நான் பிழை… நீ மழலை.. 40

நான் பிழை… நீ மழலை.. 40

நான்… நீ…40

தொழில், நிர்வாகத்தை தானமாகக் கொடுத்து விட்டு, நிர்வாகிகளையும் முதலீட்டாளர்களையும் ரூபன் சகோதரர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதுதான் கதிரேசனின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகிப் போனது.

தொழிற்பிரச்சனைகள் தீவிரமடைந்து எல்லாப் பக்கங்களிலும் இருந்து அவனது கழுத்தை நெறிக்கத் தொடங்கின. சிறையில் இருந்து வெளிவந்த பின்னும் அவனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை. விதைத்த வினை அப்படி!

இன்னும் இரண்டு நாட்களில் தொழிலாளர்களின் சம்பள பாக்கி அனைத்தையும் முழுதாய் கொடுத்து, நேர் செய்து விட வேண்டுமென்று தொழிலாளர் தரப்பு மிகக் கண்டிப்பாக எச்சரிக்கை செய்திருந்தது.

அதோடு கடன் நிலுவைகளை வட்டியோடு கொடுத்து விடும்படியும் இல்லையென்றால் தொழிற்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து விடுவோம் என்று வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள் பகிரங்கமாகவே மிரட்டி இருந்தன.

இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை நடத்தினான் கதிரேசன். அவனுக்கு இரண்டு வழிகள் தீர்வாக சொல்லப்பட்டன.

ஒன்று இவனது சொத்துக்கள் முழுவதையும் ஈடாக கொடுத்து கடனை நேர் செய்து, சம்பளக் கணக்கையும் தீர்த்துக் கொள்வது. அது முடியாத பட்சத்தில் ரூபம் சகோதர்களை இவனுக்கு ஆதரவாக பேச வைத்து, தவணை நாட்களின் நீட்டிப்பு காலத்தை அதிகப்படியாக பெற்றுக் கொள்வது மற்றொரு தீர்வாக அறிவுறுத்தப்பட்டது.

தன் சொத்துக்களை அடமானம் வைப்பதை விட, சகோதர்களிடம் உதவி கேட்பது கதிரேசனுக்கு எளிதாகப்பட்டது. ஏனென்றால், ‘கடனில் தத்தளிப்பது இவர்களது நிறுவனம் தானே!

தனக்கு பிறகு இவர்களுக்கு போய் சேர வேண்டிய சொத்திற்கு, ஏன், என் சொத்துக்களை அடமானம் வைத்து பொறுப்பாளியாக வேண்டும்!’ என்கிற அலட்சியமும் வன்மமும் தோன்ற, சூழ்நிலைகளை எடுத்துச் சொல்ல, ரூபம் மாளிகைக்கு வந்து நின்றான் கதிரேசன்.

இவன் எளிதாக முடிந்து விடும் என நினைத்த காரியம் அவனையே போக்குகாட்டி வீதியில் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்த்தது. முதலில் வீட்டு வாசலில் நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டான்.

பின்னர் சின்னபெண்ணின் கோபத்திற்கு வடிகாலாக நினைத்து, அடித்தும் உதைத்தும் உடம்பை ரணகளம் ஆக்கி விட்டான் ஆனந்தன். தன்னுள் இருந்த ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் மொத்தமாய் இறக்கி இருந்தான் அவன்.

அது போதாதென்று தம்பியை தடுக்க வந்த ஆதித்யனும் அடி வாங்கியவன் என்கிற பாவம் பார்க்காமல் கதிரேசனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டான். வலியின் கதறலில், இவன் கேட்ட மன்னிப்பும் யாருடைய செவிக்கும் எட்டாமல் போக, இயல்பான அவனது வக்கிர சுபாவம் விழித்துக் கொண்டது. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

தனது பலத்தை ஒன்று திரட்டி, “இப்ப என்னை வெளியே தள்ளிட்டா உங்களுக்கு சேர வேண்டிய ஃபாக்ட்ரியும் தொழிலும் மொத்தமா அழிஞ்சே போயிடும். எல்லாத்தையும் வித்து கரைச்சு ஒன்னுமில்லாம ஆக்கிடுவேன்!” திமிராக கதிரேசன் கத்த, “செய்துகொள்!’ எனும் பாவனையில் இலகுவாய் தோள் குலுக்கிக் கொண்டனர் சகோதரர்கள்.

