அன்னை ஆவேசம் கொண்டு தனது மகன் கட்டிய மஞ்சள் கயிற்றை கழற்றி எறிந்தார்.

அந்தப் பெண்மணி செய்த அடாத செயல் திருமண ஜோடிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், ‘தங்களை பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்!’ என்றே துணிந்து மிரட்டலைக் கொடுக்க, காதல் ஜோடிகளுக்கு வசைமொழிகளும் அடிகளும் கணக்கில்லாமல் வந்து விழுந்தன.

“இத்தனை வெறுப்போட இருக்கற பொண்ணு எனக்கும் வேணாம். அவளை அனுப்பி வைச்சிடுங்க… எப்படியோ போகட்டும்!” ஆனந்தன் ஒரளவிற்கு நிதானப்பட்டு நின்றாலும், தணிகைவேல் ஆற்றமாட்டாமல் சாபத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்.

இறுதியில் சிறியவர்களின் ஆசையே வென்று விட, அதற்கு பெரியவரின் முடிவான பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

“ஆனந்தன் போட்டு விட்ட மொத தாலியை இவ கழுத்துல இருந்து கழட்டி வச்சா, இந்த சொத்துல இருந்து சல்லிப் பைசா கூட கிடைக்காது. இவ என் பேத்தி இல்ல… என் சொத்துக்கு எல்லாம் என் பேரன் மட்டுமே வாரிசுன்னு இப்பவே உயிலை மாத்தி எழுதி வச்சுடுவேன்!” தணிகைவேல் கர்ஜிக்க, உறவுக் கூட்டம் மொத்தமும் அதிர்ந்து நின்றது.

ஸ்ரீராமும் பெண்ணாசை பாதி, பொன்னாசை மீதியாக காதலியை கை பிடித்திருக்க, பெரும் ஏமாற்றம் அடைந்தான். “ஒன்னுமே இல்லாத அன்னக்காவடியா இந்த சிங்காரியை கூட்டிட்டு வர்றதுக்கா, நீ இரண்டாவது தாலிய கட்டுன?!” ஸ்ரீராமின் அம்மாவும் இளக்காரமாக பேசிவிட அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“இப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணுவேன்!” அறியாப் பெண்ணாக வார்த்தையை விட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டாள் மிருதுளா.

“தாராளமா போ… மொதல்ல நீ இப்ப பண்ணியிருக்க கல்யாணம் செல்லாதுன்னு சொல்லி இவனை அத்து விட்டுடுவாங்க… நான் சொத்தையும் கல்யாணத்தையும் சேர்த்தே பதிவு பண்ணி இருக்கறதால, நீ மேஜர் ஆனதும், முறையா உன்னோட மொத கல்யாணத்தை பதிவு பண்ணச் சொல்லுவாங்க!” தணிகைவேல் வகையாக பேத்தியை சிக்க வைத்து வேடிக்கை பார்த்தார்.

எந்த வயதாக இருந்தாலும் தனக்கென இருப்பதை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதே மனித இயல்பு! மிருதுளாவின் அம்மாவும், அத்தையும் சேர்ந்து, ‘உன்னுடைய சொத்தை எந்த காலத்திலும் நீ விட்டுக் கொடுத்து விடாதே!’ என்ற வாழ்வாதாரக் கொள்கையை அவளின் மூளையில் ஏற்றி வைத்துச் சென்றிருக்க, சின்னப்பெண்ணின் மனம் விபரீதமாக சிந்தித்தது.

“எனக்கு சொத்தும் வேணும்… அதே நேரத்துல நான் ஆசைப்பட்ட வாழ்க்கையும் வேணும். என் கழுத்துல தொங்குற என் பாட்டியோட தாலி முதற்கொண்டு நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். இந்த வீட்டு வாரிசா எனக்கான சொத்தை எப்படி காப்பத்திக்கணும்னு எனக்குத் தெரியும்!” வீராப்பாய் எகிறி நின்றாள் மிருதுளா.