“ஏன் ஆதி… இன்னுமா ஃபாக்ட்ரி ரன் ஆகிட்டு இருக்கு?” ஆனந்தன் கேலியாக கேட்க,

“இல்லையே ஆனந்த்… எப்பவோ ஏலத்துக்கு வந்திருக்கணுமே! ஒருவேளை பாவம் பாக்கறாங்க போல!” நையாண்டி செய்தான் ஆதி. இதைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி!

“என்ன தம்பி இப்படி சொல்றீங்க? என்ன இருந்தாலும் அது நம்ம அடையாளம்… எந்த விரோதத்தையும் மனசுல ஏத்திக்காம தொழிலை காப்பாத்திக் கொடுத்திடுங்க!”  அருணாச்சலம் பதபதைப்புடன் கூறி முடித்தாலும் சகோதரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

“யார் தொழிலை யார் காப்பாத்தணும்ங்க ஐயா!” நக்கலாக கேட்டான் ஆனந்தன்.

“என்ன ஆனந்தா, இப்படி சொல்லிட்ட? எப்படி இருந்தாலும் எனக்கு பிறகு உனக்கு வந்து சேரப்போற சொத்துதானே அது. கொஞ்சம் மனசு வைடா மகனே… நீயும் ஆதியும் வந்து பேசினா, பிரச்சனை ஈசியா முடியும்!” பம்மிக்கொண்டு சொல்லி முடித்த கதிரேசனை, எள்ளலாய் பார்த்தனர் சகோதரர்கள்.

“உனக்குன்னு எழுதிக் கொடுத்த சொத்துல மூக்கை நுழைக்க நாங்க பிரியப்படல கதிரேசா… அதை வித்து நீ வாழ்ந்தாலும் சரி… அதை காப்பாத்தி நீ வீதியில நின்னாலும் சரி, எதுவும் எங்களுக்கு தேவையே இல்லை. இடத்தை காலி பண்ணு!” குத்தலாக பேசி ஆதி விரட்டியடிக்க,

“ஆனந்தா… கொஞ்சம் மனசு வைடா மகனே! இப்பவே உன் பேருல எல்லாத்தையும் எழுதி வச்சுடுறேன். வந்து பேசி சரி பண்ணுய்யா!” ஏகத்திற்கும் அடக்கி வாசித்தான் கதிரேசன்.

“அட போய்யா… இருக்கறதையே எவனுக்கு தாரை வார்த்து குடுத்துட்டு ஹாயா இருக்கலாம்னு நானே யோசனை பண்ணிட்டு இருக்கேன்! நீ வேற ஏன்யா புதுசா அதை கொடுக்குறேன், இதை மாத்துறேன்னு சுமந்துட்டு வர்ற? எந்தக் கருமமும் எனக்கு வேணாம். நீ அப்படியே போயிடு!” என்றவன், மனைவியை கை நீட்டி அழைக்க, அமைதியாய் பற்றிக் கொண்டாள் மனஷ்வினி.

“அம்மாடி மருமகளே… நீயாவது எடுத்துச் சொல்லு தாயி! சொத்து சுகத்தோட மதிப்பு தெரியாம பேசுறான் உன் புருசன்!” மனுவிடமும் விடாமல் கெஞ்சலைத் தொடர்ந்தான் கதிரேசன்.

“அவருக்காவது சொத்தோட மதிப்புதான் தெரியாது. ஆனா, எனக்கு சொத்துன்னாலே என்னன்னே தெரியாது. ஜாடிகேத்த மூடியா நாங்க இருந்துக்கறோம். நீங்க கிளம்புங்க!” என்றவள் கணவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“டேய் கரடி… கொசுக்கடி ஓவரா இருந்தா மொத்தமா மருந்தடிச்சி விரட்டி விடு!” தம்பியிடம் மனு நக்கலாக கூறவும்,

“ஆமாடா… அடிக்காம இருந்தாலும் கடிக்காம விடமாட்டேன்னு கொசு ஓவர் டுயூட்டி பாக்கும். சீக்கிரம் மருந்தடிச்சுட்டு வந்து சேரு!” தோதாக கிண்டலடித்து விட்டு ஆனந்தனும் நடக்க ஆரம்பித்தான்.