ஸ்ரீராமை பார்த்து, “உனக்கு, நீ கட்டுன தாலி முக்கியமா… இல்ல என் கூட வாழுற வாழ்க்கை முக்கியமா?” எனக் கேட்க,

அவனும், “எப்பவும் நீதான் எனக்கு முக்கியம் மிரு!” அழுத்தமாய் கூறி தனது காதல் பெண்ணின் மனதை சாந்தப்படுத்தினான்.

“அப்ப என்னை, உன்கூட, உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ… கொஞ்சநாள் எனக்குரிய செலவு எல்லாத்தையும் நீதான் பார்க்கணும். நான் மேஜரான பிறகு சொத்துல இருந்து வர்ற வருமானத்தை சரிபாதியா பிரிச்சு கொடுக்கச் சொல்லி கோர்ட் மூலமா வாங்கிக்கலாம்!” என தெளிவாகப் பேச அனைவரும் வாயடைத்துப் நின்றனர்.

“நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்… எனக்கும் உதவி செய்ய ஆட்கள் இருக்காங்க!” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறிட, பேத்தியின் கழுத்தை நெறிக்கப் பாய்ந்தார் தணிகைவேல்

“தாத்தா… அமைதியா இருங்க! எனக்கு அவ வேண்டாம்னு சொல்லிட்டேனே… அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவ வாழட்டும்!” ஆனந்தன் தடுக்க, அருணாச்சலமும் அதையே கூற,

“சின்னப்பொண்ணு கொஞ்சநாள் போனதும் புத்தி தெளிஞ்சு வந்திடுவா!” ஊரும் உறவும் அமைதிபடுத்தி விட, ஆத்திரம் அடங்காமல் நின்றார் தணிகைவேல்.

“அப்படி இவ கெட்டு, சீரழிஞ்சு போயி இந்த வாசப்படியை மிதிச்சா… இவளை வெட்டிப் போட்டுட்டுதான் நான் மறுவேலை பார்ப்பேன்! இவ இஷ்டப்படி வெளியே போயி ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழட்டும். இதையும் என் பேரன் போயி தொலையட்டும்னு விட்டுக் கொடுக்கிறதாலதான் இவள போக விடுறேன்!” என்று ஸ்ரீராமை பார்த்த பார்வையில் அத்தனை ஏளனம் கொட்டிக் கிடந்தது.

“என் பேரன் பிச்சை போட்டு, நீ வாழப்போறடா பரதேசி நாயே… ஒருத்தன் கையால தாலி வாங்கிட்டு இன்னொருத்தன் கூட வாழப் போறவளுக்கு பேரு என்னன்னு இந்த ஊரு உலகத்துக்கே தெரியும். ஏலே ஸ்ரீ… நீ அடுத்தவன் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தப் போற… உன்னை பொறுத்தவரைக்கும் அவ ****“ என்று நாராசமாகப் பேசி பேத்தியை தலைமுழுகினார் தணிகைவேல்.

***

‘பளார்’ என்று தன் கன்னத்தில் அடி விழுந்த அதிர்ச்சியில் நிகழ்விற்கு வந்தான் ஆனந்தன். ஒரு பெண்ணாக மிருதுளாவை பேசிய பேச்சுகளை கேட்டு கொதித்துப் போய் தன்னையும் மீறி அவனை அறைந்திருந்தாள் மனஷ்வினி.

தன்னை மறந்தவனாக கடந்த கால நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே வந்தவன், எதிரில் இருந்த மனைவியின் மன உணர்வுகளை கவனிக்க தவறிப் போயிருந்தான்.

கணவன் சொல்வதை எல்லாம் பல்லைக் கடித்து கேட்ட மனஷ்வினியும் ஆத்திரத்தை அடக்கத் தெரியாமல் மிதமிஞ்சிய கோபத்தில் ஆனந்தனை கை நீட்டி அடித்திருந்தாள்.

அத்துடன் நிற்காமல், “உங்க வீட்டுப் பொண்ணு… ஒரே வாரிசுன்னு தூக்கி தலையில வச்சு ஆடிட்டு எப்படி சட்டுன்னு இறக்கிப் பேசத் தோணிச்சு… உங்க கௌரவம், பாரம்பரியம் எல்லாம் இப்படிதான் பொண்ணுகளை கிள்ளுக் கீரையா நடத்தணும்னு சட்டம் போட்டுருக்கா!” மனம் தாளாமல் கணவனின் சட்டையை உலுக்கிக் கேட்டதில், அவனுமே சுயமடைந்து மனைவியின் புதிய அவதாரத்தை கண்டு வாயடைத்து நின்றான்.