“நெஜமாவே கால் வலிக்குதா மச்சான்!”

“ஏன், நீ பிடிச்சு விடப் போறியா?”

“ஆங்… மிதிச்சு விடப் போறேன்! போடாங்… உனக்கெல்லாம் பாவம் பாக்கிறதுக்கு சுவத்துல போயி முட்டிக்கலாம்.”

“போயி முட்டிக்கோ… யாரு வேண்டாம்னு சொன்னா!”

வழக்கமான சச்சரவுப் பேச்சுகளோடு ஆனந்தனும் மனுவும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டே நின்ற ஆதியும் அருணாச்சலமும் சேர்ந்து கதிரேசனிடம் ‘சென்றுவிடு!’ என சைகையால் கூற, ‘மாட்டேன்!’ என்று வீம்பு பிடித்தான்.

“என்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீங்கடா நீங்க!” கதிரேசன் ஆவேசப்பட,

“வழி தெரியாதவன் கண்ணுக்கு, பாதையே காணாம போச்சாம்… அப்படி இருக்கு நீ சொல்றது!” எனக் கூறி அடக்க. மாட்டாமல் சிரித்தான் ஆதி.

“நிர்வாகம் பண்ணத் தெரியாம எங்கமேல பழி போடுறியா?” ஆதியின் பேச்சிற்கு,

“நிர்வாகம் பண்றவங்களை உன் பக்கம் இழுத்துட்டு, என்னை குத்தம் சொல்லாதே!” கதிரேசன் சீற்றமாக வெடித்தான்.

“உனக்கு விளக்கம் சொல்லணும்ங்கிற அவசியம் எனக்கில்ல கதிரேசா… உனக்கு கொடுத்தது கொடுத்ததுதான். எழுத்துபடியே உனக்கு பிறகே எங்களுக்கு வந்து சேரட்டும். அது எப்படி இருந்தாலும் மனப்பூர்வமாக ஏத்துகிட்டு நான் உருப்படி பண்ணிக்கறேன். இன்னொரு தடவை எதையும் சொல்லிட்டு இங்கே வந்து நின்னுடாதே!” கோபத்தை அடக்கிக் கூறிய ஆதி,

“ஏதோ இப்பதான் ஆனந்தன் கொஞ்சங்கொஞ்சமா சரியாகிட்டு வர்றான். அதுக்கு தடங்கல் வர்ற மாதிரி திரும்பவும் நீ வந்து நின்னா, உன்னை கொலை பண்ணிட்டு நான் உள்ளே போகவும் தயங்க மாட்டேன்! உன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் என் குடும்பத்து மேல இருக்கிற பாசத்தை நெனைச்சே அடக்கிட்டு இருக்கேன். வரம்பு மீற வச்சுடாதே…

நீ தொழிலை காப்பாத்துவியோ, இல்லை ஏலத்துல விடுவியோ அது உன் பாடு! எங்களுக்கும் அதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல… இனியும் இங்கே நிக்காதே!” கோபத்தில் கொதித்து பேசி, விருட்டென்று கிளம்பி விட்டான் ஆதி.

அவன் பின்னே நகுலேஷும் சென்று விட, “போதும்ய்யா… எங்கேயாவது ஒரு புள்ளியில மனுசனா மாறுற காலநேரம் ஒருத்தனுக்கு வாய்க்கும். அப்படி நீங்க மாறுறதுக்கு இந்த சூழ்நிலை ஒரு வாய்ப்பா அமையட்டும். எதுவும் பேசாம கிளம்பிடுங்க! சின்னஞ் சிறுசுங்க இப்பதான் மூச்சு விட்டு நிம்மதியா வாழ ஆரம்பிச்சிருக்காங்க… அதை கெடுத்துடாதீங்க!

இதுக்கப்பறமும் நீங்க திருந்தலன்னா பெரியவர் செய்யுறேன்னு சொன்னதை நான் செஞ்சு முடிச்சிடுவேன்!” உணர்ச்சி வசப்பட்டு கூறிய  அருணாச்சலம் ஆவேசத்துடன் கதிரேசனை கேட்டை விட்டு வெளியில் தள்ளி விட்டார்.

***

வீட்டிற்குள் வந்த ஆதியிடம், “என்ன அத்தான் பிரச்சனை?” குழந்தையை கையில் வைத்தபடி தேஜு கேட்க,

“ஏன் மனு சொல்லலையா?”

“அவங்க இந்த உலகத்துலேயே இல்ல… உள்ளே வந்து நேரா மாடிக்கு போயிட்டாங்க!” நமட்டு சிரிப்புடன் கூற,

“ரொம்ப சந்தோஷப்படாதே தேஜுமா… மேல போயி சண்டைதான் போடுவாங்க!” ஆதி சிரிக்கவும்,

“பின்ன, எல்லாரும் உங்களை மாதிரி எந்நேரமும் உருகிட்டும் கொஞ்சிட்டுமா இருப்பாங்க?”

“அடிங்… இப்படி இல்லன்னு எத்தனை பொண்ணுங்க ஏங்கிப் போறாங்க தெரியுமாடி!”

“அவங்களுக்கு இந்த இம்சை பத்தி சரியா தெரியல த்தான்…” கிண்டலாக கூறியவளை எதுவும் செய்ய முடியாத அவஸ்தையில் பல்லைக் கடித்தான்.

“பேச்சை மாத்தாதே! இன்னைக்கு லேகியம் சாப்பிட்டியா இல்லையா… அப்புறம் நைட் குட்டி அழறான்னு நீ, என்னைத்தான் இம்சை பண்ணுவ!” அதட்டலான தனது அக்கறைக் குடையில் இப்பொழுது மகனையும் சேர்த்துக் கொண்டான் ஆதித்யன்.

***

கால்கள் சென்ற போக்கில் நடந்து கொண்டிருந்தான் கதிரேசன். சாலையா, நடைபாதையா என்றெல்லாம் தெளிந்து செல்லும் மனநிலை அவனுக்கு சுத்தமாய் இல்லை.

மனமெல்லாம் அத்தனை அதிர்ச்சி! ‘தான் பெரிதாய் நினைத்து, மிரட்டி பல தகாத செயல்களை செய்து இதுவரையில் சேர்த்த சொத்துகளை கால் தூசுக்கும் மதிக்காமல் பேசி விட்டார்களே முட்டாள் பயல்கள்!’ அடங்காத கொதிப்பில் கனன்று கொண்டிருந்தான்.

புதிதாக பிறந்த குழந்தையை வைத்து, தான் நினைத்தை சாதித்துக் கொள்வோமா என கேடுகெட்ட அவனது புத்தி வக்கிரமாய் திட்டம் போட்டது. அவனைச் சூழ்ந்திருந்த கெடுபிடிகளை நினைத்தே மேலும் கொடூரமானவனாகிப் போனான் கதிரேசன்.

‘நாளை மறுநாளில் தன் சொத்துக்களை அடமானம் வைப்பதா அல்லது மிரட்டி வாங்கிய சொத்துக்களை ஏலத்தில் இழப்பதா!’ புரியாத குழப்பத்தில் இவன் நடந்து கொண்டே இருக்க, எத்தனை வண்டிதான் இவனது நடையை அனுசரித்து கடந்து போகும்.

வேகத்தடையை பொருட்படுத்தாமல் வந்த லாரி ஒன்று, இவன் வருவதைப் பார்த்தும் வேகத்தை குறைக்க வழியில்லாமல் தறிகெட்டு வர, ஒரே மோதலில் சாலையில் இருந்து நடைபாதைக்கு தூக்கியெறிப்பட்டான் கதிரேசன்.

முடிந்தது இவனது சகாப்தம்… இறுதி வரையில் இன்னாரை பழி தீர்க்கும் எண்ணத்துடன் வாழ்ந்தவனுக்கு இறப்பையும் கொடூரமாகவே தந்து விடுகிறான் தர்மதேவன்.