அத்தனை எளிதில் ஜீரணித்து விடமுடியாத நிகழ்வுகளை பொறுமையுடன் கேட்ட போதும், பெண்ணிற்கு அநியாயம் நடந்ததை சொன்னதும் எந்த வகையிலும் சமாதானப்படுத்திக் கொள்ள அவளால் முடியவில்லை.

‘ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வது அத்தனை பெரிய குற்றமா? இந்த உலகம் எத்தனை விதமாக மாற்றங்களைக் கொண்டு முன்னேறிச் சென்றாலும், மனிதத்தன்மையை மதிக்காத வெட்டிக் கௌரவத்திற்கு மாலை போட்டு மரியாதையை செய்வது இன்னும் எத்தனை காலமோ!’ என உள்ளுக்குள் பொருமி வெதும்பிப் போனாள்.

“அவ போகட்டும்னு நான் அமைதியா இருந்துட்டேன் மனு! தாத்தா தான் கோபத்துல…” ஆனந்தன் இழுக்க,

“ஏன்? வேண்டாம்னு ஒதுங்கி நிக்க நினைச்ச நீயே, அவ கழுத்துல இருந்த தாலியை கழட்டி எறிஞ்சிருக்க வேண்டியது தானே… அப்போ உங்க தாத்தா என்ன பண்ணியிருப்பாரு? உனக்கும் சொத்துல நயா பைசா கிடைக்காதுன்னு சொல்லி உன்னையும் தட்டிக் கழிச்சிருப்பாரா! அப்படியென்ன உனக்கு சொத்து மேல ஆசை?” உஷ்ணப் பெருமூச்சு விட்டபடி கேள்விகளால் அவனை போட்டுத் தாக்க, ஆனந்தன் வெறுப்புடன் அவளை தள்ளி நிறுத்தினான்.

“நீ எப்படி வேணா என்னை நினைச்சுக்கோ… என் தாத்தாவை நான் எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்! அவருக்கெதிரா எந்த காரியத்தையும் செய்யமாட்டேன். அவரையே விட்டுக் கொடுக்காத போது அவர் கட்டிக் காப்பாத்தின சொத்துக்களை மட்டும் விட்டுக் கொடுக்க நான் என்ன கேணக் கிறுக்கனா? எந்த காலத்துலயும் அது நடக்காது!” மனதில் கனன்ற கோபத்துடன் மீண்டும் பழைய ஆனந்தனாக மாறி நின்றவனைப் புரியாமல் பார்த்தாள் மனஷ்வினி.

“பிடிக்காத ஒன்னை அவ மேல திணிச்சு… அதுக்கு எதிரான முடிவை அவளாவே எடுக்க வைச்சது நீங்க! இதுல அவளை குறை சொல்றது எந்த வகையில நியாயம்?” மனஷ்வினியின் கேள்வியில் நியாயம் இருந்தாலும் அதை யோசித்து பார்க்குமளவிற்கு ஆனந்தன் மெனக்கெடவில்லை.

‘விவரம் தெரிந்த நாள் முதலாய் தன்னை நிராகரித்து உதறித் தள்ளிவிட்டு சென்றவள், தனது சுயநலத்திற்காக எப்பேற்பட்ட இழி செயலையும் இலகுவாய் செய்யும் நயவஞ்சகி! இவளுக்கு பாவம் பார்த்தால் இந்த உலகத்தில் கொஞ்சநஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் தர்மங்களும் நியாயங்களும் காற்றில் கரைந்தே போய்விடும்.’ என்ற மனோபாவத்தில் இன்னமும் அந்த பெண்ணிடம் விரோதத்தை வளர்த்து கொண்டு நிற்கிறான் ஆனந்தன்.