சடுதிக்குள் முடிந்த கதிரேசனின் இறப்பினை ஆராய்ந்து காவல்துறை மூலம் ரூபன் சகோதரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனைத்து சட்டரீதியான முறைகளையும் முடித்து உடலை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

“அந்த நாய்க்காக, நாங்க போய் நிக்கணும்னு அவசியமில்ல ஆதி!” முறுக்கிக்கொண்டு வர மறுத்தான் ஆனந்தன்.

 அருணாச்சலமும் ராஜசேகரும் சேர்ந்து, ‘பகைமையை காட்டும் நேரம் இதுவல்ல!’ என்று பலவாறு சொல்லிப் பார்த்தும் அவன் மசியவில்லை.

மனஷ்வினியோ அவனது கோபத்தை பார்த்து பத்தடி தள்ளியே நின்றாள். கணவனிடத்தில் வேடிக்கையாக பேச மட்டுமே தைரியம் வரும் அவளுக்கு!

“செத்துப் போனவன்கிட்ட தராதரம் பார்க்க கூடாது சின்னவனே… கிளம்பு, காரியத்தை முடிச்சிட்டு வருவோம்!” ஆதி தன்மையாக எடுத்துச் சொன்னாலும் தம்பி செவி சாய்க்கவே இல்லை.

எதுவும் செய்யமுடியாத நிலையில் ஆதியும் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்க, நேருக்கு நேராக ஆனந்தனின் முன்பு குழந்தையோடு நின்று பேச ஆரம்பித்தாள் தேஜஸ்வினி.

“அந்தந்த சூழ்நிலைக்கு எது நல்லதோ, நியாயமோ அதை செய்யப் பழகுங்க ஆனந்த்! நம்மை பார்த்துதான் நம்ம பிள்ளைகளும் வளரணும். எந்த காலத்துலயும் நம்மளோட பாவம், நம்ம குழந்தைகளை தொடரக் கூடாது. அதை மனசுல வச்சு எந்த பொறுப்பையும் தட்டிக் கழிக்காம முடிக்கப் பாருங்க!” குழந்தையை முன்னிறுத்தி தேஜஸ்வினி சொன்ன வார்த்தைகள் ஆனந்தனை உள்ளார்ந்து யோசிக்க வைத்தது.

‘இப்படி தன்னைச் சார்ந்த யாரவது ஒருவர் நினைத்திருந்தாலும் தன் வளர்ப்பு தடம் மாறிப் போயிருக்காதே! அதற்கு முழுமுதற் காரணமானவனை நான் மன்னிக்க வேண்டுமா?’ அவனது உள்மனதில் கனன்ற கோபம், ‘எதிர்காலம், நம் பிள்ளை.’ என்ற தேஜுவின் தொலைநோக்கு பார்வையில் அடிபட்டுப் போனது.

ஏக்கப் பெருமூச்சுடன் தேஜுவைப் பார்த்தான். இவளை உறவென்ற முறையில் மதித்தோ, சக மனுஷியாக நினைத்தோ கூட நல்ல முறையில் இவன் பேசியதில்லை.

முரண்பாடான சூழ்நிலைகளில் இருவருக்குள்ளும் தர்க்கங்கள், கருத்து வேறுபாடுகள் நிகழாத பொழுதுகள் இல்லை. ஆனாலும் இன்று வரையிலும் தங்கையின் கணவன், கொழுந்தன் என்ற முறையில் இவனது நலத்தை நாடும் முதல் ஆளாக இவள் நிற்கிறாள்.

சமீபத்தில் சொந்தமென இணைந்த இவளது கரிசனத்தை, நிதானத்தை பார்க்கும் பொழுது, பிறந்த பொழுதில் இருந்தே தன்னைத் தொடர்ந்து வரும் சொந்தத்திடம் பகைமை பாராட்டி நிற்பது எந்த வகையில் சரியாகும்!

ஆனந்தனின் மனதிற்குள், ‘என் வலி பெரிதா… அண்ணியாக வந்தவளின் சகிப்புத்தன்மை பெரிதா!’ என்றெல்லாம் தர்க்கப் போராட்டம் நடக்கத் தொடங்கியது.

“யோசிக்காதீங்க மச்சான்… கடைசி காரியம் போயிட்டு வந்திடுங்களேன்!” சமயம் பார்த்து மனுவும் கெஞ்சலாக கூற,

“வாங்க மாமா… சட்டுன்னு போயி முடிச்சிட்டு வந்துடலாம்!” நகுலும் தன்போக்கில் ஊக்குவிக்க, அமைதியாக சம்மதித்து ஆதியுடன் கிளம்பிச் சென்றான் ஆனந்தன்.

மாலை நான்கு மணிக்கு வீட்டு வாசலில் நிற்க விடாமல் வெளியே தள்ளிய கதிரேசன் எனும் மனிதனுக்கு இரவு பத்துமணிக்கு கொள்ளி வைத்து அவனது சகாப்தத்தை முடித்து வைத்தான் ஆனந்தன்.

“போதும் ஆதி… இனிமே யாருக்கும் என் கையால கொள்ளி போட்டு காரியம் பண்ற தைரியம் எனக்கில்லை. என்னைப் பெத்தவங்களை தவிர மத்த எல்லாருக்கும் இந்த கையால வாய்க்கரிசி போட்டு தீப்பந்தம் பிடிச்சிட்டேன்!” விரக்தியாக கூறியவனை வருத்ததோடு பார்த்தான் ஆதி.

தாத்தா, பாட்டி, மிருதுளாவின் அம்மா சிந்தாமணி, இவர்களுக்கெல்லாம் வீட்டு வாரிசு என்ற முறையில் காரியம் செய்ய வலியுறுத்தப்பட்டான் ஆனந்தன்.

வளர்ப்பு மகன் என்னும் முறையில் கலாவதிக்கும் கொள்ளி வைத்தவன், இதோ இப்போதும் அதே முறையில் கதிரேசனுக்கும் காரியத்தை செய்து முடித்து விட்டான். சிலரின் பிறப்பிற்கான அர்த்தமும் இப்படியாக அமைந்து விடுகிறது!

“சொத்து, சுகம்ன்னு சொல்லிச் சொல்லியே வாரிசுங்கிற முறையில என்னை எல்லா காரியமும் செய்ய வச்சுட்டாங்க… எனக்கு எது மேலயும் ஆசையில்ல… எதைப் பார்த்தாலும் வெறுப்புதான் கூடிப் போகுது. எனக்கு தனிமை வேணும். நான் அமைதியா இருக்க விரும்புறேன். என்னை எந்த காரியத்துக்கும் இழுக்காதே ஆதி!” தழுதழுத்துக் கூறி கண்ணீர் வடித்தவனை ஆறுதலாக அரவணைத்துக் கொண்டான் ஆதித்யன்.

உடன்பிறந்தவனின் நிலையில் இவனுக்கும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அதற்காக இவன் போக்கில் அப்படியே விட்டு விடமுடியாதே!

“உன் விருப்பம் போலவே எதுலயும் உன்னை இழுக்கல சின்னவனே! எந்த பொறுப்பையும் நீ கையில எடுத்துக்க வேணாம். உனக்கு எது பிடிக்குதோ அதை செய்! எப்படி இருக்கத் தோணுதோ அப்படியே இரு! ஆனா என் கண்ணு முன்னாடி வீட்டுலயே இரு ஆனந்த்… நீ இல்லாம எங்களுக்கு எதுவுமே இல்லடா!” எளிதான வார்த்தையில், அவனது மனத் தளர்வினை தகர்த்தெறிந்தான் ஆதி.

அண்ணனின் சொல் பேச்சினை தட்டாதவனாக வீட்டிலேயே அமைதியாக இருக்க ஆரம்பித்தான் ஆனந்தன். ஏதோ ஒரு ஆசுவாசம் அவனுக்கு நிறைவினைக் கொடுக்க, குழந்தை வருணின் பொறுப்பினை முழுதாக ஏற்றுக் கொண்டான்.

ஆதியும் முன்னைவிட தீவிரமாக தொழில் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தான். கதிரேசனின் மறைவிற்கு பிறகு ரூபம் குழுமம் முன்னைப் போல புத்துயிர் பெற்று வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் கீழே ஆனீஸ் குழுமத்தின் செயல்பாடுகளும் இணைக்கப்பட்டன.