தனக்கு ஆறுதல் கூறாமல், எதிரியை, அதிலும் பெண்ணை ஆதரித்துப் பேசியதில் மனைவி மீதே சினம் கொண்டான்.

“பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக, செஞ்ச எல்லா தப்பையும் மறந்துட்டு அவளுக்காகவே வக்காலத்து வாங்குற… இதுதான் கேவலமான பொம்பளை புத்தி!” எள்ளலாக கூறி, இவன் அருவெருப்பாய் முகம் சுழிக்க, இவளுக்கும் கொதித்துப் போனது.

“ரெண்டு கொலைக்கு நியாயம் பேசிட்டு நின்ன ஆம்பளை புத்திய விட நாங்க ஒன்னும் குறைஞ்சு போயிடல!” நறுக்கென்று மனஷ்வினி பதில் கொடுக்க, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

ஏற்கனவே கால் வலியென்று அசதியில் உழன்று கொண்டிருந்தவனுக்கு கடந்தகால நிகழ்வும் சேர்ந்து மிதமிஞ்சிய மனச்சோர்வினைக் கொடுத்திருந்தது.

“நம்ம வாய்க்கா தகராறு எப்பவும் தீராதுடி… சாப்பிட்டு முடிச்சு கண்டினியூ பண்ணுவோம். சாப்பிட எதுவும் இருக்கா… இல்ல ஆர்டர் போட்டுக்கவா!” சட்டென்று சூழ்நிலையை மாற்றினான் ஆனந்தன்.

“மிச்சம் மீதி கதையை சொல்லி முடிக்கிற வரைக்கும் கொலப் பட்டினியா கெடங்க… ஆர்டர் போட்டு வந்தாலும் சாப்பிட விடமாட்டேன்!”

“சமைக்கலன்னு இதை விட தெளிவா யாரும் சொல்ல மாட்டாங்க செல்லாயி!”

“பாவி… இனிமேட்டு அந்த சூனியக்காரி பேரைச் சொன்னே… கழுத்தை நெறிச்சு கொன்றுவேன்!”

“என் தாத்தா மேல வச்சுருக்கிற அதே பாசத்தை அந்த பாட்டி மேல வச்சுருக்கேன்… என் முன்னாடி அவங்களை தப்பா பேசாதே!” என்று உணர்ந்து சொன்னவனின் குரலும் ஆழ்ந்து போனது.

“அந்த கெழவி கவனிச்சு சாப்பாடு கொடுக்கலன்னா இந்நேரம் எனக்கு மணி மண்டபம் கட்டி, பலபேர் சுகமா வாழ்ந்திட்டு இருப்பாங்க… எனக்கு மறுஜென்மம் கொடுத்த நல்ல உள்ளம் அந்த செல்லாயி பாட்டி!

அந்த கெழவிக்கு அப்புறம் என்னோட தனிப்பட்ட விசயத்துல கேர் எடுத்துக்கிட்டது நீதான்! அதான்… உன்னை அப்படி பாக்ககறப்போ எல்லாம் வாய் தவறி அந்த பேரு என் வாயில வந்துடுது… தப்பா எடுத்துக்காதே!” மெல்லிய புன்னைகையோடு சொல்லி முடித்தான்.

“எல்லாத்துக்கும் ஒரு நியாயத்தை சொல்லி தப்பிக்கிறதேயே தொழிலா பண்றியா?” சிடுசிடுப்புடன் கேட்க, அதற்கும் சிரிப்பு ஒன்றே அவனது பதிலாக வந்தது.

“கிளைமாக்ஸ்ல நிப்பாட்டின உன் பண்ணையார் கதையை சொல்லிமுடி மேன்… வெயிட் பண்ணி கேக்கற பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது!” அவளது வழக்கமான இயல்பில் மீண்டும் வலியுறுத்தி கேட்க,

“அப்புறம் என்ன? கல்யாணம் பண்ணி சுகப்படுறதுக்கு பதிலா, உன்னை கட்டிக்கிட்டு அவஸ்தை படுறேன்!”

“இப்படி பேசித்தான்டா உன்னை சுத்தியிருக்கிற எல்லாரையும் எதிரியாவே மாத்தி வைச்சிருக்க!”