மனைவியின் கனவிற்கு உயிர் கொடுக்கும் பொருட்டு, ராஜசேகரின் டெக்ஸ்டைல் ஷோரூமை, ‘ஆனீஸ் டிசைன்ஸ்’ என மாற்றி மேம்படுத்தி கொடுத்தான். மகளுக்கு துணையாக தந்தையும் அங்கேயே பணியாற்றத் தொடங்கினார். அவருக்கு தோதான வருமானமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

தேஜஸ்வினியின் எண்ணங்கள் எல்லாம் வண்ணங்களாக மாறத் தொடங்க, தங்களுக்கான வலைத்தளத்தில் பதிவேற்றி, நேரிலும் இணையத்திலும் திறமையை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

***

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் மாறிமாறி பயணம் செய்து சிறிய ஜோடிகள் பேசிக் கொள்வர், அவ்வளவே!

கோவைக்கு வந்துவிடச் சொல்லி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மனஷ்வினி அழைப்பு விடுத்தாலும் மறுத்து விடுவான் ஆனந்தன்.

“அங்கே வந்தா… உன்கூட பாடம் படிக்கணும், பரீட்சை எழுதணும்னு எனக்கு தோணும். ரிசல்ட் ஏடாகூடமா வந்தா உன் படிப்பு ஸ்பாயில் ஆகிடும் செல்லாயி!” கலக்கத்தோடு காரணம் கூறுவான்.

“ஏன் ரிசல்ட் வராத மாதிரி டெஸ்ட் எழுதித்தான் பாக்கறது?” மறைமுகமாக இவள் சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டான்.

“அதெல்லாம் வேண்டாம்டா மனு… படிக்கிற பிள்ளைக்கு புத்தி திசை திரும்பக் கூடாது. எனக்கும் படிப்புக்கும்தான் ராசியில்லன்னு ஆயிடுச்சு! ஆனா, உனக்கு அப்படியில்லையே… எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவுக்கு படி! நான் பொறுமையா வெயிட் பண்றேன்!”

“ஐயோ, என் மச்சான் இவ்வளவு நல்லவரா! தானா வந்து சிக்கற ஆட்டை பிடிச்சு பிரியாணி போடத் தெரியலையே!”

“வெறுப்பேத்தாதே செல்லாயி… உன்னை பக்கத்துல வச்சுட்டு என்னால நல்ல புள்ளையா இருக்க முடியாதுடி!” ரசனையோடு கூறுபவன், மேற்கொண்டு பல சில்மிஷ பேச்சில் வெளிப்படையாகவே தனது ஆசையை கூறி விடுவான்.

***

ஐந்து மாதக் குழந்தை வருணின் முன் நின்றாலே, ‘தூக்கிக் கொள்!’ என்று நெஞ்சை தூக்கிவிடுவான். ஆசையோடு மடியில் போட்டு அமர்ந்து கொண்டால் போதும் அழுகை வெடித்து விடும் அவனுக்கு!

வீட்டில் இருக்கும் ஆனந்தனுக்கு பிள்ளை இப்படியான பல்வேறு ஆனந்த இம்சைகளை கொடுக்க ஆரம்பித்தான். “அப்பாவால தூக்கிட்டு நடக்க முடியாது செல்லம்!” பலமுறை சொன்னாலும் அந்த பிஞ்சிற்கு புரிந்து விடுமா என்ன?

“சர்ஜரி பண்ணியிருந்தா இந்த தொல்லை இல்லாம இருந்திருக்கும்.” சமயம் பார்த்து மனு குத்திக் காண்பிப்பாள்.

“அதெப்படி மனுகுட்டி… வேதனை, வலிக்கு நினைவுசின்னம்னு மண்டபம் கட்டாத குறையா, ரெண்டு பேரும் நடமாடிட்டு இருக்காங்க… அதை போயி குத்தமா பேசுறியே!” தேஜுவின் நக்கலில் ஆதிக்கும் சேர்ந்தே கொட்டு விழும்.

“அதெல்லாம் அப்படிதான், எதையும் மாத்திக்க மாட்டோம்!” என வீராப்பு பேசியவர்களின் வீரமெல்லாம் குழந்தையின் அழுகையில் செல்லாக்காசாகிப் போனது.

அமைதியாக இருக்க வேண்டுமென்று நினைத்த ஆனந்தனுக்கு பிள்ளையின் அழுகை இதயத்தில் இரத்தக் கண்ணீரையே வரவைத்தது.

அன்றொரு நாள் மனஷ்வினி சொன்ன அறுவை சிகிச்சையை செய்து கொள்ள முடிவெடுத்து, தன்னந்தனியாகவே மருத்துவமனையில் சேர்ந்து விட்டான் ஆனந்தன்.

“எல்லாம் என் பிள்ளைக்காகதான்… வேற யாருக்காகவும் இல்ல!” அவனது சாவ்டால் பேச்சிற்கு,

“அப்போ உங்களை கவனிக்க உங்க பிள்ளையவே வச்சுக்கோங்க… எங்களை கூப்பிடாதீங்க!” உதடு பழித்து கடுப்பைக் காட்டினாள் மனு.

“விடு மனு… நம்ம சொல்பேச்சு சபை ஏறாதுங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே!” தேஜுவின் ஆதங்கத்தில் தன்னை சமன் செய்து கொண்டாள் தங்கை.

படிப்பின் காரணமாக அவளால் ஆனந்தனின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடியாமல் போய்விட, ராஜசேகர், சுலோச்சனா அந்த பொறுப்பினை கையில் எடுத்துக் கொண்டனர்.

பிள்ளைகள் தாயிடம் பேச்சு வார்த்தையை குறைத்துக் கொண்டாலும், மற்றவர்களின் கரிசனத்தில் சுலோச்சனாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் இளகத் தொடங்கி இருந்தது.

எதிர்காலத்தை பற்றிய பயம் அகன்ற நிலையில் யாருக்குதான் பகைமை பாராட்டிக்கொள்ள ஆசை வரும்! அந்த நிலையில்தான் சுலோச்சனா தனது வாழ்கையை ரசிக்க ஆரம்பித்தார். முன் எப்போதிலும் இல்லாத நிறைவு மெல்ல மெல்ல இவரின் மனதிலும் மாற்றங்களை கொடுக்க ஆரம்பித்தது.

***

வருணின் முதல் வருட பிறந்தநாளின் போது கம்பீரமாய் ஆறடி ஆண்மகனாய் நிமிர்வாய் நின்று, மகனை தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்து விட்டான் ஆனந்தன்.

யாரையும், எதனையும் சார்ந்திராத நடை, முன்னைவிட தன்னம்பிக்கை மிக்கவனாக அவனை உயர்த்திக் காட்டியது. அதுவே அவனுக்கு தனி சோபையை கொடுக்க, கணவனின் அழகைக் காண மனஷ்வினிக்கு கண்களிரண்டும் போதவில்லை.

பார்வையால் கபளீகரம் செய்து, ‘மச்சான்!” என ஆசையாக பேசப் போனாலோ, “பத்தடி தள்ளி நில்லு… படிப்பை முடிச்சுட்டு வா!” என்றே மனைவியை விரட்டி அடிப்பான் ஆனந்தன்.

“இவ்வளவு கண்டிப்பு கூடாது ஆனந்தா… எனக்குன்னு நேரம் வரும்போது உன் நிலைமையை யோசிச்சு பார்த்துக்கோ!”

மறைமுகமாய் மனைவி விடுக்கும் மிரட்டலில், ‘பொறுமை பொறுமை’ என பல்லைக் கடித்து அமைதி காப்பான் ஆனந்தன். அந்த பொறுமைக்கும் பொறுமை பறிபோகும்படியாக காரியமாற்றினாள் மனஷ்வினி.

***

காத்திருக்கும் நேரமெல்லாம் கண் இமையும் பாரம்

காதல் வந்து சேர்ந்து விட்டால் பூமி வெகு தூரம்…

நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு!

கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு!

சொல்லாத சொல் எல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே…

என்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ!

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!