“தெரியுது தானே… பின்ன என்ன கேள்வி?”

“ஓட்டைவாய ஆஃப் பண்ணிட்டு, இப்ப மிரு எதுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கான்னு சொல்லப் போறியா, இல்லையா?” அழுத்திக் கேட்கவும், அந்த மிரட்டலில் சொல்ல ஆரம்பித்தான் ஆனந்தன்.

“அந்த சின்ன வயசுல மிரு வீட்டை விட்டுப் போனது, தாத்தவோட அளவுக்கு அதிகமான கோபம், அவரோட வயசு எல்லாம் சேர்ந்து ஒரு வாரத்துல நெஞ்சுவலியில அவரு தவறிப் போயிட்டாரு! எனக்கும் தொடர்ந்து தாத்தா வீட்டுல இருக்க விருப்பம் இல்ல…

 அருணாச்சலம் ஐயாவும் இனிமேலாவது நிம்மதியா வாழ ஆரம்பின்னு பொள்ளாச்சிக்கு கூட்டிட்டு வந்துட்டாரு! நிலத்தை எல்லாம் குத்தகைக்கு விட்டுப் பண்ணையம் பண்ண ஆரம்பிச்சதால வேலையெல்லாம் கொறைஞ்சு போச்சு!

நானும் ஆதிகிட்ட தொழிலை கத்துக்க ஆரம்பிச்சேன். ரெண்டு பெரும் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல எம்பிஏ படிச்சு முடிச்சோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் பேருக்கு பின்னாடி கௌரவமா போட்டுக்க மட்டுமே படிப்பு தேவைப்பட்டது. அதனால படிப்புக்குன்னு அதிகமா மெனக்கெடல!” என்று முடித்து மனுவின் முகம் பார்த்தான்.

“ஏழு வருஷம் கழிச்சு  அருணாச்சலம் ஐயா கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ முடியாதுன்னு வீம்பா இருந்தேன்! நான் லைஃப்ல செட்டில் ஆகாம தானும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஆதியும் வீம்பா நின்னுட்டான். அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே உன்னை ஃபோட்டோவுல கூட பாக்காம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் மனு

“அப்புறம் எப்படி எங்க குடும்ப விஷயம் உங்களுக்கு தெரிஞ்சது?”

“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னைப் பத்தின எல்லா உண்மையும் வரப்போற பொண்ணுகிட்ட சொல்லணும்னு நினைச்சு உங்க வீட்டுக்கு ரெண்டு தடவை ஃபோன் பண்ணேன்… அப்ப எல்லாம் உன் அம்மாவே எடுத்துப் பேசி, நீ வீட்டுல இல்லன்னு சொல்லி வைச்சுட்டாங்க! நீ வந்த பிறகு சொல்லி உன்னை பேசச் சொல்லியிருந்தேன்… அது நடக்கல!

அந்த நேரமே மனசுல எனக்கொரு உறுத்தல். உங்க குடும்பத்தை பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன். பணத்தை எதிர்பார்த்து மட்டுமே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு பதில் கிடைச்சது.

அந்த நேரமே எனக்கு கல்யாணம் மேல, உன் மேல, உங்க குடும்பத்து மேல சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பு வந்துடுச்சு… அந்த வெறுப்போடவே உன்னை பார்த்ததால எப்பவும் உன்கிட்ட கோபமா நடந்துக்க ஆரம்பிச்சேன்! ஆனா அநியாயமா நீ கதிரேசன் கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படும் போது எனக்கே தெரியாம உள்ளுக்குள்ள அழுது புலம்பிட்டேன்!” உணர்ந்து கூறினான் ஆனந்தன்.

“நிஜமாவா… இத நான் நம்பணுமா!” மனு சந்தேகமாக கேட்க,

“நான் கண்ணாடி இல்லமா… மனசுல இருக்கிறதை பளிச் பளிச்சுன்னு செல்ஃபி எடுத்து காமிக்கிறதுக்கு!” நக்கலில் இறங்க

“பேக் டு ஃபார்ம் வில்லன் மச்சான்!” என்று சிரித்தாள் மனஷ்வினி.

 ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!